பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

 
அழகியசிங்கர்
 

13
 
பந்தநல்லூர் என்ற கிராமத்திற்குச் செல்லும்போது எனக்கு அசிக்காடுதான் ஞாபகத்திற்கு வரும்.  அசிக்காடு போகும் வழியில் உள்ள பாதை குறுகலானது  மறையூர் அல்லது மல்லியம் வழியாக அசிக்காடு போகலாம்.  அந்தக் காலத்தில் ரோடு சரியாக இருக்காது.  மாட்டு வண்டியில்தான் போக வேண்டும்.  பலமுறை நான அசிக்காடு கிராமத்திற்குச் சென்றிருக்கிறோம்.  ஆனால் ஒருமுறை நான், என் தம்பி, என் பெரியப்பா பிள்ளைகளுடன் போனதை மறக்க முடியாது.  அந்த முறை என் நெருங்கிய உறவினர் இறந்துவிட அசிக்காட்டில் உள்ள என் பெரிய பெரியப்பா குடும்பம் அசிக்காடு கிராமத்தை விட்டே சென்றுவிட்டார்கள்.  அந்த இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கே நாங்கள் சிரமப் பட்டோம்.  ஒரு வீட்டில் திவசம் நடந்துகொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.  நாங்கள் மதியம் 2 மணிவரை ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தோம். 

ஆனால் பந்தநல்லூர் இன்னும் பெரிய கிராமம்.  அடிக்கடி பஸ்கள் போய்க்கொண்டிருக்கும்.  நான் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதால், அசிக்காடு என்ற கிராமத்திற்கும், பந்தநல்லூர் கிராமத்திற்கும் அடிக்கடி சென்று கொண்டிருப்பேன். 

அகலமான பாதையில் பந்தநல்லூர் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம்.  இருபக்ககம் வழியில் தென்படும் பசுமை நிறைந்த வயல்கள்.  உயரம் உயரமான பனை மரங்கள். பறவைகளின் கீச் கீச் சப்தம். டூவீலரில் வந்து கொண்டிருக்கும்போது நடு நடுவே பாம்புகள் ஓடும்.  சில சமயம் பாம்பை மிதித்துவிட்டு பரக்க பரக்க ஓடுவேன்.  வண்டியில் பாம்பு சுருண்டு விடுமா என்று பயந்திருக்கிறேன்.  ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 
நெருக்கடியான சென்னை வாழ்க்கையை விட்டு விட்டு இப்படி வந்ததுதான் பெரிய மாற்றம் என்று தோன்றுகிறது. 

 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உன் அனுபவம்தான் என் அனுபவம்,’ என்றார். 
 
 ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன்.
 ‘பொதுவாக அனுபவம் என்பதை எப்படிச் சொல்கிறோம்?’
 ‘நமக்கு ஒன்று ஏற்படுவதை அனுபவமாகக் கொள்கிறோம்.’
 ‘அனுபவம் என்ற ஒன்று தனியாக நிகழ்வதில்லை.  24மணி நேரமும் நம்மிடம் நிகழும் எதுவும் ஒரு அனுபவம்தான்.’
 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று ஞாபகம் வந்தது.  ஒருமுறை அசிக்காட்டில் நான் இருந்தபோது, வாசல் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டேன்.  வெறுமே சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ளவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.  காலை பொழுது மெதுவாக மதியம் பொழுதாக மாறியது.  பின் மாலைப் பொழுது இருட்டு என்று முடியத் தொடங்கியது.  நான் இருந்த பகுதி.  அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. நான் அதை உணர்ந்தேன்.  என்னால் அப்படிப்பட்ட ஒரு அமைதியைக் கலைக்க முடியாது.  எனக்கு பொழுது போவது ஒரு பொருட்டாக தோன்றவில்லை.
 ‘அந்தப் பேரமைதிகூட ஒரு அனுபவம்,’ என்றால் அழகியசிங்கர்.
 ‘ஆனால் அந்த அனுபவத்தை எப்படி கதையாகக் கொண்டு வருவது?’
 ‘நாம் பார்ப்பது, படிப்பது, நமக்கு ஏதோ ஒன்று நிகழ்வது எல்லாம் அனுபவம்தான். இந்த அனுபம் நம் மனதில் குவியும்போது கதையாக மாறுகிறது.’
 ‘நமக்கு நிகழாத ஒன்று கதையாகக் கொண்டு வர முடியுமா?’
 ‘எதை வேண்டுமானாலும் கதையாக எழுதலாம்.  முழுக்க முழுக்க கற்பனையைக் கூட கதையாக எழுதலாம்.  ஆனால் கதையில் நம்பகத்தன்மை வேண்டும்.’
 ‘ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் வாழ்க்கையில் நடப்பதையே கதையாக எழுதுவது இல்லையாம்.’
 ‘நாம் அப்படி நினைப்பது இல்லை.  நம் வாழ்க்கையில் நடப்பது, இன்னொருவர் வாழ்க்கையில் நடப்பது என்று. பொதுவாக அனுபவம் என்ற ஒன்று எல்லோருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  எதை நம்பும்படியாகச் சொல்கிறோமோ அதுதான் கதையாக நிற்கிறது.’
                                                                                                                               (இன்னும் வரும்)

