எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது……

சார்வாகன்
திங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர்.
அவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர்  தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச் செய்தார். அதில் சார்வாகன் எழுதிய ஒரு கதை ஒரு சிற்றூரில் நடக்கும் கொடியேற்றத்தைப் பற்றியது. நகைச்சுவையில் அது வகைப்படுத்த இயலாத ஒரு தனித்துவமான படைப்பு. ‘உத்தரீயம்’ என்ற அவருடைய இன்னொரு கதையும் வகைப்படுத்த முடியாத ஒரு விசேஷப் படைப்பு. ‘தாமரை’ மாத இதழிலும் ‘கணையாழி’ இதழிலும் அவர் சில கதைகள் எழுதினார். 
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ‘க்ரியா’ அவருடைய  ஒரு சிறுகதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனை ஆசிரியர் என்று தலப்பில் போட்டு இரு வெவ்வேறு அளவுகளில் ‘ஞானரதம்’ என்ற பத்திரிகையில் வெளிவந்த அவருடைய சிறுகதை ‘கனவுக்கதை’ கதையை காலம் சென்ற எழுத்தாளர் ஐராவதம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனை’ மாதக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமரர் சுந்தர ராமசாமியிடம் விடப்பட்டிருந்தது. அவர் சார்வாகனின் ‘கனவுக் கதை’யையே தேர்ந்தெடுத்தார்.
‘மணிக்கொடி’ காலத்திலிருந்தே ‘சாலிவாகனன்’ என்ற புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவருடைய கதை, கட்டுரை, கவிதைகள் தவிர அவர் நல்லதொரு பத்திரிகை ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானார். அச்செய்தியை ஒரு நண்பர் சொன்ன முறையில் வல்லிக்கண்ணன் அதைச் சார்வாகன் என்று நினைத்து ஓர் இரங்கல் கட்டுரை எழுதி, அது பிரசுரமும் ஆகிவிட்டது. தன்னைப் பற்றிய இரங்கல் கட்டுரையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த எழுத்தாளர்கள் இருவர். ஒருவர், சார்வாகன். இன்னொருவர் ஹெமிங்வே.
இரு ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணைப் பதிப்பகம் யுகன் சார்வாகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் சேர்த்து ஒரு சிறப்பு வெளியீடு வெளிக்கொணர்ந்தார். அது 2013 சென்னை புத்தகச் சந்தையின் போது வெளியிடப்பட்டது.
சார்வாகன் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய இறுதி நாட்களில் மருத்துவமனை கொண்டு சென்றேயாக வேண்டும் என்றிருந்த போது கூட அவர் சம்மதம் தரவில்லை. சென்னையில் அவர் வீட்டிலேயேதான் அவர் உயிர் பிரிந்தது.
சார்வாகன் அவருடைய புனைப்பெயருக்கேற்ப வாழ்ந்தவர். இடதுசாரிச் சிந்தனை உடையவர். பெரும்பாலும் கதருடை அணிந்தவர். அவருடைய ‘உத்தரீயம்,’ ’கனவுக்கதை’ போன்றவை தமிழ் உரைநடைப் படைப்புகளில் முற்றிலும் ஒரு புதிய பாணியை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவை.
.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *