தூதும்,, சமாதானமும்.

அமைதிச்சாரல்



கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.
பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..
எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

இளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்


ஆறுமுகம் முருகேசன்      


“அடப்பைத்தியமே” யென
கால்களை
முத்தமிட்டுருந்தது நுரை

கழுத்தில்
சங்கிலிப் பூட்டப்பட்ட
படிமநாயைப் பிடித்தவாறு
என்னைக் கடக்கிறார்
ஹேண்ட்ஸம் பீச் தாத்தா

நான் முறைத்து அமர்ந்திருந்த
கடல்
திரும்பி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது

நீ
வருகிறாய்!  

அன்புடையீர்,

                                                             25.07.2013
வணக்கம்.
நவீனவிருட்சம் 93வது இதழ் வெளிவந்துவிட்டது. ஒருவழியாக. கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து வெளிவந்த இதழ்.  ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்ல வரவில்லை. ஒரே கவனமாக இருந்தால் இன்னும் சீக்கிரமாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்து விடலாம்.
கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவந்துள்ளன.  நவீன விருட்சத்தில் பங்குப்பெற்ற படைப்பாளிகள் தங்களுடைய முகவரிகளைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
1) தமிழில் தற்காலத் தோரணை – பாரதியின் கவிதை   2
2) பின்னற்தூக்கு – எம் ரிஷான் ஷெரீப்                                 17
3) எலிப்பந்தாயம் – சின்னப்பயல்                                 20
4) கதிரவன் எழுதுகிறான் – அழகியசிங்கர்                         24
5) குரு-சினிமா கட்டுரை – அம்ஷன்குமார்                         26
6) பயணீ கவிதைகள்                                                 30
7) மோத்தி – காசி விஸ்வலிங்கம்                                 32
8) அலாரம் – அழகியசிங்கர்                                         38
9) கரையான் – ராஜேஸ்வரி                                  45
                                                          அன்புடன்,
   
                                                                                                               அழகியசிங்கர்

பிரிகிற361 நாட்கள்


ரவிஉதயன்

பிரிகிற361
நாட்களை
அவசர அவசரமாக
1 முத்தத்தில் சமன் செய்ய
முயலுகிறார்கள் புதியதம்பதிகள்
பச்சை சிக்னல் விழ
ரயில் புறப்பட…
நான்கு நட்சத்திரவிழிகள்
மினுங்கி
மின்னுகின்றன.
18 பெட்டிகள்
கடந்து விட்டன
ரயில் சென்றுவிட்டது.

இப்போது
விழுகிறது சிகப்பு சிக்னல்.

காத்திருக்கின்றன
361 நாட்கள்
புதிய மனைவி மேலும்
சிகப்பு சிக்னல்.

எதையாவது சொல்லட்டுமா….86

அழகியசிங்கர்

நாமெல்லாம் நாடகப் பாத்திரங்கள்.  உலகம்தான் நாடகமேடை. வாழ்க்கை என்ற நாடகத்தில் நாம் எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  தினம் தினம் நாம் என்ன நடிக்கிறோம் என்பது தெரியாமல் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  வசனம் யாரும் எழுதித் தருவதில்லை.  நாம்தான் வசனம் எழுதாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாடகத்தில் நாம்தான் எல்லாம்.  ஏன் இப்படி யோசிக்கிறேன்?
தங்கசாலையில் நாங்கள் குடியிருந்தபோது, குடியிருந்த வீட்டு சொந்தக்காரர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.  நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நாகேஷ் மாதிரி நடிக்க வேண்டுமென்று.  ஆனால் அது நடக்கவில்லை.  அவருக்கு அது பெரிய ஏமாற்றம் இல்லை. பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த எனக்கும் என்னைப்போல உள்ள சில நண்பர்களுக்கும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார்.  ஒருமுறை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாவில் நாடகம் ஒன்று அரஙகேற்றம் நடத்த வேண்டுமென்று என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.  எழுதவே தெரியாத நான் ஒரு நாடகம் எழுதினேன்.  அந்த நாடகத்தில் பெண் பாத்திரமே இல்லை.  எல்லாம் ஆண் பாத்திரங்கள்.   அந்த நாடகத்தில் நான் ஒரு வில்லன்.  என் நண்பன் ஒரு வில்லன்.  என் தம்பி போலீஸ்காரன்.  
எல்லோரும் நடிக்கப் போனோம்.  நான் வசனம் பேசி என்நண்பன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்க வேண்டும்.  நான் வசனம் பேசியும் என் நண்பனிடமிருந்து கத்தியைப் பிடுங்க முடியவில்லை.  பெரிய முயற்சி செய்து கத்தியைப் பிடுங்க வேண்டியிருந்தது.  என் தம்பி போலீஸ்காரன்.  மேடையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தபோது மைக்கை தட்டிவிட்டான்.  அவ்வளவுதான் எல்லாம் போயிற்று.  நாடகமும் பாதியில் நின்று போய்விட்டது.   அந்த நாடகத்தைக் காண்பதற்கு யார் வந்தார்கள் என்பது இப்போது என் ஞாபகத்தில் இல்லை.  உண்மையில் நாடகம் நடக்காமல் வேறு நாடகம் நடந்துவிட்டது.   நாடகம் முடிந்து  வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, நண்பனிடம் கேட்டேன்.  “ஏன் நீ கத்தியை உடனே கொடுக்கவில்லை?” என்று.  “நீ கொஞ்சமாக வசனம் பேசினாய்.  இன்னும் கொஞ்சம் வசனம் பேசியிருக்க வேண்டும்,” என்றான் அவன்.  அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியதே நான்தான்.  அவன் அப்படிப் பேசியது வேடிக்கையாக இருந்தது.
சபாவில் நாடகம் பார்க்கும்போது எனக்கும் நாடகம் இப்படி நடத்த வேண்டுமென்று தோன்றும்.  ஆனால் அதற்கான முயற்சி எப்படி ஏற்பாடு செய்வது என்பது தெரியாது.  நான் வேலை எதுவும் கிடைக்காமல் திரிந்தபோது, என் உறவினர் பையன் முயற்சியில் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந் நாடகத்தை என் உறவினர் பையன்தான் எழுதிக்கொண்டிருந்தார்.   ஆனால் நாடகம் அரங்கேற்றம் ஆகும் சமயத்தில் அவர் பெயரை குறிப்பிடப்படவில்லை. அதில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியவர், அன்றைய தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் ஒரு வசீகரமான பெண்மணி.  அவர் கணவர்தான் அந் நாடகத்தில் நடிக்கும் கதாநாயகன்.  அவர்தான் அந்த நாடகத்தையும் இயக்குபவர். நான் அந் நாடகத்தில் அத்தான் பாத்திரம் ஏற்று நடிக்கும் அசட்டுத்தனமான பாத்திரம்.  நானும் அந்தப் பெண்ணை காதலிப்பதாக  காட்சி. 
அந்தப் பெண்ணைப் பார்த்து நானும் காதல் வசனம் பேச வேண்டும்.  அந் நாடகத்திற்கான ஒத்திகை பல மாதங்களாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும்.  ஒத்திகைக்காக நான் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு சைக்கிளில் போவேன்.  நான் அந்தப் பெண்ணைப் பார்த்து வசனம் பேசும்போது, அந்நாடகத்தின் இயக்குநரும், கதாநாயகனாக நடிப்பவருநான அவர், எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பார்.  அவர் சொல்வதைக் கேட்டு நான் திரும்பவும் நடிப்பேன்.  
நான் வசனம் பேசியபடி கதாநாயகி முகத்தைப் பார்க்க வேண்டும்.  ஆனால் நான் கதாநாயகி முகத்தைப் பார்த்தால் வசனம் பேச வராது.  அல்லது வசனம் பேச வந்தால் கதாநாயகி முகத்தைப் பார்க்க மாட்டேன்.  
ஒருமுறை நான் வசனம்போது ஒரு தப்பை இயக்குநர் கண்டுபிடித்தார்.  “ஏன் நீங்கள் சத்தமாக வசனம் பேசுவதில்லை?” என்று கேட்டார்.  “எங்கே நீங்கள் சத்தம் போடுங்கள்?” என்று கேட்க, நான் பெரிதாக சத்தம் போட்டேன்.  üஎன்ன நீங்கள் இவ்வளவு சத்தமா குரல் எழுப்பிறீங்க…ஆனால் வசனம் பேசும்போது சத்தம் வருவதில்லையே?ý என்று கேட்டார்.  இன்னொரு முறை என்னிடம் பெரிய தப்பைக் கண்டுபிடித்தார்.  “ஒவ்வொரு முறையும் நாம் வசனம் பேசும்போதும், நம் உடம்பும் நடிக்க வேண்டும்,” என்றார்.  நான் அந்தக் கதாநாயகியைப் பார்த்து வசனம்போது, தேவையில்லாமல் என் கையை மார்பில் வைத்துக் கொள்வேன்.  “ஏன் கையை அப்படி வைத்துப் பேசறீங்க?”  என்று கேட்க, நான் திரும்பவும் வசனம் பேசும்போது, பேசுவதில் தடுமாறும்.  மேலும் கைகள் வெறுமனே தொங்கும்.  என் கவனம் முழுவதும் கைகள் மீதே இருக்கும்.  ஒரு வழியாக அவர் என்னை நடிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டார்.  எனக்கும் நிம்மதியாக இருந்தது.  அதன்பின் ஏன் நம்மால் நடிக்க முடியாதா என்ற கேள்விக்குறி சுழன்ற வண்ணம் இருந்தது. அந்த நாடகம் ஒருகாட்சியோடு அரங்கேற்றம் ஆகி முடிந்துவிட்டது. 
வங்கிப்பணியில் சேர்ந்தபிறகு நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  பரீக்ஷா ஞாநி ஏற்பாடு செய்த நாடகத்தில்.  மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில்.  வேலை கிடைக்காத இளைஞன் பாத்திரத்தை ஏற்று நடித்தேன். மேடையில் பாதி தூரம் வந்து வசனம் பேசவேண்டும்.  நான் ரொம்பவும் சிரமப்பட்டு பேச வேண்டிய வசனத்தை மனனம் செய்து வைத்திருந்தேன்.  ஞாநி அவருடைய பரீக்ஷா நாடகங்களை வித்தியாசமாக அரங்கேற்றம் செய்வார்.  பெரும்பாலும் எக்மோரில் உள்ள மியூசியம் தியேட்டரில்தான் நாடகங்கள் அரங்கேற்றம் ஆகும்.  ஒரு நாடகம் நடத்த என்ன செலவாகும் என்பதை இன்னொரு நாடகத்திற்கான ஒத்திகை நடத்தும்போது சொல்வார்.  மிகக் குறைவான செலவில் நாடகத்திற்கான செலவை கொண்டு வந்துவிடுவார்.  நடிப்பவர்கள் எல்லோரும் சுதந்திரமாக நடிப்பார்கள்.  நாற்காலிக்காரர் என்ற நாடகத்தில் அசோகமித்திரனை நாற்காலியில் உட்கார வைத்து ஒரு நாடகத்தை நடத்திக் காட்டியவர். நான் நடிக்கும்போது ஒருமுறை கூட இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று ஞாநி சொன்னது கிடையாது.  
மேடையில் பாதிதூரம் வந்து நான் வசனம் பேச வேண்டும்.  நான் முதல் முறையாக எல்லோர் முன்னிலையிலும் நாடகத்தில் நடிக்கிறேன்.  ஆர் ஆர் சபாவில் அந்த நாடகம் நடந்தது என்று நினைக்கிறேன்.  நடிக்க வேண்டுமென்ற பரபரப்பு என்னிடம் கூடிக்கொண்டே போயிற்று.  பாதி தூரம் வந்து தைரியமாக வசனம் பேசினேன்.  ஆனால் என்னுடன் நடிக்க வந்த சக நடிகர் என்னைப் பார்த்து ஏராளமாக வசனம் பேசஆரம்பித்துவிட்டார்.  எனக்கே திகைப்பு.  நான் எப்படிப் பேசுவது என்று திகைத்துக்கொண்டிருந்தேன்.  என் திகைப்பையும் பதற்றத்தையும் வைத்தே அவர் இன்னும் வசனம் இட்டுக்கட்டி பேச ஆரம்பித்துவிட்டார்.  எனக்கு மேடையை விட்டு வந்தால் போதும் என்றாகி விட்டது.  நாடகம் நடித்த அன்று இரவு எனக்கு சரியாக தூக்கமே வரவில்லை.  நாடக மேடையில் பாதிதூரம் வந்து வசனம் பேசுவதுபோல் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.  அடுத்தநாள் பரீக்ஷா ஞாநி வீட்டில் முதல்நாள் வைத்திருந்த என் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன்.  ஞாநி வீட்டிற்குள் போய் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஒரு நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் நாடகம் ஒட்டி நடக்கும் நிகழ்ச்சிகள் நாடகத்தை தூக்கி சாப்பிடும்போல் இருக்கிறது.    
இரண்டு மூன்று வாரங்கள் கழித்து எனக்கு நாடக கிலி போனபிறகு நான் நடித்த பரீக்ஷா நாடகம் பற்றிய விமர்சனம் நடந்தது.  அதில் கலந்துகொண்டேன். அக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள்  நாடகத்தில் நான் ஏற்றப் பாத்திரத்தை சிலாகித்துப் பேசியது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
பொதுவாக நாடகத்தில் நடித்தாலும் நாடகம் பார்ப்பதை பெரிதும் விரும்ப மாட்டேன்.  குறிப்பாக சபா நாடகங்களை. நாடகத்திற்கு யாராவது போகிறார்கள் என்றால் கிண்டல் செய்வேன்.  ஏன்என்றால் ஒரு நாடகத்தை 2 மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பது என்பது என்னால் முடியாது.  
முன்பெல்லாம் கோமல் சுவாமிநாதன் நாடக விழா ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார்.  பல நாடகக்குழுக்கள் கலந்து கொண்டு நாடகங்கள் அரஙகேறும்.  பல நாடகங்களுக்கு கூட்டமே வராது. ஆனால் எஸ்.வி சேகர் நாடகத்திற்கு மட்டும் குடும்பத்தோடு பலர் கலந்துகொண்டு பார்க்க வருவார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும். அதிக ஆடம்பரம் இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்ய முடியுமா? நாடகம் என்பது பலருடைய முயற்சி.  பார்வையாளர்கள் முயற்சி வேண்டும்.  நடிப்பவர்களின்  முயற்சி வேண்டும்.  நல்ல கதை வேண்டும்.    
எல்லோரும்போல் வாழ்க்கை என்ற நாடகத்தில் நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.  தினம் தினம் என்னுடைய வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்.  பலவித முகபாவங்களை காட்டிக்கொண்டிருக்கிறேன்.  இந்த நடிப்பில் எல்லோரும்போல அலுப்பே ஏற்படப்போவதில்லை.
(ஜøலை 2013 அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

லாவண்யா

மனச்சிறை
பெய்த மழையில்
வனம் கடலானது
வீசிய புயலில்
மரங்கள் விழுந்தன
மரம் விழுந்த்தில்
என் கூடு  தொலைந்த்து
நீரும் தீயும்
என் கூடழிப்பது
என் பிறவியின் சாபம்
முதல் குருவி துவங்கி
என்வரை
சலியாமல் கட்டுகிறோம்
மீண்டும் மீண்டும்
கூடிழக்கும் துயரும்
கூடுகட்டும் சிரம்மும்
அனுபவித்தால்மட்டுமே புரியும்
உலர்ந்த புற்களை
மெலிந்த சுள்ளிகளை
சேகரிக்கும்போது
கூடு ஒரு மனச்சிறையென்று
ஒரு குரல்
தலைக்குள் கேட்டது.
நிறுத்திவிட்டேன்.
 
அற்ப சந்தோஷம்
குயில் கூவக்கேட்டு
கனவு காணலானேன்
குளிர் காற்று வீசவே
மனங்குளிரலானேன்
மின்னல் மின்னக்கண்டு
பெரிதும் மகிழ்ந்து போனேன்
கருமுகிற்கூட்டம் வரவே
களிப்படையலானேன்
அற்ப சந்தோஷத்தில்
ஏமாந்து போனேன்.
 

நிரந்தரத்தின் தரிசனம்

 ஆறுமுகம் முருகேசன்

அடைக்கப்பட்டக் குழாயிலிருந்து
ஒவ்வொருச் சொட்டாய்
நீர் தரைமோதி மேலெழும்பும்
சப்தமென
நம் இரவை கலைத்து அடுக்குகிறேன்
செவிலித்தாய் ஒத்த
ப்ரிய ரேகைகளின் வழி
எதிர்ப்பெதுவுமின்றி மிடறு மிடறாய்
தரிசிக்கிறாய் நீ !
தடதடத்த பின்னங்கழுக்து படபடப்பில்
தப்பிக்க முயன்ற எறும்பினை
வலிவலிக்காத வண்ணம் கைப்பற்றுகிறோம்
பின் மெதுவாக அசைவுறுகிறோம்
மிதந்து
நிமிரும்பொழுது
தற்காலிகமாக வெளியேறியிருந்தது எறும்பு
***

நகரத்துப் பசுக்கள்

Ganesh V
தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
தெருக்களில் திரிந்தன
வெள்ளைப் பசு
முள்மரங்களை
சுவாசம் பிடித்த படி நின்றது
மஞ்சள் பசு
சாலையோரங்களில் போடப்பட்ட
கற்குவியற்களை நக்குகிறது
வெள்ளைப்பசுவின்
இளங்கன்று
பிளாஸ்டிக் குப்பைகளை
ஆர்வத்துடன் நோக்குகிறது
மாலை வீடு திரும்பாத
பசுக்களைத்
தேடி வந்த உரிமையாளன்
மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.
இப்போதெலாம்
பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
நவநாகரீக கோசாலையில்
சுகமாய்க் காலங் கழிக்கின்றன
காசு கொடுத்து
பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
இன்னுமொரு கிளை திறப்பதற்காக
உரிமையாளன்
கிராமத்திலிருந்து
மேலும் பசுக்களை
நகருக்கு அழைத்து வருகிறான்.

இலையின் இயல்பற்ற இதயம்


க.உதயகுமார்

நதிவழி நீந்தும்
இலைபோல்
லாவகம் வருவதில்லை
விதிவழி வற்றும் வாழ்வில்
ஓவியத்தின் கண்களென
நிலைகுத்தியே நிற்கிறது
துயர்
சன்னமாய் விரிசல் விட்டு
சுக்குநூறாய் உடைகிறது
கண்ணாடி மனசு

இலைகளுக்கு எப்படி
இவ்வளவு எளிதாக இருக்கிறது
தன்னை விடுவித்துக் கொண்டு
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில்
ஈரமாய் எழவும்
இலையின் இயல்பற்ற இதயத்தால்
முடிவதில்லை

பச்சை காய்ந்து
பழுப்பு மினுங்கும்
பருவத்தே
நானுமோர் இலையாவேன்
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

மொழிபெயர்ப்புக் கவிதை

கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப்
பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
“ரத்து மார்கரெட் நோனா”
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக்
கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று அறுபதாம் தோட்டத்தில்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை