ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 5

பொதுவாக ஞானக்கூத்தன் கவிதைகளில் சமூக அக்கறை, தத்துவார்த்த சிந்தனை என்றெல்லாம் உண்டு.  எல்லாக் கவிதைகளிலும் அவர் எள்ளல் உணர்வோடு கிண்டலடித்து எழுதி உள்ளார்.  விடுமுறை தரும் பூதம் என்ற கவிதையை எடுத்துக்கொண்டால், அதன் எள்ளல் தன்மை நம்மை ஆச்சரியப்படுத்தும்.  ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் என்கிறார். எள்ளல் தன்மையுடன் ஆரம்பிக்கும் இக் கவிதை சற்று கடுமையாகப் போய் முடிகிறது.  அவருக்கு பணிபுரிவது ஒரு கசப்பான அனுபவமாக இருந்திருக்கிறது.

ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் கற்பனை செய்து கவிதை எழுதுவார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.  உதாரணமாக சில கோரிக்கைகள் என்ற கவிதையைப் படித்தால்  முதலில் இப்படி ஆரம்பிக்கிறார் கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய் என்று.  பின் முடிக்கும்போது இப்படி சொல்கிறார். இப்போதைக் கொன்று சொல்கிறேன்.  பொத்துப் பொத்தென்று நம்பிக்கை மூட்டைகளை இப்படித் தட்டாதே மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில் என்கிறார். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரண வாழ்க்கை. இருப்பதற்கு சொந்த இடம் கூட இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை.  ஆனால் கட்டப் போகும் மாளிகையைப் பற்றி வேண்டுமென்றே கவிதை எழுதுகிறார்.  அதில் தென்படுகிற அங்கத சுவையைப் பற்றி கவிதை விவரிக்கிறது.   நீங்கள் படித்தால்தான் இந்த அங்கத உணர்வை உணரமுடியும். அவர் கவிதைகளைப் பற்றி சொல்கிறவர்கள், அவருடைய ஆரம்பக் காலக் கவிதைகளைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள்.   ஏனென்றால் யாரும் முழுவதுமாக யாருடைய கவிதைகளையும் படிப்பதில்லை.  ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை மனதாரப் பாராட்டுவதில்லை.    ஆரம்ப காலத்தில் இருந்து கவிதைகளைப் பற்றியே சிந்தித்து கவிதைகளையே எழுதிக்கொண்டு வந்தவர் ஞானக்கூத்தன்.  சமீபத்தில் வந்த இம்பர் உலகம் என்ற அவர் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது கவிதைத்தன்மையை  எந்த அளவிற்கு சுலபமாக அவர் மாற்றி உள்ளார் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

சமீபத்தில் வந்த அவருடைய கவிதைத் தொகுதியான இம்பர் உலகம் படிக்கும்போது கநாசு பாணியில் இன்னும் கவிதையை எளிதாக மாற்றி விட்டார். உதாரணமாக ஒரு கவிதையை இங்கு கூற விரும்புகிறேன்.

இக் கவிதையின் தலைப்பு : கணுக்ககாலில் கொஞ்சம் வீக்கம்.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்

நாற்பது வயதக்காரர்

ஊழல் ராமசாமித் தெருவில் சற்று

பெரியதான க்ளினிக் வைத்திருந்தார்

ஒரு மின்விசிறி

இரண்டு பெஞ்ச்சுகள்

இரண்டு வரிசைகள்

டோக்கன் கொடுக்க ஒரு மடந்தை

அவர் சொன்னார்

நோயாளிகள் சிலபேர் அவரைத்

தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்

படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்

நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்

வலது கணுக்காலில் வீக்கம் வந்ததென்பார்களாம்

ஆபிரேஷனுக்குக் குறித்த நாளை

மாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்வார்களாம்

ஏனென்று கேட்டால்

நாலு சாமியைக் கும்பிட்டால்தானே

உங்கள் கையில் ஆபரேஷன் செய்யலாம்

என்று திருப்பதி பயணத்தைக் கூறுவார்களாம்

டாக்டர் முன்பு உட்கார்ந்திருந்தேன்

வலது கணுக்காலில் வீக்கம் என்றேன்

என்றிலிருந்து வீக்கம் என்றார் டாக்டர்

நீங்கள் எடுத்துக்கொடுத்த மாத்திரையைத்

தொடங்கிய பிறகுதான் டாக்டர் என்றேன்.

ஒரு விதத்தில் இந்தக் கவிதையைப் படிக்கும்போது அங்கத உணர்வை நாம் உணர்ந்தாலும்,  உண்மையில் டாக்டர்களைப் பற்றிய நம் பயத்தை கவிதை முலம் ஆழமாக சித்திரமாக தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.  இதில் சில வரிகளைப் படிக்க படிக்க சிரிப்பு தானகவே நம்மிடம் தொற்றிக் கொள்கிறது.  அதாவது üடோக்கன் கொடுக்க ஒரு மடந்தை,ý என்கிறார். மடந்தை என்ற சொல்லின் எள்ளளைக் கவனிக்க வேண்டும்.  பெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார் என்று சொல்லிவிட்டு ஒரு மின்விசிறி, இரண்டு பெஞ்ச்சுகள், இரண்டு வரிசைகள் என்கிறார்.  இத் தொகுதியில் சமகால படைப்பாளிகளை அவர் கிண்டலடித்தது எழுதியதைப்போல் யாரும் அடித்திருக்க முடியாது.

 

பொய்த் தேவு என்ற கவிதையைப் பார்க்கலாம் :

சைக்கிள் ரிக்ஷாவில் தன்னுடைய

கனமான உடம்புடன் ஏறி

அமர்ந்து கொண்டார் க.நா.சு

திருவல்லிக்கேணி பெரிய தெருவில்

நல்லியக் கோடன் பதிப்பாலயம் இருந்தது

தேவாலயத்தைக் காட்டிலும்

புத்தகாலயத்தைப் போற்றிய க நா சு

பதிப்பாலயம் நோக்கிப் புறப்பட்டார்

நாவலுக்கான ராயல்டி

கிடைக்கு மானால் என்னென்ன

செய்யலாம் என்று கணக்கிட்டார்

எதுவும் உருப்படியாய்த் தோன்றவில்லை

கோயம்புத்தூர் கிருஷ்ணயர் கடையில்

கோதுமை அல்வா கொஞ்சமும்

பின்னி மில்ஸ் போர்வை ஒன்றும்

வாங்க முடிந்தால் நன்றாயிருக்கும்

பணத்தை அவளிடம் கொடுத்தால் போதும்

அதற்கே அவள் கண்ணீர் விடுவாள்

சிலப்பதிகாரத்தைப் புரட்டினால்

நல்லதென்று மனம் சொல்லிற்று

என்ன விலையோ இப்போது?

ரிக்ஷாவை விட்டிறங்கினார் க நா சு

ஜிப்பா பையைத் துழாவி

காசுகள் சிலவற்றைக் கண்டெடுத்து

டீ குடித்துவிட்டு வா என்றார்

ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டுப்

பதிப்பாலயம் போக

உடம்மைத் திருப்பினார். அங்கே

புரட்சிக் கவிஞர் நிற்கிறார்

என்னுடன் போஸ்ட் ஆபிஸ் வாரும்

மணியார்டர் வாங்கணும்

ஆள் அடையாளம் காட்டணும்.

நிறைய கடிதங்கள்

ரைட்டர், பொயட் & க்ரிடிக் என்று

திருப்பப் பட்ட கடிதங்கள் வந்ததால்

க நா சுவுக்கு போஸ்ட்மேன் நண்பரானார்

நல்லியக் கோடனை மறந்து

புரட்சிக் கவிஞருடன் போனார்

கவிஞர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்

பக்கத்துத் தேநீர்க் கடையில்

தேநீர் வாங்கித் தந்தார்

இருவரும் தெருவில் நின்று பருகினர்

புரட்சியும் அமைதியும் அப்புறம்

தங்கள் தங்கள் வழியே போயினர்

எழுத்தாளர்களை வைத்து அவர் எழுதிய கவிதைகள் வித்தியாசமாக யோசிக்க வைக்கின்றன. நம் வாழ்க்கையில் தென்படும் எளிதான அவலத்தை அங்கத உணர்வோடு ரசித்தபடியே எடுத்துச் சொல்கிறார். எந்தக் கவிதையிலும் அவர் கிண்டலை சேர்க்காமலிருப்பதில்லை.  மேலே குறிப்பிட்ட கவிதையில் ‘புரட்சியும் அமைதியும் அப்புறம் தங்கள் தங்கள் வழியே போயினர்,’ என்று கிண்டலடிக்கிறார்.

ஆரம்பத்திலிருந்து தற்போது வந்துள்ள அவர் கவிதைகளை வாசிக்கும்போது கவிதை எழுதும் முறையை அவர் எப்படியெல்லாம் மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிய முடியும். அவருடைய எல்லா கவிதைகளிலும் அடிநாதமாக ஒளிந்து கொண்டு இருப்பது அவருடைய அங்கத உணர்வு, மனித நேயம்.  அதனால்தானோ என்னமோ அவர் கவிதைகளை எப்போதும் படித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

(இத்துடன் முடிந்தது)

ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 4

சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை மட்டும் இல்லை.  புத்தகத்திற்கு அதுமாதிரி தலைப்பிட்டுவிட்டு அக் கவிதை அதில் இடம் பெறவில்லை எனப்தை வேடிக்கையாகச் சொல்வார் ஞானக்கூத்தன். பின் நான் அதைத் தீபம் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் சேர்த்தேன்.  தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் இதழ்களை அங்கயே புரட்டிப் பார்த்து பின் ஒரு நோட்டில் எழுதி வந்து சேர்த்தேன்.  இதுமாதிரி பல விட்டுப் போன கவிதைகளை அத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன்.  அப்படி சேர்த்தாலும். இன்னும் விட்டுப்போன ஞானக்கூத்தன் கவிதைகள் நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்து கசடதபற இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும், மையம் இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும் அவர் சேர்க்க விரும்பவில்லை.   ஞானக்கூத்தன் ரொம்ப குறைவான வரிகளைக் கொண்ட கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  அதாவது  மூன்று வரி, இரண்டு வரி, நான்கு வரிகள் என்று.

அப்படி எழுதுகிற அவர் கவிதைகள் வலிமை உடைய கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.  இப்படிப்பட்ட கவிதைகளை ஹைக்கூவாக அடையாளப்படுத்தக் கூடாது.  ஞானக்கூத்தனுக்கு ஹைக்கூ மீது நம்பிக்கை இல்லை.  உதாரணமாக ‘தமிழ்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால், 

பிறர்மேல் அதைவிட மாட்டேன் 

என்கிறார்.  ஒருமுறை கவிதை எழுதும் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார்.  அப்போது பிரமிளும் என்கூட பேசிக்கொண்டிருந்தார்.  அந்த நண்பரை பிரமிளுக்கு அறிமுகம் செய்தேன். பிரமிளுக்கு ஏதோ ஆவேசம் வந்துவிட்டது.    ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விடத்தான் விடுவேன்’ என்று சத்தம் போட ஆரம்பி0த்துவிட்டார் அந்த நண்பரைப் பார்த்து.  ஏன் இந்தக் கவிதை அவரைக் கோபப்டும்படி செய்தது என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.  எனக்கு இன்றும் புரியாத புதிர் இந்தக் கவிதை. அதன் பின் பிரமிளிடம் இதைப் பற்றி நான் எப்போதும் பேசியது கிடையாது.   இன்னொரு கவிதையான சமூகம் என்ற கவிதையில்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா

சரி 

சோடாப் புட்டிகள் உடைக்கலாம்

         வாடா 

என்கிறார். இக் கவிதைகளை எல்லாம்  நறுக்குக் கவிதை என்று புதுப்பெயர் இட்டுக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  இப்படி ஏகப்பட்ட கவிதைகள் ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார்.  எல்லாத் தொகுப்புகளிலும்  இதுமாதிரி கவிதைகளைப் பார்க்கலாம்.  கவிதை என்பது மனதிலிருந்து தோன்றுவது, அது எழுச்சிப் பெற்று சில வரிகளில் நின்று விடுகிறது என்று நினைக்கிறேன்.   நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ஆனால் ஞானக்கூத்தன் இதில்

திறைமையானவர்.  மேலும் அவர் மறைவுக்குப் பிறகு கடைசியாக வெளியான இம்பர் உலகம் என்ற தொகுப்பில் கூட சுற்றறிக்கை என்ற நறுக்குக் கவிதையைப் பார்க்கலாம்.

ஒரு சுற்றறிக்கை

கடைசிக் கையெழுத்தைத் 

தேடுகிறது.  

அவ்வளவுதான் கவிதை.  இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒருவித சோகம் என்னை ஆட்கொள்கிறது.  அவர் மரணத்தை உணர்ந்துதான் இப்படி எழுதி உள்ளாரா என்று.  என்னால் யூகிக்க முடிகிறது.  ஆனால் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை.  நான் கேட்டுக்கொள்வதெல்லாம் நறுக்குக் கவிதையை தமிழில் வெளிவரும் ஹைக்கூ என்ற வகையில் சேர்த்து விடாதீர்கள்.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை. அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன்.
பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார். கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன்.

அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை. மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது. 1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை. ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள். 17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார்.

அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் கவிதை என்கிறார். இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம் என்கிறார்.

அவள் வீட்டார்கள் ஒரு சமண முனி மாதிரி அவளைக் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.

ஸரஸ÷வின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம் நடக்கிறது. இதுதான் கதையில் திருப்பத்தைத் தருகிறது. முதலில் ஸரஸ÷விற்குத் தாங்க முடியாத குதூகலம் இருந்தாலும், அவளுடைய உள்ளத்தில் ஒரு விதத் துயரம். அதை வெளிப்படுத்திக் கொள்ள தனிமையில் புழக்கடைக்குச் சென்றுவிட்டாள்.

ஸரஸ÷வைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் மீது இரக்கப் படுகிற ஒரு ஆண் அவளைப் பின் தொடரந்து, அவள் தோளில் கையை வைத்து, ‘நான் இருக்கிறேன்.பயப்படாதே,’ என்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறான்.

அவள் அதை மறுத்து விடுகிறாள். அவள் சொல்கிறாள் : “உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன் மதிப்பு ஏற்படும். தைரியசால் என்பார்கள். அதை எதிர்பார்க்காறீர். நான் பரத்தையன்று. நான்ஓரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்,” என்கிறாள்.

உண்மையில் அவன் அவளைப் பார்த்து, “நீ ஒரு பரத்தை,” என்று சொன்னதால் கோபம் கொண்டு ஸரஸ÷ அவ்வாறு சொல்கிறாள்.

இத்துடன் கதையை புதுமைப்பித்தன் முடிக்கவில்லை. அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது என்று எழுதியிருக்கிறார்.

ஏன் ஸரஸ÷ என்ற கதாபாத்திரத்தை புதுமைப்பித்தன் சாகடிக்க வேண்டும். இந்த இடம்தான் எனக்குப் புரியவில்லை.

விருட்சம்  இலக்கியச் சந்திப்பின் 27வது கூட்டம்

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளேன்.  முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசி துவக்கி வைத்தார்.  இரண்டாவது கூட்டமாக நாளை பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் கதைகளும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளுமைகளையும் அறிமுகப்படுத்துவது விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.  நாளை நடக்கும் கூட்டத்திற்கு புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு சந்தியா பதிப்பு வெளியிடு விற்பனைக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன்.  கூட்டத்திற்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

27ஆம் விருட்சம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி…

 

 

 

விருட்சம் சந்திப்பின் 26வது கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து கூட்டத்தைச் சிறப்பு செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நம்மிடையே பிரபலமான இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அல்லது அவர்களுடைய படைப்புகளைப் படித்து அது குறித்து சிலாகித்துப் பேசுபவர்களின் கூட்டம் இது.  முதல் கூட்டம் தி ஜானகிராமனைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக உரை நிகழ்ந்தினார்.  அதேபோல் இந்த மாதம் 15ஆம் தேதி பெருந்தேவி புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து உரை நிகழ்ந்த உள்ளார்.  புதுமைப்பித்தன் போல் கநாசு, மௌனி, செல்லப்பா, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி பலர் பேச உள்ளார்கள்.  நீங்கள் எல்லோரும் வந்திருந்து கூட்டத்தை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதோ கூட்டத்திற்கான அழைப்பிதழ்.  இதை எல்லோரும் உங்கள் வலைதளங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் -2

 

ஞானக்கூத்தன் கவிதைகளில் அப்படி என்ன விசேஷம்.  கவிதையில் அவர் கையாளும் மொழியின் திறன்.  வாசகனைப் பிடித்து இழுக்கும் வித்தியாசமான அம்சம்.  இதுதான் அவர் கவிதைகளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது.  உதாரணமாக :

சைக்கிள் கமலம் என்ற கவிதையைப் பார்ப்போம்.

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பினைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிரப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிரப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என் மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.

சைக்கிள் கமலம் என்ற கவிதையில் வண்டி ஓட்டுவது பற்றி கூறிகொண்டு வந்தவர், ஒரு வரியில் என் மேல் ஒருமுறை விட்டாள் என்று வரும்.

ஞானக்கூத்தனைப் பற்றி யாராவது பேச வந்தால் ஞானக்கூத்தனின் சில கவிதைகளை யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.  நான் அப்படி குறிப்பிடப் பட வேண்டிய அவருடைய கவிதைகளின் பட்டியலை இங்கு தர விரும்புகிறேன்.  பிரச்னை, பரிசல் வாழ்க்கை, கீழ்வெண்மணி, விட்டுப்போன நரி, நாய், காலவழுவமைதி, யோஜனை, தோழர் மோசிகீரனார், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், கொள்ளிடத்து முதலைகள், வெங்காயம், வகுப்புக்கு வரும் எலும்புக் கூடு.  இப்படி ஞானக்கூத்தனின் பல கவிதைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் என்னுடைய பல நண்பர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளை ஒப்பிப்பார்கள்.

(அகில இந்திய ஆகாசவாணியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 1

ஞானக்கூத்தனின் ஒரு கவிதையை நான் எப்போதும் மின்சார வண்டியில் என் அலுவலகத்திற்கு பயணம் செல்லும்போது ரசித்துக் கொண்டிருப்பேன்.  அந்தக் கவிதை இதோ:

என்ன மாதிரி என்பது அக் கவிதை.

என்னை நோக்கி ஒருவர் வந்தார்

எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று

எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்

ஒன்றும் கேளாமல் சென்றார்

என்ன மாதிரி உலகம் பார் இது.

இப்படித்தான் ஞானக்கூத்தன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார்.  இக் கவிதையை படித்துவிட்டு எனக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அவரை நேரில் கூட பார்த்ததில்லை.  ஒரு முறை என் நண்பர் வைத்தியநாதன்தான், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆன்ந்த், காளி-தாஸ், ஆர். ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன் என்று ழ ஏட்டில் எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தினார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரையில் சந்திப்போம்.  நான் சந்தித்தபோது ழ என்ற சிற்றேடு ஏனோ வரவில்லை.  கவனம் என்ற பத்திரிகைதான்  வந்து கொண்டிருந்தது.  கவனம் பத்திரிகைக்கு ஞானக்கூத்தன்தான் ஆசிரியர்.  ழ நண்பர்களின் வட்டத்திற்குள்  ஆத்மாநாமின் தற்கொலை

பெரிய இடி.  அந்தத் தருணத்தில்தான் நான் திரும்பவும் ழ என்ற சிற்றேடு ஆதமாநாமிற்குப் பிறகு கொண்டுவர அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன்.

பல திறமையான கவிஞர்கள் ழ ஏட்டில் எழுதியிருந்தாலும், ஞானக்கூத்தன்தான் எல்லோருக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்.  எல்லோரும் கவிதையைக் குறித்து அவருடைய கருத்துக்களைக் கேட்காமல் இருக்கமாட்டார்கள்.  ஆத்மாநாமிற்குப் பிறகு வெளிவந்த ழ ஏட்டிற்கு அவர்தான் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முழுக்க முழுக்க ஞானக்கூத்தன் கவிதைகளைக் குறித்துப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார்.  நான் அவருடைய கவிதைகளின் வாசகன். அவர் கவிதை வரிகளைப் படித்துப் பரவசமடைபவன்.  தமிழ் கவிதை உலகத்தில் ஞானக்கூத்தன் போல் இன்னொருவர் எழுதுவாரா என்று தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பதற்கு வழி இல்லை என்றே எனக்குத் தோன்றும். ஏன் மற்ற மொழிகளில் கூட ஞானக்கூத்தன் போல் ஒரு கவிஞர் உண்டா என்பது சந்தேகம்தான்.  தமிழ் மொழியை அவர் பயன்படுத்துகிற மாதிரி யாராலும் பயன்படுத்த முடியாது.

நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 1988ல் தொடங்கினேன்.  அப்போது ஒவ்வொரு இதழ் நவீன விருட்சத்திலும் ஞானக்கூத்தனின் பங்கு இருந்துகொண்டு இருக்கும்.  அவரிடமிருந்து கவிதையை வாங்காமல் விருட்சம் இதழை முடிக்க மாட்டேன்.  ஏன் என்றால் ஞானக்கூத்தன் கவிதையை நேசிப்பவர், நானும் கவிதையை நேசிப்பவன்.

ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் üஅன்று வேறு கிழமைý.  இத் தொகுப்பு வெளிவர பல ஓவியர்கள் பங்குகொண்டு வித்தியாசமாக வந்த தொகுப்பு.  இலக்கியச் சங்கம் வெளியீடாக  வெளிவந்தது.  ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக இத் தொகுதியை அவருடைய நண்பர்கள் கொண்டு வந்தார்கள். என்னால் மறக்க முடியாத தொகுப்பு என்று ஞானக்கூத்தன் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஞானக்கூத்தனின் பிரச்னை என்ற கவிதை 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.  அக் கவிதையை இங்கு  படிக்க விரும்புகிறேன் :

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

இதுதான் ஞானக்கூத்தன்.  புதுமையும், வித்தியாசமான சிந்தனையும் உள்ளடக்கியது அவரது கவிதை. படிப்பவரை யோசிக்க வைப்பதோடு வித்தியாசமாக நினைக்க வைக்கிறது.

ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் எழுத்து பத்திரிகைக்குத்தான் தன் கவிதைகளை அனுப்பினார்.  ஆனால் எழுத்து அவருடைய கவிதைகளைப் பிரசுரம் செய்யவில்லை.  ஞானக்கூத்தன் ஒரு நேர் பேச்சில் இதை என்னிடம் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சி சு செல்லப்பா மீது கோபம் கூட வந்தது. ஞானக்கூத்தனின் திறமையை சி சு செல்லப்பா அறியவில்லை.  அப்போது எழுத்து பத்திரிகையில் எழுதிய பல கவிஞர்களிடையே ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  புதுமையான கவிஞர்.  அவர் கவிதைகளை நாம் வாசிப்பது மூலமாக இதை  நிச்சயமாக உணரலாம்.

ஞானக்கூத்தன் கவிதைகள் உண்மையாகவே சி மணி ஆரம்பித்த நடை பத்திரிகை மூலமாகத்தான் முதன் முதலாக பின்னாளில் வெளிவந்தன.  அப்போது அது வெளிவந்த சமயத்தில் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் பற்றியே பேச்சாக இருந்தது.

(ஆல் இந்தியா வானொலியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 72


கவிதை தலைப்பிடப் படாதது


ஆத்மாநாம்                            

                                           

இந்தக் கவிதை

எப்படி முடியும்

எங்கு முடியும்

என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது

என்றெனக்கத் தெரியும்

இது முடியும்போது

இருக்கும் (இருந்தால்) நான்

ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி

யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்

நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஓர் நம்பிக்கை

இருந்த நேற்று

எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்

கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்

தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்

செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்

கண்ணைப் பறிக்கும்

இருதயம்

இதோ இதோ என்று துடிக்கும்.

நன்றி : காகிதத்தில் கோடு – ஆத்மாநாம் – வெளியீடு : ழ, 39 ஈஸ்வரதாஸ் லாலா தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 – வெளியீடு : மே 1981 – விலை : ரூ.4 – பக்கங்கள் : 40

குறிப்பு :

மனதுக்குப் பிடித்தக் கவிதை பகுதியில் ஆத்மாநாமின் கவிதை ஒன்றை சேர்த்துள்ளேன்.  ஆறாம்தேதி ஆத்மாநாமின் நினைவு நாள்.  கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு மேல் ஓடிவிட்டது ஆத்மாநாம் மறைந்து.  03.12.1981 அன்று ஆத்மாநாம் கையெழுத்திட்ட அவர் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.  அது ஒரு இனிமையான மாலை பொழுது.   அவருடைய இந்தக் கவிதையை பலமுறை படித்திருக்கிறேன்.  ஏதோ விதமான சோகம் இந்தக் கவிதையில் ஒட்டிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்…

24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது. இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம். இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல் பகுதியாக வெளியிட்டேன். 28.06.2017 அன்று வெளியிட்டேன்.

அதன் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

 

 

வாசகசாலை முயற்சிக்கு வாழ்த்துகள்

 

வாசகசாலையின் கதையாடல் என்ற முதலாம் ஆண்டு விழா கூட்டம் நேற்று (01.07.2017) கன்னிமரா நுல்நிலையத்தில் மூன்றாவது தளத்தில் நடந்தது.  கூட்டத்தில் பேச நான், பரிசல் செந்தில்குமார், கணையாழியின் ஜீவ கரிகாலன் மூவரும் வந்திருந்தோம்.

கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம்.  கிட்டத்தட்ட 50 பேர்கள் வந்திருந்தார்கள்.  பாதி பேர்கள் பெண்கள்.  வழக்கம்போல் பத்திரிகைகளில் வந்திருந்த கதைகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள்.  அங்கு வந்த பெரும்பாலோர் வாசகர்கள்.  அவர்கள் பார்வையில் கதைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதுதான் இக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்.

இன்றைய சூழ்நிலையில் தமிழில் கதைகளை வெளியிடுகின்ற பத்திரிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.  பெரும் பத்திரிகைகள் கதைகளிலிருந்து விலகி துணுக்குகளாகப் போய் விட்டன.  நடுத்தரப் பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும்தான் சிறுகதைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு வாசகன் பத்திரிகையில் வருகிற கதையைப் படிக்கும்போதுதான் கதைக்கு உயிர் கிடைக்கிறது.  இன்றைய அவசர சூழலில் பத்திரிகையில் கதையைப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு.

இந்தத் தருணத்தில்தான் வாசகசாலையின் பங்கை முக்கியமாக நான் கருதுகிறேன்.  ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தும்போது இன்னும் பலரை கதைகளை வாசிக்கத் தூண்டுதலாக அமையும்.

1988ஆம் ஆண்டு நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது, எழுத்தாளர்களையும் புத்தகங்களையும்தான் அறிமுகப் படுத்தினேன்.  ஆனால் இது மாதிரி கதையாடல் என்ற ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியதில்லை.

விருட்சம் கூட்டத்திற்கும் வாசகசாலையின் கூட்டத்திற்கும் வித்தியாசம் அதிகமுண்டு.

– வாசகசாலை கூட்டத்திற்கு வருபவர்களில் பாதிப் பேர்கள்தான் விருட்சம் கூட்டத்திற்கு வருவார்கள்.

– விருட்சம் சார்பில் முதல் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்கு வயது 35க்குள் இருக்கும்.  ஆனால் அப்போதே என் கூட்டதிற்கு வரும்பவர்களின் வயது 45லிருந்து 50வயதிற்கு மேல் இருக்கும்.

– விருட்சம் கூட்டத்திற்கு பெண்களே வர மாட்டார்கள்.  இத்தனைக்கும் எளிதாக பஸ் கிடைக்கும் திருவல்லிக்கேணி தெற்கு மாடத்தெருவில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.

– ஆனால் மிகப் பெரிய எழுத்தாளுமைகள் விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்து கூட்டத்தைக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

– விருட்சம் கூட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.  நூறு ரூபாய்கூட செலவாகாது.  பேசுபவர்க்கு வழிச்செலவுக்குக் கூட பணம் தரப்பட மாட்டாது.  அதனால் கார்டில் கூட்டத்திற்கு அழைப்பு, மாடி அறை வாடகை, பின் குடிக்க தண்ணீர் வைக்க செலவு.  அவ்வளவுதான்.  ஆனால் கூட்டங்கள் நடக்க நடக்க செலவுகளும் கூடிக்கொண்டு போய்விட்டன.  இப்போது ஒரு கூட்டம் நடத்தினால் ரூ.1000 வரை செலவாகும்.  முன்பு காசெட்டில் கூட்டத்தைப் பதிவு செய்வேன்.  இப்போது சோனி வாய்ஸ் ரிக்கார்டில் எங்கே உட்கார்ந்தாலும் பதிவு செய்ய முடிகிறது.  அப்போது நடந்த பெரும்பாலான கூட்டங்களில் மைக் வசதி கிடையாது.  பேச வருபவர்கள் சத்தமாகப் பேச வேண்டும்.  இப்படியே நான் 200 கூட்டங்களுக்கு மேல் நடத்திவிட்டேன் இன்றுவரை.

என் கூட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொள்ள வர, பலரை பேச அழைப்பேன்.  கூட்டத்திற்கு வரும் பாதிபேர்கள் பேசுபவர்களாக இருப்பார்கள்.

இப்போது நடக்கும் வாசகசாலை இலக்கியக்கூட்டங்களில் இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது.  சென்னையில் பல இடங்களில் முக்கியமாக நூல்நிலையங்களில் கூட்டம் நடத்துகிறார்கள்.  கட்டுக்கோப்பாக பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.  ஒரு மாதத்தில் பாதி நாட்கள் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.  பரிசல் செந்தில் குறிப்பிட்ட மாதிரி தினமும் கூட அவர்களால் கூட்டம் நடத்த முடியும்.

விருட்சம் கூட்டத்தைக் கூட அவர்களுடன் சேர்ந்து நடத்தலாமென்று நினைத்தேன்.  பின் என் முடிவை மாற்றிக்கொண்டு விட்டேன்.  ஏனென்றால் விருட்சம் என்ற பெயரைச் சேர்த்தால் அவர்கள் கூட்டத்திற்கு வரும் எண்ணிக்கைக் குறைந்து போக வாய்ப்புண்டு. மேலும் அவர்களும் விருட்டசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இக் கூட்டங்களை சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் கார்த்திகேயனுக்கும், அருணுக்கும்  என் வாழ்த்துகளை மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.   நேற்று இப்படித்தான் நான் பேசினேன்.

கதையாடல் மாதிரி கவிதையாடல் என்ற ஒன்று கொண்டு வரலாமென்று தோன்றியது.  ஆனால் கவிதைக்காக நடத்தும் கூட்டம் மோசமாக இருக்கும்.  தேர்வு செய்து குறிப்பிட்ட சிலரை மட்டும் கவிதைகள் வாசிக்க அழைக்க வேண்டும்.  கலந்து கொள்பவர்கள் எல்லோரும் கவிதை வாசிக்கக் கூடாது.  பார்வையாளராகத்தான் கலந்து கொள்ள வேண்டும்.. ஒரு குழு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கவிதைகள் எழுதியவரை மட்டும் வாசிக்கச் சொல்லலாம்.