இரு கவிதைகள்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

அம்மைபாலன்

1. கர்ப்பம்

தேவர்களுக்குத்
திருஷ்டி கர்ப்பம் உண்டாம்.
நல்ல வேளை
நாமோ –
மூன்றின் விலை பதினைந்தே காசுகள்

2. சந்தா

புரிகிறது ஓராண்டும்
அரையாண்டும் கூட.
ஆயுள் சந்தா மட்டும்
புரியவில்லை
ஆயுள் – எனக்கா? அதுக்கா?

ஒரு பாடம்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

தி.சோ.வேணுகோபாலன்




“போடா நாயே”
வார்த்தை ‘வெள்’ என்று வெடித்தது
இதயம் படபடக்க
கண்கள் சிவந்தன.
அறிவில் குறுகுறுக்கிறது
ஒரு படம்

தொழுநோய்ப் பிச்சைக்காரனை
தன் வால் தூரிகையால்
நாய்
மனிதனாய்ச் சித்தரித்தது

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம்


அழகியசிங்கர்  
     விருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நடந்தது.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரை கூப்பிட்டுப் பேசச் சொல்வது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்.  இப்படிப் பேசச் சொல்லும்போது எத்தனைப் பேர்கள் வருவார்கள் அல்லது வராமல் போவார்கள் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை முக்கியமில்லை.  ஆனால் பேச வருபவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பது தெரியில்லை.

    இந்த முறை காந்தியிடம் காரியதரசியாக பணியாற்றிய ஸ்ரீ கல்யாணம் அவர்களை பேசக் கூப்பிட்டோம்.  அவருக்கு வயது 93.  காந்தியுடன் உயிரோடு இருந்தவர்கள் 3 பேர்தான் உலகம் முழுவதும்.  அந்த மூன்று பேர்களில் கல்யாணமும் ஒருவர்.  கல்யாணம் ஒரு எளிமையான வாழ்க்கையை எந்தவித ஆடம்பரமுமின்றி வாழ்ந்து வருகிறார்.  தனியாக 93 வயது மனிதர் இருந்து வருகிறார்.  அவருக்கு செடிகொடிகள் மீது அலாதியான பிரியம்.  காலையில் மூணு நாலு மணி நேரம் அதற்காகவே செலவிடுகிறார்.  அவர் சாப்பாட்டு தேவை மிக மிகக் குறைவு. 

    இன்றைய அரசியல் குறித்த அதிருப்தியை அவர் காந்தியைப் பற்றி பேசும்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.  வெள்ளைக்காரன் ஆட்சி சிறந்த ஆட்சி எண்கிளார்.  அந்த ஆட்சியில் இது மாதிரி பாலியல் பலாத்காரம், திருட்டெல்லாம் நடக்கவில்லை என்றார். 

    ‘காந்திக்கு மொத்தம் 3 காரியதரசிகள்.  மற்ற இரண்டு காரியதரசிகள் மிகச் சிறந்த நிர்வாகிகள்.  அவர்கள் சீக்கிரம் இறந்தும் விட்டார்கள்.  நான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் என்னை முக்கியமாகக் கருதுகிறார்கள்.  உண்மையில் நான் காந்திக்கு ஒரு டைப்பிஸ்ட் மாதிரி என்றார் கல்யாணம் தன்னடக்கமாக.

    ஒருமுறை நேரில் பார்க்கும்போது, ‘எனக்கு மாதம் மூவாயிரம் மேல் செலவு இல்லை,’ என்றார்.  அவரே சமையல் செய்து கொள்கிறார். 

    காந்தியை கோட்úஸ சுட்டுக்கொள்ளும் தருணத்தில் அவர் அருகில் இருந்த பலரில் கல்யாணமும் ஒருவர்.  கல்யாணம் சொல்கிறார்: கோட்úஸ பலமுறை காந்தியைச் சுடுவதற்கு வந்து கொண்டிருந்தான்.  வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அது நடக்கவில்லை….போலீசு காந்தியைப் பார்க்க வருபவர்களில் பாக்கெட்டுகளை சோதனை இட வேண்டும் என்றார்களாம்.  ஆனால் காந்தி சம்மதிக்கவில்லையாம்.   அதனால்தான் கோட்úஸ துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்தான் என்கிறார் கல்யாணம். 

    காந்தியைச் சுடும்போது ஹே ராம் என்று சொன்னாரா என்பது தெரியவில்லை.  ஒரே கூச்சலாக அமைதியின்றி இருந்தது.  அந்தச் சத்தத்தில் அவர் ஹே ராம் என்று சொல்லியிருந்தால் கேட்டிருக்காது என்றார் கல்யாணம்.

    காந்தியுடன் ரயிலில் பயணம் செய்யும்போது கட்டாயம் டிக்கட் வாங்க வேண்டுமாம்.  யாரோ டிக்கட் வாங்குவார்களாம்.  கல்யாணத்திற்கு இது தெரியாதாம்.  ஒருமுறை ரயில் பயணத்தின் போது காந்தி கல்யாணத்தைப் பார்த்துக் கேட்டாராம்.  ‘என்ன டிக்கட் எடுத்தீரா?’ என்று.  கல்யாணம் ‘டிக்கட்டா,’ என்று முழித்தாராம்.  காந்தி அவரை அடுத்த ரயில் நிலையத்தில் டிக்கட் கட்டாயம் வாங்க வேண்டுமென்று சொல்லிவிட்டாராம்.  ரயில் அடுத்த ரயில் நிலையத்தில் நின்றபோது ஏகப்பட்ட கூட்டமாம்.  அந்தக் கூட்டத்தில் காந்தி ஸ்டேஷன் மாஸ்டரை பக்கத்தில் வரும்படி சொன்னாராம்.   அந்தக் கூட்டத்தில் தன்னை மாத்திரம் கூப்பிடுகிறாரே என்ற திகைப்பாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு.  பின் காந்தி அவரிடம் சொல்லி கல்யாணத்திற்கு ஒரு ரயில் டிக்கட் வாங்கினாராம்.

    இந்தியா சுதந்திரம் அடைவதை விட காந்தியை ரொம்பவும் பாதித்தது ஹிந்து முஸ்லீம்கள் தகராறுதான்.  காந்தி இந்தக் கலவரத்தைக் கண்டு துவண்டு விட்டாராம்.  காந்தியைப்பற்றி பேசிக்கெணர்டே வரும்போது ஆங்கில ஆட்சியே சிறப்பானது என்று அடிக்கடி கல்யாணம் பேசும்போது சொல்லிக் கொண்டிருந்தார்.

    எந்த வேலையும் இல்லாமல் கல்யாணத்தால் சும்மா இருக்க முடியாது.  ஒரு முறை எந்த வேலையும் இல்லாமல் கல்யாணம் சும்மா இருந்தாராம்.  பின் காந்தியைப் பார்த்து எந்த வேலையும் இல்லை என்றாராம். கல்யாணத்தை காந்தி உடனடியாக கழிவறையைச்  சுத்தம் செய்ய சொன்னாராம்.  காந்திக்கும் அவர் மனைவி கஸ்தூரிபாயிற்கும் இதுதான் பிரச்சினை.  இன்னொருவர் பயன்படுத்தும் கழிவறையை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்தியைப் பார்த்து கஸ்தூரிபாய் கேள்வி கேட்பாராம்.  ஆனால் காந்தி அவர் சொல்வதில் உறுதியாக இருப்பாராம்.

    அம்பேத்கார் பற்றி காந்தி நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தாராம். 

    கல்யாணம் 2 மணிநேரம் விடாமல் பேசினார்.  அவர் காந்தியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தற்கால அரசியல் பற்றியும் அதிகம் பேசினார்.  இது அவர் பேச்சோடு சரியாக இணையவில்லை.
   
   

குருவும் சிஷ்யனும்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

க. நா. சுப்ரமண்யம்

கை நீட்டித் தலையில் வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
நஇடத்தமர்ந்த சிஷ்யனை
‘விளங்கிற்றா?’
என்று குரு வினவ’விளங்கிற்று’
என்று சிஷ்யன்கூற
‘என்ன விளங்கிற்று
எனக்கும் சொல் ‘
என்று சகபாடி கேட்டான்
‘குருவே சொல்வார்’
என்று பதில் வந்தது.

சில விபரங்கள்

    விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதற்கு முதல் காரணம்.  ஆடிட்டர் கோவிந்தராஜன்.  இவர் முழுக்க முழுக்க ஒரு சிறுகதை வாசிப்பாளர். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஆரம்பித்து நிறுத்தி இருந்த இலக்கியக் கூட்டங்களை திரும்பவும் ஆரம்பிக்க என்னைத் தூண்டியவர்.  இதுவரை நாங்கள் 4 கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.  இலக்கியக் கூட்டம் நடத்தும்போது நான் எதிர்கொள்வதை கோவிந்தராஜனுக்கும் தெரியும்.  அவர் ஒரு ஆடிட்டர் மட்டுமல்ல.  வகுப்பும் நடத்தும் ஆசிரியர்.  பல இடங்களுக்குச் சென்று அவருடைய துறை சம்பந்தமாக பேச வல்லவர்.  என்னமோ தெரியவில்லை அவருக்கு தமிழ் சிறுகதைகளைப் படிப்பதில் ஒரு பித்து.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்தாலும் படித்து விடுவார்.  மேலும் சிறுகதைத் தொகுதிகளையும் வாங்கிப் படிப்பார்.  படிப்பதோடு அல்லாமல் அந்தந்த எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பாராட்டவும் செய்து விடுவார்.     


    அவர் முயற்சியில் இன்னொன்றையும் செய்ய முனைந்து விட்டேன்.  மாதம் ஒரு சிறுகதையை பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்று.  இந்த முயற்சி ஏற்கனவே இலக்கியச் சிந்தனை செய்வதுதான்.  ஆனால் இலக்கியச் சிந்தனை சிறுபத்திரிகையில் வரும் கதைகளை கவனிப்பதில்லை.  நானும் ஆடிட்டரும் எல்லாப் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்து சிறந்த கதை என்று எங்களுக்குத் தோன்றுவதை தேர்ந்தெடுத்து ரூ.500 பரிசளிப்பது என்ற முறையை ஆடிட்டர் கோவிந்தராஜன் முடிவுபடி செய்து உள்ளோம்.  அப்படி ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் கதைகளை மொத்தமாக புத்தக உருவில் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வருவது என்று நான் முடிவு எடுத்துள்ளேன்.  எங்கள் எண்ணம் எந்த அளவிற்கு நிறைவேறும் என்பதை நாங்கள் அறியோம்.

    முதன் முதலாக ஜøலை மாதம் கதையாக ஆனந்தவிகடன் 16.07.2014 ல் வெளிவந்த ‘காணும் முகம் தோறும்’ என்ற எஸ் செந்தில்குமார் எழுதிய கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு என்ற பெயரில் இக் கதை பிரசுரம் ஆகி உள்ளது.  உண்மையில் அப்படித்தான்.  நாங்கள் இதற்காக பல பத்திரிகைகளைப் படித்தோம்.  எல்லாக் கதைகளைப் பற்றியும் சிறு சிறு குறிப்புகளும் எழுதி உள்ளோம்.  இந்தக் கதைத் தேர்ந்தெடுப்பில்  எஸ் ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான கதை ஆசிரியர்களை தவிர்த்து விட்டோம்.  அ முத்துலிங்கம் ‘சின்ன சம்பவம்’ என்ற சிறப்பான கதையை உயிர்மை இதழில் ஜøலை மாதம் எழுதி உள்ளார்.  ஆடிட்டர் அன்பளிப்பாக அளிக்கும் இத் தொகை குறைவானதுதான்.  வேறு யாராவது இன்னும் எதாவது நன்கொடை அளிக்க முன் வந்தால் அதையும் சேர்த்து செந்தில் குமார் அவர்களுக்கு அனுப்பலாம். 

    உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம். 

நவம்பர் 1970 – கசடதபற இரண்டாவது இதழ்


பாலகுமாரன் எழுதிய கவிதை

முட்டி முட்டிப்
பால் குடிக்கின்றன
நீலக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

யாப்பியல்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.  இதுவரை முதல் இதழில் வந்த கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  இப்போது இரண்டாவது இதழ்.

நவம்பர் 1970   –  இரண்டாவது இதழ்

மா. தக்ஷிணாமூர்த்தி

பூங்குயிலே,
யாப்பியல் கற்றனையோ நீ?
இசைக்கும் வசைக்கு –
மின்றியமையாத
‘சை’ கைகளைக் கற்றுக்கொள்.
இலக்கண மிதுவே.
இன்றே லிடையிற் படையாய்ப்
படுத்து விடுவாய்.
அது உன்பாடு.
என் பாடு
உன்னைப் பார்த்துக்
கா கா எனக் கரைதல்.
காவாக்கால் சோகாப்பா-
யிசையிழுக்குப் பட்டு.

நீ வருவாய்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

ஐராவதம்

ரொம்ப நாளாய்
உனக்காகக்
காத்திருந்தேன் –
மயான பூமியிலே.
நீ வரக்காணோம்.
சரி என்று சட்டையை
மாட்டிக்கொண்டு
ஜரிகை அங்க வஸ்தரம் தொங்க
மியூஸிக் அகடமிக்குப்
புறப்பட்டேன்.
அங்கே இப்போது ஸீஸன்
இல்லையாம்.
ஸீஸனில் பாடியவர்கள்
சிகிச்சைக்குப் போய் விட்டார்கள்.
சரிதான் என்று யூனிவர்ஸிடிக்குப்
போனேன்.  அங்கே கோடை லீவாம்.
வைஸ் சான்ஸலர் வைப்பைக்
கூட்டிக்கொண்டு கனடா
போய்விட்டாராம் கான்பரன்ஸ்
ஒன்றிற்காக.
கான்பரன்ஸ் தலைப்பு
üஇன்றைய கல்வி
மகத்தான அழிவு சக்தி.ý
வெயிலாக இருந்தினால்
வேறெங்கும் போகவில்லை.
உன்னைப்பார்க்க முடியவில்லை
அதனாலென்ன.  இன்றில்லாவிட்டால்
நாறை வரப்போகிறாய் நீயாகவே
துணையில்லாமல்

மனித பாவங்கள்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 


பாலகுமாரன்

இரட்டைத் தடங்களில்
எதிர்ப் பட்ட ரயில்கள்
ஒன்றை ஒன்று கண்டதும்
கண் சிமிட்டிக் கொண்டன
பொறி பறந்தது
நெருங்கி வந்ததும்
வந்தனம் கூறின
குழ லொலித்தது
பிரிந்து போகையில்
இகழ்ச்சி நிரைத்து
எச்சில் துப்பின
என் முகத்தில் கரி அடித்தது –
தடங்களைக் கடக்கையில் தெரிந்தது
ரயில்களின் சினேகிதம் கண்டு
கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது

சகுனம்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

கோ ராஜாராம்

நீண்டதொரு காலம் போய்,
மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்
நிலைக்கும் அப்பால் தெருவிலே வந்தேன்
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது
நடையினிலே நான் மிதந்தேன்
    பசபசவென்று உடலெடுத்த
    பூனையொன்று குறுக்கிட்டது
சீயென்றேன்.  தூவென்றேன்
காணக் கூசினேன் பூனையை
திரும்பிவிட அடிவைத்தேன்
துள்ளி விழுந்தது
துரிதமாய் வந்த காரினடியில்
துடித்துப் புரண்டது, பூனை
மனங் குமறிக் குமைந்தேன்
    கூசினேன் – என்னைக் காட்டிக்கொள்ள