இரு கவிதைகள்

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது..

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்

கவிதை ஒன்று

கீழே
விழுந்துகிடந்த
ரூபாய்த் தாளை
எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
யார் யார்
கைகளிலிருந்து
தப்பி விழுந்ததோ
என்ன பாடுபட்டதோ
என்ன துரோகம் செய்ததோ

கவிதை இரண்டு

எண்ணற்ற வழிகளில்
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்
ஆனால்
சிலரை மட்டும் பார்க்கிறோம்
இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம்
இன்னும் இன்னும் சிலரிடம்தான்
உறவு வைத்துக்கொள்கிறோம்.

கவிதை மூன்று
நீண்ட
சோம்பல்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
நாற்காலியில்
உட்கார்ந்தால்போதும்
தூக்கம்
கண்ணைச் சுழற்றும்
ஒன்றும் தோன்றாமல்
ஒரு நிமிடம் என்னால்
இருக்க முடியவில்லை

கவிதை நான்கு

பிழிய பிழிய
மழைப்பெய்து
விழியை வைத்தது
கட்டுப்பாடற்ற முறையில்
ஒழுங்கு தப்பி
தெறித்தன வாகனங்கள்

உல்டா



என் நண்பர்கள் இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……18

த.அரவிந்தன்

பிரசவம்
—————

பிரசவத்திற்காக
வந்திருக்கிறது வெள்ளைப் பூனை.
பரண் மேல் ஒண்டியிருக்கும்
அதற்கு
குளிரூட்டப்பட்ட அறையில்
காற்றால் நிரம்பிய
மெத்தையமைத்துக் கொடுக்கலாம்
நாலைந்து மருத்துவர்களை
எப்போதும் உடனிருக்க வைக்கலாம்
பிரசவ வலி தெரியாதிருக்க
அதன்
தலையை, உடலைக் கோதி விடலாம்
ஈன்று சோர்கையில்
பெரிய வஞ்சீர மீனை
உண்ணக் கொடுக்கலாம்
பத்தொரு தாதிகளை நியமித்து
குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும்
பனிக்குட நீரைக் கழுவலாம்
பால் காம்புகளை
சிறு நேரமும் தேட விடாமல்
முதல் பருகலுக்குத் துணை புரியலாம்
நாய்கள்
கழுகுகள்
வாகனங்கள் நுழையாத
கூரை வேய்ந்த மைதானம் அமைத்து
அவற்றை விளையாட விடலாம்
இன்னும்
இன்னும்
என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
அதற்கு முன்-
என் மீதான
அதன் நடுக்கத்தைப் போக்க
என்ன செய்ய?

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

” அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பாஸ் ” என்றான்.

“கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?”

” அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பாஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பாஸ் ? “


அலையும் ஆவியொன்று


என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……17

பூனை

ஆலா

எலிமட்டும் பிடிப்பதில்லை
எல்லோர் வீட்டிலும் பூனை
பூரான், தேள், பல்லியென
பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும்
எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள்
கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை
வாயில் கவ்வி வந்தது பூனை
பின்னங்காலால் தூக்கியெறிந்து
முன்னம் வேடிக்கைப் பார்த்தது.
ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது
துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது

பால் குடிப்பதும்
பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே.
யாரும் பார்க்காத நேரத்தில்
குழித்தோண்டி மலம் மறைக்கும்
இயற்கையின் எழில் உருவே பூனை

புலியினம்தான் பூனையும்
போனதெப்படி அதன் போர்க்குணம்?
இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல்
மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ

அண்டிப் பிழைப்பது அழகல்ல
ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது
புலியைப் பிடிக்கும்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….9

The Active side of infinity என்ற புத்தகம் Carlos Castenada எழுதியது. பல ஆண்டுகளுக்கு முன் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். இப் புத்தகத்தில் ஒரு விஷயம் என் மனதை விட்டு நீங்கவில்லை. நாம் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எத்தனையோ சம்பவங்கள் நம் முன்னால் நடக்கின்றன. நாமும் அதில் ஒரு பாத்திரமாக இருக்கிறோம். நம் முன்னால் நாமும் பாத்திரமாக மாறி நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சம்பவம் நடந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம். அப்போது நாம் கோபமாக இருக்கிறோமா துக்கமாக இருக்கிறோமா? ஒரு சம்பவம் நடந்து முடிந்தபின் அந்தச் சம்பவத்திலிருந்து விலகி நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம். Castenada சம்பவத்தை திரும்பவும் யோசிக்க சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஞாபக அடுக்கிலிருந்து எடுக்கச் சொல்கிறார். எடுத்து அதை படத்திற்கு ப்ரேம் போடுவதுபோல் ஞாபகத்திலிருந்து கொண்டு வரச் சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஒரு சட்டம் மாதிரி உருவாக்கி அதை ஞாபகத்தில் பத்திரப்படுத்தச் சொல்கிறார். ஞாபகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் சம்பவம் என்கிற சட்டத்தை திரும்பவும் பார்க்கச் சொல்கிறார். அதில் நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம். பல ஆண்டுகள் கழித்து அந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, அதை Subject ஆகப் பார்க்காமல் Object ஆகப் பார்ப்போம்.

பிரமிளுடன் நான் விசிறி சாமியாரைப் பார்த்தது முதலில் விருப்பமாக இருந்தாலும், திரும்பி வரும்போது, கசப்பான அனுபவமாக எனக்குத் தோன்றியது. பல நாட்கள் பலரிடம் அந்தச் சம்பவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, ஏனோ விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. பிரமிளைப் பார்க்கும்போது விசிறி சாமியார் பற்றி அவர் குறிப்பிடுவதைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் விசிறி சாமியார் பற்றி என் மதிப்பு எந்த அளவிலும் குறையவில்லை. அவரைச் சந்தித்தவர்கள் அவரைப் பற்றி சொல்வதை என் ஞாபகத்தில் நான் பதிவு செய்திருக்கிறேன். பிரமிள் ஒரு முறை விசிறி சாமியார் ஒரு நாய் வைத்திருக்கிறார் என்றும், அந்த நாயிற்கு சாய்பாபா என்று பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். விசிறி சாமியார் யாரை விரும்புகிறாரோ அவர்தான் அவரைப் பார்க்க முடியும் என்றும் பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். யாரையாவது பார்க்க பிடிக்கவில்லை என்றால் விசிறி சாமியார் அவரைப் பார்க்க வந்தவர்களை போகும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுவார் என்று பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். பிரமிள் பல சாமியார்களைப் பற்றி பல விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி பல சம்பவங்களை நாம் ஞாபகச் சட்டங்களாக மாற்றி, அந்த ஞாபகச் சட்டங்களைத் திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வருவது அற்புதமான ஒன்றாக அப்புத்தகம் குறிப்பிடுகிறது. நடந்து போன நிகழ்ச்சிகளை நாம் இப்படித்தான் அசை போட முடியும். ஆனால் நடந்து முடிந்த அச் சம்பவங்களுடன் இப்போது நமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதுமாதிரியான ஞாபகச் சட்டங்களை பிறருடன் பகிரவும் செய்யலாம்.

சி சு செல்லப்பா திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும்போது அவரைப் பார்க்கச் செல்வேன். தள்ளாத வயதில் தன் பிள்ளையுடன் இல்லாமல் தனியாக மனைவியை அழைத்து வந்துவிட்டார். மிகச் சின்ன ஒரு வீட்டில் குடியிருந்தார். ஃபேன் போடக்கூட மாட்டார். அந்த வயதில் சுதந்திர தாகம் என்ற அவர் நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் அவரை விட்டுப் போகவில்லை. அது எப்படி சாத்தியமாகுமென்ற திகைப்புத்தான் என்னிடமிருந்தது. ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போதும் ஞாபகச் சட்டங்களிலிருந்து பல விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒருமுறை அவர் க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது எனக்கு இன்னும் திகைப்பு ஏற்படாமலில்லை.

தமிழைப் பொறுத்தவரை எழுத்தால் அதிகப் பலன் அடையமுடியாது. எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்துவது என்பது ரொம்பவும் சிரமமான ஒன்று. திறமையானவராக இருந்தாலும் எழுத்து பசியைத் தீர்க்காது. தமிழ் எழுத்தாளர்களில் ஒருசிலரைத் தவிர வெற்றி கண்டவர்கள் மிகக் குறைவு. தமிழில் எழுதினால் அதிகப் பணம் கிடைக்காது என்பதால் ஆங்கிலத்தில் எழுதி சம்பாதித்தவர் க.நா.சு. எப்போதும் படிப்பதும் எழுதுவதும்தான் அவர் வாழ்க்கை. சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் மரணம் அடையும் முன்புகூட விக்கிரமாதித்யன் உள்பட பலரைப் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

சி சு செல்லப்பா க நா சுவைப் பற்றி சொன்ன விஷயம்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மயிலாப்பூரோ திருவல்லிக்கேணியோ க நா சுவிற்கென்று ஒரு இடத்தை தங்க ஏற்பாடு செய்தார் சி சு செ. க நா சுவிற்கு வாடகைக்கு விட்டவர், சி சு செ நம்பித்தான் வாடகைக்குக் கொடுத்துள்ளார். சில மாதங்களாக வாடகையை க நா சு கொடுக்காததால் அவரைப் பார்க்க வீட்டுக்காரர் வந்திருக்கிறார். வந்திருப்பவருக்கு ஒரே திகைப்பு. வீடு திறந்தே கிடந்தது. க நா சுவின் குடும்பமே இல்லை. “உங்கள் நண்பர் இப்படி செய்துவிட்டாரே?” என்று க நா சுவைப் பற்றி சி சு செல்லப்பாவிடம் முறையிட்டார் அந்த வீட்டின் சொந்தக்காரர். சி சு செல்லப்பாவிற்கு க நா சுவின் மீது பயங்கர கோபம். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், எப்பவோ நடந்த ஒரு சம்பவத்தை சி சு செல்லப்பா என்னிடம் சொல்லும்போது க நா சுவின் மீது அவருக்கு உள்ள கோபம் தீரவில்லை. எனக்கு இதைக் கேட்டபோது க நா சுவின் மீதுதான் அதிக இரக்க உணர்ச்சி ஏற்பட்டது. எந்த நிலைமையில் க நா சு யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். தமிழில் வெறுமனே எழுதி பணம் சம்பாதிக்க முடியாத நிலையில், யாரிடமும் சொல்லாமல் போவதென்றால்? எதுமாதிரியான பரிதாப நிலை? இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சி சு செ அவருடைய ஞாபக அடுக்கிலிருந்து வெளிப்படுத்திய விஷயத்தில் க நா சு மீது அவருடைய கோபத்தைத் தொடர்ந்ததாகவே எனக்குத் தோன்றியது.

(இன்னும் வரும்)

மதிமை சாலா மருட்கை

திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான ‘அளவில்லாத மலர்’ ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’. மற்றது சூரியநிலாவின் ‘இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு’. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் ‘தனப் பேச்சி’யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள்.
திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான ‘அளவில்லாத மலர்’ ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’. மற்றது சூரியநிலாவின் ‘இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு’. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் ‘தனப் பேச்சி’யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள்.

2008ஆம் ஆண்டில் ஆகஸ்டு முடியும்போது புதுக்கவிதைக்கு 50 வயது முடிந்துவிட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத சரஸ்வதி இதழில்தான் அமரஜீவி க.நா. சுப்ரமணியம் அவர்களின் ‘புதுக்கவிதை’ என்று பெயரிடப்பட்ட கட்டுரை வெளியாயிற்று. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது அப்போதிலிருந்துதான். 50 ஆண்டு நிறைவு பெற்ற சமயம் வெளிவந்த புதுக்கவிதைகள் பெருமைப்படத்தக்கனவா என்ற கேள்வியுடன்தான் நான் கவிதைகளைப் படித்தேன்.

புதுக்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்துக்குப் பின் பக்தி இலக்கியத்துக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய இலக்கிய இயக்கம். முதல்ப் பார்வையில் இவ் இயக்கம் கவிதை சார்ந்ததாகத் தெரிந்தாலும் உண்மையில் இது எல்லாத் துறைகளையும் சார்ந்ததுதான். புதுக்கவிதை மாறுதல் வேட்கையைக் குறித்த சின்னம்தான். அதனால்தான் தாங்கள் கவிஞர்களாக இல்லாவிட்டாலும் புதுக்கவிதையில் வேறு துறையினருக்கும் ஈடுபாடு இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இளமையுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் ‘புதுக்கவிதை’ என்ற பெயரையே கொண்டாட வேண்டும் என்று ஓர் அவா. சிறிய, பெரிய பத்திரிகையாளர்களுக்கு இதைப் பற்றிய நினைவே இல்லை. ஒன்றிரண்டு பேரிடம் இதைக் குறித்துப் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு இதில் அக்கறை இல்லை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனைப் பேர் பெயரும் பணமும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஒரு விதத்தில் விசனமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நூறாண்டுக்குக் குறைவாக எதையும் கொண்டாடும் உணர்வு தமிழர்களிடத்தில் எழுவதில்லையோ என்னவோ.

2008-9ம் ஆண்டு புதுக்கவிதையின் ஆண்டாக எனக்கு நானே அறிவித்துக்கொண்டு கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். புதுக்கவிதையின் முதல்வர்களான ந. பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு. இவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நான் படிக்கத் தொடங்கிய கவிதைத் தொகுப்புகளில் சிலதான் ஆனந்த், கவிதா, சூரியநிலா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் முதலானோரின் தொகுப்புகள். இவர்களில் மூத்தவர் ஆனந்த். ந. பிச்சமூர்த்தியை அவர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் க.நா. சுப்ரமணியத்தை அவர் அறிவார். க.நா.சு.வுக்கும் ஆனந்தைத் தெரியும். ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ் என்ற படைப்பை நான் நாவல்1 என்று குறிப்பிட்டதைப் பற்றிக் க.நா.சு. என்னிடம் கேள்வி கேட்டார். நானும் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.
ஆனந்தை எனக்குத் தெரிவதற்கு முன்பாக அவருடைய தந்தையைத்தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னை விட மூத்த, ஆனால் வாலிபராகவே பலராலும் கருதப்பட்ட ஒய்.ஆர்.கே. சர்மா அவர்களின் மகன்தான் ஆனந்த் என்பது பின்னர்தான் தெரிந்தது. சர்மா பெரிய வாசகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் நண்பர். சர்மா அமரஜீவி லா.ச. ராமாமிருதத்துக்கு உறவினர். ஆனந்த் எழுதத் தொடங்கியிருக்கிறார் என்று தெரிந்தாலும் நான் எதையும் அவரிடமிருந்து படிக்கக் கேட்கவில்லை. அவர் எழுதத் தொடங்கியபோது கசடதபறவின் மூன்றாவது அவதாரம் வெளிவந்துகொண்டிருந்தது. முதலில் பெரிய அளவிலும் இடையில் சற்றுச் சிறிய அளவிலும் மூன்றாவதாக வாராந்தரப் பத்திரிகை அளவிலும் கசடதபற வெளிவந்தது. கசடதபற வெளிவந்துகொண்டிருந்தாலும் அவர் தன் கவிதைகளை அதில் வெளியிட முன்வரவில்லை. தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று கூட சொல்ல முன்வரவில்லை. எதேச்சையாக ஒரு நாள் அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோதுதான் அவர் கவிதைகள் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. நான் அவற்றைக் கவிதைகள் என்றும், வெளியிடத் தகுந்தவை என்றும் சொல்லி ஒரு கவிதையைக் கசடதபறவில் வெளியிடச் செய்தேன். அது வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இன்றும் அதன் சுவடுகள் – மனப் பதிவுகள் – என்னிடம் உள்ளன. அந்தக் கவிதை கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையின் வெளியீடு ஆனந்தைக் கவிதையின் சன்னதியிலேயே இருக்க வைத்தது. ஆனந்த் கவிதைகள் பின்பு தொகுக்கப்பட்டு’அவரவர் கைமணல்’ என்ற பெயரில் வெளியாயின. அத்தொகுப்பின் மற்றொரு பகுதியில் தேவதச்சனின் கவிதைகள் இடம்பெற்றன. பின்பு’காலடியில் ஆகாயம்’ என்ற தொகுப்பும் வெளியாயிற்று. இப்போது வெளிவந்திருக்கும் அளவில்லாத மலர் அவருக்கு மூன்றாவது தொகுப்பாகும்.
தொடக்கத்திலிருந்தே ஆனந்த் தனித்துவம் உடையவராகவே இருந்துவருகிறார். அவரது கவிதையல்லாத எழுத்துகளிலும் இதைப் பார்க்க முடியும். இலக்கியத்தில் தனித்துவம் ஒரு சிறப்பான மதிப்பாகக் கவிஞன் விஷயத்தில் கருதப்படுகிறது. ஒரு படைப்பாளி தனித்துவத்தை அடைவது மிகக் கடினம். அதை விடக் கடினம் அதிலிருந்து அவன் விடுபடுவது. க.நா.சு.வும்2 தனித்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

‘எனக்கு, எனக்கு, எனக்கு என்பதில்தான் இலக்கிய சிருஷ்டியும், இலக்கிய விமரிசனமும் அடங்கியிருக்கிறது. தத்துவ தரிசனம் ஆணவத்தைப் போக்க அவசியப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் ஆணவம், தனித்தன்மை அவசியப்படுகிறது. அதில்லாவிட்டால் மெஷின்கள் உற்பத்தி செய்யும் இலக்கியம்தான் இருக்கும். மனிதர்கள் ஒருவரிடமிருந்து மாறுபட்டுச் செய்யும் இலக்கியம் இராது.
– க.நா. சுப்ரமணியம், இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக். 27

க.நா.சு. சொல்லியுள்ள கருத்துகளைக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகளை எடைபோடுவது சுவையான விஷயமாக இருக்கும். ஆனால் ஆணவம், தனித்துவம் இருந்தால் மட்டும் ஒரு படைப்புக்குப் போதுமானதல்ல. சில சமயம் இவை இரண்டும் இடையூறாகவே கூட அமையலாம். ஆனால் இந்தச் சொற்கள் எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனந்தின் தனித்துவம் என்ன? அதை உருவாக்கும் கூறுகள் எவை? தொடக்கத்திலேயே அவர் எழுத்தில் நான் அவதானித்தது ஒரு விதமான’அயன்மைஒ. நேர்ப் பழக்கத்தில் இந்த அயற்பண்பு அவரிடம் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தில்தான் இப்பண்பு புலப்படுகிறது. எனவே இது அவரது அக உலகத்துடன் தொடர்புடையது எனக் கூறலாம். இப்பண்பு அவரது படைப்புகள் மூலம் ஒரு வினோதமான உலகத்தை சுட்டிக்காட்ட விரும்புவதாய்த் தெரிகிறது. விசாலமான, உயர்வான, விரைவான உணர்வுகளை வாசகனிடத்தில் எழுப்பும் முயற்சிகளே ஆனந்தின் கவிதைகள் என்று மதிப்பிடத் தோன்றுகிறது. வனம், ஆறு, மலை முதலியன அந்த வினோத உலகத்தையும் உணர்வையும் எழுப்பிக் காட்டும் படிமங்களாக அமைகின்றன3. இந்த வினோத உணர்வுக்கு அளவு ஒரு குறுக்கீடாகும். ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை – எனவே பாதுகாப்புணர்வைத் தருவது’அளவு’ என்கிற தத்துவம். பரிச்சயமான உலகில் எல்லாப் பொருள்களும் அளக்கப்பட்டுள்ளன; கலையும் வடிவப் பொருள் என்கிற முறையிலும், அதன் உபகரணங்கள் அளவுக்குரியது என்பதாலும் அளவுக்குரியதாகிறது. அளவினால்தான் கலைகள் அறியப்பட்டுள்ளன. நான் ரமேஷ்-பிரேம் உப்பு கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டது போல, கலை யதார்த்த – நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்.

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

என்பது தொல்காப்பியம்.’மருட்கை’என்பது வியப்பு. அற்புதம் எனினும் அமையும் என்கிறது உரையாசிரியரான பேராசிரியரின் விளக்கம். மருட்கை பற்றிய தொல்காப்பியரின் நூற்பாவுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள்’அளவு’பற்றியும் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய ஒன்று. தொல்காப்பியரின் நூற்பாவே பெருமை, சிறுமை என்று அளவு பற்றிய சொற்களைப் பயன்படுத்துகிறது. எனவே வியப்புக்கும் அளவுக்கும் தொடர்பிருக்கிறது என்று சொல்லலாம். தொல்காப்பியர் கூறும் வியப்பு என்கிற மெய்ப்பாடுதான் ஆனந்த் கவிதையில் இயங்குகிறது என்பது என் கருத்து.

