37வது சென்னை புத்தகக் காட்சியில் விருட்சம் பங்கேற்கிறது.  ஸ்டால் எண் 741ல் பங்கேற்க உங்களை அன்புடன்அழைக்கிறேன்.
2012ல் நான்கு புத்தகங்களும் 2013ல் 6புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  புத்தகங்கள் பற்றிய விபரம் இதோ:

ரோஜா நிறச்சட்டை – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.100 – பல ஆண்டுகளாக கதை எழுதி வருபவர்.  கதை எழுதும்போது  எப்போதும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அனுபவத்தை ஒரு கேடயமாக வைத்து கதைகள் எழுதினாலும்,  அனுபவம் வேறு, கதைகள் வேறு.   கிட்டத்தட்ட 60 கதைகள் எழுதியிருக்கிறார்.

வினோதமான பறவை – கவிதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.60 – üஅழகியசிங்கர் கவிதைகள்ý என்ற தொகுதிக்குப் பிறகு வெளிவரும் தொகுப்பு இது.  எழுதிய கவிதைகள் பல எந்தத் தேதியில் எந்த வருடத்தில் என்ற குறிப்பை வைத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டவை.

ஓசிப்மெண்டல்ஷ்டாம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் – விலை ரூ,20 – இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப்மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது. மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளும் அக்மேயிச இயக்கம் பற்றிய நூல்,

ழ கவிதைகள் – கவிதைகள் – பக்கம் ரூ.100 – 1990 ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த ழ கவிதைகள் என்ற இந்தத் தொகுப்பு மீண்டும் மறு பிரசுரமாக 23 ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.

ராம்காலனி-சிறுகதைத் தொகுதி-அழகியசிங்கர் – விலை ரூ.130 – 60 வயதாகிற அழகியசிங்கரின் 3வது சிறுகதைத் தொகுதிதான் ராம் காலனி என்ற புத்தகம்.  இதன் இரண்டாவது பதிப்பு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு பிரசுரம் ஆகிறது.

406 சதுர அடிகள் – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ. 70 – 406 சதுர அடிகள் என்ற அழகியசிங்கரின் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு டிசம்பர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது.  இது மூன்றாவது பதிப்பு.

எதையாவது சொல்லட்டுமா….92

அழகியசிங்கர்
    2004ஆம் ஆண்டு என் பெண்ணிற்கு திருமணம் செய்தபோது ஆறு லட்சத்தில் கல்யாணச் செலவு முடிந்துவிட்டது.  பெரிய கடன் எதிலும் மாட்டிக்கொள்ளவில்லை.  அதே திருமணத்தை அதே மாதிரி இப்போது நடத்தினால் முப்பது லட்சம் ஓடிவிடும்.  பெரிய கடனாளியாக மாறி இருப்பேன்.  இன்றைய கல்யாணத்தில் சத்திரம் பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.  ஒரு கல்யாணம் நடத்த பல மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  மணப்பெண்ணும் பையனும் வெளிநாட்டில் இருந்தால் ஆண்டுக் கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். 
    எனக்குத் தெரிந்து கல்யாணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமென்று தீர்மானித்து நடத்திய சிலரைத் தெரியும்.  என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.    நான் அவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.  üüஎன்ன பார்க்கிறீங்க? இவள் என் மனைவி,ýý என்றார்.
            “எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?”என்று கேட்டேன்.
    “நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டோம்.  பின் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம்.  அதற்கு ஆகும் செலவையெல்லாம் வங்கிக் கணக்கில் போட்டு டெபாசிட்டாக மாற்றி விட்டோம்,” என்றார்.
    இன்னொரு இலக்கிய நண்பர், ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அங்கிருந்தவர்களுக்கு, üüஇனி நானும் இந்தப் பெண்ணும் சேர்ந்து வாழப்போகிறோம்,ýý என்று கூறி முடித்துவிட்டார்.  ஜாதி சடஙகுகளில் ஆத்திரம் கொண்ட ஒரு நண்பர், ராகு காலத்தில் தாலி கட்டினார்.
    பின் கல்யாணத்திற்கு கூப்பிடுவது.  என் நெருங்கிய நண்பர் மேற்கு மாம்பலத்திலேயே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார்.  அவர் என்னைக் கூப்பிடவில்லை.  எனக்கே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார் என்பதே வேறு ஒரு நண்பர் மூலம்தான் தெரியும்.
    என் விஷயத்திலும் இப்படி தவறு நடந்திருக்கிறது.  என் பெண் திருமணத்திற்குக் கூப்பிட்ட பலரை என் பையன் கல்யாணத்திற்குக் கூப்பிடவில்லை.  
    என் உறவினர் ஒருவர், யாராவது வெறுமனே கல்யாணப் பத்திரிகை அனுப்பினால் போக மாட்டார். திருமணம் நடத்துபவர், உறவினரை போன் மூலமாகவோ நேரிலோ கூப்பிட வேண்டும்.  
    நான் அப்படி ஒரு நிலைப்பாடை எடுத்துக்கொள்வதில்லை.  யாராவது பத்திரிகை அனுப்பினால் அதுவே மரியாதைத் தரக்கூடிய ஒன்றாகக் கருதுவேன்.  போக முடியும் திருமணத்திற்கு நிச்சயமாகப் போவேன்.  கல்யாணம் என்பது மட்டுமல்ல, எந்தக் கூட்டத்திற்கும் அப்படித்தான்.  
    இன்று கூட்டம் நடத்துவது என்பதே பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ரூ75க்கு நான் ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தி விடுவேன்.  ஐம்பது ரூபாய்க்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்வேன்.  பின் இருபத்தைந்து ரூபாய்க்கு கார்டில் எல்லோரையும் கூப்பிடுவேன்.  இன்று அது மாதிரி கூட்டத்திற்கு ஐந்நூறு வரை செலவாகும்.  பின் ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.  
    கல்யாணமாக இருந்தாலும் சரி, எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி எல்லாம் எந்தத் தகராறும் இல்லாமல் நடக்க வேண்டும்.  அப்படி அமைந்தால் நல்லது.  அப்படி நடக்காவிட்டால் அந்தக்கூட்டம் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.  சண்டையோடு முடிந்த பல கல்யாணங்களைப் பார்த்திருக்கிறேன்.  
    கல்யாணக் கூடங்களில் சண்டை நடந்து நான் பார்த்திருக்கிறேன்.  ஜானவாசக் காரில் போதிய அளவிற்குப் பூ வைக்கவில்லை என்று மாப்பிள்ளை வீட்டார் நடத்திய சண்டையை நான் பார்த்திருக்கிறேன்.
    ஒரு கல்யாணத்திற்கு எங்கள் குடும்பம் முழுவதும் சுவாமி மலைக்குச் சென்றோம்.  பையன் வீட்டுக் கல்யாணம்.  பெண்ணின் தந்தை கோபக்காரர்.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.  அந்தக் கல்யாணத்தின் மூன்றாவது நாளன்று சத்திரத்தை விட்டுக் கிளம்பும்போது, டிபனுக்குப் பதில் சாப்பாடு போடலாம் என்று பையன் வீட்டு உறவினர் ஒருவர் கூற, அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார் பெண்ணின் அப்பா.  அதேபோல் பையன் வீட்டு உறவினர் இன்னொருவர் அவரிடம் மாட்டிக் கொண்டார்.அவர் எல்லோரையும் திரும்பவும் சென்னைக்கு அழைத்துப் போக ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வண்டி தஞ்சாவூரிலிருந்து வரும்போது பஞ்சர் ஆகிவிட்டது.  தேவையில்லாத தாமதம்.  குறிப்பிட்ட நேரத்தில் கிளம்ப முடியவில்லை. பெண்ணின் திட்டு திட்டென்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.  பையன் வீட்டாரும் சும்மா விடவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி, இப்படி ஒன்றுமில்லாத விஷயத்தில் சண்டையில் போய் நின்றது.  அந்தத் திருமணத்திற்குச் சென்று விட்டு, தப்பித்தால் போதும் என்ற கதியில் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
    ஒரு நிகழ்ச்சி என்றால், அதைக் குலைப்பதும் நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக நினைக்கிறேன். ஒரு கிரிக்கெட் போட்டிக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருப்பார்கள்.  அதை மழை வந்து குலைத்துவிடும.
    ஒருமுறை எங்கள் அலுவலகத்தில் தங்கக் காசுகள் விற்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  வங்கிக் கிளையே பரபரப்பாக இருந்தது.  பெரிய அதிகாரிகள் வர இருப்பதால் அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காக வங்கிக் கிளையின் தோற்றத்தில் பல மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம்.  அன்று காலையில் ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார்.  அவரை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தச் சமயத்தில் மின்சாரம் நின்று போய்விட்டது.  அந்த வாடிக்கையாளர் இருட்டில் போய்க் கொண்டிருக்கும்போது, லாக்கரைத் திறக்க உதவும் இரும்புப் படிக்கட்டின் முனை நெற்றியில் பட்டு ஒரே ரத்தம்.  விழா சிறிது நேரத்தில் துவங்குவதற்கு முன் இப்படி நடந்து விட்டது.  அன்று எதிர் பார்த்தபடி விழாவும் சிறப்பாக நடைபெறவில்லை.  சிறப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியைக் குலைப்பதற்கான இன்னொரு நிகழ்ச்சி அரங்கேறி விட்டது.  
    இதுமாதிரியான சம்பவங்கள் அரசியல் கூட்டங்களில் அதிகமாக நடைபெறும்.  சோ பேசும் கூட்டம் ஒன்று தி நகரில் ஏற்பாடாகி இருந்தது. 
அந்தக் கூட்டத்தின் முடிவில் பெரிய சலசலப்பு.  ஏனென்றால் மாடுகள் கூட்டத்தில் புகுந்து ரகளை ஆகிவிட்டது.  கூட்டத்தில்ü கலந்துகொண்ட நான் எப்படி கூட்டத்தில் நசுங்காமல் தப்பிப்பது என்ற தோன்றிவிட்டது.கூட்டத்தைக் குலைக்கும் நிகழ்ச்சிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை.
    க.நா.சு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்று விருப்பப் படுவார்.  ஆனால் அவர் இருந்தபோது அதுமாதிரியான கூட்டம் நடத்தமுடியாமல் இருந்தது.  காரணம் கூட்டம் நடத்தும் அனுபவம் இல்லை.
 
    நான் கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது இலக்கியக் கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  எனக்கு இலக்கியக் கூட்டம் நடத்த காரணமாக இருந்தவர் காயின் என்கிற பெயரில் பாத்திரங்களைத் துலக்கும் பவுடரை நடத்திக்கொண்டு வந்தவர்.  அவர் விளம்பரத்திற்காக என்னை மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தும்படி தூண்டினார்.  ஆனால் மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் கூட்டத்திற்கு ஆகும் செலவைப் பகிர்ந்துகொள்ளவில்லை.  நான்தான் ரூ75 செலவில் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  வந்து பேசுபவர்களுக்கு பயணச் செலவு கூட நான் தந்ததில்லை.    ஆனால் எல்லோரும் சொன்னவுடன் வந்தார்கள்.  சிலசமயம் ஓட்டலில் டீ காப்பி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.அந்தத் தருணத்தில் இலக்கியக் கூட்டத்திற்கு ஒரு தேவை இருந்தது.  இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  வல்லிக்கண்ணன் பேசும்போது மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைபற்றி முன்கதைச் சுருக்கம் போல் பேசிக்கொண்டே போனார். சிட்டி, காசியபன். ந. முத்துசாமி, சுஜாதா என்று பலர் பேசியிருக்கிறார்கள்.  கூட்டத்திற்கு வருபவர்கள் கிட்டத்தட்ட 35 அல்லது 40 பேர்கள்தான் இருப்பார்கள். கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் வர மாட்டார்கள்.  பெண்கள் வரவே மாட்டார்கள்.  எல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் அல்லது வயதானவர்கள்தான்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடி அறையில்தான் கூட்டம் நடக்கும்.  அதேபோல் சில படைப்பாளிகளின் இரங்கல் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன்.  கரிச்சான் குஞ்சு, ஷண்முக சுப்பையா. சி சு செல்லப்பா என்று.  
    பிரமிளை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று நினைத்தேன்.  அவரை கூட்டத்திற்கும் அழைத்தேன்.   கூட்டத்திற்கு வரவும் இல்லை.  பேசவும் வரவில்லை.  ஆனால் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  üநீங்கள் இப்படி கூட்டம் நடத்துவது ஆபத்தானது,ýஎன்று.  ஏன் அவர் அப்படி எழுதினார் என்று எனக்கு இன்னும்கூட புரியவில்லை.  எந்தக் கூட்டத்தையும் குலைக்கும் நிகழ்ச்சியை அவர் புரிந்துகொண்டு அப்படி சொல்லியிருக்கலாம்.
    இப்போதெல்லாம் கூட்டம் நடத்தினாலும் கூட்டத்திற்கு வருபவர்கள் போக்குவரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தைக் குலைக்கும் சதியாக போக்குவரத்தும் மாறிவிட்டது. 
   
    (APPEARED IN AMIRTHA MAGAZINE JANUARY 2014 ISSUE)
   

பொன்னாடை

 
 பா சிவபாதசுந்தரம்
 
 
ஒரு நண்பரிடமிருந்து சில வாரங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எங்கள் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு நடத்துகிறோம், நீங்கள் வந்து சிறப்புரையாற்ற முடியுமா? கேட்டவர் டாக்டர் பி.குமார்.

என்றைக்கு?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை.

சாதாரணமா நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவேலைகள் ஏதும் வைத்துக் கொள்வதில்லை. ஞாயிற்றுக்கிழமை என் குடும்ப தினம். வாரத்துல அந்த ஒரு நாள் தான் முழுவதுமாக என் மனைவி, மக்களோட இருக்கும் நாள். இருந்தாலும் நான் படித்த கல்லூரிக்கு கூப்பிடுகிறார் என்பதால் மறுக்க முடியவில்லை.

சரி வர்றேன். என்ன தலைப்புல பேசணும்?

உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றில் பேசலாம், என்றார் நண்பர்.

அந்த சுதந்திரமும் பிடித்திருந்தது.

அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு, புகைப்படமும் என்னை பற்றிய குறிப்பும் அனுப்ப சொல்லி.
சனிக்கிழமை மாலை மீண்டும் ஒரு அழைப்பு, வண்டி அனுப்பவா? என்று.

வேண்டாம். நானே என் காரில் வந்து விடுகிறேன் என்றேன்.

ஞாயிறு காலை. வழக்கம்போல் என் மனைவியுடன் கருத்தரங்கிற்கு ஆஜர். மிக சொற்பமான கூட்டம், கல்யாணம் முடிந்து மறுவீட்டிற்கு வரும் கூட்டம் போல.மற்ற கருத்தரங்குகளில் எப்படி என்று தெரியவில்லை. மருத்துவ கருத்தரங்குகளில் இது ஒரு பிரச்சினை. முதல் நாள் முழுதும் மது மற்றும் புகையை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வாசித்து, நிறைய பேசி நிறைய விவாதித்து விட்டு, அன்று மாலை களியாட்டத்தில், மூக்கு முட்ட குடித்து, அடுத்த நாள் காலை நிகழ்வுகளுக்கு வர இயலாத அளவிற்கு மட்டையாகி விடுவோம். ஒரு சில சமயம் இரண்டாவது நாள் காலை
 நிகழ்ச்சிகளில், பேசுபவரும், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டும்தான் இருப்பார்கள். தப்பிதவறி ஒருத்தரோ இரண்டு பேரோ அதிகம் இருந்தால் அநேகமாக அவர்கள் அடுத்து பேச வேண்டியபவர்களாக இருப்பார்கள்.

நான் அனுப்பிய குறிப்பை வைத்து ஒரு பெண், என்னை, வல்லவர், நல்லவர் என அரங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தினார். முன் வரிசையில் என் பழைய நண்பர்களும், வேறு சிலரும். பின் வரிசைகளில் முதுகலை மாணவ, மாணவியர்கள். உரையாற்றுபவர்களை கேள்விகள் மூலம் மடக்கி, தன் மேதமையையும், இருத்தலையும் பறைசாற்றும், அக்கலூரி பேராசிரிய
 நண்பர் அன்று வரவில்லை.

உரை முடிந்ததும் நினைவு பரிசையும் முதல்வரே வழங்கினார். அதை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு நண்பர்களிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு சாப்பிட சென்றோம்.

பிரியாணி. மற்ற நாட்களை விட ஞாயிறு மதியம் சாப்பிடும் பிரியாணியின் ருசியே தனி. முடித்து விட்டு அரை மயக்கத்தில் விடை பெற்றுக் கொண்டோம். கல்லூரியை விட்டு கார் சாலையை தொட்டதும்தான் ஞாபகம் வந்து, என் மனைவி கேட்டாள், ‘ஏங்க அந்த பொன்னாடையை மறந்துட்டமே’.

திரும்பணும் என்றால் ரொம்ப தூரம் போய்தான் ‘யூ டர்ன்’பண்ணனும்கிற சோம்பேறித்தனம். தூக்கக் கலக்கம் வேற.

‘விடு யார்கிட்டயாவது கொடுத்து விட்டிருவாங்க’ என்றேன்.

அடுத்த இரு நாட்களுக்கு வழக்கமான வேலை பளு. மூன்றாம் நாள் பொன்னாடை ஞாபகம் வந்தது. ஆனாலும் ஃபோன் செய்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதுக்கு நடுவுல என் மனைவி பொன்னாடை என்னாச்சுன்னு ஒரு முறை கேட்டாள்.

ம்ம்…. மறந்திருச்சு. ஃபோன் பண்றேன்னேன்.

அம்பத்தூரில் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கும் ஜெயராமன் என் நண்பர். சில சமயம் மதிய வேளைகளில் அவர் கடையில் இல்லாத நேரங்களில் கடை பசங்கதான் வியாபாரத்தை கவனித்துக் கொள்வார்கள். நான் கூட கேட்பதுண்டு, ‘எப்படி ஜெயராமன் பசங்களை நம்பி கடையை விட்டுட்டு போறிங்க?’

சார் பசங்களெல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க சார்.

எப்படி சொல்றீங்க?

அவங்க வேலைக்கு சேரும்போதே சோதித்து விட்டுதான் சேர்ப்பேன்.

என்ன செய்விங்க?

ஒரு நூறு ரூபா நோட்டை அவங்க கண்ணுக்கு மட்டும் தெரிகிற மாதிரி போட்டிருவேன். எடுத்து கொண்டு வந்து கொடுத்துட்டான்னா பரிட்சைல தேறிட்டான்னு அர்த்தம். இல்லையென்றால் பஸ்ஸுக்கு காசு கொடுத்து ஊருக்கு அனுப்பி விடணும்கிறதுதான் சோதனை.

யாராவது எடுத்துக்கிட்டு கொடுக்காம இருந்திருக்காங்களா?

இது வரைக்கும் இல்லை.

நேற்று பீரோவில் பழைய பொன்னாடை ஒன்றை பார்த்த போது ஏனோ ஜெயராமனின் சோதனை ஞாபகம் வந்தது.

படிப்பு ஏறாமல் கடையில் வேலை செய்ய வரும் பசங்களே நேர்மையாக இருக்கையில், படித்து பட்டங்கள் பெற்ற மருத்துவர்கள் கண்டிப்பாக பொன்னாடையை எனக்கு அனுப்பி விடுவார்கள். என்ன, அவர்களுக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம் இருப்பதால் சில மாதங்களோ அல்லது வருடங்களோ தாமதமாகலாம்.

இதில் என் தலையை அரிக்கும் ஒரே சந்தேகம், பொன்னாடையை பார்க்கும் பொழுது எனக்கு ஜெயராமன் ஞாபகம் வருவது போல், எனக்களித்த பொன்னாடையை பார்க்கும் போது அவர்களுக்கு எது ஞாபகம் வரும்? அல்லது
ஏதாவது ஞாபகம் வருமா?

இடையனின் கால்நடை

எம்.ரிஷான் ஷெரீப்
காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை
ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்
வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது
மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் – பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்
தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

உயிர்ப்பித்தல்..

அமைதிச்சாரல்
விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும்
கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன்
குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக்
கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு
வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம்
செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும்
மல்லிகைத்தோட்டமும்.
சிந்திச்சிதறிக்கிடக்கும்
சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த
அணிற்பிள்ளைகளுடன்
பகிர்ந்துண்ட
தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது
அடிநாக்கில்.
“செவ்வகப்பெட்டியினுள்
அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக
இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக்
கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும்
ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும்
மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும்,
க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன்
உயிர்த்தெழுகிறான்

மனதுள்
உறங்கும் விவசாயி.

“மார்க் ஸுக்கர்பெர்க் நகர்”

பா சிவபாதசுந்தரம்
பிரகாஷை ஒரு குறும்பட பயிற்சி பட்டறையில்தான் அவன் சந்தித்தான். சிறுசேரியில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருந்தான். இப்ப அவனை பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அம்பத்தூரிலிருந்து நேர் பஸ் கிடையாது. மத்திய கைலாஷ் வந்து வேறு பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
ராஜீவ் காந்தி சாலை இன்றைக்கு காலைலதான் பேக் பிரித்து எடுக்கப்பட்டது போல் ஒரு மெருகோடு இருந்தது. பார்க்கிற பக்கமெல்லாம், ஜீன்ஸ், லெக்கின் மற்றும் கவ்வி பிடித்திருக்கும் மேலாடைகளுடன் இளம்பெண்கள். அனேகமாக அனைவரது கழுத்திலும் கலர் கலரான பட்டைகளுடன் அடையாள அட்டை. தாலி மாதிரி.
இருபது வருடங்களுக்கு முன் தரமணியில் வேலை செய்கையில் இதே ரோடில் தினமும் பயணித்திருக்கிறான். அப்போதெல்லாம் கசங்கிய காக்கி உடைகளுடன் பாலிடெக்னிக் மாணவர்களும், மற்ற தொழிற்சாலை ஆட்களும், மிக சாதாரண அல்லது பழைய உடைகளுடன் வி.ஹெச்.ஸ் நோயாளிகளும், அவர்களின் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களும் நடமாடுவதை பார்த்திருக்கிறான். ஹும், எல்லாம் மாறிப்போச்சு. சாலையின்
 அழகை சமதளமாக இடப்பட்ட தார் மட்டுமல்ல, அதில் நடமாடும் மனிதர்களின் நாகரிகமும், அழகும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது என நினைத்துக்கொண்டான்.
சிறுசேரிக்கு பஸ் ஏதும் இருக்கா என்று யாரையாவது விசாரிக்கலாம் என நினைத்தவன், தன்னை கடந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இரண்டு ஜீன்ஸ் ஏறுவதைப் பார்த்தவுடன், மனதை மாற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோவை நோக்கி ஓடினான். உள்ளே ஏற்கனவே ஒரு ஐடி இளைஞனும் ஓரு சுடிதாரும் இருந்தனர். ஆர்வமாக ஏறப் போனவனை தடுத்தது டிரைவரின் குரல், ‘முன்னாடி வா சார்’. சிலரை பார்த்ததும் பிடிக்காமல் போகும்,
 சிலருடன் பேசியவுடன் பிடிக்காது. அவனுக்கு டிரைவரை பார்க்காமலே பிடிக்காமல் போனது. கறுவிக் கொண்டே டிரைவவர் பக்கத்தில் அமர்ந்தான்.
இருக்கையின் பின்புறம் ஏதோ இடிப்பது போன்ற பாவனையுடன் நாசூக்காக பின் திரும்பி உட்கார்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான். அனைவர் காதுகளிலும் இயர்ஃபோன். உண்மையாகவே அவர்கள் இசை தான் கேட்கிறார்களா என அவனுக்கு சந்தேகம். ஏன்னெனறால் எல்லார் முகத்திலும் பக்கத்திலுள்ளவர்கள் ஏதேனும் பேசிவிடுவார்களோ என்ற பயம் மட்டுமே தெரிவதாக நினைத்துக் கொண்டான். முன்பெல்லாம்
 எலக்ட்ரிக் ட்ரெயினில் ஹிண்டு பேப்பரில் புதைத்துக் கொண்டவர்களுடன் பயணித்திருக்கிறான். முன்னர் புத்தகம் அல்லது பேப்பர், இப்போது செல்ஃபோன் மனிதர்களுக்கு திரையாகிவிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டான்.
ஷேர் ஆட்டோ மாறி மாறி வந்து, சிறுசேரியில் இறங்கி பிரகாஷுக்கு ஃபோன் செய்தான்.
‘பாஸ், வந்துடிங்களா? ஒரு மீட்டிங்க்ல மாட்டிக்கிட்டேன். கொஞ்ச நேரத்தல வந்துர்ரேன்’.
எவ்வளவு நேரம் ஆகும் பிரகாஷ்?
‘ஒன் அவர் தான் பாஸ்’
என்னது, ஒன் அவரா? இவன் கேட்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சே, அம்பத்தூரிலிருந்து இங்கு வரவே ரெண்டு மணிநேரம் ஆயிருச்சு. இன்னும் ஒரு மணி நேரம் என்ற அலுப்பு வந்தது.
சாலையை பார்த்தான். பள பளப்பான கட்டிடங்கள் விரைந்து செல்லும் வெள்ளை நிற ஏசி பஸ்களும் சொகுசு கார்களும். வாகன தடுப்பு போட்டிருந்த ஒரு ஐடி கட்டிடத்தினுள் இளைஞர்கள் சிலர் எதையோ தொலைத்த முகபாவத்துடன் வெளிப்பட்டனர். நவநாகரிகமான இளம் பெண்கள் சோம்பேறித்தனமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர்.  ஐடி கமபெனிகளில் அழகான பெண்களத்தான் வேலைக்கு எடுப்பார்களா அல்லது
 வேலையில் சேர்ந்தபின் அழகாகி விடுகிறார்களா என்ற சந்தேகம் அவனுக்கு எப்பவுமே உண்டு.
வேடிக்கை பார்த்தபடியே சிறிது தூரம் நடந்தான்.லேசாக பசிப்பது போலிருந்தது. ஒரு டீ குடிக்கலாம் என்ற யோசனை வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை டீக்கடை ஏதும் இல்லை. சிறிது தொலைவில் ஒரு மரத்தடியில் நாலு சைக்கிள் சக்கரங்களுக்கு  மேல் ஒரு டப்பாவை பொறுத்தியது போலிருந்த தள்ளு வண்டி கடை இருந்து. அருகில் செனறான். மறுபுறமிருந்து பின்னப்படாத தலையுடன், சிகரெட் புகையை
 ஊதியவாறு வெளிப்பட்டாள் ஒரு இளம்பெண். கையிலிருந்த பேபப்ர் டம்பளரிலிருந்த கடைசி மடக்கு டீயை குடித்து விட்டு, அருகிலிருந்த பெரிய வாளிக்குள் டம்பளரை கசக்கி எறிந்தாள். முடிந்த சிகரெட்டை காலால் நசுக்கி விட்டு, அருகிலிருந்த கட்டிடத்தை நோக்கி அவசரமாக நடந்தாள்.
‘ஒரு டீ, சக்கரை கொஞ்சம் கம்மியா’ கடைகாரரிடம் சொல்லி விட்டு சாலையை நோக்கி பார்வையை வீசினான்.
சிறிது தூரத்தில் சில டெம்போ டிராவலர் வண்டிகள் நின்றிருந்தன. முதலாம் வண்டி அருகில் மெலிதான கூட்டம். வெள்ளை சீருடை அணிந்திருக்கும் டிரைவர்கள் சிலர் வண்டியின் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவரை சுற்றி நின்றிருந்தனர். டீயை முடித்து காசு கொடுத்து விட்டு அவர்களை நோக்கி நடக்கலானான்.
உட்கார்ந்திருந்தவர் டி.ராஜேந்தர் மாதிரி முடியை கையால் ஒதுக்கியபடி பேசிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய உலகத்திலுள்ள எல்லா தலைப்புகளிலும் பேசிக் கொண்டிருந்தார். அவரின் சுவாரஸ்யமான பேச்சில் லயித்திருந்த அவனின் செல்ஃபோன் அடித்தது.
‘பாஸ், எங்க இருக்கிங்க?’
சொன்னான்.
சிறிது நேரத்தில் யமஹா வண்டியில், முதுகில் தொங்கும் மூட்டையுடன் பிரகாஷ் வந்தான்.
‘ஏறுங்க பாஸ் போலாம்’ இவன் பின்னால் அமர வண்டிஒரு உறுமலுடன் கிளம்பியது.
‘பிரகாஷ்  நீங்க ஆஃபிஸ் பஸ்ல வர்ரதில்லையா? எப்படி இவ்ளோ தூரம் டூ வீலர்ல வர்ரிங்க?
இவ்ளோ தூரமா? இங்கதான், பக்கத்துல ஃப்ரண்ட்ஸ் நாலு பேரோட ஒரு வீடெடுத்து தங்கிருக்கோம்.
‘இப்ப வீட்டுக்கா பிரகாஷ்?’
இல்ல பாஸ். லைட்டா எதனாச்சும் ஃடிபன் சாப்பிடுவோம் முதல்ல. அப்புறம் வீட்டுக்குப் போய்ட்டு நாம ஷார்ட் ஃபிலிம் பத்தி பேசலாம்.
வண்டி ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் நின்றது.
‘கோரமணடல் பிளாஸா’ எழுத்துக்கூட்டி படித்தான்.
‘679 பொறியியல் கல்லூரி’ என எழுதியிருந்த மஞ்சள் நிற பஸ் வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தது.
பெயர் வியப்பளிக்கவே, பிரகாஷிடம் கேட்டான்.
என்ன பண்றது, எல்லா பேர்லயும் இன்ஜினியரிங் காலஜ் இருக்கு. பேர் வச்சு கட்டுபடி ஆகலையாம். அதுனால இனிமே நம்பர்தானாம்.
சரி, வாங்க பாஸ் போகலாம், பிரகாஷ் விறு விறு வென முன் நடக்க பலஹீனமாக பின் தொடர்ந்தான் அவன்.
‘நூடுல்ஸ் கிங்’ வண்ண எழுத்துக்களில் மின்ன உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.  இரண்டொருவரைத் தவிர உள்ளே யாருமில்லை. ஒரு கணம் தயங்கிய இவன் பேண்டின் பின் பாக்கெட்டில் பர்ஸை தடவியவாறு பின்தொடர்ந்தான்.
பிரகாஷ் கவுண்டர் அருகே செல்ல
இவன் ஒரு சேரில் அமர்ந்தான்.
முன்னால் மூலையில் உட்கார்ந்திருந்த பெண் முடியை வைத்து எழுதிக் கொண்டிருந்தாள்.
‘பாஸ் ஆர்டர் பண்ணிட்டேன். அது வர்ரதுக்குள்ள ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்ரேன்’ சொல்லி விட்டு ஃபோனை காதில் வைத்தவாறு ‘சொல்லுப்பா’ என்றவாறு கடைக்கு வெளியே சென்றான்.
மீண்டும் மூலையில் இருந்த சுடிதார் அணிந்த பெண்ணை பார்த்தான். மெல்லிய கறுப்பு நிறம். ‘பம்’ என அடங்க மறுக்கும் தலைமுடி.  சேரில் உட்கார்ந்திருந்த அவள், உடலை முன் நீட்டி டேபிளில் முழங்கையை ஊன்றி, பக்கவாட்டாக திரும்பி உட்கார்ந்து. . . இல்லை ஏறக்குறைய படுத்திருந்தாள்.  முன்னால் விழுந்திருந்த முடியை வலது கையில் பிடித்திருந்தது, எழுதுவது போன்றிருந்தது. எழுந்து
 நின்றால் முடியின் நீளம் இடுப்பைத் தாண்டும் என நினைத்துக் கொண்டான். நீளமான தலை முடியுள்ள பெண்களுக்கு உடலெங்கும் முரட்டு முடி இருக்கும் என்பது அவன் எண்ணம்.
அவள் கண்களை மூடியிருந்தாள். தூங்குவது போலிருந்தது. கூர்ந்து கவனித்தான். மூடிய இமைகளினுள் விழி வேகமாய் உருண்டு கொண்டிருந்தது. ஓ. . . கனவு காணுகிறாள் போலும்.
அவனுக்கு ஒரு பழக்கம், தன் கனவின் மூலம், பிறர் கனவிற்குள் நுழைந்து பார்ப்பது. அடுத்தவர்களின் அந்தரங்கம், அநேகமாக எல்லாருக்குமே சுவாரஸ்யமானதுதான். அவனுக்கு அது கூடுதல் சுவாரஸ்யம். சினிமா தியேட்டரில் சிறுநீர் கழிக்கும் போதுகூட பக்கத்தில் எட்டி பார்ப்பான்.
அவள் கனவிற்குள் நுழைந்தான். ஆடிக் கொண்டிருந்த ரஜினியை புறந்தள்ளி விட்டு, ‘அவள் வருவாளா’ என பாடிக் கொண்டிருக்கும் அஜித்தை ரசித்து மெய் மறந்திருந்தாள்.
புன்னகையுடன் அடுத்த டேபிளில் உட்கார்ந்திருந்தவனை பார்த்தான். பாதி அளவே இருந்த விரல்களுடன் அவன் தன் செல் ஃபோனில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். முடித்தவுடன் இவனைப் பார்த்து ‘வெற்றி’ என்பது போல் கட்டை விரலை உயர்த்தினான். கட்டை விரல் பாதி அளவு தான் இருந்தது. இவன் புரியாமல் பார்க்க, இன்றைக்கு போட்ட ஐம்பத்து மூன்றாவது ஸ்டேடஸ் என்றான். ‘ஆதி முதல் அடி முடி
 வரைக்கும் எல்லாம் நம்மளுக்கு தெரியும்லா’ என்றான் தனக்குள்.
‘என்ன பாஸ் டயர்டா’ என்ற குரல் கேட்டு விழித்தான். எதிரே இரண்டு தட்டுகளும் இரு கோப்பைகளில் நூடுல்ஸும் இருந்தன. கையிலிருந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு உட்கார்ந்தான் பிரகாஷ்.
இவன் ஆவலுடன் புத்தகத்தை பிரித்துப் பார்த்தான்.
‘எப்படி இருந்துச்சு சாந்தி?’
‘இந்த நாலு வருஷத்துல இன்னைக்குதான் சூப்பர். சரி சரி சீக்கிரம் கிளம்பு, ஹஸ்பண்ட் வந்திருவார்’
புரட்டி வேறொரு பக்கத்தைப் பார்த்தான்.
‘அவன் வாஷ் பேஸினில் வெற்றிலை எச்சில் போல துப்பினான். அவள் அதை பார்த்து சிரிக்க, ‘நாயே, பீரியடஸ்னா சொல்லக்கூடாதா? என்றான்’
என்ன இது பிரகாஷ்?
குறுங்கதைகள்.
த்தூ… தற்கொலைதான் பண்ணிக்கணும் படிச்சிட்டு. கருமம்.
சரி விடுங்க பாஸ். சாப்பிடுங்க முதல்ல.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அப்பபோதுதான் மிக நெருக்கமாக நடந்து வந்த ஒரு இளம் பெண்ணும், ஒரு முதிர் இளைஞனும் வலது பக்க சேர்களில் அமர்ந்தனர். புடவையில் அந்தப் பெண் மிக அழகாகவே இருந்தாள், ஒரு சுமாரான நடிகை மாதிரி. கழுத்தில் பட்டையும், அடையாள அட்டையும். அவளை அவன் இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறான். அவசரமாக ஞாபக அடுக்குகளில் துழாவினான். மீண்டும் ஒரு முறை பார்த்தான். அமலாபால் மாதிரி
 இருந்தாள்.
‘என்னா பாஸ் பார்க்குறிங்க, அது அமலாபாலே தான்’
என்னது அமலா பாலா? இங்க ஐடில என்ன வேலை? ஆச்சரியம் கலந்த மென்குரலில் கேட்டான்.
அதையேன் கேக்கிறிங்க. மார்க்கெட் காலி. படம் ஒண்ணும் இல்ல. இங்க டி.சி.எஸ் ல தான் ஹெ.ஆர் ல இருக்காங்க.
கூட இருக்குறது யாரு?
வினய். காக்னிஸண்ட்ல இருக்காரு. நல்ல கவிதை, கதையெல்லாம் எழுதுவாரு. அமலாபாலை பத்தி ஃபேஸ் புக்குல எழுதி எழுதியே அவங்கள கமாத்திட்டார்னா பாத்துக்குங்களேன். சரியான மச்சம் பாஸ்.
கல்யாணம் ஆயிருச்சா?
அது தெரியல பாஸ்.
பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷின் செல் அழைத்தது. பேசியவனின் முகம் அதிர்ச்சியை காட்டியது.
என்ன ஆச்சு பிரகாஷ்?
ஒரு பேட் ந்யூஸ். எங்க மாட்யூல் மேனேஜர் சூசைட் பண்ணிக்கட்டார்.
ஐய்யய்யோ. ஸாரி பிரகாஷ். இவன் மனக்கண்ணில் ஒரு நாற்பத்தைந்து, ஐம்பது வயதுள்ள ஒரு ஆண் தூக்கில் தொங்கும் காட்சி வந்தது. மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நல்ல ஜாலியான மனுஷன். ரெண்டு பொம்பள பிள்ளைகள். போன மாசந்தான் இங்க அபார்ட்மெண்ட்ல எட்டாவது மாடில பெரிய வீடு வாங்கினார்.  பாவம் அவர் வைஃப் வேலைக்கு கூட போகலை. இனி அந்த குடும்பம் என்ன ஆகுமோ.
ச்சே.பாவம், கம்பெனி எதாவது உதவி செய்யுமா? என்றான் இவன்.
நீங்க வேற. இன்னைக்கு காலைலதான் அவரை வேலை விட்டு தூக்குனாங்க. வீட்டு பால்கனில இருந்து குதிச்சிட்டாராம். ஹெச். ஆர். ல கொஞ்சம் அனுசரிச்சு போயிருக்கலாம். நேர்மையா இருப்பேன், உண்மை இருப்பேன்னு பிடிவாதமா இருந்தார். இருபத்தெட்டே வயசு தான். எல்லாம் முடிஞ்சி போச்சு.
என்னது, இருபத்தெட்டு வயசா?
ம்.
ஏன் பிரகாஷ், உங்களுக்கு யூனியன், லேபர் போர்டெல்லாம் கிடையாதா?
பாஸ் நானே சோகமா இருக்கேன். ஜோக் அடிக்காதிங்க. எங்களுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், ‘டார்கெட்’
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். எதிரே ஆறிய நூடுல்ஸ் பாதி இருந்தது.
பிரகாஷ் எழுந்து கொண்டான். ‘ஸாரி பாஸ். நான் கிளம்பறேன், பில் பே பண்ணிட்டேன். இன்னோரு நாள் பார்க்கலாம்.
பிரகாஷ் சென்ற சில நிமிடங்களில் இவன் எழுந்து கொண்டான்.
கிளம்ப யத்தனித்தபடி அமலாபாலை ஒரு முறை பார்த்தான். அமலாபால் மெனு கார்டை கையில் பிடித்தபடி யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்திருந்த விநய் , ‘இன்று அனுஷ்கா மாதிரி ஒரு பெண்ணை பார்த்தேன்’ என ஃபேஸ் புக்கில் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
மால் ஐ விட்டு இவன் வெளியே வந்தான். இறுக்கி உடை அணிந்து, கழுத்தில் பட்டை தொங்க, பதின்ம வயதை தற்போதுதான் கடந்த, வருங்கால ஐடி அடிமைகளை சுமந்தபடி, மஞ்சள் நிற இஞ்சினியரிங் கல்லூரி பஸ் இவனை கடந்து விரைந்து கொண்டிருந்தது.
அடையாறுக்கு எந்த பஸ் போகும் என விசாரிக்க நடந்தான்.

பாலிதீனில் பணப்பை

 மாயன் சத்யா
பாலிதீன் பையில்
பத்திரப் படுத்தப்பட்டது
கொஞ்சம் துவண்டு போன
அந்த பணப்பை (மணிபர்ஸ்)
பின்பையில் வைத்தால்
காணாமல் போகலாம்
என்றெண்ணி
நெஞ்சருகே அணைத்து
வைக்கப்பட்டது பணப்பை
வருடத்தின் ஓரிரு மாதத்தில்
ஒரு சில நாளில்
பெய்யும் மழைக்காக
வருடமெல்லாம் பாலிதீனில்
பதுங்குகிறதா பணப்பை
இல்லை.. இல்லவே இல்லை
வருடமெல்லாம்
பொய்க்காமல் பெய்யும்
மழை ஒன்றிடமிருந்து
பாதுகாக்கப் படுகிறது பணப்பை
மண் சூடு தீர்க்கும்
வான் மழை பொய்க்கலாம்
உழைப்பாளியின் உடல் சூடு
நீக்கி பெருகும் மழை
வற்றாமல்
வருடமெல்லாம் வழிந்தோடும்
வியர்வை
உழைக்காத காசு
உடம்பில் ஒட்டாது
இங்கே உழைத்த காசு
ஒட்டிவிடக்கூடாது என்பதற்க்காக
வியர்வையிடமிருந்து
ஒழித்து வைக்கப் படுகிறது
பாலிதீனில் பணப்பை

பஞ்சு மனசுகள் (சிறுகதை) –


செல்வராஜ் ஜெகதீசன்


கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு,
தூர எறிந்தான் பாலு.
பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால்,
இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான்.
இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
வேலை மட்டும் போயிருக்காவிட்டால் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவைகள்  எல்லாம் 
இல்லாமல் போய் இருக்கும்.
வேலையிலேயே
இருந்திருந்தால் கலாவும் கூடவே இருந்திருப்பாள். அப்படியும் சொல்ல
முடியாது. வேலை போனதை எப்படி கலா போனதோடு ஒப்பிட முடியும்?
இத்தனை வருடங்கள் கழித்து,
எட்டு ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டு ஒரு அம்மாவால் இன்னொருவனோடு எப்படிப் போக முடிந்தது?
“வா
சார் வா அஞ்சு வச்சா பத்து, பத்து வச்சா இருபது”
என்ற குரல் வந்த திசை நோக்கி அவன் கால்கள் திரும்பின.
ஸ்டாப் குவாட்டர்ஸ் ஒட்டி இருந்த மதிற்சுவர் ஓரம் மாணிக்கம் தன் கடையை விரித்து எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முன் பெரிய அட்டைத்தாள் ஒன்று விரிக்கப்பட்டு,
ஆறு சினிமா நடிகர் நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விளையாட விருப்பம் உள்ளவர்கள்,
தான் விரும்பும்
படத்தின் மீது காசோ பணமோ வைக்கலாம். ஏறக்குறைய எல்லாப் படத்தின் மீதும்
காசோ பணமோ வைக்கப்படும் வரை மாணிக்கம் திரும்பத் திரும்ப கூப்பிட்டுக்
கொண்டிருப்பான்.
அத்தனை படத்தின் மீதும் காசோ பணமோ வைக்கப்பட்டபின், “எடுக்கலாமா
எடுக்கலாமா எடுக்கப்போறேன்” என்று ஒன்றிருமுறை கூவுவான். 
“கூட வைக்கணும்னா இப்பவே வச்சுக்கோ,
அப்பால படம் வரச் சொல்லோ பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல சொல்டேன்” என்று ஓரிருமுறை சொல்லிக் கொண்டிருப்பான்.
காசை வைத்துவிட்டு காத்திருப்பவர்கள் 
கொஞ்ச கொஞ்சமாக “சரி எடுப்பா” என்று நச்சரிக்கத் தொடங்கும் போதும் எடுக்க மாட்டான்.
“கொஞ்சம் பொறு சார்,
இதோ எடுத்துடலாம்”
என்று கொஞ்ச நேரம் கடத்துவான்.
முன்பென்றால்,
பாலு இந்நேரம் யாரோ ஒருவருக்காக சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருப்பான்.
“தலைவர் மேல வை சார்,
வாரி வாரி குடுத்த கை சார்” என்பான்.
“என் கைல கண்டி காசு இருந்தா,
இந்நேரம் அப்படியே தலைவர் படத்துல வச்சிருப்பேன் சார்” என்பான்.
இதெல்லாம் போன வாரம் வரை. இன்றைக்கு?
எதுவும் சொல்லாமல்,
எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கம் கூட பாலுவைப் பார்த்து “இன்னா அண்ணாத்தே ஒரு மாரியா கீற” என்றான்.
பதில் ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றுப் பார்வையை வீசினான் பாலு.
“சரி அண்ணாத்தைக்கு ஏதோ மூடு அவுட்டு போல” என்று மாணிக்கம் அட்டைத்தாளின் வலப்புறமாக வைக்கப்பட்டிருந்த கவர்களை கையில் எடுத்தான்.
சீட்டுக்கட்டுக்களைக்   கலைத்துப் போடுவது போல் அந்தக் கவர்களை மாற்றி மாற்றி வைத்தான். 
ஒருவாறாக ஒரு கவரை எடுத்தவன், அதை இரண்டு விரல்களுக்கு
மத்தியில் வைத்தபடி “யார் வரப் போறா’னு பார்க்கலாமா,
தானைத் தலைவனா,
அபிநய சரஸ்வதியா,
நாட்டியப் பேரொளியா” என்றவாறு அந்த கவரை ரெண்டு உதறு உதறினான்.
அவன் சொன்னது எல்லாம் அங்கே ஒட்டப்பட்டிருந்த படங்களில் இருந்த எம். ஜி. யார்,
சரோஜாதேவி,
பத்மினி ஆகியோரை.
கவரை ஒருமுறை ஊதி விட்டு,
பிரித்து,
உள்ளிருந்த படங்களை வெளியே எடுத்தான். மூன்று படங்கள். ஒரு சரோஜாதேவியும் இரண்டு பத்மினியும்.
த்மினியை
கலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் சிவாஜியோடு நடிக்கும் படங்கள்
மட்டும். வேறு
எந்த நடிகரோடு பத்மினி நடித்த படம் என்றால் அவளுக்கு பிடிக்காது. நிறைய
முறை எம்.ஜி.யாரோடு நடித்த படத்திற்கு இவன் கூப்பிட்டு அவள் மறுக்க,
பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிறது. அந்த சண்டையெல்லாம் கூட ஒரு காரணமாய் இருக்குமா?
இதையெல்லாம் ஒரு காரணமாய் அவனால் யோசிக்க முடியவில்லை. எது காரணமாய் இருக்கும் என்று,
யோசிக்க முடியாத அளவுக்கு குழம்பிப் போயிருந்தான். பஞ்சாலை வேலை கூட சமீபத்தில்தான் போனது.
“ஏய் என்னப்பா இங்கன நின்னிட்டிருக்கே,
ரெண்டு பொண்ணுங்களும் அங்க சாப்டாம காத்துக்கினு இருக்கு” 
என்றாவாறு இவன் தோளைத் தொட்டான் குரு.
எதிர் வீட்டுக்காரன். நைட் சிப்ட் வேலைக்கு போகிறான் போல.
“சீக்கிரம் போ,
சாப்பிட ஏதாவது வாங்கிட்டுப் போடா” என்றவாறு நடையை எட்டிப் போட்டான்.
வீட்டை
நெருங்கும்போது எதிர்வீட்டு வாசலில் குருவின் மனைவி மீனாட்சியோடு மூன்று
பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் மீனாட்சி
“என்னாச்சு போன விஷயம்” என்றாள்.
பதில் எதுவும் சொல்லாமல் பாலு வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
சித்ராக்குட்டி கூடத்தில் தரையில் ஒரு மூலையில் சுருண்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பெரியவள் நளினா இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து இவன் கையைப் பிடித்துக் கொண்டாள். பாலு “வாங்க சாப்பிடலாம்,
ஏன் சித்துக்குட்டி தூங்கிட்டா” என்றான் கையில் இருந்த பார்சலைப் பிரித்தபடி.
“இவ்ளோ நேரம் விளயாடிட்டுதான் இருந்தா. அம்மா எப்போ வருவான்னு கேட்டுக்கினே அப்படியே தூங்கிட்டா” என்றாள் நளினா.
“சரி நீ சாப்பிடு” என்றவாறே சட்டையைக் கழற்றி சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு,
பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் பாலு.
வேக வேகமாய் இட்லியைப் பிட்டு சாப்பிடும் நளினாவையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பசி போல,
சீக்கிரமே சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்தாள்.
“சரி படும்மா,
நாளைக்கு ஸ்கூல் போனம்ல” என்றவாறு பாயை எடுத்து உதறிப் போட்டவன்,
ஒரு ஓரமாய்,
சித்ராவை தூக்கி கிடத்தினான். பக்கத்தில் தன் உடலைச் சாய்த்தான். ஒரே அசதியாக இருந்தது.
விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் படுத்துக்கொண்டிருந்த நளினா “அப்பா” என்றாள்.
“என்னம்மா குட்டி”
“அம்மா,
எப்போ வருவா?”

“நாளைக்கு வந்துருவாங்க,
நீ தூங்கு” என்றபடி நளினாவின் தலையை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான் பாலு.

