விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….
அழகியசிங்கர்
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது.  கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார்.  எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர். 
 இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும்.  ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.  
இந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல.  அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள்.  தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க   ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது.  பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  
ஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார்.  ‘இந்த விருதை தேவதச்சன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்,’ என்று. இப்படி சொல்வதற்குப் பெரிய மனது வேண்டும்.  இந்தக்  குழுவினருக்கு அது மாதிரி சொல்கிற தைரியம் இருக்கிறது.  தேவதச்சனுக்கு விருது வழங்கும்போது கிட்டத்தட்ட அந்த ஹால் முழுவதும் நிரம்பி விட்டது.  
அந்த மேடையில் பேசின அத்தனைப் பேர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பேசினார்கள்.  அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அங்கு கூடியுள்ள கூட்டம் அமைதியாக இருந்தது.  எனக்கு லட்சுமி மணிவண்ணன் பேசியது ரொம்பப் பிடித்திருந்தது.  அவர் பேசிய விதமும் நன்றாக இருந்தது.  அவர் நம் முன் ஒரு கூட்டம இருக்கிறது.  அதற்காகப் பேசுகிறோம் என்றில்லாமல் அவருக்காக பேசுவதுபோல் பேசினார். முதலில் அவர் ஆரம்பிக்கிறபோது எங்கே தேவதச்சனைப் பற்றி பேசாமல் இருந்து விடுவாரோ என்று கூடத் தோன்றியது. அதேபோல் அவர் எங்கே பேச்சை முடிக்காமல் போய்விடுவாரோ என்று கூடத் தோன்றியது.  
தேவதச்சனைப் பற்றி பேசும்போது யுவன் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.  மேடையில் அவர் பேசும்போது அப்படித்தான் இருந்தது.  நான் தேவதச்சனை யுவன் மூலமும் ஆனந்த் மூலமும் பேசிக் கேட்டிருக்கிறேன்.  இரண்டு முறை அவரை ஆனந்த்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.   யுவன் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் தேவதச்சனைப் பார்த்து பரவசப்பட்டு எங்களிடம் (ஆனந்திடமும் என்னிடமும்) பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.   அது மாதிரி பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இதெல்லாம் முன்பு.  
பொதுவாக தேவதச்சன் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்.  தன் கவிதைக்குக் கிடைத்த அங்கிகாரத்தைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.  ஆனந்த் பையன் திருமணத்தின் போது அவரைப் பார்த்துக் கேட்டேன்.  அந்த சமயத்தில் அவருக்கு விளக்கு பரிசு கிடைத்திருந்தது.  உங்கள் கவிதைக்காக விளக்கு பரிசு கிடைத்திருக்கிறதே என்று.  தன் கவிதைக்காக இது மாதிரி பரிசு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக நினைத்துதான் அவர் பேசினார். அவர் பேசியதைக் கேட்கும் போது, நான் சாதாரண ஆள். ஏதோ கவிதைகள் எழுதுவேன்.  இந்த அங்கிகாரம் அதிகம்தான் என்பதுபோல்தான் பேசினார்.  எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.  நான் பேசியது அவ்வளவுதான்.  அதற்குள் தேவதச்சனை வேற யாரோ தேடி வந்து விட்டார்கள்.
குரு ஸ்தானத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை வைத்திருக்கிறார்கள்.    அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலவிதங்களில் பிரபலமாகி விட்டார்கள்.  அவர்கள் பிரபலம் ஆகும்போது தேவதச்சனும் பிரபலம் ஆகாமல் இருக்க முடியாது.  அதுதான் நிகழ்ந்திருக்கிறது. புதியதாக எழுத வருபவர்கள் கூட தேவதச்சனை தேடிப் போகிறார்கள்.  இப்படி அபூர்வமான ரசிகர் கூட்டம் எந்த எழுத்தாளருக்கும் அதுவும் குறிப்பாக கவிஞருக்குக் கிடைக்காது.   யாரும் அவரைத் தேடி வராமல் இருந்தால்கூட அவர் பேசாமல்தான் இருப்பார்.  அதைப் பற்றி அவர் கவலைப் பட மாட்டார். 
அவர் கவிதைகளையும் ரொம்ப குறைவாகத்தான் எழுதி உள்ளார். அதை உடனடியாக பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைக்கவும் மாட்டார். அவருடைய கவிதைப் புத்தகங்கள் பிரசுரமானது கூட மற்றவர்கள் முயற்சியாகத்தான் இருக்கும். யாராவது கவிதைத் தொகுதி கொண்டு வந்தால் தேவதச்சன் பெயரை அதில் தெரியப் படுத்தினால் அந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்பு கூடத்தான் செய்யும்.  
அவர் எதை எழுதினாலும் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்.   
1988ல் நான் விருட்சம் ஆரம்பித்தபோது, தேவதச்சன் எனக்கு சில கவிதைகளை அனுப்பினார். கவிதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதால்தான் அனுப்பினார். அதில் ஒரு கவிதை.  என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது.  அந்தக் கவிதையின் பெயர் : ஒரு நிமிஷம்.  இக் கவிதைவிருட்சம் 2வது இதழில் வெளிவந்தது. அதாவது அக்டோபர் – டிசம்பர் 1988ல்.
உயிர் பிரிவதற்கு
எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது

மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான் 
இருக்கிறது.

இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.

இவ்வொரு 
நிமிஷத்தில் 
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம் 
வளர்ந்து விடுகிறது.
இந்தக் கவிதையை நான் படித்தபோது விருட்சம் இதழையே கொண்டு வரவேண்டாம் என்று அப்போது நினைத்தேன்.  ஏன் கவிதைகள் எல்லாம் இப்படி நம்மை தொந்தரவு செய்கிறது என்று என் சிந்தனை போயிற்று. அதன் பின் அவர் எனக்கு அனுப்பிய கவிதை டினோசரை நெருங்குவது எப்படி?  என்பது.  
விஷ்ணுபுரம் கூட்டம் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது.  நான் தேவதச்சனை நேரிடையாகப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க நினைத்தேன்.   ஆனால் அவரைச் சுற்றி கூட்டமாக இருந்தது.  நான் அங்கு போய் அவரைப் பார்த்து வாழ்த்த முடியாது என்று திரும்பிப் போய்விட்டேன்.  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தது.  அநதப் படத்தில் தேவதச்சன் பேசியது எனக்கு சரியாகப் புரியவில்லை.  அவர் குரல் சரியாக எடுபடாமல் இருந்ததுபோல் தோன்றியது.  நான் தூரத்தில் உட்கார்ந்திருந்ததால் அப்படித் தோன்றியிருக்கும்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த சுப்ரபாரதி மணியனைக் கேட்டேன்.  அவரும் ஆமாம் என்றார்.  மேலும் üஅத்துவான வெளியின் கவிதைý என்ற தலைப்பில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள்.  144பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  தமிழில் இந்த அளவிற்கு ஒரு கவிஞரை கௌரவப்படுத்தியதை நினைக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *