இரண்டு கவிதைகள்


கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது


விசாரித்தல்

எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சாட்சி



விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.

சிங்கம் ——-


சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

சிறுமழை ———–


முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.


அலையும் ஆவியொன்று


என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது


தனிமை


நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக செ‌ன்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடு‌த்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்


இரவெல்லாம்

இரவெல்லாம் கத்தியபடிவழியெங்கும்வயிறு வெடித்துகிடந்த தவளைகள்நினைவூட்டுகின்றனமுன்தின மாலையின்நமக்கான பிரிவொன்றை

சட்டையொன்று—————–

என்னை தன்னுள்ளே உடுத்தியபடிசட்டையொன்று கிளம்பியது.எதிர்வந்தவர்கள்நலம் விசாரிக்கஎன்னை இறுதிவரைபேசவிடாமல் தன்னைப் பற்றியேபெருமையடித்து தீர்த்தது.புறக்கணிப்பின் உச்சத்தில்ஒரு நாள்
சட்டைக்குள்ளிருந்தநானொன்று
அம்மணமாக வெளியேறியதுயாரிடமும் சொல்லாமல்

இரண்டு கவிதைகள்

ஒழுங்கு

வரிசையாக ஆடுகின்றன
பிரசவ ஆஸ்பத்திரி
தொட்டில்கள்
வரிசை வரிசையாக
பார்த்து சிரிக்கிறார்கள்
பார்வையாளர்கள்
வரிசை தவறாமல் பெற்று
வரிசையில் சேர்த்து
உச்சி முகர்கிறார்கள்
தகப்பன்கள்
வரிசையாக நின்றும்
வரிசையில் தின்றும்
வரிசையில் படுத்தும்
வரிசையாகவே செத்தும் போகிறார்கள்

ஒரு மழை இரவின் ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்

கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்