ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 5

பொதுவாக ஞானக்கூத்தன் கவிதைகளில் சமூக அக்கறை, தத்துவார்த்த சிந்தனை என்றெல்லாம் உண்டு.  எல்லாக் கவிதைகளிலும் அவர் எள்ளல் உணர்வோடு கிண்டலடித்து எழுதி உள்ளார்.  விடுமுறை தரும் பூதம் என்ற கவிதையை எடுத்துக்கொண்டால், அதன் எள்ளல் தன்மை நம்மை ஆச்சரியப்படுத்தும்.  ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் என்கிறார். எள்ளல் தன்மையுடன் ஆரம்பிக்கும் இக் கவிதை சற்று கடுமையாகப் போய் முடிகிறது.  அவருக்கு பணிபுரிவது ஒரு கசப்பான அனுபவமாக இருந்திருக்கிறது.

ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் கற்பனை செய்து கவிதை எழுதுவார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.  உதாரணமாக சில கோரிக்கைகள் என்ற கவிதையைப் படித்தால்  முதலில் இப்படி ஆரம்பிக்கிறார் கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய் என்று.  பின் முடிக்கும்போது இப்படி சொல்கிறார். இப்போதைக் கொன்று சொல்கிறேன்.  பொத்துப் பொத்தென்று நம்பிக்கை மூட்டைகளை இப்படித் தட்டாதே மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில் என்கிறார். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரண வாழ்க்கை. இருப்பதற்கு சொந்த இடம் கூட இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை.  ஆனால் கட்டப் போகும் மாளிகையைப் பற்றி வேண்டுமென்றே கவிதை எழுதுகிறார்.  அதில் தென்படுகிற அங்கத சுவையைப் பற்றி கவிதை விவரிக்கிறது.   நீங்கள் படித்தால்தான் இந்த அங்கத உணர்வை உணரமுடியும். அவர் கவிதைகளைப் பற்றி சொல்கிறவர்கள், அவருடைய ஆரம்பக் காலக் கவிதைகளைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள்.   ஏனென்றால் யாரும் முழுவதுமாக யாருடைய கவிதைகளையும் படிப்பதில்லை.  ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை மனதாரப் பாராட்டுவதில்லை.    ஆரம்ப காலத்தில் இருந்து கவிதைகளைப் பற்றியே சிந்தித்து கவிதைகளையே எழுதிக்கொண்டு வந்தவர் ஞானக்கூத்தன்.  சமீபத்தில் வந்த இம்பர் உலகம் என்ற அவர் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது கவிதைத்தன்மையை  எந்த அளவிற்கு சுலபமாக அவர் மாற்றி உள்ளார் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

சமீபத்தில் வந்த அவருடைய கவிதைத் தொகுதியான இம்பர் உலகம் படிக்கும்போது கநாசு பாணியில் இன்னும் கவிதையை எளிதாக மாற்றி விட்டார். உதாரணமாக ஒரு கவிதையை இங்கு கூற விரும்புகிறேன்.

இக் கவிதையின் தலைப்பு : கணுக்ககாலில் கொஞ்சம் வீக்கம்.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்

நாற்பது வயதக்காரர்

ஊழல் ராமசாமித் தெருவில் சற்று

பெரியதான க்ளினிக் வைத்திருந்தார்

ஒரு மின்விசிறி

இரண்டு பெஞ்ச்சுகள்

இரண்டு வரிசைகள்

டோக்கன் கொடுக்க ஒரு மடந்தை

அவர் சொன்னார்

நோயாளிகள் சிலபேர் அவரைத்

தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்

படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்

நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்

வலது கணுக்காலில் வீக்கம் வந்ததென்பார்களாம்

ஆபிரேஷனுக்குக் குறித்த நாளை

மாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்வார்களாம்

ஏனென்று கேட்டால்

நாலு சாமியைக் கும்பிட்டால்தானே

உங்கள் கையில் ஆபரேஷன் செய்யலாம்

என்று திருப்பதி பயணத்தைக் கூறுவார்களாம்

டாக்டர் முன்பு உட்கார்ந்திருந்தேன்

வலது கணுக்காலில் வீக்கம் என்றேன்

என்றிலிருந்து வீக்கம் என்றார் டாக்டர்

நீங்கள் எடுத்துக்கொடுத்த மாத்திரையைத்

தொடங்கிய பிறகுதான் டாக்டர் என்றேன்.

ஒரு விதத்தில் இந்தக் கவிதையைப் படிக்கும்போது அங்கத உணர்வை நாம் உணர்ந்தாலும்,  உண்மையில் டாக்டர்களைப் பற்றிய நம் பயத்தை கவிதை முலம் ஆழமாக சித்திரமாக தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.  இதில் சில வரிகளைப் படிக்க படிக்க சிரிப்பு தானகவே நம்மிடம் தொற்றிக் கொள்கிறது.  அதாவது üடோக்கன் கொடுக்க ஒரு மடந்தை,ý என்கிறார். மடந்தை என்ற சொல்லின் எள்ளளைக் கவனிக்க வேண்டும்.  பெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார் என்று சொல்லிவிட்டு ஒரு மின்விசிறி, இரண்டு பெஞ்ச்சுகள், இரண்டு வரிசைகள் என்கிறார்.  இத் தொகுதியில் சமகால படைப்பாளிகளை அவர் கிண்டலடித்தது எழுதியதைப்போல் யாரும் அடித்திருக்க முடியாது.

 

பொய்த் தேவு என்ற கவிதையைப் பார்க்கலாம் :

சைக்கிள் ரிக்ஷாவில் தன்னுடைய

கனமான உடம்புடன் ஏறி

அமர்ந்து கொண்டார் க.நா.சு

திருவல்லிக்கேணி பெரிய தெருவில்

நல்லியக் கோடன் பதிப்பாலயம் இருந்தது

தேவாலயத்தைக் காட்டிலும்

புத்தகாலயத்தைப் போற்றிய க நா சு

பதிப்பாலயம் நோக்கிப் புறப்பட்டார்

நாவலுக்கான ராயல்டி

கிடைக்கு மானால் என்னென்ன

செய்யலாம் என்று கணக்கிட்டார்

எதுவும் உருப்படியாய்த் தோன்றவில்லை

கோயம்புத்தூர் கிருஷ்ணயர் கடையில்

கோதுமை அல்வா கொஞ்சமும்

பின்னி மில்ஸ் போர்வை ஒன்றும்

வாங்க முடிந்தால் நன்றாயிருக்கும்

பணத்தை அவளிடம் கொடுத்தால் போதும்

அதற்கே அவள் கண்ணீர் விடுவாள்

சிலப்பதிகாரத்தைப் புரட்டினால்

நல்லதென்று மனம் சொல்லிற்று

என்ன விலையோ இப்போது?

ரிக்ஷாவை விட்டிறங்கினார் க நா சு

ஜிப்பா பையைத் துழாவி

காசுகள் சிலவற்றைக் கண்டெடுத்து

டீ குடித்துவிட்டு வா என்றார்

ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டுப்

பதிப்பாலயம் போக

உடம்மைத் திருப்பினார். அங்கே

புரட்சிக் கவிஞர் நிற்கிறார்

என்னுடன் போஸ்ட் ஆபிஸ் வாரும்

மணியார்டர் வாங்கணும்

ஆள் அடையாளம் காட்டணும்.

நிறைய கடிதங்கள்

ரைட்டர், பொயட் & க்ரிடிக் என்று

திருப்பப் பட்ட கடிதங்கள் வந்ததால்

க நா சுவுக்கு போஸ்ட்மேன் நண்பரானார்

நல்லியக் கோடனை மறந்து

புரட்சிக் கவிஞருடன் போனார்

கவிஞர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்

பக்கத்துத் தேநீர்க் கடையில்

தேநீர் வாங்கித் தந்தார்

இருவரும் தெருவில் நின்று பருகினர்

புரட்சியும் அமைதியும் அப்புறம்

தங்கள் தங்கள் வழியே போயினர்

எழுத்தாளர்களை வைத்து அவர் எழுதிய கவிதைகள் வித்தியாசமாக யோசிக்க வைக்கின்றன. நம் வாழ்க்கையில் தென்படும் எளிதான அவலத்தை அங்கத உணர்வோடு ரசித்தபடியே எடுத்துச் சொல்கிறார். எந்தக் கவிதையிலும் அவர் கிண்டலை சேர்க்காமலிருப்பதில்லை.  மேலே குறிப்பிட்ட கவிதையில் ‘புரட்சியும் அமைதியும் அப்புறம் தங்கள் தங்கள் வழியே போயினர்,’ என்று கிண்டலடிக்கிறார்.

ஆரம்பத்திலிருந்து தற்போது வந்துள்ள அவர் கவிதைகளை வாசிக்கும்போது கவிதை எழுதும் முறையை அவர் எப்படியெல்லாம் மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிய முடியும். அவருடைய எல்லா கவிதைகளிலும் அடிநாதமாக ஒளிந்து கொண்டு இருப்பது அவருடைய அங்கத உணர்வு, மனித நேயம்.  அதனால்தானோ என்னமோ அவர் கவிதைகளை எப்போதும் படித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

(இத்துடன் முடிந்தது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன