மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்
நித்தியம்
அதிகாலை விழித்த கிழவன் பார்வையில் வாசல்முன் அன்றைய சுமை.
நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சுஅனைத்துமே அடக்கம் அச்சுமையில்
அவிழ்க்கப்பட்ட சுமையில்ஆற்றவேண்டிய காரியங்களால்நிறைந்து போனது முற்றம் முழுதும்.கதவின் கீச்சொலி
வைக்கோலின் குசுகுசுப்புஜன்னலின் பளிச்சிடல்கால்நடைகளின் பெருமூச்சுபறவைகளின் இன்னிசைமனிதர்களின் பேச்சரவம்சக்கரங்களின் சடசடப்பு
அந்தியும் வந்ததுஇன்பமயமான நீண்ட அந்திமாலை
மூலம் : லிதுவேனியக் கவிதை
ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989
Category: Uncategorized
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
பாவண்ணன்
பூனை
காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்
எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை
துடிக்கும் மீசையில் கர்வம்
கண்களில் கவியும் குரூரம்
உடம்பில் புரளும் முறுக்கு
உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா
எதிரியாகவா
@@
சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது
சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை
குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை
நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு
இன்றுமுதல்
இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ
@@
எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது
அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது
உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்
என்ன புரிந்து எகிறினாய்
உன் மீன் எனக்கு இரையாகுமா
என் வாசல் தூய்மை தவறாகுமா
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
த.அரவிந்தன்
பூனையின் உலக இலக்கியம்—————————————————
எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத்தெரியும்
வீட்டிற்கு வரும்
லியோடால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயாலூயிஸு பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸுதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் – எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்
மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
‘மழையில் பூனை’* சிறுகதையை
ஒருகுளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்
உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி “சிதைவுகள்’ நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
‘திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே’
வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.
* தமிழில்: திலகவதி
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
டேவிட் சட்டன்
கம்ப்யூட்டர் அறை, நடு இரவு
குகையின் சில்லிப்பாய்க் காற்று……
இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும்.
பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை.
சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும்.
அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது
வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம்.
எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன.
சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே
இங்கேதான் நான் வாசம் புரிகிறேன்
கட்டளைக்கிணங்கும் அசரீரிகளினிடையில் இயக்கி
பாதுகாப்பாய் உணர்கிறேன்
இந்தத் திரையைப் பார்த்து
நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத் தாமதிக்கையில்
உடனே தோன்றுகிறது
பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்
‘ஆரம்பி’
இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும்
ஆணையிடுகிறேன்.
இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடிபணிகின்றன.
அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை
வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று.
சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய்
எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால்
கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில்
பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.
வீடு செல்லும் நேரம்…..வெளிப்பக்கத்தில் குறியிடல்…
காவல்காரனுக்கு ‘நல்லிரவு’ வாழ்த்து.
கொடூரமான வெளிப்புற இருட்டு.
மங்கிய நிலவின் வெள்ளித் தீவிரத்தை
அலங்கோலப் படுத்தும் முரட்டு அந்தகாரம்.
உயர எழுந்த பெருத்த மேகங்கள்
காலியான நடைபாதைகளில் நடந்து
கட்டுப்பாடற்ற காற்றின் தாக்குதல்களில் சரணடைகிறேன்.
உள்முகத்தின் பின்னே –
எதிர்காலத்தின் கருத்த பூட்ஸ்களில்
இளகியோடுகின்றன, மனதின் உறைபனித் துகள்கள்.
மூலம் : ஆங்கிலம்
தமிழில் : கால. சுப்ரமணியம்
நவீன விருட்சம் இதழ் 6 – OCTOBER – DECEMBER 1989
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
எம் கோவிந்தன்
நானும் சைத்தானும்
தேவனுக்குரியதை தேவனுக்கும்
தேசத்திற்குரியதை அதற்கும்
தர நான் முன் வந்தபோது
யாரோ என் முன் வந்து சொன்னான்
‘எனக்குரியதை கொடு’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘கேட்டுக்கொள்
என்னுடையவை எல்லாம் எனக்குத்தான்
என்பதே இன்றுமுதல் என் வேதம்’ என்றேன்
சைத்தான் உரக்க சிரித்தான்
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
செவியில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான்
தந்தாய், நன்றி’
(மலையாள அறிஞர், கவிஞர் எம் என் ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறையிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)
மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989
இலக்கியவட்டமும் காஞ்சிபுரம் வெ நாராயணனும்
இந்தப் புத்தகக் காட்சியின்போது வெ நாராயணன் மரணம் அடைந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். வருத்தமாக இருந்தது கேட்பதற்கு. நாராயணன் வட நாட்டிற்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பும்போது Heart Attack வந்து இறந்து போனதாக நண்பர்கள் சொன்னார்கள்..நாராயணன் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் நூறுக்கும் மேலாகக் கூட்டம் நடத்தியவர். கொஞ்சங்கூட அலுக்காமல் மாதம் ஒரு முறை பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்வார். காஞ்சிபுரம் தாண்டி வருபவர்களுக்கு போக வர செலவிற்குப் பணம் தருவார்.
நான் மூன்று முறை அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இலக்கியவட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நானும் மாதம் ஒருமுறை விருட்சம் இலக்கிய சந்திப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் என்ன பேசுவது என்பது புரியாத புதிராக இருந்தது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசினாலும் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. மேலும் நான் எழுதிக்கொண்டு பேசினாலும் 5 நிமிடங்களுக்குமேல் உரையாற்ற முடியுமா? அதனால் நாராயணன் என்னைக் கூப்பிட்டபோது நான் மட்டும் வரவில்லை என்று கூறி என்னுடன் ரா ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணனையும் கூட அழைத்துப் போனேன். இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதில் பெரிதும் விருப்பமில்லாதவர் ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணன் என்னைப் போல் பேச வேண்டுமென்று ஆசைப் படுபவர். ஒருமுறை அவரை விருட்சம் சார்பில் பேச அழைத்திருந்தேன். அவர் அலுவலகம் போகாமல் ஒருநாள் முழுவதும் பேசுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பேசி முடித்தவுடன் அவர் உடல் வேர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தது.
நாங்கள் மூவரும் காஞ்சிபுரம் சென்றோம். கூட்டத்தில் நான் பேசத் தயங்கும்போது கோபிகிருஷ்ணன் பேசுவார். அவர் தயங்கும்போது ஸ்ரீனிவாஸன் பேசுவார். நாங்கள் மூவரும் அன்று சிறப்பாகவே உரையாற்றினோம். ஏற்பாடு செய்த நாராயணன் எங்களை நன்றாக கவனித்து அனுப்பினார். நாராயணனுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. யார் கூட்டத்தில் பேசினாலும் அதை அப்படி திரும்பவும் சொல்லுவார்.
இரண்டாவது கூட்டம். ஞானக்கூத்தனின் கவிதைகளுக்காக நடந்தது. முக்கிய விருந்தாளி ஞானக்கூத்தன். பதிப்பாளர் என்ற முறையில் நானும் கூட சென்றேன். ஞானக்கூத்தன் பேசுவதில் வல்லவர். அவர் ஒருவரே கூட்டம் முடியும் வரை அலுக்காமல் திறமையாகப் பேசக் கூடியவர்.அன்று மதியம் வரை ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். பலர் கேட்ட வினாக்களுக்கு பதிலும் அளித்துக்கொண்டிருந்தார். வெ நாராயணனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. கூட்டம் பற்றி ஒரு sum up கொடுப்பார். அதைப் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவார். வெ நாராயணன் அனுப்பிய பல அழைப்பிதழ்கள் என் பார்வைக்கு இப்போது எதுவும் கிடைக்கவில்லை. சிலசமயம் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியும். எந்த லாபமுமின்றி இலக்கியக் கூட்டம் நடத்த முடியுமென்ற நாராயணனின் வெறி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நானும் அப்படித்தான் என்றாலும் நாராயணனை என்னால் தோற்கடிக்க முடியவில்லை.
மூன்றாவது கூட்டத்திற்கு நான் என் அலுவலக நண்பரான ராஜன் பாபுவுடன் சென்றேன். காலச்சுவடு பற்றிய கூட்டம். அந்தக் கூட்டம் பரபரப்பான கூட்டமாக மாறிவிட்டிருந்தது. அடிதடி சண்டையே வந்துவிடும் போலிருந்தது. அக் கூட்டத்திற்கு சுந்தர ராமசாமியும், கண்ணனும் வந்திருந்தார்கள். நவீன விருட்சம் இதழ் ஒன்றை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். இதழைப் பார்த்த சுந்தர ராமசாமி அதில் விஸ்வம் வரைந்த அசோகமித்திரன் படம் சரியில்லை என்று குறிப்பிட்டார். காலச்சுவடு இதழைப் பாராட்டும் கூட்டமாக மாறாமல் அதை இகழந்து பேசும் கூட்டமாக அது மாறிவிட்டது. மேலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவுக்கு வராமல் இருந்தது. நாராயணனுக்கே அக் கூட்டம் போகும் விதம் பிடிக்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றியது. எனக்கு அவசரமாகக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. ராஜன்பாபுவும் அவசரப்பட்டார். காலச்சுவடு குறித்து நான் எழுதிய கட்டுரையை அவசரம் அவசரமாகப் படித்தேன். பின் நான் நாராயணனிடமிருந்து விடைபெற்று சென்றேன். வழக்கம்போல் நாராயணன் கூட்டம் முடியும்போது விருந்தாளிகளுக்கு போய்வருவதற்கான செலவை கொடுக்கமாலிருக்க மாட்டார். அந்த முறை அவர் கொடுக்கவில்லை. நல்லகாலம் விருட்சத்திற்கு அதுமாதிரியான கூட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை.
சென்னை வரும்போது ஏன் கூட்டத்திற்குப் போனோம் என்று தோன்றியது. அன்று காலைதான் எழுத்தாளர் காசியபன் மனைவி இறந்து விட்டார். தகவல் சரியாகத் தெரியவில்லையால், நான் போய்ப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. நான் எப்போதுமே என் அனுபவத்தைத்தான் பெரும்பாலும் கதையாக எழுதுவேன். கூட்டம் போய் வந்த அனுபவத்தை சுண்டுவிரல் என்ற பெயரில் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த வே நாராயணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘உங்களுக்கு வழிசெலவிற்குப் பணம் கொடுத்ததாக ஞாபகம்’ என்று எழுதியிருந்தார். நான் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். என் கடிதம் பார்த்தவுடன் உடனே பணம் அனுப்பிவிட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இலக்கியக் கூட்டம் நம் control ல் வராது. சண்டை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால்தான் முதன் முதலில் நான் இலக்கியக் கூட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தவுடன், பிரமிள், it is dangerous என்று கடிதம் எழுதியிருந்தார். எனக்கு அது முதலில் புரியவில்லை. ஆனால் சண்டை நடந்தாலும் இலக்கியக் கூட்டம் மூலமாக எழுத்தாளர்களைப் பார்க்க முடிகிறது. நானும் விருட்சம் சார்பில் 3, 4 ஆண்டுகள் கூட்டம் நடத்தி நிறுத்திவிட்டேன். வெ நாராயணனும் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார். ஒவ்வொரு முறை நான் காஞ்சிபுரம் போனால் வெ நாராயணனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அவர் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். அவருடைய ஆர்வத்தை என்னால் மறக்க முடியாது. வெ நாராயணனுக்குப் பிறகு திரும்பவும் இலக்கிய வட்டத்தைத் துவங்கப் போவதாக அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். புத்தகக் காட்சியின் போது அவருடைய நண்பர்கள் வெ நாராயணனிடமிருந்து பலர் புத்தகங்களை (இலக்கிய கூட்டம் நடக்குமிடத்தில் பல பதிப்பக நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைக்கும் பழக்கம் அவருக்குண்டு) கடனுக்கு வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் போனதைப் பற்றி குறிப்பிட்டார்கள். கேட்க சற்று வருத்தமாக இருந்தது.
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
எங்கிருந்தோ ஓடி வந்து
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
சுக்வீர்
நடத்தல்
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால் -சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும்இரவின் இருளையும் கடந்து செல்கிறேன்சுற்றிலும் மக்களின் காடுஎன் கண்களின் துணையோடுஅதைக் கடந்து செல்கிறேன்கண்களுக்கேஅதனூடு செல்லும் திறன் உண்டு.
என் கால்கள் களைத்துவிட்டனமிகவும் களைத்துவிட்டனஆனால்நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்மக்கள் கூட்டங்களில் சிக்குண்டுநான் முன்னேறிப் போகிறேன்என்றாலும்இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்கஎன்னால் முடியவில்லை
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம்
மூலம் : பஞ்சாபி
(ஆங்கில வழி தமிழில் – மேலூர்)
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
சார்லஸ் போதலேர்
கேரளக் கன்னிக்கு
உன் பாதங்கள் உன் கைகளைப்போல்
மென்மையானவை.உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை.
நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும்போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்
மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடைபெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள்
பிரான்ஸை, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்கட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய். மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று
எங்கள் ஒழுக்கக் கேடுகளில்
உன் வயிறைக் கழுவ நேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்தோற்றங்களை
எப்படித் தேடுவாய்?
மூலம் : பிரேஞ்சு
ஆங்கில வழி தமிழில் : அமுதன்
(சார்லஸ் போதலேர் (1821/1867) ஃபிரெஞ்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக்கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. ஆனால், அவரைக் குற்றமற்றவர் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்).
நவீன விருட்சம் இதழ் – 4
1989 ஆண்டு