புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

            அக்ரகாரத்துக் கதவுகள்


            எங்களூர் அக்ரகாரத்தில்
            அதிசியங்கள் ஆயிரம் உண்டு
            செம்மண் பட்டையிட்டு
            செங்காவிச் செறிவீச்சில்
            கொலுவிருக்கும் வீடுகளின்
            ஜன்னல்களுக்கோ
            கதவுகளே இல்லை –
            ஆனாலும்
            டெர்ரிகாட் பளபளப்பில்
            குதிகால் நடையுயர்த்தி
            நட்ட நடுத் தெருவில்
            நீள நடந்தால்
            கறுப்பு சிவப்பு
            பழுப்பு மாநிறப்
            பரபரப்பு முகங்கள்
            கதவுகளாய் முளைக்கும்.

                        நா. விச்வநாதன்

ஐராவதம்

ஐராவதம் பக்கங்கள்

    பிப்ரவரி 4 ஆம்தேதி ஐராவதம் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்துவிட்டார்.  ஆனால் அவர் என்னிடம் அவர் படித்தப் புத்தகங்கள் பற்றி குறிப்புகள், விமர்சனங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.  அவற்றை முடிந்தவரை கொண்டு வருவதுதான் என் நோக்கம்.

    திசை காட்டி என்கிற எஸ் வைதீஸ்வரன் புத்தகம் பற்றி 22.06.2013 அன்று ஐராவதம் எழுதியதை இங்கே அப்படியே பிரசுரம் செய்கிறேன்.

(திசை காட்டி – கட்டுரைகள் – எஸ் வைதீஸ்வரன் – நிவேதிதா புத்தகப் பூங்கா – விலை ரூ.75)

    பிரெஞ்சுக்கவிஞர் ‘சார்லஸ் போதலர்’ முழு நேரக் கவிஞராக தன்னைக் காட்டிக் கொண்டவர்.  ஒரேயொரு உரைநடை நூல் எழுதினார். ஜெர்மன் கவிஞர் ‘ரெயின் மேரி ரில்கே’ இவரும் ஒரே ஒரு உரைநடை நூல் எழுதினார்.  அந்த வகையில் எஸ் வைதீஸ்வரனின் ‘திசை காட்டியை’க் குறிப்பிடலாம் என்றால் ஒரு விஷயம் உதைக்கிறது.  இவர் இதற்கு முன்னமே ‘கால் முளைத்த மனம்’ என்ற தலைப்பில் விருட்சம் வெளியீடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  அந்த நூல் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பாக கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.


    திசை காட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள இந்திராபார்த்தசாரதி, ‘இத் தொகுப்பில் கட்டுரை இருக்கிறது.  கவிதை இருக்கிறது.  கதை இருக்கிறது.  தன்வயப்பார்வையாக விமர்சனம் இருக்கிறது,’ என்று அடுக்கிக்கொண்டு போகிறார்.  ஆனால் நூலின் பதிப்பாளர்களோ இந்த நூலை கட்டுரைகள் என்ற வகையில்தான் சேர்த்துள்ளார்கள்.  இந்திரா பார்த்தசாரதி என்ற யானைக்கும் அடி சறுக்கியிருக்கிறது.  ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்லஸ் லாம்ப் பதினெட்டு பத்தொன்பது நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டும் இவர் ஜி கே செஸ்டர்டனையும் (இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) அந்த வரிசையில் சேர்த்துள்ளார்.

    ‘ஒரு கொத்துப்புல்’ (பக்.43), ‘மரத்தில் வாழ்ந்தவன்’ (பக் 50) இரண்டும் சிறுகதைகள்.  கால் முளைத்த மனம் மூன்றாம் பதிப்பில் ஆசிரியர் இவற்றை தைரியமாக சேர்க்கலாம்.

    ஸஹாரா பாலைவனம் பற்றி ஐந்து பக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையவே சிந்திக்கிறவர் இவர்.  முன்னரே தீபம் பத்திரிகையில் (மலைகள் என்ற தலைப்பில் என்று நினைக்கிறேன்) பல்லாவரம் திரிசூலம் மலைகள் பெயர்க்கப்பட்டடு கல்லுடைப்பதைப் பற்றி அருமையான கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது கால் முளைத்த மனம் தொகுப்பில் வெளியாகி உள்ளது.  நான் இந்தக் கதையை என் நண்பரும் தெலுங்கு எழுத்தாளருமான சிரஞ்சீவி என்பவரிடம் கொடுத்து தெலுங்கில் மொழி பெயர்க்கச் செய்தேன்.  அவர் அந்த கதையை தெலுங்கில் மொழி பெயர்த்து தெலுங்கு பத்திரிகை ஒன்றில் பிரசுரம் செய்தார். 

    ஞானத் தேநீர் என்ற கவிதை (பக்கம் 76-78) என்னை வெகுவாகக் கவர்ந்தது.
        அவளுள் ஊறும்
        பிரியமோ
        மலர்ந்து பரவும்
        மனோரஞ்சிதம்.

        காமம் காலத்தின்
        மாயப்பூச்சழிந்து
        கருணை பரவுகிறது
        காதலாக…


    இந்த வரிகள் நினைவில் நிற்கக் கூடிய வரிகள்.  ஹைக்கூ பற்றிய குறிப்புகள், ELIE WIESEL,  Katznelson,   Arnost lustig   போன்ற யூத எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் இணையத் தளத்திலிருந்து டௌன்லோட் செய்யப்பட்டவைதானே என்று சிலர் கிண்டல் அடிக்கக் கூடும்.  ஆனால் தமிழ் வாசகனுக்கு தேவையான விஷயங்களே.

    மரணம் ஒரு கற்பிதம் என்ற கட்டுரையில் கடைசியில் ஒரு கவிதை.:

        மரத்தை விட்டுப்பிரிந்தது
        மலர்கள்
        மண்ணில் மெத்தென்று விழுகின்றன
        சாவிலிருந்து துக்கத்தை
        சத்தமில்லாமல் பிரித்தவாறு.


    விட்டுப் பிரிந்து என்ற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன்.  மலர்கள் தன்னிட்சையாக தீர்மானம் போட்டா கீழே விழுகின்றன?  காற்று சலசலக்கிறது. மலர்காம்பு நெகிழ்ந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது.  அது எப்படி மலருக்கு சாவாகும்?  யார் கால்பட்டும் கசங்காமல் மண்ணில் கிடந்தால் சாலை பூப்பறிக்க வரும் சிறுமி அதைத் தன் பூக்குடலையில் சேர்த்து சாமிக்கு மாலையாக சூட்டலாம்.  மங்கையின் தலையில் பூச்சூடலாம்.

    வ.ரா நினைவுகள் கட்டுரையிலும் எனக்கு இரு ஆட்சேபங்கள்.  வ.ரா வைத்தீஸ்வரன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார்.  அது அவ்வப்போது எனக்குள் ஒரு அற்ப சந்தோஷத்தை ஏற்படுத்துவதுண்டு.  ஏன் இந்த சந்தோஷம் ஆசிரியருக்கு அற்பமாகத் தோன்றுகிறது?  அதைவிட இன்னும் இரண்டு வரிகள்.  ஆனால் பெரியவர்கள் என்னதான் தட்டிக் கொடுத்தாலும் வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  இந்த வரிகள் என்னை உசுப்பிவிட்டன.  இரண்டு சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

    வருஷம் 1965.  நான் பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலையாயிருந்தேன்.  இலக்கிய ஆர்வம் உண்டு எனக்கு.  தேவன், த.நா.குமாரஸ்வாமி படித்துக் கொண்டிருந்தவன்.  கல்லூரி நாட்களில் ஆல்டாஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பெர்னார்ட் ஷா என்று படிக்கத் துவங்கி க.நா,சு, செல்லப்பா வரை வந்துவிட்டேன்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகைப் பற்றி கேள்விப்பட்டு அதற்கு வருடச் சந்தாவாக ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு தியாகராய நகரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு பதின் மூன்றாம் நம்பர் பஸ்ஸில் ஏறி பிள்ளையார் கோயில் தெரு முதல்மாடிக்கு வந்துவிட்டேன்.  என்னுடன் நண்பன் ஒருவனும் வந்தான்.  இவன் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவன்.  கல்கி, லட்சுமி படித்துக்கொண்டிருந்தவன் லா.ச.ரா, தி ஜானகிராமன் படிக்கிற அளவிற்கு முன்னேறியிருந்தான்.  இவன் எழுத்து பத்திரிகைக்கு நான் சந்தா தரப்போகிறேன் என்று தெரிந்ததும் எழுத்து பத்திரிகையில் புகுத்திவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் ஒரு ஆறுவரிக் கவிதை (கருத்து சிதறல்) தயார் பண்ணி சட்டைப் பையில் தயாராக வைத்திருந்தான்.  நான் படைப்பு எதுவும் படைக்கவில்லை.  எழுத்துக்கு  சந்தா செலுத்துவதே என் நோக்கம்.

    அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி இருக்கும். சிசு செல்லப்பா காலையில் விளக்கெண்ணை சாப்பிட்டிருந்தார்.  எங்களை தரையில்தான் உட்கார வைத்தார்.  தானும் தரையில் எதிரே அமர்ந்தார். காலையில் விளக்கெண்ணை சாப்பிடுகிறவர்கள் பகல் ஒரு மணி வரை ஆகாரம் எதுவும் உட்கொள்ள மாட்டார்கள்.  நாலைந்து முறை பாத்ரூம் போய் வருவார்கள்.   வயிறு காலியானதும், பருப்புத் துவையல், மிளகுரசம், இட்டு சாதம் சாப்பிடுவார்கள்.  செல்லப்பா என்னிடம் சந்தாவைப் பெற்றுக்கொண்டு உற்சாகமாகவே பேசினார்.  ஒரு தருணத்தில் என் நண்பன் அவன் கவிதையை நீட்டினான்.  அவர் அதைப் படித்துப் பார்க்க முற்படவில்லை.  பக்கத்தில் காகிதங்களோடு வைத்தார். 

    திடீரென்று எழுந்து தலைக்குப் பின்னாலிருந்த அலமாரியிலிருந்து பிரெஞ்சு நாவலாசிரியர் மார்வெல் ப்ரூஸ்ட் நாவலிலிருந்து ஓரிரண்டு பத்திகள் படித்தார்.  பிறகு அமெரிக்க நூலகத்திலிருந்து வாங்கி வந்திருந்த ஹென்றி ஜேம்ஸ் விமர்சனக் கட்டுரையை உரக்கப் படித்தார்.  இதுபோல் எல்லாம் தமிழில் எழுத வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.  நாங்கள் விடைபெற்று போகும்போது கவனமாக என் நண்பன் கொடுத்த கவிதை காகிதத்தை அவன் கையில் திணித்தார்.  என் நண்பனுக்கு அவமானம்தான்.  வெளியே வந்த நான் சமாதானமாக ஒரு வார்த்தை சொன்னேன்.  ‘நண்பனே நீயும் உன் சந்தாவாக ஒரு ஆறு ரூபாயைக் கொடுத்து இந்தக் கவிதையைக் கொடுத்திருந்தால் அது அச்சேறியிருக்கும்.’
    காலச்சக்கரம் சுழல்கிறது.  வருடம் 1975.  என் தம்பியும், அவன் நண்பர்களுமாக பிரஞ்ஞை என்ற பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள்.  கசடதபற, நடை, இதன் முன்னோடிகள்.  என் தம்பி கல்கத்தாவிலிருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை விட ஐந்து ஆறு வயது இளையவர்கள்.  சுயலாபமோ, சுய நோக்கமோ அற்றவர்கள்.  ஆனால் இவர்களைப் பற்றி என் சக எழுத்தாளர் ஒருவர்அப்பொழுது சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் என் நெஞ்சை உறுத்துகின்றன.  அவர் திமுக அனுதாபி.  பிரமாணத் துவேஷி. பிரக்ஞை நண்பர்கள் பெரும்பாலும் பிராமண இளைஞர்கள்.  அவர் சொன்னார் : ‘இவன் எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு நல்ல உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.  குடி, குட்டி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற வழிகளில் பணம் செலவழிக்க பயப்படுகிறவர்கள்.  இலக்கியம் பண்ணுகிறார்களாம்.  இலக்கியம்,’ அந்த வார்த்தையின் அர்த்தம், ஆழம், விஷம், வீர்யம் இப்பொழுதும் எனக்கு உறுத்துகிறது.

    நான் பிரக்ஞை ஆபீஸ் போனேன்.  என் நண்பன் உடன் வந்தான்.  இப்பொழுது என் இலக்கிய அந்தஸ்து உயர்ந்திருந்தது.  நான் கசடதபறவில் பங்கு பெற்றவன்.  தீபம், கணையாழி பத்திரிகைகளில் என் கதைகள் பிரசுரமாகி இருந்தன.  பிரக்ஞை ஆபீஸ் போனபோது நான் சந்தா எடுத்துப் போகவில்லை.  ஆனால் என் நண்பனோ ஏழெட்டு கவிதைகள் (நாலுவரி, ஆறு வரி, எட்டுவரி, பத்து வரிகள்) எழுதி தன் சட்டைப் பையில் வைத்திருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை உபகுருவாக ஏற்றுக்கொண்டார்கள்.  நானும் அவர்களுக்கு அருளாசி வழங்கினேன். 

    என் நண்பன் கவிதைகளை நீட்டினான்.  பிரக்ஞைக்கு ஆசிரியர் என்று ஒரு பெயர் போடப்பட்டிருந்தாலும் அது நாலைந்து பேரின் கூட்டு முயற்சி என்பதால் நண்பனின் கவிதைகளை பிரசுரிப்பீர்களா இல்லையா என்று நாங்கள் கேட்கவில்லை.  அடுத்தடுத்த பிரக்ஞை இதழ்களில் என் நண்பன் கொடுத்த கவிதைகள் அத்தனையும் பிரசுரமாகின.  அவன் உடனே நாற்பத்தெட்டு கவிதைகளோ அறுபத்து நாலு கவிதைகளோ எழுதி அதை அறுபது பக்க நூலாக அச்சிட்டு தமிழ் வாசகர்களை குளிர்விக்கவில்லை.  பிரக்ஞையில் தன் கவிதைகள் வெளிவந்த மகிழ்ச்சியோடு அவன் கவிதைத் தயாரிப்பு முடிவுற்றது.

    இப்பவும் ஜெயமோகன், இரா முருகனை  ரசிக்கிற வாசகனாக அவன் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளான். 

    எஸ் வைதீஸ்வரனின் வ ரா கட்டுரையில் எழுதிய கடைசி வரிகளை நினைவுப் படுத்துகிறேன்.  வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  எழுத்து செல்லப்பா தன் கவிதையை நிராகரித்ததால் என் நண்பன் பத்து ஆண்டுகள் கவிதை முயற்சியில் ஈடுபடவில்லை.  பிரக்ஞை அவனுடைய ஏழெட்டுக் கவிதைகளை பிரசுரித்து மகிழ்ந்தும் அவனால் தொடர்ந்து கவிதை முயற்சியில் ஈடுபட முடியவில்லை. 
                                                                                                                                        (22.06.2013)
   
   

காலத்தின் கட்டணம்

அசோகமித்திரன்
 
ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய
முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல
மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை
தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார். ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. ஒரு
கட்டத்தில் அவருக்கு வங்கித் தொகுப்பு குடியிருப்பில் வீடு கிடைத்தது. அது வரையில் நாங்கள் வாரம் இருமுறை மூன்று முறை சந்திப்போம். அவர் என்னை விட குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சின்னவர். ஆனால் அவர் எனக்கு எது எது படிக்க வேண்டும், எந்தத்
திரைப்படம் பார்க்கவேண்டும் என்று யோசனை கூறுவார். அவர்
தேர்ந்தெடுத்துக் கூறிய எதுவும் தவறான தேர்வாக இருக்காது. க.நா.சு டில்லி விட்டு மீண்டும் சென்னை வந்த போது
முதலில் அவரை ஐராவதம் வீட்டில்தான் தங்க வைத்தது.  சில நாட்கள் இன்னொரு நண்பர் வீட்டில். மயிலை டி.எஸ்.வி கோவில்
தெருவில் இரு அறைகள் கிடைத்தவுடன் அங்கு சுமார் பத்து ஆண்டுகள் இருந்தார். அதோடு அவர் வாழ்க்கை முடிந்தது.
ஐராவதத்தின் 
படைப்புகளில் உள்ள கூர்மையும் தெளிவும் அவர் பிறரிடம் பழகும் முறையிலும்
இருந்தது. என்ன கருத்து
வேறுபாடு இருந்தாலும் நட்பில் எந்த பாதிப்பும் இருக்காது. உலகம்
கொண்டாடத் துவங்கப் பத்து ஆண்டுகள் முன்னரே அவர் லத்தீன் அமெரிக்கப் படைப்புகள்
பற்றி அறிந்திருந்தார். திடீரென்று ஒரு நாள், “ஆனந்த் கொட்டகையில் ஓடும் படத்தைப் பார்” என்றார்.
அப்படம் பற்றி உலக மதிப்பு வர ஆறு மாதங்கள் ஆயின. அது ‘பிளோ அப்” என்ற படம்.
எனக்கு ஆச்சரியமாக இருந்த்து. எவ்வளவு
துல்லியமான ரசனை! அவர் சிறுகதைகளுடன் கவிதைகளும் எழுதினார்.
எனக்குக் கவிதையில் அதிக ஈடுபாடு இல்லாதபோதிலும் ஐராவதம் கவிதை
எழுதத் தேர்ந்தெடுத்த  விஷயங்கள் பற்றி வியந்திருக்கிறேன். உஷா ஐயர் 1970 அளவில் ஒரு
நவீன பாணியில் பாடத்தொடங்கினார். இன்று அவர் உலகப் புகழ் பெற்ற
பாடகர். ஆனால் 1970லேயே ஐராவதம் உஷா ஐயர் பற்றிக் கவிதை எழுதினார்! கலைப் போக்குகளை முன்னோக்கிப்
பார்க்கும் ஆற்றல்
அவருக்கு இருந்தது. அவருக்குக் கலைஞன் என்பவன் ஏதோ தனிப்பிறவி என்று ஆராதனை செய்யும் போக்கு
நகைப்பை எழுப்பும். அவருடைய  நகைப்பு என்பது ஒரு
புன்சிரிப்புத்தான். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு அப்புன்சிரிப்பின் எண்ணற்ற சாயல்கள் கொண்ட்து
என்று தெரியும்.
அவருடைய மறைவு அகாலமானது என்றாலும் அநாயாசமானது. பேசிக் கொண்டிருக்கும்போதே போய்
விட்டார். புதன் 5-2-2014.

 சென்னை, 10 – 2 – 2014                                       
அசோகமித்திரன்

பால்ய வனம்

  

 

மிருணா      

பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்/
நினைவு படுத்துகிறது பால்யத்தை./
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்/
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு/
வாய்த் தண்ணீருள் மூழ்கிய/
கனகாம்பர விதைகள் வெடிக்கும்/
துடி துடிக்கும் இதயம்./
தட்டான்கள் ரீங்கரிக்க/
வண்ணத்துப்பூச்சி பிடிக்க/
ஓடும் பசிய வெளியில்/
பதிந்திடும் பாதச் சுவடுகள்/
நூறு வண்ணத்துப் பூச்சிகள்./
பின் அயர்ந்து தூங்குகையில்/
வயலெட், மஞ்சள் டிசம்பர் பூக்களைப் பற்றிய/
சிறிய அவாக்களும்/
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும்/

பெரும் வனக் கனாக்களும்./
முட்களை மறைத்தபடி/
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்/
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்/
சிக்காமல் ஒரு சிறுமி/
பால்யத்தின்/
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி/
அதன் எலுமிச்சை வாசனை பரவ/

பச்சை வண்ண சீப்புக் காயை/
தலையில் தேய்த்தபடி/
ஓடிக் கொண்டே இருக்கிறாள்/
எதன் பின்னும் அல்லாமல்./

                      

ஓசிப்மெண்டல்ஷ்டாமின் கவிதை


  கவிதை எண் 17

 குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
 அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
 மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
 சுவாசிக்கிறேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை

 மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
 போவதை
 எவரும் பார்ப்பதில்லை
 இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
 ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்

 நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
 மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது
 ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
 மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்

     தமிழில் : பிரம்மராஜன்

சில குறிப்புகள்


    அழகியசிங்கர்

    நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார். 


    எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.

    எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன். 

    எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.

    இருவர் கையெழுத்தும் அழகாக இருக்கும்.  சிறுபத்திரிகையின் நண்பர்கள் இருவரும்.  பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபிறகுதான் நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் நான் அனுப்பிய பத்திரிகை போய் சேர்ந்ததற்கான அறிகுறி அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான்.

    வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை டெச்பேட்ச் க்ளார்க் என்று கிண்டல் செய்திருக்கிறார்.  ஆனால் எனக்கு அப்படித் தோன்றாது.  இன்று ஒருவரைப் பாராட்டுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயமாகத் தோன்றுவதில்லை.  அதை முழு மூச்சுடன் செய்பவர்கள் தி.க.சியும் வலலிக்கண்ணனும்தான்.

    சென்னையில் நான் குடியிருந்த தெருவில் தி.க.சியும் அவர் புதல்வர் வண்ணதாசன் வீட்டில் தங்கியிருந்தார்.  நான் அவரைப் பார்க்கச் செல்வேன்.  வண்ணதாசனிடம் பேசுவதை விட தி.க.சியிடம் பேசிவிட்டுச் சென்று விடுவேன்.  வண்ணதாசன் நண்பர்களான வண்ணநிலவன். விக்கிரமாதித்யன் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள்.  வண்ணதாசன் அப்படி அல்ல. 

    வண்ணதாசன் வீட்டிற்குச் சென்று திகசியிடம் மட்டும்தான் பேசுவேன்.  என் 94வது இதழ் விருட்சத்திற்குக்கூட அவர் கடிதம் எழுதியிருந்தார். 

    05.08.2013 அன்று நவீன விருட்சம் 93வது இதழைப் படித்துவிட்டு எழுதிய கடிதம்.

    அன்பு நண்பர் அழகியசிங்கர் அவர்களுக்கு,

    வணக்கம்.  நவீன விருட்சம் 93வது இதழ் பார்த்தேன்.  மிக்க நன்றி.  1988 ஜøலையில் தோன்றிய நவீன விருட்சம்.  25ஆம் ஆண்டு நிறைவைத் தாண்டி, 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது எனக்குபெரும் மகிழ்வும், மனநிறைவும் தந்துள்ளது.  தங்கள் நவீன இலக்கியத் தொண்டு போற்றத்தக்கது; அது மேன் மேலும் தொடர்வதாக.  என் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்கள்.  தமிழில் தற்காலத் தோரணை – பாரதியின் கவிதை எனும் சி கனகசபாபதியின் கட்டுரையை (மே 1965இல் எழுத்து இதழில் வெளிவந்தது).  இப்போது மீண்டும் படித்தேன்.  இன்று புதுப்பார்வையில் இலக்கிய ரசனையை வளர்க்கும் பணியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

    என்றும் அன்புடன்,
    தி.க.சி.

    அவர் இனி இல்லை என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
   

மாதங்கள் கடந்து போதல்


ந.பெரியசாமி

மேசையின்மேல் இரண்டு
கண்ணாடி கோப்பைகள்
ஒன்றில் பொவண்டாவையும்
மற்றதில் பியரும் நிரப்பினீர்கள்
புன்னகைத்து அருந்தத் துவங்கினீர்கள்
எப்படியோ இம்மாதத்தை கடந்தாயிற்று
நிம்மதி பெருமூச்சொன்றை விட்டீர்கள்
அசட்டையான சிரிப்பை உதிர்த்து
எனக்கு இன்னும் கடக்கவில்லை
தேதி ஐந்தாகிவிட்டதே
மறுபடியும் நகைத்து
அதுகூடவா தெரியாது
எனக்கு முடிவடையவில்லை
சம்பளத் தேதியை சொல்கிறீர்களா
இல்லை எனக்கும் ஒன்றாம் தேதிதான்
புரியவில்லையே வேறென்ன
குழப்பத்தோடு கடைசி துளியை வழியவிட்டீர்கள்
இம்முறை கொஞ்சம் சப்தமாக சிரித்து
உங்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்
மாதங்களை கடப்பது
உங்களுக்கு தேதிகள் தீர்மானிக்கும்
எங்களுக்கோ எங்களின்
உதிரப்போக்கு.

நாம் என்ன செய்ய முடியும்? – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

 தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.
நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?
எதுவும் செய்ய முடியாது.
முடிந்தவரை விலகி இருப்போம்
துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல்.
ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள
சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம்
எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும்
அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும்
தப்பிக்கிறார்கள் வெகு சிலர்
நாம் தப்பிப்பது நம் கையில்
சரியான திட்டம் வேண்டும்
தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை
உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன்
அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை
மனிதத்துக்கு மட்டுமே அவர்கள்
உயர்ந்தவர்களாய் புகழ் பெற்றவர்களாய் இருக்கிறபடியால்.
என்னாலும் தப்பிக்க முடியவில்லை
ஆனால் மறுபடி மறுபடி முயன்று கொண்டே இருப்பதில்
நான் தோற்றுப் போகவில்லை.
நம்புகிறேன் என் மரணத்துக்கு முன்னால்
அடைந்து விடுவேன் என் வாழ்க்கையை.
**
மூலம்:
What can we do?
by
Charles Bukowski
***

எதையாவது சொல்லட்டுமா…..93

அழகியசிங்கர்

இந்தப் புத்தாண்டில் என் நண்பரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்தது. ஒரு கார்டில் எழுதியிருந்தார். புத்தாண்டு வாழ்த்து என்று மேலே குறிப்பிட்டு பாரதியார் கவிதை வரிகளை இப்படி எழுதியிருந்தார்.
இனி
என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்
சந்தோஷம் கொண்டிக்கச் செய்வாய்
– பாரதி
இப்போதெல்லாம் கார்டில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது என் நண்பர் மட்டும்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களில் பலர் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக புத்தாண்டு என்பதை கண்டுகொள்வதில்லை. ஆனால் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வோம். கைக் குலுக்கிக்கொள்வோம். நானும் பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர்களுக்கு கார்டில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் என்றுதான் அனுப்புவேன். அதற்கு சிலர் பதில் வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்கமாட்டார்கள். அழகான கையெழுத்தில் வல்லிக்கண்ணன், தி.க.சி, பழமலய் போன்ற படைப்பாள நண்பர்கள் பதில் எழுதாமல் இருக்க மாட்டார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் புத்தாண்டு வாழ்த்துக் கார்டு அனுப்பாமல் இருக்க மாட்டார்.

நான் இதுமாதிரி பலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியும் ஒருசிலரைத் தவிர பலர் பதில் எழுத மாட்டார்கள். எனக்கு சந்தேகம் வந்துவிடும். அவர்களுக்கு என் வாழ்த்துக் கடிதம் போய் சேர்ந்ததா என்று. நான் இப்போதெல்லாம் அப்படி எழுதி அனுப்புவது இல்லை. ஏன் தபால் கார்டையே நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் தபால் அலுவலகத்திற்குப் போனால் கார்டை வாங்கி சேகரிக்கும் பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை. உண்மையில் எதாவது சொல்வதென்றால் சுருக்கமாக கார்டில் பதில் எழுதி விடலாம். மறைந்த என் இலக்கிய நண்பர் எம் என் பதி அவர்கள் கார்டில் அவர் மனதில் தோன்றுவதை எழுதி விடுவார். சின்ன சின்ன எழுத்தில் அவர் எழுதியதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.

அசோகமித்திரனும் கார்டில் எதாவது தெரிவிக்க வேண்டுமென்றால் தெரிவித்து விடுவார். பிரமிள் கார்டும் பேனாவுமாக அலைந்து கொண்டிருப்பார். üஉங்களை இந்த நாளில் வந்து சந்திக்கிறேன்,ý என்பதைக்கூட கார்டில் எழுதி விடுவார். ஆனால் இப்போது கார்டு இடத்தை எஸ்எம்எஸ், இ மெயில் பிடித்துக்கொண்டு விட்டது. கையால் எழுதும் பழக்கம் நம்மைவிட்டுப் போய்விட்டது.

இன்னொரு விஷயம் பொன்மொழி. அறிவுரையும் பொன்மொழிகளும் நம்மை விட்டுப் போகாது என்று தோன்றுகிறது. யாருக்காவது நாம் இலவசமாக வழங்க வேண்டுமென்று நினைப்பது அறிவுரையைத்தான். சிலர் கேட்காமலேயே அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

நான் சின்ன வயதில் ரேஷன் கடையில் க்யூவில் நின்றுகொண்டிருக்கும்போது, விவேகானந்தர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அவருடைய பொன்மொழிகளைப் படிக்கும்போது எனக்கு வீரம் வந்துவிடும்போல் நினைப்பேன். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் வீரம் வந்துவிடும். சில பாடல்களைக் கேட்டால் சோகமாக இருக்கும்.

சிலதினங்களுக்கு முன் நான் வளசரவாக்கம் தெருவில் வண்டியை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் விவேகானந்தரின் பொன்மொழிகள். பொன் மொழியைப் படிப்பதுபோல் அபத்தத்தைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் நம்மிடம் தென்படும் துயரத்தை எப்படி சரி செய்வது.
என் நண்பர் ஒரு திருமணத்திற்கு அவர் மனைவியுடன் சென்றிருந்தார். அது உறவினர் திருமணம். அந்தத் திருமணத்தில் மனைவியின் நகைகள் சில தொலைந்து போய்விட்டன. இருவரும் பதட்டம் அடைந்து விட்டார்கள். எல்லா இடத்திலும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. இந்தத் துயரம் ரொம்ப நாட்கள் அவர்களை வாட்டிக்கொண்டிருந்தது. அவர்களை அழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று குறி சொல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். எனக்கும் குறிசொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஒரு வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். அவருடைய புதல்வருடன் அவர் வசித்துக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர்கள் அந்தப் பெண்மணியிடம் தங்கள் துயரங்களைக் கொட்ட காத்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பரும் அவர் மனைவியும் பூ பழங்கள் வாங்கிக்கொண்டு பயப்பக்தியுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை சொல்வதற்குமுன் எல்லோருடைய துயரங்களையும் கேட்டுக்கொண்டிருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அது எத்தனை கொடுமையான விஷயம். ஒரு துயரத்தை முடித்தவுடன், அடுத்தவர் துயரத்தை சொல்லஆரம்பித்து விடுவார். இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் துயரம் என்பது எல்லோருக்கும் சிறிய அளவிலாவது இருந்து கொண்டுதான் இருக்கும், குறி சொல்லும் பெண்மணிக்கும் துயரம் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவர் யாரிடம் அதை வெளிப்படுத்த முடியும்.

நண்பர் நகை தொலைந்து போன விஷயத்தைச் சொன்னவுடன், அந்த பெண்மணி ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டார். பின் சொன்னார் : üüஉங்களுக்குத் தெரிந்தவர்தான் அதை எடுத்துக் கொண்டு விட்டார். உங்களுக்குக் கிடைக்காது..ýýஎன்றார். எனக்கும் நண்பருக்கும் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. நண்பரின் மனைவிக்கு வருத்தமாக இருந்தது. நண்பரை நான் சமாதனம் செய்தேன். பின் இன்னொருவரிடம் அழைத்துப் போகிறேன் என்றேன். அவரும் சரி என்றார்.

இன்னொருவர் ஒரு எழுத்தாளர். இராமலிங்க சுவாமிகள் படத்தை பூஜை செய்பவர். மனதில் தோன்றுவதையெல்லாம் அவர் எழுதி வைக்கும் வழக்கம் உடையவர். உலகத்தில் இந்தியாவில் நடக்ககும் விஷயங்களை எல்லாம் அவர் எழுதிக்கொண்டே வருவார்.

நண்பரும் நானும் போய் நின்றோம். அவர் மெதுவாக கேட்டுக்கொண்டார். பின் அதைப்பற்றி அவர் பேசவில்லை. வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தவர், இறுதியில் குறிப்பிட்டார்.
üüகிடைப்பது கஷ்டம்,ýý என்றார். நண்பரை திரும்பவும் ஆறுதல் படுத்தினேன். üஇன்னொரு இடத்திற்குப் போகலாம்,ý என்றேன். நண்பருக்கு எப்படியாவது நகைக் கிடைக்க வேண்டுமென்ற ஆதாங்கம். சரி என்றார். நான் அவரை அழைத்துப் போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. குறி சொல்வது என்றால் என்ன? நம்முடைய கஷ்டங்களை மட்டும் கேட்பது மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதுதான்.

அந்த வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டிருந்தார். அவர் பூஜை செய்யும் இடம் ஒரு கோயிலாக இருந்தது. நண்பர் தன்னைப் பற்றி கூறி அவர் முன் போய் உட்கார்ந்தார்.
நண்பரின் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, üநாளை வாருங்கள்.ýý என்றார். அடுத்தநாள் நானும், நண்பரும் சென்றோம்.
“உங்கள் நகைகள் திரும்பவும் வந்துடும். எடுத்தவர் உங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்,”என்றார். நமஸ்காரம் செய்துவிட்டுக் கிளம்பினோம்.
நண்பருக்கும் எனக்கும் நம்ப முடியவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து நகைகள் கிடைத்துவிட்டன. எடுத்தவர்கள் அவருடைய டூ வீலர் சைட் பாக்ஸில் போட்டுவிட்டார்கள். யார் எடுத்தார்கள் என்பது தெரியாவிட்டாலும் நண்பருக்குக் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.
இப்படித்தான் நம்முடைய கஷ்டங்களை பிறரிடம் சொல்லிக்கொண்டே நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் அவர்களை பிரமிளுடன் சந்தித்தபோது, நான் சாமியார்களைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன். யோகி ராம்சுரத்குமார் பாஸிங் ஷோ என்ற சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். ஒரு அழுக்கு ஆடையில் காட்சி அளித்தார். அவர் குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதுபோல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ்ûஸ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வந்திருந்த எங்களை அவர் குறிப்பிட்ட இடத்தில் உட்காரச் சொன்னார்.

அங்கு நான் எப்படி நடந்துகொண்டேன், எப்படிப் பேசினேன் என்பதை இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன். மனிதர்களின் சுபாவம் அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உணர்வதே இல்லை. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் இப்படி செய்ய வேண்டுமென்று நினைப்பதே இல்லை. அகந்தை என்ற ஒன்று இருக்கிறதே அது நம் பேச்சில் வெளிப்பட்டு விடும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

குறி சொல்பவர்களைப் பார்ப்பதுபோல்தான் யோகி ராம்சுரத்குமார் போன்ற எல்லாம் துறந்தவர்களையும் பார்ப்பது. அவர்களிடமும் நம் துயரத்தைக் கொட்டுகிறோம். அவர் ஒரு சம்பவம் சொன்னார். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்தாராம். அந்தப் பெண்மணிக்கும் அவருடைய கணவருக்கும் பெரிய சண்டை மூண்டு விட்டதாம். அதைத் தீர்ப்பதற்கு எதாவது வழி இருக்கிறதா என்பதைக் கேட்க யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் உடனே அந்தப் பெண்மணியின் பெயரை மாற்றி வேறுவிதமாக உச்சரிக்கச் சொன்னாராம். சில மாதங்களில் அந்தப் பெண்மணிக்கு கணவருடன் இருந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்தப் பெண்மணி திரும்பவும் யோகியாரைப் பார்த்து நன்றி சொன்னாராம். üஎனக்கும் அலுவலகத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது,ý என்றேன் பிரமிளிடம் ஒருநாள். üஉங்கள் நீளமான பெயரில் கடைசியில் உள்ள இரண்டு எழுத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள்,ý என்றார் பிரமிள். நானும் அவ்வாறு முயற்சி செய்தேன். ஆனால் பிரச்சினை தீரவில்லை.

(Appeared in Amirtha February 2014 issue)

a story by KRISHNA

மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், “அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு.” என்பான்.

ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைப்பது வழக்கம். வினய் நெகிழ்வாக பேசுவான். (“ஹௌ இஸ் யுவர் ஹெல்த் மாம்? டோண்ட் சே லைக் திஸ், தென் ஐ வில் பி அப்செட், கம் ஆன், ஐ அம் தேர் ஃபார் யூ. ஹவ் பில்ஸ் ரெகுலர்லி) மீரானுக்கு – புரிகின்ற அளவுக்கு கூட ஆங்கிலம் தெரியாது. எனக்கு கொஞ்சமாக புரியும்.

வீட்டிலிருந்து வேறொரு ஊருக்கு சென்று தங்கி வேலையிலிருக்கும் மக/மகள்களிடம், பெற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை வினய் போன்றவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மகன், நான் பிடித்திருக்கும் கடிவாளத்தோடுதான் இன்னமும் பயணிக்கிறான் என்பதை உறுதிசெய்துகொள்ள இதுபோன்ற செல்போன் விசாரிப்புகள் தேவைப்படுகிறது. வினய் கடிவாளத்தைப் பிடித்தபடி பயணிப்பவன். நான் வேறு வழியில்லாமல் அதை வலுத்துப் பிடித்துக்கொள்பவன்.

இதன் படி, வினய்க்கு முதல் இடம். இரண்டாவது இடத்திற்கு போகும் முன்பாக வினயைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. வினய் ஒரு கிதார் பிரியன். மறந்தும்கூட கெட்ட வார்த்தையை உச்சரிக்காதவன். அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் சென்றால், மதியம் இரண்டு மணிக்கு வந்து விடுவான். மாலையில் கிதாரை பின்னந்தோளில் போட்டுக்கொண்டு நண்பனின் அறைக்குச் சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்குள் அறைக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் பேசியபடி உறங்கிவிடுவான். கண்டிப்பாக, மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்றுவிடுவான். அதற்காக, முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டு எப்போதுமே அவனுடைய துணிப்பையில் இருக்கும். சுத்தமாக, சீராக தனது பொருட்களை அறையில் அடுக்கி வைத்திருப்பான். எந்த “கூடுதல்” வேலைகளும் செய்யாமல் முறையாக வாழ்பவன் வினய்.

இவையனைத்தும் எனக்கு ஒத்துப்போகாத ஒன்றாக இருப்பதாலும், செயலளவில் கொண்டுவராத/ முடியாதபடி இருப்பதாலும் வினய் என்னிடமிருந்து விலகிய ஒரு மனிதனாக இருந்தான். இதைத் தவிர, பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுபவன் நான். மூன்று பேர் சண்டைபோடுவதை ஓரத்தில் நின்று பார்க்கும்போதே நெஞ்சு படபடத்து ஓடுவேன். வார இறுதியில், ஞாயிறு என்றால் சாயங்காலம் வரை தூங்கிவிட்டு பலமுறை அடுத்த நாள் அலுவலகத்தில் அவதிப்பட்டிருக்கிறேன். யார் உதவியாவது எப்போதாவது எனக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். பசி, நல்ல தூக்கம், பெண்ணைப் பார்த்தால் அடி மயக்கம் என்ற கோட்டுக்கு வெளியே எதையுமே நான் உணர்ந்திருக்கவில்லை.

தனது நண்பன் பெயர் முருகன். ரோஸ் கலரில் பொசுங்கிய மாதிரி தோல் இருக்குமில்லையா?!. முருகனுடைய மாமா அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர். அவர் ஒரு பால்காரர். மாமாவின் வீட்டில் பத்துக்கு ரெண்டு அறை ஒன்று முதல் மாடியில் இருக்கிறது. டயமண்ட் சேப் துளையிடப்பட்ட அந்த அறையின் சுவர் தெருவைப் பார்த்தபடியிருக்கும். அப்போது சிப்பி பீடி எங்களுடைய பக்கம் ஃபேமஸ். அறையின் ஒரு பக்கம் சாயம் விலகிய அரக்கு நிற டிரெங்கு பெட்டியின் மேல் இரண்டு கட்டு பீடி எப்போதும் இருக்கும். நானும், முருகனும் அப்போது ஐந்தாம் வகுப்பில் இருந்தோம். வகுப்பு முடிந்ததும் நேராக முருகனுடைய மாமா வீட்டுக்கு சென்று ஆளுக்கு ஐந்து பீடிகளை ஊதி தள்ளிவிட்ட கையோடு பற்பசையால் வாயைக் கழுவிவிட்டுவிடுவேன். பின்னாள் கடையில் வைத்து என்னுடைய பெரியப்பா பார்த்ததிலிருந்து பப்ளிக்காக பீடி இழுக்க ஆரம்பித்துவிட்டேன்.

வினயை பொருத்தவரை அசைவுகளை வைத்துக்கொண்டுகூட தமிழ் மொழியைப் புரிந்துகொள்ள தெரியாது. பகலில் ஒரு மதிய வெளிச்சத்தில் வினய் இருக்கும்போது தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருந்தான் மீரான். இதெல்லாம் பட்டியலில் ஒரு பக்கம்தான். பட்டியலுக்கு உட்புறம் இருக்கும் தனது பரிணாமத்தின் வளர்ச்சியை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே இருந்தவன் அசலில் தற்பெருமையை சொல்லிக்கொள்ளும் சாதனையாளனாக மாறியிருந்தான்.

மீரான் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தபடி, பேர் சொல்லி அழைத்தாலும், பின்னாள், வா, போ என்று அழைக்கும் தூரத்திற்கு நெருக்கமாகியிருந்தான். காரணம் ஒரே மொழிக்காரன் என்பதை விட இருவருக்குமான குணாதிசய தூரக்குறைவினால்தான் என்று நினைக்கிறேன். தைர்யமாக பொதுவில் செயல்படாதவொன்றின் மீது எப்போதுமே ஒரு கிராக்கி இருப்பதுண்டு. அந்தரங்கமாக அறியவேண்டியதின் புதிர்களை அப்பட்டமாக்கி செயல்படுத்தியதன் விளைவாக ஒரு பிணைப்பு மீரானிடத்தில் எப்போதுமே இருந்தது. ஆனால், வினயிடம் இதே உறவமைப்பை நான் உணர்ந்ததில்லை. அவன் முற்றிலுமாக எங்களிலிருந்து புதிதாக வளர்ந்தவன். இதனால் கூட நான் என்னை இரண்டாவது இடத்தில் நிறுத்திக்கொள்வதுண்டு. இதை மீரானிடம் பகிர்ந்துகொண்டதே கிடையாது. அவனை மூன்றாவது இடத்தில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

“இந்தா மீரான், இதைப் பிடி! அவன் நிற்கிறான். நேரா போய். ஏங்க – அங்க கொஞ்சம் பாருங்க-னு வேக வேகமா சொல்லு. பாக்குறானோ இல்லையோ, இதால சாத்திரு. நீ அடிச்ச வேகத்துல நான் ஓடி வந்து மீதிய பாத்துக்குறேன். நைட்டு நேரம், காரியம் முடிஞ்சதும் சுத்தமாக்கணும். நீ என்ன பண்ணு, ஏற்கனவே சொன்ன மாதிரி அல்சூருல ரமேஷ் வீட்டுக்கு போயிரு. ஓசூர்-ல நடந்தத இத்தோட மறந்துரு. வெளங்குதா?”

“இது கொலை. இப்பவும் கம்பளத்துக்கு அடியிலேதான் இருக்குது. வெளியில் வராமல் நண்பன் பரந்தாமன் பார்த்துக்கொண்டான். ஒரே காரணம், பரந்தாமனுடைய அக்கா அவளுடைய வயிற்றில் குழந்தையோடு கெரசின் ஊற்றி இறந்தாள். மாமாவின் உயிர் நீத்தல் தான் ஒரே வழி என்று முடிவெடுத்தோம். பரந்தாமா! எனக்கும் இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குதடா ” மீரான் அந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக சொல்லிக்கொண்டிருந்தபோது இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வினய் நல்ல உறக்கத்தில் இருந்தான். அது ஒரு புழுக்கமான அறை. சாதாரண நாட்களில் கூட சட்டையைக் கழற்றிவிட்டுதான் படுக்க முடியும். மீரானின் குரலினால் என்னுடல் ஒரு மெழுகு திரவம் போல உருகிவிடுவதை உணர்ந்தேன். வியர்வை தாரை தாரையாக வெளியேறியது. சட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டேன். மீரான் தான் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை ஆழமாக பார்த்துக்கொண்டே தூங்குவதற்கு தயாராகியிருந்தான்.

பிப்ரவரி 28. வருடத்தின் எல்லா மாதங்களும் எல்லாவற்றிலும் பிந்தும்போது முந்திக்கொள்ளும் ஒரே மாதமாக பிப்ரவரி இருப்பதால் எனக்கு அதன் மேல் ஒரு தனி பிரியம் இருப்பதுண்டு. சம்பளம் கிட்டிவிடும். மூன்று நாள் வேலை மிச்சம். இதுபோக வினய் ஊருக்கு செல்வதால் கழிப்பறை வறண்டு எனக்கே எனக்கானபடி இருக்கும். இதுபோன்ற நாட்களில் மீரானையும் பார்க்க முடியாது.

பெரும்பாலும் மாதக் கடைசி வார விடுமுறையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வினய் தன்னுடைய ஊருக்கு சென்றுவிடுவான். இந்த முறை அப்படியிருக்கவில்லை. இருந்தாலும், வினய் ஊருக்கு செல்வதற்கு தயாராகியிருந்தான். நான் அப்பொழுதுதான் அலுவலகம்விட்ட அறைக்கு வந்திருந்தேன். காலுறையை கழற்றியபடியே மீரானிடம் சாதாரணமாகத்தான் சொல்லியிருந்தேன். மீரான், வினய் பாத்தியா? எவ்ளோ நல்லவனா இருக்கான்?

சற்றே ஏற்றமான உரத்த குரலில், “நண்பா, நல்லவன்-னு யாருமே கிடையாது. பார்க்கப்போனா நல்லதுங்கிறதே கெட்டது இல்லாம இருக்குறதுதான். சாமி மாதிரி, பேய் மாதிரி, மனசு மாதிரி, “நல்ல” அப்படிங்கிறதுகூட ஒரு நம்பிக்கைதான். என்னைய கேட்டியன்னா.. எல்லாமே கெட்டதுதான். கெட்டதுக்கு மரியாதை பண்ணின காலமெல்லாம் மனுஷனுக்கு பேர் சொல்லியே கூப்பிடாத காலம் நண்பா. எல்லாமே இடத்துக்காகதான். நீ யாரு? உன்னோட இடம் என்ன அப்படிங்கிறதுலதான் இருக்கு எல்லாமே. எல்லாருக்குமே ஒரு இடம் தேவைப்படுது. நம்மல ஊரே பாக்கணும்னு தோணுது. அதுதான் நல்லதுங்கிறாங்க. எதுக்குமே பேரில்லாம இருந்த காலத்தோட தொடர்பு பண்ணாம இருக்குறதுக்கு பேர்தான் நீ சொல்ற நல்லவன், வினய் மாதிரி. யோசி, உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் நாக்குல வந்துட்டா அப்புறம் நல்லது எங்க இருக்கும். புரியலண்ணா விட்டுரு. அதுதான் நல்லது!!” என்று சொன்னான்.

கசிந்த நீரின் வேகத்தைப்போல அப்போது மௌனம் மெல்ல பரவ ஆரம்பித்து அறை முழுதும் ஆக்கிரமித்தது. வினய் தன்னுடைய பையை தோளில் போட்டுக் கொண்டு எங்களைப்பார்த்து புன்முறுவலிட்டுக்கொண்டு அறையின் கதவைத் திறந்து படியிறங்கிச் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது மீரான் கைக்கடிகாரத்தை உற்று நோக்கி பார்த்தபடியிருந்தான். ஐந்தே நிமிடங்களுக்கு முன் வினய் எப்போதும் போல இருந்ததை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.

வினய் சென்ற முதல் நாள், மீரான் அறையிலிருந்து எங்கோ வெளியில் சென்றிருந்தான். அவன் எப்போது வருவான், எங்கே செல்கிறான் என்பதே தெரியாது. வாரத்தின் சில நாட்களில் அவனைப் பார்க்கவே முடியாது. சில முறை சீக்கிரமாகவே அறைக்கு திரும்பிவிடுவான். சில நாள் வார இறுதியில் அறைக்கு வந்ததே கிடையாது. அவன் அறையிலிருந்த நாட்களில் நானாக பேச்சு எடுத்தாலொழிய அவனாக பேசியது கிடையாது. அப்படி பேசிய சில நேரங்களில் அவனைப் பற்றிய தகவல்களை இப்படி மறைக்காமல் சொல்லிவிடுவான். அவன் யதார்த்தமாக பொய் சொல்பவன் என்பதே எனக்கு தோன்றுகின்ற கருத்தாக இருக்கிறது.

விடுதியின் காப்பாளர், மீரான் தான் அதிகாலையில் வருவான் என்பதை என்னிடம் தெரிவிக்க சொல்லியிருந்ததை சொன்னார். அடுத்த நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி. கதவு இரண்டு தட்டு விட்டு அடுத்த தட்டுக்கு சிறு இடைவெளியிட்டபடி அதிர்ந்துகொண்டிருந்தது. தூக்கமயக்கத்தோடு எழுந்தபடி தாழினை விலக்கித் திறந்தேன். மீரானோடு இன்னொருவன் நின்றுகொண்டிருந்தான்.

“இது நம்ம ஃபிரெண்டு, ஆற்காட்டுல இருக்கான். ஒரு வேலையா இங்க வந்துருக்கான் குளிச்சிட்டு கெளம்பிருவான்” என்று மீரான் சொன்னான்.

நான் லுங்கியை ஏற்றிக்கட்டியபடி அவனிடம் கைகொடுத்து அறிமுகம் செய்துகொண்டேன். அவன் ஆள் நெடிய உருவம். கை விரல்கள் பத்தும் இருபதுக்கு சமம் எனலாம். அடித்தால் மண்டை சுழலும். கைலி அணிந்திருந்தான். சட்டையின் இரண்டாவது பட்டன் தையலகன்று அங்கு ஒரு ஊக்கு போடப்பட்டிருந்தது. தலை மயிர் கம்மியாகவும், மீசை உதடு விளிம்புக்கு மேல் வரை மட்டும் விட்டு குறைத்தபடி சிரிக்காத முகத்தோடு வந்த வேலையை உடனே முடிப்பவன் போல கழிவறைக்குள் புகுந்துகொண்டான். நான் மீண்டும் என்னுடைய ஆழ்ந்த தூக்கத்துக்கு திரும்பியிருந்தேன்.

வெப்பம். படுக்கை ஒரு அடுப்பாக மாறியிருந்தது. மின்விசிறி “கெரக்கா, கெரக்கா” என்று சுழலும் சத்தம் மட்டுமே கேட்டது. அறை முழுவதும் இருள் பட்டை பட்டையாக நிரம்பியிருந்தது. மாலை மணி ஆறு இருக்கலாம். அப்போது தான் உறைத்தது. வழக்கத்திற்கும் மாறாக தூங்கிவிட்டேனோ! என்று. மீரானும், அவனுடைய நண்பனும் வெகு நேரம் முன்பே சென்றிருக்க வேண்டும்.

அந்த நினைப்போடு, புட்டத்தை நெருடிக்கொண்டே மெல்ல எழுந்து விளக்கின் பொத்தானைத் தேடிக்கொண்டிருந்தேன்.

வியர்வை நெடியால் உடல் வீச்சமடித்துக்கொண்டிருந்தது. பின்முதுகிலிருந்து பாய்ந்த வியர்வை நீர் முதுகுப் பள்ளத்தில் இறங்கிய சில்லென்ற உணர்வோடு விளக்குப் பொத்தானை அழுத்தினேன்.

கண்களைத் திறக்க முடியாதபடி வெளிச்சம் இருட்டைக் கொன்று அறையெங்கும் படர்ந்தது. வினய் பயன்படுத்தும் படுக்கையின் அருகாமையிலிருந்த நீர்க் குவளையிலிருக்கும் தண்ணீரை எடுத்துப் பகிர எழுந்து நின்றேன். ஒரு பருத்த வஸ்து என் கைகளை அரித்தது. அதன் இடுக்குகளில் வியர்வை நுழைந்து இறங்கியதால் அரிப்பு சுவாதீனமாக அதிகரித்தது. அப்போதுதான் மீரானுடைய கைக்கடிகாரம் என்னுடைய கைகளில் கட்டப்பட்டிருந்ததை உணர்ந்தேன். (இது அவனுடைய கையில் அல்லவா இருக்க வேண்டியது?)

நான்கு மடக்கு நீரை வேகவேகமாக அருந்திவிட்டு உடை மாற்றிக்கொண்டு மீரானைப் பார்ப்பதற்காக ஓடினேன்.

மக்கான பேட்டை துணிச்சந்தை போடும் இடத்தில் ஒரு நீண்ட வழி இருக்கிறது. அது நேராக பிரதான சாலையில் கொண்டு போய் முடியும். மெல்லிருட்டில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். இதயம் வேகமாக கனைத்தது. ஒவ்வொரு இடமாக தேடினேன். மீரானைப் போல சிலரை சந்திக்கவும் செய்தேன். ஆனால், மீரான் இருக்குமிடத்தை பார்க்க முடியவில்லை.

எதேச்சையாக துணிச்சந்தை சந்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் மீரானின் பின்னந்தலையைப் பார்த்தேன். ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையில் தன்னுடைய இடக்கை நகர்ந்தபடியும், வலக்கை அவளது மார்பகத்தைப் பிடித்தபடியும் மீரான் அவளின் மேற்புறமேனியில் ஊர்ந்துகொண்டிருந்தான். நான், அவன் செய்துகொண்டிருக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல், “மீரான், இங்க பாருப்பா…. இதைக் கொஞ்சம் எடுத்துக்குறியா?… இது உன்னோட வாட்சு தானே. என் கையில மாட்டியிருந்தது.. இதை வாங்கிக்கோ” என்று சொன்னேன். என்னுடைய குரல் ஒலித்த நேரத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தவனை, அவள், சட்டைக் காலரைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தாள். மீரான் அவளிடம் திரும்ப மறுத்தான்.

“மீரான், இது ரொம்ப நேரமா என்கிட்டயே இருக்கு, இதைக் கொஞ்சம் வாங்க்கிக்கிறியா?” அந்தப் பெண்ணைத் தள்ளி உதறிவிட்டபடி, மீரான் தன்னுடைய குறியை சரியாக கால்சராய்க்குள் விட்டுக்கொள்ளாமல் சந்தின் இருட்டில் ஓட ஆரம்பித்தான்.

“மீரான், ஓடாதே!! நில்லு. எங்க போற” என்று கத்திக்கொண்டே அவனைத் தொடர்ந்து ஓடினேன் . எனக்கு பின்னால், அந்தப் பெண் என்னைத் துரத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். பின்பக்கம் திரும்பி நான் அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே நீண்ட சந்தின் இடையில் ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டிருந்த மீரானின் நண்பன், இன்று காலையில் அறைக்கு வந்தவன் தான், அந்த பெண்ணை மறித்துப் பிடித்து ஒரு விலங்கைப் போல புணர ஆரம்பித்தான். அவள் அடித்தொண்டையிலிருந்து ஒரு விநோதமான ஒலியை எழுப்ப ஆரம்பித்தாள். அது காயடி வாங்கிய நாயின் குரல் போல ஒலித்தது.

இதைக் கவனித்துவிட்டு மீரானைத் தொடர்ந்து ஓடியபோது அவன் சந்தின் எல்லைக்கே சென்றிருந்தான்.

“ஓடாதே!! கொஞ்சம் நில்லு. இதை கொஞ்சம் வாங்கிக்கோ!” என்று அவனை ஒரே ஓட்டமாக நெருங்கியதும், சரியாக அவன் சாலையில் கால் வைத்து வேகமாக இடையில் நுழைந்த சரக்கு வாகனமொன்றை கவனிக்காமல் கனமாக மோதி மூக்கு, கண் சிதைந்து உடல் தூக்கி வீசப்படுவதற்கும் இடையே இரண்டு நொடிகள் மிச்சமிருந்தது.

மீரானின் உடலிலிருந்து ரத்தம் பேனாவிலிருந்து தெறிக்கும் மையைப் போல என் மீது குறுக்கு வெட்டாகப் பாய்ந்தது.

உடல், வண்டியின் மீது அடிபடும் தொலைவுக்கு மிக அருகில் இருந்தபோது மீரானின் கண்கள் சிதைவதற்கு முன்னால் சுழன்று உருண்டுகொண்டே என்னைப் பார்த்தது. அது கைக் கடிகாரத்தை வாங்க மறுத்ததன் அடையாளமாகவும், வினயின் கைகளில் அவனுக்குத் தெரியாமல் கட்டிவிடும்படி சொன்னதாகவும் இருந்தது. நான் அப்போது பின்பக்கமாக திரும்பி மீரானின் நண்பனை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். சட்டையிலிருந்த மீரானின் இரத்தக் கறையையும், கடிகாரத்தையும், என்னையும் பார்த்தவன் தப்பிக்க ஆரம்பித்தான்.