கோல வடையைச் சாப்பிடாமல் வந்து விட்டேன்….

 

28ஆம் தேதி இரவு காவேரி எக்ஸ்பிரஸில் பங்களூர் சென்றேன்.  நானும் மனைவியும்.  பங்களூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம்.  அது 30ஆம் தேதி நடக்க உள்ளதால், 29 ஆம் தேதி மகாலிங்கம் என்ற நண்பருடன் காலை 10 மணி சுமாருக்கு பங்களூர் வலம் வந்தேன்.

நான் முன்பெல்லாம் வந்தால், ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு எழுத்தாள நண்பர்களை சந்திப்பது வழக்கம்.  இப்போது அதெல்லாம் முடிவதில்லை.  அதனால் ஒரு சிலரை மட்டும் சந்திக்க முடிகிறது.  இந்த முறை பாவண்ணனையும், ஸிந்துஜாவையும் சந்தித்தேன். முன்பு போல் பங்களூர் இல்லை என்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  மெட்ரோ ரயிலில் கொஞ்சம் சீக்கிரம் போய்விடலாம். மகாலிங்கம் என்ற நண்பர் மட்டும் இல்லாவிட்டால் என்னால் எங்கும் செல்ல முடியாது.  அலுப்பே காட்டாமல் அவர் எல்லா இடத்திற்கும் என்னை அழைத்துக்கொண்டு போய்விடுவார்.  பங்களூரில் எதாவது ஓட்டலுக்குச் சென்று எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டோம்.  அதேபோல் புத்தகக் கடைகளுக்குப் போகாமல் இருக்க மாட்டோம்.

மகாலிங்கம் தாடி வைத்துக்கொண்டிருப்பார்.  அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.  ‘நீங்க தாடி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.  சாப்பிடும்போது சாப்பாட்டுத் துணுக்கெல்லாம் ஒட்டிக் கொள்ளாதா?’

அவர் சிரித்துக்கொண்டே, ‘ஒட்டிக்கொள்ளாது,’ என்று கூறினார். ‘நான் ஷேவ் செய்யாமல் இருப்பதால் என் முகத் தாடை மென்மையாக இருக்கும்,’  என்றார்.

மகாலிங்கம் பேசுவதற்கும் பழகுவதற்கும் நல்ல மனிதர்.  பஙகளூர் சென்றால் மற்றவர்களைப் பார்க்கிறேனோ இல்லையா குறைந்தபட்சம் மகாலிங்கத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  மேலும் அவர் சென்னை வந்தால் என்னைக் கட்டாயம் பார்ப்பார்.  ஆனால் மிகக் குறைந்த நேரமே சென்னையில் பார்ப்பார்.  அவருக்குச் சென்னையில் ஏகப்பட்ட நண்பர்கள்.

மகாலிங்கத்துடன் நான் பாவண்ணனைப் போய்ப் பார்த்தேன்.  மெட்ரோ ரயிலில் அழைத்துப் போனார்.  பாவண்ணன் ஒரு கடுமையான உழைப்பாளி. அலுவலகத்தில் அவரைச் சந்தித்தாலும் அவர் கவனமெல்லாம் அலுவல் விவகாரமே சுற்றிக்கொண்டிருந்தது.

பாவண்ணனைப் பார்த்து நான் சொன்னேன் : ‘நான் பத்து கேள்வி பத்து பதில் என்ற ஒன்றை எடுத்து வருகிறேன்.  இதுவரை 10 பேர்களைக் கேட்டு விட்டேன்.  உங்களையும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.’ அவரும் ஒப்புக்கொண்டார்.

அவர் அலுவலகத்தில் வெளிய உள்ள புல்வெளியில் அவரைப் பேட்டிக் கண்டேன்.  அவர் நின்று கொண்டே பதில் சொன்னார்.  அன்றே நான் இன்னொரு எழுத்தாள நண்பரைச் சந்திக்க நினைத்தேன்.  அவர் வேற யாருமில்லை.  ஸிந்துஜா.  ஆனால் சந்திக்க முடியவில்லை.

நானும் மகாலிங்கமும் மெட்ரோ ரயிலில் ப்ளாசம்ஸ் என்ற பழைய புத்தகக் கடைக்குச் சென்றோம்.  பழையப் புத்தகக் கடை என்றாலும்.  விலை மலிவாக இல்லை.  மூன்று புத்தகங்களை அங்கு வாங்கினேன்.  ஓராம் பாமுக், ஐ பி ஸிங்கர், மாப்பசான் புத்தகங்களை வாங்கினேன்.  பக்கத்தில் இன்னொரு பழைய புத்தகக் கடை இருந்தது.  அது ப்ளாசம்ஸ் விட பிரமாதம்.  புக் வோர்ம்ஸ் என்று அதன் பெயர்.   அங்கும் போய் முராகாமியின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன் (நான் போஸ்டல் காலனியில் புத்தகங்களைக் கொண்டு வைத்துவிட்டதால் புத்தகங்களின் பெயர்களை எழுத முடியவில்லை).  பத்து கேள்வி பத்து பதில் பகுதியில் நான் மகாலிங்கத்தையும் பேட்டி எடுக்க விரும்பினேன்.  ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.  பின் நான் உறவினர் வீட்டிற்கு திரும்பி வரும்போது மணி ஏழாகிவிட்டது.

பங்களூரில் எனக்குப் பிடித்தது கோல வடை என்ற ஒன்று.  இதை அதிகமாக வாங்கிக்கொண்டு சாப்பிட  வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் மல்லேஸ்வர ரோடில் அந்தக் கடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.  ஹரமாவ் என்ற இடத்தில் தங்க நேர்ந்ததால் மல்லேஸ்வரத்திலிருந்து காரில் நாங்கள் அங்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.

திருமண நிச்சயதார்த்தம் அன்று அதாவது 30ஆம் தேதி சிந்துஜாவை சந்தித்தேன்.  அன்றே சதாப்தி என்ற துரித ரயிலில் நான் கிளம்பி வர நேரிட்டது.  ஸிந்துஜாவை பேட்டி எடுக்க முடியவில்லை.

கதையை வாசகனிடம் முடித்து விடுகிறார்

 

முதன் முதலாக அசோகமித்திரன் கதையான ரிக்ஷாவைத்தான் படித்தேன். இக் கதை 1965 ல் அசோகமித்திரன் எழுதிய கதை. அப்போது எனக்கு வயது 12. நான் கிட்டத்தட்ட இன்னும் 10 வருடங்கள் கழித்து தி நகரில் உள்ள நூல்நிலையத்திலிருந்து அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையைப் படித்தேன். இந்தக் கதை 3 பக்கங்களில் முடிந்து விடும்.
இக் கதை முழுவதும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது.
நான் அதுவரை படித்தக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் இருந்தது அவர் கதை. இப்படிச் சொல்வதால் நான் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் புறக்கணிக்கவில்லை.
ரிக்ஷா என்ற கதையில் பையன் ரவி ரிஷ்கா என்கிறான். அவனுக்கு ரிக்ஷா என்று சொல்ல வரவில்லை. அவனை ரிக்ஷா சொல்லும்படி வற்புறுத்துகிறார். பல முயற்சிக்குப் பிறகு அவன் ரிக்ஷா என்று சொல்ல வராமல் தடுமாறுகிறான். அப்பா அவனை திருத்த முயற்சித்துத் தோல்வியைத் தழுவுகிறார்.
இந்தக் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது.
உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது.
இந்தக் கதையைப் படிக்கும்போது இப்படி ஒரு வரியை எழுதியிருக்கிறாரே என்று அசந்து விட்டேன். அன்றிலிருந்து அசோகமித்திரன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். நான் மற்ற எழுத்தாளர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தவறுவதில்லை. ஆனால் அசோகமித்திரன் மீது எனக்கு அலாதியான மரியாதை. மதிப்பு. யாரிடமாவது பேசும்போது நான் அசோகமித்திரன் கதையைப் படிப்பேன் என்று சொல்வேன். என் ஞாபகத்திலிருந்து அகலாமல் இருக்கும் ரிக்ஷா கதையைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பேன். அதை ஒரு குறும்படமாகக் கூட எடுக்க என் ஆசை. ஐந்து நிமிடங்களில் இப் படத்தை எடுத்து விடலாம். இந்தக் கதையை அவர் 10965ல் எழுதி உள்ளார். கதையை எழுதியிருந்த ஆண்டில் என் வயது 12தான். ஆனால் கல்லுரியில் படிக்கும் சமயத்தில்தான் இந்தக் கதையைப் படித்தேன். அதுவும் அவருடைய கதைப் புத்தகத்தை புத்தகச் சாலையில் வாங்கி வந்து படித்தேன்.
அசோகமித்திரன் எழுத்து நடையைப் பார்க்கும்போது அவர் சொற்களை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார். உண்மையில் இரண்டு உத்திகளை அவர் கதைகளில் பயன்படுத்துவதாக நினைக்கிறேன். ஒன்று சொற் சிக்கனம். இரண்டாவது கதையில் எதாவது சொல்வார் என்று நினைக்கும்போது நழுவிப் போகிற தன்மை. புதியதாக அசோகமித்திரன் கதையைப் படிப்பவனுக்கு அவர் என்ன எழுதுகிறார் என்பது அவ்வளவு சுலபமாகப் புரியாது.
உதாரணமாக ரிக்ஷா என்ற கதையை இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு வரியை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது என்ற வரிதான் அது.
ரிக்ஷாவில் போய்விட்டு வா என்றேன் என்கிறான் கணவன். மனைவி கேட்கிறாள்: ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி காதில் விழுந்தது. என்று.
இந்த இடத்தில் அசோகமித்திரன் கதையை முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் கூட ஒரு வரி வருகிறது. நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருக்கிறான். .
இந்தக் கதையைப் படிக்கும்போது எந்த இடத்தில் அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை நாம் கொண்டு போய் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உலகத் தரமான எழுத்தாளராகத்தான் அவர் எனக்குத் தென் படுகிறார்.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் அவர் கதை ஒவ்வொன்றையும் வாசகனிடம் முடித்து விடுகிறார். அவர் கதையைப் படித்த வாசகன்தான் கதையைப் படித்த பரவசத்துடன் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நூறு கிராமுக்கு மேலே போகக்கூடாது…

நான் நவீன விருட்சம் 102வது இதழை இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  கிட்டத்தட்ட 90 சதவிதம் அனுப்பி இருப்பேன். இந்த இதழ் 114 பக்கங்கள் கொண்ட அசோகமித்திரன் இதழ்.  இதழ் 120 கிராம் எடை கொண்டிருந்தது.  ஒரு இதழ் அனுப்ப ரூ.4 தபால் தலைகள் ஒட்டி அனுப்பியிருந்தேன்.  கிட்டத்தட்ட 70 பிரதிகள் ஒரு நாளும் பின் இன்னொரு நாளில் 50 பிரதிகள் அனுப்பி இருந்தேன்.  தபால் சார்டிங் அலுவலகத்திலிருந்து போன் வந்தது.  üநீங்கள் ரு.5 தபால் தலை ஒட்ட வேண்டும்,ý என்று சொன்னார்கள்.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் விதம் 120 கிராமிற்கு 4 ரூபாய் போதும் என்று எண்ணியிருந்தேன்.  நான் அவர்களிடம் அப்படித்தான் சொன்னேன்.  அவர்கள் ஒப்புக்கொள்ளவில்ûடில.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் ஆனால் அதற்கு மேல் மூன்று ரூபாய் அதிகமாக ஒட்ட வேண்டும்.  ஐந்து ரூபாய் ஆகும் என்றார்கள்.

வேற வழி இல்லாமல் ஒரு ருபாய் கூடுதலாக  ரூ.120 பணம் கட்டினேன்.  அப்போதுதான் ஒன்று நினைத்தேன்.  ஏனோ தபால்தலை மட்டும் ஐந்து ரூபாய் ஒட்டுகிறோமே என்று.  எனக்கு மனசே இல்லை.  முதல் இதழ் நவீன விருட்சம் கொண்டு வந்தபோது இதழ் விலை ரூ.1.50.  ஆண்டுச் சந்தா ரூ.5 தான்.

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறுபத்திரிகை நடத்தும் நான், சில அடிப்படையான உண்மைகளை உணர வேண்டுமென்று நினைத்தேன்.

100 கிராமுக்குக் கீழ்தான் இனி இதழ் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தேன்.   அப்போதுதான் தபால் தலை ரூபாய் இரண்டுடன் முடிந்து விடும்.

இன்னொரு உண்மையையும் உணர்ந்து கொண்டேன்.  750 பிரதிகள் அச்சடிக்கக் கூடாது என்ற உண்மை.  போன ஜனவரி மாதம் 101வது இதழ் கொண்டு வரும்போது புத்தகக் கண்காட்சியை ஒட்டிக் கொண்டு வரும்படி நேர்ந்தது.  அதனால் 750 பிரதிகள் அடித்தேன்.  ஆனால் இப்போது தேவையில்லை.  நான் 500 பிரதிகளுடன் நிறுத்தி இருக்க வேண்டும்.  தவறு செய்து விட்டேன்.  வெயில் கடுமையாக இருந்ததால் பத்திரிகையை எடுத்துக்கொண்டு போகவே என்னால் முடியவில்லை.  அதனால் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலக்கியக் கூட்டங்களிலும் பார்ப்பவர்களிடம் நவீன விருட்சம் 102வது இதழை நீட்டிக்கொண்டிருந்தேன்.

116 பக்கங்கள் கொண்ட விருட்சம் 102வது இதழின் விலை ரு.20தான் இது மிக மிகக் குறைவான தொகை.  நான் எப்போதும் பத்திரிகையை இன்றைய சந்தாதாரர்கள் நேற்றைய சந்தாதாரர்கள் அல்லது எப்போதோ சந்தாதாரர்களுக்கு அனுப்புவேன்.  இலவசமாக பலருக்கு அனுப்புவேன்.  அப்படியும் இதழ் பிரதிகள் மீந்து விடும்.

102வது இதழ் மட்டும் 100 பிரதிகளுக்கு மேல் மீந்து விடும். நான் இனிமேல் 100கிராமுக்குக் கீழ்தான் கொண்டு வர வேண்டும்.  மேலும் 500 பிரதிகளுக்கு மேல் தாண்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

பல சிறுபத்திரிகைகளைப் பார்த்து சிறு பத்திரிகையின் பால பாடத்தைக் கற்றுக்கொண்டவன்.   என்னை அறியாமல் நானே மீறி விட்டேன்.

நாளை நடைபெறப் போகிற கூட்டம்

சாகித்திய அகாதெமி நாளை சிறுகதை மேதை அசோகமித்திரனுக்குப் புகழஞ்சலி என்ற கூட்டம் ஒன்றை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துகிறது.

 இக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சா கந்தசாமி. பங்கேற்போர் இராம. குருநாதன், அழகியசிங்கர், அம்ஷன்குமார். அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனின் ஆவணப்படத்தைத் திரையிட உள்ளார்கள். இக்கூட்டம் சாகிகத்திய அகாதெமி சென்னை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 2ஆம் தளம், 443 குணாவளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. அனைவரும் வருக.

நண்பர்களே,

வணக்கம்.

 

சமீபத்தில் நான் தில்லி சென்றிருந்தேன். நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை பி ஏ கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்ல். வழக்கம்போல் அவரைப் பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் தலைப்பில் அவருடைய இந்தப் பேட்டி வெளி ஆகிறது. மிகக் குறைவான பேர்களே இதைப் பார்த்து ரசித்தாலும் இந்த முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன். இப்பேட்டி நடுவில் வெங்கட்ராமனும் கிருஷ்ணனிடம் சில கேள்விகள் கேட்டிருப்பார்.

பி ஏ கிருஷ்ணன் இது வரை 5 புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் கொண்டு வந்துள்ளார். அவருடைய புகழ்பெற்ற நாவல் புலி நகக் கொன்றை. முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளிவந்த நாவல். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதக் கூடியவர். அவருடைய புத்தகப் பட்டியலை இங்கு அளிக்கிறேன் : 1. புலி நகக் கொன்றை 2. கலங்கிய நதி 3. திரும்பிச் சென்ற தருணம் 4. மேற்கத்திய ஓவியங்கள் 5. அக்கிரகாரத்தில் பெரியார். இது என்னுடைய பத்தாவது பேட்டி.

 

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா?   

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது.  திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.   

நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும் நல்ல முறையில் அறிமுகம் செய்வவது முக்கியம்.  அதைச் சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்திக் காட்டியவர் திருப்பூர் கிருஷ்ணன்.  எதிர்பார்க்காமலேயே நல்ல கூட்டம் அன்று.  சனி ஞாயிறுகளில் சென்னை மாநகரத்தில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வந்திருந்து சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.   

அவர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்துள்ளேன்.  இதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  எல்லோரும் கேட்டு மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தந்தையர் தினம்

 

சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.  ஆனால் முன்னதாகவே அவருக்குத் தெரியாமல் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.  ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது தெரியவில்லை.  இன்று தந்தையர் தினம் என்பதால் அந்தக் கவிதையை நீங்கள் வாசிக்க இங்கே அளிக்கிறேன்.

அப்பா

அப்பா சொன்னார் :

குட்மார்னிங்

சரிதான்

காலையில் காஃபியைச்

சுடச்சுட குடிப்பார்

சரிதான்

முன்னாள் முதல்வர்

கருணாநிதி மாதிரி பேசுவார்

சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்

பார்த்து

நலமா என்று கேட்பார்

சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்

நலமுடன் வாழ்க என்பார்

சரிதான்

கண்ணாடி இல்லாமல்

பேப்பர் படிப்பார்

சரிதான்

தடியை ஊன்றி தானே

நடைபயிற்சி செய்வார்

சரிதான்

தரையில் அமர்ந்து

காய்கறி நறுக்குவார்.

சரிதான்

யார் உதவி இல்லாமலும்

தன் துணிகளை

தானே துவைப்பார்

சரிதான்

சத்தமாக மெய்மறந்து

பாட்டுப்பாடுவார் ஒரு பாடகர்போல்

சரிதான்

91வயதில் தானே

ஷேவ் செய்து

கொள்வார்

சரிதான்

டிவி முன் சீரியலை

விழுந்து விழுந்து ரசிப்பார்

சரிதான்

படுக்கையை விரித்து

தானே படுப்பார்

சரிதான்

ஆனால் என் 59வது வயதில்

என் தலைமை அலுவலகத்திற்குப்

போன் பண்ணி

என்னை மாம்பலம் கிளைக்கு

மாற்றச் சொல்லி கெஞ்சுகிறாரே

அதுதான் சரியில்லை………..

 

விருட்சம்  இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம்

நாளை நடைபெற உள்ள விருட்சம் இலக்கியச் சந்திப்பின் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் முன், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒவ்வொருவராக பேச அழைக்கலாமென்று நினைத்தேன்.  திரூப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பேச அழைக்குமுன் அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் அவர் நானும் என் எழுத்தும் வேண்டாம்.  நானும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசலாம் என்று குறிப்பிட்டார்.  திரும்பவும் யோசிக்கும்போது நானும் ஜானகிராமனும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்றார்.  நான் சொன்னேன்.  நானும் தி ஜானகிராமனும் என்று போடலாமென்று சொன்னேன்.  பின் திருப்பூர் கிருஷ்ணன் அதையும் மாற்றி தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்ற குறிப்பிட்டடுள்ளார்.

அதே சமயத்தில் எனக்குள் இன்னொரு எண்ணம் தோன்றியயது.  இதே மாதிரி தலைப்பை வைத்துக்கொண்டு அதாவது ஜெயகாந்தனும் நானும், கு அழகிரிசாமியும் நானும், அசோகமித்திரனும் நானும், ஞானக்கூத்தனும் நானும் என்று பொதுவான தலைப்பில் என் எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டுப் பேசச் சொல்வதோடல்லாம் இதைப் பதிவு செய்து அப்படியே புத்தகமாகக் கொண்டு வர இயலுமா என்றும் யோசிக்கிறேன். கூட்டம் எப்படி நடக்க உள்ளது என்பது தெரியாது.  நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 71

உங்கள் வீட்டு முயல்குட்டி

 

 

பெருந்தேவி                                                                   

                                                                                                                  

நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள்

சற்று பொறாமையாக இருந்தது

அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள்

சற்று சந்தேகமாக இருந்தது

அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்

கண்டதாகக் கூறினீர்கள்

சற்று ஆச்சரியமாக இருந்தது

அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்

தொடவேண்டும் போலிருந்தது

தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட

கடவுளால் மட்டுமே முடியும் என்றீர்கள்

கடவுள்மேல் சற்று நம்பிக்கைகூட வந்தது

வெல்வெட் துண்டு அதன் காது என

வர்ணீத்தீர்கள்

வெல்வெட் வெல்வெட் என்று

சொல்லிப் பார்த்துக்கொண்டேன்

அது கேரட்டைக் கடிக்கும் அழகுக்குத்

தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்

என் தலையையும் கூடவே தரத்

தயாராக வைத்திருந்தேன்

இன்றுதான் உங்கள் முயலை

முதன்முதலில் பார்த்தேன்

என் வீட்டுச் சுற்றுச் சுவரில்

ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது

என்னவாகவும் இருக்கட்டுமே

உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொண்டு

நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்

நன்றி : வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – பக்கம் : 112 – விலை : 100 – முதல் பதிப்பு : டிசம்பர் 2016 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – தொலைபேசி எண்: 9444113205 – 9176613205

பின் குறிப்பு : 

பெருந்தேவியின் முதல் கவிதை விருட்சம் இதழில்தான் பிரசுரமானது.  ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.  சமீபத்தில் அவருடைய இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  ஒரு தொகுப்பின் பெயர் அழுக்கு சாக்ஸ். மே 2016ல் இத்தொகுப்பு வந்தது.  அந்த முறை புத்தகக் கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆன புத்தகம் இது.  ஒரு கவிதைத் தொகுதி இந்த அளவிற்கு விற்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.  உடனேயே அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியான வாயாடிக் கவிதைகளையும் டிசம்பர் 2016ல் கொண்டு வந்துள்ளேன்.  ஒரே ஆண்டில் பெருந்தேவியின் இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  குறிப்பிடும்படியான பெண் கவிஞர் பெருந்தேவி.  அவர் கவிதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியாகவும் மேலும் விதவிதமான உணர்வுகளை கவிதை மூலம் உருவாக்குவதிலும் பெரும் வெற்றி அடைந்துள்ளன.  ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் வேறு வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  வாயாடிக் கவிதைகள் தொகுதி அழுக்கு சாக்ஸ் கவிதைத் தொகுதியை விட வித்தியாசமான தொகுப்பு.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 70

மிதிவண்டித் திருடன்

 

ராணிதிலக்

                                                                                                              

மாட்டி இருக்கவேண்டிய இடத்தில் சாவி இல்லை.  தேடத் தொடங்கினேன்.  எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத ஒருவன் அந்தத் தெருவில் பிறந்து, இந்தத் தெருவில் நுழைகிறான்.  நான் சாவியைத் தேடுகிறேன்.  பூட்டப்படாத வண்டியைத் தொடுகிறான். நான் சாவியைத் தேடுகிறேன்.  திறந்த தெருவில் ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான்.  சாவி எனக்குக் கிடைத்து விட்டது.  பூட்டின கதவைத் திறந்து, வெளியே பார்த்தேன்.  தன்னைப் பூட்டிக்கொண்டு வண்டி நிற்கிறது.  நெருக்கமான சாலையில், யாருடைய வண்டிகளையோ, யார் யாரோ ஓட்டியபடி மறைகிறார்கள்.  அவர்களுக்கு இடையில், என் கற்பனையில் காணாமல் போன மிதிவண்டியை, இன்னும் பிறக்காத, இப்போது எங்கோ வாழ்கிற, எப்போது இறந்த, நான் பார்த்து, யாரும் பார்க்காத ஒருவன், எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத மிதிவண்டியை, பூமியின் எல்லா சாலைகளிலும் ஓட்டிக்கொண்டே இருக்கிறான்.  சாவித் திறந்து விட்டது.  அவன் ஓட்டுவரை நிறுத்தவே இல்லை.

நன்றி : நாகதிசை – கவிதைகள் – ராணிதிலக் – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்றை 600 018 – பக்கங்கள் : 80 – விலை : 40 ரூபாய்  

பின் குறிப்பு : 

ஸ்ரீ நேசனும், ராணிதிலக்கும் நண்பர்கள். கவிதைகள் எழுதுபவர்கள். இருவரையும் அப்போதெல்லாம் அடிக்கடி பார்ப்பேன். இப்போது இல்லை. இருவர் கவிதைகளையும் ஒரு முறை என் வீட்டு மொட்டை மாடியில் தென்னங்கீற்று நிழலில் அவர்கள் மூலம் வாசிக்கக் கேட்டேன். உடனே விருட்சத்தில் அவற்றை பிரசுரித்தேன்.  அவர்களுடைய நண்பர்களின் கவிதைகளையும் பிரசுரம் செய்தேன். இருவரும் திறமையான கவிஞர்கள்.  ஸ்ரீ நேசன் நேரிடையாக கவிதைக்கு வந்து விடுவார்.  ராணி திலக் அப்படி இல்லை.  ஆனால் நாகதிசை என்ற இத் தொகுதி வித்தியாசமாக இருக்கிறது.

க நா சு, நகுலன் பாணியில் வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.  அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன்.