எதையாவது சொல்லட்டுமா.19

‘இன்ன பிறவும்’ என்ற செல்வராஜ் ஜெகதீசன் கவிதைத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.

அவருடைய முதல் கவிதைத் தொகுதி பற்றி சொல்லி முடிப்பதற்குள் அவரது இரண்டாவது தொகுதி வந்து விட்டது. நான் இந்தத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் அவர் இன்னொரு தொகுதிக்கான கவிதைகளை அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருப்பார். இதுதான் ஆபத்து. கவிதை எழுதுவது, எழுதுகிற கவிதைகளைப் புத்தகமாகப் போடுவது, பின் அது குறித்து அபிப்பிராயம் எதிர்பார்ப்பது. வேறு என்ன செய்யமுடியும்?

கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் கவிஞர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அது என்னவென்று சொல்கிறேன். எல்லோரும் போல் ஆத்மாநாமும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மனச்சிதைவுக்கு அவர் ஆட்பட்டபோது, அவருடைய பிரச்சினை என்னவென்றால் ‘உடனடி புகழ்’. ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த கருத்து இது. புகழ் என்பதே மாயை. இது எப்படி சாத்தியமாகும்? ஆத்மாநாம் காலத்தில் புத்தகம் போடுவது சிரமம், படிப்பவர்கள் யாரென்று கண்டு பிடிப்பது சிரமம், மேலும் படித்து கவிதைகளைப் புகழ்ந்து எழுதுவதென்பது இன்னும் சிரமம். இந்த நிலைக்கு ஆளான ஆத்மாநாம் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களான ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன் இவர்களிடமிருந்து அவர் இதைக் கற்றுக்கொள்ளவில்லை. அவருடைய இன்னொரு நண்பரான ஸ்டெல்லா புரூஸ் இன்னொரு ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.

ஆத்மாநாம் பற்றி நான் ஸ்ரீனிவாஸனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஸ்ரீனிவாஸன் சொன்ன ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஆத்மாநாம் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர். இன்றும் எத்தனையோ பேர்கள் அப்படி இருக்கிறார்கள். இப்போது இருந்திருந்தால் அவரும் மற்றவர்களைப் போல் கண்டுகொள்ளப்படாதவராக மாறி இருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதால்தான் எல்லார் கவனத்திற்கும் வந்துவிட்டார் என்றார் ஸ்ரீனிவாஸன். ஆத்மாநாம் குறைந்தது 1000 கவிதைகளுக்கு மேல் எழுதியிருப்பார். ஏன் சிறுகதைகள், நாவல்கள் என்றெல்லாம் எழுதி குவித்திருப்பார். பெரும்பாலும் கவிதைகளைக் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். புத்தகங்களாக வந்தால் யாரும் வாங்க மாட்டார்கள்.

இது தான் தமிழில் எப்போதும் நடப்பது. செல்வராஜ் ஜெகதீசன் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதேபோல் யாராவது புகழ்ந்தால் அது உண்மையென்று நம்பியும் விடக்கூடாது. இன்ன பிறவும் என்ற புத்தகத்தில் பெரும்பாலும் கவிதை முனைப்புகள் தென்படுகின்றன. கவிதைக்கான எத்தனம் கவிதையாக மாறிவிடாது.

யாருமற்ற பூங்காவில்

ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறான்

என் மகன்.

எவரையோ சேருமென்று

கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.

கவிதைக் குறித்தே கவிதை எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. இத் தொகுதி முழுவதும் கவிதைகள் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன்.

தமிழில் கவிதைக்கான எத்தனிப்பே அதிகமாக உள்ளது. இது குறித்து சிந்திப்பது அவசியம். கவிதை மாதிரி தோற்றம் தரும் ஆனால் கவிதை இல்லை என்று சொல்லலாமா என்றெல்லாம் எனக்குச் சொல்ல வரவில்லை. உதாரணமாக ஒன்று கவதையாக வரவேண்டியது எப்படி எத்தனமாக மாறி விடுகிறது என்று சொல்லலாம்.

என் வரையில்

உங்களைப் போல்தான்

நானும் போகும் பாதை வழியே

திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும்

செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை இங்கயே நிறுத்தி விடவேண்டும்.

அவர் மேலும் தொடர்ந்து,

சுமந்து திரும்பும் விஷயங்களில்தான்

சிறிது வித்தியாசம்

என் வரையில்

அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு.

இந்த வரிகளைச் சேர்த்தவுடன், கவிதை சுழல் மாறி எத்தனமாக மாறி விடுகிறது.

ஆத்மாநாமின் ‘தரிசனம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி

கவிதை வாசகர் ஊகத்திற்குப் போய்விடுகிறது. இன்னும் விவரித்தால் இதுவும் எத்தனமாக மாறிவிடும்.

அதேபோல் செல்வராஜ் ஜெகதீசனின் சில கவிதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கவிதைகளை வேறு விதமாக சொல்வதாகப் படுகிறது. உதாரணமாக, ‘இன்று’ என்ற கவிதை.

நாம் ஒவ்வொருவரும் நம் முன்னே நடக்கும் பல விஷயங்கள் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். கவிதை எழுதுவதுமூலமாகவும், எழுதாமலிருப்பது மூலமாகவும். கவிதை எழுதுவது மூலம் நாம் ஒரு அசாதாரண ஆளாக நினைக்கக்கூடாது. சாதாரண மனிதன் கவிதை எழுதுபவனைவிட சிறந்தவனாக இருப்பான். அதேபோல் ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது.

அப்படியென்றால் செல்வராஜ் கவிதைகளையே எழுதவில்லை என்று சொல்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை. அவர் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வரும்போது, இன்னும் பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்,

கையெழுத்து


ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திற்கு, நடந்து போனால் ஒரு குட்டிக்கதை முடிவதற்குள் போய்விடலாம். அதற்குமேல் படிக்கத்தான் வெகுதொலைவு நடக்க வேண்டியிருந்தது அந்த ஏரிக்கரை வழியாக. ஏப்ரல், மே மாதம் தவிர எல்லா மாதங்களிலும் வாய்க்காலில் தண்ணீர் போய்க்கொண்டே இருப்பதால் மிதிவண்டி வாங்கிக் கொடுத்தனுப்ப பயந்தாள் அம்மா. நாளுக்கு ஒரு கதை என்றிருந்த வழக்கம் இப்போதெல்லாம் மூன்று நான்கு என்றானது. வீட்டில் கதையேதும் கேட்டுவராத சிலர் ஏற்கனவே சொல்லிய கதையிலிருந்து பெயரை மாற்றி புதுவிதமாக ஏதாவது சொல்வார்கள். தேர்வில் முதலிடத்தைப் பிடிக்க எனக்கும் பண்ணையார் பொண்ணுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. பாட்டும் விளையாட்டுமாக தினமும் பள்ளிக்கு சென்று வருகிற ஏரிப்பாதையின் ஓரங்களிலிருக்கும், ஒவ்வொரு புதர் மறைவுகளுக்கும் ஒற்றையடிப்பாதையொன்று செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கும். கொடிகள் படர்ந்து ஒருசில புதர்கள் மட்டும் பழங்கால குகையைப்போல பார்க்கவே பயமாக இருக்கும். அந்த இடங்களையெல்லாம் நாங்கள் எப்போதும் ஓடியேதான் கடப்போம் தப்பிக்கும் நோக்கத்துடன் சத்தமும் கூச்சலும் போட்டபடி. இந்தப் புதர் மறைவுகளில் தான், காலையிலும் மாலையிலும் ஊர்க்குடிகாரர்கள் ஒன்றுகூடி அவரவர் வலுவிற்கேற்பவும் வசதிக்கேற்பவும் கள் மற்றும் சாராயம் குடிப்பார்கள். பீடித் துண்டுகளும், வெற்றிலை எச்சில்களும், கெட்டவார்த்தைகளுமென அந்த இடமே அழகழிந்து இருக்கும். கட்டிப்பிடித்து சண்டை போட்டு செம்மண்ணில் உருளும் ஆட்களை பிரித்து விடுவதற்கென்றே சில தடித்த ஆட்களை கடைக்காரன் வேலைக்கு வைத்திருந்தான். இறைந்து கிடக்கும் காலியான பனையிலையிலான கோட்டைகளை கட்டெறும்புகள் மொய்த்துப் போதையில் உலவித் திரியும். குடிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலிகள். பண்ணையாரிடம் வாங்கிய கூலியில் பாதிக்கேனும் குடித்துத் தீர்த்து விடுவார்கள். ஊரில் அவருடைய நிலம் தான் பெரியது. மற்ற குறுநில விவசாயிகளால் நெல் மட்டுமே பயிரிட முடிந்தது. அப்பாகூட சொந்த நிலத்தில் வேலை செய்தது போக, கூலிக்கும் அவ்வப்போது போய்வருவார். முதலில் வேலைப்பளு காரணமாய் குடிக்கத் தொடங்கிய அவர் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை இல்லாத நாட்களிலும் குடிக்கத் தொடங்கினார். அம்மா எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவர் குடிப்பழக்கத்தை விடுவதாய் இல்லை. ஆடுமாடுகளுடன் ஓடிச் சோர்ந்தவளுக்கு அவரின் குடிப்பழக்கம் பெரும் வேதனையைத் தந்தது. குடும்பத்தில் வருவாய் குறைந்து சேமிப்பு கரையத் துவங்கியது. என் கைச்செலவிற்கு அம்மா கொடுக்கும் பணம் குறைந்து போனது. இதனால் கிழவி கடைக்கு என்னோடு மிட்டாய் வாங்கி உண்ண வருபவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் குறைந்தது. தங்கச்சி அப்பாவைக் கண்டால் பயப்படத் தொடங்கினாள். தள்ளாடித் தள்ளாடி நடக்கும் அவர் மேல் சாமி வந்துவிட்டதாக என்னிடம் கூறுவாள். “டேய் குமார் உங்க அப்பா மாட்டு சாணம் கிடந்ததுகூடத் தெரியாமல் நேற்று சாயங்காலம் கருவேல மரத்தடியில் படுத்துக் கிடந்தார்டா. அவர் முகம் பூரா ஈக்கள் மொச்சி ஒரே அருவருப்பா இருந்தது. உங்க அப்பா ஒரே அழுக்குடா” என்று சொல்லி, வாந்தி எடுப்பவர்கள் போல ஒலியெழுப்பி கேலி செய்யத் தொடங்கினார்கள் என்னோடு வருபவர்கள். குடித்து விட்டு வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்பதால் பண்ணையார் அப்பாவை வேலைக்கு வரச் சொல்லவதில்லை இப்போதெல்லாம். அம்மா முன்பை விடவும் தன்னை வருத்திக் கொண்டாள். தன்னிடமிருந்த சில நகைகளையும் சாராயக் கடைக்காரனிடம் அவர் வாங்கிய கடனுக்கு கொடுத்து விட்டாள். அவளுக்கு சோற்றை விட தன்மானம் தான் முக்கியம். கிடப்பில் இருந்த தானியங்களை விற்றும் போதாதற்கு சில ஆடுகளை விற்றுமென எப்படியோ இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு போனபோது புது நோட்டு புத்தகங்கள் வாங்க காசே இல்லை. இதனால் என்னை வாத்தியார் தினமும் வகுப்புக்கு வெளியிலேயே நிறுத்தினார். “வெறுங்கையை வீசீட்டு இங்கென்ன மதியம் போடுற சோத்தை சும்மா திங்க வந்தியா” என்று திட்டுவார். இத்தனை நாளும் அன்பொழுகப் பேசிவந்த ஆசிரியர்களே என்னை இப்படி நடத்துவது கண்டு எனக்கு அழுகையாய் வரும். இதற்கெல்லாம் காரணமான அப்பாவை வெறுக்க ஆரம்பித்தேன். பகலிலேயே ஓடிக் கடக்கும் அந்த இடத்தில், யாரும் இல்லாத இரவு நேரத்தில், அவர் வழக்கமாக போகும் கடைக்கு தீ வைத்தேன். ஆனால் அவர்கள் மரநிழலில் கடையை வைத்து நடத்த ஆரம்பித்தார்கள். பண்ணையார் வீட்டில் எருமைகளை மேய்க்க ஆள் தேவைப்படுவதாக கேள்விப்பட்ட அப்பா இன்னும் சில நாட்கள் நான் பள்ளிக்குச் செல்லாமலிருந்தால் என்னை அங்கே சேர்க்கும் முடிவில் இருந்தார். மழை காலத்திற்கு சேமிக்கும் எறும்புகளைப் போல, மிகவும் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் கற்றாழை கயிற்றில் வந்த பணத்தை சேர்த்து வைத்திருந்த அம்மா எனக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினாள். அப்பா தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை. அவரிடமிருந்து அம்மாவை காப்பாற்றுவதிலேயே என் இரவுப் பொழுதுகள் கழிய ஆரம்பித்தன. அவள் அழுவதை பார்த்து செல்வியும் அழுவாள். அப்பா பீடியை பற்றவைத்துக் கொண்டு வெளியில் போய் படுத்துக் கொள்வார். எங்களின் படிப்பு நின்றுவிடக் கூடாதென அவளின் அப்பா வீட்டிற்கு கூட போவதில்லை அம்மா. முந்தைய வகுப்புகளிலெல்லாம் படிப்பில் கெட்டியாக இருந்த நான் இப்போதெல்லாம் சரிவர படிக்க முடிவதில்லை. பண்ணையார் பொண்ணு என்னை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தாள். வகுப்பில் என்னை கேலி செய்பவர்களை அடிக்கலானேன். வாத்தியார்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து போனது. முன்பெல்லாம் தேர்வுச் சமயமென்றால் பக்கத்துக்கு வீட்டு மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்க போய்விடுவேன். பள்ளிக்கூடத்தில் என்னை கேலி செய்ததற்காக அவனை புரட்டியெடுத்த நாளிலிருந்து, என்னை அவன் பெற்றோர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. கண்களை சிமிட்டும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும், அப்பா போடும் சண்டையாலும் சரியாகப் படிக்க முடியாமல் போக, பயந்தது போலவே முதல் முறையாக மதிப்பெண் அட்டையில் ஒரு சிகப்பு கோடு விழுந்து விட்டது. தேர்வில் தவறியவர்களை ஆசிரியர்கள் அதிக கவனத்தோடு பார்ப்பார்கள். முந்தைய வருடத்திய மதிப்பெண் அட்டையில் இருக்கும் அப்பாவின் கையெழுத்தோடு இந்த முறை நான் வாங்கி வந்த கையெழுத்து ஒத்துப் போகவில்லை. “இந்த வயசிலேயே திருட்டுத்தனம் பண்றயா” என்று உடலெல்லாம் சிவக்க அடித்தார்கள். எத்தனையோ முறை அப்பாவின் கையெழுத்து தானென்று சொல்லிப் பார்த்தும் அவர்கள் என்னை விடவில்லை. தங்கச்சி சொன்ன சாட்சியும் எடுபடவில்லை. அடிவாங்கி மயக்க நிலையில் கிடந்த அம்மாவையும் சாட்சி சொல்ல வைக்க முடியவில்லை. கையெழுத்து போட்ட நாளன்று போதையில் இருந்ததால் பள்ளிக்கு வந்த அப்பாவும் கையெழுத்து அவருடையதில்லை என்று சொல்லிவிட எல்லோருமாக என்னை கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள் அன்று முதல். இனிமேல் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து வாங்கும் முன் அப்பாவை குடிக்கச் செய்துவிடவேண்டுமென்று முடிவெடுத்தேன்.

சொல்லடி என் சிவசக்தி

மாலை தொடங்கிய காற்றும் மழையும், இருட்ட ஆரம்பித்த பிறகே ஓய்ந்தது. இடையில் போன மின்சாரம் போனதுதான். வானத்தை பார்த்தப்படிக்கு வாசலில் நின்றேன். குழுமையான காற்று உடலில் அறைந்துக் கொண்டிருந்தது. தடுப்பு வேலியில் மஞ்சள் நிற மாலைப் பூக்கள் ஈரம் மினுக்க தலையசைத்தது. வீட்டைச் சுற்றிநின்ற மரங்கள், மழை நீரை காற்றில் உதறும் சலசலப்பின் சப்தம். எங்கும் இருள் படர, வானத்தில் ஒளி வைரங்கள் காணவில்லை. மேகமூட்டம் நிலைக் கொண்டு மாபெரும் கருங்சிலேட்டாகிப் போனது வானம்! தூரத்தே அதன் அடர்கருப்பில் மின்னல் கீற்றுகள் ரம்மியமாக நெளிந்து கொண்டிருந்தது. நல்ல கோடையில் இப்படியொரு சூழல் அபூர்வம்! முன்பெல்லாம் இயற்கையின் இப்படியான விசேச வீச்சை கண்ட நாழிக்கு, கவிதையில் அதைப் பதிய மனம் பரக்கும். இப்பொழுது இல்லை, முடியாது. அந்த மனம் நசித்து கிடக்கிறது. அப்பா..! அப்பா இல்லாத போன பொழுதுகள் எனக்கு எத்தனை ரம்மியத்தை காட்டிதான் என்ன!செல்லம் கொஞ்சி, தட்டிக் கொடுத்து, நடைபயில ஆர்வம்கூட்டி, ஓட, ஆட, தாண்டச் சொல்லி, தூக்கிப் பிடித்த அப்பா! வாட்டம் காணும் நாழியெல்லாம் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தைரியம் தந்த அப்பா! கடலிடமும், மலையிடமும் அழைத்துப்போய் வினோதங்களை பார்யென்ற அப்பா! எதிர்படும் காட்டு மரங்களின் முரட்டு தடிமத்தின் மீது ஓங்கி குத்த சொல்லி என் புஜத்தின் வலுவை கூட்டிய அப்பா! வலிகொண்ட விரல்களை வருடிவிட்டப்படியே, கண்ணில்பட்ட மலர்களின் பெயர்களையெல்லாம் சொல்லி, அதன் குணமும் சொல்லிய அப்பா! வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அம்மாவை சுற்றிச் சுற்றி வந்து “சொல்லடி என் சிவசக்தி..” பாடிய ‘பாரதி’ அப்பா! ‘கவி பாரதி’ என்று எனக்கு பெயரிட்டும், ‘கவி’யென்றே காலமும் அழைத்த அப்பா! அம்மா திட்டும் திட்டணைத்தும் கேட்டு ரசித்து, “போடி பைத்தியக்காரி” என்றுவிடும் அப்பா! தொடர்ந்து அம்மா சண்டைப்பிடிக்க, அதை எள்ளி நகையாடிய அப்பா! சற்றைய நாழிக்கெல்லாம், சண்டை மறக்க அம்மாவை சிரிக்கவைத்து, வீட்டை ‘கலகலா’வாக்கிய அப்பா! இன்றைக்கு வீடு இருக்கிறது. அம்மா இருக்கிறாள். நான் இருக்கிறேன். அவர் காட்டி நான் பிரமித்த காடு, மலை, கடல்யெல்லாம் அப்படியப்படியே இருக்கிறது! அப்பா….? இன்றைக்கு, வீட்டில் சந்தோசம் தந்த சண்டையில்லை! நகையாடல் இல்லை! சிரிப்பில்லை. கலகலா இல்லை! பாரதியின் சஞ்சாரமே இல்லை! ‘சொல்லடி என் சிவசக்தி’ கேட்காத என் வீடு, எனக்கு என் வீடடகவே இல்லை! பூரணமாய் இருண்டு விட்டது. என்னைச் சுற்றி எல்லாமும் வெறுமை! வானமும் பூமியும் சேர்த்து!”காப்பி” வேலைக்கார பெண், சூடான எவர்சில்வர் தடம்ளரை கைமாற்றினாள். “கார்த்திகா.. அம்மா எழுந்தாச்சா?” “எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருக்காங்க” என்றபடி அந்தப் பெண் உள்ளேபோக, இருளில் கொஞ்சம் காலாற நடந்து, வீட்டின் முன்னுள்ள புல்தரை, பூச்செடிகளோடு விசாலமாகும் தோட்டத்தின் இன்னொரு முனைக்கு போனேன். நிசப்தம்கூடி தெரிந்தது. விரியும் அதன் வெளியில் காஃப்பியோடு ஒன்றிகொண்டு இருந்தேன். இருளினூடே சில்வண்டுகளின் ஓசை, தவளைகளின் சப்தம், தூரத்தே வாகனங்களின் பேரிரைச்சலென எதனையும் உள்வாங்காத மனத்தோடு, என் நிசப்த உலகில், காஃப்பியையும் அதன் சூட்டையும் சுவைத்து நினைவின் சஞ்சாரத்தில் கரைந்துக் கொண்டிருந்தேன். கடைசி கடைசியாய் ஒருதரம், ஒரே ஒரு தரம் அப்பாவின் முகம் பார்க்க கிடைத்திருந்தால் மனம் இப்படி அரற்றிக் கொண்டிருக்காது. அவரது பாதத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளும் அந்த ஒரு கணம் கிட்டாமலேயே போய்விட்டது. செய்தி கேட்டு யு.கே.யில் இருந்து எத்தனை பரபரக்க ஓடிவந்தும் என்ன செய்ய? தாமதம் கூடி காரியம் ஆகிவிட்டது. ஒரே மகனான என்னை சிதைக்கு தீயிட சொந்தபந்தங்கள் தேடி அலுத்ததெல்லாம் சரி, அப்பாவும் தேடியிருப்பாரோ? நேரத்தே வந்திருந்தாலும் என்னால் அவர் சிதைக்கு தீயிட்டிருக்க முடியுமா? கட்டித்தழுவிய மார்புக்கு நெருப்பா? அவர், தீய்ந்து புகைந்து பற்றியெறிய என்னால் நெருப்பிட இயலுமாயென்ன? முடிந்திருக்காது. சத்தியமாய் செய்திருக்கமாட்டேன். நல்லவேளை தப்பித்தேன். நிசப்தம்…. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். மாலையில் இந்த தோட்ட பூச்செடிகளுக்கிடையே பிரம்பு நாற்காலியிட்டு, கண்களுக்குப் புழப்படாத பாரதியிடம் திளைத்து, பாடி களித்துக் கொண்டிருப்பார்! அப்பாவின் குரல் அதிர்வுகள் இங்கே நிச்சயம் மேவிக் கொண்டிருக்கும். அது என்னை இப்போது தழுவவும் கூடும். தழைக்கும் இந்த இருக்கம் கிழிய அப்பாவின் குரல் கசிவு கேட்டால்..! நான்தான் எத்தனை பாக்கியசாலி. கேட்குமா? “கவி..” என்றழைக்கிற அழைப்பொன்று போதும். வேண்டாம், அவர் கசியும் பாரதி பாடலின் ஒரு வரி போதும். கேட்குமா? காற்றில் பாரதியின் வரிகள் மிதந்து வந்தது. ‘நிற்பதுவே.. நடப்பதுவே..!’ பாரதியின் முகம் சுருங்கியது. அது அவனது அப்பாவின் குரல் அல்ல. வேறு குரல்! ஆனாலும், பழக்கப்பட்ட குரல்! பாரதி கண்ணன்! தம்பி! சித்தப்பா பையன். அப்பா சூட்டிய இன்னொரு பாரதி நாமகர்ணம். பிலாசஃபி. எம்.ஏ.! எம்.ஃபில்லும்கூட!! என்னை பெயர் சொல்லி அழைக்கும், ‘ட’ போட்டு பேசும் சகோதரன்! சினேகிதன்! பிரியமும் அதிகம். செய்யென்றால் செய்துவிடுவான்! “எனக்காக காலம்தாழ்த்த வேண்டாம். என்பொருட்டு நீயே அப்பாவுக்கு கொல்லிவை” என்று துக்கத்தைக்காட்டாது, டெலிஃபோனில் கசிந்தேன். பாவி.. நிஜமாகவே கொல்லி வைத்துவிட்டான்! பக்கத்து டவுனில் உள்ள கல்லூரிஒன்றில் பிலாசஃபிக்கு விரிவுரையாளன்! கஷ்டம். நம்ப முடியாது. அப்பா வாங்கிகொடுத்த வேலை. அவர் சிலநேரம் தப்பும் செய்வார் என்பதை இப்போதே அறிகிறேன். மாணவர்களின் எதிர்காலத்தை அவர் தீரயோசித்திருக்கலாம். பாசம் மறைத்துவிட்டது! தூறல் விழுந்து கொண்டிருந்தது. கண்ணன் அருகில் வந்தான். “மழை தூறல் பலமா இருக்கு… உள்ளே வா” என்னை அழைத்து சென்று, வீட்டின் வெளிவராண்டா கூறையின் கீழ் நிறுத்தினான். “இந்த சனியன் பிடித்த மழை விடுவேனாங்குது”. நான் பேசாது நின்றேன். “இந்தப் பருடா பாரதி.. அப்பா நம்மைவிட்டுப் போனதை இன்னும் எத்தனை நாளைக்கு நீ நினைச் சுக்கிட்டே இருப்பே?” “மனம் இன்னும் ஆறலேயேடா” “உனக்குத் தெரியுமா? எல்லோருடைய கடைசி அத்தியாயமும் சாவுலத்தான் முற்றுபெறுது! முற்றுப் பெற்றவங்க யாரும் உயிர்த்தும் வரதில்லை!” “என்ன.. தத்துவமா?” “ஆமாம்ல.. நான் யாராக்கும்!” “சரி விடு, நீ வரும்போது ஒரு பாடல் பாடிக்கிட்டே வந்தியே, யாருடைய பாடலுன்னு தெரியுமா?” “காரைக்கால் எஃப்.எம்மில். பாடிகிட்டு இருந்துச்சு, நல்லா இருந்ததால… முனுமுனுத்தேன்.” “இல்ல கண்ணா.. அது யார் எழுதிய பாடலுன்னு தெரியுமா?” “அனேகமா… வைரமுத்துவா இருக்கும்.” அவனை நினைத்து சிரிப்பதா அழுவதானு தெரியல. “மடையா.. மடையா.. அது பாரதி எழுதிய பாடல்டா!” “யாரு… ஒங்க அப்பா மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கிடே இருப்பாரே அந்த பாரதியா..!” “போடா..” “யாருக்குத்தெரியும் அவர் சினிமாவுக்கெல்லாம் பாட்டு எழுதியிருக்காருன்னு?” “தாங்கல.. சரி, நீ இப்ப எதுக்குவந்தே?” “உனக்கு ஆருதலா கொஞ்சம் பேசிட்டு போகலாம் என்றுதான்.” “ஆச்சா?” “நீதான் கோபமா பேசுறியே! ஒரு நிமிஷ கோபம் ஒரு நாளையே பாழாக்கிடும்.. தெரியுமா?” “டேய்… உனக்கு நான்தான் கிடைத்தேனா? சரி அதை விடு. அப்பாவோடு பேசணுன்னு தோன்றதுடா!” “ம் ஹும் நீ சரியில்ல, மாரியாத்தா கோவிலுக்கு போய், மந்திரிச்சி உனக்கு விபூதி பூசனும்!”தடைப்பட்டிருந்த மின்சாரம் வர, மின் விளக்குகள் எரிந்தன. “பாரதி… மணி என்ன ஆவுறது?” “எட்டேகால்” “சரி நான் வறேன்” “எங்கே அதுகுள்ள புறப்பட்டுட்டே?” “எட்டரை மணி சீரியல் பார்க்கணும். இரண்டரை வருஷமா பார்த்துகிட்டுவறேன்! டைரக்டர் பிரமாதப் படுத்துறான்!” “சரிடா.. அதுபோகட்டும், எனக்கு அப்பாவை பார்க்கணும், பேசணும் போலிருக்கு.. என்ன செய்யலாம்?” “ஆஹா பார்த்தா போச்சு… கையோட அப்பாவ எடுத்து வந்திருக்கன்ல! வேறபேச்சுல மறந்தேவிட்டேன்!” “என்னடா உளருற..?” “நான் உளருறேன்கிறது உனக்கு தெரியுது. ஆனா, நீ உளருறது உனக்கு தெரியலபாரு.. அங்கேதான் நீ நிக்கிறே!” சட்டை பட்டனை தளர்த்திவிட்டு, பனியனுக்குள்ளேயிருந்து ஓர் சின்ன ஆல்பத்தை எடுத்து பாரதியிடம் தந்து, “இந்த ஆல்பத்தை கொடுக்கத்தான் வந்தேன். நீ லண்டனுக்கு புறப்படும் போது நான் எடுத்த சினாஃப்! எல்லா படத்திலும் அப்பா இருக்கார்! இதைப் பார்த்தாலாவது நீ கொஞ்சம் ஆருதலாக இருப்பேன்னுதான் எடுத்துவந்தேன்.! வரேன்.. சீரியலுக்கு டைமாச்சு! ராத்திரியில இப்படி வந்து ஒத்தைக்கு நிக்காதே! காத்து கருப்பு அண்டும்.”கார்த்திகா, கண்ணனுக்கு காப்பி கொண்டு வந்து வைத்தாள். “பால்பண்ணையில பிரச்சனை எதுவுமில்லையே கார்த்தி? “இல்லேண்ணா” பெரியப்பா மறைவுக்குப் பிறகு, வழக்கமாதிரி அங்கே போய் வருகிறாய் அல்லவா?” “தினமும் போரேண்ணா. எந்தவொரு சூழ்நிலையிலும் பண்ணையின் நேர பராமறிப்பு தவறவே கூடாதென்கிறது அய்யாவின் உத்தரவு. அய்யா இறந்த தினத்தில் கூட அங்கே போய் இருந்து பணிகளை முடித்துவிட்டுதான் வந்தேன்!” “சும்மாதாமா கேட்டேன், கார்த்தியின் ‘சின்சியர்’ எனக்கு தெரியாதா!” “வரேண்ணா… உள்ளே அம்மாவுக்கு டிஃபன் செய்யனும்.” “பிளஸ் டூ வரை படித்த இந்தப்பெண், அப்பாவின் டிரைனிங்கில் பால் பண்ணையை நிர்வாகிப்பதில் எக்ஸ்பெர்ட்டாகி விட்டாள். பண்ணையின் அத்தனை கணக்கு வழக்குகளும் அவள் விரல் நுனியில்! அவளுடைய நிர்வாக திறமையை பார்த்த அப்பா, கார்த்தியை வீட்டோடு தங்கசொல்லி… அம்மாவை கவனிக்கும் பொறுப்பையும் அவளிடமே தந்துவிட்டார்.” “கார்த்திகாவின் அப்பா.. அம்மாவெல்லாம்?” “அவர்கள் எல்லாம்.. பக்கத்து சேரில இருக்காங்க. அப்பாதான் அவர்களுக்கு கல்வீடு கட்டித் தந்தார். சரி நான்வறேன்” “இருடா..” “டைமாச்சுல””அப்பாவை பார்க்கணும், பேசணுன்னு இருக்குடா…” “நீ என்னா இதையே பாட்டுமாதிரி பாடிகிட்டு இருக்கே! சரி சரி… நாளைக்குப் பார்க்கலாம்!” என கூலாக சொல்லி கிளம்பியவன், நின்று திரும்பி, “அதை… நீ ஏன் கனவுல டிரை பண்ணகூடாது?” என்று மறைந்தான். கண்ணன் அப்படி சொல்லிவிட்டு போனதை கேட்டு, பாரதி புன்முறுவலுக்கு முயன்றான். ம்ஹும். *பாரதி வீட்டிற்குள் வந்தான். அமைதியும் நிசப்தமும் கொண்டிருந்தது வீடு! முன் எப்பவும் கண்டிறாத வீடாகவும் பட்டது. அதன் நிலைகுலைவை எளிதாக அறிய முடிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மரணத்தின் சுவடுகள். மின்விளக்குகள், மின்னழுத்தம் குறைவால் மங்கிய நிலையில் ஏரிய, அம்மா தனி ஆளாக சோபாவில் அமர்ந்திருந்தாள். பார்க்க பாவமாக இருந்தது. இதே வீட்டைத்தான் அப்பா எத்தனை திருத்தமாக வைத்திருந்தார்! பேசிபேசியல்லவா சந்தோசத்தை கொண்டு வந்து சேர்த்தார்! “பாரதி சாப்பிட்டாச்சா?” “சாப்பாடு வேண்டாம்மா…” “ஏன்….” “மனசு சரியில்லை.” “அப்பாவுக்கு விதி முடிஞ்சிபோச்சுப்பா… மவராசன் போய் சேர்ந்திட்டார்… அவரையே நீ நினைச்சுட்டு இருந்தா எப்படி?” “ஏம்மா அப்பாவ கொன்னே?” திக்கென வியர்த்து போன அம்மா சற்றுநேரம் பேசாதிருந்தாள். கண்களில் கண்ணீர் முழுமையாய் வடிந்த பிறகே வெடித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா…? நான் ஏண்டா அவரை கொல்லனும்?” “நேரகாலத்தோட வைத்தியம் பார்த்திருந்தா இப்படி திடுதிப்புன்னு அப்பா இறந்துபோயிருப்பாங்களா?” “நானா மாட்டேன்ன… டாக்டரை பார்க்க அவரு வந்தானே. உடம்புக்கு என்னானுகூட சொல்லமாட்டார். சதா… பாரதி பாடல்களைப் பாடிகிட்டே இருந்தாபோதும் அவருக்கு!” “இது சரியான பதில் இல்லம்மா. அப்பாவின் சுபாவத்தை காரணமாக்கி பதில் சொல்றே. முதல் முறையா மயக்கம் போட்டப்போவே, நீ ‘கம்பல்’பண்ணி எப்படியாவது அப்பாவை ஸ்பெஷலிஸ்டுகளிடம் அழைத்துபோய் காமித்திருக்க வேண்டும். பணம் செலவாகுமுன்னு தயங்கி இருப்பே!” “உங்க அப்பா, நல்ல பண்ணையாருன்னு பெயர் எடுத்து என்ன செய்ய? சொத்தையெல்லாம் அழித்ததுதான் மிச்சம். அப்போல்லாம் நான் குறுக்கேவா நின்னேன்? இப்ப பாக்கின்னு இருப்பது இன்னும் கொஞ்சம்தான். அதையாவது உனக்கு நான் பாதுகாத்து தரவேண்டாமா?” “இதோ பாரும்மா எனக்குன்னு நீ பாதுகாக்கிற சொத்தெல்லாம், அப்பா நல்லாஇருந்து, அவரோட எனக்கு பேச கிடைக்கும் ஒருநிமிஷ சந்தோஷத்திற்கு ஈடாகுமா?” அம்மா தேம்பி தேம்பி அழுதாள். தன்னுடைய பேச்சின் உண்மை அம்மாவை ரொம்பவும் காயபடுத்திவிட்டதாக பாரதி வருந்தினான். அம்மாவை தேற்ற வேண்டியது அவசியமென. அம்மாவின் அருகில் அமர்ந்து, “அம்மா… லண்டன்ல நான் இந்த ஐந்து வருஷமா செய்த ஆய்வை யூனிவர்சிட்டி போர்டுல சமர்ப்பிச்சு இருக்கேன். அதை அவர்கள் தேர்வுக்கு எடுத்துக் கொண்டு, பின் ஒப்புதல் தந்தாங்கனா… பேட்டன் ரைட் வாங்கிடுவேன். எல்லாம் எதிர்பார்த்த மாதிரி நடந்துச்சின்னுவையி…. நம்ம பழைய சொத்து மாதிரி பத்துமடங்கு சொத்தை ஒத்த நாளில வாங்கிடலாம்மா!” “அவரு போய் சேர்ந்துட்டாரு…. புள்ளையாவது புத்தியா இருக்குன்னு பார்த்தா… கடவுளே…. இவனும் அவர மாதிரியே ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசுறானே! அத்தனை சொத்தையும்.. இல்லயில்ல.. பத்து மடங்கு சொத்த ஒத்த நாளில வாங்கிடுவானமுல்ல?” முணங்கியபடிக்கு அவள் தேம்ப, பாரதி எழுந்து நகர்ந்தான். படுக்கைக்கு வந்து சாய்ந்த பாரதி, கண்ணன் தந்த ஆல்பத்தை திறந்தான். ஊர் வந்து இந்த மூன்று நாளைக்குப் பிறகு இப்போதுதான் காற்றின் குளுமையையும், அதன் தழுவலையும் அனுபவித்து உணர்வது மாதிரி இருந்தது. அவன் கண்களில் புதிய ஒளிச்சுடர்! ஒவ்வொரு படமும் அவனை மலரவைத்தது. பெரும்பாலான படங்களில் அவனோடு அவன் அப்பா! கட்டிப்பிடித்து உச்சி முகரும் அப்பா! தோள்மீது கைபோட்டு சினேகம் காட்டும் அப்பா! மனம் விட்டு சிரித்து மகிழும் அப்பா! சொந்தங்களிடம் பாரதியை சுட்டி பெருமை பேசும் அப்பா! என்னோடு பரபரக்க நடைபோடும் அப்பா! என்னை அருகில் வைத்துக்கொண்டு அம்மாவுக்கு சிரிப்பு மூட்டும் அப்பா! பணிவுடன் நிற்கும் சித்தப்பாவிடம் கண்ணனைக்காட்டி வாய்விட்டு சிரிக்கும் அப்பா! கண்ணனை உச்சு முகரச் சொல்லியும், அம்மாவுக்கு முத்தமிட சொல்லியும்… நான் கிளிக் செய்த அப்பா! அன்று நடந்த விருந்து வைபவத்தில் எங்கள் கிராமத்து ஜனங்களோடு சமபந்தி போஜனம் செய்கிற அப்பா! அவர் முன்நின்று தொடங்கிய கூட்டுறவு பால்பண்ணை பசுக்களுடன் அப்பா! அதன் திறப்பு விழாவில் அமையப்பெற்ற கல்வெட்டில், கொட்டை எழுத்தில் தெரியும் ‘சுந்தர மூர்த்தி’ என்கிற தன் பெயர் அருகில் அசையாது நிற்கும் அப்பா! சிரித்த முகத்தோடு கார் கதவை திறந்துவிடும் அப்பா! கடைசி கடைசியாய் எனக்கு விடைதரும் அப்பா! ஆல்பத்தை நெஞ்சின்மீது வைத்தபடிக்கு, கண்களை இருகமூடி, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் நகர்ந்தேன். ‘எம்.டெக். வியூசுவல் மீடியா’ முடித்து, ‘அட்வான்ஸ் ட்திரிடைமன்’ குறித்த ஆய்விற்காக லண்டனில் செல்ல திட்டமிட்ட காலம் அது. “அப்பா… என் படிப்பு சம்பந்தப்பட்ட ஓர் ஆய்விற்காக ஐந்து வருடம் லண்டன் சென்று வர விரும்புகிறேன்!” சற்று நேரம் மௌனம்செய்த அவரின் கண்களில் மொட்டாய் கண்ணீர்! அந்த ஆனந்தத்தை அழுந்த துடைத்துக் கொண்டவராக… “உனக்கு என் வாழ்த்துகள். தடையில்லை கவி…. போய் வா! “அப்பா நீங்கள் யோசித்து சொல்லுங்கள். வேண்டாம் என்றால் தவிர்த்து விடுகிறேன்.” “யோசிப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. ‘இச் ஜகம் மேன்மையுற… மேலை கல்வி அத்தனையும் கொண்டு வந்து சேர்’ யென என் பாரதி சொன்னான். நீ முனைகிறாய். பெருமையாகத்தான் இருக்கிறது போய் வா!” “பணம் அதிகம் தேவைப்படுமே…!” “கவலையை விடு! நீ புறப்படு வதற்கான ஆயத்தப் பணிகளை பார்!” “பணத்திற்காக சொத்தை கொஞ்சம் விற்க நேருமானால்…. அம்மா சம்மதிப்பாளா?” “சம்மதிப்பதாவது, ஆர்ப்பாட்டமே செய்வாள்! அதுவாவது பரவாயில்லை, படிக்கவே வேண்டாம் என்றுவிடுவாள். சாகும்வரை சொத்தோடான பண்ணையார் மனைவி என்கிற அந்தஸ்த்து அவளுக்கு வேண்டும்! போகட்டும், இபோதைக்கு எதையும் விற்கணும் என்கிற அவசியம் இருக்காது. உன் படிப்பிற்காக டெபாஸிட்டில் நான் போட்டு வைத்திருக்கும் என் சம்பாத்தியமே போதும். கவலை வேண்டாம் கவி.” அன்று இரவு சாப்பாடு முடிந்து, நான் ரூமில் படித்துக்கொண்டிருக்கும் தருணம் அப்பா என்னைப் பார்க்க வந்தார். சாதாரணமாக இப்படி வருகிறவரல்! . “அப்பா” என்றபடிக்கு நான் எழுந்து நிற்க, “உட்கார் கவி, உன்னோடு கொஞ்சம் பேசனும்.” “கூப்பிட்டிருந்தால் நான் வந்திருப்பேனே?” “அதனால் என்ன பரவாயில்லை. சொல்கிறதை கேட்கும் மனநிலையில் இருக்கிறாய்தானே” “ம்…சொல்லுங்கள்” “அம்மா… சொத்து விவகாரத்தில் கடுபிடியாய் இருப்பதை நீ கவனித்து வருகிறாய் என நினைக்கிறேன். சமீபகாலமாகத்தான் இந்த கெடுபிடி! இப்பவும் லட்சரூபாய் என்றாலும் தருவாளேதவிர, கால் காணியைவிற்க சம்மதிக்க மாட்டாள்! என்னுடைய நடவடிக்கைகளை அவள் வித்தியாசமாக கணிக்கத் துவங்கியப் பிறகுதான் இப்படி எல்லாம்! அவளது சுற்றங்கள் இப்போது அவளை பாராட்டுகிறது! நமது சமூகமும் கட்டிக்காப்பவளைதான் ‘பெண்’ என்கிறது ! உன் அம்மாவும் இந்த சமூகத்தின் ஓர் அங்கமல்லவா! “ரொம்ப சரி….””நமது வம்சத்தின் மூத்தகுடிக்கு இருபத்தி மூணு கிராமங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த வட்டாரத்திலிருந்த பெரிய பண்ணைகளில் இதுவும் ஒண்றென்கிறார்கள். இந்தப் ‘பணக்காரப்பட்டு’ பெரிய பண்ணை ஒரு காலத்தில் ஓஹோவென்றுதான் இருந்திருக்கிறது. சுத்துபட்டு ஊர்களில் உள்ள கோவில்களில் நாள் தவறாமல் விளக்குஏற்றவும், தடையின்றி பூஜைகள் நடைபெறவும் அன்றைக்கு ஆண்ட நவாப், இத்தனை கிராமங்களையும் தானமாகதந்து பராமறிக்கச் சொல்ல, காலத்தில் அவைகள் நம்குடும்பத்தின் சொந்தசொத்துக்களாக மாறிபோனது. இப்படி அவைகளை உடமை கொண்டியதில் நம் மூதாதையர்களின் கைவரிசை விசேசமானது! வெள்ளைக்காரனுக்கு கைகூலியாக, வேவுபார்ப்பவர்களாக, அவர்களின் படைக்கு ஆள் திரட்டிக் கொடுப்பவர்களாக ஓடிதிரிந்து, பணிந்து, தாழ கும்பிட்டும்… பொற்ற சாதகம் அது! ஆனால், காலம் அவர்களை சரியாகவே தண்டித்து விட்டது. மாற்றான் மனைவி என்கிற அச்சமே இல்லாத அவர்களை, அது பெரும்சரிவுகளில் உருட்டியதும் சரிதான். தங்களை அண்டிவாழ்ந்த ஏழைமக்களை குறித்து ஒரு நாளும் சிந்திக்காதவர்கள். அந்த மக்கள் கைகட்டி நிற்கிறார்களா என்பது மட்டும்தான் இவர்களுக்கு முக்கியம்! நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, சமூக மாற்றம் பெருமளவில் நிகழ்ந்த போது, கைக்கட்டி நின்ற மக்களின் கைகள் ஓங்கியது. அவர்களில் எவர் ஒருவரும் உண்மையில் இவர்களை சீண்டவில்லை. அந்த மக்களுக்கு எல்லாமும் அரசாங்கம் என்றாகிப் போனதில், இவர்கள் இரண்டாம்… மூன்றாம் பட்சமாகிப் போனார்கள். நம்மவர்களை தடையின்றி வரவேற்ற சூடாட்டக் களமும், வேசி வீடுகளும், இவர்களுக்கு பகல் இரவென்றாகிப் போக… எனக்கும், என் தம்பிக்கும் கடைசியில் மீந்ததென்னவோ இந்தக் கிராமம் மட்டும்தான். என் தம்பியும் கூட சினிமா தயாரிப்பென்று இறங்கி, விழுந்து காயப்பட்டப் பிறகே எழுந்து வந்தான். நம் மூதாதையர்களில் யாரோ செய்த பாக்கியத்தினால்… நான், பாரதியின் எழுத்துகளை கெட்டியாக வரித்துக் கொண்டேன். பாரதி என்னை காபந்து செய்துவிட்டான்!” “நானே உங்களிடம் கேட்க நினைத்த செய்திகள்தான் இவை.””காக்கை குருவிகள் எங்கள் ஜாதி! என்று பாரதி சாதாரணமாக சொல்லிப்போன செய்தியை, வாசித்தநாளில் அது எனக்கு ரொம்பவும் புதுசு! நம் வம்சம், தன் முழு ஆளுமை ஆண்டுகளில் யாருக்கும் சொல்லித்தராத செய்தி இது! அதை நான் கைகொண்ட போது, எல்லா மக்களும் என் மக்களாகிப் போனார்கள். நம் கிராமத்து மக்களின் சந்தோசமும், துக்கமும் எனதென்றாகிப் போனது. என்னால் அவர்கள், தங்களின் வாழ்வில் இன்னொரு கதவை திறந்தார்கள் என்றாலும், மூலம் பாரதிதான்! நம் கிராமத்து ஏழைப் பிள்ளைகள் கல்வி பெற நான் கட்டித்தந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்காகவும், அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்காக நான் முன் நின்று தொடங்கிய கூட்டுறவுப் பால்பண்ணைக்காகவும், நாம் சொத்தை நான் கொஞ்சம் விற்கவேண்டி வந்தது. உன்அம்மா மிரண்டுபோன புள்ளி இதுதான். பாக்கி சொத்தையும் அழித்துவிடுவேனோ என்கிற பயம் இன்றைக்கும் அவளுக்கு உண்டு. ஆனால், கூட்டுறவு பால் பண்ணை வழியே என் பங்கிற்கு கிட்டும் லாபம் சொல்லும்படியானது. அதை அவள் அறியமாட்டாள்!” “அப்பா, இத்தனைக்குப் பிறகும் அம்மா மீதான உங்களின் அன்பு அபரிமிதமானது! உங்களை நீங்கள் வடிவமைத்துக் கொண்ட விதத்தில், நம் பரம்பரையின் களங்கத்தையே துடைத்து விட்டீர்கள்!” “சந்தோஷம். இங்கே நான் சொல்ல வந்த செய்தியே வேறு.” “தெரியும். இந்த கிராம மக்களுக்காக நீங்கள் தொடங்கிய நற்பணிகளும், அவர்கள் மீதான உங்களது அழுத் தமான நேசமும், என் காலத்திலும் தொடரும்!” “ஆமாம் கவி! அதேதான்!” “சத்தியம் அப்பா… கலைவேண்டாம்.” “பாரதி உனக்கு துணையிப்பான்.” என் ‘செல்’ சினுங்க, அப்பா விடை பெற்றார். எதிர் பார்த்தமாதிரியே லண்டனிலிருந்து ஆரிஃபாதான்! “பகலில் நீ அழைத்தபோது சரியாகவே பேசமுடியவில்லை. லையன் கிளியர் இல்லை” “ஆமாம் இங்கே விடாது மழை, மின்னல்!” “உன் பகல்பேச்சில் இருந்து யூகித்தவகையில், அங்கே போய் ஒரு வாரமாகியும் இன்னும் நீ தெளிவாகவில்லை. கடைசிதருணத்தில் உன் அப்பாவின் முகத்தை காணமுடியாது போனதில் ஏக்கம் உன்னை விடாது அலைக்கழிக்கிறது. ரைட்…””ரைட்” “ஓ.கே. அடுத்த வாரம் அங்கே இருக்க டிக்கட் கன்ஃபாம் பண்ணிட்டேன். நான் வந்த பிற்கு நீ உன் அப்பாவைப் பார்க்கலாம்!” “ஆரிஃபா… யூ ஆர் ஜோக்கிங்?” “கவி… நீ என்ன படிச்சிருக்க, நான் என்ன படிச்சிருக்கேன் என்பதெல்லாம் கூட உனக்கு தோணமாட்டேன்கிறது! ஓ.கே. நான் வரேன். உங்க அப்பாவ நாம பார்க்கிறோம்! பை த பை… யுனிவர் சிட்டி போர்டில் நாம் சப்மிட் செய்த ஆய்வை, செலக்சன்கமிட்டி தேர்வுசெய்திருக்கு. இன்னெக்கி ஈவ்னிங் அங்கே போயிருந்தபோது சொன்னார்கள். மெயிலை திறந்து பார்.” “ரியலி…!” “எஸ்..” “டெங்ஸ் ஆரிஃபா… அப்பாவ பார்க்கலாம்னியே… எப்படி..?” “ஐ ஆம் பிஸி… ஊருக்கு போவணும்! பாரதி, அவுங்க அப்பாவையெல்லாம் பார்க்கணும். ஸாரிப்பா” என்று போனை கட் செய்தாள். பாரதி சிரித்தான். அவன் ஊர்வந்து சிரித்த முதல் சிரிப்பு அது. சிரிப்பினூடே.. அப்பாவை பார்க்க.. அவள் என்ன பிளான் செய்திருக்கிறாள் என்பது பிடிபட, மீண்டும் சிரித்தான். இரவு தூங்கப் போகும் முன், ‘லப் டாபை’ திறந்தான். முதல் பக்கமாக அவனது அப்பாவும், தந்தை பெரியாரும் அவனை ஆழமாகப் பார்த்தார்கள். நெட்டை உயிர்ப்பித்து மெயிலை திறந்தான். ஆரிஃபா சொன்ன தகவல்மெயில் வந்திருந்தது. சந்தோஷம் பிடிக்கொள்ளவில்லை. அப்பாவின் போட்டோக்களை மீண்டும் ஒருமுறை சவகாசமாகப் பார்த்தான். “வாட் எ லவ்லி ஃபாதர்!” அவன் உதடுகள் முனுமுனுத்தன. போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு இமைகளை இருக மூடினான். தூக்கம் தழுவியது.”நில்” காவலாளி தடுத்தான். அவனது வித்தியாசமான உடையலங்காரம் பாரதிக்கு உறுத்தவில்லை. “என் அப்பாவைப் பார்க்கனும்” “முதலில்… நீ இங்கே எப்படி வந்தாய் சொல்?””அது எனக்குத் தெரியாது. என் உள்ளுணர்வுகள் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” “உள்ளுணர்வென்றால்….?” “உள்ளுணர்வு!” “சரி, இது எந்த இடமென்றாவது தெரியுமா?” “தெரியாது, எந்த இடம்?” “சொர்க்கம்!” “ஓ..!! இருந்து விட்டு போகட்டும். இங்கே, எங்கே இருக்கிறார் என் அப்பா?” “தேவ தூதுவர்கள் எல்லாம் வரும்நேரம்! உள்ளே யாரையும் பார்க்க முடியாது, சீக்கிரம் கிளம்பு.” “அதோ ஒருத்தர் வருகிறார். அவரை விசாரித்துவிட்டு போகிறேன்” “சரியான ஆள்தான் வருகிறார். அவர்தான் இங்கேயுள்ள இந்தியர்களுக்கு பொறுப்பாளி. விசாரித்துவிட்டு கிளம்பு சீக்கிரம்” வாலிபமான அந்த மனிதரைப் பார்க்க, ஏதோ ஒருவகையில் அவர் பரிச்சியம் உள்ளவர்போல் தெரிந்தது. “வணக்கம்… நீங்கள்..?” “வணக்கம்.. நான்.. கரம்சந் காந்தி!” “யார்.. எங்கள் மகாத்மாவா? இத்தனை இளமையாக இருக்கின்றீர்கள்? வெள்ளையனின் நிறவெறியை எதிர்த்து தென்னாப்ரிக்காவில் போராடிய போதான புகைப்படங்களை நான் நெட்டில் பார்த்திருக்கிறேன்! அதே… இளமையோடல்லவா இருக்கின்றீர்கள்!”காவலாளி குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இளமையாகத்தான் இருப்பார்கள்! அதுமட்டுமல்ல, ஊரில் அவர்களுக்கான பெயர் ஒன்றைத் தவிர… பட்டம், பதவி, சொந்தம், பந்தம், எதுவும் அவர்களின் ஞாபதிற்கு வராது. சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கு பழைய ஞாபகத்திலான வேதனைகள் இங்கே அண்டக்கூடாதென்ற நல்லெண்ணத்தின் பொருட்டு மேலிடத்து ஏற்பாடு இது!” “நிஜமாவா… கூத்தால இருக்கு!” சிரிப்பு வந்தது அவனுக்கு. “உனக்காக கரம்சந் காந்தி காத்திருக்காருபாரு, சீக்கிரம் கேட்டுட்டு கிளம்பு. அவர்வேற ஏற்கனவே சோர்ந்து இருக்கார்!” “ஆமாம். பார்க்க அப்படிதான் இருக்கார்! ஏன்?” “சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் சுதந்திரம் வேண்டி, எட்டாயிரத்து முன்னூறாவது தடவையாய், நேற்றும் அடையாள உண்ணாவிரம் இருந்தார்! அதனால்தான் அவருக்கு இந்தச் சோர்வு” “இது மட்டும் எப்படி? அவர், நாட்டில் செய்த மாதிரியான செயல்பாடல்லவா இது!” “இது, அவரையும் அறியாமலேயே நடந்தேறுவது! அனிச்சை செயல்! பூர்வீகப் பழக்கம்! இவராவது சுதந்திரத்திற்கான உண்ணாவிரதத்தோடு நிறுத்திக் கொள்கிறார். தமிழ்காரர் ஒருவர். பெயர்… ஈ.வே.ராமசாமியாம்! இங்கே, எல்லோரையும் கூட்டிவைத்து சொர்க்கமில்லை, நரகமில்லை எல்லாம் மாயைன்னு தினைக்கும் பிரச்சாரம் செய்கிறார் தெரியுமா?” “நீ நகரு, அவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்!” குறுக்கே நின்று பேசிக்கொண்டிருந்த காவலாளியை நகர்த்தி விட்டுவிட்டு, காந்தியை பார்த்து, “கரம்சந் காந்தி அவர்களே… எங்க அப்பா இங்கே இருப்பதாக தேடிவந்திருக்கிறேன். விசாரித்து அழைத்து வர இயலுமா?” “அப்பா….?” “உறவுகள் இங்கே யாருக்கும் விளங்காது என்பதை நான் மறந்து விட்டேன். பெயர் சுந்தர மூர்த்தி. மொழியால் தமிழ்காரர்…. தேடி அழைத்து வர இயலுமா?””இந்த சொர்க்கத்தில் இந்தியர்கள் என்று அதிகம் இல்லை! அதில் தமிழ்காரர்கள் மிகவும் குறைவு! உன் போதாதநேரம்… இத்தனை குறைவானவர்களில் சுந்தர மூர்த்தி என்கிற பெயர் கொண்ட தமிழர்கள் மூன்று பேர்கள் இருக்கிறார்கள்! வேறு ஏதேனும் தெளிவு சொல்” “இங்கே, உங்களை மாதிரியே சுப்ரமணியபாரதி என்றொரு பிரபலம் இருப்பார். அவரோடு யாரேனும் ஒருவர் தொடந்து உடன் இருக்கும்பட்சம், அவர்தான் நான் தேடும் சுந்தர மூர்த்தி” “சுப்ரமணிய பாரதி என்கிற பெயரில் இங்கே யாரும் இல்லையே…!” “இல்லையா…!” “ஆமாம் இல்லை. ஆனால், அந்தப்பெயரை ஜபித்தப்படிக்கும், ‘சொல்லடி சிவ சக்தி’ என்று பாடியபடிக்கும் ஒருதமிழர் இருக்கிறார்! அவர் பெயர் கூட சுந்தர மூர்த்திதான்!” “ஆமாம் அவரேதான்!” என அவன் உறுதி செய்த நாழிக்கு, அழைத்து வருவதாக மஹாத்மா உள்ளேபோனர். பாரதி சொர்க்கத்தில் இல்லையென்ற செய்தி அவனுக்கு வியப்பாகவே இருந்தது,சற்றைய நேரத்திற்கெல்லாம் ஒரு வாலிபன்… ‘சொல்லடி சிவ சக்தி’ பாடியப்படியே வந்தான். அந்த வாலிபனை கண்ட பாரதிக்கு வியப்பு! தானே, அந்தப் பக்கமிருந்து வருவதாகப் பட்டது. அச்சு அசல் ‘நானேதான்’ என்றது அவன் மனம்! அப்பாவென்றும் கதறத் தோன்றியது. ஆனாலும் கதறவில்லை! அவன் மனதில் பதிந்திருக்கிற அப்பா இல்லை அவர்! முகம் சுண்ட இறுக்கமாகிப் போனான்! “யார் என்னை பார்க்கணும் என்றது? உங்களுக்கு தெரியுமா?” என்று பாரதியை கேட்டார் அவர். பாரதி மௌனமாக நின்றான். என்னை தெரியவில்லையா அப்பா…. நான்தான் உங்க கவிபான்னு அவன் மனம் கதறியது.பழரச கோப்பையை ஏந்தியபடிக்கு பதினாரு செழுமையுடன் மாது ஒருவள் உள்ளிருந்து வந்தாள். “நான் உங்களை எங்கே எல்லாம் தேடுவது! இங்கே என்ன செய்கின்றீர்கள், சுந்தர்? பல்லாங்குழி ஆட்டியது பாதியில நிற்பதை மறந்திட்டிங்களா? வாங்கப்போவோம்…! என்று அணைத்தப்படிக்கு உள்ளே அழைக்க, அவர் சொல்லடி சிவ சக்தி பாடிக்கொண்டு அவளுடன் சென்றார். “அவள் கையில் என்னய்யா அது? பழரச கோப்பையா?” “பழரசமா? அது சோமபானம்! ரண்டு பெக்கிலேயே தூக்கிடும்! பூவுலகத்திற்கே போயிடுவ! அது போகட்டும், அவ எப்படி அரவணைப்புதரா பாத்தியா? இந்த தேவகன்னிகளே இப்படிதான்! ஒரு நிமிஷம்கூட மனுஷன்களை விடமாட்டாளுங்க! பல்லாங்குழி ஆடளாம், சோளி உருட்டலான்னு… கிளம்பிடுவாளுங்க!” என்று காவலாளி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாது, தூரத்தே அவளுடன் சல்லாபித்தபடி மெல்ல நடைப் போட்ட அப்பாவை கண்டவனாய், “அப்பா… நில்லுங்கப்பா.. நில்லுங்க… நான் கவி வந்திருக்கேப்பா…” வென வாய்விட்டு அறற்ற, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தான் பாரதி.மறு நாள் மாலை கண்ணன் வந்தான். மணி ஐந்து! “பாரதி சீக்கிரம் கிளம்பு, பக்கத்திலுள்ள ‘கீழ மாசிலாம்பேட்டை’க்கு போகனும்” “ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்குமேடா! எதில போறோம்? எதுக்குப் போறோம்?” “என் மொபேட்ல போறோம். ஏழு மணிக்கு, அங்கே ஆவியோடு பேசவைக்கிற சாமியாரம்மா ஒண்ணு அங்கே இருக்காம்! நம்ம போறோம்… அப்பாவோடு பேசுறோம்!” “யார்ரா… உனக்கு இதெல்லாம் சொல்றா?” “எங்க காலேஜ் பையாலஜி டிப்பாட்மெண்ட் புரஃபஸர் ஒருத்தர்தான் சொன்னார். எத்தனை நம்பிக்கையா சொன்னார் தெரியுமா! ஒரு விபத்துல அவரது மாமனார் இறந்துட்டாறாம், அந்த சாமியாரம்மா கிட்ட குடும்பத்தோடுபோயி, எல்லாவற்றையும் சொல்லி, மாமனார் ஆவியோடுபேசி, மனைவிக்கு சேரவேண்டிய சொத்து பூராவையும் விபரமா கேட்டு, அதன்படிக்கு மாமியார்கிட்டே எழுதி வாங்கினாராம்! இப்ப சொல்லு… நம்புறல்ல?””போடா மடையா… மடத்தனமா பேசுறதுக்கும் ஓர் எல்லை இருக்கு” “பெரியாரை படிக்காதேன்னா கேட்டாதானே! எப்படி ஒரு வாய்ப்பு! உதாசினம் பண்ணுறியே!” “கண்ணா… கொஞ்சம் பொறு… நாம அப்பாவ பாக்கலாம்! அவரோடு பேசவும் பேசலாம்!” “இதுமட்டும் எப்படி..? ஏதாவது குட்டிச் சாத்தான் வேலை தெரிஞ்சவங்க இப்படி சொன்னாங்களா?” “என் கூட ஆய்வு செய்கிற ஆரிஃபா, இங்கே வரா… அவ வந்ததும், நாம அப்பாவ பார்க்க முடியும்! பேசவு முடியும்!” “அடிக்கடி சொல்லுவியே… பாய்வீட்டு பொண்ணுன்னு! பூர்வீகம் நாகூர் பக்கமுன்னு! அதுக்கு எப்படி இந்த லாமா வேலையெல்லாம்!” “உளறாதே….” “உளறாதேன்னா சொல்றே.. அதுக்குதானே சம்பளமே தரான். அது என்ன உன் லவ்வா..? சொல்லமாட் டேங்கிறியே?” “லவ்வா! அதுக்கும் மேலே” “கல்யாணமே பண்ணிக்கிட்டியா?” “மறுபடியும் உளறுரே…. ஃபிரண்டுடா!” “முதலிலேயே அப்படி சொல்றதுக்கென்ன?” ராத்திரி கண்ட கனவு குறித்து பாரதி, கண்ணனிடம் சொல்ல நினைத்தும்… சொல்லவில்லை. சொன்னால்… அவனிடமிருந்து கிண்டலும் கேள்விகளும் மட்டுமே வெடிக்கும். தாங்காது.”சரி பாரதி, நான் வறேன்” “ஏன் கண்ணா இத்தனை சீக்கிரம் கிளம்பிட்டே… சீரியலா?” “பின்னே…, ராஜ் டி.வி.யில இன்னைக்கி ஆறு மணிக்கு ‘கட்டாங்குடி ஆத்தா’ன்னு ஒரு புது சீரியல் தொடங்குது. அத பார்க்க போறேன். விளம்பரத்த பார்க்கவே பயம் தாங்கல!” “ம்….” கண்ணன் புறப்பட்டு போனபின், பாரதி எழுந்து போய் கம்யூட்டர் முன் உட்கார்ந்தான். நெட்டை திறந்து, ஆரிஃபாவுடன் சார்டிங் செய்ய ஆர்வமானான். “யூ ஆர் ஆல்ரைட்?” என்று தொடங்கியது எதிர் முனை. ஆரிஃபா சொன்ன தேதியில் சென்னை வந்து இறங்கினாள். இறங்கிய உடன், என்னை டெலிபோனில் அழைத்து தகவலும் சொன்னாள். நேரே தனது தந்தையின் கிராமத்திற்கு போய் அவளது பாட்டியை பார்த்துவிட்டு, இங்கே மறுநாள் வந்தாள். அவளது பெற்றோர்கள், லண்டனில் சொந்தவீடு, தொழில் என்று தங்கிவிட, தந்தை வழி பாட்டி மட்டும் அங்கே வர மறுத்து, உறவினர்களின் பராமரிப்பில் இங்கேயே காலம் தள்ளுகிறார். தன் கணவன் வாழ்ந்து, கண் மூடிய வீட்டில் தானும் அதை நிகழ்த்த காட்டவேண்டும் என்பது அந்தப்பாட்டி யின் அவா! வீட்டுக்கு வந்த ஆரிஃபாவுக்கு அம்மாவின் வரவேற்ப்பும்,உபசரனைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் கார்த்திகா ஓடியாடி அவளை தாங்கிக் கொண்டிருந்தாள். கண்ணன் காலேஜுக்கு லீவு போட்டுவிட்டு வந்து ஒரேடியாக சலசலப்பு செய்துக் கொண்டிருந்தான். கிராமத்து பெண்கள் திட்டுதிட்டாய் வந்து, ஆஃரிபாவின் அழகை மெச்சிக் கொண்டிருந்தார்கள். அம்மா என்னை தனியே அழைத்து, “என் கண்ணே பட்டுடும்போலிருக்குடா… எத்தனை லட்சணமா இருக்கா! இருந்து என்ன செய்ய.. பாய் வீட்டுப்பொண்ணா போயிட்டாளே!” என்றாள். இத்தனை களோபரத்திற்கும் இடையே, ‘சார்ட்டிங்கில் சொன்னப்படிக்கு எல்லாவற்றையும் செய்து முடித்தாயா?’ என பார்வையாலேயே என்னை கேட்டுக் கொண்டிருந்தாள். கார்த்திகா, அவளை கூட்டுறவு பால்பண்ணைக்கு அழைக்க… அம்மா, கோவிலுக்கு கூப்பிட… கொஞ்சம் தூரத்திலுள்ள ஓர் தர்காவில் வயதான பாய் ஒருவர் மந்திரித்து நூல் கட்டுகிறார். ரொம்ப விசேசமானது, நினைத்தது நடக்கும் என்று கண்ணன் நெகிழ்ந்து சொல்ல, சின்ன செடியூல் போட்டுக் கொண்டு மூன்றுக்கும் போய்விட்டு வருவதாக கூறி சென்றாள்.ஆரிஃபாவுடன் சாட்டிங் செய்தபோது அவள் சொன்னப்படியே சிலவற்றை முன்கூட்டியே செய்து வைத்திருந்தேன். மாடியில், 20க்கு 25 அடி அளவுடைய பெரியரூமை தேர்வு செய்து, அதை வெளிச்சம் புகா ‘பிளாக் ரூமாக’ மாற்றி, மின்சார வசதிகளை சரி பார்த்து, புதிதாக ஏ.சி. அமைத்து முடித்திருந்தேன். இன்றைக்கு அவள் ஏழெட்டு பெட்டிகளில் கொண்டு வந்திருந்தவைகளை பிரித்தெடுத்து, ரூமின் இடது மூளையில் 15அடி அகலமும் 12அடி உயரமும் கொண்ட ‘அட்வான்ஸ் ஸ்பெஷல் திரிடி ஸ்கிரினை’ பகுதிபகுதியா கோர்த்து செங்குத்தாய் கோளவடிவத்தில் நிறுத்தினேன். இன்னொரு அட்டைப் பெட்டியில் இருந்த சின்னச் சின்ன சென்ஸர் கருவிகளையும் சிறிய மைக்குகளையும் ரூமின் சில இடங்களிலும், வாயில் மற்றும் மாடி வராண்டா பகுதிகளிலும் மறைவாகப் பதித்தேன். டிஜிடல் ஸ்பீக்கர்களை பதிக்க, ஸ்கீனில் இருந்து வலம் இடம் துள்ளியமாய் அளந்து அதை திரையிட்டு மறைத்து வைத்தேன். எல்லாவற்றின் கேபில்கனையும் சுவர் ஓர மறைவுகளின் பக்கமாகவே எடுத்துச் சென்று, உயர் அழுத்தம் கொண்டதும், அட்வான்ஸ் திரிடிக்காகவே வடிவமைக்கப்பட்டதுமான கம்யூட்டரின் இணைப்புகளில் புனைத்தேன். முன்னதாக கம்யூட்டர் கவரை திறந்து, ஆரிஃபாவிடம் நான் குறிப்பிட்ட ‘ATDS000111-IC ஜாக்கெட்’ கோர்க்கப்பட்டிருக்கிறதாவென கவனித்தேன். எல்லாம் சரியாக, திருப்தியாக இருந்தது. இந்த ‘அட்வான்ஸ் திரிடி டிஜிட்டல் சோ 000111′ என்கிற IC ஜாக்கெட் பேகேஜ் என் ஆய்வின் கண்டுபிடிப்பு! என் ஆய்வு கூடத்திலிருந்துதான் அதை எடுத்து இணைத்து வந்திருந்தாள். பேக் புரஜக்ஸனாக, மைக்ரோ புரஜெக்டரை திரிடி திரையின் பின்புறமாக உயரத்தில் பதித்து அதையும் கம்யூட்டரோடு புனைத்தால்… கிட்டத்தட்ட என் பணி முடிந்த மாதிரிதான். கடந்த மூன்று நாளாய், நான் கலெக்ட் செய்த அம்மா, அப்பா, கண்ணன், கார்த்திகா தொடங்கி உறவுகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களின் புகைப்படங்களை எல்லாம் ஸ்கேன் செய்து, அவர்களை பற்றிய நடை, உடை, பாவனைகள் என்று எல்லா தகவலையும் அதனோடு சேர்த்து கம்யூட்டரில் சேமித்து, வைத்திருக்கிறேன். அதனை ப்ரோகிராமில் ஏற்றி கம்யூட்டரில் அது இயங்கும்போது, கேமிராவின் வழியே இந்த ரூமுக்கு வரும் அவர்களை சட்டென கண்டுக் கொள்ளும். சென்ற வருடம் ஓர் பாரதி விழாவில் அப்பா பேசிய ஆடியோ கிடைக்க… அதனையும் கம்யூட்டர் பைலில் போட்டு இருக்கிறேன். ஏத்த இறக்க தொனியோடு அப்பாவின் குரலை பிசகாது தர, இந்த ஆடியோ பதிவு உதவும்! இனி ஆரிஃபாவின் வேலைதான் பாக்கி. சேமித்து வைத்திருப்பவைகளைக் கொண்டு திரி டைமனுக்கு ஏற்ப புரோகிராம் எழுதி அந்த ஸாப்ட்வேரை கம்யூர்டரில் ஃபீட் செய்தால் போதும். அப்பாவை பார்வைக்கு கொண்டுவந்து பேசவும்விடலாம்.! இந்த ரூமின் பின்னணியோடு அப்பாவுக்கு புரோகிராம் செய்ய இருப்பதால், இந்த ரூமில் அவர் இருந்து பேசுவது மாதிரியே இருக்கும்! ஸ்கிரீனின் இந்த முனைக்கும் அந்த முனைக்குமாக அவர் உலாத்தவும் உலாத்துவார்! ஸ்கீனைவிட்டு மூன்றடி அளவில் வெளியே வரவும் வரலாம்! கொஞ்ச தூரத்தில் சோர் போட்டு, உட்கார்ந்திருக்கும் அப்பாவுடன், கொஞ்சம் தள்ளி நாமும் இருக்கையில் அமர்ந்து அளவளாவலாம்! கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் செய்த ஆய்வே இதுதான். இதற்கு புரோகிராம் எழுதுவது அத்தனை எளிதல்ல. ஆனாலும் ஆரிஃபா இதை வெற்றிகரமாக சாதிப்பாள். நம்பிக்கையுண்டு. அவள் குறித்த என் நம்பிக்கையைவிட, இதில் அவளது நம்பிக்கை இன்னும் அதிகம். லண்டனில் என்னோடு அவள் ஆய்வு செய்ததும் இதற்காகத்தான்! நாட்கள் எடுத்துக் கொள்ளும் பணி இது. ஆனாலும், ஒரு வாரத்திற்குள் முன்னோட்டம் பார்க்கிற அளவில் எழுதி முடிப்பாள். நிஜத்தில் எல்லோரும் மெச்சும் அவளது அழகை விட, இந்தத் துறைசார்ந்த திறமைதான் அவளின் பேரழகு!முடிக்கிவிட்ட மிஷின் மாதிரி கம்யூட்டர் முன் அமர்ந்து தட்டச்சில் படபடத்தாள்! மணி இரவு இரண்டானபோதும், அவளுக்கு சோர்வே இல்லை! அவ்வப்போது என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். ஏலக்காய், இஞ்சி கலந்த டீ அவளுக்கு பிடிக்கும் என்பதை அறிந்துக்கொண்டு, கார்த்திகா தன் தூக்கத்தையும் பாராட்டாமல் அவ்வப்போது சூடாய் போட்டு வந்து கொடுத்தாள். டீக்குப் பிறகு சிலநேரங்களில் அவள் சிகிரெட் பிடிப்பதை கார்த்திகா வியப்புடன் நோக்கினாள்! “என் கூட லண்டனுக்கு வந்துடுறிய்யா?” ஆரிஃபா கேட்க கார்த்திகா சிரித்தாள். “நீ அங்கே இருந்து, இப்படி திக்காயிருந்தா இன்னேரம் உன்னை கல்யாணம் கட்டிக் கொண்டிருப்பேன்!” என்கவும், கார்த்திகா குனிந்தபடி அநியாயத்திற்கு சிரித்தாள். நானும் சிரித்தேன். சிரித்துக் கொண்டிருந்த என்னைக் காட்டி “இந்த ஆள பிடிச்சிருக்கா?” என்கவும், “சும்மா இருக்கா” என்றுவிட்டு கார்த்திகா ரூமைவிட்டு ஓடிவிட்டாள். மனம் விட்டு சிரித்தப்படிக்கு ஆரிஃபா மீண்டும் தட்டச்சில் முழுகினாள். “லண்டன் குறும்பை இங்கேயும் ஆரம்பிச்சிட்டே” என்றேன். “ஆமால.. ரொம்ப குளிரா இருக்கு பாரதி,… ஓட்கா கிடைக்குமா?” “யேய்… நீ சும்மா இருக்க மாட்டே…” என்றேன். அம்மா என்னை அழைக்கும் குரல் கேட்டது. “இன்னும் அந்தப் பொண்ணு தூங்கலையாடா? அது தூங்கலைன்னா… நீ வெளியே வந்து உட்காருவதற்கென்ன? நடு ராத்திரியில, வயசு வந்த நீங்க ரண்டு பேரும் ஒரே அறையில இருந்தீங்க என்பதை யாராவது கேள்விப்பட்டா அப்புறம் இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்?” “அம்மா அவ என் ஃபிரண்டுமா! லண்டன்ல அவ வீட்லதான் நான் இந்த ஐந்து வருஷமா குடியிருந்தேன். இப்படி எவ்வளவோ ராத்திரி ஒண்ணா இருந்து ஆய்வு எழுதியிருக்கோம்! அவளுக்கு அங்கேயே சொந்தத்துல பையன்லாம் பார்த்து நிச்சயம் பண்ணியாச்சு! உன்கிட்டே அவ அதல்லாம் சொல்லலியா?” “இல்லையே! எதாயிருந்தாலும் காலையில பார்த்துக்கலாமுன்னு அந்தப் புள்ளை கிட்டே சொல்லி தூக்க அனுப்புப்பா” சரிம்மா என்பதற்கு முன்னால், “என்கிட்டேயே இருந்து, விடாமே வேலை பாருன்னு பாரதி தாம்மா… என்னைத் தூங்கவிடல” என்று என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே… அம்மாவிடம் நெருக்கத்தில் போய் சொல்லி, அம்மாவின் அருகிலேயே,அணைத்துக் கொண்டபடிக்கு படுத்து கொண்டாள். “என் தங்கமே கிட்டே வாடின்னு’ அம்மாவும் அவளை அணைத்து கொண்டு “எனக்குத்தான் கொடுப்பினையில்லாமே போச்சு” என்றாள். “அப்படின்னா?” என்றாள் ஆரிஃபா. “உன்ன மாதிரி அரவணைப்பா கவனிச்சுக்க, எனக்கோர் பெண் புள்ள இல்லாம போச்சே!” என்று அம்மா ஏக்க பெருமூச்சு விட்டாள்.ஆரிஃபா இங்கே வந்த இந்த பத்து நாளில், ரெண்டுதரம் அவள் பாட்டியை போய் பார்த்துவிட்டு வந்தாள். இந்த கிராமமும் பால்பண்ணையும் அவளுக்கு அத்துப்படியாகிவிட்டது. கார்த்திகாவும், கண்ணனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிப் போனார்கள். அம்மாவோ, இவளுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் அளவில் இன்னும் நெருக்கமாகிப் போனாள்! அதே மாதிரி அம்மாவை இவள் கொஞ்சுவதென்பதும் தாங்க முடியவில்லை. முத்தத்தாலேயே அம்மாவிடம் பேசுபவளாகிப் போனாள். லண்டனிலிருந்து அவளது பெற்றோர்கள் போன் செய்கிற போதெல்லாம் கார்த்திகாவைப் பற்றியும், அம்மாவைப் பற்றியுமே பேசினாள். இங்கேயே அவளோடவே இருந்துவிடப் போவதாக குசும்பு செய்தாள். இடைப்பட்ட நேரங்களில் இரவு பகல் என பாராது புரோகிராமை போதும் போதும் என்கிற அளவில் எழுதி தீர்த்தாள்! ஓர் வெள்ளிக் கிழமை, அம்மா கோவிலுக்கு போய் இருந்த மாலை நேரம், மாடி அறையில் ஆவலோடு கண்ணன், கார்த்திகாவோடு நானும் திரையைப் பார்க்க, ஆரிஃபாவின் கைகள் கம்யூட்டரில் விளையாடியது. அப்பா திரையிலிருந்து வெளிவந்தார். “அப்பா”வென்றேன் நான்! “கவி நல்லா இருக்கியா?” என்றார். “பெரிப்பா”வென்று கண்னனும், “அய்யா”வென்று கார்த்திகாவும் பெருங்குரல் கொடுக்க, எல்லோரையும் விசாரித்தார் அப்பா. இதை நம்ப முடியாது கண்ணன் பிரமித்துப் போய், அம்மாவை அழைத்து வருவதாக ஓடினான். அப்பாவுக்கு ஆரிஃபாவை அறிமுகம் செய்தேன். “ஓ தெரியுமே… எனக்கு உயிர்தந்த பெண்ணாயிற்றே!”என்றார். “சத்தியமான வார்த்தைப்பா!” என்றேன். “பாரதியின் கனவுக்கு மரியாதை செய்துவிட்டீர்கள், பாரதி உங்களை ஆசீர்வதிப்பான்” என்று தொடர்ந்த அப்பா, கார்த்திகாவிடம் ரொம்பவும் பேசினார். பால்பண்ணை நிர்வாகம் குறித்து தீர கேட்டார். கார்த்திகாவும் பொறுப்பாய் பதில் சொன்னாள். “பாரதியை உங்கள் கார்த்திகா ரொம்பவும் நேசிக்கிறாள்! அறிவீர்களா?” என்றாள் ஆரிஃபா. “ஓ…நீதான்…அது குறித்து நிறைய புரோகிராம் செய்து வைத்திருக்கிறாயே ஆரிஃபா! அறியாமல் இருக்கமுடியுமா என்ன?” நான், ஆரிஃபாவைப் பார்க்க.. அவள் சிரித்தாள். “என் ஆசான் பாரதி காதலுக்கு பச்சைக் கொடி காட்டியவன்! நான் அவனது நிழல்! தட்டவா போகிறேன். காதல் வாழ்க! கார்த்திகாவை நான் ஆசீர்வதிக்கிறேன்” என்றார். “அப்பா”வென்றேன் நான். “சொல் கவி” என்றார். “கார்த்திகாவை, உங்கள் ஆசியோடுதான் கரம்பிடிக்க காத்திருந்தேன். காதலெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு பார்க்கலாமேப்பா!” என்று நான் சொல்லவும், ஆரிஃபா கைத்தட்டினாள். கார்த்திகா வெட்கத்தாள் முகம் சிவந்துப் போனாள்.அம்மாவும், கண்ணனும் விறுவிறுவென்று படியேறினார்கள். “உன் அம்மாவும் கண்ணனும் வருகிறார்கள்” என்றார் அப்பா. அறைக்குள் நுழைந்த கண்ணன், “இதோ பாரு பெரியம்மா… பெரியப்பா நிற்குதுப் பாரு!” என்று மாறாவியப்புடன் அரற்றினான். அம்மா பெரும் குரலெடுத்து “நீங்களா….? எப்படி வந்திங்க? எப்ப வந்திங்க?” என கேட்டு, நம்பிக்கையற்று வியந்தார்! அப்பா மெளனமாக நின்றார். “என்னால் நம்பவே முடியலையே… எப்படிங்க வந்திங்க?” திரும்பவும் அம்மா பெரும் குரலில் தழதழத்தார். “சக்தி” அப்பா சப்தமாய் அழைக்க…”இது அவர் குரல்தான்… அவர் குரலேதான்!” என்ற அம்மா, “ஏங்க?” என்றாள். “என் சிவசக்தி…” “சந்தேகமே இல்லை! அவரேதான்.. “சொல்லடி.. யென்… சிவ.. சக்தி..?” “என்னங்க… சொல்லுங்க…” “ஏன் என்னை கொன்றாய்?”அந்த ஏ.சி. ரூமிலும் அவளுக்கு வேர்த்துவிட்டது. எல்லோரையும் ஒரு முறை பார்த்தாள். கண்ணனை தவிர எல்லோரும் மௌனமாய் சிரித்தார்கள். கம்யூட்டரின் வெளிச்சமும், எலக்ட்டிரிக் இகினீசன்களும் அவளது கண்களில் பட, “என்ன? எல்லாம் சேர்ந்து விளையாடுறிங்களா? இதுக்குதான் பத்து நாளா பலி கிடந்திங்களா?” என்று கோபம் கொண்டவராக, எல்லோரையும் திட்டிக் கொண்டு, சப்தம் காட்டி, அடிக்கத் துரத்த, அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் தந்தப்படி ஆரிஃபா, “சும்மா.. விளையாட்டுக்குமா” என்க, “அப்பா சிரிக்கிறதைப் பாரு பெரியம்மா!” என்று கண்ணன் கூவ, மின்சாரம் தடைப்பட்டது. அப்பா மீண்டும் ஒரு முறை மறைந்தார்!

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……20


ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும் இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும் பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக் கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம்மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

மூன்று கவிதைகள்

முட்டி முட்டிப்
பால் குடிக்கின்றன
நீலக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

உள்ளே

மழைக்குப் பயந்து
அறைக்குள் ஆட்டம்
போட்டன துவைத்த துணிகள்

விடலைகள்

துள்ளித் துவண்டு
தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்

– பாலகுமாரன்

பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
– அழகியசிங்கர்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
நிறைய தொலைபேசி அழைப்புகள்நீங்கள் யாரென்னும் கேள்வியோடு நிராகரிக்கப்படலாம்நிலுவையில் இருக்கும்நிறைய வழக்குகள்தள்ளுபடி செய்யப்படலாம்நாளைய நம்பிக்கைககளின்வேர்கள் நடுக்கம் காணலாம். உறவுகளுக்குள்ளானஉறுதிமொழிகள் உடனுக்குடன் ஆவணப்படுத்தப்படலாம். பிறந்த நாள்பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்ஒடுங்கியோ அல்லதுஓய்ந்தோ போகலாம். அந்தந்த கணங்களில் வாழஅநேகம் பேர்ஆயத்தமாகலாம் நிகழ் கணங்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டியகட்டாயம்கவிதைகளுக்கு நேரலாம் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய துரோகங்கள்மன்னிக்கப்படலாம் அல்லது
மறக்கப்படலாம்

அப்பா என்கிற ஸ்தானம்

அவனுடைய மனைவியின்
முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட
அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது
பணியாற்றும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக
பிரார்த்தனை செய்தபடியே
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
அந்த நகரத்தின்
சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த
சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்
‘கற்பூரமுல்லை ஒன்று…. ’ -என எதேச்சையாக
அருகாமையில் ஒலித்த இனிய கானமும்
அவன் மனதைப் பிசைந்தன.
அன்றைய மாலைப் பொழுதில
அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்
‘டாடி’ என்றழைத்தபடி
ஓடிவந்த குழந்தையொன்று
தவறுதலாக அவன் கால்களைக்
கட்டிக் கொண்டது
சில வினாடிகள் கழித்து
அண்ணாந்து முகம் பார்த்து
தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்
அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட
சங்கோஜத்தில் விலகிச் சென்றது
நிமித்தங்கள் அவன் தந்தையானதை
இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த
‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம்
அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்
வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே
உடலில் ஓடும் உதிரம் கூட
அவனுக்கு இனித்தது.

எதையாவது சொல்லட்டுமா….18

எதையாவது சொல்லட்டுமா….18
போன சனிக்கிழமை (13.03.2010) எழுதியிருக்க வேண்டும். இந்தச் சனிக்கிழமைதான் எழுதுகிறேன். சனிக்கிழமை எப்போதும் நான் சென்னையை நோக்கிக் கிளம்பி விடுவேன். பின் ஞாயிறு கிளம்பி இங்கு வந்துவிடுவேன். வழக்கம்போல் 13ஆம் தேதி மதியம் சீகாழி கிளையிலிருந்து வாசலில் வந்து நின்றேன். எனக்குப்பிடித்தமான வசீகரமான பெண் பெயரில் ஓடும் பஸ் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆன் லைனின் பதிவு செய்யவேண்டும். ஏசி வண்டி. விலை அதிகம். தேர் மாதிரி தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. கை காட்டினேன். நிற்காமல் போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். டிரைவர் நிறுத்தினான்.
‘சீட் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘இருக்கிறது,’ என்றான். நான் இன்று சென்னை போகப்போகிறோம் என்ற நினைப்பில் ஒரு பை நிறைய நவீன விருட்சம் 75 – 76 இதழ் பிரதிகளை அடுக்கிக் கொண்டேன். அதைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சீகாழியில் மேற்குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினேன். இப்படி அதிகமாக மீந்துபோகும் இதழ்களை ஒன்றாக்கி ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது என் வழக்கம். மேலும் விருட்சம் இதழிற்கும் இந்தப் பஸ்ஸில் ஏறி வருவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை இனிமேல்தான் சொல்லப் போகிறேன். பஸ்ஸில் எப்போதும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். வசீகரமான பெண்ணின் பெயரைக் கொண்ட இந்தப் பஸ்ஸில் சென்னை வர ரூ350 தரவேண்டும். ஏசி. பயணிகளுக்கு ஒரு சின்ன பாட்டிலில் தண்ணீர் கொடுப்பார்கள். ஆனால் இன்னொருமுறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள். எண்ணி வாங்கியிருப்பதாக சொல்வார்கள். சிதம்பரம் போனபிறகுதான் என்னிடம் டிக்கட் பணம் வாங்கினான். ஆனால் டிக்கட் கொடுக்கவில்லை. வேகம் என்றால் வேகம் அப்படி ஒரு வேகத்தில் வண்டி பறந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வண்டியில் வேகத்துடன் வண்டியில் போக முடிகிறதே என்ற சந்தோஷம் என்னிடமிருந்தது. சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது, கடைகள், வீடுகள் பறந்து கொண்டிருந்தன. ஒரு டிரைவர் போய் இன்னொரு டிரைவர் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டிருந்தான். வேகம். வண்டி ஒரு சிற்றுண்டி சாலையில் நின்றது. டீ பிஸ்கட் கொறித்தேன். பின் வண்டி கிளம்பிற்று. வண்டி திரும்பவும் வேளாங்கண்ணிக்கு சென்னையிலிருந்து வரவேண்டும். சீக்கிரம் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். நான் வைத்திருக்கும் விருட்சம் பை வண்டி திரும்பினால் இப்படி சாயும், அப்படித் திரும்பினால் அப்படி சாயும். அதைச் சரிசெய்தால் 75 – 76 இதழ் என்னைப் பார்த்து இளிக்கும். வண்டி மகாபலிபுரம் நோக்கி வந்துவிட்டது. அப்போதுதான் டிரைவர் பெரிய பிரேக் போட்டான். வண்டியில் உள்ள பெண்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய விருட்சம் அடங்கிய பை டிரைவர் இருக்குமிடத்திற்கு போய் விழுந்து, அதில் உள்ள விருட்சம் இதழ் பிரதிகள் சிதறி விழுந்தன. வண்டிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. டிரைவர் சமாளித்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தான். கிளீனர் ஐயோ என்றான். பின்னால் படுத்துக்கொண்டிருந்த இன்னொரு டிரைவர் எழுந்து வந்து விட்டான். என்ன ஆயிற்று என்று கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்ல வில்லை. வண்டி எதன் மீதோ மோதி விட்டது. கிளீனரிடம் கேட்டபோது அவன் சரியாய் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் பீதியில் வெளிறியிருந்தது. நான் விருட்சம் இதழ் பிரதிகளைப் பொறுக்கிக் கொண்டு என் இடத்திற்கு வந்தேன். ”வண்டி மாடுமேல் மோதி விட்டிருக்கும்,” என்றார் பக்கத்தில் இருந்தவர். பின் இருக்கை அருகில் வைத்திருநந்த விருட்சம் சாக்குப்பையை டிரைவர் பக்கத்தில் கொண்டு போயிற்று என்றால் என்ன ஆயிருக்கும். டிரைவர் அழுத்தமானவன். வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மகாபலிபுரம் அருகிலுள்ள செக்போஸ்டில் வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தினார்கள். டிரைவரை தனியாக இறங்கச்சொல்லி கழுத்தில் கையைப் போட்டு அழைத்துப்போனார்கள். வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். நாங்களும் கீழே இறங்கினோம். பின்தான் தெரிந்தது வண்டி யாரோ பெண் மீது இடித்து விட்டது. அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். சிவராத்திரி அன்று அந்தப் பெண்ணிற்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் நிகழ்ந்து விட்டது. அங்குள்ள ஊர்க்காரர்கள் சுமோ வண்டியில் எங்கள் வண்டியைப் பிடிக்க வந்தார்களாம். வண்டி மட்டும் அங்கு இருந்தால் வண்டியை உடைத்திருப்பார்கள். டிரைவரை அடித்துக் கொன்றிருப்பார்கள் என்று சொன்னார்கள். இந்த விபத்து குறித்து செய்தி எந்த செய்தித் தாளிலும் வரவில்லை.வழக்கம்போல் போகும் பெரியார் பஸ்ஸில் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.இந்த விபத்து குறித்து நான் இன்னும் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். – சில தினங்களுக்குமுன் வசீகரமான பெண்பெயர் கொண்ட அந்த நிறுவன பஸ் ஒன்று வைதீஸ்வரன் பாதை ஓரத்தில் உடைந்து ஓரமாகக்கிடந்தது. -அதிகமாக பிரதிகள் மீந்துபோன நவீன விருட்சம் இதழை மாயவரத்திலிருந்து சென்னைக்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனேன். அந்த இதழ் 75-76. ஜøலை மாதம் 2007ல் வெளிவந்த இதழ். அதில் இப்படி எழுதியிருக்கிறேன். சென்னையிலிருந்து கும்பகோணம் வரை ஒரு பாசஞ்சர் வண்டி வந்து கொண்டிருந்தது. பிராட்கேஜ் வருவதால் அது நின்று விட்டது. அதன் விளைவு பஸ்ûஸ நம்ப வேண்டி உள்ளது. பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ஏகப்பட்ட பஸ்கள் விடுவார்கள் பொங்கல் அன்று மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வரும் சொகுசு செமி டீலக்ஸ் பஸ் ஒன்றில் பயணம் செய்து வந்த என் பெண், அவள் கணவர், பேத்தி என்று எல்லோரும் பெரிய விபத்திலிருந்து தப்பினார்கள். அதை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாகத் தோன்றுகிறது. முதலைப் பண்ணை என்ற இடத்திற்குப் பஸ் வந்தபோது, டிரைவர் கண் அசந்ததால் பஸ் நிலை தடுமாறி அங்குள்ள மின்சாரக் கம்பத்தில் இடித்து (நல்லகாலம் மின்சாரம் கட் ஆகிவிட்டது) தலைக்குப்புற கவிழ்ந்தது. பாண்டிச்சேரியில் ஏறிய ஒரு இன்ஜினியர் இறந்து விட்டார். கிளீனருக்கு கால்கள் இரண்டும் துண்டித்துவிட்டன. இது குறித்து சில கேள்விகள் : – விபத்து ஒரு சுழற்சி மாதிரி. உலகம் முழுக்க அது நடந்துதான் தீரும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி சொல்வது சரியா? – பெரிய வண்டிகள் நம்முடைய சாலையில் ஓட்டிச் செல்லும்போது வேகமாக ஓட்டக் கூடாது. அதனுடைய ஸ்பீடை கட்டுப்படுத்த வேண்டுமா? – வண்டி ஓட்டும் டிரைவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவரா? – வண்டியில் பயணம் செய்யும் பயணிகளிடமும் இன்சுரன்ஸ் வசூல் செய்தால் (மிகக் குறைவான தொகை), இது மாதிரியான விபத்து சமயத்தில் பயணிகளுக்கு மருத்துவ செலவிற்குப் பயன்படும். – டிரைவர் சிலசமயம் க்ளீனரிடம் கொடுத்து வண்டியை ஓட்டிச் சொல்கிறாரா? – டிரைவருக்கு போதிய அளவு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறதா? – இதுமாதிரி விபத்துக்களை ஏன் பேப்பரில் விளம்பரப் படுத்தக்கூடாது? – நான் வந்த வண்டி தெருவில் வரும்போது தெருவை முழுவதும் எடுத்துக்கொண்டு விடுகிறது. பாதசாரிகளுக்கு நடக்கக்கூட இடமில்லை. – அவசரம் அவசரம் என்றதால்தான் என் வண்டி மோதியது. அவ்வளவு அவசரம் தேவையா?