மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன்
காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார்
ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார்
ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன்
கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது
மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)
பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து
நிறைய எழுதியிருந்தாய்…
நீயும் நானும் விளையாடிய, கதை பேசிய, கனவு விதைத்த பொழுதுகளை…
நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில்
மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச…
கவிதை (3)
சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில்..!
அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு…
என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய, சந்திர, நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது…
புழுதி அப்பிய மண்ணும் இருந்தது… மழை நனைக்கும் தாழ்வாரம் இருந்தது…
ஆனால் சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு சொந்த வீடு இருக்கிறது….
பொய்யாய் பழங்கதையாய்….

“மூன்று கவிதைகள்” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. அன்பு ஆசிரியர் அவர்களுக்கு,

    என் கவிதைகள் நவீன விருட்சத்தின் பதிவுலகத்தில் பிரசுரமானது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு விருட்சமாய் இருந்த காலத்தில் இருந்து அறிமுகமான, பழக்கமான, மதிக்கின்ற ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் என் பெயரையும் பார்க்கும் போது நிஜமாகவே பிரமிப்பாய் இருக்கிறது. இவ்வளவு காலங்களாய் என் நாட்குறிப்புகளில் மட்டுமே பிரசுரமான கவிதைகள், நிறைய படிப்பாளிகள் உலவும் பதிவுலகத்தில் காண்பது ஒரு புதுவித அனுபவத்தைத் தருகிறது.

    அன்புக்கு ஆயிரம் நன்றிகள்!

    ராகவன் ஸாம்யேல்

  2. அருமையான கவிதைகள் ராகவன்.. வாழித்து மிக மகிழ்ந்தேன். அதிலும் மூன்றாம் கவிதையில் நிதர்சனமாக்க முற்படும் வாக்கியங்கள் அருமை…

    மிக நன்று!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன