கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

கொடும்பாவி





ப கங்கைகொண்டான்                         






காய்ந்த வைக்கோலால்
கட்டி வைத்துத்
துணி போர்த்தி
கரித்துண்டால்
அரக்கிப் பல்வரிசை
அரக்கன் கொடு மீசை
உடல் முழுதும்
கறுப்புத் தார் அங்கி
தாரை தப்பட்டை
தரங்கெட்ட ஒப்பாரி
செருப்புப் பூக்களால்
செய்த மலர்மாலைச்
செண்டாக்கி
எரியூட்ட
இழுத்து நடப்போரே-
எதற்குக் கொடும்பாவி?
எரிக்கின்ற உடலுக்கோ
இளகாத மனதுக்கோ?

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்                                      


நான் பார்த்து ரசித்தப் படம் தி வே ஹோம் ( (THE WAY HOME).).
இந்தப் படத்தை டைரக்ட் செய்தது தென் கொரிய பெண்.  பெயர் லீ ஷியான் ஹியான்.   காது சரியாக கேட்காத வாய் பேச முடியாத 75 வயது  வயதானவளுக்கும், ஏழு வயதுப் பேரனான சாங்க்வுக்கும் ஏற்படும் சமர்தான் இந்தப் படம்.  சாங்க்வின் அம்மா, அவள்  அம்மாவிடம் தன் பையனை சிலகாலம் அவன் பள்ளி விடுமுறையில் விட்டுவிட்டு செல்கிறாள்.  ஒரு பொட்டல் கிராமம்.  அருமையான மலையைச் சுற்றி உள்ளது.  அதிக வசதி இல்லாத மிகக் குறுகலான வீடு.  சாங்க்விற்கு அங்கு தங்குவதற்கே பிடித்தம் இல்லை.  அம்மாவிடம் சண்டை போடுகிறான்.  அம்மா அவனை அடித்து தரதரவென்று அழைத்துப் போகிறாள்.  அந்தக் கிராமத்தில் அதிகமாக மனிதர்கள் இல்லை.  வேறு வழியில்லை சாங்க்வி பாட்டியைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.
பாட்டி அவனிடம் அன்பை பொழிந்து கொண்டிருக்கிறாள்.  அவனோ அவளைப் பார்த்து அலட்சியப் படுத்துகிறான்.  பொழுது போக்கிற்காக அவன் எடுத்துக்கொண்டு வந்த வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறான்.  வேறு வழியில்லை, பாட்டியுடன்தான் தங்க வேண்டும்.  பாட்டியை என்னதான் கிண்டல் செய்தாலும், பாட்டி அவனிடம் அன்பை காட்டிக்கொண்டிருக்கிறாள்.  போரடிக்கும்வரை வீடியோ கேமை விளையாடுகிறான்.  பேட்டிரி தீர்ந்து விடுகிறது.  வீடியோ கேம் இனிமேல் விளையாட முடியாது.  பேட்டிரி வாங்க பாட்டியிடம் பணம் கேட்கிறான்.  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.  வீட்டில் பாட்டி எங்கே பணத்தை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று தேடுகிறான்.  அவனுக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற நிலையில் வீட்டில் உள்ளவற்றை எடுத்து தூக்கிப் போட்டு கலாட்டா செய்கிறான்.   பணம் கிடைக்காத கோபத்தில் பாட்டியைத் தள்ளிவிடுகிறான்.  கலர் பென்சிலால் சுவர் முழுவதும் பாட்டியைக் கேலி செய்து வரைகிறான்.  பாட்டியின் செருப்பை ஒளித்து வைத்து விடுகிறான்.  பாட்டி அந்தத் தள்ளாத வயதிலும், செருப்பில்லாமல் தண்ணீர் எடுத்து வருகிறாள்.   பாட்டிக்கோ பேரன் மீது கோபமே வருவதில்லை.  பெரும்பாலும் பேசா மடந்தையாக இருக்கிறாள். அவன் தேவைகளை மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறாள்.
பேட்டிரி வாங்குவதற்காக பாட்டியை விட்டுவிட்டு தனியாக நடந்து கடைக்கெல்லாம் செல்கிறான். விடியோ கேமிற்கான பேட்டரி எங்கும் கிடைக்கவில்லை.  வரும் வழியில் வீட்டிற்கு வரும் வழியைத் தவற விடுகிறான்.அழுதுகொண்டே வருகிறான்.  யாரோ வழிபோக்கர் அவனைப் பத்திரமாகக் கொண்டு வருகிறார். 
பல சம்பவங்களின் கட்டுக்கோப்புதான் இந்தப் படம்.  பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்கிறான்.  வேண்டா வெறுப்பாக..
கிராமத்தில் அவன் வயதுடைய ஒரு சிறுமியும், வயல் வேலை செய்யும் சியோல் என்னும் ஒரு பையனும் அவனுக்கு அறிமுகமாகிறார்கள்.  சிறுவர்களுக்குள்ளே நடக்கும் மனப் பேதத்தை அருமையாகக் காட்சிப் படுத்துகிறார் டைரக்டர்.  மாடு பின்னால் துரத்தி வருவதை ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக சாங்கவும், அவனது தோழியும் எதிர் கொள்கிறார்கள்.  சியோல் தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.  அவனைப் பார்த்த சாங்க்வின் பின்னால் மாடு துரத்துகிறது என்று பொய் சொலலி அவனை துரத்துகிறான்.  பயத்தில் அவன் ஓடும்போது அவன் கீழே விழுந்து அடிப்பட்டு விடுகிறது.  சாங்க்வை அடிக்க வருகிறான்.  சாங்கவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பாட்டி அவனிடம் செய்கையில் மார்பை சுற்றி கையால் ஆட்டுவாள்.  அதேபோல் செய்கிறான்.  சியோல் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறான்.  
தோட்டத்தில் விளையும் பூசனிகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று சந்தையில் விற்கிறாள் பாட்டி .  அவளிடம் யாருமே வாங்க வருவதில்லை.  பாட்டி சத்தம் போட்டு  விற்கிறாரள்.  சாங்கவி பாட்டியையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பூசனியை விற்றப் பணத்தில் பாட்டி சாங்க்விக்கு கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாள்.  பாட்டி மீது காரணம் இல்லாத கோபமாக இருக்கும் சாங்க்வி பாட்டி மீது அன்பைப் பொழிய ஆரம்பிக்கிறான்.    
பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டியை முதலில் தவிர்க்க முடியவில்லை.  உதாரணமாக பாட்டி ரொம்பவும் களைப்பாகி படுத்து விடுகிறாள்.  பாட்டிக்கு இறந்து விட்டாளோ என்று பயப்படுகிறான் சாங்க்வி.  பாட்டியின் முகத்தில் கை வைத்துப் பார்க்கிறான்.  பயத்தால்.  இன்னொரு இடத்தில் சந்தைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது பாட்டி சாங்க்வியை அவனுடைய நண்பர்களுடன் பஸ்ஸில் அனுப்பி விடுகிறாள்.  பாட்டி ஏன் வரவில்லை என்பது சாங்க்விக்குப் புரியவில்லை.  வீட்டுக்கு வந்தவுடன், பாட்டியை எதிர்பார்த்த சாங்க்வி பஸ் வருமிடத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு பஸ்ஸக பாட்டி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டி வரவில்லை என்றவுடன் அவனிடம் பதட்டம் கூடி விடுகிறது.  பாட்டி நடந்து வருவதைப் பார்த்து வருத்தப் படுகிறான்.  
பேரன் என்ன குறும்பு செய்தாலும், பாட்டி அவன் மீது அன்பை காட்டத் தவறுவதில்லை.  நேர் மாறாக தன் அம்மாவிடம் கிடைக்கும் தண்டனையும், பாட்டியிடம் காணும் அன்பும் அவனை மாற்றுகிறது.  பாட்டியை விட்டு, அந்தக் கிராமத்தை விட்டு பிரியும்போது அவன் மனம் பேதலிக்கிறது.  பாட்டிக்காக வருத்தப் படுகிறான்.  பாட்டியைப் பிரியப் போகிற சமயத்தில் பாட்டிக்காக இரண்டு அட்டையில் இரண்டு வாசகங்களை எழுதி பாட்டியிடம் கொடுக்க விரும்புகிறான் ஒரு அட்டையின் வாசகம்  I am sick.  இன்னொரு அட்டையின் வாசகம் : I miss you.  .  பாட்டியைப் பிரிந்து அவன் அம்மாவுடன் செல்லும்போது பாட்டி நினைவாகவே இருக்கிறான்.  பஸ்ஸிலிருந்து திடீரென்று இறங்கி வேகமாக பாட்டியிடம் ஓடிப்போய் அந்த இரண்டு அட்டைகளைக் கொடுக்கிறான்.பஸ்ஸிலிருந்து பாட்டி செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டியும் வருத்தத்துடன் செல்கிறாள்.  பேரன் கொடுத்த அட்டைகளைத் திரும்பி திரும்பிப் பார்க்கிறாள்.
கொஞ்சங்கூட போரடிக்காமல் ரொம்பவும் பிரமாதமாக எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இன்னும்கூட இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்.  

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

திட்டமற்ற….

எஸ். வைதீஸ்வரன்

வானம் கட்டுப்பாடற்று,
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள்,
பொல்லா வாண்டுகள்.
நினைத்த இடத்தில, கவலையற்று,
நின்ற தலையில் பெய்து விட்டு,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்,
வெள்ளை வால்கள்

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

                           – கொனிஷ் ரெய்லான்

முடியாது –
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

                          – ஸராயுகி

யாரோ கிழவன்
     – நான் அறியாத அந்நியன் –
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

                          – ஹீடோமாரோ

                            தமிழில் :  க.நா.சு

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்


                                                              
அழகியசிங்கர்


 25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது. 
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது. 
உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.
பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம். 
ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.
எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார்.  அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  கூட்டம் முடிந்தவுடன் யார் யார் என்னன்ன பேசினார்கள், என்னன்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை கொஞ்சங் கூட பிசகாமல் கூட்டம் முடிந்தவுடன் ஒப்பிப்பார்.  
நானோ அதுமாதிரி செய்ய இயலாதவன்.  மேலும் கூட்டத்தில் பேசாத விபரத்தையும் கூட்டத்தில் பேசியதுபோல் சொல்லக் கூடியவன்.  அந்தக் காலத்தில் கணையாழி குறுநாவல் போட்டியில் ஜெயமோகன், பாவண்ணன், இரா முருகன், சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கராகிய நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறுநாவல்கள் கணையாழியில் படைத்துக் கொண்டு வருவோம்.  அதில் ஜெய மோகனும், இரா முருகனும் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டார்கள். அப்படியென்றால் என்ன?  அதிகப் பக்கங்கள் கூடிய குண்டு குண்டு நாவல்களை எழுதி தள்ளுகிறார்கள்.  ஜெயமோகன் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.  இரா முருகனின் விஸ்வரூபம் நாவலை எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.  இந்தக் கூட்ட முடிவில் நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.  ‘இத்தனைப் பக்ககங்கள் உடைய நாவலை எப்போது படித்து முடிப்பது’ என்று.  அது ஒரு பிரச்சினை இல்லை என்பதுபோல்தான் இரா முருகன் குறிப்பிட்டார்.  
இரா முருகன் நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.  முதலில் பேச ஆரம்பித்தபோது எப்படி எழுதவே தெரியாத அவர் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.  கிட்டத்தட்ட 2 மணிநேரம் இரா முருகன் தம் கட்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் கேட்பவர்களுக்கு கொஞ்சங்கூட அவர் பேசியது அலுக்கவில்லை என்பது நிஜம்.  வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே வந்தது.  எத்தனை எண்ணிக்கை என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  
நடிகர் கமல்ஹாசனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த நிகழ்ச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார்.  அவர் சில படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி உள்ளார்.  கிரேஸி மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாடகம் ஒன்றும் எழுதி உள்ளார்.  டிவியில் சீரியல் எழுதுவதையும் இப்போது ஆரம்பித்திருப்பதாகக் கூறி உள்ளார்.  அவர் முதலில் கதை எழுதத் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் அவர் கல்லூரியில் வகுப்பெடுத்து இளம்பாரதி என்ற ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.பின் மீரா.  இரா முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேலை வீதியிலிருந்து கீழ வீதிக்கு நடை பயிலும் கறுப்பான உருவம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் போகிறார்.  
அவர் பேசியதை SONY RECORDER மூலம் பதிவு செய்துள்ளேன்.  இதை எப்படி இத்துடன் இணைப்பது என்பது மட்டும் எனக்கு இன்னும் தெரியவில்லை.  யாராவது ஒரே ஒரு முறை உதவி செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.  

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

ஷஸிகா அமாலி முணசிங்க

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது
உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம்.ரிஷான் ஷெரீப்

கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

காந்தி



ட்டி ஆர் நடராஜன்

இந்நாளில்
இந்தியர்க்குச்
சிக்கியதோர்
சீதக்காதி.

தொழுமரங்கள்

ந. மகாகணபதி

வேற்றூர்ப் புழுதியை
வீசிப் போகும்
வண்டிகளுக்குப் பூவிட்டு
வணங்கும் மரங்கள்

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்


                                              


அழகியசிங்கர்
செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன்.  ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது.  அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை.  கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை.  பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது.  
குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப்  பட்டிருந்தன.  அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை.  ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை.  
இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார்.  அதேபோல் கணையாழி செப்டம்பர் மாத இதழில் கிருஷ்ண வதம் என்ற கதையை எழுதி உள்ளார்.  கிருஷ்ண வதம் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  யோகேஸ்வரன் இரண்டு குழந்தைகளை அவர் வீட்டுக்கு லீவுக்காக அழைத்துக்கொண்டு போகிறார்.  இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை அழைத்துப் போக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.  கீதா என்கிற அக் குழந்தைக்கு தண்ணியிலே கண்டம் பயம்தான் அதற்குக் காரணம்.  ஏற்கனவே ஒரு முறை அக்குழந்தைக்குதண்ணீரில் பிரச்சினை ஆகிவிட்டது.  யோகேஸ்வரன் சமாதானம் செய்து அண்ணன் தங்கை இரண்டு பேர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.  
யோகேஸ்வரன் வீட்டில் பல குழந்தைகளும் சேர்ந்து கொட்டம் அடிக்கும் இடம்.  ஆசையுடன் அவர்களை வரவழைத்து அன்பு பாராட்டுவரர்கள்.  இந்தக் கதையில் தண்ணியால கண்டம் உள்ள கீதாவிற்கு குளத்தில் குளிக்கும்போது பாம்பு கடித்து விடுகிறது.  அது ஒரு தண்ணீப் பாம்பு.  என்றாலும் அது ரொம்பும் அக் குழந்தையின் அம்மாவைப் பாதிக்கிறது.  திரும்பவும் விடுமுறை முடிவதற்குள் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதோடு அல்லாமல்  அவர்களைத் திட்டியும் தீர்த்து விடுகிறாள்.  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வருத்தமாகப் போய் விடுகிறது.  இ வில்சன் இக் கதையைச் சிறப்பாக எழுதி உள்ளார்.  அதே போல் கல்கியில் அவர் எழுதிய பாக்கியம் என்ற கதையில் பாக்கியம் ஒரு விசேஷவேலையின் போது எல்லா வேலைகளையும் அவளே எடுத்துச் செய்கிறாள்.  அங்கு மிச்சமான சாப்பாடுகளை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.  காலையில் செய்த பொங்கலை அவள் வீட்டு மாடிற்கு கொடுத்து, மாடு எழுந்திருக்க முடியாமல் படுத்து விடுகிறது.  அந்தப் பதைப்பை கதையில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.
அதேபோல் தீராநதியில் எஸ் ராமகிருஷ்ணன் கதையான வானோர் என்ற கதையும், அதேபோல் உயிர்மையில் எழுதிய தனலட்சுமியின் துப்பாக்கி என்ற கதையும் சிறப்பாக எழுதப்பட்டட கதைகள்.  
உயிர்மையில் வெளிவந்த சாங்கியம் என்ற கதை.  இதை சிவபிரசாத் என்பவர் எழுதி உள்ளார்.  இறந்த உடல்களின் முடிகளை அப்புறப் படுத்தும் கதை.  இதை சாங்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.  இறந்தவர் ஒருவர் முடியை எடுக்கும்போது இறந்தவர் மனைவி பக்கத்தில் இருந்து அதை கவனித்து வருகிறார்என்பதை உணர்கிறார் தண்டபாணி.  அவர் பின்னால் அவள் நின்றிருந்தாள்.  இறந்தவரின் துணியை இடுப்புக்குக் கீழே நீக்கும்போது அந்தப் பகுதி வாழைப்பழத்தை துண்டாக வெட்டியதைப் போலிருந்தது.  அதையாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, இறந்தவர் மனைவி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.  இதை சிறப்பாகவே எழுதி உள்ளார் சிவபிரசாத்.  
அசோகமித்திரன் எழுதிய கதை உறுப்பு அறுவடை என்ற கதை.  இதுவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  அசோகமித்திரன் அவருடையநடையில் சிறப்பாக எழுதப்பட்ட கதை. 
நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைகளில் இந்த முறை தளம் பத்திரிகையும் சேர்த்துக் கொண்டேன்.  தளம் இதழ் எனக்கு செப்டம்பர் மாதம் கிடைத்தது.  அதை செப்டம்பர் மாத இதழாக எடுத்துக் கொண்டேன். 
அதில் வெளிவந்த எஸ் எம் ஏ ராம் எழுதிய தாத்தா காலத்து பீரோ என்ற கதை.   தாத்தா காலத்தில் தாத்தாவால் ஆசையாக தயாரித்த மரப்பீரோவை பாதுகாப்பது எத்தனைப் பிரச்சினையை உண்டாக்குகிறது என்பதே இக் கதை.  கடைசியல் பாட்டி தாத்தாவின் பீரோவைப் பார்க்காமலே இறந்து விடுகிறாள்.   அவளுடைய பேரன் தான் அந்தப் பீரோவைப் பார்க்கப் போகிறான்.
இந்த மாத சிறப்புக் கதையாக நான் தேர்ந்ததெடுத்த கதை ப.முகமது ஜமிலுதீன் எழுதிய புதுச் சட்டை என்ற கதை.  இக் கதை உயர் எழுத்து செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த கதை.  கதை சரளமான நடையில் எழுதப்பட்ட கதை.  கதையைப் படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.  ரஹ்மான் என்கிற பையன் பக்ரீத் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.  ஏனெனில் பக்ரீத் அன்றுதான் அவனுக்கு புதிய துணி கட்டிக்க கிடைக்கும்.  உண்மையில் இதுமாதிரி பண்டிகைத் தினங்கள் ஏழைகள் பாடு திண்டாட்டமாக இருக்கும்.  அவர்களால் புதுத் துணிகள் கூட வாங்க வழி இல்லாமல் இருக்கும்.  எப்படி ரஹ்மான் புதிய துணி வாங்க துடியாய் துடிக்கிறான் என்பதுதான் கதை.  அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ரயில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கிறான்.  
அதன் மூலம் கிடைக்கும் புகழைக் கூட அவன் அறியாமல் இருக்கிறான். அவனுக்கு ரெடிமேட் கடையில் ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக பக்ரீத் அன்று கிடைக்கிறது.  

கசடதபற 3 வது இதழ் – டிசம்பர் 1970

என்னுடைய மேட்டு நிலம்

கலாப்ரியா

என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை,
இன்றைய வெயில்
நெருப்பால் வருத்திக் கொண்டிருக்கிறது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)

என்னால் – அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது

ஏனென்றால்,
இறந்துவிட்ட – என்னை
அதில்தான் புதைத்திருக்கிறார்கள்