எதையாவது சொல்லட்டுமா…..91

அழகியசிங்கர்
ரெட்ஹில்ஸ் பக்கத்தில் உள்ள பம்மாத்துக்குளம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அங்குதான் என் மாமனார் (நான் அவரைப் பார்த்ததில்லை) அறுபதுகளில் இரண்டு கிரவுண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டிருக்கிறார்.  அதைப் பற்றி அவருடைய வாரிசுகள் யாரும் கவலைப்படவில்லை.  என் மாமியார் உயிரோடு இருந்தவரை அந்த வீட்டு மனை நல்ல விலைக்குப் போகும் என்ற கற்பனையோடு இருந்தார்.  பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அந்த இடத்தைப் பார்க்க பெரிய முயற்சி செய்து பார்க்கவும் செய்தேன். அப்போது அந்த இடத்தில் மண் வாரிக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பள்ளமாக இருந்ததால் அங்கு வீட்டு மனைகள் உண்டா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அதன் பின் நான் பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டேன்.  ஆனால் சமீப காலமாக ஒரு புரோக்கர் என் மாமனார் இடத்தை 2 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லி பலமுறை போன் தொல்லை செய்து கொண்டிருந்தான்.
அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நானும் அந்த இடம் பத்து லட்சம் போகும் என்று அடித்துப் பேசினேன்.  அவன் விடவில்லை.  தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.  மேலும் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்பினான்.  நான் அவனைப் பார்க்க தவிர்த்தேன்.  கடைசியில் அவன் என்னிடம் சொன்னான். “நீங்கள் பத்து லட்சம் போகும் என்று சொல்கிறீர்கள்.  என்னிடமும் சில காலி மனைகள் உள்ளன.  நீங்கள் கூறும் விலைக்கு விற்றுத் தர முடியுமா?”என்று என்னை மடக்கினான்.  பின் எனக்கு அவன் போன் பண்ணவில்லை.
எப்படியாவது அந்த இடத்தை இன்னொரு முறை போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  முன்பு நான் டூ வீலரில் போய்ப் பார்த்தேன். ஆனால் இப்போதோ என்னால் அப்படியெல்லாம் முடியாது என்று தோன்றியது.  என் மாமனாரின் வாரிசான நான்கு பெண்களுக்கும் அந்த இடத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எப்படி ஒரு இடத்தை வாங்கிப்போட்டுவிட்டு அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.  பத்திர அலுவலகம் மூலமாக வில்லங்கம் வாங்கிப் பார்த்தேன்.  நல்லகாலம்.  என் மாமனார் பெயர்தான் இருக்கிறது.  ஆனால் புரோக்கர் சொன்ன இன்னொரு தகவலும் என் ஞாபகத்திற்கு வந்தது.  அந்த இடத்தைத் திரும்பவும் இன்னொரு லே அவுட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக.  அது உண்மையா என்பதைப் போய்ப் பார்த்துவிட நினைத்தேன். 
எந்த ஞாயிற்றுக்கிழமையும் என்னால் போக முடியாது.  ஒருநாள் அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டுப் போக வேண்டும்.  அலுவலகத்தில் யூரின் போவதற்குக்கூட நான் அனுமதி கேட்கவேண்டும்.  அந்த அளவிற்குக் கெடுபிடி.  ஏதோ பொய் சொல்லி ஒருநாள் லீவு எடுத்துக்கொண்டேன்.  மதியம் 3 மணி சுமாருக்குக் கிளம்பலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய நானோ கார் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.  நானே எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் ஓட்ட முடியாத என்ற காரணத்தால், ஒரு டிரைவரை ஒரு அமைப்பு மூலம் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். காலி மனையைப் பார்ப்பதோடல்லாமல், சில புத்தகக் கட்டுகளை ஒரிடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் சேர்த்துக் கொண்டேன். 
டிரைவர் வந்தான்.  பார்க்க இளைஞனாக இருந்தான்.  புத்தகங்களை ஒரு இடத்தில் கொண்டு போடவேண்டும் என்று குறிப்பிட்டேன்.  அவன் திடீரென்று நகுலனைத் தெரியுமா, சார்.”என்றான்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.  கார் ஓட்ட வருபவன் எப்படி நகுலனைத் தெரியுமா என்று கேட்கிறான் என்பது போல் யோசித்தேன்.
அவரைப் போல ஒரு எழுத்தாளரைப் பார்க்க முடியாது   
நகுலன். என் நண்பர்.
:அவருடைய புத்தகம் இருக்கிறதா படிக்க,,”என்று கேட்டான்.
“இல்லை..ஆனால் அவருடைய இரு நீண்ட கவிதைகள் புத்தகத்தை நான்தான் பிரசுரம் செய்தேன்..”
“சார்..அவர் நினைவுப் பாதை அற்புதம். நான் காலேஜ் படிக்கும்போது, நகுலன் புத்தகத்தைத்தான் படிப்பேன்…அற்புதமான எழுத்தாளர்.”
:நகுலன் சென்னை வந்தபோது என் வீட்டு பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில்தான் தங்குவார்..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.
 மெதுவாக ரெட்ஹில்ஸ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது கார்  பம்மாத்துக்குளம் பற்றி அங்குள்ளவர்களிடம் விஜாரித்தோம்.  அவர்கள் சொன்ன வழியில் பம்மாத்துக்குளத்தைக் கண்டுபிடித்தோம்.  ஆனால் எங்கள் மனை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  வண்டியை வெகுதூரம் ஓட்டி வந்துவிட்டோம். பின் அந்தப் பம்மாத்துக்குளம் இல்லை இன்னொரு பம்மாத்துக்குளம் என்று சொன்னார்கள்.  வெறுத்துவிட்டேன்.
டிரைவருக்கு ஒரு போன் வந்தது.  “சார் நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும்.” என்றான்.
என் திட்டமெல்லாம் வீணாகப் போய்விட்டது.  புததகங்களைக் கூட சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியவில்லை.  வண்டியை டிரைவர் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான்.  அந்த வேகத்தில் நான் வண்டியை ஓட்டி பார்க்கவில்லை.
” பி இ படித்திருக்கிறேன்.  ஆனால் ஒரு பேப்பர் கூட பாஸ் பண்ணவில்லை.. இப்ப அஸிஸ்டென்ட் டைரக்டராக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன்..”
“ஏன் டிரைவராகப் பணிபுரிகிறீர்கள்?” என்று கேட்டேன்.
:பணம் வேண்டும் சார்.  வாடகை கொடுக்கப் பணம் வேண்டும். வீட்டுக்காரர் வேற இடம் பார்க்கச் சொல்கிறார்.  வேற இடத்தைத் தேட வேண்டும்.”
பின் அவன் ஒரு கடை முன் நின்றான்.  சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான்.  
“நீங்கள் புகைப்பீரா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் சிரித்தான்.  “புகைப்பதையே விதம் விதமாக புகைக்கத் தெரிய வேண்டும். அது தெரிந்தவர்கள்தான் மாடர்ன் எழுத்தாளர்கள்.”
அவன் என்னை அவசரம் அவசரமாக வீட்டிற்குக் கொண்டு விட்டு ரூ.300 கேட்டான்.  உண்மையில் ரூ250தான் கொடுப்பார்கள். நகுலனைப் பற்றி பேசினானே என்று கொடுத்தேன்.  நகுலன் அவனைக் கெடுத்துவிட்டதாக மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
எனக்குப் பெரிய வருத்தம்.  பம்மாத்துக்குளத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  அதைவிட வருத்தம் புத்தகப் பார்சலை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  
போகும்போது திரும்பவும் சொன்னான் : “நீங்கள் கூப்பிடுங்கள் திரும்பவும் புத்தகங்களைக் கொண்டு போக வருகிறேன்” என்றான்.
நகுலன் ஏன் இப்படி குறுக்கே வருகிறார் என்று யோசித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு என் வீட்டிற்கு நான் இல்லாதபோது வந்திருந்து என் அப்பாவைப் பார்த்து நகுலன் புத்தகம் கேட்டிருக்கிறான்.  புத்தகம் என்றவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாக அவருக்கு காது கேட்காது.  புத்தகம் என்றவுடன் இன்னும் காது கேட்காது.  
அவன் அங்கிருந்து போன் செய்தான். “சார் க.நா.சுவின் அசுரகணம் புத்தகம் படித்து விட்டேன்.  பிரமாதம்.. எப்படி எழுதியிருக்கிறார், பாருங்கள்..” என்றான்.
“க.நா.சு படிக்கறது அவ்வளவு ஈஸி இல்லை,” என்றேன்.
“சார்.  நகலனின் Non Being  ..கேட்டேனே.”
“என்னிடம் இல்லை.  வேற எங்காவது முயற்சி செய்யுங்கள்..”
என்றேன்.
“சார், வாடகைக்கு எதாவது இடம் கிடைக்குமா?”
“எனக்குத் தெரியாது.” என்றேன்.
எழுத்தாளர் அசோகமித்திரன் பொதுவாக யாராவது அவரைப் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால், படிப்பை முடித்துவிட்டு இலக்கியத்துக்கு வாருங்கள் என்பார்.  நான் அவரைப் பார்க்க போனபோது கூட என்னைப் பற்றி அவர் விஜாரித்திருக்கிறார். 
ஒருவித அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இந்தப் புத்தகம் படிக்கிறது அல்லது எழுதுவதில் நுழைய வேண்டும். எந்தவிதத்திலும் இந்த எழுத்து அடிப்படைகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் உதவி செய்யாது. அடிப்படைகளைப் பேணி காக்காத எத்தனையோ எழுத்தாள நண்பர்களை எனக்குத் தெரியும்.  ஒரு சிலருக்குத்தான் இதில் வெற்றி கிடைக்கும்.  
சில தினங்கள் கழித்து அவனிடமிருந்து போன் செய்து கட் செய்து விட்டான்.  நான் போன் பண்ணவில்லை.  அவன் திரும்பவும் போன் செய்தான்.  “சார்.. Non Being  கிடைத்ததா.”என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் திரும்பவும்,”சார்.. ஒரு உதவி..வாடகைக் கட்டணும்..பணம் கடனா தர முடியுமா?”
“முடியாது.”என்றேன்.
“சார்,  பணம் தர மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?”
“அதுமாதிரியெல்லாம் யோஜனை பண்ணவில்லை,”என்றேன்.
அவன் போனை கட் செய்துவிட்டான்.  நான் இன்னும் பம்மாத்தக்குளத்தைப் போய்ப் பார்க்கவில்லை.  யாராவது டிரைவரைக் கூப்பிடவும் பயமாக இருக்கிறது. புத்தகக் கட்டு காரிலேயே இருக்கிறது.
                      (அம்ருதா  டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

எதற்காகவும் எதையும்…

வைரமுத்து

எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்…