ஞானக்கூத்தன் கவிதை வாசிக்கிறார்….


சமஸ்கிருதம்

ஞானக்கூத்தன் சமீபத்தில் எழுதிய கவிதையான சமஸ்கிருதம் என்ற கவிதையும் வாசிக்கிறார்.  கேட்கவும்

ஞானக்கூத்தன் பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை மூன்று பேர்களை பேட்டி அளித்துள்ளேன்.  தற்போது நவீன விருட்சம் சார்பாக ஞானக்கூத்தன் பேட்டி வெளியாகிறது.  இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….
அழகியசிங்கர்
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது.  கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார்.  எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர். 
 இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும்.  ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.  
இந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல.  அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள்.  தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க   ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது.  பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  
ஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார்.  ‘இந்த விருதை தேவதச்சன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்,’ என்று. இப்படி சொல்வதற்குப் பெரிய மனது வேண்டும்.  இந்தக்  குழுவினருக்கு அது மாதிரி சொல்கிற தைரியம் இருக்கிறது.  தேவதச்சனுக்கு விருது வழங்கும்போது கிட்டத்தட்ட அந்த ஹால் முழுவதும் நிரம்பி விட்டது.  
அந்த மேடையில் பேசின அத்தனைப் பேர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பேசினார்கள்.  அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அங்கு கூடியுள்ள கூட்டம் அமைதியாக இருந்தது.  எனக்கு லட்சுமி மணிவண்ணன் பேசியது ரொம்பப் பிடித்திருந்தது.  அவர் பேசிய விதமும் நன்றாக இருந்தது.  அவர் நம் முன் ஒரு கூட்டம இருக்கிறது.  அதற்காகப் பேசுகிறோம் என்றில்லாமல் அவருக்காக பேசுவதுபோல் பேசினார். முதலில் அவர் ஆரம்பிக்கிறபோது எங்கே தேவதச்சனைப் பற்றி பேசாமல் இருந்து விடுவாரோ என்று கூடத் தோன்றியது. அதேபோல் அவர் எங்கே பேச்சை முடிக்காமல் போய்விடுவாரோ என்று கூடத் தோன்றியது.  
தேவதச்சனைப் பற்றி பேசும்போது யுவன் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.  மேடையில் அவர் பேசும்போது அப்படித்தான் இருந்தது.  நான் தேவதச்சனை யுவன் மூலமும் ஆனந்த் மூலமும் பேசிக் கேட்டிருக்கிறேன்.  இரண்டு முறை அவரை ஆனந்த்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.   யுவன் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் தேவதச்சனைப் பார்த்து பரவசப்பட்டு எங்களிடம் (ஆனந்திடமும் என்னிடமும்) பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.   அது மாதிரி பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இதெல்லாம் முன்பு.  
பொதுவாக தேவதச்சன் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்.  தன் கவிதைக்குக் கிடைத்த அங்கிகாரத்தைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.  ஆனந்த் பையன் திருமணத்தின் போது அவரைப் பார்த்துக் கேட்டேன்.  அந்த சமயத்தில் அவருக்கு விளக்கு பரிசு கிடைத்திருந்தது.  உங்கள் கவிதைக்காக விளக்கு பரிசு கிடைத்திருக்கிறதே என்று.  தன் கவிதைக்காக இது மாதிரி பரிசு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக நினைத்துதான் அவர் பேசினார். அவர் பேசியதைக் கேட்கும் போது, நான் சாதாரண ஆள். ஏதோ கவிதைகள் எழுதுவேன்.  இந்த அங்கிகாரம் அதிகம்தான் என்பதுபோல்தான் பேசினார்.  எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.  நான் பேசியது அவ்வளவுதான்.  அதற்குள் தேவதச்சனை வேற யாரோ தேடி வந்து விட்டார்கள்.
குரு ஸ்தானத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை வைத்திருக்கிறார்கள்.    அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலவிதங்களில் பிரபலமாகி விட்டார்கள்.  அவர்கள் பிரபலம் ஆகும்போது தேவதச்சனும் பிரபலம் ஆகாமல் இருக்க முடியாது.  அதுதான் நிகழ்ந்திருக்கிறது. புதியதாக எழுத வருபவர்கள் கூட தேவதச்சனை தேடிப் போகிறார்கள்.  இப்படி அபூர்வமான ரசிகர் கூட்டம் எந்த எழுத்தாளருக்கும் அதுவும் குறிப்பாக கவிஞருக்குக் கிடைக்காது.   யாரும் அவரைத் தேடி வராமல் இருந்தால்கூட அவர் பேசாமல்தான் இருப்பார்.  அதைப் பற்றி அவர் கவலைப் பட மாட்டார். 
அவர் கவிதைகளையும் ரொம்ப குறைவாகத்தான் எழுதி உள்ளார். அதை உடனடியாக பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைக்கவும் மாட்டார். அவருடைய கவிதைப் புத்தகங்கள் பிரசுரமானது கூட மற்றவர்கள் முயற்சியாகத்தான் இருக்கும். யாராவது கவிதைத் தொகுதி கொண்டு வந்தால் தேவதச்சன் பெயரை அதில் தெரியப் படுத்தினால் அந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்பு கூடத்தான் செய்யும்.  
அவர் எதை எழுதினாலும் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்.   
1988ல் நான் விருட்சம் ஆரம்பித்தபோது, தேவதச்சன் எனக்கு சில கவிதைகளை அனுப்பினார். கவிதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதால்தான் அனுப்பினார். அதில் ஒரு கவிதை.  என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது.  அந்தக் கவிதையின் பெயர் : ஒரு நிமிஷம்.  இக் கவிதைவிருட்சம் 2வது இதழில் வெளிவந்தது. அதாவது அக்டோபர் – டிசம்பர் 1988ல்.
உயிர் பிரிவதற்கு
எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது

மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான் 
இருக்கிறது.

இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.

இவ்வொரு 
நிமிஷத்தில் 
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம் 
வளர்ந்து விடுகிறது.
இந்தக் கவிதையை நான் படித்தபோது விருட்சம் இதழையே கொண்டு வரவேண்டாம் என்று அப்போது நினைத்தேன்.  ஏன் கவிதைகள் எல்லாம் இப்படி நம்மை தொந்தரவு செய்கிறது என்று என் சிந்தனை போயிற்று. அதன் பின் அவர் எனக்கு அனுப்பிய கவிதை டினோசரை நெருங்குவது எப்படி?  என்பது.  
விஷ்ணுபுரம் கூட்டம் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது.  நான் தேவதச்சனை நேரிடையாகப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க நினைத்தேன்.   ஆனால் அவரைச் சுற்றி கூட்டமாக இருந்தது.  நான் அங்கு போய் அவரைப் பார்த்து வாழ்த்த முடியாது என்று திரும்பிப் போய்விட்டேன்.  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தது.  அநதப் படத்தில் தேவதச்சன் பேசியது எனக்கு சரியாகப் புரியவில்லை.  அவர் குரல் சரியாக எடுபடாமல் இருந்ததுபோல் தோன்றியது.  நான் தூரத்தில் உட்கார்ந்திருந்ததால் அப்படித் தோன்றியிருக்கும்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த சுப்ரபாரதி மணியனைக் கேட்டேன்.  அவரும் ஆமாம் என்றார்.  மேலும் üஅத்துவான வெளியின் கவிதைý என்ற தலைப்பில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள்.  144பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  தமிழில் இந்த அளவிற்கு ஒரு கவிஞரை கௌரவப்படுத்தியதை நினைக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
 

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்


                     கலந்து உரையாடல்

பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன்
                இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும்,
                அழகியசிங்கரும்

        இடம் :                  பனுவல் விற்பனை நிலையம்
                        112 திருவள்ளுவர் சாலை
                        திருவான்மியூர், சென்னை 600 041

        தேதி            02.01.2016 (சனிக்கிழமை)

        நேரம்           மாலை 5.30 மணிக்கு

                          பேசுவோர் குறிப்பு :

ஜெயந்தி சங்கர் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில்
தன் ஆளுமையைப் பதித்தவர்.

சத்தியனந்தன் :  சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம்
என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

அனைவரும் வருக,

அன்புடன்
ரவி சங்கர் – அழகியசிங்கர்

புத்தக விமர்சனம் 13

அழகியசிங்கர்
சங்கவை என்ற பெயரில் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய 927 பக்கங்கள் கொண்ட மெகா நாவலை எல்லோரும் படிக்க வேண்டும்.  ஒரு பெண் எழுத்தாளர் இத்தனைப் பக்கங்கள் ஒரு நாவலை எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இன்றைய தமிழ் சூழ்நிலை மெகா நாவல் சூழ்நிலை.  ஆனால் யார் இத்தனைப் பக்கங்களைப் படிப்பது என்ற கவலையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எழுதுபவர்களுக்கு அதுமாதிரி கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  சமீத்தில் பெண் எழுத்தாளர்கள் யாரும் அவ்வளவாக நாவல் எழுதுவதாக தோன்றவில்லை.  கவிதைகள் அதிகமாக எழுதி புத்தகமாக வருகிறது.  அல்லது சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது.  மெகா நாவல் மாதிரி யாரும் முயற்சி செய்வதில்லை. 
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நான் 30 பக்கங்கள் படிப்பேன் என்று வைத்துக்கொண்டால்  900 பக்கங்கள் படிக்க 30 நாட்கள் ஆகும்.  இதில் என்ன பிரச்சினை என்றால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது கதா பாத்திரங்களை  ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
சங்கவை நாவலைப் படிக்கும்போது அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.  படித்து முடித்தப்பின் நான் திரும்பவும் எதாவது ஒரு பக்கத்திலிருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவேன்.  இப்படி பலமுறை படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதவேண்டுமென்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.  இந்த நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த விரசமுமில்லாமல் ஜெயசாந்தி கொண்டு போகிறார். அலுக்காத சரளமான நடையை கையாள்கிறார். இன்றைய நவீன நாவலில்ன தன்மையில் நாவல் முழுவதும் எதோ ஒரு இடத்தில் சிறுகதையைக் கொண்டு எழுதுவார்கள், ஒரு இடத்தில் கட்டுரைத் தன்மையைக் கொண்டு வருவார்கள், சிலர் கவிதைவரிகளை நாவலில் அங்கங்கே தெளிப்பார்கள்.  ஜெயசாந்தி கதைத் தன்மையையும். கவிதைத் தன்மையையும் நாவலில் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் நான் படிக்கும் புத்தகங்களை விமர்சனமாக எழுத முயற்சி செய்கிறேன்.  இப்படி எழுதுவதால் எந்த அளவிற்கு இதில் வெற்றி பெறுகிறேன் என்பது தெரியவில்லை.          
ஜெயசாந்தியின் இந்த நாவல் மூன்று கல்லூரி மாணவிகளை  சுற்றி வரும் நாவல்.  ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்து நட்புடன் பழகும் மூன்று பெண்களைப் பற்றிய நாவல் இது.   இன்றைய காலத்தில் இப்படி விகற்பமில்லாமல் நட்புடன் பழகக் கூடியவர்கள் இருப்பார்களா என்பது தெரியவில்லை.  இந்த மூன்று பேர்களில் ஒருவர் பெயர் சங்கவை, இன்னொருவர் பெயர் ஈஸ்வரி, மூன்றாமவள் பெயர் தமிழ்ச்செல்வி.  இந்த மூன்று பேர்களைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள நட்பு வட்டம், உறவினர் வட்டம் குறித்துதான் இந்த மெகா நாவல்.  
ஒரு விதத்தில் இந்த நாவல் ஈடெறாத ஆசையைக் குறிவைத்து எழுதப்படுகிறதா என்று தோன்றுகிறது.     இந்த மூன்று பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை.  அதில் அவர்கள் ஆழ்ந்து அதைப்  பற்றிய கவலைகளுக்கும், கலக்கத்திற்கும் ஆளாகிறார்கள்.
எல்லோரும் சங்கவி என்ற பெண்ணிடம் ரொம்ப அன்பு பாராட்டுகிறார்கள். யாரைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது என்று பார்த்தால், சங்கவி என்ற பெண்ணைச் சுற்றித்தான் நடக்கிறதா என்றால் இல்லை.  இது எல்லாவற்றைப் பற்றியும் சொல்கிறது.
ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினையைப் பற்றி பேசுகிறது. ஆனால் மூன்று பேர்களாலும் அவர்கள் எதிர்த்து நடக்கும் சம்பவங்களை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. எதைக் குறித்தும் எதுவும் செய்ய முடியவில்லை.  ஈஸ்வரியால் அவள் அக்கா கலைவாணியைக் காப்பாற்ற முடியவில்லை.    இந் நாவலில் தினமும் கேள்விப்படும் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா அக்கிரமங்களும் வெளிப்படுகின்றன.  கல்வி நிலையங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை பாலியல் பிரச்சினை.  இப்படி பாலியல் பிரச்சினையில் உள்ளாகும் பெண்கள் அதை எதிர்த்து வெற்றி பெற முடியாத அவல நிலையை இந் நாவல் வெளிப்படுத்துகிறது.  பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு தமிழ் பேராசிரியை தன் உள்ளக் குமறல்களை டைரியில் எழுதி  வைக்கிறாள்.   ஈஸ்வரியின் சகோதரி கலைவாணியோ தான் படிக்கும் படிப்புக்கு டாக்டர் பட்டம் வாங்க தனக்கு மேலே உள்ள பேராசிரியரின் பாலியல தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.  தன் துன்பத்தை ஏன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.   
அதேபோல் மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு கிராமம் நினைக்கிறது. ஆற்று மணலிலிருந்து இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போகும் மணலை தடுக்க கண் விழித்து காவல் காக்கிறார்கள் மூன்று பேர்கள்.   அவர்களுக்குத் தெரியாமல்  அதில் கலந்துகொண்ட பூத்துரை தமிழ்ச்செல்வியின் கிராமத்தில் உள்ள ராஜகனியின் கணவன் மணல் லாரியில் அடிப்பட்டு சாகிறான்.  மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு உயிரைப் பலிகொடுக்கும் இயலாமையை இந்த நாவல் விவரித்துச் செல்கிறது.  
எபி என்கிற கிருத்துவப் பையனைக் காதலிக்கிறாள் தமிழ்ச்செல்வி. ஒவ்வொரு நேரத்திலும் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். எபியின் பெற்றோர்கள் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறார்கள்.  அந்தப் பெண் முழுக்க ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு கர்த்தருக்குள்ளே வரவேண்டும் என்கிறார்கள்.  தமிழ்ச்செல்வி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண்.  இந்த மதமாற்றத்திற்கு அவள் தயங்குகிறாள்.  ஏன் தயங்குகிறாள் என்பது தெரியவில்லை.  தனக்குப் பிடித்தப் பையனுடன் வாழ ஏன் விரும்பவில்லை.  மதம் ஏன் இதற்கு தடையாக உள்ளது என்பது புரியவில்லை.   அவள் மீது விருப்பப் பட்டாலும் எபியும் வேற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் நிர்பபந்தத்திற்கு ஆளாகிறான்.  எபியின் இந்த முடிவை சங்கவை ஏற்றுக்கொள்ளவில்லை.  சங்கவி என்ற கதாபாத்திரத்தை தனக்குச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்பால் அவதிப் படுபவள் போல் இந்த நாவலில் ஜெயசாந்தி வெளிப்படுத்துவது போல் காட்டுகிறார்.
இந்த எதிர்பாராத திருப்பம் நாவலை முடிவு நிலைக்கு கொண்டு போகிறது. இந்த நாவலின் புரியாத புதிர் சங்கவி.  வெள்ளப் பெருக்கில் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போகும்போது தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாள்.  அவளை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நிமலோ என்ற பிரஞ்சுக்காரர் உலகம் முழுவதும் ஏதோ ஆன்மிகத் தேடலுக்காக சுற்றுபவர்.  சங்கவி நினைவிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டவர்.  உண்மையில் சங்கவி மீது காதல் வயப்பட்ட அவர் அவளைத் திருமணம் செய்துகொள்ளக் கூட நினைக்கிறார்.  ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள்.  வழக்கம்போல் நிராசை. திருநெல்வேலிக்கு அவர் திரும்பவும் வரும்போது, அவர் சங்கவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விபரத்தை அவளுடைய சகோதரன் ஆனந்த் மூலம் அறிந்து பெரிதும் கலக்கம் அடைகிறார். 
இறுதியில் காவி உடையில் தலையை முக்காடிட்டு சங்கவி புத்தத் துறவியாக கியோட்டாவில் தெரிகிறாள் என்பதாக கதை எதிர் பாராமல் கதை முடிகிறது.
இப்படிப்பட்ட முடிவுடன் ஏன் இந்த நாவலை ஜெயசாந்தி முடித்தார் என்று எனக்குப் புரியவில்லை. 
இந்த நாவல் முழுவதும் ஆண் பெண் உறவு நிலையை சுமுகமாக தீர்க்க இந் நாவலாசிரியை விரும்பவில்லை.
27.12.2015 அன்று கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் விருதை ஜெயசாந்தி அவர்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  அந்த வைபவத்திற்கு நானும் சென்றேன்.  கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் இந்த நாவலை சிலாகித்துப் பேசும்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னார்.  இந்த நாவலை எழுத ஜெயசாந்திக்கு துணிச்சல் வேண்டுமென்று.  கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் துணிச்சல் தனக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.  இன்னொன்றும் சொன்னார் கல்லுரி மாணவிகள் ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று.  
நானும் ஒப்புக்கொள்கிறேன்.
சங்கவை – நாவல் – இ ஜோ ஜெயசாந்தி – 927 பக்கங்கள் – விலை ரு. 820 – வெளியீடு : விருட்சம், சீத்தாலட்சுமி அடுக்ககம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 – தெ.பே : 9444113205

அறிவிப்பு

   
 அழகியசிங்கர்
 
 

 
 திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா
 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெளியாகி இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்த நாவல்களில் விருட்சம் வெளியீடாக வந்த எழுத்தாளர் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய üசங்கவைý என்ற நாவல் 2015ம் ஆண்ட திருமதி ரங்கம்மாள பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பு விழா  27.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஸ்தூரி சீனிவாசனம் அறநிலையம், கோயமுத்தூரில் நடைபெற உள்ளது.

 அன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள். 

 அந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.  1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சார்வாகன் இறந்துதான் விட்டார்…………

அழகியசிங்கர்



நான் பார்க்க வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்வாகன்.  இன்னொருவர் ராஜம் கிருஷ்ணன்.  இவர்கள் உயிரோடு இருக்கும்போது சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.  முதல் காரணம்.  நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களை யாராவது ஒருவராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி இருக்க வேண்டும்.  புத்தகம் மூலம் இந்த எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தாலும் முழுமையாக இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் படித்தவனில்லை. ஏன்எனில் புத்தகம் படிப்பது எனக்குப் போராட்டமாக இருக்கிறது.  நான் விரும்பும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது பெரிய போருக்குத் தயாராவது போல் இருப்பேன்.  அதே சமயத்தில் புத்தகம் படிப்பது போல் அற்புதமான விஷயம் வேறு எதுவுமில்லை என்றும் நினைப்பவன்.
ராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை நான் ஆரம்ப காலத்திலேயே படித்திருக்கிறேன்.  க்ரியா வெளியீட்டின் மூலம் வெளிவந்த சார்வாகனின் சிறுகதைத் தொகுதியான üஎதுக்குச் சொல்றேன்னா,ý என்ற புத்தகத்தை அது வந்த சமயத்திலேயே வாங்கி வைத்திருக்கிறேன்.  ஆனால் வழக்கம்போல் சில கதைகளைப் படித்துவிட்டு வைத்துவிட்டேன்.  ஒரு புத்தகத்தை எடுத்து நான் பிறகு படிக்கலாம் என்று வைத்து விட்டால், அதைத் திரும்பவும் கண்டு பிடித்து படிப்பது எனக்கு சிரமமாகிவிடும்.  இந்த விதத்தில் சார்வாகன் எழுத்தை முழுதும் படிப்பதை விட்டுவிட்டேன். இதே போல் பல எழுத்தாளர்களை நான் படிப்பதை விட்டிருக்கிறேன். ஆனால் என் மனதில் சார்வாகன் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. 
அதன்பின் 40 சிறுகதைகளும் 3 குறுநாவல்களும் கொண்ட 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் நற்றிணை பதிப்பக வெளியீடாகக் கிடைத்தப் புத்தகமும் எனக்குக் கிடைத்தது.   எப்போது முழுவதும் படிக்க ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  அந்தச் சமயத்தில் நான் அழகிரிசாமியின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சமயமும் சார்வாகன் கதைகள் புத்தகம் பார்ப்பதற்குக் கிடைக்கும்போது, ஆரம்பிக்கவேண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து வைத்துவிடுவேன்.
ஆனால் சமீபத்தில் வந்த வெள்ளம் என் அறையைச் சூறை ஆடியது.  அதில் சார்வாகன் கதைகளும் மாட்டிக்கொண்டது.  தண்ணீரில் நனைந்து நன்றாக ஊறிப் போய்விட்டது.  ஆனால் அந்தப் புத்தகத்தை நான் தூக்கிப் போடவில்லை.  நனைந்து விட்டது என்று கொஞ்சம் வருத்தப்பட்டேன்.  ஆனால் இப்போது அவர் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
சமீபத்தில் நான் வைதீஸ்வரன் என்ற கவிஞரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அவர் சார்வாகன் நண்பர்.  üஒரு சோகமான விஷயம்,ý என்றார்.  ‘என்ன?’ என்று கேட்டேன்.  “சார்வாகன் உடம்பு முடியாமல் இருக்கிறார்.  தன் உடம்புக்கு மருத்துவரை அணுகாமல் மருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்,” என்றார். 
சார்வாகனைப் போய் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் உடல்நிலை சரியில்லாத ஒருவரை போய்ப் பார்ப்பதை நான் சங்கடமாக நினைப்பவன்.  மேலும் சார்வாகனுக்கு என்னை யார் என்று தெரியாது.  யோசனையில் இருந்தேன்.  ஆனால் 21ஆம் தேதி எனக்கு தளம் ஆசிரியர் பாரவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.  “மோசமான நிலையில் சார்வாகன் இருக்கிறார்.  வந்து பார்க்கவும்,” என்று.  அச் செய்தியைப் பார்த்தவுடன், அசோகமித்திரனுக்கு போன் செய்தேன்.  “சார்வாகன் மோசமான நிலையில் இருக்கிறாராம்.  நாளை போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டேன்.  அவரும் போய்ப் பார்க்கலாம் என்றார்.
ஆனால் சிறிது நேரத்தில் பாரவியிடமிருந்து இன்னொரு செய்தி வந்தது.  சார்வாகன் இறந்து விட்டார் என்று.  எனக்கு வருத்தமாகப் போய்விட்டது.  நான் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர் ஒருவர், நான் பார்க்காமலேயே இறந்து விட்டாரே என்று.
சார்வாகன் விஷயத்தில் ஏற்கனவே 1988ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டதாக ஒரு சிறுபத்திரிகையில் செய்தியும், அவரைப் பற்றி வல்லிக்கண்ணன் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார்.  சாலிவாஹனன் என்ற எழுத்தாளர் இறந்ததை தவறாக அப்படி சொல்லிவிட்டார்கள்.  பின் அந்தச் சிறு பத்திரிகை தன் தவறை உணர்ந்து மறுப்பு எழுதியிருந்தது.  இப்போதும் அதுமாதிரி இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.  ஆனால் இப்போது இந்தச் செயதியைச் சொன்னது பாரவி.  அவர் சொல்வதில் உண்மை தப்பாது.  சார்வாகன் இறந்துதான் விட்டார்.
அடுத்தநாள் காலையில் நானும் அசோகமித்திரனும் சார்வாகன் வீட்டிற்குச் சென்றோம்.  குளிர்பதனப் பெட்டியில் சலனமில்லாமல் சார்வாகன் படுத்து இருந்தார்.  அவர் உயிரோடு இருந்தால் என்னுடன் என்ன பேசியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.   
அவருடைய புத்தகத்தைப் படிக்கும்போது இயல்பாகவே அவருக்கு நகைச் சுவை உணர்வு எழுத வருகிறது என்று தோன்றியது.
சார்வாகன் கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள ‘பிரியா விடை’ என்ற கதையில், ஒரு இடத்தில்  கீழ்க்கண்டவாறு அவர் எழுதியிருக்கிறார்.:
“யார் நீங்கள், தெரியவில்லையே?” என்றேன்.
“உங்களை அழைத்துவர மேலேயிருந்து அனுப்பியிருககிறாரகள்.  வாருங்கள் போகலாம்,” என்றார் சட்டைக்கார மனுஷர்.
“நீங்கள்…எம தூதர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.  எமதூதர்கள் என்றால் முறுக்கின மீசையுடன் கிங் காங் உடம்போடு கையில் பாசக் கயிறுடன் இருப்பார்கள் என்பதுதான் என் கற்பனை.  அறுபது வயதுக் குடியானவன் போலவும், ‘லட்சிய எழுத்தாளர்’ போலவும் இருப்பார்கள் என்று நான் கனவிலும் கருதியதில்லை…
.
சார்வாகனின் கதையில் இப்படி நகைச்சுவையுடன் கூடிய சித்திரிப்பு பெரிதும் வெளிப்படுகிறது.  பிரியா விடை என்ற இக் கதையை 60ல் எழுதிய சார்வாகன் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் செய்ய அனுப்பவில்லை.  
மேலும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் அவர். 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் அவர் எழுதி சாதித்ததைப் பறை சாற்றுகிறது.  
ஹரி ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் அவர் கவிதைகளும் எழுதி உள்ளார்.
அவருடைய கவிதையில் உள்ள சில கவிதை வரிகள் :
மழை விட்ட வானம்
காலடியில் சேறு
குளம்படிக் குழி
தண்ணீர் தளும்புகிறது
சந்திரத் துண்டுகள்
சந்திரத்
துண்டுகள்
தூள்கள் காலடியில்
வானத்தில்
மதி
அவர் கதைகள் புத்தகமாக வந்ததுபோல் கவிதைகளும் தொகுத்து புத்தகமாக வரவேண்டும்.  வரும் என்று நம்புகிறேன்.
சார்வாகன் பற்றி நான் இன்னும் அறிந்து கொண்டது.  அவர் எழுத்தாளர் மட்டுமல்ல.  அவர் ஒரு மருத்துவர்.  குறிப்பாக தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவை சிகிச்சைத் துறையில் பணிபுரிந்து உலக அளவில் பேர் பெற்றவர்.  தொழுநோய் மருத்துவத் துறையில் இவர் செய்த அளப்பரிய சேவையை மேன்மைப் படுத்தும் வகையில் 1984இல பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.  

எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது……

சார்வாகன்
திங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர்.
அவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர்  தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச் செய்தார். அதில் சார்வாகன் எழுதிய ஒரு கதை ஒரு சிற்றூரில் நடக்கும் கொடியேற்றத்தைப் பற்றியது. நகைச்சுவையில் அது வகைப்படுத்த இயலாத ஒரு தனித்துவமான படைப்பு. ‘உத்தரீயம்’ என்ற அவருடைய இன்னொரு கதையும் வகைப்படுத்த முடியாத ஒரு விசேஷப் படைப்பு. ‘தாமரை’ மாத இதழிலும் ‘கணையாழி’ இதழிலும் அவர் சில கதைகள் எழுதினார். 
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ‘க்ரியா’ அவருடைய  ஒரு சிறுகதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனை ஆசிரியர் என்று தலப்பில் போட்டு இரு வெவ்வேறு அளவுகளில் ‘ஞானரதம்’ என்ற பத்திரிகையில் வெளிவந்த அவருடைய சிறுகதை ‘கனவுக்கதை’ கதையை காலம் சென்ற எழுத்தாளர் ஐராவதம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனை’ மாதக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமரர் சுந்தர ராமசாமியிடம் விடப்பட்டிருந்தது. அவர் சார்வாகனின் ‘கனவுக் கதை’யையே தேர்ந்தெடுத்தார்.
‘மணிக்கொடி’ காலத்திலிருந்தே ‘சாலிவாகனன்’ என்ற புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவருடைய கதை, கட்டுரை, கவிதைகள் தவிர அவர் நல்லதொரு பத்திரிகை ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானார். அச்செய்தியை ஒரு நண்பர் சொன்ன முறையில் வல்லிக்கண்ணன் அதைச் சார்வாகன் என்று நினைத்து ஓர் இரங்கல் கட்டுரை எழுதி, அது பிரசுரமும் ஆகிவிட்டது. தன்னைப் பற்றிய இரங்கல் கட்டுரையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த எழுத்தாளர்கள் இருவர். ஒருவர், சார்வாகன். இன்னொருவர் ஹெமிங்வே.
இரு ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணைப் பதிப்பகம் யுகன் சார்வாகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் சேர்த்து ஒரு சிறப்பு வெளியீடு வெளிக்கொணர்ந்தார். அது 2013 சென்னை புத்தகச் சந்தையின் போது வெளியிடப்பட்டது.
சார்வாகன் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய இறுதி நாட்களில் மருத்துவமனை கொண்டு சென்றேயாக வேண்டும் என்றிருந்த போது கூட அவர் சம்மதம் தரவில்லை. சென்னையில் அவர் வீட்டிலேயேதான் அவர் உயிர் பிரிந்தது.
சார்வாகன் அவருடைய புனைப்பெயருக்கேற்ப வாழ்ந்தவர். இடதுசாரிச் சிந்தனை உடையவர். பெரும்பாலும் கதருடை அணிந்தவர். அவருடைய ‘உத்தரீயம்,’ ’கனவுக்கதை’ போன்றவை தமிழ் உரைநடைப் படைப்புகளில் முற்றிலும் ஒரு புதிய பாணியை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவை.
.   

சின்ன தப்புகள்….

….

அழகியசிங்கர்



குவியம் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நேர்பக்கம் என்ற என் புத்தக அறிமுகக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. சிறப்புப்
 பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்

சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி.

அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் என்னை மறந்து அவர் பேச்சை ரசித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.
வெள்ளத்தால் ரொம்பவும் நனையாத கொஞ்சம் நனைந்த புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தேன்.என் புத்தகத்தில் புத்தகம் முடிந்தபின் நான் சில சின்ன தப்புகளைச் செய்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் அட்டைப் பட ஓவியத்தை வரைந்தவர் கவிஞர் எஸ் வைதீஸ்வரன். இதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அற்புதமான ஓவியம் அது. உண்மையில் இந்தப் புத்தகம் வந்ததே ஒரு விபத்துதான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு புத்தகங்களுக்கு அட்டை பிரிண்ட் செய்திருந்தேன். மூன்று புத்தகங்களை அப்போதே கொண்டு வந்துவிட்டேன். நேர் பக்கம் என்ற பெயரில் அப்போது கொண்டு வர இருந்த என் புத்தகம் மாட்டிக்கொண்டது.
அந்தப் புத்தகத்திற்கான அட்டையைத் தயாரித்து ஒரு மூலையில் கட்டி வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 600 அட்டைகள் அடித்து வைத்திருப்பேன். எப்படி இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பது என்ற குழப்பம் என்னிடம் இருந்து கொண்டு இருந்தது. பல இலக்கிய நிகழ்ச்சிகளின்போது நான் எழுதிய கட்டுரைகளைத் திரட்டி வைத்துக் கொண்டு இருந்தேன். அதே போல் பல படைப்பாளிகளைப் பற்றியும் நான் எழுதி வைத்திருந்தேன். உண்மையில் எழுத்தாளர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
க்ருஷாங்கினி பேசும்போது, ‘பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எதுவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறினார். அது உண்மைதான். பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி நான் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், சேர்க்க மறந்து விட்டேன். அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருந்தாலும் சேர்க்க மறந்து விட்டேன். வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரை, வாசகர் கடிதப் பாணியில் எழுதியிருந்தேன். பலருக்கு அது புரியாது. அத்தனை வாசகர் அவர் கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிற என்று
கூடத் தோன்றும். வாசகர் கடிதப் போர்வையில் எல்லாம் நான் எழுதியதுதான். உண்மையில் கட்டுரை முடிவில் நான் இதைத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் வைதீஸ்வரன் கவிதைகளைக் குறித்து இன்னும் ஒரு முறை படித்துவிட்டு எழுத வேண்டுமென்று கூடத் தோன்றியது. நான் மதிக்கும் இன்னொரு கவிஞர் ஞானக்கூத்தன். அவரைப் பற்றி நான் எதுவும் இத் தொகுப்பில் கட்டுரை எழுதவில்லை.
அசோகமித்திரன் சிறுகதைகளைக்குறித்து, நாவல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைக் குறித்து பெரிய அளவில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்த நேர்பக்கம் என்ற பெயரில் கொண்டு வந்த இந்தத் தொகுப்பு இன்னும் தொடரும். சிறுபத்திரிகைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும்போது, பிரம்மராஜனின் மீட்சி, சதங்கை, ஞானரதம் பற்றியெல்லாம் எழுத மறந்து விட்டேன். அடுத்தப் பதிப்பு வரும்போது இந்தத் தவறை திருத்திக்கொள்வேன்.
142 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை 120 ரூபாய்தான். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இப் புத்தகத்தை ரூ 60 க்குத் தர தயாராக இருக்கிறேன்
.
நான் கவிதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக அசோகமித்திரன் தெரிவித்தார். உண்மையில் கவிதையை விட சிறு
கதை எழுதுவதுதான் ரொம்பவும் சிரமம். பொறுமை வேண்டும். நான் அதற்கான முயற்சியை எப்போதும் செய்துகொண்டுதான் இருப்பேன். ஆனால் நான் கவிதையை நினைத்தால் எழுதிவிடுவேன். இப்படி எழுதுகிற கவிதைகளில் பல கவிதைகள் எடுபடாமல் கூடப் போய்விடும். யார் கவிதையை நான் படித்தாலும் சரி, என் கவிதையை நான் எழுதினாலும் சரி எது சிறந்த கவிதை என்பதில் எனக்கு குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கும்.
சரி இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பதிப்பு வரும் என்று ஆர்வமாய் ஒருவர் கேட்கிறார். உடனே வரவேண்டும் என்பது என் ஆசைதான். ஆனால் தெரியாமல் 100 பிரதிகள் அடிப்பதற்குப் பதில் 360 பிரதிகள் அடித்து விட்டேன். வெள்ளம் புண்ணியத்தால் கொஞ்சம் புத்தகங்கள் பிரியா விடை பெற்றுக்கொண்டு என்னை விட்டுப் போனாலும், மீதி உள்ள எல்லாப் புத்தகங்களையும் விற்க குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது ஆகும். அதனால் இப்போதே என் கம்ப்யூட்டரில் நான் செய்த சிறு சிறு தவறுகளை சரி செய்து விடுகிறேன். ஏன் எனில் எனக்கு அப்போது கொண்டு வரும்போது திரும்பவும் சின்ன தப்புகள் மறந்து போனாலும்போய்விடும்.

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்


அழகியசிங்கர்


கவிதை 3

வெள்ளம் வடிந்த அடுத்தநாள்
காலை
பால் எங்கே கிடைக்கிறது
என்று அலைந்து கொண்டிருந்தேன்
எங்கள் தெரு வீரமணி
மாடுகளை வைத்து வியாபாரம்
செய்வான்
அவனிடம் உள்ள மாடுகளை
அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு
ஓட்டிச் சென்று விட்டான்
மழைத் தூறலில்
அவனும் மாடும் நனைந்தபடி
பால் கறந்து கொண்டிருந்தான்
அவனைப் பார்த்து சிரித்தேன்
üதருகிறேன் அரை லிட்டர்
யார் கண்ணிலும் படாதீர்கள்..ý
என்றான்.

கவிதை 4

சொல்கிறேன் கேளுங்கள்
இனிமேல் மழை என்றால்
வெள்ளம் வருமென்று ஞாபகம்
வந்து
பதட்டமடைய நேர்கிறது
என்ன செய்வது?

கவிதை 5

தெருவில் வெள்ளம்  புகுந்த
காலத்தில்
மொட்டை மாடியில் போய்
தஞ்சம் அடைந்தோம்
சுற்று முற்றும் பார்த்தோம்
வானத்தைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டோம்
பின்
எதிர் வீடு பக்கத்து வீடென்று
எல்லோர் வீட்டு
மொட்டை மாடிகளையும்
பார்த்தோம்
இவ்வளவு பெண்களா
எங்கள்     தெருவில்…..