அன்புள்ள நண்பர்களே,

நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.

இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.

இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)

வழக்கம்போல் நல்லி விளம்பரத்துடன் இதழ் 80 பக்கம் வரை கொண்டு வந்துள்ளேன். இதழில் தவறு கண்டால் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சுட்டிக்காட்ட தவற வேண்டாம். 88வது இதழுடன் 22 ஆண்டிற்கான பணியை விருட்சம் மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்புவர்கள் navina.virutcham@gmail.com மூலம் அனுப்பவும்.முதலில் படைப்புகள் navinavirutcham.blogspot லும் பின் இதழிலும் வரும். படைப்பாளிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். நவீன விருட்சத்திற்கு அனுப்பியதை வேறு எங்கும் அனுப்ப வேண்டாம். அல்லது அனுப்பினால் விபரம் தெரிவிக்கவும். இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை அல்லது திட்ட வேண்டுமென்று தோன்றினால் திட்டுக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதழ் பிரதிகளைக் கூடிய சீக்கிரம் அனுப்பி விடுகிறேன்.

நன்றி.

அழகியசிங்கர்

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாதபிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும்கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும்மதிக்காதமனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும்பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காதகலைஞன் என்ன கலைஞன்?

தங்கப் பெண்

ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.

வாழ்தல் நிமித்தம்

தீர்மானித்துக் கொண்டேன்கலங்குவதில்லை…யென.நம்பிக்கை கொள்ளவோதாக்குப் பிடிக்கவோஏதுமில்லையென்றதெளிவுக்கு வந்தேன்.சாகும் முறை குறித்த குழப்பம்கொஞ்சமும் இல்லை.கடலில் மூழ்குவதென்பதுபால பாடம்.(ஆடைகளைக்கவனமாக ஊக்குகளால்இணைப்பது குறித்தகவிதைகளுக்கு நன்றி!).எதற்குமொருமுறைஇருக்கட்டுமேயெனஇறப்புச் செய்தி கேட்கும் முகங்களைமனத் திரையில்ஓட விட்டேன்.எதிர்பாரா ஒரு தருணம்கேட்டதொரு பெருவிம்மல்.எந்த முகம்அந்த முகம்என விழிக்க நனைந்திருந்தனகண்கள். சுயம் வெட்கி ஆரம்பித்ததுயென் வாழ்க்கை குறித்த அத்தனைச்சிரிப்புச்சத்தங்களும்…

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்…!




காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி மிகக்கடின பணியொன்று வனச்சிறுவனுக்கிடப்பட்டது
எந்தக் கொம்பிலும் ஏறித் தேனெடுப்பவன் கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன் வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும் அமாவாசை நிசியிலும் அச்சமின்றிப் போய்வருபவன் முதன்முதலில் அயர்ந்து நின்றான் கட்டளையை மறுக்க வழியற்றும் மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும் விதிர்த்து நின்றான்
செய்வதறியாச் சிறுவன் நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான் அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன் கரங்களை நுழையச் செய்திவன் ‘தண்ணீர்’ என்றான் காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன் சிறுவனின் பார்வைக்கு மட்டுமென நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின வண்ண வண்ண மீன்கள்
கற்றுக் கொடுக்கவேண்டிய கால எல்லை முடிந்ததெனச் சொல்லி அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில் விடியலின் கீற்றுக்கள் மலைகளின் கீழால் புதையுண்டு போக விருட்ச இலைகள் நீரைச் சிதறிட மழை தூவிற்று
வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி செவிட்டூமைக் குருடனை மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள் மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி எல்லாக் கேள்விகளுக்கும் மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று
சில்லிட்டு காத்திருக்கிறது…
சப்தமின்றி விரைகின்றன
நிலழடுக்குப் பறவைகள்
கருநீல வானில்
அசையும் சித்திரங்களாய்.
பந்தெனச் சுழலும்
உணர்வுக் குவியல்களை
உயர எறிகிறேன்
உயிர் சினக்க.
அவையோ
பறவைகளோடு பயணித்து
அயர்ந்த வேளை
திரும்பி வீழ்கின்றன
பனித் துளிகளாய்.
செய்வதறியாமல்
திகைக்கும் வேளையில்
உள்ளீடற்று
கரையத் துவங்குகின்றன
மனத் துகள்கள்
இருள் உருகும்
இந்நிசப்த பரப்பில்…

கவிஞனென்றானதெல்லாம்

அறிந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான்அறிந்து கொண்டது
தெரிந்துகொள்ளத் தலைப்பட்டுத்தான்தெரிந்துகொண்டது
புரிந்துகொள்ள பிரயாசைப்பட்டுத்தான்புரிந்துகொண்டது
அறிந்தது தெரிந்தது புரிந்ததுஅத்தனையும் சேரத்தான் கவிஞனென்றானதே
கவிஞனென்றானதெல்லாம் நன்றோ தீதோகர்மவினைதான் போடி
அமர்
மெய்ப்பு பார்ப்பவனில்லை
புஸ்தக மதிப்புரையாளனில்லை
பத்திரிகையாளன்இல்லை
கருத்துரையாளன்இல்லை
பேச்சாளன் அல்லன்
பத்தி எழுத்தாளன்அல்லன்
கட்டுரையாளனோ விமர்சகனோ கூடஅல்லன்
சிறுகதை ஆசிரியனோ புதின ஆசிரியனோ கூடஅல்லன்
கவிஞன் அவனுக்காககாத்திருக்கின்றன கவிதைகள்

தாத்தா தந்த கடிகாரம்



குமரி எஸ். நீலகண்டன்
எனது தாத்தா இறக்கும் முன் ஒரு நாள் அவரது ஓடாத பழைய கடிகாரத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு போனார்.
தாத்தாவின் இதயம் துடிக்கும் அதை நான் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
உலகம் போற்றும் அந்த சிற்பி தற்போது புதிதாய் கவிதை எழுத துவங்கி இருக்கிறார் கவிதை பக்கம் செல்லாதவர்களும் தற்போது அவரது கவிதையைப் புகழ்ந்து போற்றுகின்றனர். கவிதையே போடாத பத்திரிகைகளும் தற்போது அவரது கவிதைக்காக ஒரு பக்கம் ஒதுக்கி உள்ளன.
நான் தற்போது அந்த கவிதைகளையெல்லாம் ஒரே ஒரு தடவை மட்டும் படித்துவிட்டு தாத்தா தந்த அந்த கடிகாரத்தின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறேன்
குமரி எஸ். நீலகண்டன்

எதையாவது சொல்லட்டுமா / 25

சில தினங்களுக்கு முன் ஒரு கனவு வந்தது. அதில் ஸ்டெல்லா புரூஸ் வந்திருந்தார். ஆகஸட் 8ஆம் தேதி அவர் பிறந்தநாள். நான் அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கனவில் அவர் வேறு ஒரு இடத்திற்குப் போகப்போவதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியையும் பார்த்தேன். பொதுவாக சமீணபத்தில் எனக்கு கனவுகள் வருவதில்லை. கனவு காண்பதும் பிடிக்காது. (அப்துல்கலாம் சொல்லும் கனவு இல்லை இது). பின் கனவும் நிஜமாக நடந்ததுபோல் ஒருவிதத் தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய நினைப்புதான் கனவாக மாறிவிடுகிறதா என்றும் தோன்றும். அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் பற்றி இன்னும் எதாவது சொல்லாமல் இருந்து விட்டேனா என்றும் தோன்றியது. எழுந்தவுடன் அவருடைய கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தது. காளி-தாஸ் என்ற பெயரில் அவர் ழ, விருட்சத்தில் கவிதைகள் பல எழுதி உள்ளார். நானும் நானும் என்ற பெயரில் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளோம். அவர் கவிதைகள் சிலவற்றை எடுத்து இந்த blogல் அளிக்கலாம் என்று தோன்றியது. ஒரு கவிதையைக் கொண்டும் வந்துவிட்டேன். இன்னும் சில கவிதைகளை அப்படி கொண்டுவர உத்தேசம்.
ஒருமுறை கனவுகள் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கனவுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். அந்த நண்பர் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர். ஒவ்வொரு கனவிற்கும் எதாவது அர்த்தம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருநாளும் நிஜமான நிகழ்ச்சிகளே கனவுபோல் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை சென்னையை விட்டு இங்கு வந்தவுடன், சென்னையில் இருந்ததே கனவுபோல் தோன்றும். நடந்த நிகழ்ச்சிகளை திரும்பவும் அசை போடும்போது அவை கனவுகளாக மாறிவிடுவதுபோல் தோன்றும். ஸ்டெல்லா புரூஸை நான் நிஜமாக பார்த்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது கனவாக மாறி விட்டன. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அவருக்கு அலுவலகம் வந்தபிறகு இரவு நேரத்தில் போன் செய்தேன். அப்போது தனியாக நான் மயிலாடுதுறையில் இருந்தேன். போனில் அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உருக்கமாகச் சொன்னவர். ஏதோ சத்தம் கேட்டதுபோல் தோன்றியது. போனை கட் செய்யாமல் வைத்துவிட்டுப் போய்விட்டார். அந்த நிகழ்ச்சி எனக்கு திகைப்பாக இருந்தது. அன்று எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. இது நிஜமா கனவா? நிஜத்தில் கனவு?
நிஜம் கனவை விட மோசமான நிகழ்ச்சியாக மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை தி நகரில் உள்ள பாலம் வழியாக வண்டியில் என் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு காகம்என் வண்டி மீது மோதி தரையில் பலமாக வீழ்ந்து இறந்து விட்டது. இது மாதிரி சம்பவம் குறித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இது ஏதோ மோசமான சம்பவத்தைக் குறிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் மறுநாள் திருநாவுக்கரசு என்ற அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு, உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்குச் சென்றவர், மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நானும் அவரும் பக்கத்தது பக்கத்து சீட்டில் அமர்ந்து பணி புரிபவர்கள். ஒரு சம்பவத்திற்கும் இன்னொரு சம்பவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மனம் முடிச்சுப் போட்டுக்கொண்டே இருக்கும்.ஒரு விஷயத்தைத் தீவிரமாக யோசித்தால் அது கனவாக மாறி நமக்கு எதாவது அர்த்தம் சொல்வதாக தோன்றுகிறது. வெறும் நினைவின் நீட்சிதான் கனவு. அப்படி சொல்வது சரியாக இருக்குமா? சமீபத்தில் நான் ஒரு தேர்வு எழுதி உள்ளேன். அந்தத் தேர்வின் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதற்குள் என் கனவில் லிஸ்ட் வருவதுபோலவும் அந்த லிஸ்டில் என் பெயர் இல்லாததுபோல் கனவு கண்டேன். (இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போது, லிஸ்ட் வரவில்லை. ஆனால் இன்று (03.09.2010) லிஸ்ட் வந்து விட்டது. உண்மையில் என் பெயர் இல்லை.) என் பெரியப்பா ஒருவர் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் படுத்துக் கிடந்தார். ஒருநாள் காலையில் நான் ஒரு கனவு கண்டேன். அவர் வாயில் அரிசி போடுவதுபோல். எனக்கு திகைப்பாக இருந்தது. காலையில் பெரியப்பா வீட்டிலிருந்து போன். அவர் இறந்து விட்டதாக.
இன்னொரு கனவு. ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி. அவர் எங்கோ சென்று விட்டு, காரிலிருந்து இறங்குகிறார். அப்போது யாரோ அவரைப் பார்த்து சுடுகிறான். இந்தக் கனவின் அர்த்தம் எனக்கு சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் கான்சர் நோயால் பாதிப்படைந்து மரணம் அடைவதைத்தான் அந்தக் கனவு சுட்டிக் காட்டியதாக நினைத்தேன்.
ஸ்டெல்லாபுரூஸ் பற்றி இன்னொரு கனவு. ரொம்ப வருடங்கள் முன்பு நான் கண்ட கனவு. இதை அவரிடம் சொன்னதுகூட கிடையாது. அவருக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டேன் என்றுதான் அவர் மனைவியை எங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்தினார். ஆனால் என் கனவில் அவர் மனைவி ஒரு பட்டுப்புடவை அவரிடமிருந்து வாங்கிப் பிரிப்பதுபோலவும் அப் புடவையில் ஒரு பகுதி கிழிந்திருப்பதுபோலவும் தெரிகிறது. சொன்னால் வருத்தப்படுவார் என்பதால் சொல்லவில்லை.
என் நெருங்கிய உறவினரின் பையன் ஒருவன் நிச்சல் கற்றுக்கொள்ளும் இடத்தில் மரணம் அடைந்துவிட்டான். இது பெரிய துக்கமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக அந்தப் பையனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கனவில் அந்தப் பையன் வந்தான். அவன் ஓர் இடத்தில் தினசரி தியானம் செய்து கொண்டிருக்கிறான். நெற்றியில் விபூதிப் போட்டிருந்தான். அவனைக் கூப்பிடுகிறேன். ஆனால் அவன் எழுந்து வராமல் இருக்கிறான்.
என் பிறந்த தினம் போது யாரும் என்னைக் கூப்பிட்டு வாழ்த்துவதில்லையே என்று ஒவ்வொரு முறையும் பிறந்த நாள் போது நினைப்பதுண்டு. ஒருமுறை கனவில் என் பாட்டி என்னை வாழ்த்தினாள். அதை நினைத்து அன்று முழுவதும் எனக்கு திகைப்பாக இருந்தது.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயப்படும்படியான கனவுகள் பலவற்றை கண்டிருக்கிறேன். ஒரு கனவில் டிரெயின் கிளம்பி வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் அதைப் பிடிக்க எத்தனிப்பேன். முடியாது. என்னைச் சுற்றிலும் கோவில் கோவிலாக இருக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கோவில் கோபுரம். பயமுறுத்துவதுபோல். தி.நகரில் முப்பத்தம்மாள் கோயில் உள்ள தெரு முனையில் ஒரு பப்ளிக் டாய்லட் இருக்கும் அந்த டாய்லட்டில் நானும், நடிகர் அமிதாப்பச்சனும் யூரின் போவதுபோல் ஒருமுறை கனவு. அந்தக் காலத்தில் இந்தி சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்.
நான் ஒரு Flat வாங்கினேன். 406 சதுர அடிகள்தான். குளிக்க பாத்ரூம் போக சமையல் அறை வழியாகத்தான் போக வேண்டும். சமையல் அறை அவ்வளவு குறுகல். ஏமாந்து வாங்கிவிட்டேன். பல நாட்கள் தூக்கம் வரவில்லை. அப்போது ஒரு கனவு. சமையல் அறை ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் இருப்பதுபோல்.இன்னும் பல கனவுகள். சில மட்டும் ஞாபகத்தில். என் எழுத்தாள நண்பர்களும் அவரவர் கனவுகளை என்னிடம் கூறி உள்ளார்கள். பிரமிள் சொன்ன கனவு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் காந்தி கடற்கரையில் (சென்னை) சிமெண்ட் பெஞ்சில் படுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரை யாரோ தாக்க முயற்சி செய்கிறார்கள். தலையில் முண்டாசுடன் கையில் நீண்ட வாளுடன் ஒருவர் காப்பாற்ற வருகிறார். தாக்க வந்தவர்கள் ஓடிப் போய் விடுகிறார்கள். அவரைக் காப்பாற்றியவர் வேறு யாருமில்லை. சிரூடி சாய்பாபாதான். பிரமிள் இந்தக் கனவு காணும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையே ஒரு கனவுபோல்தான். நம் முன்னால் சில காட்சிகள் தென்படுகின்றன. அந்தக் காட்சிகள் பின் கனவுகளாக மாறி விடுகின்றன.