லாவண்யா

தனிமை

அசௌகரியமானதென்கிறார்கள் பலரும்.
அவரவர் உண்மை அவரருடையது.

எனதுண்மையென்னவெனில்
வேடங்கலைந்த வெற்றுடம்பைக்
காட்டும் காலக்கண்ணாடி

மனப்பாறையை மணலாக்கும்
மாயவித்தை செய்யும் மர்மநிஜம்

தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு
வாசலில் நின்றழைக்கும் பசுவும்

நெட்லான்களைக் கிழித்து அறையில்
பிரசவத்துக்கிடம் தேடும் அணிலும்

விடாமல் தொடர்ந்து வீட்டைந்து
நிராகரிப்பை நேசமாக்கும் நாய்க்குட்டியும்

நிகழின் உயிரியக்க விந்தைகளாய்
பரிமாணக்கண் திறக்கும் திரைவிலகல்

காலநிரந்தரத்தில் திசை விசை
மாறாது ஓயாது மோதாது
சுழலும் கோள்களின் ஞாபகமும்

நிசப்த இரவுகளில் காற்றின் ரகசிய
இசைக்கென் காதுகளைத் தருவதும்

நிலாவெளிச்சம் இருட்டுமனதை
வெள்ளையடிக்கும் விநோதங்களும்
வேறெப்போதும் நிகழ்வதில்லை

சங்கடத்திலும் சவக்குழியிலும்
ஒற்றையாகும் துயரியல்
சிலசமயம் நெருடும்தான்

இவைகளைவிடவும் முக்கியமாய்
எல்லையிலா வெளி, கடல்,
எண்ணிலா மனிதர் உயிர்களிடையில்
நீ யாரென வினவி விடைபெறும்
ஒவ்வொருமுறையும்.

மல்லித்தோட்டம்.

காத்திருக்கிறது உனக்காக
என் கூந்தலில் மல்லிகைத்தோட்டம்

குறிப்பறிந்த தோழிபோல
நழுவிச்சென்றதென்  தோள்பற்றியிருந்த
உள்ளாடை

நிலா காய்கிறது
என்னைத் தொட்டுப் பார்
தெரியும்

கணிகைபோல் கணினி
உன் மடியில்

கணினியும் கடலும் ஒன்று
மூழ்கியவன் கரைசேர்வதில்லை

மணித்துணிகளாயுதிர்கின்றன
மல்லிகைகள்

மடிக்கணினியையே நீ
மணந்திருக்கலாம்

One Reply to “லாவண்யா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *