மழைக்குப்பின்……..

இந்தக் கணம்தான்
உருவானதுபோல் எல்லாம்

நான் பார்க்க பார்க்க
முளைத்தன மரங்கள்

படர்ந்து சென்றது வானம்
எதிலும், எங்கும்

காற்றில் பழுத்தன பறவைகள்
மனிதர்களும்
இப்போதுதான் தோன்றியதுபோல்
எங்கெல்லாமொ…..எப்படியெல்லாமோ

மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும்
விதைத்துவிடு
மனதில் தோன்றியதை
ஆகாயத்தைக் கூட

சிருஷ்டித்துக் கொள்
விரும்பியவற்றை
மரம், பறவை, வீடு
ஏன் மனிதனையும் கூடத்தான்

தமிழில் : திலீப் குமார்

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்

சா கந்தசாமியைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம். எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம். அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும். பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை. பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார். அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள்.

யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன். அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார். இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார். யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார். குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார்.

என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது. என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன். வயது முற்றிய பாட்டியை முற்றத்தில் தூக்கி எறிவதைப் பற்றி கவிதை எழுதியிருப்பேன். மேலும் ஆர்.ராஜகோபாலன், ஞானக்கூத்தன், எஸ் வைத்தியநாதன், காளி-தாஸ் முதலிய கவிஞர்கள் குடும்பத்தைப் பிரதானப் படுத்தி எழுதியுள்ளார்கள். எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம், இன்றைய கவிதைகளில் தத்துவம், பெரிய கோட்பாடுகள் போன்றவை இல்லை என்றார். எப்போதோ கவிதையிலிருந்து தத்துவம், கோட்பாடுகள் போன்றவை உதிர்ந்து போய்விட்டன. எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஆழ்ந்து கவிதை எழுதுவதிலிருந்து விலகியும் போய்விட்டார். உண்மையில் தத்துவம் கவிதை எழுதுபவருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

யவனிகா ஸ்ரீராம் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம். கவிதையில் பாலியல் சமாச்சாரங்கள். இப்போதைய கவிதைகளில் இதையெல்லாம் தைரியமாக எழுதுகிறார்கள். முன்பு மறைத்த விஷயம் இப்போது வெளிப்படையாக இடம் பெற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பெண் கவிஞர்கள் முன்பைவிட இப்போது அதிகம் எழுதுகிறார்கள். இக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். முன்பு மூடி மறைத்த விஷயமெல்லாம் கவிதையின் பாடுபொருளாக மாறி உள்ளது. இதை ஆபாசம் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

முன்பெல்லாம், கவிதையில் படிமம் முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது எழுதப்படுகிற கவிதைகளுக்கு படிமம் தேவையில்லை என்றார் யவனிகா ஸ்ரீராம். கவிதையின் இந்தத் தன்மையை க.நா.சு எப்போதோ தகர்த்துவிட்டார் என்றேன் நான். அவர் கவிதைகளில் படிமம், உவமை எதுவுமில்லை. கவிதையைப் படிக்கிறபோது தென்படுகிற இறுகியத் தன்மை எப்போதோ போய்விட்டது.

கூட்டம் முடியும்போது மணி இரவு 9 ஆகிவிட்டது. இறுதியில் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வாசிப்புடன் கூட்டம் இனிதாக முடிந்தது. என்க்கு ஞாபகத்தில் உள்ள இந்த விஷயங்களை உடனடியாக எழுதாவிட்டால், பின்னால் மறந்து போய்விடும்.

மிகக் குறைவான பேர்கள் கூட்டத்திற்கு வந்தாலும், ஒரு நல்ல அனுபவமாக இக்கூட்டம் போய்க் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

வந்தமர்ந்து கொண்டது பூனை

கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்

நவீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், “நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?” என்று கேட்டார். “வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்,” என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே.

இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்துவிட்டார். ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டேன். அவரைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் எளிமையாக சிந்திப்பார். சாதனை மன்னர். ஆனால் பந்தா இல்லாமல் சாதாரணமாக இருப்பார்.
உடனே பேச ஆரம்பித்துவிட்டார். யாரும் வராவிட்டால் அவரைப் பேட்டிகண்டு விருட்சத்தில் போட்டுவிடலாமா என்று நினைத்தேன். என்னுடைய டேப் ரெக்கார்டர் மக்கர் பண்ணுகிறது என்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன். போன கூட்டத்தை நான் ரிக்கார்ட் பண்ணியதெல்லாம் வீணாகப் போய்விட்டது. ஃபேன்களின் சப்தம் மனிதர்களின் சப்தங்களை பதியவிடாமல் செய்து விட்டது. கூட்டத்தில் பதியவிடாமல் 2 வாரங்கள் கம்ப்யூட்டர் மக்கர் செய்துவிட்டது. அதனால் போன கூட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் என்னுடைய மெமரி ரொம்ப வீக். உடனே ஞாபகத்திலிருந்து பதிவு செய்யாவிட்டால் எல்லாம் தப்பாகப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவர் நூற்றாண்டு கடந்து போய் 2 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் எழுதியது மொத்தமே 24 கதைகள்.

மௌனியைப்பற்றி எப்படிப் பேச்சு வந்தது. பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உட்கார்ந்துகொண்டு நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம். ‘மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மௌனியைப் பற்றி கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார் ஞானக்கூத்தன். உடனே மௌனி என் தலைக்குள் நுழைந்துவிட்டார்.

சா கந்தசாமி, கவிஞர் வைதீஸ்வரன் போன்றவர்கள் மௌனியை நேரில் சந்தித்திருக்கிறார்.

‘மௌனி ஒரு உற்சாகமானவர். என்னைப் பார்த்தாலே போதும், கந்தசாமி என்று கத்திக்கொண்டு அவர் வீட்டு சமையலறை வரைக்கும் அழைத்துக்கொண்டு போவார். உடனே உபசரிக்காமல் இருக்க மாட்டார்…..அவருக்கு எத்தனையோ துன்பம்… ஒரு பையன் டிரெயினில் அடிப்பட்டு இறந்து விட்டான்….இன்னொரு பையனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது….அவர் ஒண்ணும் சம்பாதிக்கலை….சாதாரண மெடில் க்ளாஸ் குடும்பம்…அவர் எழுத்தில எந்த அரசியலும் இல்லை..அவர் முற்போக்கும் இல்லை..பிற்போக்கும் இல்லை…
கந்தசாமி மௌனியை மட்டும் பேசவில்லை வேற சிலவற்றையும் பேசினார். “நாமெல்லாம் இங்கே கூடியிருக்கோம். ஆனா நாமெல்லாம் தனித்தனியா இருக்கோம். பொதுவா நாமெல்லாம் மனிதர்கள்..”

“பி எஸ் ராமையா மௌனியைப் பார்க்கும்போது அவர் நோட்டில் கதைகள் எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டிலிருந்துதான் கதைகளை மணிக்கொடியில் ராமையா பிரசுரம் செய்தார்…”

“மௌனி என்கிற பெயரைக்கூட ராமையாதான் அவருக்குவைத்தாராம்,” என்றேன் குறுக்கே நான்.

“ஆமாம். அவர் இயற்பெயர் மணி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு மௌனி எங்களால் கொண்டுவந்த கசடதபற பத்திரிகையில் ஒரே ஒரு கதை எழுதியிருக்கிறார். மௌனி கதைகளில் எந்த ஜாதி என்பது கிடையாது. ஏன் பெயரே கிடையாது…எல்லாரும் மனிதர்கள்…மௌனி மாதிரி இன்னொருத்தர் கதை எழுத முடியாது…”

“ஆனால் கசடதபறவில் பல எழுத்தாளர்கள் மௌனியைப் படித்து கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் பல கதைகள் வெளிவந்தன…”என்றேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவக்கோட்டை மூர்த்தி,”நான் கூட யாரையாவது பார்த்தால் இரக்கப்பட்டு எதாவது கொடுக்கிறேன். மனிதாபிமானம் இன்று எல்லாரிடமும்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மௌனியை எடை போட முடியாது. அவர் படைப்புகளைப் பற்றிதான் நாம் பேச வேண்டும்.. கந்தசாமி அதுமாதிரி பேசவில்லை என்று தோன்றுகிறது..”

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சாந்தாராம் என்பவர் மிகச் சுவாரசியமாய் ராமையாவைப்பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார். “வயதான படைப்பாளிகள் மூவரை ஒரு பத்திரிகை பேட்டி கண்டது. அப்பேட்டியை உடனடியாக அப்பத்திரிகை பிரசுரம் செய்யவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது. பல மாதங்கள் கழித்து ராமையா இறந்தபிறகு, அப்போதுதான் பேட்டி கண்டதுபோல் பிரசுரம் செய்தது,”என்றார்.

அவர் சொன்ன இன்னொரு தகவல். “ராமையா முதலில் எதுவும் எழுதவில்லை. மணிக்கொடியில் எல்லோருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்ய செய்ய அவரும் எழுதுவதில் தூண்டுதல் பெற்று எழுத ஆரம்பித்தார்.”

எஸ் சுவாமிநாதன் பேசும்போது,”மௌனியைப் பற்றி சரியான இலக்கியத் தடம் உருவாகவில்லை. ஆனால் தமிழில் மௌனியைப் போல் ஒருவர் கிடையாது. அவர் எழுத்தில் எந்த வருணனையும் கிடையாது. அனாவசியமாய் ஒரு வார்த்தை கிடையாது… அவர் மனதிற்காகத்தான் எழுதினார். இன்னும் அவர் படைப்புகளைப்படித்து ஆராய வேண்டும்…இது போதாது என்றார.”

வைதீஸ்வரன்,”மௌனி அவர்படைப்புகளை மட்டும்தான் சொல்வார்… மற்ற படைப்பாளிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார், என்றார்.
(இன்னும் தொடரும்)

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின் நிழலும் கலங்கிய குளத்து நீரின் சுவையும் பாதங்களை கறையாக்கும் செம்மண் பாதைகளும் தின்னத் தின்னத் திகட்டாத பனங்கிழங்கும், பனஞ்சுளையும் பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன கோடை விடுமுறையின் வெக்கையான பொழுதுகளும் நடசத்திரங்கள் வந்து குதித்து விளையாட ஆசைப்படும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில் பேரின்ப பேரானந்தத்தை அடைந்துவிடும் ஐம்பொறிகளும் பணத்தை வைத்து எவரையும் எடைபோடத் தெரியாத பளிங்குகளாய் உருளும் பால்யவெளிப் பயணங்களும் அனைவரையும் பிள்ளையாராய் பிடிக்க நினைத்து குரங்காக்கிய பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடும் ஒரு சில பிள்ளையாருக்காக குரங்கான நாங்களும்…

சிங்கம் ——-


சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

சில குறிப்புகள்

சமீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

“நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?” என்று கேட்கிறார்கள்.

“தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,”என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

“உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?” என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். “நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்,” என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன்
காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார்
ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார்
ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன்
கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது
மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)
பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து
நிறைய எழுதியிருந்தாய்…
நீயும் நானும் விளையாடிய, கதை பேசிய, கனவு விதைத்த பொழுதுகளை…
நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில்
மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச…
கவிதை (3)
சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில்..!
அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு…
என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய, சந்திர, நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது…
புழுதி அப்பிய மண்ணும் இருந்தது… மழை நனைக்கும் தாழ்வாரம் இருந்தது…
ஆனால் சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு சொந்த வீடு இருக்கிறது….
பொய்யாய் பழங்கதையாய்….

பேசும் மௌனங்கள்…


எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0

இலக்கியக் கூட்ட அறிவிப்பு

27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணிவரை கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை 2 கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் நடைபெற உள்ளது. எழுத்தாளர் சா கந்தசாமி, மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மெளனியைக் குறித்துப் பேசுகிறார். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்து உரையாடுகிறார். கலந்து கொள்பவர்கள் கவிதைகள் வாசிக்கலாம். வரவும்.