செருப்பு


அந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே, அவரின் பார்வை கோணத்தில் பார்த்தால், அந்த செருப்பு! எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள், ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் – கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால், எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள், அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர். சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை, என் எம்சிஏ படிப்பில், எனக்கு பலமுறை வந்த சந்தேகம், எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்துகிறார்களா, இல்லை நான் அவர்களுக்கு பாடம் நடத்துகிறேனா என்பதுதான். ஆனாலும் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மற்றபேர் தலை மேல் ஏறி கழுதை மேய்க்க முனைந்தார்கள். சந்தியா மேடம் கிளாஸில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாமல், பதிலுக்கு பதில் கிண்டலாகவே விஷயத்தை முடித்து விடுவார். பசங்க இன்று பாடம் நடத்த வேண்டாம் என்று சொன்னால் பாடம் நடத்துவதில்லை. சில சமயம் “போர்ஷன் முடிக்கனும்பா. ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திக்கிறேன். ப்ளீஸ்” என்பார். அப்படி நடத்துவதையும் யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இந்தளவுக்கு ஸ்டூண்ட்ஸோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மேடத்தின் முகத்தில் அவ்வளவு கோபத்தை பார்த்த பிறகுதான் எனக்கும் விஷயத்தின் தீவிரம் உரைத்தது. “யார் செருப்பு இது?” கொஞ்சம் உயர்ந்த குரலில்தான் மேடம் கேட்டார். பதிலில்லை. “யாருதுன்னு கேக்கறனில்லை?!” குரல் மேலும் உயர்ந்தது, கோபமும்! நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் அசைவதாகத் தெரியவில்லை. ஃப்ரெட்ரிக் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். மேடம் முகத்தில் அவமானம். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. “ஓகே. யாரோடதாவும் இருக்கட்டும். யாராவது ஒருத்தர் அதை எடுத்து வெளில போடுங்க.” யாரும் வரவில்லை. “இந்தக் கிளாஸ்ல எம்பேச்சை கேக்கிறதுக்கு ஒர்த்தர் கூட இல்லியா?” பாக்கியராஜ் கடைசி வரிசையிலிருந்து வேகமாக எழுந்து வந்து வெளியே சென்றான். அங்கு முக்கில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடை குச்சியை எடுத்து வந்து, அந்த செருப்பை கொழுக்கி வெளியே எடுத்து சென்று ஜன்னல் வழியே வெளியே விட்டான். வகுப்பிருந்தது முதல் மாடியில். அதனால் கீழே போடப்பட்ட செருப்பு சன் ஷேடில் விழுந்தது. மேடம் தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. பசங்க இன்னிக்கும் கிளாஸை காலி பண்ண முடிவு செய்துவிட்டார்கள். செமஸ்டர் முடியப் போகிறது. இன்னும் பாதி போர்ஷன் கூட முடியவில்லை. ”நான் கொஞ்ச நேரம் கழிச்சு நடத்துறேன்.” என்று சொல்லிவிட்டு வகுப்பில் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டார். வழக்கமாக இப்படி நின்றிருந்தால் பசங்க ஃபிரீயாக அரட்டை அடிப்பார்கள். இன்றும் உடனே அரட்டை ஆரம்பமான சத்தம் கேட்டது. மேடம் திரும்பி, “உங்களுக்கு கொஞ்சம்கூட டிஸிப்ளின் தெரியாதா? இங்க முன்னாடி வந்து பாடம் நடத்திப் பாருங்க. அப்ப யாராவது உங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா எப்படியிருக்கும்னு தெரியும். சே!” என்று மறுபடி திரும்பிக் கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டேன், ’இந்தப் பசங்களுக்கு நல்லா வேணும்.’ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ஃப்ரெட்ரிக்கை யாரோ தட்டி விட்டார்கள். பாக்கியராஜ் அவனிடம், “யேல, ஒன் செருப்பு எங்க?” என்று கேட்டது என் காதில் விழுந்தது. மேடத்துக்கு கேட்டிருக்காது. ஃப்ரெட்ரிக் மலங்க மலங்க விழித்து குனிந்து தேட ஆரம்பித்தான். “யேல! என்ன?” “என் செருப்பக் காணோம்ல.” மேடம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். “மேடம் ஓன் செருப்பத் தூக்கி வெளியே வீசிட்டாங்க” கடைசி வரிசை பசங்க ஊதி விட்டார்கள். ஃப்ரெட்ரிக் எழுந்து மேடத்தை நோக்கி விழித்தான். மேடம், ”என்ன?” “செருப்பு!?!” “என்னது?” “என் செருப்பக் காணோம் மேடம்.” கொஞ்சம் குறைந்திருந்த மேடத்தின் கோபம் மறுபடி கூடியது. “அப்பத நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை.” “அவன் தூங்கிட்டான் மேடம்.” பின்னாலிருந்து கேட்ட குரல் பாக்கியராஜினுடையதுதான். “ஏன் சொல்லலைன்னு கேட்கிறேன்.” “தூங்கிட்டேன் மேடம்.”. ஃப்ரெட்ரிக் இப்படித்தான். கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆனவன். சில சமயம் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை உணராமலே சொல்லி/செய்து விடக் கூடியவன். அவன் சொந்த வாழ்வை புகுந்து பார்த்தால், அம்மா கிடையாது, சித்தி கொடுமை, அப்பா கவனிக்கவில்லை என்று பல காரணங்கள் சொன்னாலும், இந்தக் கதைக்கு அவையெல்லாம் தேவையில்லையாதலால், அவன் மெண்டலி டிஸ்டர்ப்ட். அது போதும். “இங்க ஒருத்தி போர்ஷன் முடிக்கனுமேன்னு, உங்களுக்காக நைட்டெல்லாம் நோட்ஸ் எடுத்து வந்து பாடம் நடத்துவா. நீ பாட்டுக்கு அதை கவனிக்காம தூங்கிருவே. ஒன் செருப்ப எடுத்து இன்னொருத்தன் அவ மேல வீசுவான். அதுவும் ஒனக்குத் தெரியாதுல்ல. என்னன்னும் போங்க.” மேடம் மறுபடி வெடித்தார். இப்பொழுது பின் வரிசையிலிருந்து ஸாம் எழுந்தான், “மேடம் அவன் நெஜமாவே தூங்கிட்டிருந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் செருப்பை எடுத்து யாரோ லேசா தள்ளி விட்ருக்காங்க. அதுக்காக அவன் செருப்பை எடுத்து வெளியே வீசினா என்ன மேடம் அர்த்தம். பாவம் மேடம். ரொம்ப கஷ்டப்பட்ட பையன். இன்னொரு ஜோடி செருப்பு வாங்குறதனா அவனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருந்தாலும் நீங்க சரியா விசாரிக்காம அவன் செருப்ப வெளியே போட்ருக்கக் கூடாது மேடம்.” எனக்கு சனியன் சங்கில் ஏறி உட்காருவதாகத் தோன்றியது. “அப்ப அவன் செருப்ப யாரு முன்னாடி தள்ளி விட்டதுன்னு சொல்லுங்க.” “அத நான் கவனிக்கலை மேடம். ஆனா நீங்க எப்படி மேடம் அவன் செருப்ப வெளில போடலாம். இப்ப அவன் செருப்புக்கு என்ன மேடம் பதில். நீங்க வாங்கிக் கொடுப்பீங்களா? யேல, ஒனக்காகத்தான்ல பேசிட்டிருக்கேன். ஒன் செருப்புக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு கேளு.” இன்னும் தூக்கம் சரியாகக் கலையாத ஃப்ரெட்ரிக்கை உசுப்பிவிட்டான். “நீங்க நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. செருப்ப…” என்று மேடம் திரும்ப பழைய பல்லவியை பாட, ஸாமும் பதிலுக்கு அவன் பல்லவியை பாட, இதற்குள், கடைசி வரிசை பசங்க நாலு பேரும் ஸாமுடன் இணைந்து கொண்டார்கள். பொன்ராஜுக்கு ஸாமை பகைத்துக் கொள்ள முடியாது. முரளிக்கு கிளாஸை எப்படியாவது ஓய்த்து விட வேண்டும். எப்படி ஓய்த்தால் என்ன. பாக்கியராஜோ எப்பொழுது எந்தப் பக்கம் நிற்கிறான் என்றே தெரியவில்லை. அப்புறம் நடந்த சம்பாஷனைகளை விவரிப்பது கொஞ்சம் கடினம். இரு தரப்பும் மாறி மாறிப் பேச, சண்டை போட,மாணவர்கள் பக்கம் மடத்தனமான பலம் சேர்ந்து விட, செருப்பை வெளியே வீசச் சொன்ன சந்தியா மேடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிலைமை தலை கீழாக மாறியது. பீரியட் முடிய ஐந்து நிமிடமே பாக்கியிருந்ததால், மேடம் கோபித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார். அடுத்து பத்து நிமிடம் பிரேக். அதற்கு அடுத்து கம்யூட்டர் பிராக்டிக்கல் பீரியட். பின் வரிசையில் மாணவர்கள் மாநாடு கூட்டப்பட்டது. ’மேடம் எப்படியும் பிரச்சனையை இந்நேரத்துக்கு ஸ்டாஃப் ரூம்ல ரிப்போர்ட் பண்ணிருப்பா. ஹெச்.ஓ.டி. கலைமகள் சும்மாவே முசுடு. ஏற்கெனவே நம்ம கிளாஸ் மேல கொலவெறில இருக்கா. அதுனால பிரச்சனையை பிரின்ஸி வரைக்கும் கொண்டு போய்டுவா. அவங்க பிரச்சனையை பிரின்ஸிகிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். அதுனால நாம ஒத்துமையா இருக்கனும். நம்ம மேல தப்பு வராம இருக்கனும்னா, நாமளும் ஸ்ட்ராங்கா ஏதாவது பண்ணனும். பேசாம பிராக்டிக்கல் லேப பாய்காட் பண்ணிரலாம். அப்பதான் அவங்க பக்கமும் தப்பு இருக்குன்னு பிரின்ஸிக்குப் புரியும்.’ ”நான் ரெடிப்பா”, என்றான் முரளி, “பாய்காட்!” என்று கூவினான். ”ஸோ, அடுத்த பீரியட், கம்ப்யூட்டர் லேபை எம்.சி.ஏ. செகண்ட் இயர் பாய்காட் பண்றோம். பண்றோம்டா. பண்றோம்டா” என்று பொன்ராஜ் எக்கோ கொடுத்தான். கடைசி வரிசை பசங்கள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தனர். நான் எதுவும் காதில் விழாத மாதிரி பிரேக்குக்கு போய் விட்டேன். பிரேக் முடிந்ததும், நேராக லேபுக்கு போய் விட்டேன். லேப் கீழேதான். அதனால் முதல் மாடி வகுப்புக்குள் நுழையவோ, வாசலைக் கடக்கும் பிரச்சனையோ இல்லை. அப்ஸர்வேசன் நோட்டெல்லாம் லேபுக்கு எடுத்துப் போகும் பழக்கமும் நமக்கு கிடையாது. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லேபுக்குள் நுழைந்தேன், அதாவது லேப் காரிடாரில். லேபுக்குள் நுழைய இன்னொரு கதவைத் திறக்க வேண்டும். லேப் காரிடாரில் எங்கள் வகுப்பு பெண்கள் நின்று குழம்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. பசங்களை பகைத்து கொண்டு லேபுக்குள் போவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழையவும் ஹேமாவையும், ரம்யாவையும் என்னிடம் அனுப்பி என்ன செய்யலாம் என்று கேட்கச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மட்டும்தான் பசங்களோடு வெட்கப்படாமல் பேசுபவர்கள். ஹேமா என்னிடம் வந்து, ”என்னடா பண்றது? நீ உள்ளப் போப்போறியா?” என்று கவலையோடு கேட்டாள். நான் வாயைத் திறந்து, “ஆ…”, யாரோ என் பெயரை சொல்லி அழைத்ததால் திரும்பிப் பார்த்தேன். பாக்கியராஜ் காரிடார் வாசலில் நின்று கொண்டிருந்தான். “என்ன?” என்றேன். “ஒர் நிம்சம் இங்க வாயேன்.” போனேன். “நம்ம பசங்கல்லாம் லேபை பாய்காட் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்காங்க.” சொல்லும்பொழுது அவன் குரல் மிகவும் தாழ்ந்து இருந்தது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்வது போல. பசங்களுக்கு என் மேல் எப்பொழுதும் ஒரு பயமுண்டு. நான் அடிதடி பயில்வான் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் என்னை புல்தடுக்கி பயில்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் எப்பொழுதும் எந்த விஷயத்திலும் கரெக்டாக நடந்து கொள்வேன் என்பதால்தான் என் மீது பயம். அந்த பயம் எனக்கும் கொஞ்சம் கர்வமாக இருந்தது. “சரி, அதுக்கென்ன?” “அதான், நீயும்….”, என்று இழுத்தான். “இங்கப் பாரு. தப்பு யாரு மேல? ஒருத்தங்க பாடம் நடத்திட்டிருக்கும்போது அவங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா அவங்களுக்கு கோபம் வராம என்ன செய்யும்? இந்த ஃப்ரெட்ரிக் வேற பாடம் நடத்தறப்போ தூங்கிட்டு, அதையும் அவங்ககிட்டயே சொன்னா எரிச்சல் வராதா. இதுல இவன்கிட்ட மேடம் மன்னிப்பு கேக்கனும்னு வேற நீங்கல்லாம் சொல்றீங்க.” “எனக்கும் தெரியுதுடா. இருந்தாலும் இப்ப நாம ஒன்னா இல்லைன்னா நம்ம கிளாஸுக்குதான் அவமானம். இந்த ஒரு தடவை மட்டும் வந்துறேன்.” அவன் குரல் மிகவும் கெஞ்சலோடு இருந்தது. எனக்கு அவன் மீது எப்பொழுதும் கொஞ்சம் மதிப்பு உண்டு. ’பையன் நல்லவந்தான். சேர்க்கதான் சரியில்ல’ என்று நினைத்துக் கொள்வேன். அவன் மறுபடி, “ப்ளீஸ்டா” என்றான். கொஞ்சம் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தேன். “சரி வர்ரேன். ஆனா, உங்களுக்கு சாதகமா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.” என்றேன். “நீ வந்தா போதும்.” என்றான், என்னை இழுத்துச் செல்லும் அவசரத்துடன். பின்னால் திரும்பி பெண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அவனுடன் மேலே சென்றேன். நானும் வந்து விட்டதால், பெண்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள். கிளாஸுக்குள் என் இருக்கைக்கு போய் உட்கார்ந்து கொண்டேன். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. அரைமணி நேரம் கழித்து ஹெச்.ஓ.டி. கலைமகள் வந்தார். பசங்க அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பிரின்ஸி எங்கள் அறைக்குள் நுழைந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். நான் முதல் வரிசையில், நான் மட்டும். அவரும், “ஒருத்தங்க முன்னாடி கிளாஸ் எடுத்தி….” என்று பழைய பல்லவியை பாடிவிட்டு, “நீங்களெல்லாம் படிக்க வந்திருக்கீங்களா வேற எதுக்காவது வந்திருக்கீங்களா? ஆர்ட்ஸ் படிக்கிற பயலுங்கதான் இந்த மாதிரி ஸ்ட்ரைக் கிய்க்ன்னு பண்ணுவாங்க. நீ சைன்ஸ் படிக்க வந்திருக்கேய்யா. பொறுப்பு வேணாம்…..” அரை மணி நேரத்துக்கு அவர் ஓயவில்லை. பசங்கள் இடையில் ஒரு வார்த்தை பேசவில்லை. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் பார்த்துதான் அவ்வளவு திட்டுக்களையும் திட்டிக் கொண்டிருந்தார். போன வருடம் நடத்திய எக்ஸ்போ மூலம் என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். என்னிடம் அவருக்கு நல்லெண்ணம் உண்டு என்று எனக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு நல்லெண்ணமும் இன்று நாசமாகிவிட்டது என்று தோன்றியது. இறுதியில், “கடைசியா சொல்றேன். இப்ப எல்லாரும் அவங்கவங்க அப்ஸர்வேசன் நோட்டை எடுத்துகிட்டு லேபுக்கு போங்க.” என்றார். அரைமணி நேரமாக இதற்காகவே காத்திருந்தது போல நான் எனது ஒரே நோட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி, லேபுக்கு போனேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இருவர் வர, அவர்களைத் தொடர்ந்து பெண்களும் வர, கடைசி வரிசை பாக்கியராஜ், ஸாம், முரளி, பொன்ராஜ், செருப்புக்கு சொந்தக்காரன் ஃப்ரெட்ரிக் ஆகிய ஐவர் தவிர எல்லோரும் லேபுக்கு போய்விட்டோம். எங்கள் முன்னால் வாங்கு வாங்கென்று வாங்கிய பிரின்ஸி, முக்கியமாக என்னை கிழி கிழியென்று கிழித்தவர், நாங்கள் லேபுக்கு வந்தபின்னும், அவர்கள் ஐவரும் பிடிவாதமாக நின்றதால், அவர்களிடம் சமாதானமாக பேசியதாகவும், மேடம் ஃப்ரெட்ரிக்கிடம் தனியாக மன்னிப்பு கேட்டதாகவும், யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும், பின்னர் ஸ்டாஃப் ரூமில் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து லேபுக்குள் செய்தி கிடைத்தது. எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வின் நியாய தர்மங்கள் எனக்குப் புரியவேயில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிளாஸில் நான் யாருடனும் பேசுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடம். அப்புறம் பிரியப்போகிற சமயம் எதற்கு வீணாக பகையோடு பிரிய வேண்டும் என்று சமாதானமாகி, கல்லூரி விட்டு வெளியே வந்து, சென்னையில் வேலை தேடும் பொழுது ஸாம், பொன்ராஜோடு ஒரே மேன்ஷனிலும், முரளியோடு ஒரே அறையிலும் காலம் தள்ளி என்று வாழ்க்கை போய் விட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதும் இந்த நிகழ்வு குறித்து எனக்குள் எழுவது ஒரே ஒரு கேள்விதான். ’அந்த செருப்ப எறிஞ்சது யாரு?’

எதையாவது சொல்லட்டுமா / 15

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொன்று நினைக்கிறேன். இதுவரை blogல் வந்த கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரலாமா? அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது அற்புதமான புத்தகமாக அமையலாம். தமிழில் என்ன சாதிக்கலாம் என்பதை தமிழர்களாகிய நாம் எழுதிய கவிதைகள். நான் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் குறித்து தெளிவான பார்வை எனக்குண்டு. அது எளிமை. இனி புத்தகங்கள் பற்றி எதாவது சொல்கிறேன்.

கவிதைக்காக – ஞானக்கூத்தன் – விலை ரூ.150 – 256 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் கவிதைகளைக் குறித்து 34 கட்டுரைகள் உள்ளன. அந்தக் காலத்தில் கணையாழி இதழில் தொடர்ந்து மாதம் மாதம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைகள் குறித்து புதிதாக சிந்திக்க விரும்புவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகம். ஞானக்கூத்தன் கவிதைகள் மட்டுமல்ல கவிதைகளைக் குறித்தும் சிந்திக்கவும் தெரிந்தவர். சிந்திப்பது, கவிதை எழுதுவது. இரண்டும் முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.
விடுதலையும் கலாச்சாரமும் – பிரமிள் – விலை ரூ.60 – 104 பக்கங்கள் – பிரமிள் என்னுடைய நண்பர். அவருடைய புத்தகம் பிரசுரம் செய்யவேண்டுமென்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்யும் உரிமையை லயம் சுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்துவிட்டார். பிரமிளின் வேகம் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எந்தவித லாபமும் அடையாமல் அவ்வளவு எழுதியிருக்கிறார். இப் புத்தகத்தில் எழுதப்பட்டவை மொழிபெயர்ப்பு கட்டுரை, கதை அப்படியெல்லாம். பிரமிளின் சில ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. பிரமிள் பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றும் வர உள்ளது.
இயல்பு நிலை – யூ ஜி கிருஷ்ணமூர்த்தி – விலை ரூ.70 – 104 பக்கங்கள் – ஆர்.எஸ் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸன் அவர்கள். யூ ஜியின் முக்கியமான புத்தகம் இது. மிகப் புதிரான தத்துவதரிசி. படிக்க படிக்க வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்.
சில கதைகள் – அழகியசிங்கர் – பக்கம் – 120 – விலை ரூ.60 – இந்தப் புத்தகம் அடியேனுடையது. கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் இடம் பெற்ற கதைகள் கொண்ட புத்தகம். குறுநாவல் போட்டியில் என் குறுநாவல்கள் வரும் சமயத்தில் தொடர்ந்து குறுநாவல்களை எழுதிக் குவஸத்தவர்களில் பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், கோபிகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதிக் கொண்டிருந்தார்கள். என் தொகுப்பு மறு பிரசுரம் கண்டுள்ளது. கிட்டத்தட்ட 65 கதைகளும், 200 கவிதைகளும் எழுதி உள்ளேன். இப்போது நாவல் எழுதும் முயற்சியில் தளராமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி எல்லாம் எழுதுவதால் ஒரு கவிஞனாகவும் சேர்க்க மாட்டார்கள், சிறுகதை ஆசிரியராகவும் சேர்க்க மாட்டார்கள். அவசியம் வாங்கினால் நிச்சயம் நீங்கள் ரசிக்கலாம்.
கடலின் மீது ஒரு கையெழுத்து – லாவண்யா – விலை ரூ.30 – கவிதைகள் – 53 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தவறுதலாக இவருடைய முதல் கவிதைத் தொகுதிக்கு இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில் என்று பெயர் வைத்துவிட்டார். நத்தை என்று பெயர் வைத்துவிட்டதால் புத்தகம் நகராமலர் ஒரே இடத்தில் நத்தை மாதிரி உட்கார்ந்து விட்டது. விருட்சம் வெளியீடாக வந்ததால் இவருக்குப் பெயர் கிடைத்துவிட்டது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

எதையாவது சொல்லட்டுமா / 14

தமிழில் விமர்சர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் க.நா.சுதான் தமிழில் விமர்சனத்தைத் தொடங்கி வைத்தார். படைப்பாளியாக இருந்த க.நா.சு விமர்சனத்தையும் ஆரம்பித்து வைத்தார். அவருடன் அதை வளப்படுத்திய பெருமை சி சு செல்லப்பாவிற்கும் உண்டு. க.நா.சு ஒரு முறை என்றால், சிசு செல்லப்பா வேறு முறையில் விமர்சனத்தை அணுகினார். சி சு செல்லப்பா மேலை நாட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு தமிழில் அது மாதிரி முயற்சியை மேற்கொண்டார். க நா சு எந்தத் தியரியையும் படிக்கவில்லை. அவர் படிக்கிற புத்தகங்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார். பத்து பேர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதை எதிர்த்தவர்களும் உண்டு. வேகமாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு வேகமாக அபிப்பிராயம் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தவரும் க.நா.சுதான். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். அலசல் முறை விமர்சனம் என்று மேலே போக முடியவில்லை. க.நா.சுவோ அப்படியில்லை. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைளையும் பற்றியும் எழுதி விடுவார்.
விமர்சனத்திற்கென்று தனி கவனம் செலுத்திய க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் வளர்த்த விமர்சன பண்பு இன்று பலரால் பின்பற்றப்படுகிறது. மார்க்ஸிய முறை, பின் நவீனத்துவ முறை என்றெல்லாம் பலர் விமர்சனத் துறையில் இறங்கி விட்டார்கள். எப்போதுமே படைப்பாளிகளை விட விமர்சர்கள் ஒரு படி தாழ்வுதான். விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்தவர்களுக்குப் பெரிதாக பரிசு எதுவும் கிடைத்துவிடாது. பொல்லாப்பு அதிகமாக சேரும். நடுநிலைமையோடு புத்தகம் விமர்சனம் செய்வது சாத்தியமா என்பதும் கேள்விக் குறியே?70 வாக்கில் விமர்சனம் தனி நபர் தாக்குதலாக மாறிவிட்டது. இதனால் வளர வேண்டிய பத்திரிகைகள் ஒழிந்து போனதுதான் சாத்தியமாயிற்று. அன்றைய விமர்சர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், படைப்பிலக்கியத்துக்குத் தர வேண்டிய மரியாதைப் போய்விட்டது. நான் ஒரு முறை பிரஞ்ஞை என்ற பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன். எனக்கு தலையைச் சுற்றுவதுபோல் தோன்றியது. தனிநபர் தாக்குதலுக்காகப் பத்திரிகையின் பக்கம் முழுவதும் வீணடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் விமர்சனத்திற்காக அல்ல. விமர்சனம் என்ற பெயரில் முன்வைத்த சண்டைக்காக. விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படிக்க தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர, படைப்பை ஒழிக்கக் கூடாது.
க.நா.சு, சி சு செல்லப்பா காலத்தில் தனிநபர் தாக்குதல் நடைபெறவில்லை. புத்தகம் பற்றி விமர்சனம் மட்டும் இருக்கும். இன்றைய காலத்தில் புத்தக விமர்சனம் சாயங்களுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன. தலித் என்கிற சாயம், பெண்ணியம் என்கிற சாயம், ஜாதி என்கிற சாயம்..பின் நவீனத்துவம் போக்கை வளர்த்தவர்களில் தமிழவன், நாகார்ஜூனம் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். அவர்களால் வளர்ந்தவர்கள்தான் சண்முகம் போன்ற சிலர். சண்முகம் முதலில் கவிதை எழுத ஆரம்பித்தவர், பின் விமர்சனத்திற்கு தாவிவிட்டார்.
ஒரு புத்தகத்தைப் பற்றி எதிரான கருத்தைத் தெரிவித்தால் அது படைப்பாளிக்கு பாதகமான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாள நண்பர். அவர் ஒரு பாதரியார். பழக நல்ல மனிதர். தீவிரமாக சிந்திப்பவர். கவிதை எழுதுபவர். அவர் கவிதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார். அவர் புத்தகத்தை இன்னொரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். இன்னொரு இலக்கிய நண்பரும் கவிதைகள் எழுதுபவர். அவர் புத்தகம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் பாதரியார் நண்பருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
எனக்கும் புத்தக விமர்சனம் எழுதுகிற அனுபவம் உண்டு. அதனால் சில சங்கடங்களைச் சந்தித்ததுண்டு. விருட்சத்திற்கும் வரும் புத்தகங்கள் சிலவற்றை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். ஒரு சிறுகதை எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விமர்சனம் எழுதினேன். என் மனசில் அப்போது என்ன பட்டதோ அதை எழுதினேன். மொத்தமே விருட்சத்தில் 2 பக்கங்கள்தான் எழுதியிருப்பேன். அந்தச் சிறுகதை எழுத்தாளர் என்னைப்போல் வங்கி ஊழியர். மேலும் எங்கள் 2 பேர்கள் வங்கிகளும் பக்கத்திலேயே இருந்தன. ஒருநாள் மாலையில் அவரிடம் மாட்டிக்கொண்டேன். ”வாருங்கள் டீ சாப்பிடலாம்,” என்று பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு போனபிறகுதான் தெரிந்தது. என்னைத் திட்டுவதற்காக அழைத்துப் போகிறார் என்று. அவர் வைத்திருந்த பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து சில கடிதங்களை எடுத்துக் காட்டினார். ”இதப் பாருங்க..குமுதம் ஆனந்தவிகடனிலிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன..கதை அனுப்பச் சொல்லி…..உங்கப் பத்திரிகையை எத்தனைப் பேர் படிப்பாங்க….100 பேர்…200பேர்….புத்தகம் விமர்சனமா எழுதறீங்க…புத்தக விமர்சனம்…” என்று ஒரு பிடிபிடித்தாரே பார்க்கலாம், என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. உண்மையில் நான் எழுதினால் மேலே அவர் சொன்ன பத்திரிகைகளில் வராது…மேலும் எனக்கு அவருக்குக் கிடைத்த பெயர் இல்லை…அன்று பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த எழுத்தாளருடன் ஏற்பட்ட அனுபவத்தோடு நிற்கவில்லை, அந்தப் புத்தகத்தை அச்சட்டவரிடமும் மாட்டிக்கொண்டேன். அவர் ஒரு கேள்வி கேட்டார்: ”அப்படி என்ன சார் எழுதிட்டீங்க..அது என்ன பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடுமா…ஏன் சார், புத்தகம் படிக்காமலே பார்த்தால்போதும் அலுப்பு வந்துவிடுமா..?”என்றாரே பார்க்கலாம்.. அப்புறம்தான் தெரிந்தது. நான் எழுதும்போது என்னை அறியாமலே பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று எழுதியிருக்கிறேன் என்று. வீட்டிற்கு வந்து விமர்சனம் வந்திருந்த விருட்சம் இதழைப் புரட்டிப் பார்த்தேன். ஆமாம். அப்படித்தான் எழுதியிருந்தேன். பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

புத்தாண்டுக் கனவு

நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்
நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்
ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்
*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்
புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?
பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?
மூலம் – மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230

மொழிபெயர்ப்புக் கவிதை

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)
தின்றுகொண்டு தின்றுகொண்டு அவர்கள் ஒன்றாக வரும்பொழுது ஒருவாறு தப்பித்த எனக்கு கால்களை மேலே போட்டவாறு இனி பார்த்துக் கொண்டிருக்கலாம் ஒருவன் மற்றவனைத் தின்றுகொள்ளும் போது குட்டை வால் எஞ்சும் வரைக்கும்
மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)

சாரை சாரையாய்…

ஒற்றையடிப் பாதையில்
சாரை சாரையாக
நேரும் எதிருமாகப் பரபரப்புடன்
சென்று கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் உணவுப் பொட்டலத்தோடு
எதிர்வரும் ஒவ்வொருவரையும்
கடக்கும்போதும் ஒரு விநாடி
ஏதோ பேசிக்கொள்கிறார்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
எங்கே போகிறார்கள்
எதுவும் புலப்படவில்லை
அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன்
ஒரு இடத்தில்
பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.
இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில்
மீதமிருந்த இரண்டை
டிசம்பரில் எடுத்துத்
தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த
முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன்.
எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

எதையாவது சொல்லட்டுமா….13

July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை. நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்படி ஞாயிற்றுக்கிழமை அங்கிருக்கும்போது பரபரப்பாக இருப்பேன். எப்படி பரபரப்பைக் குறைப்பது என்பதே என் ஞாயிற்றுக்கிழமைப் பயணமாக இருந்தது. பின் அந்தப் பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டு விடுகிறது. திங்கள் கிழமை (28.12.2009) விடுமுறை வந்ததால் அதை நன்றாகப் பயன்படுத்தினேன். திங்கள் மதியம் கூட்டம். எஸ். சண்முகம் பேசினார். வழக்கம்போல் முதல்நாள் எல்லோரையும் போனில் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் தமிழச்சி பாண்டியனின் புத்தக விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். போனில் தொடர்பு கொண்டபோது, ‘இதோ போய்க் கொண்டிருக்கிறேன் வண்டியில்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் பலரை போனில் கூப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன். நானும் 7 மணிக்கு அங்குக் கிளம்பிச் சென்றேன். தாங்க முடியாத கூட்டம். ஸ்டாலின் தலைமையில் நடப்பதால் கட்சிக்காரர்களின் கூட்டமும் சேர்ந்து கொண்டு விட்டது. நான் உள்ளே நுழைந்தபோது ஹால் முழுக்க ஒரே கூட்டம். பலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரைப் பார்த்தேன். பேசவில்லை. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் பயம். கூட்டம் நடத்தும் நாளன்று காலையில் திரும்பவும் இலக்கியம் பேசும் நண்பர்களைக் கூப்பிட்டேன். கூப்பிட்டாலும் யாரும் வரப்போவதில்லை என்றுதான் மனதில் தோன்றி கொண்டிருந்தது. அதேபோல்தான் ஆயிற்று. 5 பேர்கள்தான் வந்திருந்தார்கள். என்னையும் சண்முகத்தையும் சேர்த்தால் 7 பேர்கள். 10 ஆண்டுகளுக்கு முன் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்றால் படப்படப்பாக இருப்பேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. கூல் என்று சொல்லிக்கொண்டேன். வழக்கம்போல் கூட்டம் விறுவிறுப்பாக 3 மணிநேரம் வரை ஓடியது. பேச்செல்லாம் ஆடியோ காசெட்டில் ரிக்கார்ட் செய்தேன். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது டீக் கடையில் டீயைக் குடித்தபடி பிரிந்தோம்.அடுத்தக் கூட்டத்தை வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது பூங்காவிலோ நடத்துவது என்று தீர்மானித்தேன். அது இன்னும் எளிமையானது. லைப்ரரி கட்டடத்தில் வைத்தால் இனி 300 ஆகும். பூங்காவில் அதுகூட ஆகாது. கூட்டத்தில் என்ன பேசினார் என்பதைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

எதையாவது சொல்லட்டுமா….12

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார்.

இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பாலகுமாரன் ஆரம்ப எழுத்தாளர். சுஜாதா தடுமாறி தடுமாறிப் பேசியதாக ஞாபகம். ஏன் இதெல்லாம் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் இப்போதெல்லாம் தொடர் கதைகள், சிறுகதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. இன்று இது பெரிய ஆபத்து என்று தோன்றுகிறது. வெறும் செய்திகளை மட்டும் தீனியாக இப் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பிரபல பத்திரிகைகள் மூலம்தான் தீவிர இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்க வாசகர்கள் தயாராவார்கள். தமிழில் படிப்பது என்பதை முதலில் இப் பத்திரிகைகள் மூலம்தான் உருவாக்க முடியும். அதனால் அன்றைய வாசகர்களுக்கு கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றில் அறிமுகம் கிட்டின. ஆனால் இன்றைய வாசகர்கள் இப்பத்திரிகைகளில் வெளிவரும் மேம்போக்கான செய்திகளை மட்டும் அறிகின்றனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும். கதை என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பத்திரிகை மூலம் படிப்பது வேறு, நேரிடையாக ஒரு நாவலைப் படிப்பது என்பது வேறு. இந்தப் பெரிய பத்திரிகைகள் தப்பான அறிமுகமாக ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. அக் கதைகள் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.

மேலும் இப் பத்திரிகைகள் செய்திகளை, குறிப்பாக சினிமா செய்திகளை வாரி வழங்குகின்றன. நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுப்புகள் அதிகம். அரசியல் எல்லாம்.

தினசரிகளான தினமணி, தினமலர் எல்லாம் செய்திகளை வாரிவழங்குகின்றன. இச் செய்திகள் மூலம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அறிவுபூர்வமாக தினமணி தலையங்கங்களை எழுதுகின்றன. உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை எப்படி கிளுகிளுப்பாக மாற்றுவது என்ற கலையை தினமலர் செய்து காட்டுகிறது. இன்னும் பல செய்தித் தாள்கள் இப் பணியை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் கதைகளேளா, கவிதைகளோ, தொடர் கதைகளோ நடைபெறவில்லை. வாசகர்கள் இச் செய்திகளைப் படித்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. கதை எழுதுபவர்கள் செய்தி மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம் என்றாலும், கதை என்பது வேறு, செய்தி என்பது வேறு. செய்தி நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கொடுக்கும். ஆனால் கதைகள் வாழ்க்கையின் கூறுகளை யதார்த்தங்களை மனதை உலுக்கும்படி வெளிப்படுத்தும்.

செய்திகள் ஒரு கட்டத்தில் நின்று விடும். ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி விட்டு அடுத்த அதிர்ச்சியான செய்திக்குத் தாவிவிடும். கதையோ அப்படி அல்ல. எழுதப்பட்டவுடன் பலமுறை படிக்க படிக்க வாழ்க்கையை வேறுவிதமாகப் புரிய உதவி செய்யும்.

இப்பத்திரிகைகள் செய்திகளை கதைமாதிரி சுவாரசியமாக எழுதினால், கதையில் நிற்கக் கூடிய உணர்வை, புத்திக்கூர்மையை அவை வெளிப்படுத்த முடியாது. செய்தி அப்படியே நின்று விடும். கதை நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தக் கதைத் தன்மையே முழுவதும் அழிந்துவிடும் நிலையில் செய்திகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளன. வாசகர்களும் செய்திகளுடன் நின்று விடுகின்றனர்.

இன்று சிறுபத்திரிகைகள் மட்டும் கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் அதிகம் வாசகர் இல்லாத சிறுபத்திரிகைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை





மொழிபெயர்ப்புக் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு
செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை
கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும்
சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்
மூலம்திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது.
சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங்கள் என்னை விட்டு நகரவே இல்லை.
இன்னும்கூட புத்தகம் கொண்டுவருவதில் ஒருவித சந்தோஷம் என்னை விட்டு அகலவில்லை. ஆனால் புத்தகம் எப்படி விற்பது? அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப் படுகிறார்கள். என் தந்தை என்னிடம் புத்தகம் கொண்டு வருகிறாயே, எவ்வளவு செலவு செய்கிறாய் என்று கேட்காமல் இருப்பதில்லை. ரொம்பவும் குறைவான எண்ணிக்கையில் புத்தகம் கொண்டு வந்தாலும் என்னைவிட கவலை அவருக்கு அதிகமாகவே உள்ளது. ஏன்? அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார்..நீ செலவு செய்கிறாயே? எவ்வளவு பணம் உனக்குத் திரும்பவும் கிடைக்கிறது? இதற்கு பதிலே சொல்ல வரவில்லை. நான் ஒரு இடத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். என் மனைவி அந்த இடத்திற்கு வருவதற்கே பயப்படுகிறாள். நியாயம்தான் அவள் பயப்படுவது. கொஞ்சம் யோசித்தால் நானும் பயப்படத்தான் செய்வேன்.
முன்பெல்லாம் நான் புத்தகங்களை சில இடங்களுக்கெல்லாம் அனுப்புவேன். கொஞ்சமாவது பணம் வரும். இப்போதெல்லாம் பணமும் வருவதில்லை..புத்தகமும் கேட்பதில்லை..
வெங்கடேஷ் சொல்வதுபோல் யாராவது புத்தகம் விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். 50% கொடுத்து விடுகிறேன். இதை யாரும் செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புத்தகம் போடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி இறங்குவதில் எனக்கு முழுக்க நம்பிக்கை இல்லை. உண்மையில் என்னுடைய வேலைதான் புத்தகம் போடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். நான் போடும் புத்தகங்கள் எல்லாம் Non Performing Asset என்று.
குறைந்த எண்ணிக்கையில் போடும் புத்தகமே ஆயிரக்கணக்கில் என்னிடம் குவிந்து கிடக்கிறது. வைக்க இடம் இல்லாமல் காலடியில் கவிதைப் புத்தகங்கள் இடறிக் கிடக்கின்றன. இதோ கடலின் மீது ஒரு கையெழுத்து என்ற பெயரில் லாவண்யாவின் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். காலடியில் இன்னொரு கவிதைத் தொகுதி.