ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 1

ஞானக்கூத்தனின் ஒரு கவிதையை நான் எப்போதும் மின்சார வண்டியில் என் அலுவலகத்திற்கு பயணம் செல்லும்போது ரசித்துக் கொண்டிருப்பேன்.  அந்தக் கவிதை இதோ:

என்ன மாதிரி என்பது அக் கவிதை.

என்னை நோக்கி ஒருவர் வந்தார்

எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று

எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்

ஒன்றும் கேளாமல் சென்றார்

என்ன மாதிரி உலகம் பார் இது.

இப்படித்தான் ஞானக்கூத்தன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார்.  இக் கவிதையை படித்துவிட்டு எனக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அவரை நேரில் கூட பார்த்ததில்லை.  ஒரு முறை என் நண்பர் வைத்தியநாதன்தான், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆன்ந்த், காளி-தாஸ், ஆர். ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன் என்று ழ ஏட்டில் எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தினார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரையில் சந்திப்போம்.  நான் சந்தித்தபோது ழ என்ற சிற்றேடு ஏனோ வரவில்லை.  கவனம் என்ற பத்திரிகைதான்  வந்து கொண்டிருந்தது.  கவனம் பத்திரிகைக்கு ஞானக்கூத்தன்தான் ஆசிரியர்.  ழ நண்பர்களின் வட்டத்திற்குள்  ஆத்மாநாமின் தற்கொலை

பெரிய இடி.  அந்தத் தருணத்தில்தான் நான் திரும்பவும் ழ என்ற சிற்றேடு ஆதமாநாமிற்குப் பிறகு கொண்டுவர அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன்.

பல திறமையான கவிஞர்கள் ழ ஏட்டில் எழுதியிருந்தாலும், ஞானக்கூத்தன்தான் எல்லோருக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்.  எல்லோரும் கவிதையைக் குறித்து அவருடைய கருத்துக்களைக் கேட்காமல் இருக்கமாட்டார்கள்.  ஆத்மாநாமிற்குப் பிறகு வெளிவந்த ழ ஏட்டிற்கு அவர்தான் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முழுக்க முழுக்க ஞானக்கூத்தன் கவிதைகளைக் குறித்துப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார்.  நான் அவருடைய கவிதைகளின் வாசகன். அவர் கவிதை வரிகளைப் படித்துப் பரவசமடைபவன்.  தமிழ் கவிதை உலகத்தில் ஞானக்கூத்தன் போல் இன்னொருவர் எழுதுவாரா என்று தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பதற்கு வழி இல்லை என்றே எனக்குத் தோன்றும். ஏன் மற்ற மொழிகளில் கூட ஞானக்கூத்தன் போல் ஒரு கவிஞர் உண்டா என்பது சந்தேகம்தான்.  தமிழ் மொழியை அவர் பயன்படுத்துகிற மாதிரி யாராலும் பயன்படுத்த முடியாது.

நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 1988ல் தொடங்கினேன்.  அப்போது ஒவ்வொரு இதழ் நவீன விருட்சத்திலும் ஞானக்கூத்தனின் பங்கு இருந்துகொண்டு இருக்கும்.  அவரிடமிருந்து கவிதையை வாங்காமல் விருட்சம் இதழை முடிக்க மாட்டேன்.  ஏன் என்றால் ஞானக்கூத்தன் கவிதையை நேசிப்பவர், நானும் கவிதையை நேசிப்பவன்.

ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் üஅன்று வேறு கிழமைý.  இத் தொகுப்பு வெளிவர பல ஓவியர்கள் பங்குகொண்டு வித்தியாசமாக வந்த தொகுப்பு.  இலக்கியச் சங்கம் வெளியீடாக  வெளிவந்தது.  ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக இத் தொகுதியை அவருடைய நண்பர்கள் கொண்டு வந்தார்கள். என்னால் மறக்க முடியாத தொகுப்பு என்று ஞானக்கூத்தன் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஞானக்கூத்தனின் பிரச்னை என்ற கவிதை 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.  அக் கவிதையை இங்கு  படிக்க விரும்புகிறேன் :

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

இதுதான் ஞானக்கூத்தன்.  புதுமையும், வித்தியாசமான சிந்தனையும் உள்ளடக்கியது அவரது கவிதை. படிப்பவரை யோசிக்க வைப்பதோடு வித்தியாசமாக நினைக்க வைக்கிறது.

ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் எழுத்து பத்திரிகைக்குத்தான் தன் கவிதைகளை அனுப்பினார்.  ஆனால் எழுத்து அவருடைய கவிதைகளைப் பிரசுரம் செய்யவில்லை.  ஞானக்கூத்தன் ஒரு நேர் பேச்சில் இதை என்னிடம் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சி சு செல்லப்பா மீது கோபம் கூட வந்தது. ஞானக்கூத்தனின் திறமையை சி சு செல்லப்பா அறியவில்லை.  அப்போது எழுத்து பத்திரிகையில் எழுதிய பல கவிஞர்களிடையே ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  புதுமையான கவிஞர்.  அவர் கவிதைகளை நாம் வாசிப்பது மூலமாக இதை  நிச்சயமாக உணரலாம்.

ஞானக்கூத்தன் கவிதைகள் உண்மையாகவே சி மணி ஆரம்பித்த நடை பத்திரிகை மூலமாகத்தான் முதன் முதலாக பின்னாளில் வெளிவந்தன.  அப்போது அது வெளிவந்த சமயத்தில் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் பற்றியே பேச்சாக இருந்தது.

(ஆல் இந்தியா வானொலியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன