விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 5வது கூட்டம்

தலைப்பு : சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்

தொடர் உரை: முனைவர் வ வே சு

இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 25.10.2018 (வியாழக்கிழமை)

நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு : . விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வுப் பெற்றவர். இலக்கியப் பேச்சாளர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்த நடத்தி உள்ளார்.

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் –
தொலைபேசி எண் : 9444113205

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 20 – வண்ணதாசன்

தாமிரபரணி மகா புஷ்கரம் காரணமாக நான் திருநெல்வேலிக்குச் செல்ல நேரிட்டது. இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்து பல கோயில்களுக்குச் சென்றதும். கல்லிடைக்குறிச்சியில் மகா புஷ்கரத்தில் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.
திருநெல்வேலியில் வசித்து வரும் வண்ணதாசனை சந்தித்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பேட்டி எடுத்துள்ளேன். நான் அவசரம் அவசரமாக அவரைச் சந்தித்தேன். முதலில் அவரைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகம் கடைசி வரை என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. பின் எப்படியோ சந்தித்து விட்டேன். பேட்டியும் எடுத்து விட்டேன். அவரும் நிதானமாகப் பதில் அளித்திருக்கிறார். வழக்கம் போல சில தடங்கல்கள் பேட்டி எடுக்கும்போது ஏற்படும். அது மாதிரி ஏற்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் மீறி வண்ணதாசன் சிறப்பாக பதில் அளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 92

அசடு என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர் காசியபன். கேரளா பல்கலைக் கழகத்தில் எம் ஏ தத்துவத்தில் கோல்ட் மெடல் வாங்கி உள்ளார். ‘முடியாத யாத்திரை’ வரும்போது அவர் உயிரோடு இல்லை. ஒரு நீண்ட கவிதையுடன் சேர்த்து 25 கவிதைகள் உள்ளன. இத் தொகுப்பை 300 பிரதிகள் அச்சடித்திருந்தேன். ஆனால் பாதிக்குமேல் என்னிடம் உள்ளன. இத் தொகுப்பு விலை ரூ.60. பாதி விலைக்கு அதாவது ரூ.30க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.

மின்கம்பி மேலே

காசியபன்

மின்கம்பி மேலே
அந்த குருவிகள் இரண்டும்
எத்தை நோக்கி
தியானம் புரிகின்றன?
கிழக்கே
நாளை பிறப்பிக்கும்
செக்கச் செவந்த
சூரியனையா?
இல்லை ,
மேற்கே
இரவெலாம் பிரகாசித்து
களைத்து அணையமுயலும்
ஒளியற்ற சந்திரனையா?
எத்தை நோக்கி
தியானம் செய்கின்றன?
தெற்கே
ஓங்கி உயர்ந்து நிற்கும்
பாறை குன்றையும்
அதன் உச்சியில் நிற்கும்
மொட்டை மரத்தையுமா?
இல்லை, இல்லை
தலைகளைக் குனிந்து
தங்களை நோக்கி

இது முன்னமே எனக்கு
தெரியாமல் போனதேன்?
பரவாயில்லை .
இப்போது அவைகள்
எங்கோ பறந்து
மறைந்துவிட்டன.
மின்கம்பியும் நானும்
வெறிச்சென்றிருக்க.

நன்றி : முடியாத யாத்திரை – கவிதைகள் – பக்கங்கள் : 62 – விலை : ரூ.60 – விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – தொடர்புக்கு : 9444113205

துளி : 8 – சனிக்கிழமை கிளம்புகிறேன்

தாமிரபரணி புஷ்கர்க்கு சனிக்கிழமை நாங்கள் குடும்பத்துடன் போகிறோம். கட்டாயம் வண்ணதாசனைச் சந்தித்து என் சிறுகதைத் தொகுப்பைக் கொடுக்க நினைக்கிறேன். அது நடக்குமா என்பது தெரியாது. ஹோட்டல் கங்காவில் தங்கப் போகிறேன். சுற்றி வேற இடங்களுக்கும் போகத் திட்டம். கூட்டத்தை நினைத்தால் எனக்குத் திகைப்பாக இருக்கிறது. கூட்டம் நெரிசல் உள்ள இடங்களுக்கு நான் போக விரும்ப மாட்டேன். உதாரணமாக ஐய்யப்பன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும் நான் போக விரும்ப மாட்டேன்.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

டேவிட் சட்டன்

கம்ப்யூட்டர் அறை, நடு இரவு

குகையின் சில்லிப்பாய்க் காற்று…
இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும்.
பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை.
சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும்.
அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது .
வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம்.

எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன.
சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே;
இங்கேதான் நான் வாசம் புரிகிறேன்.
கட்டளைக் கிணங்கும் அசரீரிகளினிடையில் இயங்கி
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
இந்தத் திரையைப் பார்த்து
நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத்
தாமதிக்கையில்
உடனே தோன்றுகிறது
பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்:
‘ஆரம்பி.’
இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் :
ஆணையிடுகிறேன்.
இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடி பணிகின்றன.
அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை
வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று.
சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய்
எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால்
கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில்
பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.

வீடு செல்லும் நேரம்… வெளிப்பக்கத்தில் குறியிடல்…
காவல்காரனுக்கு நல்லிரவு’ வாழ்த்து.
கொடூரமான வெளிப்புற இருட்டு.
மங்கிய நிலவின் வெள்ளித் தீவிரத்தை
அலங்கோலப் படுத்தும் முரட்டு அந்தகாரம்.
உயர எழுந்த பெருத்த மேகங்கள்.
காலியான நடைபாதைகளில் நடந்து
கட்டுப்பாடற்ற காற்றின் தாக்குதல்களில் சரணடைகிறேன்.
உள்முகத்தின் பின்னே –
எதிர்காலத்தின் கருத்த பூட்ஸ்களில்
இளகியோடுகின்றன. மனதின் உறைபனித் துகள்கள்.

மூலம் : ஆங்கிலம் தமிழில்: கால. சுப்ரமணியம்

(நவீன விருட்சம் அக்டோபர் – டிசம்பர் 1989)

துளி : 7 – மேலும் கட்டுரைகள்

சங்ககாலம் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் தொ பரமசிவன் ஒரு கட்டுரை மேலும் பத்திரிகையில் எழுதி உள்ளார். அக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்குத் தர விரும்புகிறேன் :
“நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியப் பாடல்களின் தமிழ்ப் புலவரின் மூலப்படைப்பு எது, மொழிபெயர்ப்புப் பாடல்கள் எவை என்பது இன்னும் முடிவு செய்யப் பெறவில்லை. கி மு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட தர்மபதத்தில் 7ஆவது பகுதியான அரசந்தவர்க்கம் என்னும் பகுதியில் உள்ள இரண்டாவது பாடலை எடுத்துக்காட்டி ஒளவையாரின் üüநாடாகொன்றோýý என்னும் பாடல் (187) தர்மபதப் பாடலின் நேர் மொழிபெயரப்பு என்பதை மு.கு ஜகந்நாத ராஜா நிறுவி உள்ளார். இதுபோலவே கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே என்ற பாடலும் தர்மபதத்தில் உள்ள மற்றொரு பாடலின் மொழிபெயர்ப்பே என்பார் தெ.பொ.மீ.”
இப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. முதலில் ஒளவையாரும், கனியன் பூங்குன்றனனும் எங்கே தம்மபதத்தைப் படித்து இருக்கப் போகிறார்கள்.

புதிய தலைமுறை பத்திரிகைக்கு நன்றி

இந்த இதழ் புதிய தலைமுறை பத்திரிகையில் (18.10.2018) திறந்த புத்தகம் என்ற நூலிற்கான விமர்சனம் வெளிவந்துள்ளது. அதை எழுதியவர்ன ஸிந்துஜா. ‘மனதைத் திறக்கும் புத்தகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய விமர்சனத்தை அப்படியே இங்குத் தர விரும்புகிறேன்.

புத்தக விமர்சனம் எழுதிய ஸிந்துஜாவிற்கும், புதிய தலைமுறை ஆசிரியருக்கும் என் நன்றி உரித்தாகும்.

முகநூல் முகமூடி அணிந்தவர்களின் ஒரு விளையாட்டு அரங்கமாகிவிட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’ ட ன் று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை , தயக்கமும் இல்லை . முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே.. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவமும் விரிந்து ஓடுகிறது . இத்தகைய வினோதமான முகநூல் உலகில் உலா வருவதைப் பற்றி பேசுகிறது எழுத்தாளரும் கவிஞருமான அழகியசிங்கரின் இந்த ‘திறந்த புத்தகம்’.
மிக எளிய நடையில், சாதாரண விஷயங்களையும்கூட உற்சாகத்துடன் படிக்கும்படி ஒரு வாசகரை உந்தித் தள்ளுவது என்பது, கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவது கஷ்டமான காரியம். இதை அழகியசிங்கர் இந்தப் புத்தகத்தில் செய்து காண்பித்திருக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும் சொற்றொடர்களுடன்; அரசியல், இலக்கியம், சினிமா, நாடகம், சமூகம், மனிதர்கள், தின வாழ்க்கை என்று முகநூலில் ஒரு வருஷமாக, தான் எழுதிய அனுபவ பகிர்வுப் பதிவுகளை தொகுத்துப் போட்டிருக்கிறார்.
‘அந்தப் புத்தகத்தை யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை’ என்று ஒரு கட்டுரை இருக்கிறது . புத்தகம் எழுதியவர் சாப்பிடுவதைக் குறைப்பது பற்றியும், பசியை அடக்குவதின் மகாத்மியத்தைப் பற்றியும், வரிந்து கட்டிக் கொண்டு எழுதியதை அழகியசிங்கர் பதிவு செய்து, எ ழு த் த ா ளர் ெப ய ைர ச் சொல்லாமலே முடிக்கிறார். ஆனால், பக்கம் 170-இல் உள்ள ‘தீபாவளியும் எங்கள் தெருவும்’ என்ற கட்டுரையில் அந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்துவிடுகிறது. ‘இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டால் உண்பதின் மீது தெளிவான கவனம் வந்துவிடும். ருசி அறுத்தல் என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது’ என்று ‘இது போதும்’ என்ற தனது புத்தகத்தில் பாலகுமாரன் எழுதியிருக்கிறார்” என்கிறார்.

இலக்கியம் அழகியசிங்கருக்கு பிடித்த விஷயம் என்பதால் இதில் பல கட்டுரைகள் அழகியசிங்கரின் பத்திரிகை நடத்தும் அனுபவங்களை, அவர் சந்தித்துப் பழகிய இலக்கிய ஆளுமைகளை, சில வம்புகளை(!) – வம்புகள் இல்லாத புத்தகம் என்ன இலக்கியப் புத்தகம் – மிகுந்த சுவாரஸ்யத்துடன் விவரிக்கின்றது. அழகியசிங்கரின் மெல்லிய நகைச்சுவை சில பக்கங்களில் நம்மைக் கவருகின்றன. ‘சார், இவர் சத்தியநாதன். லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்’ என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். வந்ததடா ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் கல்யாண மண்டப வாசல்களில்கூட கட் அவுட் வைத்துவிடுகிறார்கள். மணமகனும் மணமகளும் கட் அவுட்டில் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதன்பின் அவர்களிடம் அது மாதிரியான சிரிப்பு தென்படாது என்று எனக்குத் தோன்றும். ‘

‘இந்தப் புத்தகம் விலை ரூ.20 தான்’ என்று ரசிகமணி டி.கே.சி. எழுதிய புத்தகம் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் டி.கே.சி. அவரது மகளுக்கு எழுதிய கடிதம் இடம் பெற்றிருக்கிறது.

முகநூலை உபயோகமாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 91

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகள் கொண்டு வர உள்ளேன் முதலில். அதன்பின் தொடரந்து 200, 300 கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன். முதல் 100ஐப் புத்தகமாகக் கொண்டு வருகிறேன். முதல் தொகுதிக்கு என் கவிதை
உட்பட இன்னும் 9 கவிதைகள்தான் தேவை. இக் கவிதைகளை கவிதைப் புத்தகங்களிலிருந்து தயாரிக்கிறேன். இதில் விட்டுப்போன கவிதைகளும் பின்னால் உருவாகப் போகும் கவிதைத் தொகுதிகளில் சேர்க்கப்படும்.
இக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது. இக் கவிதைகளை வாசிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் மூலம் தங்களுக்கான் முன்னுரையைப் புரிந்துகொள்ள வேண்டும.
ராஜமார்த்தாண்டன் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் இந்தக் கவிதையில் ஒரு வரி எழுதியிருப்பார். விதிக்கப்பட்ட என் காலமோ மணித்துளிகளாய் விரைகிறது என்று. இந்த வரிகள்தான் என்னை யோசிக்க வைக்கிறது.

அதுவரை

ராஜமார்த்தாண்டன்

எனக்கான மலர்
எங்கோ மலர்ந்திருக்கிறது
எத்திசையில் என்பதறியேன்

அதன் நறுமணம்
இதழ்களின் நிறம்
யாதொன்றுமறியேன்

விதிக்கப்பட்ட என் காலமோ
மணித்துளிகளாய் விரைகிறது

எனினும்
என்றேனும் கண்டடைவேன்
எனக்கான மலரை

நம்பிக்கையுடன் தேடியலைகிறேன்

அதுவரை
குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பாய்
மலர்ந்திருக்க வேண்டுமது.

நன்றி : அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – கவிதைகள் – ராஜமார்த்தாண்டன் – பக்கங்கள் : 72 – அஜிதா பதிப்பகம் – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2000 – விலை : ரூ.20

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 43

தலைப்பு : மறுதுறை மூட்டம்
Fog on the Other Shore

சிறப்புரை : நாகார்ஜ÷னன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 13.10.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : அமைப்பியல்வாத விமர்சகர்
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

ஞானக்கூத்தனின் பிறந்த தினம் இன்று

ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது ஞானக்கூத்தனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். விருட்சம் பத்திரிகை அச்சடித்து வரும்போதெல்லாம் முதலில் ஞானக்கூத்தனிடம் ஒரு பிரதி கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன்.
திருவல்லிக்கேணி தெருக்களின் முனைகளில் ஞானக்கூத்தனை பலமுறை சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவர் வீட்டுத் திண்ணைகளிலும் மொட்டை மாடிகளிலும் பேசியிருக்கிறேன். ஒருமுறை பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டிகளில் உட்காரந்து பேசியிருக்கிறேன். இதுமாதிரி திருவல்லிக்கேணி என்றாலே ஒரு அடையாளத்தை ஞானக்கூத்தன் என் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல் அவர் கவிதைகள் மூலமும் ஒரு ஞாபகத்தை உண்டாகியிருக்கிறார்.
இன்று ஞானக்கூத்தனின் பிறந்தநாள். இம்பர் உலகம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைத் தொகுதிதான் அவருடைய கடைசி கவிதைத் தொகுதி. அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்குத் தர விரும்புகிறேன்.

சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை என்று
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.