ஆனந்த் தன் கவிதைத் தொகுப்புக்கு’அளவில்லாத மலர்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தொடரை உயிர்ச்சுனைஎன்ற தன் கவிதையிலிருந்து அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். மலர்அளவற்று இருக்க முடியுமா? பொதுவாக மலர்கள் எண்ணற்றவையாகவே உள்ளன. பெரிய மலர்கள் எண்ணப்படுகின்றன. எனவே மலர் எண் என்ற அளவுக்கு உட்படவே செய்கிறது. மலர் வேறு சில அளவுக்கும் ஆட்பட்டதுதான். முதலில் அது பார்க்கப்பட்டதும் சிறியது, பெரியது என்பது அறியப்படுகிறது. அதன் இதழ்கள் இத்தனை என்பது அறியப்படுகிறது. ஆறு பருவங்கள், ஐந்து திணைகள், இரண்டு பொழுதுகள், மற்றும் ஏழு வண்ணங்கள் இவற்றுக்கு ஆட்பட்டே அது மலர்கிறது. இப்படிப்பட்ட மலர் ஒன்றுதான் நம்மால் அறியக்கூடியது. அதற்குத்தான் நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மலரை அளவில்லாத என்று குறிப்பிடும்போது மலரை அதன் உற்பத்தி தத்துவத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. உற்பத்தியான, உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றைத்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியும். எல்லா மலரும் அளவுடையனவே. அளவில்லாத மலரோ உற்பத்தியான ஒன்றல்ல; உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதைப் பார்க்க முடியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பார்த்திருக்கிறீர்கள். ஆனால் பார்க்கவில்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ’ என்று கேட்கிறது சகலகலாவல்லி மாலை. சகலகலாவல்லியின் பாதம் வெண்தாமரையின் மேல் இருக்கிறது. வெண்தாமரைப் பூவின் மேல் சரஸ்வதி நின்றிருப்பதாக சகலகலாவல்லி மாலை சொல்கிறது. பாரதியும் வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் என்கிறார். சரஸ்வதியை வீணையும் கையுமாக உட்கார்த்தி வைத்துக் காட்டினாலும் லக்ஷ்மியை செந்தாமரைப் பூவின் மேல் நிற்பதாகக் காட்டியிருக்கிறார் ஓவியர் ரவிவர்மா. ராட்சதத் தாமரைப் பூக்கள் அல்ல இவை. இந்தப் பூக்களின் உற்பத்தி ஸ்தானம் வேறு.

இராமனைப் பார்க்க சாளரத்தில் தோன்றிய பெண்களின் முகத்தை சாளரம் தோறும் பூத்த தாமரை என்றார் கம்பர். இந்தத் தாமரை உருவகத் தாமரை, அளவுடையது. ஆனால் ஆனந்தின் அளவில்லாத மலர் இத்தகையதல்ல. ஓரளவு சகலகலாவல்லியும், செந்திருவும் நிற்கும் மலர்களோடு உறவுள்ளதெனக் கூறலாம். அந்த மலர்கள் கூட இனம், எண்ணிக்கை மற்றும் நிறம் போன்ற அளவுடையதாக இருக்கிறது. ஆனால் ஆனந்தின் மலர் என்ன மலர் என்றே தெரிந்துகொள்ள முடியாது!

உயிர்ச்சுனையின் ஆழத்தில்
மலர்ந்து கொண்டே
துளிபொழிந்த அந்த
அளவில்லாத மலரைக் கண்டேன்.

என்கிறது கவிதை. எனவே மலரின் உற்பத்திஸ்தானம் – உயிர்ச் சுனை – அசாதாரணமானது, ஆகவே மலரும் அப்படியே ஆகிறது. அளவில்லாத என்றாலும் அந்தப் பொருள்’மலர்’ என்றே பெயரிடப்படுகிறது. ஏன்? உயிர்ச் சுனை என்ற கவிதையில் கிட்டிய அனுபவம்’மலர்’ என்ற பெயருக்கு அருகில் இருப்பதால் அப்படிப் பெயர் பெறுகிறது.’மலர்’ என்று ஒரு பகுதி அறியப்பட்டு இன்ன மலர் என்ற மற்ற பகுதி அறியப்படாமல் போவதால் குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பமும் இயல்புதான்.

அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை

என்கிறது ஆனந்தின் மற்றொரு கவிதை. ஒரு பகுதி தெரிந்தும், மற்றொரு பகுதி தெரியாமல் போவதும் மனித இயல்புதான் என்பது போல. எனவே அளவில்லாத மலர் மாயாஜாலத்தில், தாந்த்ரீகத்தில் பார்க்கப்படுவதாக அமைகிறது. ஆனந்த குமாரசுவாமி சொன்னார்: விக்கிரகங்கள் அவை குறிக்கும் இறைவர்களின் பிம்பங்களே தவிர அவையே இறைவர்களில்லை என்று. இந்த பிம்பம் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிற பிரதிபிம்பம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்4.

காலதேச அளவிலா வரையறுக்கப்பட்ட உலகிலிருந்து மாறுபட்டதைக் காட்ட காலதேசம் பற்றிய உணர்வை பின்னப்படுத்த வேண்டிய அவசியம் கவிதைக்கு ஏற்படுகிறது. இதனால் ஆனந்தின் காலதேசம் பற்றிய அளவுகளை – அவை பற்றிய உணர்வுகளைத் தளர்த்திக் கொள்ளச் செய்கின்றன.

தொகுப்பின் முதல் கவிதையான’வேகம்’காலம் பற்றிய அளவை சிதைக்கிறது. ஒரு மரம் – இங்கே தென்னை மரம் – வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் – அதுவே அது எடுத்துக் கொள்ள வேண்டிய காலமும் கூட – வெகுவாகக் குறைத்துக் காட்டப் படுகிறது. இந்தக் குறைப்பு – தொல்காப்பியம் கூறும் சிறுமை ஆகும். அந்தக் கவிதையிலேயே’வியந்து’என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கவிஞர். ‘வெடித்துச் சிதறிஒ,’கதி மாறிய’என்ற தொடர்கள் மருட்சியைத் தருவன. காலம், வெளி இரண்டிலும் நிகழ்ந்த மாற்றத்தை இக் கவிதை உணர்த்துகிறது. இக் கவிதை ஏற்படுத்திய மருட்சி காரணமாகக் கவிதை அதன் பொருள் புரிகிற தளத்தில் புலப்படுவதில்லை. பரிச்சசயமான முறையில் கடைசி இரண்டு வரிகள் நீங்கலாக மற்ற பகுதியின் பொருளைக் கூறிவிடமுடியும். ஆனால் அப்படிக் கூறுவது கவிதை எழுப்பித் தரும் உணர்வை மறைத்து விடும்.

கடைசியாக’என்னை மட்டும் காணவில்லை’என்று கவிதையின் நான் கூறுகிறது. ஏன் அப்படி? இதுவரை இருந்த’நான்ஒக்கு அந்நிகழ்வினால் ஏற்பட்ட மாற்றம் ஒரு புதிய’நான்’உருவாகக் காரணமாகி விட்டது. அதனால்தான் என்னை மட்டும் காணவில்லை என்று கவிதைக்கு சொல் நிகழ்ச்சி ஏற்படுகிறது.

ஆனந்தின் கவிதையில் பல நான்கள் வருகின்றன. ஒரு குறுநாவலுக்குக் கூட’நான் காணாமல் போகும் கதை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கவிதை இயல் கவிதையில் இடம்பெறும் நான்கள் வேறு வேறானவை என்றே அறிந்திருக்கிறது. கவிதை ஒருவருடைய கூற்றாகையால் கூறுவோர் பலராகக் கூறுகிற நானும் பலவாகிறது. நான் என்கிறபோது கூறுவோரின் திணையும், பெயரும், பாலும் தெரிவதில்லை. நகுலனின் கவிதையிலும் இந்த’நான்’ பற்றிய நிலைபாட்டு விவாதம் நடைபெறுகிறது.

பணமுண்டா?
செலவுண்டு
முதல் இல்லை
உனக்கென்று
என்ன உண்டு
நான் கூட இல்லை

– சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை

– சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

மழை இன்னும் வரவில்லை.
என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை.

– மழை மரம் காற்று

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்
தானே. அவர்
எழுதியிருந்தார்
இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை
– கண்ணாடி

ஆனந்தின்’வேகம்’ என்ற கவிதை’என்னை’மட்டும் காணவில்லை5 என்று முடிகிறது.’உயிர்ச்சுனை’ என்ற கவிதையில் யாருமற்று/அவ்வப்போது நானுமற்று என்று சொல்லப்படுவது கவனிக்கத் தகுந்தது. எழுத்தாளர்களில் மௌனி தன் கதைகளில் இத்தகைய அனுபவத்தை ஆராய்ந்திருக்கிறார். க.நா.சு.வின் ‘சாவித்ரி’6 என்ற சிறுகதை கூட இந்தச் சமயத்தில் நினைவில் வருகிறது.
எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையைத் தொடர்ந்து 70களில் வெளியிட்ட கவிஞர்களின் தத்துவ விசாரங்களில் ஒன்று’நான்’ மற்றும்’பெயர்’ பற்றியுமாக இருந்தது. புனைபெயர் வைத்துக்கொள்வது கூட அழகுக்காக இல்லாமல் தன் பெயரை மறைத்துகொள்ளவும் உண்மையான விமரிசனக் கருத்துகள் எழச் செய்யவும்தான். ‘அநாமிகா’ போன்ற பெயர்கள் கூடப் பத்திரிகைப் பெயராக சிந்திக்கப்பட்டதுண்டு. ஆனந்தின்’பெயரைத் தேடி’என்ற கவிதை

அகராதியில்
என் பெயரைத்
தேடிக் கொண்டிருந்தேன்

என்று தொடங்குகிறது. கோகுலக்கண்ணனின் ஒரு கவிதை’அகராதியில் விழுந்த குழந்தைஒஎன்று பெயர் பெற்றிருக்கிறது.

நாம் எத்தனையோ கவனத்துடன் இருந்தபோதிலும்
குழந்தை திடீரென விழுந்துவிட்டது அகராதிக்குள்

என்று அதிர்ச்சி தருகிறது கோகுலக்கண்ணனின் கவிதை. படைப்பாளிகள் சிலர் – சிலர்தான் – தாங்கள் உணரும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளவை இத்தகைய கவிதைகள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால்7 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே பலவகையான சாயல்களைக் கொண்டுள்ளது. அனந்தவர்தனரின்’த்வன்யா லோகாஒவில் சொல்லப்பட்ட’ஸ்தாயி பாவம்ஒ,’சஞ்சாரி பாவம்’ எல்லாம் இக்கவிதைகளில் காணப்படுகின்றன.

கோரைப்பற்கள்

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு
– ஆனந்த்

இக்கவிதையில்’துடித்து’ என்ற வினைச்சொல் அச்சமூட்டும் நோக்கம் உடையது. ஆனால் கவிதையின் குரலோ நகைச்சுவைக் குறிப்புடையது.

முத்தம்

பரிமாறிக்கொள்பவர்களின்
சொர்க்கமாகத் தொடங்கி
சிறைக்கூடமாக முடிகிறது.

– கவிதா -‘சந்தியாவின் முத்தம் ஒதொகுப்பில்

ஆனந்தின் கவிதையில் பயம், ஹாஸ்யம் என்றால், கவிதாவின் கவிதையில் சிருங்காரம், ஹாஸ்யம் என்று அமைப்பு உருவாகிறது. நகைச்சுவையில் ஒரு அதிசய வகையைச் சேர்ந்தது ஆர். ராதாகிருஷ்ணனின்’அலறல்’ என்ற கவிதை.

அலறல்

எட்வர்டு முன்ச்சின் மறக்க முடியாத
ஓவியம்’அலறல்’ எனப் பெயர்
பெற்றது. அவ்வளவுதான்.
ஒன்றுமே சொல்ல இயலாத
இந்த ஓவியத்தைப் பற்றி பல
புத்தகங்கள், அதற்கும் மேலே
கட்டுரைகள், விவாதங்கள்;
ஆத்ம ப்ரகடன வாதம் என்ற கலைச் சித்தாந்தம்
அன்று பஸ்ஸில் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்
திறந்த வண்ணமாக்வே இருந்தது.
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்
அவரை எழுப்பலாமென்றால்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

-‘நெகிழ்ச்சி’ஒரு நிகழ்ச்சியல்ல’ தொகுப்பில்.

பழனிவேளின்’தவளை வீடு’ என்ற தொகுப்பிலிருந்து ஒரு கவிதை,

எளிமையானதாகச் சிக்கலானதாக
மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தும் தண்ணீர்
கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதும்
உள்ளே ஊடுருவ அனுமதிப்பதும்
தன்னில் இருப்பதை ஒளிர்வு மறைவோடு காட்டுவதும்
தனக்கென ஓர் ஒலியை வைத்துக்கொண்டு
ஒரே சமயத்தில் எல்லாத் தன்மையோடும்
தண்ணீரால் மட்டுமே இருக்க முடிகிறது
இந்த மாயச் சவால் மீது
தவளை யொன்று குதிக்கிறது.

பழனிவேளின் கவிதையில் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) சஞ்சாரி பாவம் – இரண்டாவதாகக் கவனத்தைக் கவரும் – வெளிப்படும் பாவம் என்ன என்பதை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

பஞ்சவர்ண வெட்டுக்கிளி தவ்வும்போது
பூமிக்குச் சிறிது எடை குறையக்கூடும்

என்று பழனிவேள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். விண்வெளி சாதனையின் விளைவாக பூமியின் எடை சிறிது குறைக்கப்பட்டது அதிசயமான சாதனை.’பூமிக்குப் பாரம் என்ற பழங்கருத்தை எண்ணிக்கொள்ளவும் இக்கவிதையின் அவதானிப்பு தூண்டுகிறது.

புதுமை என்பதே ஒரு சுவையாகத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார்.’விருந்தே’தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று செய்யுளியலில் குறிப்பிட்டிருக்கிறார்.’விருந்து’ என்பது வெளியிலிருந்து வந்து ஏற்கப்பட்டதிடமிருந்து மதிக்கப்படுவது. அது யாப்பின் மேற்று என்று சொன்னாலும் ஒரு சுவைக்குப் புறத்திலிருந்தும் இன்னொரு சுவை முதல் சுவையை சேர்க்கையால் சிறப்பிக்க முடியும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தை’காவ்ய மீமாம்சை’ என்ற நூலை வடமொழியில் எழுதிய ராஜசேகரர்8 நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மரபியலில் இளமைப் பெயர்கள் பற்றி எழுதும்போது தொல்காப்பியர்,

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே

என்று விதிக்கும்போது அவர் ஒரு முறுவல் செய்தது போல் என் மனதுக்குப் படுகிறது. நெல்லுக்கும் புல்லுக்கும் இளமையின் பெயர் கிடையாது என்பது நூற்பாவின் கருத்து. இதைக் கூறும்போது தொல்காப்பியருக்குப் பிரிப்பு வந்திருக்குமோ.

புதுக்கவிதையின் நடை இடைக்காலத்தில் மாறிவிட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு புதுவகையான அழகும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆனந்தின் கவிதைகளிலிருந்தே சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

பெரிய கன சதுரத்துக்கும்
சிறிய கோளத்துக்கும் கீழே
மூன்று பௌர்ணமிக்கு ஒருமுறை
நட்சத்திரங்கள் சில
கடந்து போகின்றன.

஑இரண்டு இடுக்குகள்’ கவிதையிலிருந்து

சூரியன் மறுபக்கம் சுழன்றபின்
தம் நிழல் விழாதென நினைத்து
தாவரங்கள் ரகசியங்களை
தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன

-‘இருளுக்குள் விழும் நிழல்’ கவிதையில்

திரைகள் விலகிய பின்னும்
விக்கிரகங்கள்
உடையற்று நிற்கின்றன
-‘காத்திருக்கும் வேளை’ என்ற கவிதையில்

ஆனந்தின் அளவில்லாத மலர் தொகுப்பில்’புதியது’ என்ற கவிதை பல வரிகளைக் கொண்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணம் மாதிரி, பாரதியாரின் அகவல் மாதிரி ஒலித்துக்கொண்டு நகர்கிறது இந்தக் கவிதை. கவிதையில் ஒரு மூதாட்டி வருகிறாள். தமிழில் காதம்பரி என்று ஒரு மொழிபெயர்ப்புக் காவியம் இருக்கிறது. அதைப் பாரதியார் படித்திருப்பார் அல்லது கேள்விப்பட்டிருப்பார் என்று சொல்லலாம். அந்தக் காதம்பரி குயிலில் எதிரொலிக்கிறது. கானகம், மையத்தில் குளம், காதல் முதலிய படிமங்கள் ஆனந்தின் புதியது கவிதையில் காதம்பரியை நினைவூட்டுகின்றன.

ஆனந்தின் கவிதைத் தொகுப்பில் வேகம், ஆதிமொழி, அந்த நாள், எனக்கான இடங்கள், இரண்டு இடுக்குகள், காதல், ஊர்வலம், மரங்கள் பேசும் ரகசியங்கள், மீன்கொத்தி முதலாக யாளிகளின் வரலாறு வரை இருபது கவிதைகள் சிறப்பாக நமது கவனத்தைக் கவர்கின்றன.

ஆனந்த் கவிதை இயல் குறித்தும் தொடர்ந்து எழுதியும், தனிப்பட விவாதித்தும் வருகிறார். திரு. பெருமாள்முருகனின் நீர் மிதக்கும் கண்கள் (2005), திரு. கோகுலக்கண்ணனின் மரம் பூக்கும் ஒளி (2007) ஆகிய தொகுப்புகளுக்கு ஆனந்த் எழுதியிருக்கும் குறிப்புகள் சிந்தனையைத் தூண்டுவன. கடந்த 30 ஆண்டுகளில் ஆனந்த் சூப்பர் கவிஞராகிவிட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நேற்று நடந்தது போல் இருக்கிறது அவரது முதல் கவிதையை அவரது கையெழுத்தில் படித்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் புதுக்கவிதையின் 50 ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டேன். இக்காலகட்டத்தில் முதல் 25 ஆண்டுக்குள் அறிமுகமான கவிஞர் என்கிற முறையில் ஆனந்தின் கவிதைகளைக் குறித்துக் கூடுதலாக இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனந்தின் கவிதைகளோடு 50 ஆண்டு நிறைந்த மகிழ்ச்சிக்காக நான் மீண்டும் படித்த கவிஞர்கள் பலர்: தேவதச்சன், சேரன், நாஞ்சில் நாடன், லதா (சிங்கப்பூர்), தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம், யுவன், யூமா வாசுகி, புதுவை இளவேனில், ஆர். ராதாகிருஷ்ணன், அழகியசிங்கர், கவிதா, சூர்யநிலா, மாலதி மைத்ரி, ர. ஸ்ரீனிவாசன், கோகுலக்கண்ணன், தமிழ் மணவாளன் முதலியோர் அவர்களில் சில பேர்.

இனிய கனவொன்று
சுவடற்று தேய்வதைப் போல்

என்பது பெருமாள்முருகனின் ஒரு கவிதை வரி. புதுக்கவிதை அப்படியில்லை.

குறிப்புகள்

1) சிறுகதை, நாவல் அல்லது குறுநாவல் இவற்றின் நீளத்தைப் பற்றிக் க.நா.சு. பேசுவார். வடிவம் பற்றியே நாவல், குறுநாவல், கவிதை என்பது குறிப்பிடப்படுவதால் அதன் நீளம் ஒரு பொருட்டல்ல என்பார் க.நா.சு. ஒரு சிறுகதை 300 பக்கம் கூட இருக்கலாம் என்பார் க.நா.சு. ஆனந்தின் இரண்டு சிகரங்களின் கீழ் ஒரு நாவல் என்று நான் குறிப்பிட்டது அதன் வாசிப்புத் தரும் இயல்பைப் பற்றி. மற்ற அத்தியாயங்கள் படிக்கத் தரப்படாமலேயே ஒரு நாவலின் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் மட்டுமே வாசகனுக்குத் தரப்படலாம். வடமொழியில் கூறப்படும் கண்ட காவியம் (கண்டம் என்றால் ஒரு துண்டு) அகண்ட (துண்டமற்றது) காவியம் பற்றிய கருத்துகளைப் போன்றது க.நா.சு.விடம் நான் சொன்னது.

2) விரும்பத் தகுந்ததும் சலிப்புத் தருவதுமாக தனித்துவம் காணப்படுகிறது. இசைத் துறையில் இதற்கு உதாரணங்கள் கூறலாம். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரம் ஜெயராமன் இவர்களின் தனித்துவம் சலிப்பூட்டுகிறது.ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளில் சில இடங்களையும் கூறலாம்.

3) சர்ரியலிசம், உருவகம் முதலியவை இவ்வுலகைப் படைத்துக் காட்டுகின்றன. ஆனந்தின் படைப்புகள் வினோதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

4, 5) ந. பிச்சமூர்த்தியின் ‘காதல்’ என்ற கவிதையின் இறுதி அடியும்’என்னைக் காணவில்லை’என்று முடிகிறது.

6) 1939ம் ஆண்டு மணிக்கொடியில் வெளியான க.நா.சு.வின் சிறுகதை சாவித்ரி நுட்பமாகப் பின்னப்பட்ட ஒன்று.

7) க.நா.சு.வின் அபஸ்வரம் கவிதை நவீன கவிதை இலக்கியத்தின் நகைச்சுவைக்குக் கொடியேற்றம் செய்வது.

8) கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கவிஞர், நாடகாசிரியர் மற்றும் கவிதை இயலாளர்.

9. பாரதியின்’நான்’என்ற கவிதையை அய்யப்பப் பணிக்கரின் ‘ஞானப்பானை’என்ற கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….8

பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.

என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம்.

விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார்.

நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் தோன்றியவண்ணம் இருந்தன. சாமியாரெல்லாம் குழந்தை மாதிரி, அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை அறிய முடியாது என்று பிரமிள் குறிப்பிட்டார். நீங்கள் பெரிதாக இதைப் பற்றி நினைக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார். சாமியார் பிரமிள் கையை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஸ்பரிசம் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் கையைத் தொடும்போது அப்படித்தான் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் பிரமிள் குறிப்பிட்டார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் திருமணமே செய்து கொள்ளாதவர். அவருக்கு குடும்பமே கிடையாது. ஆரோக்கியமான பெண்ணின் கை எப்படி குளிர்ச்சியாக இருக்கும் என்பது அவருக்கு எப்படித் தெரியும். பிரமிளைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே இல்லை. மரியாதை நிமித்தமாக இதைக் கேட்கவில்லை.
(இன்னும் வரும்)