Category: Uncategorized
லாவண்யா
அசௌகரியமானதென்கிறார்கள் பலரும்.
அவரவர் உண்மை அவரருடையது.
எனதுண்மையென்னவெனில்
வேடங்கலைந்த வெற்றுடம்பைக்
காட்டும் காலக்கண்ணாடி
மனப்பாறையை மணலாக்கும்
மாயவித்தை செய்யும் மர்மநிஜம்
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு
வாசலில் நின்றழைக்கும் பசுவும்
நெட்லான்களைக் கிழித்து அறையில்
பிரசவத்துக்கிடம் தேடும் அணிலும்
விடாமல் தொடர்ந்து வீட்டைந்து
நிராகரிப்பை நேசமாக்கும் நாய்க்குட்டியும்
நிகழின் உயிரியக்க விந்தைகளாய்
பரிமாணக்கண் திறக்கும் திரைவிலகல்
காலநிரந்தரத்தில் திசை விசை
மாறாது ஓயாது மோதாது
சுழலும் கோள்களின் ஞாபகமும்
நிசப்த இரவுகளில் காற்றின் ரகசிய
இசைக்கென் காதுகளைத் தருவதும்
நிலாவெளிச்சம் இருட்டுமனதை
வெள்ளையடிக்கும் விநோதங்களும்
வேறெப்போதும் நிகழ்வதில்லை
சங்கடத்திலும் சவக்குழியிலும்
ஒற்றையாகும் துயரியல்
சிலசமயம் நெருடும்தான்
இவைகளைவிடவும் முக்கியமாய்
எல்லையிலா வெளி, கடல்,
எண்ணிலா மனிதர் உயிர்களிடையில்
நீ யாரென வினவி விடைபெறும்
ஒவ்வொருமுறையும்.
மல்லித்தோட்டம்.
காத்திருக்கிறது உனக்காக
என் கூந்தலில் மல்லிகைத்தோட்டம்
குறிப்பறிந்த தோழிபோல
நழுவிச்சென்றதென் தோள்பற்றியிருந்த
உள்ளாடை
நிலா காய்கிறது
என்னைத் தொட்டுப் பார்
தெரியும்
கணிகைபோல் கணினி
உன் மடியில்
கணினியும் கடலும் ஒன்று
மூழ்கியவன் கரைசேர்வதில்லை
மணித்துணிகளாயுதிர்கின்றன
மல்லிகைகள்
மடிக்கணினியையே நீ
மணந்திருக்கலாம்
122/3, 33வது குறுக்குத் தெரு
பெசன்ட் நகர்,
சென்னை 600 090.
23.05.2007
கொண்டது? எப்போதும் ஓடிக்கொண்-
-டேயிருக்கும் உங்களை வார நாட்
களில அலைபேசியில் தேடினால்
நீங்கள் நீராடிக்கொண்டோ அல்லது மயிலாடு
-துறையில் ஆறிக்கொண்டிருக்கும்
இரவு உணவைத் தேடிச் செல்லும்
நேரமோ, வயலோ வரப்போ, புயலாகப்
போகும் பேருந்துகளுக்கு நடுவிலோ பிடிக்க
நேரிடும். சில வார்த்தைகளைத் தவிர
பேச முடியாது எனவே, மூச்சுவிட்டு
இந்த அஞ்சலட்டை.
கவிதைத் தொகுப்பு அற்புதம். அற்புதம்.
வரதராஜனின் வழவழ ஓவிய முகப்பிலிருந்து
கடைசிவரி 263ம் பக்கம் வரை
அற்புதம். ஞானக்கூத்தன் வழக்கம்போல்
சரியாக சொல்லியே தப்பித்து விட்டார்.
காரணம், அசாதாரணமாகும் கணங்
களும், கவிதையாவதையும் சாதாரணமாக
வே குறிப்பிட்டுவிட்டார். அவரும் ஒரு
கவிஞன் அல்லவா? கவிதைகளை
இடையிடையேயும், கடைசியிலும்
பிடித்துவிடுகிறார். சனி, ஞாயிறில் பேசு
வோம். இது வெறும் ரசீது..நன்றி.
பதி என்னை விட்டுப் போனாலும், ஏதோ விதத்தில் என்னுடன் பேச விரும்புவதாகவே தோன்றியது. எப்போதோ அவர் எழுதிய கடிதம் ஏன் என் கண்ணில் பட வேண்டும்? கடைசியில் அவரைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். ஒரு நல்ல நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும். எல்லாவல்ல இறைவன் அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தரட்டும்.
அழகியசிங்கர்
5.
பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்லான்க் ஏ எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. ஒரு விதத்தில் ரத்த அழுத்தம் என்பது மனப்பிராந்தியா என்று நினைப்பது உண்டு.
(இன்னும் வரும்)
ஏழாம் அறிவு
சாவதற்கு
பயமில்லாவிட்டாலும்
வருத்தமாக
இருக்கிறது.
புலன்கள் ஐந்தைக் கொடுத்து
ஒரு புல்லரிக்கும் உலகத்தை
நிரந்தரம் போல் காட்சியாக்கிப்
பின்
கண்களை மூடி விடக்
காத்திருக்கும்
கடவுளிடம் கோபம்
தடுத்தாலும் வருகிறது..
ஒரு வேளை ஆறுக்கும்
மேல் ஏழாவதாக
அறிவொன்றைக்
கொடுக்கமாட்டானா?
இறந்தவுடன் எனக்கே
சொந்தமான
எழிலுலகம் இன்னொன்றைக்
கண்டடைந்து
செத்தாலும் சாகாமல்
அங்கே
சலிக்கும் வரை
வாழ்ந்திருக்க!!! |
எதையாவது சொல்லட்டுமா….74
1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன். ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில். பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன். அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு. எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை. அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன். ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார். பின் சம்பத்தைப் பார்க்கவில்லை. சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள். நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன். ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார். தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார். பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார். அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும். ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும்.
சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார். அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை. திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார். மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார். சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.
கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத். பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர். அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார். சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார். அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை. இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை. சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.
ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார். ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும்.
இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது. சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம். இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம். சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம். இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.
கொடை
கடல் பார்க்கவும்
அலைகளில் கால் நனைக்கவும்
ஆசைப்படாதவர் உண்டா
அருவியின் முகத்துவாரம்
இன்னும் அருமையாக இருக்கும்
அல்லவா
கங்கை,காவிரி,வைகை
சமுத்ரநாயகனுக்கு
எத்தனை நாயகிகள்
தேங்கிய தண்ணீரை
பார்க்கப் பிடிப்பதில்லை
குளத்தில் நீந்தும் மீனுக்கு
மார்க்கெட்டில் மவுசு அதிகம்
ஏரியில் பறவைகள் கூட்டம்,
மக்களின் தாகத்தை தீர்க்கவும்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நிறைஞ்ச மனசு வேணும்
தோணி உண்டு ஓடையில் பயணிக்க
நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க
உங்கள் ஜாதகத்தையே சொல்லும்
ஓடை
வானத்தின் கொடை தான்
மக்களின் தாகத்தை
தணித்துக் கொண்டிருக்கிறது.
கூர்
பாதசாரிகள் கவனத்துடனேயே
சாலையை கடக்கிறார்கள்
எந்த வாகனத்தில் சென்றாலும்
கோயிலைக் கண்டால்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
மறப்பதில்லை வெகுஜனங்கள்
சீரூடை அணிந்த
மாணவர்களின் மிதிவண்டி
வேகமெடுக்கிறது
பள்ளியை நோக்கி
மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு
சகலத்தையும்
எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்
சாமானியர்கள்
வீட்டின் பெரும்பகுதியை
ஆடம்பரப் பொருட்கள் தான்
அடைத்துக் கொண்டுள்ளது
வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற
ஆங்கிலம் தான்
இன்னும் நம்மை
ஆண்டு கொண்டிருக்கிறது
இதிகாச நாயகர்களை
கார்ட்டூன் பாத்திரமாக்கி
கேலி செய்கிறார்கள்
விட்டேத்தியாய்
இருக்கும் வரை தான்
வீட்டில் இருக்கலாம் போல.
ப.மதியழகன்