தக்கைகள் அறியா நீரின் அடியாழம்

9.00 மணி அலுவலகத்திற்கு

9.10 9.15 ஏன் 10.30க்குக்கூட
வருகிறீர்கள்
நான் 8.00 மணிக்கே
வருகிறேன்
அறைத்தனிமையின் அவலம்
நீங்க.

வெண்டைக்காய் புளிக்குழம்பு
கத்திரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச் சாம்பார்
முட்டைப் பொறியல்
முள்ளில்லா மீனும்
தென்படும் சில பொழுது
உங்கள் மதிய உணவில்

எனக்கு மாதவன் நாயரின்
உப்பு, சப்பு, உரைப்புமற்ற
மற்ற நாளை போலவே
சவ சவ சாப்பாடு

மாலையில் திரும்பியடைய
அவரவருக்கென்றொரு கூடு
தார்சு வேய்ந்தேர் அல்லது
ஓடு வேய்ந்தோ
குறைந்தபட்சம்
கூரை வேய்ந்தோவானும்.

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன் போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு

உங்கள் இணைகளோடு
கூடி முயங்கிப் பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத் திறக்கிறீர்கள்
உங்கள் சாளரங்களை.

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைத்ததும் கவிழும்
இருட்டைப்போல
என் போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
செரிந்தது அக்காற்றென.
தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்
ஒரு போதும்.

“தக்கைகள் அறியா நீரின் அடியாழம்” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன