இன்னும் அவளுக்குத் தெரியாது

 
நீ கனவில் வந்து 
காலடி வைக்கும் 
நேரங்களிலெல்லாம் 
அதிகாலை வந்து 
என் கதவைத் தட்டி 
எழுப்பிவிடுகிறது…
உன்னைப் பார்க்கும் 
தருணங்களில் 
காமம் பீறிட்டு
ஊற்றெடுக்கும் 
ஆனால் 
உத்தமனாகக்
காட்டிக்கொள்கிறேன் என்னை…
நீ அருகில் இருக்கையில் 
கரம் பிடிக்கவிடாமல் 
கட்டுப்படுத்திவிடுகிறது 
உன் பார்வை 
பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன் 
என்ன செய்ய…
விக்கல் நிற்க முத்தம் கொடு 
சந்தர்ப்ப வசத்தால் 
உயிர் பரிகசிக்கும் 
விரலின் 
மெல் உரசலுக்காக 
காத்துக்கிடக்கிறேன்…
உன் கீழ் வானம் இறங்குமா?
இத்தனையும் 
நான் உன்னை 
காதலிக்க தொடங்கிய நாள் முதல் 
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது…
                                         

இருத்தலியல்

 

ஹைடென்ஷன்
ஒயர்களில் கூடு கட்டும்
வீரமிகு குருவிகள்
கைதட்டலுக்குப்பயந்து
வீசிப்பறக்கின்றன
கட்டிட உச்சிகளின்
சிற்பப் பிதுக்கங்களிலும்,
மதில் மேல் நடந்து கொண்டும்
சிந்தனை செய்யும் பூனைகள்
சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன.
சூரியனின் எலும்புகளை
தன் குலைத்தல்களாலேயே
பிறாண்டி எடுக்கும் நாய்கள்
கல்லெறிக்குப்பயந்து
ஓடி ஒளிகின்றன.
காட்டையும் துவம்சம்
செய்யும்
மாமத ஆனைகள்
முழ நீள அங்குசத்திற்கு
அடங்கி நிற்கின்றன
அங்கு கில்லட்டின்களை
சாணை பிடிப்பவர்கள்
புறா இறகு வைத்து
காது குடைந்து
கொண்டிருக்கின்றனர்
மானுடத்தைப் புரட்டிப்போடும்
இலக்கியம்
ஒரு துளி பேனா மையைக்
கண்டு விக்கித்து நிற்கிறது.

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
o

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக்
கொந்த முயன்றதில்
எனது சில நழுவிய அழைப்புகளும்
கூந்தல் பராமரிப்பிற்கான
குறுஞ்செய்திகளும்
மட்டுமே கிடைத்தன
உனது மின்னஞ்சலை
புகுந்து படித்ததில்
சில எரிதமும்,
எண்ணவே இயலாத
அளவு பணப்பரிசு
அஞ்சல்களும்
மட்டுமே கிடைத்தன
உனது இணைய
அரட்டைகளை
இடைமறித்து
வாசித்துப்பார்த்ததில்
கட்டுப்பட்டித்தன யுவதியின்
சொல்லாடல்கள்
மட்டுமே கிடைத்தன
உனது சமூக
வலைத்தளங்களின்
பகிர்வுகளில்
எந்த சுவாரசியமுமற்ற
பொதுவான விஷயங்கள்
மட்டுமே கிடைத்தன
எனக்குள்
அழிக்க இயலாத
குற்றமுள்ள
குக்கீகளாய் (cookies)
இவையனைத்தும்
மண்டிக்கிடக்கின்றன
எப்போதும்.

எதையாவது சொல்லட்டுமா……….54

கடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம்.  ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும்.  பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது.  ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.
அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான்.  எனக்கு சென்னை ஞாபகம் வந்தது.  என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன்.  இரவு 10.30 மணிக்குப் பயணம்.  முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம்.  எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள்.  கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள்.  வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன.
நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும்.  பஸ் மூலையில் ஒரு ஓய்வு அறை இருந்தது.  ஓய்வு அறை என்பது பாத்ரூமைத்தான் குறிக்கப்படுகிறது.  யூரின் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பஸ் உள்ளேயே இருந்த ஓய்வு அறை இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டாமென்று நிம்மதியாக இருந்தது.  ஒரு கருப்பு இன பெண்மணி 2 வயதுப் பையனை மட்டும் அழைத்து வராமல், ஒரு குட்டி நாயையும் ஒரு பையில் போட்டு அழைத்து வந்திருந்தாள். வண்டி புறப்பட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் அவள் எதையோ தேடிக்கொண்டிருக்கும் போதுதான் அவள் நாய் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.  வண்டி படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. 
அரவிந்த் மூலம் எனக்கு பஸ், ரயில், விமானம் என்று எல்லாவிதங்களிலும் பயணம் மேற்கொள்ள முடிந்தது.  நயக்கரா நீர்வீழ்ச்சியை நாங்கள் காலையில்தான் போய் அடைந்தோம்.  அங்கிருந்து தங்கும் இடத்திற்குச் சென்றோம்.  எல்லாவற்றையும் அரவிந்த் நெட் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.
பின் ஒரு பயண வண்டியை ஏற்பாடு செய்து, நயக்கரா நீர் வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தோம்.  கனடா நாட்டையும், அமெரிக்கா நாட்டையும் இணைக்கிற பாலம் ஒன்று இருக்கிறது.  நடந்தே பலர், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர்.  கனடா நாட்டிலிருந்து நீர் வீழ்ச்சியை ரோப் கார் மூலம் கடந்து சென்று பார்க்கிறார்கள்.  நீர் வீழ்ச்சியில் குளித்ததோடு மட்டுமல்லாமல், போட் மூலம் ராட்சச அருவியைக் கண்டு களித்தோம்.  நான் குற்றால அருவி போயிருக்கிறேன்.  அதைவிட பல மடங்கு பரவலான நீர் வீழ்ச்சி இது.  நயக்கரா நீர் வீழ்ச்சியைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.  ரொம்பவும் அமைதியான இடம் நயக்கரா என்ற அந்த இடம்.  திரும்பவும் நாங்கள் விமானம் மூலம் அங்கிருந்து ப்ளோரிடா வந்து சேர்ந்தோம். 

மாலை மயக்கம்

 
 
மூன்றாவது மாடி. படிக்கட்டுகளில் ஏறி வரும் நடை சப்தம். தட தட என அவனைத்தவிர வேறு யார் அப்படி வருவார்கள்? அவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம்.
 
இன்றாவது கறாராகச் சொல்லிவிட வேண்டியது தான்.  இது சரிப்படாது இனிமேலும். எவ்வளவு கஷ்டம் இந்த வெய்டிங் என்பதை நீ எப்போதுதான் புரிந்து கொள்வாயோ, இப்படி வருவதாக இருந்தால் ஆபீசிலேயே இருந்துவிடு.. உனக்கு எதுக்கு வீடு மத்த கண்றாவியெல்லாம் –
 
ஒரு க்விக் குளியல், ஒரே கப்பிலிருந்து இருவரும் அவனுக்குப் பிடித்த டிகிரி டிகாக்ஷன் காபி, சில சமயம் அவன் வாங்கி வரும் அவளது பேவரிட் ராமச்றாய் மிக்ஸ் பஜ்ஜியும் உடன் சேரும். இன்டெலில் இருக்கும் இந்தியா வர மறுக்கும் ஒரேமகன் பற்றி தினம் தொடரும் ஒரே புராணம்.. அவனுக்கு சீக்கிரம் செய்துவைக்க வேண்டிய கல்யாணம் பற்றியும் சில நாட்களில் பேச்சு உண்டு. சாப்பாடு, டிவி, அவனது கால்கள் தன் கால்கள் மீது இதமாக தூக்கம்… சிலநாட்களில் சடக்-என்று அவன் இழுத்து அணைக்கும் வேகம் தூக்கத்தைக்கலைப்பதாக க்ரிப் செய்தாலும் உள்ளுக்குள் வேண்டியிருப்பதை… 
 
இன்னும் ஒரு நாள் – படிக்கட்டு ஏறிவரும் சப்தம் மேல் அபார்ட்மென்ட் குழந்தைகளின் விளையாட்டு.

பிரயோகம்

                                                                                                                                 

பாதி தூரம்
வந்த பிறகு தான்
தெரிந்தது
அதல பாதாளம்
அதற்கு மேல்
ஒன்றுமில்லை
தலை நோவ
மண்டையிடி
எதற்குத் தண்டனையோ
உடல்
நீலம் பாரித்தது
ஈசன் கழுத்திலுள்ள
பாம்பு தீண்டிற்றோ
பேச்சு சாதுர்யத்துடன் தான்
ஆரம்பிக்கிறது
பெரும் சண்டையில் போய்
முடிகிறது
வந்த வழியை
திரும்பிப் பார்த்தால்
இவ்வழியா வந்தோம்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
எனத் தோன்றும்
புலால் உண்ணத் தகுந்ததல்ல
என்று புரிகிறது
என்ன செய்வது
ஆதியில் பச்சை மாமிசத்தை
புசித்தவனுக்கு
துறவி சொல்வது
எங்கு புரிகிறது
மயன் காலண்டர்
முடியப் போகிறதாம்
இதோ தோன்றப்
போகிறாராம்
வாழும் போது
தண்டணை தருகிறோம்
சென்ற பிறகு
தேடி அழுகிறோம்
மானுடமே மரித்த பிறகு
தனித்து அலைவாரா
கடவுள்.

பறவை நண்பன்

 
நிறம் 
இரவை எழுதும் பொழுது 
அறையில் வந்து அமர்ந்த 
பறவை ஒன்று 
என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது…
அது பேசும் பேச்சிற்கு 
என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர 
பதில் பேச முடியவில்லை 
கொஞ்ச நேரத்தில் 
அதனோடு சேர்ந்து 
இரையைக் கொத்த தொடங்கினேன்  
நீண்ட நேரத்திற்குப் பிறகு 
என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது 
மென்மையான முனகலில்
தூக்கம் சுவர்க்கம் நுழைய 
நிறம் எழுதி முடித்திருந்தது 
ஒரு பகலாக மாறிப்போயிருந்தது
பறவை வந்து தங்கிவிட்டுச் 
சென்றதற்குச் சாட்சி 
படுக்கையில் கிறுக்கப்பட்ட 
வெள்ளைக் கோடுகள் மட்டுமே…
யாருக்கும் தெரியாமல் 
அதை மறைத்தாக வேண்டும்…
                                       

நிலவும் காகமும்

அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி

சாய்க்கப் பட்டது.  
கிளையோடு விழுந்த

கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம். 

மழை இரவு

 
அடித்துப் பெய்கிற மழையில்

வளைகின்றது  தாவரம்
குனிகின்றன பெருமரக் கிளைகள்
ஒண்டிக் கொள்கின்றன பறவைகள்
அணைந்து போகின்றன விளக்குகள்
கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா
மேல்நோக்கித் திரும்புகிறது குடை
நடுக்கமுறுகிறது உடல்

பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும்
ஒரு மின்னலில் ஒளிர்கின்றது
ஜொலிக்கும் புன்னகையோடு
இக்கரிய இரவு  மட்டும்.
                            –