தப்பித்தல்

ராமலக்ஷ்மி

மஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு 
அழகு சேர்த்த
ஆழ்நீலக் கழுத்துப் பட்டையின் 
சங்கிலி
கட்டப்பட விட்டுப் போயிருந்ததை 
உணர்ந்தும்
கொட்டடியில் ஆறஅமரப் பசும்புல்லை
அசைபோட்டுக் கொண்டிருந்த
ஆட்டுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
எப்படியும் வெட்டப்படப் பிறந்த 
பிறப்பென்பதும்
தப்பித்தல் தரப் போவதில்லை
எதனிலிருந்தும் 
விடுதலையை என்றும்.
***

ஆம் ஆத்மியும் அண்ணா ஹஸாரேவும் நியாயமும்

WRITTEN BY :
பிரபு மயிலாடுதுறை


சில நாட்களுக்கு
முன், ஒரு நண்பரின் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.அவர் ஒரு கட்டிடப் பொறியாளர்.கட்டிட
வரைபடங்களை வரைந்து கொடுப்பவர்.ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டித் தருபவர்.மயிலாடுதுறைக்காரர்.பழகுவதற்கு
இனிமையானவர்.கடுமையான சொற்களை எவ்விஷயத்துக்கும் பயன்படுத்தாதவர்..சில நாட்கள்  சென்னையில் ஒப்பந்தக் கட்டுமானத் தொழில் புரிந்தார்.இப்போது
முழுமையாக மயிலாடுதுறைக்கு வந்து விட்டார்.அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.
எனக்கு பொதுவாக
ஒரு தயக்கம் உண்டு.ஒருவரை தொழில் நிமித்தமன்றி, நட்பார்ந்த ரீதியில் அவர்கள் பணி புரியும்
இடத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ சந்திப்பது எந்த அளவு சரி என தயங்குவேன்.குறிப்புகள்
கேட்டுப் பெற பணியாளர் காத்திருக்கக் கூடும்.வாடிக்கையாளர்களின் பணிகள் பற்றி-பணி முன்னேற்றம்
பற்றி அவர்களுக்குள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்கள் இருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல்
இருக்கும்.புதிய வாடிக்கையாளர் சந்திக்க வருவர்.அவர்கள் ஒரு இடத்தில் நிறைய பேர் இருப்பத்தைக்
கண்டு திகைப்பர்.எனவே நண்பர்கள் பணி புரியும் அல்லது தொழில் புரியும் இடத்திற்கு சென்று
சந்திப்பதை தவிர்ப்பேன்.ஆனால் எல்லா நாட்களும் ஒரே நாள் போல இருப்பதில்லை.அவர்கள் பணிச்சுமையின்றி
இருக்கக் கூடிய நாட்களும் சாத்தியமே.எனவே அங்கு சென்று சூழலை அவதானித்து அதற்கு தகுந்தாற்போல்
நடந்து கொள்வேன்.
எனது நண்பரின்
அருகில் அமர்ந்து அவரின் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தேன்.திரையின் வலது கோடியின்
மேல் பக்கத்தில் மேல் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.அவர் வரைந்த வரைபடத்தில்
கீழ் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.வடதிசையை வரைதாளில் மேல் நோக்கியவாறு
அமைத்தே வரைபடம் வரைய வேண்டும் அல்லவா  ஏன்
இப்படி உள்ளது என நண்பரிடம் வினவினேன்.நீங்கள் சொல்வது சரிதான்;கணிணி வடதிசையை மாற்றமில்லாமல்
காட்டும்.ஆனால்  சாலையை வைத்தே இடங்களை அடையாளப்படுத்திக்
கொள்கிறார்கள்.எனவே எளிமையான புரிதலுக்காக இவ்வாறு செய்வதுண்டு எனக் கூறினார்.
நண்பர் வரைந்த
வரைபடத்தில் சில சர்வே எண்களும் அதன் உட்பிரிவு எண்களும் இருந்தன.நெற்றியில் நீறணிந்த
வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்த ஒரு கிராமத்து மனிதர் என்னருகே அமர்ந்திருந்தார்.அவரிடம்
நண்பர் ஒரு ஏ-4 அளவில் அச்சான வரைபடத்தைக் கொடுத்தார்.நீங்கள் உத்தேசித்தவாறு இருக்கிறதா
என பார்த்துக் கொள்ளுங்கள்; திருத்தம் ஏதும் இருந்தால் கூறுங்கள் என்றார்.சில திருத்தங்கள்
கூறினார்.திருத்தப்பட்ட வரைபடம் வரைபடத்தாளில் ஏ-1 அளவில் அச்சேற்றப்பட்டு அம்மோனியா
பிரிண்ட் போடப்பட்டது.கிராம ஊராட்சி ஒன்றின் ஒப்புதல் ஒன்றுக்காக அனுப்பப்பட உள்ளது
என என்னிடம் கூறினார்.ஒப்பீட்டளவில்,ஊராட்சியின் ஒப்புதல் என்பது எளிமையானதுதானே என
கேட்டேன்.நண்பர் இந்த கேஸ் வித்தியாசமானது எனக் கூறினார்.கிராமத்து மனிதர்  முழு விபரத்தையும் சொன்னார். 
அவரது பெயர் இராமமூர்த்தி.அவர்
மயிலாடுதுறையில் வசிப்பவர்.அவரது சொந்த ஊர் பாளையமங்கலம். மயிலாடுதுறை பாளையமங்கலம்
இடையேயான தூரம் ஒன்பது கி.மீ.சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரது மனையை தமிழகத்தின் பெரிய
கட்சிகளில் ஒன்றின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் ஆக்கிரமித்தார்.ஆக்கிரமித்த முறை நூதனமானது.இராமமூர்த்தியின்
மனைக்கும் அரசியல்வாதியின் மனைக்கும் இடையே ஒரு புறம்போக்கு நிலம் இருந்துள்ளது.அதனை
மெல்ல ஆக்கிரமித்த அரசியல்வாதி இராமமூர்த்தியின் இடமே புறம்போக்கு என்ற பொய் பிரச்சாரம்
மேற்கொண்டு சிலரை நம்பவைத்தார்.கிராம நிர்வாக அலுவலர் அரசியல்வாதிக்கு உடந்தை ஆனார்.இராமமூர்த்தியின்
மனையில் இருந்த மரங்கள் புறம்போக்கு மரங்கள் என வெட்டப்பட்டன.காவல் நிலையத்திற்கு சென்று
புகார் அளித்துள்ளார் இராமமூர்த்தி.காவல்துறை அதனை ஏற்கவில்லை.நீதிமன்றத்தில் சிவில்
வழக்காக பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி விட்டனர்.மயிலாடுதுறை நீதி மன்றத்தில்
வழக்கு நடந்தது.தீர்ப்பு இராமமூர்த்திக்கு சாதகமாக வந்தது .நாகப்பட்டினம் நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்தார் அரசியல் புள்ளி.அதிலும் இராமமூர்த்தியின் தரப்பே வென்றது.
நில அளவை பதிவேடுகளில்
ஏமாற்று செய்து இராமமூர்த்தியின் இடத்தின் ஒரு பகுதியை தனது இடம் எனக் கூறி வேறு ஒருவருக்கு
விற்பனை செய்ய கிரய உடன்படிக்கை செய்தார் அரசியல்வாதி.அது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு
நீதிமன்ற உத்தரவுப்படி அதனை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அரசியல் பிரமுகர்.
நீதிமன்ற வழக்குகளில்
தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததால் இராமமூர்த்தி மீது,கிராமத்தில் வசித்து வந்த ஒருவரை
பணம் கொடுத்து தூண்டி விட்டு சாதிப்பெயர் சொல்லி திட்டினார் என புகார் அளிக்கச் செய்து
தீண்டாமைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய வைத்தார் அரசியல்வாதி.தன் மீது தொடுக்கப்பட்டது
பொய் வழக்கு என நீதிமன்றத்தில் நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வந்தார் இராமமூர்த்தி.
நீதிமன்றத்தின்
அனைத்து வழக்குகளிலும் தோல்வி கண்டதால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நில ஆர்ஜிதம்
மூலம் அதனை அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப் பார்த்தார் அரசியல்வாதி.கிராம நிர்வாக அலுவலர்,வட்டாட்சியர்,கோட்டாட்சியர்,சார்
ஆட்சியர் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் மீண்டும் மீண்டும் நிலைமையை விளக்கி மனு அளித்து
தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தனது மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன
என கேள்வி கேட்டு அரசை இயங்கச் செய்து வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு உண்மை நிலையை புரியவைத்தார்
இராமமூர்த்தி.இவரது முழுக்கதையையும் கேட்ட மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியரிடமும் சார்
ஆட்சியரிடமும் இராமமூர்த்தியின் முன்னிலையிலேயே தொலைபேசியில் பேசி அரசியல் குறுக்கீடுகளை
புறந்தள்ளி நியாயப்படி நடக்க  ஆணையிட்டுள்ளார்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் தனக்கு பெருமளவில்
உதவி புரிந்ததாக கூறுகிறார் இராமமூர்த்தி.அரசின் நிர்வாக இயங்குமுறையையும் அதிகாரப்
படிநிலைகளையும் அதிகாரிகளின் மனோபாவங்களையும் புரிந்தவராகி ஒரு இணை அரசாங்கமாக உருவெடுத்துள்ளார்
இராமமூர்த்தி.நீதித்துறை,காவல்துறை.வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களின்
படிக்கட்டுகளில் பல ஆண்டுகள் ஏறி இறங்கியிருக்கிறார்.மெல்லிய குரலில் பேசுகிறார்.யார்
மீதும் கசப்போ வெறுப்போ அற்றவராக இருக்கிறார் என்பதை கவனித்த போது வியப்பாக இருந்தது.அரசாங்கத்தின்
மூடப்படும் கதவுகளைக் கண்டு தனக்கு அச்சமில்லை தகவல் பெறும் உரிமைச் சட்டம் அரசின்
மூடப்படும் கதவைத் திறக்கும் சாவியை நம் கைகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்கிறார்.
சில மாதங்களுக்கு
முன் ரலேகான் சித்தியில் திரு.அண்ணா ஹஸாரே அவர்களை சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன் என
அவரிடம் கூறினேன்.தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என்பதால்
தான் நிகழ்த்திய சமரில் அண்ணாஜிக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது என நெகிழ்வுடன்
குறிப்பிட்டார்.
அரசு இயந்திரம்
பெரியதுதான் ஆனால் அது ஆம் ஆத்மிகளுக்கானதே.ஓர் எளிய மனிதனின் வெற்றி தார்மீக ரீதியில்
மிகப் பெரியதே.சாமானியர்களின் தார்மீக பலத்தின் உருவமாக அண்ணா ஹஸாரே இருக்கிறார் என
நினைத்துக் கொண்டேன்.இவ்விஷயம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என கேட்டேன்.பன்னிரண்டு
ஆண்டுகள் என்றார்.ஒரு மகாமக காலம்.பாண்டவர்களின் வனவாச காலம்.
இப்போது போடப்படும்
கட்டிட பிளான் எதற்கானது என கேட்டேன்.ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் எனது
மகனுக்காக கட்ட உத்தேசித்துள்ள இல்லத்தின் வரைபடம் என்றார்.அது கட்டப்படும் போது ஒரு
வீடாக மட்டும் இருக்காது;ஓர் எளிய மனிதர் நியாயத்தினால் மட்டுமே அடைந்த வெற்றியின்
சின்னமாகவும் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

புகைப்படம் சொல்லும் கதை 1







ந பிச்சமூர்த்தி அவர்களின் நூறறாண்டு விழா 15.08.2000 ஆம் ஆண்டில் சிறப்பாக திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த இல்லறத்தில் கொண்டாடப்பட்டது.  அன்று பிச்சமூர்த்தியின் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், ஒரு கவிதைத் தொகுதியும் வெளியிடப்பட்டன.  விழாவின் தொடர்பாகக் கட்டுரைகளும் படிக்கப்பட்டன.  

அப்போது எடுத்தப் புகைப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

மாரியம்மன் 3

தேசமாளும் முத்தம்மா


    முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம்.  சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு.  இவள் பிறப்பு முத்தாரம்மன வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது.  ஏழ் கடலுக்கும், அப்பாலுள்ள, மணி நாகப்புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது.  பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர்.  அவர்கள் பிரம்ம ராக்குசக்தி, சின்ன முத்தார், பெரிய முத்தார் என்பவர்கள்.  அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தைகள் பெற்றார்கள்.  அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர்.  நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள்.  பிரம்ம ராக்கு – சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார்.  இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்தி பெற்ற மூன்று சகோதரிகளும், தமிழ் நாட்டிலே வந்து குடியேறி கொடியவர்களைத் தண்டிக்க பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.

    இப்பொழுது பிரம்ம ராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன.  முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள்.  இவள் தீயவர்களைக் கொடு நோயால் தண்டிப்பாள்.  நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள்.

    பிற்காலத்தில் கன்னடியர், ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள்.  இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவியிருப்பதால் தேச முத்து மாரியென்றும் பல பெயர்கள் வழங்குகின்றன. 

    நடுராத்திரி உற்சவத்தின் போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள்.  பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.

    கீழ் வரும் பாட்டு சேலம மாவட்டத்தில் வழங்குகிறது.

            நாலு காலச் சட்டம்
            நடு நிறுத்தி
            நட்சத்திரம் போல
            ஒரு தேர் எழுப்பி
            தேருக்கு ஒடையாளி
            தேசமாளும் முத்தம்மா
            தேரேறி வருவதைப் பாருங்கடி
            ஓலைப் பொட்டி
            தலை மேலே
            ஒம்பது மக்களும்
            கக்கத்திலே
            மக்களைப் பெத்த மாரியம்மன்
            மவுந்து வருவதைப் பாருங்கடி

சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்               இடம் : வாழப்பாடி

