வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர்

கவிதை 2




ராமன் வீடு தனியாக இருக்கும்
கீழே மேலே என்று
பள்ளத்தில் இருக்கும்
எப்பவோ கட்டிய வீடு
சாதாரண மழைக்கே வந்து விடும்
உள்ளே மழை நீர்
இது பெரும் மழை
தெருவில் உள்ள சாக்கடை
நீரெல்லாம் உள்ளே வந்து
ராமன் அதிர்ச்சி அடைந்து
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும்
வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்
மறு நாள் மாடியில் இருந்து
தெருவைப் பார்த்தார் கவலையுடன்
அவர் முகமே சரியில்லை
அடுத்தநாளுக்கு அடுத்தநாள்
தெருவில் நடந்தபோது
என்ன ஆயிற்று என்று கேட்டேன்
சீலிங் பேன் வரை சாக்கடை நீர்
நாற்றம்
வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது
இன்னும் என்னன்ன துயரமெல்லாம்
சுமக்கப் போகிறேனோ என்று
உடைந்த குரலில் கூறி
மேலும் பேசப்பிடிக்காமல்
நகர்ந்து விட்டார்

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

          அழகியசிங்கர்

        கவிதை 1

        கண் முன்னே நடந்தது
        நீரின் ஓட்டம்
        வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்
        கீழ்த் தரை வளாகத்தில்   
        வைத்திருந்த புத்தகங்களின்
        பெருமையை யார் அறிவார்
        வந்த நீர் லபக்கென்று
        வாயில் இட்டுக்கொண்டது.
        திரும்பவும் நீர் அரக்கன்
        முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்
        எங்களை மிரட்டப் போகிறதோ
        என்று பயந்தவண்ணம் இருந்தோம்
        ஒவ்வொரு படிக்கட்டையும்
        தொட்டு தொட்டு
        வந்து கொண்டிருந்த கரும் நிற
        நீர் அரக்கனை
        ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்
        அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை
        ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட
        நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்
        பயபபடாதே
        என்று ஆறுதல் படுத்தபடியே
        கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து
        பின்னோக்கிப் போய்விட்டான்
        ஆனால்
        எங்கள் மனதில் புகுந்த அச்சம்
        அவ்வளவு சுலபத்தில்
        எங்களை விட்டு அகலவில்லை
                                                                                                      09.12.2015
                                                                                                       புதன்
                                                                                                       8.20 காலை
       
       

தனித்துவங்கள்


ராமலக்ஷ்மி
 
 
காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள் 
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.

ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு 
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.

கண்களுக்குப் புலப்படாத வளியில்
சுழன்று சுழன்று பயணித்து 
குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல்
வீழ்ந்த இலையின்
காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை
கண்டு பாராட்ட எவருமில்லை.
விருட்சத்தோடு 
அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை
கவனிக்க நேரமுமில்லை.

நேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும்
அதற்குமான வித்தியாசத்தை
உலகம் உணர வாய்ப்புகளற்று
இலைகளோடு இலையாக
வாடிச் சருகான அதன் மேல்
ஊர்ந்து கொண்டிருந்தது
மண் புழு.

தண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா……….

அழகியசிங்கர்
சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம் பெயர் நேர்பக்கம்.  இப்புத்தகம் ஒரு கட்டரைத் தொகுதி.  பல எழுத்தாளர்களைப் பற்றி படைப்புகளைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுதி இது.  
ஒரு காலத்தில் 1000 பிரதிகள் அச்சடித்த நிலை மாறி 300 பிரதிகள் அச்சடிக்கும் காலமாக இன்று மாறி விட்டது.  நான் 376 பிரதிகள் மட்டும் அச்சடித்துள்ளேன்.  என் பிறந்த தினமான டிசம்பர் ஒன்றில் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்து விட்டேன்.
ஒரு ஆட்டோவில் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  என் புத்தகம் மட்டுமல்லாமல், பெருந்தேவியின் தீயுறைத் தூக்கம், நீல பத்மநாபனின் 148 கவிதைகள் தொகுதி, அய்யப்பப் பணிக்கரின் கோத்ர யானம் என்ற புத்தகமும் கொண்டு வந்துள்ளேன்.  என் புத்தகம் தவிர மற்றப் புத்தகங்கள் 100தான் அச்சடித்துள்ளேன்.  கவிதைப் புத்தகம் என்பதால்.  இந்த நான்கு புத்தகங்கள் அடிக்க 25000 ரூபாய் செலவு ஆகிவிட்டது.
என் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் என் புத்தகங்களை வைத்திருந்தேன்.  வேற வழியில்லை.  டிசம்பர் 1ல் நான் என் புத்தகத்தின் சில பிரதிகளை சில நண்பர்களுக்குக் கொடுக்க நினைத்தேன்.  முடியவில்லை.  மழை.  கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாகியது.  2ம் தேதி காலையில் தெருவில் மழை நீர்.  எனக்கு ஆச்சரியம்.  மழையா நம்ம தெருவிலா என்று.  
டிஜிட்டல் காமராவை எடுத்துக்கொண்டு தெருவைப் படம் பிடித்தேன்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை நீர் அதிகமாகியது.  இந்தத் தெருவில் என் வீட்டில் எப்படி மழை வரும் என்ற கர்வம் வேறு. தெருவில் உள்ள எல்லோருக்கும் என் வீட்டில் வண்டிகளை வைக்க அனுமதி கேட்டார்கள்.  சரி என்றேன்.  வீட்டின் உள்ளே ஒரே வண்டிகள்.  
மழையே நீ எங்கே என் வீட்டிற்கு வரப்போகிறாய் என்று மழை நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  தெருவில் நுழைந்த வெள்ளம் மெதுவாக எங்கள் வீட்டு வாசலில் வந்தது.  எனக்கு சந்தேகம்.  புத்தகம் என்ன ஆகப் போகிறதோ என்று.  உள்ளே திறந்து தரையில் வைத்திருந்த நேர் பக்கம் புத்தகப் பன்டில்களை மெதுவாக எடுத்து அங்கே போட்டிருந்த பெஞ்சில் வைத்தேன்.  பின் சமையல் அறை மேடையில் வைத்தேன்.  அப்படியும் பல புத்தகங்கள் கீழேதான் இருந்தன.  அதன் பின் போன ஆண்டு அதன் முந்தைய ஆண்டு பதிப்பு செய்த புத்தகப் பன்டல்களையும் எடுத்து வைத்தேன்.
ஆனால் பல புத்தகங்களை கீழே வைத்துவிட்டு வந்தேன்.  பின்னாலேயே மழை நீரும் வந்து விட்டது.  உள்ளே சூழந்து கொண்டது.  கொஞ்சம் நேரம் கழித்து நம்ப முடியாமல் மாடியில் இருந்து வேடிக்கைப் பார்த்தேன்.  வெள்ளம் உள்ள புகுந்தது.  மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.  கரண்ட் போய் விட்டது.  வீட்டில் உள்ளே வைத்திருந்த எல்லா டூ வீலர்களும் நாசம்.  மூன்று கார்கள் நாசம்.  என் காரை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்ததால் தப்பித்தது.
வெள்ளம் முழுவதும் போனபிறகு அறைக் கதவைத் திறந்தேன்.  புத்தகங்களையெல்லாம் சிதறி அடித்திருந்தது.  பண்டுல் பண்டுலாக தூக்கிப் பந்துபோல் விசிறி எறிந்திருந்தது வெள்ளம். என் முன்னால் புத்தகமெல்லாம் கண்ணீர் விட்டு அழுதன.நேர் பக்கம் புத்தகம் பல இடங்களில் சிதறி தண்ணீரில் நனைந்து கேவலமாக இருந்தது. ரோஜா நிறச் சட்டை என்ற என் கதைப் புத்தகம் ரோஜா நிறத்தை இழந்திருந்தது.
தவறுதலாக நேர் பக்கம் என்ற புத்தகம் பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டுமா?  வேண்டுமென்றால் புத்தகம் பெயரை  தண்ணீர் பக்கம் அல்லது கண்ணீர் பக்கம் என்று வைத்திருக்கலாமா?
142 பக்கத்தில் 22 எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்தான் நேர் பக்கம்.  இதை ஒரு விமர்சகரிடம் விமர்சனத்திற்குக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர் எப்படி எழுதுவார் என்று பின்வருமாறு கற்பனை செய்து பார்க்கலாம் :
‘அதிகம் பக்கம் போகாமல் சின்ன சின்ன கட்டுரைகளாக 22 எழுத்தாளர்கள் அல்லது புத்தகங்கள் பற்றி எழுதி உள்ளீர்கள்.  யாரையும் நீங்கள் பாராட்டவும் இல்லை.  அதே சமயத்தில் வசைப்பாடவும் செய்யவில்லை.  மனதை பிழிய பிழிய எழுதி உள்ளீர்கள். இப்படி மனதைப் பிழியும்படி எழுதுவது பெரிய விஷயம்.’
இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது எனக்கு பயங்கர சந்தேகம்.  இந்த விமர்சனம் செய்தவருக்கு நான் பிழிந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்ற சந்தேகம்தான் அது. ஏன்எனில் வெள்ளப் பெருக்கால் வீட்டில் அடுக்கடுக்காக வைத்திருந்த நேர் பக்கம் புத்தகம் தண்ணீரில் நனைந்து பின் நான் புத்தகத்தை பிழிந்து காயப்போட்ட விஷயம் எப்படி அவருக்குத் தெரிந்தது.  விமர்சனத்தில் அவர் ஏன் பிழிய பிழிய எழுதியிருப்பதாக சொல்கிறார் என்று தோன்றியது.
புத்தகம் நனைந்தாலும் மேலே நான் இருக்கும் இடத்திற்கு புத்தகத்தைக் காய வைக்க எடுத்துச் செல்ல முடியவில்லை.அப்படியும் நான் புத்தகங்களை நான் இருக்கு முதல் அடுக்கத்திற்கு எடுத்து வந்து விட்டேன்.  இதனால் என் வீட்டில் உள்ளவர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை தற்போது.   ‘மழைக்குடை நாட்கள்’ என்ற ‘கோ கண்ணன்’ எழுதிய கவிதைப் புத்தகம்.  அது இன்னும் அழுகையை நிறுத்தாமல் ஈரம் சொட்ட சொட்ட இருக்கிறது.  இந்தப் புத்தகத்தையும் தெரியாமல் மேலே கொண்டு வந்து விட்டேன். இப் புத்தகத்தைப்  பார்த்து வீட்டில் உள்ளவர், üஇந்தப் புத்தகத்தை எப்போது கொண்டு வந்தீர்கள்?ý என்று பெரிய ரகளை.  இந்த வெள்ளத்தால் நான் தெரியாமல் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் தெரிந்து போய் விட்டது.  
இந்த வெள்ளத்தால் புத்தகம் மட்டுமல்ல நானும் சேர்ந்து அவதிப்படுகிறேன்.  புத்தகம் போனதற்காக நிவாரண நிதி வேண்டாம்.  லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், நான் திரும்பவும் அச்சடித்து  என் செலவை ஈடு கட்டி விடுவேன்.  கிடைக்குமா? முதலமைச்சர் கவனத்திற்கு நான் எழுதியது போகுமா?

இனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்….



அழகியசிங்கர்


டிசம்பர் முதல் தேதி என் பிறந்தநாள்.  இரண்டாம் தேதி நான் எதிர்பாராத நிலை ஏற்பட்டது.  மழை ஏற்பட்டதால் நான் வெளியே போகவில்லை.  இந்த நிலை அப்படியே நீடித்திக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் போன மழையில் தண்ணீர் வரவில்லை. நான்  ஹாய்யாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.  முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்து எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.   அதை டிவியில் காட்டியபோது நம்ப முடியாமல் இருந்தது.  நம் சென்னையில் ஒரு பகுதியிலா இப்படி என்று பட்டது. 
நம்ம இடம் பரவாயில்லை என்று நினைத்தது எவ்வளவு தப்பு. எனக்குத் தோன்றியது கரண்ட் கட் ஆகிவிட்டால் என்ன  செய்வது.  உடனே மோட்டார் போட்டு மேலே தொட்டியை நிரப்பினேன்.  அப்போது மழைப் பெய்து கொண்டிருந்தது.  ஒரு அரை மணி நேரம் போட்டிருப்பேன்.  பின் அணைத்து விட்டேன்.  ஆனால் 9 மணிக்கு கரண்ட் நின்றுவிட்டது.  
மழை வலுத்துக் கொண்டிருந்தது.  சிறிது நேரம் கழித்து தெருவைப் பார்த்தபோது தெருவெல்லாம் தண்ணீர்.  நான் திகைத்துவிட்டேன்.  நம்ம தெருவிற்கே தண்ணீர் வராதே?  எப்படி?
இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன்.  மழை வலுத்துக் கொண்டிருந்தது.  முன்பே விட தண்ணீர் அதிகமாக இருந்தது.  என்னால் நம்ப முடியவில்லை.  முன்பு நாங்கள் இருந்த போஸ்டல் காலனி தெருவில்தான் சாதாரண மழைக்கே தண்ணீர் வந்துவிடும்.  ஆனால் ராகவன் காலனி என்கிற இந்தத் தெருவில் அப்படி இல்லை.  ஏன் இப்படி?
இந்தத் தெருவில் எங்கள் வீடுதான் புதிதாக கட்டியிருக்கும் இடம்.  சற்று மேடாக இருக்கும்.  கீழ் தளத்தில் கார்கள் டூ வீலர்கள் வைத்துக் கொள்ள முடியும்.  
தெருவில் வண்டிகள் வைத்துக் கொண்டவர்கள் எங்கள் வீட்டில் பைக் கார் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள்.  சரி என்றேன்.
தெருவில் வைத்திருந்த பெரும்பாலான வண்டிகள் எங்கள் வீட்டில் நுழைந்து விட்டன.
எனக்கே பெருமை நம்ம வீடு இந்தத் தெருவிலுள்ள வண்டிகளைத் தாங்குகின்றன என்று.   கீழே உள்ள ஒரு இடத்தில் என் புத்தகங்களை வைத்திருந்தேன். தரையில் வைத்திருந்தேன். என் பிறந்த தினத்தை ஒட்டி நேர் பக்கம் என் கட்டுரைத் தொகுதியை அடுக்கடுக்காக வைத்திருந்தேன். டிசம்பர் ஒன்றாம் தேதி சிலரைப் பார்த்து என் புத்தகப் பிரதியைக் கொடுக்க நினைத்தேன். எனக்கு சிறிது சந்தேகம்.  புத்தகங்களை மேடையில் ஏற்றி வைத்து விடலாம் என்று.  தரையில் தண்ணீர் வந்தால் என்ன செய்வது.  உண்மையில் நான் வராது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன்.  ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்கத் தொடங்கினேன்.  என் வீட்டில் குடியுள்ள மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
சிறிது நேரம் கழித்து நான் திரும்பவும் பார்த்தபோது தண்ணீர் உள்ளேயே நுழையவே ஆரம்பித்து விட்டது.  என்னால் நம்ப முடியவில்லை.  என் வீட்டு பின் பகுதியில் அடுத்தத் தெருவில் உள்ள வீடு மூழ்கி விட்டது.  பின் பகுதி வீட்டுக் கிணறு ரொம்பி வழிந்தது. அதன்பின்தான் இந்தத் தண்ணீரின் விபரீதம் புரிந்தது.  அவசரம் அவசரமாக கீழே உள்ள வீட்டில் தரையில் பரப்பியிருந்த புத்தகங்களை எடுத்து சமையல் அறை மேடைமீது அவசரம் அவசரமாக திணித்தேன். மெதுவாக தண்ணீர் வீட்டின் உள்ளே நுழைந்து என் காலை தொட்டு விட்டது.  என் முயற்சயில் சோர்வே ஏற்பட்டது.  சில புத்தகங்களை பெஞ்சில் வைத்தேன்.  பின் அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிúன்.  
விலை மதிக்க முடியாத எத்தனையோ புத்தகங்கள் தரையில் இருந்தன.  அவையெல்லாம் ஜல சமாதி ஆக வேண்டியதுதானா என்று தோன்றியது.  
கொஞ்ச நேரத்தில் புத்தகம் எல்லாம் தண்ணீரில் சூழ்ந்து விட்டன.  உள்ளே பார்க் பண்ணியிருந்த டூ வீலர்கள், கார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டன.   முதல் மாடியில் நாங்கள் குடியிருந்தோம்.  கிட்டத்தட்ட 20 படிகள் தாண்டி வர வேண்டும்.  6 படிகளைத் தாண்டி வந்துவிட்டன தண்ணீர்.  மேலும் தெருவில் காலடி வைத்தால் என் கழுத்துக்கு மேல் தண்ணீர்.  ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களும் மொட்டை மாடிக்கு வந்து விட்டார்கள்.  மொட்டை மாடியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது.  எங்கள் தெருவில் அவ்வளவு  பேர்கள் உள்ளனரா என்று.
என் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது.  என் மனைவி எனக்கு மேல் பயந்தவளாக இருந்தாள்.  காலையில் தண்ணீர் வரும்போது என் டிஜிட்டல் காமரா மூலம் படம் பிடித்துச் சென்றேன். சிலரை தந்தி டிவி மாதிரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.  நான் பார்த்துக் கொண்டிக்கும்போதே கோவிந்தன் ரோடில் வெள்ளம் போல் தண்ணீர் அடித்துக் கொண்டே சென்றது.  எல்லாம் வேகம்வேகமாக அடித்துச் சென்று கொண்டிருந்தது.  
எதிரில் குமரன் ஸ்டோரில் பணிபுரிந்தவர்கள் வீடு.  தண்ணீர் அந்த வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் பண்ணியது.  எல்லாவற்றையும புரட்டிப் போட்டது.  அந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் மாடிக்கு ஓட்டமாய் ஓடிவிட்டார்கள்.
ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன்.  ஒரே இருட்டு.  தண்ணீர்.  93வயதாகிற அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பாட்டுக்கு இருந்தார்.  நான் எப்போதோ வாங்கிய பிலிப்ஸ் ரேடியோவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  யூபிஎஸ் ஜாக்கிரதையாகப் பயன் படுத்திக் கொண்டோம்.  யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  மடிப்பாக்கம் ராம்நகர் 8வது மெயின் சாலையில் இருக்கும் என் பெண் தன் குடும்பத்துடன் முதல் மாடிக்கு ஏறிச் சென்றுவிட்டாள்.  எனக்கு அவள் குடும்பத்தைப் பற்றி கவலை.
முதல் மாடியில் 6வது படியை துவம்சம் பண்ணும் தண்ணீரை நினைத்து எனக்குக் கவலை.  ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாசலில் வந்திருந்து இன்னும் தண்ணீர் எத்தனைப் படிக்கட்டுகள் ஏற வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் அடுத்தநாள் என்று தண்ணீர் வடிந்து விட்டது.  இயல்பு நிலை வர சில நாட்கள் ஆயிற்று.
 

பிறந்தநாள் போது ஒரு குழப்பம்

    

அழகியசிங்கர்

        இன்றுதான் என் பிறந்தநாள்.  67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை.  93 வயதாகிற  அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை.  பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை. 


    பல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை.  பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும்.  யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன்.  அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.  

    இன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது.  ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர அதுவும் மற்ற நாட்களைப் போல் ஒரு நாள்தான்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிறந்த தினத்தை ஒட்டி என் புத்தகங்கள் கொண்டு வர வேண்டுமென்று நினைப்பதுண்டு.  2013 ஆம் ஆண்டு என் பிறந்த தினத்தை ஒட்டி என்னுடைய 4 புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  3 சிறுகதைத் தொகுதியும் 1 கவிதைத் தொகுதியும்.  

    அதேபோல் இந்த வருட பிறந்த தினம் போது என் மொத்த சிறுகதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர நினைத்தேன்.  முடியவில்லை.  ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நான் 4 அட்டைப் படங்களை ஒன்றாக அடித்து வைத்திருந்தேன்.  அதில் மூன்று அட்டைப் படங்களை அப்போதே புத்தகஙகளாகக் கொண்டு வந்துவிட்டேன்.  நாலாவதாக ஒரு அட்டைப் படத்தில் என் கட்டுரைப் புத்தகம் கொண்டு வர நேர் பக்கம் என்ற பெயரில் அட்டைப் படம் தயாரித்து வைத்திருந்தேன்.  ஒவ்வொரு வருடமும் என் கடட்டுரைப் புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும்போது ஒரு அலட்சியம் இருந்து கொண்டே இருக்கும்.  என் நண்பரும் கவிஞரும் வைதீஸ்வரன் வரைந்த ஓவியத்தைக் கொண்டு அந்த அட்டைப் படத்தைத் தயாரித்திருந்தேன்.  அற்புதமான ஓவியம் அது.  100 பக்கங்களுக்கு மேலாக அந்தப் புத்தகம் கொண்டு வரலாமென்று நினைத்திருந்தேன்.  

    கடந்த 27 ஆண்டுகளாக பத்திரிகைக் கொண்டு வருவதும் புத்தகம் போடுவதும் என் வழக்கம்.  புத்தகம் விற்பது என்பதெல்லாம யோசித்துக் கொண்டிருக்கும்போது என் நிலை ரொம்பவும் மாறி விட்டது.  முதலில் 1000 பிரதிகள் அச்சடித்தப் புத்தகமெல்லாம் பின்னால் 600 பிரதிகளாக மாறி விட்டன.  அதன் பின் 500 பிரதிகள் அடிக்கத் தொடங்கினேன். இப்படி நான் அடித்த 600 பிரதிகள் 500 பிரதிகள் புத்தகங்களே இன்னும் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன.  லாவண்யா என்ற கவிஞர் எழுதிய ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’ என்ற கவிதைத் தொகுதி என்னை விட்டு அகலுவதில்லை.  நான் யோசிப்பேன்: அந்தக் கவிதைத் தொகுதிக்கு நத்தை என்று பெயர் வைத்ததால் நத்தை நகராமல் என்னிடமே இருக்கிறதா என்று.

    முன்பு லைப்ரரி ஆர்டர் கிடைக்கும்.  புத்தகமும் நம்மை விட்டு நகரும்.  இப்போதெல்லாம் அதெல்லாம் கிடையாது.  மேலும் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி புத்தக விமர்சனம் வந்தால் புத்தகம் விற்கும் என்று சொல்வார்கள்.  அதெல்லாம் கூட பொய்.  முதலில் பத்திரிகையில் விமர்சனமே வராது.  ஏன் என்றால் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஏராளமான புத்தகங்கள் வந்து குவிகின்றன.  யார் புத்தகத்தை விமர்சனம் செய்வது என்ற குழப்பம் அவர்களுக்கு வந்து விடும்.  மேலும் அப்படி விமர்சனம் வந்தப் புத்தகம் பிரமாதமாக விற்று விடாது.  புத்தகக் கடைகளில் விற்கக் கொடுக்கலாம் என்றால் அவர்கள் ஏகப்பட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு விழி பிதுங்குகிறார்கள்.  நம் புத்தகங்களைக் கொடுத்தால் எத்தனைப் பிரதிகள் விற்கின்றன என்பதைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை.  சரி புத்தகம் விற்றப் பணத்தையாவது கேட்கலாம் என்றால்…நம்மைப் பார்த்தால் சிரிக்கிறார்கள்.  புன்னகை புரிகிறார்கள்.  புததகம் விற்பதைப் பற்றி கேட்டால் அவர்கள் முகம் மாறி விடுகிறது. அப்படியென்றால் என்னதான் செய்வது?  அதுதான் புரியவில்லை.  அதனால் இப்போது ஒன்றே ஒன்றுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.  

    கவிதைப் புத்தகம் என்றால் 50 பிரதிகள், கதை, கட்டுரை, நாவல் என்றால் 100 பிரதிகள் அடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பக்கங்கள் அதிகமாகப் போகாமல் புத்தகம் தயாரிப்பது.  இதனால் தயாரிப்புச் செலவு குறைவதோடு அல்லாமல், படிப்பவர்களும் எளிதாகப் படித்து முடித்து விடலாம். அதனால் பெரும்பாலான என் புத்தகங்கள் எல்லாம் 200 பக்கங்களுக்குள் இருக்கும்.  விலையும் அதிகமாக இருக்காது.  பெரும்பாலும் இந்தப் புத்தகங்களைக் கூட விற்பதற்கு யாரிடமும் கொடுக்காமல் விற்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் 50 புத்தகம் 100 புத்தகம் தயாரிக்கும் போது என் செலவு 50% ஆகி விடும்.  அதாவது 100 பக்கம் தயாரிக்கும் ஒரு புத்தகம் விலையை நான் ரூ100 வைத்தால் எனக்கு ரூ50 செலவாகும் ஒரு புத்தகம் தயாரிக்க. 

    நேர் பக்கம் என்ற பெயரில் நான் அட்டைப் படத்தை 600 அடித்திருந்தேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு.  அதனால் அப்புத்தகம் மட்டும் 370 பிரதிகள் இப்போது அடித்து விட்டேன்.  பல சந்தர்ப்பங்களில் நான் வாசித்த எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது.  அப் புத்தகம் முழுவதும் பல படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருக்கிறேன்.  அவர்களுடைய படைப்புகளைப் பற்றி.  இன்னும் கூட நான் அதிகமாக எழுதியிருக்கிறேன்.  மிகக் குறைவாகத்தான் நான் தேர்ந்தெடுத்துப் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  அப்புத்தகம் 142 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

    எந்தந்தப் படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.

    1.சி சு செல்லப்பா 2. க.நா.சு 3. நகுலன் 4. பிச்சமூர்த்தி 5.அசோகமித்திரன் 6. தி ஜானகிராமன் 7. நீல பத்மநாபன் 8. வைதீஸ்வரன் 9. பிரமிள் 10. வெங்கட் சாமிநாதன் 11. கோபிகிருஷ்ணன் 12. ஸ்டெல்லாபுரூஸ் 13. ஐராவதம் 14. டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் 15. ஜெயகாந்தன் 16. பாரதியார்  

    370 பிரதிகள் என் புத்தகத்தை அடித்துவிட்டதால், ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் போகிறது.  என் பிறந்த நாள் போது இதுமாதிரியான கலக்கமா எனக்கு?
   

2 கவிதைகள்

                                                           நீல பத்மநாபன்



                        1   நடப்பியல்

  அன்றாட வாழ்வில்
  மூச்சுத்   திணறவைக்கும்
 ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்
  நித்தம் நித்தம் நிரந்தரமாய்
  குரல்வளையை                        
  நெறித்துக்கொண்டிருக்கையில்
   உலக மகா தத்துவங்கள்
   வரலாற்று ஆவணங்களை
    பார்த்துப்    பரவசப்படச்சொன்னால்……..?!

                            2         வலியும் கிலியும்

                                      வலியை சகித்துக்கொள்ள
                                      நெடுநாள் பயின்று பயின்று
                                      ஒரளவுக்கு பழகமுடிந்தும்
                                       வலிகள் வரப்போகிறதென்ற
                                      ஆரம்ப சைகைகள்
                                      கிடைக்கத் தொடங்கையிலேயே
                                      நெஞ்சில் வந்து உடும்பாய்
                                      கவ்வுக்கொண்டுவிடும்
                                      வரப்போகும் வலியை
                                      நினைந்துள்ள கிலி…….!
                                     அதை அப்புறப்படுத்த
                                      எடுத்துக்கொண்ட
                                      அப்பியாசங்களெல்லாம்
                                     தோல்விக்குமேல் படுதோல்வி
                                     என் செய்வேன்..,.என் செய்வேன்…,
                                      பராபரமே…………..

ஜான்னவி

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு கவிதையைப் படிக்க அளிக்கிறேன். நவீன விருட்சம்
இதழைப் பொறுத்தவரை எதாவது ஒரு கவிதை, கதை, கட்டுரை சிறப்பாக அமைந்து விடுகிறது. யாருக்காவது நவீன விருட்சம் இதழ் வேண்டுமா? முகவரியை அனுப்புங்கள்.

காலக் கணக்கு
ஒரு சொற்ப காலம்
நாம் குழந்தைகளாய் இருந்தோம்
ஒரு சொற்ப காலம்
நாம் இளமையோடிருந்தோம்
ஒரு சொற்ப காலம்
நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.
ஒரு சொற்ப காலம்
நாம் நேசித்த செல்லப் பிராணிகள்
நம்முடனிருந்து பின்
காணாமற் போயின
அல்லது
மடிந்து போயின.
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது
மடிந்து போயின
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த
மனிதர்கள் மாறிப் போவதற்கு.
சொற்ப காலமே ஆனது
நானறிந்த
அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த
மனிதர்கள் மாறிப் போவதற்கு.
ஒரு சொற்ப காலத்தில்
நீ உன் வாழ்க்கையில்
கற்ற சகலத்தையும்
நிகழ்ந்த அனைத்தையும்
அறிந்திருந்த அனைவரையும்
மறந்து போனாய்
ஒரு சொற்ப காலத்தில்
அன்பானவர்கள்
மறைந்து விட்டார்கள்,
அந்நியர்கள் வசிக்கிறார்கள்
சுற்றிலும்.
இன்னுமொரு சொற்ப காலத்தில்
என்னென்ன மாறும்?
எதுவுமே நிகழ
ஒரு சொற்ப காலமே
போதுமானதாக இருக்கிறது.
.

கோபிகிருஷ்ணனைப் பற்றி சில குறிப்புகள..

அழகியசிங்கர்


வாசக சாலை என்ற அமைப்பு கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  நேற்று விடாமல் மழை பெய்தாலும் அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை.  திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில்  கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி கூட்டம் நடத்தி வருகிறார்கள்.  நேற்று (22.11.2015- sunday) கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கூட்டம நிகழ்த்தினார்கள். கமலி பன்னீர் செல்வம், தமிழ் செல்வன், அபிலாஷ், நான் நால்வரும் பேசினோம்.
திருவான்மியூரை அடைந்த போது மழை பிய்த்து உதறியது.  வாசக சாலை நண்பர்கள் போன் செய்து மழையால் கூட்டம் இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.  அதுமாதிரி எதுவும் நடக்க வில்லை.  மழையில் கொஞ்சம் நனைந்தபடி பனுவல் சென்றேன்.  எனக்கு ஆச்சரியம் எப்போதும் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்த மழையிலும் வந்திருந்தார்கள்.  
மழையில் நனைந்தபடி கோபிகிருஷ்ணனைப் பற்றி பேசியது புது அனுபவமாக இருந்தது.  கோபி 2003ல் இறந்து விட்டார்.  கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இதுமாதிரியான கூட்டம் நடைபெறுகிறது.  12 ஆண்டுகள் முன் கோபிகிருஷ்ணனுடன் பேசியதெல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தேன்.
1022 பக்கங்கள் கொண்ட கோபிகிருஷ்ணன் படைப்புகள் என்ற புத்தகத்தை சி மோகன் தொகுத்ததை நற்றிணை என்ற பதிப்பகம் துணிச்சலாகக் கொண்டு வந்துள்ளது.  இந்தப் புத்தகம் விலை ரூ.800.
கோபிகிருஷ்ணன் ஒரு வித்தியாசமான மனிதர்.  உளவியல் பிரச்சினை உடைய எழுத்தாளர்.  மனப்பிறழ்வை இலக்கியமாக மாற்றியவர்.  அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து யாராலும் வாசிக்க முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாசிக்க வேண்டும்.  அபபடித் தொடர்ந்து வாசித்தால் மனப்பிறழ்வு நிலைக்கு வாசிப்பவர் ஆளாக நேரிடும்.  தமிழில் இதுமாதிரியான எழுத்தை உருவாக்கியவர் கோபிகிருஷ்ணன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  
ஒருமுறை விருட்சம் கூட்டத்திற்கு கோபிகிருஷ்ணனைப் பேசக் கூப்பிட்டேன்.  ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு என்ன பேச வேண்டுமென்று தயார் செய்து கொண்டு கட்டுரையாக எழுதி வாசித்தார்.  வாசிக்கும்போது நடுக்கமான நடுக்கம் அவருக்கு.  
விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது கோபிகிருஷ்ணனைத்தான் இணை ஆசிரியராக சேர்த்திருந்தேன்.  முதல் இதழ் வந்தது.  இரண்டாவது இதழ் வெளிவருவதற்கு முன் கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கடிதம்.  தன்னை விருட்சம் இதழிலிருந்து விலக்கிக் கொள்ளும்படி.  1988ல் மாறுபட்ட எழுத்தாளர்களைப் பிணைப்பது பிரச்சினையாக இருந்தது.  கோபிகிருஷ்ணனால் அப்படி ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  
நேற்று பேசிய கூட்டத்தில் நான் இன்னும் சிலவற்றை தெளிவாகப் பேசியிருக்க வேண்டும்.  உதாரணமாக ஒவ்வொரு புத்தாண்டின் போது கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கார்டு வரும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து.  இதை சொல்ல மறந்து விட்டேன்.கார்டில் புத்தகாண்டு வாழ்த்துகள் என்றுதான் எழுதியிருப்பார். இந்தக் கார்டை அனுப்பும் அவர் மனநிலை எனக்குப் பிடிக்கும்.
கோபி தானாகவே தன்னை அழித்துக் கொண்டு விட்டார்.  தொடர்ச்சியாக விடாமல் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்.  எந்த வேலையிலும் நிலைத்து நிற்க மாட்டார்.  அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது.  வேண்டுமென்றே குளிர் பானங்கள் குடிப்பார். 
இப்போது இருந்தால் கோபிக்கு 70 வயது இருந்திருக்கும்.  ஒரு நாள் கோபி போன் செய்தார்.  ‘ஆஸ்பத்ரி விஷயமாக என் செலவுக்குப் பணம் வேண்டும்,’ என்று கேட்டார்.  அவர் அதிகமாகப் பணம் கேட்கப் போகிறார் என்று நினைத்தேன்.  ஆனால் அவர் கேட்டது வெறும் 200 ரூபாய்தான்.  ‘அலுவலகம வந்து வாங்கிக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டேன்.    ‘நீங்கள்தான் வர வேண்டும்.  என் உடல்நிலை சரியில்லை,ýý என்றார்.  üüநான் சனிக்கிழமை வந்து உங்களைப் பாரக்கிறேன்,’ என்றேன்.  
ஆனால் சனிக்கிழமை லதா ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து, கோபிகிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது.   என்னால் நம்ப முடியவில்லை.  அதே சமயத்தில் வருத்தமாக இருந்தது.
அவர் மரணம் அடைநத சமயத்தில் நான் கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  ‘நானும கோபிகிருஷ்ணனும்’ என்பதுதான் தலைப்பு.  நேர் பக்கம் என்ற என் கட்டுரைப் புததகத்தில் இக் கட்டுரை வர உள்ளது. 
திடமான மனநிலையில் நீங்கள் இருந்தால்தான் அவர் புத்தகத்தை வாசிக்க முடியும்.  நான் கொஞ்சம் கொஞ்சமாக அவர் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் புத்தகத்தைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.
கோபிகிருஷ்ணன் படைப்புகள் – பக்கம்: 1022 – விலை: ரூ800 – நற்றிணை பதிப்பகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5 – தொலை பேசி எண் : 9486177208, 9442956725
 

இராமானுஜர்



சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப்
பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள்
வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக்
கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.
நாமம் போடுவதென்றால் ஏமாற்றுவது என்று ஒரு சாரார்
அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது சைவ வைணவப் பூசல்களை ஒட்டி எழுந்த
தொடராக இருக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிற போராட்டக்காரர்களும்
நாமம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் புதியதல்ல.
மார்ச் 2015ல் மட்டும் இப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நான்
தொலைக்காட்சியில் பார்த்தேன். கோவையில் ஒரு தி.மு.க. பெண் உறுப்பினர்
நெற்றியில் நாமம் வரைந்துகொண்டு மன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்தார்.
20.1.15 அன்று ஜாதிச் சான்றிதழ் பற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பந்தலில்
நாமம் வரையப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் ‘நாமம் –
நாற்றிப் பதினொன்று – போட்டுவிட்டார்கள்’ என்றார். மேலும் மூன்று
விரல்களால் 111 என்று நெற்றியில் வரைந்து காட்டினார்.
இப்போது தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி வைணவப் பெரியார், தத்துவச்
சிந்தனையாளர் இராமானுஜரைப் பற்றிய தொலைக்காட்சித் தொடருக்குத் திரைக்கதை
எழுதுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கல்கியில் அவர் பேட்டியும்
வெளியாகியுள்ளது. இனிமேல் நாமம் போடுவதைக் கேலி செய்ய வேண்டாம் என்று
தி.மு.க. தலைவர் தனது கட்சிக்காரர்களுக்குத் தெரிவிப்பாரா?
சோழனின் சபையில் ஒரு வங்காளப் பெரியவர் வைணவம் சொல்லும் கருத்துகளை
இராமானுஜருக்கு முன்னேயே கோடிட்டுக் காட்டினார் என்பதைக் கலைஞர் அறிவாரா?