ஸில்வியா ப்ளாத் இரண்டு கவிதைகள்

தீப்பாடல்

பசியப் பிறந்தோம்
குறைகொண்ட தோட்டமிதற்கு..
ஆயின்
புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல்
மறு கொண்ட
முட்செடி பலதில்
பகையுடன் நழுவும் எம் காவலர்
தம் கண்ணி வைக்க
சிக்குமதில்
மானும் சேவலும் மீனும்
ஏன் எல்லாம் நன்றேகுருதி
சிந்தும் தந்திரமாக

யாவும் சீர்குலைந்து நிற்கும்
அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்று
தேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதை
வெட்டியழிப்பதேநம் கடனென்ப

நேர்-விசாரணையேதும்
திறக்காது
சாமர்த்தியமாய்ப் பிடித்து
ஒளிரும் எம் செயல்
ஒவ்வொன்றாய் வண்டலாக்கி
மீண்டும் உருவற்ற
சேற்றுமண்ணாக்கி
புளிநொதித்த
வானெனும் ஆடையாய் மூட
இனிய உப்பும்
களையின்
முறுக்கிய தண்டும்
யாம்
வழியின் கடைக்கோடியில்
வைத்துச் சமாளிக்க
செங்கதிர் எரித்த
யாம்
ரத்தக்குழாய் பலதின்
முட்கம்பி வலைப்பின்னலில்
அடுக்கிய தீக்கல்
உருளத் தூக்குவோம்
மறமான காதல், கனாவென
கறார்-அழலை நிறுத்த அன்றி
வா, என் காயம்படச் சாய்..
நின்றெரி
நின்றெரி..

சொற்கள்

கோடரிகள்.
அவை வீழும்
மரத்தில் தொடங்கும்
வட்டங்கள்.மையத்தினின்றும்
குதிரைகளாய்ப் பாயும்
எதிரொலிகள்.

கண்ணீராய்ப் பொங்கும்
மரச்சாறு.
பாறைதனில்
தன் கண்ணாடி
மீண்டும் நிறுவ
முயலும் நீராய்.

பசிய களையுமுண்ட
வெண்கபாலம்
வீழச் சுழலும்.
ஆண்டுபல கழிந்து
சாலையில் எதிர்கொண்டேன்
இவற்றை.

ஓட்டியற்று
வறண்ட சொற்கள்.
அயர்வறாக் குளம்படிகள்.
குளத்தடியினின்று
வாழ்வொன்றை ஆளும்
அசையா விண்மீன்கள்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

10

பூனையைப்போல அலையும் வெளிச்சம்

குட்டி ரேவதி

கதவுகளை ஓசைப்படாது திறந்து
மழைபெய்கிறதாவென
கைநீட்டிப் பார்க்கிறது வெளிச்சம்
தயங்கியபடி

பின் இல்லையென்றதும்
மரவெளியெங்கும் நிழற்கடைவிரித்து
கூடார முகப்பில் ஏறி அமர்கிறது
வேடிக்கைப் பார்க்க

பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள்

தனது நிழலே தன்னை
தின்னத் துவங்கியதும்
சரசரவென மரமிறங்கிப் பாய்கிறது
மாடத்துச் சுடருக்கு

மதில் சுவரென விடைத்து நிற்கும்
இரவு முதுகின் மீதமர்ந்து
கூடலின் பேரொளியை சுவீகரிக்கும்
நிலவின் அகன்றவிழியால்

வைரமுத்துவும் சம்பத்தும்

யோசித்துப் பார்த்தால் வைரமுத்துதான் தமிழில் அதிகமாக விருதுகளைப் பெறுபவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் அவருக்கு ‘சாதனா சம்மான்’ விருது கிடைத்துள்ளது. இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை ‘மேலும் ஒரு விருது’ என்று குறிப்பிட்டிருந்தது. இப்படியெல்லாம் விருதுபெற அவர் பெரிய சாதனை செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமாகிறார், பின் அவர் கவிஞராக தன்னை தெரியப்படுத்திக் கொள்கிறார். பின் நாவலாசிரியராக பவனி வருகிறார். அவர் எழுதினால் போதும் எல்லோரும் வரவேற்று பிரசுரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவருடைய நாவல் தொடர் கதையாக பெரிய பத்திரிகைகளில் வெளி வருகிறது. ஒரு பத்திரிகையில் அவர் கேள்வி பதில் எழுதுகிறார். இன்னொரு பக்கம் அவர் சினிமாவிற்கு பாடல்களை எழுதித் தள்ளுகிறார்.

அவருடைய முக ராசி அவர் எதை எழுதினாலும் அவருக்கு விருது தேடிக்கொண்டு வருகிறது. அரசாங்கம் விருது கொடுக்கிறது. தனியார் நிறுவனம் விருது கொடுக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்குகிறார். சிறந்த கவிதைக்கான விருது வாங்குகிறார். சிறந்த நாவலுக்கான விருதையும் பெறுகிறார். இப்படி சகலகலா வல்லவனாக இருக்கிறார்.

அதேசமயத்தில் சம்பத் என்ற எழுத்தாளரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் எழுத்து முதன் முதலாக கணையாழியில் வெளிவந்தபோது, சுஜாதாவையும் சம்பத்தையும் இணைத்து தமிழில் முக்கியமான படைப்பாளிகள் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் குமுதம் மூலமாக சுஜாதாவிற்குக் கிடைத்த வெற்றி சம்பத்திற்குக் கிட்டவில்லை. எதிலும் வெற்றி சுஜாதாவிற்கு. ஆனால் அவருக்கும் முக்கியமான விருதெல்லாம் கிடைக்க வில்லை.

சம்பத்திற்கோ பெரும் பத்திரிகைகளில் படைப்பு வெளிவர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை ஒரு நாவல் எழுதிக்கொண்டு போய் இந்திரா பார்த்தசாரதியிடம் சம்பத் காட்ட, இந்திரா பார்த்தசாரதி அந் நாவலைப் படித்து திருப்தியாக வரவில்லை என்று கூற, சிறிது நேரத்தில் சமையல் அறையில் ஏதோ பொசுங்குவதுபோல் தோன்ற, இ.பா உடனே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறார். சம்பத் படிக்கக் கொடுத்த நாவல் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தை இ.பாவே என்னிடம் தெரிவித்திருக்கிறார். சம்பத்திற்கு அவர் வாழ்க்கையே பிரச்சினையாகப் போய்விட்டது. அவர் பார்த்த வேலை போய்விட்டது. சம்பாதிப்பதே பெரியபாடாகப் போய்விட்டது. அவர் எழுத்துகளை சிறுபத்திரிகைகள்தான் பிரசுரம் செய்தன. 1000 பிரதிகளைக் கூட தாண்டாத சிறுபத்திரிகையில் அவர் எழுதியதால் அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. சம்பத் ‘பிரிவு, மரணம்’ என்ற அடிப்படையில் உழன்று அவற்றுக்கு விடை தெரியாமல் போய்விட்டார். அந்த சம்பத்தின் சிறந்த நாவலான ‘இடைவெளி’ க்ரியா மூலம் புத்தகமாக தயார் ஆகிக்கொண்டிருக்கும்போது சம்பத் அவர் கதைகளில் எழுதியவாறே மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து இறந்து விட்டார்.

இதே தமிழ் சமுதாயம்தான் வைரமுத்து என்ற படைப்பாளிக்கு கேட்காமலே விருதுகளை அள்ளி அள்ளித் தருகிறது. அப்படி விருதுகளை அள்ளித் தருவதே வைரமுத்துவிற்கு வழங்கும் தண்டனையா என்பது தெரியவில்லை. அப்படி விருது மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

பிரிதலின் நிறங்கள் – மூன்று கவிதை

1.
யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன் நெருங்குகிறானவன்.

2.
புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்ன்ல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3.
சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன் நான்.

என் சட்டைப்பையினுள்

அது ஒரு மிருகம்
கொடூர மிருகம்
நெற்றியில் பல் பதித்து
தோலுரிக்க ஆரம்பித்து
கால் நுனி வரை இழுத்துப் போடும்.
முழுவதுமாய் எனை
சிவப்புப் பாளமாக்கி நக்கும்.
அந்நக்குதலின் சுகத்துக்காய் கிடந்திருக்கலாம்.
மிகத் தடிமனான நாக்கு அதற்கு.
செங்களரியில் கன்னம் வைத்து
அதன் குளிருக்கு இதம் சேர்க்கும்.
அவ்வப்போது எங்கேனும் ஓடிவிடும்.
தேடினாலும் கிடைக்காது.
திடீரென முன்வந்து பல்லிளிக்கும்.
எனை முழுவதுமாய்
உறிஞ்சக் கெஞ்சினால்
குதிகாலில் கோணியூசி குத்தி
உறிஞ்சி, உறிஞ்சி எனக்குள்ளேயே துப்பும்.
எப்போதும் தூங்காது.
தலை மேட்டில் அமர்ந்து கண்கொட்டாது
பார்த்துக் கொண்டிருக்கும்.
அதனோடு இருத்தல்
தரும் சுகம் அலாதியானது.
பார்க்க சாது போல என்னை
அண்டி நடந்து வரும்.
பிறர் முன் நான் அதன்
முதலாளி போல் நடிப்பேன்.
என் போலிமை அறிந்தும்
காட்டிக் கொடுக்காது
ஆதரவாய் அமைதி காக்கும்.
எங்கள் விசுவாசத்தை
நாங்கள் பொருட்படுத்துவதில்லை.
கைமாறிக் கொண்டேயிருப்போம்
எனக்கான அதுவும்
அதற்கான நானும்.

ஒரு கவிதை

ஒவ்வாத வேலையிலிருந்து

மாநகரப்பேருந்தில்

திரும்பிக்கொண்டிருக்கிறேன்

அளித்த வாக்குறுதிகளைப் போன்ற

நெரிசலில் சிக்கி,

அறையில் இன்னும்

கழுவப்படாமல் இருக்கும்
பாத்திரங்களைப் போன்ற

நெடியிலிருந்து தப்பி,

முட்டி முன்னேறி,

ஜன்னலருகே முகம் வைத்தேன்

கொஞ்சம் காற்றையும்,

நிறைய சந்தோசத்தையும்

அளித்துக் கடந்துகொண்டிருக்கிறது

எங்களூர் பேருந்து

பிக் பாக்கெட்

சிறுகதை

பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி ‘சாரி பா’ என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார்.

அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக ‘பிக் பாக்கெட் பிக் பாக்கெட்’ என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார்.

பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக்கெட் பிடிக்கப் பட்டான். போலிஸ் அழைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து நிலவியது. ஆனாலும் எல்லோருக்கும் ஆபிஸ், ஆசுபத்திரி என்று சொந்த அவசரங்கள்.

உடனே யாரோ இரு இளைஞர்கள் துவங்கி வைக்க, அந்தத் திருடனுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. அவன் வாயில் இரத்தம் கசிந்தது. அவனிடம் துழாவிப் பார்த்தார்கள். பர்சின் சுவடே இல்லை. வெறும் இரண்டு ருபாய் நாணயம் சட்டைப்பையில் இருந்தது.

“இவனுங்கள நம்பக்கூடாது சார். ஒரு ரெண்டு, மூணு பேரா வருவானுங்க. சும்மா பாஸ்டா பாஸ் பண்ணுவாங்க.”

“ஆமாடா, ஒத்தன் எடுப்பான், உடனே இன்னொருத்தன் கிட்ட பாஸ் பண்ணி, அவன் மூணாவது இப்பிடி போயிடும்”

“இப்பிடித்தான் ஒரு தடவ, பஸ்லேந்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டான். அத கரீட்டா இவன் சகா வந்து காட்ச் புடிச்சிகினு போயிடாம்பா”

கண்டக்டர் சங்கரனிடம் “சார், எல்லாருக்கும் லேட் ஆகுது. வண்டிய போலிஸ் ஸ்டேசனுக்கு விடுவோம். அப்புறம் நீங்க பாத்துக்கோங்க” என்றார்.

அதற்குள் பிக் பாக்கெட் ஆசாமியின் சட்டை பெரும்பாலும் கிழிந்து போயிருந்தது. ஒரு மாதிரி கைகால்களை மடக்கி உட்கார்ந்திருந்தான். தலைமேல் அடி விழாதபடி கைகளால் மூடிக் கொண்டான்.

சங்கரன் முன்பு அம்பத்தூரில் குடியிருந்தபோது பக்கத்து வீடு போலிஸ் ஸ்டேஷன். ஒவ்வொரு இரவும் குற்றவாளிகளின் அலறல் காதை அறையும். பகல் நேரங்களில், காவலர்கள் உள்ளே நுழைகையில், சிறு திருடர்களை ஏதோ நொறுக்குத் தீனி உண்பது போல் ஒரு தள்ளு தள்ளி பூட்ஸ் காலால் மிதிப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக போலிஸ்காரர்கள் அடிப்பதாகவே இவருக்குத் தோன்றும். ஒரு மாதிரி சிறு குற்றவாளிகளின் மேல் பொதுப் பரிதாபம் இவருக்கு வழிந்து ஓடும்.

இப்போதும் பர்ஸ் பறிபோன கோபம், வருத்தம் எல்லாம் காணாமல் போய், உடலைக் குறுக்கி, சாலை ஓரமாய், இரத்தம் வழிய உட்கார்ந்து இருந்தவனிடம் பரிதாபம் மேலோங்கி நின்றது. ஒரு முடிவு எடுத்தவராக, செல் போனைக் காதில் வைத்துக்கொண்டார். பிறகு குரலை உயர்த்தி, ‘சார், சாரி, பர்சு வீட்டுல வெச்சுட்டேன். இப்பதான் போன் வந்தது’ என்று பொதுவாகச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இலேசான திட்டு, நிறைய அறிவுரை என்று பொதுஜனம் இவர் மேல் கக்கிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை.

எல்லோரும் போன பின்னும், அவன் அங்கேயே தலை குனிந்து இருந்தான்.

“நீ தா எடுத்தன்னு தெரியும். உனக்கு விழுற அடி பாக்க முடியல; அதான். பர்ஸ் எங்கே?’

அவன் ஒண்ணும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்த அவனால் இலேசாக எரிச்சல் அடைந்த அவர் “எனக்குத் தேவையான சில விஷயங்கள் பர்சில் இருக்கு. பணத்த விட்டுட்டு அதையாச்சும் கொடுத்திடு” என்றார்.

அவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு திடீரென்று எழுந்து, இவரைப் பார்த்தான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். முட்டாள்தனமாக இருந்தாலும் சங்கரனும் தொடர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அவன் “சார், சாயங்காலம் தரேன். உங்க அட்ரஸ் தாங்க” என்றான்.

“பர்சில் வீட்டு அட்ரஸ், போட்டோ எல்லாம் இருக்கு. இருந்தாலும், இதுதான் என் செல் நம்பர். அட்ரஸ் தெரியலேனா கூப்பிடு”

அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நல்ல வேளையாக செல் போன் இருந்தது. ஒரு ஆட்டோ (இப்போ கிடைக்குது!) பிடித்து நண்பன் ஆபிசுக்குப் போய் சேர்ந்தார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். நிழலாட, நிமிர்ந்து பார்த்தார். அவனேதான். தயங்கித் தயங்கி வந்தான். அவரிடம் பர்சை நீட்டினான். வாங்கிப் பார்த்தார். பணம் அப்படியே இருந்தது. மற்ற குப்பைகளும்.

“என்ன பணம் எடுத்துக்கலையா?”

“வேணாம் சார்”

“என் இப்பிடி ஒரு தொழில் பண்ணுற?”

“உன்னத்தான் கேக்குறேன்”

“அது அப்புடித்தான் சார்; மாத்த முடியாது இனிமே”

“அதா ஏன்னு கேக்குறேன்”

“படிப்பும் இல்ல. வேற வேலையும் கெடைக்காது”

“உனக்கு என்ன வேல தெரியும்”

“சார், டிரைவிங் தெரியும் சார்”

“சம்பளம் நாலாயிரமோ, அஞ்சாயிரமோ கிடைக்கும். ஆமா, இதுல உனக்கு எவ்வளவு தேறும் மாசத்துக்கு?”

“மாமூல் போக, ஒரு பதினஞ்சு-இருபது வரும் சார். ஆனா நெறைய அடி ஒத திங்கணும் சார்”

“ம்ம்”

“அதோட மனுஷாலு நம்மள மதிக்க மாட்டாங்க – ஆனா பலகிடிச்சி”

கொஞ்ச நேர மௌனம். பிறகு அவனே தயங்கி அவரிடம் கேட்டன்.

“சார், நீங்க ஒரு டிரைவர் வேல போட்டுத் தரீங்களா?”

அவருக்கு அவன் மேல் உடனே ஒரு பச்சாதாபம் எழுந்தது. கிளர்ச்சியாக உணர்ந்தார். சமுதாயத்தில் ஒருவனையாவது திருத்தப்போகும் சாத்தியக்கூறு அவருக்கு கொஞ்சம் பரபரப்பைத் தந்தது. ஆனாலும், பெரிய மனிதர்களுக்கே உரிய, பல நூற்றாண்டுகளாக உட்புதைந்த, ஜாக்கிரதை உணர்வு “ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்” என்று சொல்ல வைத்தது.

இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் வந்த அவனிடம் ‘இப்போதைக்கு இல்லப்பா. பின்னாடி இருந்தா சொல்லுறேன். இப்ப இருக்குற ரெசஷன் டயத்துல கார் வேணாம்னு பாக்குறேன்’ என்று முடித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த போது நிச்சயமாக ஈரமான கண்களைப் பார்த்தது உண்மை. சுதாரித்துக் கொண்டான். முள்ளும் மலரும் ரஜினி பார்த்திருப்பீர்களே. அதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதே போல இலேசாக தலையைச் சாய்த்து ‘பரவாயில்ல சார்’ என்றான். நிச்சயமாக அவன் கண்களில் இப்போது இவரைப் பார்த்து பரிதாபம் இருந்தது. மெல்ல நடந்து மறைந்தான்.

‘பாவந்தான்; ஆனா எப்பவும் மடில நெருப்பக் கட்டிகிட்ட மாதிரியில்ல இருக்கணும்”

“ஏதாவது காணாம போச்சுன்னா, பாவம் அவனத்தான சந்தேகப் படுவோம்?”

“இப்போ, கஷ்டமோ நஷ்டமோ, பதினஞ்சு-இருவதுன்னு சம்பாரிக்குறான்; அஞ்சாயிரம் சம்பளம் எப்படிப் பத்தும் அவனுக்கு?”

இப்படியெல்லாம் சால்ஜாப்புகள் அவரைச் சுற்றி வந்தன ஒரு வாரத்திற்கு.

பிறிதொரு நாள் சிக்னலில் காத்திருக்கையில், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இலாவகமாக, பெருமிதமாக இறங்கியவனைப் பார்த்தார். குற்ற உணர்ச்சி, எத்தனை சால்ஜாப்பு செய்தும் போகவில்லை. மனசாட்சி பின்குறிப்பாக ‘நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே’ என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

தக்கைகள் அறியா நீரின் அடியாழம்

9.00 மணி அலுவலகத்திற்கு

9.10 9.15 ஏன் 10.30க்குக்கூட
வருகிறீர்கள்
நான் 8.00 மணிக்கே
வருகிறேன்
அறைத்தனிமையின் அவலம்
நீங்க.

வெண்டைக்காய் புளிக்குழம்பு
கத்திரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச் சாம்பார்
முட்டைப் பொறியல்
முள்ளில்லா மீனும்
தென்படும் சில பொழுது
உங்கள் மதிய உணவில்

எனக்கு மாதவன் நாயரின்
உப்பு, சப்பு, உரைப்புமற்ற
மற்ற நாளை போலவே
சவ சவ சாப்பாடு

மாலையில் திரும்பியடைய
அவரவருக்கென்றொரு கூடு
தார்சு வேய்ந்தேர் அல்லது
ஓடு வேய்ந்தோ
குறைந்தபட்சம்
கூரை வேய்ந்தோவானும்.

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன் போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு

உங்கள் இணைகளோடு
கூடி முயங்கிப் பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத் திறக்கிறீர்கள்
உங்கள் சாளரங்களை.

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைத்ததும் கவிழும்
இருட்டைப்போல
என் போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
செரிந்தது அக்காற்றென.
தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்
ஒரு போதும்.

சில குறிப்புகள் 15

கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். ‘வரைபடம் மீறி’ என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

உன் முகம்

உன்னைப் பற்றிய என் பிரக்ஞை
கடிகார முட்களை தாண்டிய
பூமியின் இருப்பு.
நடக்கும் கால்களில் தெரியும்
உன் முகம், ஒரு பாதி.
இருப்பை அறியாது உள்வளரும் மரம்
நானும், நீயும் காணாத காற்று
அறிந்ததில் தெரிந்தது
அறிந்ததை தாண்டி
எப்போதும் விரியும் பூ.

இடைவெளி

வெளியில் இருந்து அறை திரும்பிய நான்
லுங்கி மாற்றி,
ஃபேனை தட்டிவிட்டு
மல்லாந்து சாய்ந்தேன்காற்று பரவ
தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது
மின் விசிறி.

மலையும் வீடும்

வீட்டிலிருந்து மலைகளை
சுதந்திரமாய் பார்த்தேன்
பின்
பாதை பற்றி மலை ஏறி
இறங்கும் நீர்வீழ்ச்சி என
வீடுகளை சுதந்திரமாய் பார்த்தேன்
பார்த்தது விழித்துக்கொள்ள
இப்பொழுது
என் குழந்தையோடு விளையாடிக்
கொண்டிருக்கிறேன்.

ரோஜா

சொல்லிக்கொள்ளாமலே போ
கேட்டு வருவதில்லை காற்று
சொல்வதில் நீள்கிறது
யாருமற்ற ஒற்றையடிப் பாதை
யாருக்கும் தெரிவதில்லை
நீரற்ற கண்ணாடி தம்ளர்
எப்போதும் காலிய்க்கிவிடு
வார்த்தைகளை கவனமாய்
இருப்பது ஆபத்து
முடிந்தால் ஒரு ரோஜா பதியம்
நட்டு வை
எப்படி, எதுவென்று
யாரிடமும் சொல்லாதே
நீ சொல்லிய எதையும்
கொண்டதில்லை ரோஜா

மூன்று கவிதைகள்

1. இன்று

இன்று
சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது

இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப் போட்டிருந்தது

இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது

இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.

இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது

இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக்கொண்டது


2. இன்ன பிறவும்…..

அநேகமாய்
முடிவதில்லை

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றி விட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது.

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

3. பேச்சுத்துணை

கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
கடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்

எடுத்துச்சொன்ன பலவற்றில்
எகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத் துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி
வேண்டுமென்பது.

மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய்
எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப்
பேச்சுத்துணை என்றேன்

எரிக்கும் பார்வையொன்றை
வீசி
எதுகை மோனையாய்
சொல்லிப்போனான்:

எப்போதும் பேசிக்கொண்டே
அவள்
எதிர்ப்பேச்சின்றி துணையாய்
நான்.