நான், பிரமிள், விசிறி சாமியார்…..18

அழகியசிங்கர் 
எங்கள் தெருவில் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  என் வீட்டிற்கு எதிர் வீட்டல்தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.  ஒரு நடுத்தர வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  முதலில் அந்தப் பெண்ணின் கணவன்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று நாங்கள் தவறாக எண்ணியிருந்தோம்.  ஆனால் அவன் இல்லை.  அவன் மனைவி.  
அவள் கணவன் ஒரு குடிகாரன்.  எப்போதும் அவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.  அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் வளரவில்லை.  ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவள்  மகள் கே கே நகரில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள்.  அவளுடைய பையன் வேறு ஊரில் படித்துக்கொண்டிருக்கிறான்.  அந்த வீட்டில் அவர்கள் குடும்பம் தவிர ஏழு எட்டு குடும்பங்கள் உண்டு. எல்லோரும் அவள் கணவனின் சகோதரர்களின் குடும்பங்கள்.  அந்த சிறிய இடத்தில் எல்லோரும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்.  
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்பதை அந்த வீடு கொஞ்சங்கூட வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.  துக்கத்தின் சாயல் அந்த வீட்டில் கொஞ்சங்கூட தெரியவில்லை.  ஏன் தெருவில்கூட அந்தத் துக்கம் தெரியவில்லை?  யாரும் அதைப் பற்றி பேசக்கூட இல்லை.  ஏதோ சாதாரண நிகழ்ச்சி நடந்ததுபோல் அந்த வீடுஇருந்தது.
ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி என்னை சுற்றிய வண்ணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பெண் அவர்கள வளர்க்கும் முரட்டுத்தனமான நாயை எடுத்துக்கொண்டு தெருவிற்கு வருவாள்.  அதன் காலைக்கடனை முடிக்க எங்கள் தெருதான் கிடைத்தது.  என் வீட்டிற்கு வாசலில் வந்து நிற்கும்போது கொஞ்சம் தள்ளி போகச் சொல்வேன்.   தள்ளிப் போவாள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும்போது அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை.  நல்ல உயரமாகவும், குண்டாகவும் இருப்பாள்.  அவள் கணவனுடன் அவளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு அவள் பொருத்தமானவள் இல்லை.  ஆனால் அவ்வளவு திடமான தோற்றத்தில் இருந்த அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்.  அவன்தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். 
தற்கொலை செய்துகொண்ட பெண்ணிற்காக தெரு எந்த மரியாதையும் செய்யவில்லை.  அவள் கணவனின் மற்ற சகோதரர்களின் குடும்பங்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.  ஏன் இப்படி?
பல ஆண்டுகளுக்கு முன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவருடைய நண்பர்களின் வட்டாரத்தில் அது பெரிய அதிர்ச்சியாக மாறி இருந்தது.  முதன்முதலாக சிறு பத்திரிகை சூழலில் பிரபலமான தமிழ் கவிஞர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  திருவல்லிக்கேணியில் ஆத்மாநாமிற்காக இரங்கல் கூட்டம் நடந்தது.  எல்லோரும் வந்திருந்தார்கள்.  ஹால் முழுவதும் துக்கம் வழிந்து கொண்டிருந்தது.  ஆதிமூலம் அருமையாக ஆத்மாநாமை வரைந்திருந்தார்.  அவருடைய ஓவியத்தைப் பார்க்கும்போது மனதை என்னவோ செய்தது.  
அக் கூட்டம் ஞானக்கூத்தன் தலைமையில் நடந்தது. என் அருகில் ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கண்கலங்கி அழுததை பார்த்தேன்.  அக் கூட்டத்திற்கு பிரமிள் வந்திருந்தார்.  அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.  
என்னமோ தெரியவில்லை அன்று பிரமிள் ஆத்மாநாமைப் பற்றி பேசியதுதான் என் மனதில் இன்னும் கூட ஞாபகத்தில் இருக்கிறது.  ஆத்மாநாம் பங்களூரில் உள்ள ஒரு கிணற்றில்தான் தற்கொலை செய்து கொண்டார்.  கிணற்றின் ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிப் படியில் தன் உடைகளைக் களைத்துப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரமிள் குறிப்பிட்டார் : ஆத்மாநாம் நினைத்திருந்தால் அந்தக் கடைசித் தருணத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கலாம்.  தற்கொலை செய்துகொள்பவருக்கு அந்தக் கடைசி தருணம் மிக முக்கியமானது.  அந்தக் கடைசித் தருணத்தைத் தாண்டிவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மாறிப் போயிருக்கும்.  
ஆத்மாநாம் எழுதிய கவிதைகளிலிருந்து ஒரு கவிதையைப் படித்து பிரமிள் விம்மி விம்மி அழுதார்.  உண்மையிலேயே பிரமிள் கண்கலங்கிய காட்சியை அன்று ஒருநாள்தான் பார்த்தேன். கூட்டம் முடிந்தவுடன் நான் பிரமிளை அழைத்துக்கொண்டு போய்விட்டேன்.  ஆத்மாநாம் தற்கொலையை அவருடைய நெருங்கிய நண்பர்களால் தடுத்திருக்க முடியும் என்று பிரமிள் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று அந்தத் தற்கொலையைப் போல் பரபரப்பான தற்கொலையை என்னால் அறிந்திருக்க முடியவில்லை.
ஆனால் இப்போதெல்லாம் தற்கொலைகள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை.  நான் வசிக்கும் தெருவே அதற்கு சாட்சி.  
காலம் மாறி விட்டது.  தினம் தினம் தற்கொலைகள் எளிதாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேனியில் வசிக்கும் என் இலக்கிய நண்பர் ஒருவர், ‘எங்கள் மருத்துவமனையில் தினமும் யாராவது தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள்,’ என்று சொன்னதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. 
சமீபத்தில் என் வங்கிக் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த  மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு விட்டான்.  இது சாதாரண செய்தியாக என் காதிற்குள் நுழைந்தது.  
‘என் நண்பன் ஆத்மாநாம்,’ என்று ஆத்மாநாமைப் பற்றி கட்டுரை எழுதிய ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று  சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவர் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்.  வீட்டிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தெரிந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.  பின் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் பிரார்தனையாக செலுத்திவிட்டார்.  அவரால் தனிமையைச் சந்திக்க முடியவில்லை.  ‘அவரை யாராவது  பார்த்துக் கொள்ள வேண்டும்.  தற்கொலை செய்து கொண்டு விடுவார்,’ என்று மனோதத்துவ மருத்துவர் ருத்திரன் குறிப்பிட்டபோது அதை முதலில் நான் நம்பவில்லை. 
பிரபல பத்திரிகைகளில் எழுதும் படைப்பாளி.  தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியிடம் நம்பிக்கை உள்ளவர்.  வாழ்க்கையை தைரியமாகச் சந்திக்கக் கூடியவர் என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  மேலும் வயதானவர்கள் தற்கொலை செய்து கொள்வதை விரும்ப மாட்டார்களென்றும் எண்ணியிருந்தேன். எல்லாம் தப்பாகப் போய்விட்டது.  
  
எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்த அடுத்த நாள்தான் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். விரல்விட்டு எண்ணக்கூடிய மிகக் குறைவான வர்கள்தான் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு இரங்கல் கூட்டம் எதுவும் நடக்கவில்லை.  ஆனால் =அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் துணிச்சல் யாருக்கும் வராது,+ என்று எனக்குத் தெரிந்த பெண் படைப்பாளி குறிப்பிடுவார். 
ஸ்டெல்லா புரூஸ÷ன் தற்கொலையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய சூழ்நிலையில் தற்கொலை அடைந்தவர்களுக்காக யாரும் இரங்குவதில்லை என்றும் தோன்றுகிறது.
(அம்ருதா மார்ச்சு 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

நிறைவு

 



மட்பாண்டம் செய்யும் குயவனுக்கு

அதில் தண்ணீர் குடித்தவனின் இன்சொல் நிறைவு,

பலவேடங்கள் கட்டி நடிக்கும் நடிகனுக்கு

திரை நோக்கி வீசப்படும் காசுகள் நிறைவு

பாடங்களைத்திறம்பட நடத்தும் ஆசிரியருக்கு

கற்றுத்தேர்ந்த மாணவனின் உயரம் நிறைவு

வெகுநேரமாகக் காத்திருக்கும் காதலிக்கு

காதலனின் கெஞ்சல் நிறைவு

தோல்வியால் கீறிக்கிழிந்த இதயத்துக்கு

நல்ல இசை நிறைவு

பிளந்து கிடக்கும் பாலைநிலத்துக்கு

அவற்றை நிரப்ப வரும் மழை நிறைவு

நல்ல வரிகள் தேடி வந்த வாசகனுக்கு

இந்தக்கவிதை நிறைவு.

சின்னப்பயல்

அவரசர கோலம்…

அழகியசிங்கர்

அவரசர கோலம்...

  கிடுகிடுவென்று
கீழே இறங்கி அவர்
வேகமாக ஓடி விட்டார்
இன்று காரோ
டூ வீலரோ
நானும் அவரும் பக்கத்தில்
பக்கத்தில் குடியிருந்தாலும்
சந்திப்பது இல்லை.
இதுதான் வாழ்க்கையின் அவசரம்
என்று நினைக்கிறேன்
தெருவில் உள்ள எல்லோரும்
அவசரம் அவசரமாகக்
கிளம்புகிறார்கள்
யாரையாவது பார்த்து
புன்னகைப் புரியலாமென்றால்
ஓட்டமாக ஓடி விடுகிறார்கள்..
பேச நேரம்கூட இல்லை
சரி திரும்பி வரும்போது
சந்திக்கலாமென்றால்
மௌனமாக வீட்டிற்குள்
நுழைந்து கதவைச் சாத்திக்
கொண்டு போய் விடுகிறார்கள்.
வழக்கமாக வரும் வாரவிடுமுறையில்
யாரும் படுக்கையை விட்டு
எழுந்து கொள்வதில்லை….
வாரம் முழுவதும் சுற்றிய
அலுப்பை அன்றுதான்
தீர்த்துக் கொள்கிறார்களா…..
ஓஹோ……

அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல




என் படுக்கையறைச்சன்னலோரம்
புறா ஒன்று அமர்ந்திருக்கிறது
நெடு நேரமாய்
அது
இருப்பது இல்லாதது போல்
இருக்கிறது.
ஒரு அந்தரங்கத்தை அறிந்த
ரகசியம் போல
அவ்வளவு அமைதி
அவ்வளவு சாந்தம்
எப்பொழுதாவது
தன் இணைக்கு மட்டும்
அனுப்புகிறது. தனது  தனிமையை
குறுஞ்செய்தியாக்கி
க்கும்…  க்கும்…




ரவிஉதயன்.

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


அழகியசிங்கர்                        

                                                             


தூரத்தில் வண்டி வருகிறது
  வேகமாகவும்
மெதுவாகவும
சுற்றி சுற்றி பல வண்டிகள்
வந்தவண்ணம் உள்ளன.
ஹாரன் அடித்தபடி
வண்டிகள் கிடுகிடுக்க                வைக்கின்றன                                 பீட்டர்ஸ் சாலை
காலை நேரத்தில் அதிர்கிறது
ஸ்கூட்டரில் பள்ளிச் சிறார்கள்
அலுவலகம் போக
அவசரம் அவசரமாக
வண்டி பறக்கிறது.
மெதுவாக பீட்டர்ஸ் சாலை
பெசன்ட் சாலையாக மாறுகிறது.
பல்லவன் பஸ்கள் நிற்க
கூட்டம் எல்லா இடத்திலும்
நானும் நிற்கிறேன் மேலே நகராமல்
                       அழுக்கு வண்டிகளும் அழுக்கில்லாத
வண்டிகளும் பொறுமை இல்லாமல்
கதற கதற ஹாரன் அடிக்கின்றன
காலையில் அலுவலகத்தில்
                        கூடும் கூட்டத்தை
மனம் எண்ணி எண்ணி  படபடக்கிறது…..

சீரியல் மகத்துவம்…

சீரியல் மகத்துவம்…

அழகியசிங்கர்

                அலுக்காமல்
சலிக்காமல்
தினமும்
சீரியல் பார்க்கும்
குடும்பம்
எங்கள் குடும்பம்

நானும்

அதில் ஒருவனாக
மாறிவிடுவேனோ
என்று பயமாக இருக்கிறது

சீரியலே வாழ்க்.

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

செல்வராஜ் ஜெகதீசன்
வாங்கிய பொருட்களின்
கனம் தாங்காமல்
கடை வாசலில் வைத்தேன்
சற்றே இளைப்பாற.
பாய்ந்து வந்து பைகளின்
மேல் மோதிய
பூனையொன்றை
விரட்டியவன் வேகமாய்
அவ்விடம் விட்டு
அகன்றேன்.
பூனைக்கு உதவும்
மனமில்லாமல் இல்லை.
பூனைக்கும் மனிதனுக்கும்
பொதுவான உணவொன்றும்
பை-வசம் இல்லாததே
காரணம்.

அலைதலின் முற்றுகை

அலைதலின் முற்றுகை 
கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த 
மனம் எனது 
தவறவிட்ட 
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை 
மழையும் வெயிலும் 
துரத்திக் கொண்டிருக்கிறது 
மேல்நோக்கி 
கீழிறங்கி 
அந்தரத்தில் மிதந்து அலையும் 
இறகு ஒன்றினைத் தனதாக்க 
நெஞ்சு விம்ம விம்ம 
கைகளை நீள.. நீள… நீட்டுகிறேன் 
ஓணான் அடிக்கும் குழந்தைகளை 
யதேச்சையாய்க் கடக்கிறேன் 
தொப்பலென 
உனதான எனக்கானத் தாய்மடியில் 
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்
*** 
–ஆறுமுகம் முருகேசன் 

மீன்கொத்தி ஆறு

மீன்கொத்தி ஆறு                       




கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்


உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன


நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன


உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது


திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்


காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

ரவிஉதயன்