கிராமீயப் பாடல்கள் – 4

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

மாரியம்மன் பாட்டு 2

சின்ன முத்தாம் சிச்சிலுப்பை சீரான கொப்பளிப்பான் வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே
மாரியம்மா தாயே, நீ மனமிரங்கித்தந்த பிச்சை,
தற்காத்து நீ கொடும்மா உன் சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா, இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசைந்த எல்லை என்று மாரி தனித்து அடித்தாள் கூடாரம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்.
முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள்
கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்
பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்
தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாக இறக்கிடுவாள்.
 வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள்
கரண்டக்கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்.
பாதத்து முத்தை மாரி பாராமல் இறக்கிடுவாள்.
ஐந்து சடை கொஞ்சிவர, மாரி அழகு சடைமார் பிறழ,
கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு குயில் இருந்து தாலாட்ட
 உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமாம் மண்டபத்தில்
உன் உடுக்கைப் பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
கரகம் பிறந்ததம்மா, கண்ண நல்லூர் மேடையிலே
சூலம் பிறந்ததம்மா துலுக்க மணி மண்டபத்தில்.
நாகம் குடைப் பிடிக்க, மாரியாத்தாளுக்கு நல்ல பாம்பு தாலாட்ட
முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு முதல் மண்டபமாம்
சக்தி உடையவளே சாம்பிராணி வாசகியே       
நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா நாடெங்கும் போட்டுவந்தாள்
உழக்கிலே முத்தெடுத்து மாரி ஊரெங்கும் போட்டு வந்தாள்
எல்லை கடந்தாளோ இருப்பங்குடி மாரியம்மா
முக்கட்டுப் பாதைகளாம், மூணாத்துத் தண்ணிகளாம்
மூணாத்துப் பாதையிலே இருந்து மாரியம்மா வரங் கொடுப்பாள்.
தங்கச் சரவிளக்காம் மாரிக்குத் தனித்திருக்கும் மண்டபமாம்
எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு எதிர்க்கக் கொடிமரமாம்.
தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத் தவசிருக்கும் மண்டபமாம்
சப்பரத்து மேலிருந்து சக்தி உள்ள மாரி அவ
சரசரமாமாலை, மாலை கனக்குதுணு மயங்கிவிட்டாள் மாரி
ஆத்துக்குள்ள அடை கிடக்கு அஞ்சு தலை நாகம்
அது ஆளைக் கண்டால் படமெடுக்கும் அம்மா சக்தி
வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
வெத்திலைக் கடடவே பறத்துங்கடி
வேரத்து  வார சந்தன மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
பாசிப் பயறு எடுத்து பத்தினியாள் கையெடுத்து
உழுந்தம் பயறெடுத்து உத்தமியாள் கையெடுத்து

சேகரித்தவர் : குமாரி பி சொர்ணம்     

 இடம் : சிவகிரி, நெல்லைமாரியம்மன்மாரியம்மன்
   
   

சிவாஜியும் எம்ஜியாரும்……..

    சிவாஜியும் எம்ஜியாரும்……..

    அழகியசிங்கர்

 

    நாங்கள் திருச்சியில் இருந்தபோதுதான் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கினேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  முதலில் வீட்டில் சொல்லிக்கொண்டு சினிமா பார்ப்பேன்.  பின் நானாகவே யாரிடமும் சொல்லாமல் சினிமா பார்க்கப் போய்விடுவேன்.  


    இரண்டு நடிகர்களின் படங்களைத்தான் நான் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருப்பேன்.  ஒருவர் சிவாஜி.  இன்னொருவர் எம்ஜிஆர். எனக்கு இன்னும் ஒரு நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கிறது.  உறையூரில் உள்ள பத்மாவதி தியேட்டரில் (இப்போது அங்கு அந்தப் பெயரே மாறி விட்டது). நாடோடி மன்னன் என்ற படத்திற்கு மதியம் ஒன்றரை மணிக்கே சென்று விட்டேன்.  பெரிய படம் என்பதால் ஒரு மணி நேரம் முன்னதாகவே அந்தப் படம் ஆரம்பித்து விட்டது.  

    யோசித்துப் பார்க்கும்போது, நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்து வேலைக்குப் போனபிறகுகூட எம்ஜிஆரும் சிவாஜியும் என்னை விடவில்லை.  

    சரோஜா தேவி என்ற நடிகை சிவாஜி படத்திலும் நடிப்பார்.  எம்ஜிஆர் படத்திலும் நடிப்பார்.  ஆனால் இந்த கே ஆர் விஜயா அவ்வளவாக எம்ஜிஆர் படத்தில் நடிக்க மாட்டார்.  

    நாங்கள் சென்னைக்கு வந்தபிறகு என் சினிமா ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.  ஆனாலும் சிவாஜியும் எம்ஜியாரும் என்னை விடவில்லை.  எந்தப் படத்தையும் ஒரு தடவைக்கு மேல் பார்க்க மாட்டேன்.  சிவாஜியும் சரி எம்ஜியாரும் சரி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த சிவாஜியின் சிவந்த மண் என்ற படம் ஒன்று வந்தது.  வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று அதிக செலவு செய்து எடுத்தப் படம்.  அதே சமயத்தில் எம்ஜியாரின் நம் நாடு என்ற படமும் வந்தது.  நான் நம்நாடுதான் பார்த்தேன்.  என் வகுப்பில் படித்த
சுந்தரமூர்த்தி என்ற பள்ளி நண்பர் சிவந்த மண் படத்தை எட்டு அல்லது ஒன்பது முறை பார்த்திருப்பான்.  அவன் எஸ்எஸ்எல்சியில் கோட் அடிக்க வேண்டியவன்.  மிகக் குறைவாக மார்க் வாங்கி தப்பித்துவிட்டான்.  அப்படி அவன் மோசமாகப் போவதற்கு சிவந்த மண் படம்தான் காரணம்.  

    யார் நடிப்பு பிரமாதம் என்று நான் நண்பர்களுடன் பேசிக்கொள்வோம்.  சிவாஜிதான் என்றும், எம்ஜிஆர்தான் என்றும் பேசி விவாதம் நடத்துவார்கள்.  

    எனக்கு இரண்டு சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.  ஒன்று பிராட்வேயில் உள்ள பிரபாத் தியேட்டருக்கு சிவாஜியின் படமான இருமலர்கள் என்ற படத்தைப் பார்க்க தீபாவளி அன்று மதியமே க்யூவில் நின்றுகொண்டு மாலைக் காட்சி பார்த்தேன்.  அப்போது ஊட்டிவரை உறவு என்கிற சிவாஜியின் இன்னொரு படமும் ரீலிஸ் ஆனது.  இப்போது நினைத்தால் இதெல்லாம் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது.  எத்தனை நேரம் என்னை அறியாமல் இந்த சினிமாவிற்காக செலவு செய்திருக்கிறேன்.

    இரண்டாவது நிகழ்ச்சி நான் பம்பாய்க்கு என் உறவினர்க
ளுடன் சென்றேன்.  அங்கே மாதுங்கா பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் உரிமைக்குரல் என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.  அப்போது அங்கு தியேட்டரில் படம் பார்க்க அதிகம் பணம் வசூல் செய்வார்கள்.  அந்தப் படத்தில் நம்பியார் கதாநாயகியை (லதா என்ற நடிகை என்று நினைக்கிறேன்) எம்ஜிஆர் துரத்திக்கொண்டு காப்பாற்றுவார்.  தியேட்டரில் கூட்டம் கரகோஷம் போட்டு விசில் அடிப்பார்கள்.  பம்பாயில் இருந்தாலும் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்ப்பதாக நான் நினைத்துக் கொண்டேன்.  

    நான் பள்ளி, கல்லூரி என்றெல்லாம் சென்று கொண்டிருந்தாலும் சினிமா பார்ப்பதுதான் என் பொழுது போக்கு என்று தோன்றியது.  பெரும்பாலும் நான் பார்த்த சிவாஜி எம்ஜியார் படங்களை நான் மறக்க முடியாது.  

    யார் நல்ல நடிகர் சிவாஜியா எம்ஜியாரா என்று பட்டிமன்றம் நடந்தால் என் வாக்கு எம்ஜிஆருக்குத்தான்.   ஏனோ சிவாஜி சினிமா பார்க்க வருகிற ஜனங்களை கண்கலங்க அடித்துவிடுவார்.  ஆனால் சிவாஜி படத்தை என்னால் மறக்க முடியாது.  தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற படங்கள்.  பொதுவாக சிவாஜி தத்ரூபமாக அந்தப் பாத்திரமாக மாறி விடுவார்.  நமக்கு உண்மையில் கப்பலோட்டிய தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பாரா என்று தோன்றும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜியின் அந்தத் தோற்றம் பிரமிக்க வைக்கும்.  எம்ஜிஆருக்கு அதெல்லாம் வராது.  

    ஆனால் எம்ஜிஆர் படம் பார்க்கிற ஜாலி சிவாஜி படத்தில் வராது. ஆயிரத்தில் ஒருவனாகட்டும், எங்கள் வீட்டுப் பிள்ளை ஆகட்டும் எம்ஜிஆர் எம்ஜிஆர்தான். கலகலப்பாக இருக்கும்.  எல்லாப் படங்களிலும் எம்ஜி ஆர் வெறுமனே கையை தலைக்கு மேல் ஆட்டுவார்.  அதுவும் காதல் பாடல்களில் இந்த சேஷ்டைகள் அதிகமாகவே தெரியும்.  ஆனாலும் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கிற மகிழ்ச்சி அலாதியானதுதான். 

    நான் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ராமனாதன் என்ற நண்பர் இருந்தார்.  அவர் எம்ஜிஆர் ரசிகர்.  எம்ஜிஆர் படங்களைத் தவிர வேற எந்தப் படத்தையும் பார்க்க மாட்டார்.  தினமும் அவர் என்னிடம் எம்ஜிஆரைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். எதுவும் சொல்லவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது.  

    எம்ஜிஆர் படத்தில் நடிக்கும் வில்லன் ஒருவர் எப்போதும் சண்டையின்போது எம்ஜிஆரிடம் ஒதை வாங்குவார், எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் குடி இருந்தார்.  அவர் பெயர் ஜஸ்டின். ராமனாதனும் நானும் அவரைப் போய்ப் பார்ப்போம்.     

    அந்த உதை வாங்கும் வில்லன் நடிகரைப் பார்க்கும்போது ராமனாதனுக்கு ஒரே உற்சாகமாக இருக்கும்.  எம்ஜிஆரையே பார்ப்பதுபோல் தோன்றும். 

    “சிவாஜியும் ஒரு திறமையான நடிகர்,” என்று ராமனாதனிடம் நான் சொல்வேன். 

    ராமனாதன் சிரித்துக்கொண்டே,”சிவாஜிக்கு சண்டைக் காட்சியில் எப்படி நடிப்பது என்று தெரியாது,”என்பார்.

    உண்மையில் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.  நான் பார்த்த சிவாஜி எம்ஜிஆர் படங்களை வைத்துப் பார்த்தால் நான் ஒரு பெரிய சினிமா இயக்குநராகவோ நடிகராகவோ ஆகியிருக்க வேண்டும்.  அல்லது குறைந்த பட்சம் சினிமாவில் வசனம் எழுதறவனாகவாவது ஆகியிருக்க வேண்டும்.  

    இவ்வளவு காலத்துக்குப் பிறகு பத்திரிகைகள் என் சினிமாவில் என் பங்கைக் குறித்து பேட்டி எடுத்துப் போட்டிருக்க வேண்டும்.  டிவியில் என் பங்கைக் குறித்து பேசியிருக்க வேண்டும்.  ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.  நான் இத்தனை வருடங்கள் வெறும் படங்களைப் பார்த்து விஸில் அடிக்காத ரசிகனாகவே இருந்திருக்கிறேன்.  நடிப்பில் சிவாஜியா எம்ஜியாரா என்று வாதம் செய்து காலத்தைக் கழித்திருக்கிறேன்.  இதனால் எனக்கு வருத்தமில்லை.  ஆனால் சிவாஜி எம்ஜிஆர் வாழ்க்கையைப் பார்த்தால் எம்ஜிஆர் பெரிய ஹீரோவாக நடித்து அதன்பின் ஒரு பெரிய அரசியல்வாதியாக மாறி இன்றும் கொண்டாடுகிற அரசியல் தலைவராக மாறி ஆட்சியும் செய்துவிட்டார்.  அவர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை தமிழகமே நம்பவில்லை.  எனக்குக் கூட அது பல நாட்கள் நம்ப முடியாமல் இருந்தது.

    ஆனால் சிவாஜி விஷயம் வேறு விதமாகப் போய்விட்டது.  அவருடைய கட்சியில் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உண்மையில் சிவாஜி நிஜ வாழ்க்கையிலும் சினிமாவில் நடித்த சிவாஜி மாதிரியே இருந்துவிட்டார்.  அதனால் அவரால் சினிமாவில் சாதிக்க முடிந்ததை அரசியல் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை. பாவம் சிவாஜி.  ஆனாலும் என்னால் இந்த இரு நடிகர்களையும் மறக்க முடிந்தது இல்லை.

(சமீபத்தில் சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி சுவரில் போஸ்டர் பார்த்தேன்.  அதன் விளைவாக இந்தக் கட்டுரை)

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
                                                                                                      மாரியம்மன்

    வைசூரி மிகக் கொடியதொரு வியாதி.  அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர்.  வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்த தொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர்.  இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர்.  தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர்.  இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிக்கொண்டிருக்கிறாள்.  இக் கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன.  இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப படையெடுப்பின் போது இத் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும், பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
    மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன.  வைசூரி நோயைத் தடுகக முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்தில், மாரியம்மன் பற்றிய வர்ணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியே யறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம்.
    ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பலவிதமான நேர்த்திக் கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர்.  மாவிளக்கு ஏற்றுவதாகவும, கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், சபதம் ஏற்றுக் கொள்வர்.  மனிதனது கோபத்தைத் தணிபபதறகாகக் கையாளும முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர்.
    அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக்கொண்டு சிலர் வருவார்.  அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும்.  உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனினட் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.
                                                                           மாரியம்மா
        தோட்டம் துறந்தல்லோ – மாரிக்கு
        தொண்ணூறு லட்சம் பூவெடுத்து,
        வாடித் துறந்தல்லோ – ஆயிரம் கண்ணாளுக்கு
        வாடா மலரெடுத்து
        கையாலே பூ வெடுத்தா – மாரிக்கு
        காம்பழுகிப் போகுமிண்ணு
        விரலாலே பூ வெடுத்தா
        வெம்பிடு மென்று சொல்லி
        தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்கு
        தாங்கி மலரெடுத்தார்
        வெள்ளித் துரட்டி கொண்டு
        வித மலர்கள் தானெடுத்தார்
        எட்டாத பூ மலரை – மாரிக்கு
        ஏணி வைத்துப் பூ வெடுத்தார்
        பத்தாத பூ மலரைப்
        பரண் வைத்துப் பூ வெடுத்தார்
        அழகு சுள கெடுங்க – மாரிக்கு
        அமுது படி தானெடுங்க
        வீசும் சுள கெடுங்க- மாரிக்கு
        வீத்து வகை தானெடுங்க
        உப்பாம் புளி முளகா – ஆயிரம் கண்ணாளுக்கு
        ஒரு கரண்டி எண்ணெய் அமுது
        கடலைச் சிறு பயறு
        காராமணி மொச்சையம்மா

        அவரை, துவரை முதல் – ஆயிரங் கண்ணாளுக்கு
        ஆமணக்கங் கொட்டை முதல்
        காடைக் கண்ணி பருத்தி விதை – மாரிக்கு
        பாங்கான வித்து வகை
        இட்டுச் செய்தவர்க்கு
        எம காளி துணை செய்வாள்
        மக்களைப் பெற்றவர்கள்
        மாரி கதை தானறிவார்
        அறிந்தோர் அறிவார்கள்
        அம்மன் திருக் கதையை
        தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா – ஆயிரங்கண்ணா
        தேவி திருக் கதையை
        ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
        உலகத்து மானிடர்க்கு
        ஆயிரம் கண்ணுடையா
        அழகில சிறந்த கண்ணு
        பதினாயிரம் கண்ணுடையா
        பாதகத்தி நீலியவ
        இருசி வயததிலேயும்,
        எமகாளி பிறந்திடுவாள்
        மலடி வயித்திலேயும்
        மாகாளி பிறந்திடுவாள்- மாரிக்கு
        ஆறு வண்டி நூறு சட்டம்
        அசையா மணித் தேருகளாம்.
        தேரை நடத்தியல்லோ – மாரி
        சித்திரங்கள் பாடி வாரா – மாரிக்கு
        பூட்டுன தேரிருக்கப்
        புறப்பட்டாள் வீதியிலே
        நாட்டுன தேரிருகக – ஆயிரம் கண்ணா
        நடந்தாளே வீதியிலே
        வீதி மறித்தாளம்மா – மாரி
        வினை தீர்க்கும் சக்தியல்லோ
           
        பிறந்தா மலையாளம் – அவ
        போய் வளர்ந்தா – ஆள்பாடி
        இருந்தாள் இருக்கங்குடி – மாரி
        இனி இருந்தா லாடபுரம்
        சமைந்தாள் சமையபுரம் – மாரி
        சாதித்தாள் கண்ணாபுரம்
        கண்ணா புரத்தில் – மாரி
        காக்கும் பிரதானி – மாரிக்கு
        உடுக்குப் பிறந்ததம்மா
        உத்திராட்சப பூமியிலே
        பம்பை பிறந்ததம்மா – மாரிக்கு
        பளிங்கு மா மண்டபத்தில்
        வேம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        விசய நகர்ப் பட்டணத்தில்
        ஆடை பிறந்ததம்மா – மாரிக்கு
        அயோத்திமா நகர்தனிலே
        சிலம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        பிச்சாண்டி மேடையிலே
        சாட்டை பிறந்ததம்மா – மாரிக்கு
        சதுர கிரி பூமியிலே
        சாட்டை சலசலங்க
        சதுர மணி ஓசையிட
        கச்சை கலகலங்க
        கருங்கச்சை குஞ்சம் விட
        பதினெட்டுத் தாளம் வர
        பத்தினியா சித்துடுக்கு
        இருபத்தொரு தாளம் வர
        எமகாளி சித்துடுக்கு
        சித்துடுக்கைக் கைப்பிடித்து
        சிவ பூசணிந்தவளாம்.
(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன)

சேகரித்தவர் : போத்தையா                          இடம் : நெல்லை
           
       
       
       
   
       
   

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
ஆண்டிற்கொரு விழா


நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.  பிள்ளையாரும அத் தெய்வங்களுள் ஒருவர்.  இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல.  இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர்.  நல்லமேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரததடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
வட்டார வழக்கு :
கொளபபடை – கொட்டகை
பண்ணி – பன்றி
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                இடம் : சேலம் மாவட்டம்

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

திருவல்லிக்கேணி செல்லும்போதெல்லாம் கோஷ் ஆஸ்பத்ரிக்கு எதிரில் உள்ள பிளாட்பார நடைபாதைக் கடைகளில் வாரிக் குவித்திருக்கும் புத்தகக் குவியல்களைப் பார்வையிடாமல் இருக்க மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கடைகளில் ஒன்றில் ஒரு அபூர்வமான புத்தகம் கிடைத்தது.  கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகம் உள்ளே கரையான் அடையாளம் பொட்டு பொட்டாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் இது.  கிராமீயப் பாடல்கள் என்ற தலைப்பில் இப்புத்தகம் உள்ளது.  இப் புத்தகத்தைத் தொகுத்தவர் நா. வானமாமலை.  எஸ் எஸ் போத்தையா, எஸ் எம் கார்க்கி, பி எம் ராஜவேலு, குமாரி பி சொர்ணம், கவிஞர் எஸ் எஸ் சடையப்பன், கு சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன் என்று பலர் தொகுத்த கிராமீய்பாடல்களை மொத்தமாக தொகுத்திருக்கிறார் நா வானமாமலை.  


    இதுமாதிரி புத்தகம் திரும்பவும் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.  எந்தப் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.  இதில் உள்ள எல்லா கிராமீயப் பாடல்களையும் தினமும் ஒன்றாக அடித்து முகநூலில் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன்.  முதல் பாடலை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதோ இரண்டாவது பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.    பிள்ளையார் பூசை

    உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.  அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள்.  ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும் பழமும் படைப்பார்கள்.  விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலததில் விளைய அருள் சுரக்குமாறு  அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம்.  விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார்.  இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார்.  இவர் சிவனையும், விஷ்ணுவையும், போலப் பணக்காரத் தெய்வமல்ல.  இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.


            காளையே ஏறு….
            முந்தி முந்தி வினாயகனே
            முக்கண்ணனார் தன் மகனே
            கந்தருக்கு முன் பிறந்த       
            காளைக் கணபதியே – (காளையே)
           
            வேலருக்கு முன் பிறந்த   
            விக்கினரே முன் நடவாய்,
            ஊருக்கு மேற்காண்டே
            ஒசந்த தொரு வெப்பாலை.
            வெப்பாலை மரத்தடியில்
            சப்பாணி பிள்ளையாராம்.
            சப்பாணி பிளளையார்க்கு,
            என்ன என்ன ஒப்பதமாம்
            நீரு முத்தும் தேங்காயாம்,
            நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
            கொத்தோடு தேங்காயாம்
            குலைநிறைய வாழைப்பழம்
            இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
            சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)

            வண்டு மொகராத – ஒரு
            வண்ண லட்சம் பூ வெடுத்து
            தும்மி மொகராத
            தொட்டு லட்சம் பூ வெடுத்து
            எறும்பு மொகராத
            எண்ணி லட்சம் பூவெடுத்து
            பாம்பு மொகராத       
            பத்து லட்சம் பூவெடுத்து
            வாரி வந்த பூவையெல்லாம்
            வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
            கொண்டு வந்த பூவையெல்லாம்
            கோபுரமா கொட்டி வச்சேன்
            குளத்திலே ஸ்நானம் பண்ணி
            கோலு போல நாமமிட்டு
            ஆத்துல ஸ்நானம் பண்ணி
            அருகு போல நாமமிட்டு
            பொழுதேறிப் போகுதிண்ணு
            வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
            இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
            சப்பாணிப பிள்ளையார்க்கு

 
வட்டார வழக்கு:

    மேற்காண்டே – மேற்கில்
    வெப்பாலை –  வேம்பு
    நிமித்தியம் – நைவேத்தியம்
    மொகராத – முகராத
    ஒரைச்சி – உரைத்து

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்


    பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை.  தீ வளர்த்து ஓமம் வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை.  ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன.  ஆனால் தமிழ் உழவர் பெருமக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை. 
       
           
           
           
   

ரூ. 5000 பரிசு வேண்டாமா?

அழகியசிங்கர்


சில தினங்களாக நவீன விருட்சம் 98வது இதழை சிறிது சிறிதாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களுக்குள் எல்லோருக்கும் போய்விடும்.  அப்படியும் சில பேர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் அழகியசிங்கருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.  ஒரு நீளமான நோட்டில் எழுதி வைத்திருக்கும் முகவரிகளை கவரில் தானாகவே எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.  டைப் அடித்து ஒட்டி அனுப்பலாம்.  அப்படி அனுப்பினால் நாம் நம் கையால் எழுதி அனுப்புகிற தன்மையை இழந்துவிடுவோம் என்கிறார்.  ஏன் என்றால் இப்போதெல்லாம் யாரும் பேனாவைப் பிடித்து எழுதுவதில்லை. இப்படி அவர் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஒன்று தோன்றியது.
1988ல் விருட்சம் இதழ் தோன்றியது.  இன்றுவரை 98வது இதழ் வரை வந்து விட்டது.  இது ஒரு காலாண்டு இதழ். உண்ûமாகப் பார்க்கப் போனால் 100வது இதழ் 25வது ஆண்டிலேயே வந்திருக்க வேண்டும். இயற்கை ஏற்படுத்திய சதியால் அப்படி எதுபும் நடக்காமல் போய்விட்டது.  
98 இதழ்களையும் யாராவது ஒரு வாசகர் வைத்திருப்பாரா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அப்படி யாராவது வைத்திருந்து என்னைச் சந்தித்தால் ரூ5000 பரிசு வழங்கப்படும்.  வருபவர்கள் அத்தனை இதழ்களையும் கொண்டு வந்து காட்ட வேண்டும்.  
இந்தப் பரிசு யாருக்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.