ஐராவதம் பக்கங்கள்

முடியாத யாத்திரை – காசியபன் – கவிதைகள் – விலை ரு.60 – பக்கம் 63 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33

ராஜாஜி ஒருமுறை குறிப்பிட்டார்.  ‘நாற்பது வயதுக்கு மேற்பட்ட வர்கள்தான் இலக்கியம் படைக்க வேண்டும்’ என்று.  இலக்கியத்தில் முதிர்ச்சி காணக்கிடைக்கும் என்பது அவர் எண்ணம்.  அப்படிப் பார்த்தால் கீட்ஸ், பைரன், ஷெல்லி எழுதியதெல்லாம் செல்லாது.
காசியபன் ராஜாஜியின் ஆவலை நிறைவேற்றியிருக்கிறார்.  தன்னுடைய 53வது வயதில்தான் எழுதத் துவங்கியுள்ளார்.  இவருடைய முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியைக் காண நேர்ந்தது.
நானோ?
நீ? நீ யாரடா?
தீப்பொறி யொன்று உள்ளில் எழ
தேடத் தொடங்கினேன்.
பிரபஞ்சத்தைப் பார்த்து பாடினேன்.
கபடங்கள் அசட்டுத்தனங்கள் 
அதிகாரக் கிரகங்களின் சுற்றல்கள்
சிக்கி நாம் அவதிப்படும் வியூகங்கள்
வழியாகத் தேடினேன்.
இதெல்லாம் ஒரு தப்பித்தல் என்று சொல்கிறது மனசு.
நான் இதை  திரேபி  என்பேன்.  கவிதை ஒரு திரேபி.  நாடகத்தில் நடிப்பது ஒரு திரேபி.  பாட்டுப் பாடுவது ஒரு திரேபி.  ஏன் விளையாட்டு கூட ஒரு திரேபிதான்.  
இப்போது 
ஒன்றும் நிகழ்வதில்லை
என்ற வரிகளுடன் கவிதை துவங்குகிறது.  எனக்கு அறுபத்தேழு வயதாகிறது.  நாற்பது ஆண்டுகள் அலுவலகம் போய்விட்டு பத்தாண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வீட்டோடு இருக்கிறேன்.  தென் சென்னையே முதியோர் இல்லமாகத் தோன்றுகிறது.  பையன்கள், பெண்கள் அமெரிக்கா போய்விட்டார்கள்.  எங்கு பார்த்தாலும் கிழவர்களும் கிழவிகளும்தான். 
முப்பது ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை ஓய்வூதியம் பெறுபவர்களின் சொர்க்கம் என்பார்கள்.  இன்று பெங்களூர் யுவர்களும், யுவதிகளும் கணிப்பொறி துறையில் பணியாற்றி இளமை ஊஞ்சலாடுகிறது.  சென்னைதான் அழுது வடிகிறது.  அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண்களின் தேசிய கீதமாக ‘முடியாத யாத்திரை’யைப் படைத்துள்ளார் காசியபன்.
என்னை ஒரு முப்பது வயது பெண் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்துக் கேட்டாள்.  üமாமா ஓய்வுப் பெற்ற உங்களுக்குப் பொழுது எப்படிப் போகிறது? மோட்டுவளை தியானமா?
இல்லை என்கிறார் காசியபன்.
விடியும் முன்னே பால்காரன் வந்துவிட்டான்
காப்பிக்கடை முடிந்தாயிற்று
முற்றம் தெளித்து அவள் கோலமிட்டாள்
நித்தியபடி பணிகளை பட்டியலிடுகிறார்.
காலத்தின் போக்கை
கடிகாரம் கணக்கிடுகிறது
தவிர்க்க முடியாத
குளியல், உணவு, உறக்கம்.
எல்லாம் யோசிக்கையில் உண்ணுவதும் உறங்குவதுமாக முடியும் என்ற பழைய வரிகள் நினைவுக்கு வருகின்றன. 
மகள்தான் கடிதம் எழுதுகிறாள்.  எப்போதோ ஒரு முறை.  மகனோ எழுதும் வழக்கமே இல்லை. யமனின் ஓலைதான் வரவேண்டும் என்பேன்.  காசியபன் வரிகள்.  
                     இந்தக் கவிதையை தாமஸ் மன் போன்ற ஜெர்மன் நாவலாசிரியர்கள் படித்திருந்தால் நானூறு பக்க நாவலாக்கியிருப்பார்கள்.  காசியபன் 129 வரிகளில் முடித்திருக்கிறார்.  அற்புதமான படைப்பு. 
இந்த நூலை வெளியிட்ட விருட்சம் பதிப்பகத்திற்கு நமது கோடானுகோடி நன்றி.  தமிழர்கள் பாக்கியசாலிகள்.  ஆனால் அந்தப் பாக்கியத்தை உணருகிற பக்குவம்தான் அவர்களிடத்தில் இல்லை.  அறுபது வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்தக் கவிதையைப் படிக்க வேண்டும்.  சங்கப் பாடலுக்கு நிகரான இருப்பத்தோரம் நூற்றாண்டுக்கான தேசிய கீதம் இது.
பிக்ஷôம் தேஹி யென்று உபாதான பிராம்மணன்
கந்தஷஷ்டிக்கு பிரிக்க வரும் கூட்டம்
ஆனந்தவிகடன் கேட்டு வரும் எதிர்வீட்டு மாமி
இந்த வரிகள் ஆங்கிலம் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் கொண்டு வர முடியாது.  கவிதை அச்சு அசலான தமிழ்க்கவிதை
.
எங்கள் மூக்குக் கண்ணாடிகள் வழி
ஒருவரை யொருவர் நோக்கி 
இரு நாற்காலிகளில் வீற்றிருக்கின்றோம்.
எதிர் எதிர் நாற்காலிகளில்
பழைய நினைவுகள் உறுத்த
நாங்கள் இருக்கின்றோம்
பின் பேசுவதற்கு ஒன்றுமில்லை
ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம்
இரு நாற்காலிகள் சுமக்க.
நோக்கமற்ற யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது
எதிர்பார்க்க இனி ஒன்றுமில்லை.
நாற்காலிகளும் நாங்களும் 
ஒன்றையொன்று பார்த்திருக்கிறோம்.
SAMUEL BECKETT  ன் WAITING FOR GODOT
நினைவுக்கு வருகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *