மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 89

மனதுக்குப்பிடித்த கவிதைகள் என்ற தொகுப்பில் முதலில் 100 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன். கூடிய சீக்கிரம் புத்தகம் உருவாகிவிடும்.முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள் இரண்டாவது தொகுப்பில் இடம் பெறும். இரண்டாவது தொகுதியிலும் விடுப்பட்ட கவிதைகள் மூன்றாவது தொகுதியில் வந்து விடும். ஒவ்வொரு தொகுதியும் 100 கவிதைகள் கொண்ட புத்தகம். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது. கவிதைகள்தான் முன்னுரை. கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவை வெளிப்படுத்தும் விதத்திலிருந்து தங்களைப் புரிந்துகொள்ள முடியும். . பெரும்பாலும் இக் கவிதைகள் யாவும் கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிவருகின்றன.

90) இனி வாழ்நாளில்

தேன்மொழி தாஸ்

இனி வாழ்நாளில்
கடவுளைக் காணவே இயலாது
என்ற சத்தியத்திற்குப் பின்
எனது நாய் குட்டியை
சர்வ வல்லமையுள்ள கடவுளே
என அழைக்கத் துவங்கினேன்

நன்றி : நிராசைகளின் ஆதித்தாய் – கவிதைகள் – தேன்மொழி தாஸ் – மொத்தப் பக்கங்கள் : 56 – வெளியீடு : உயிர்மை பதிப்பகம், புதிய எண் : 79, ப.எண் 39 மேற்கு போயஸ் சாலை (இளங்கோ சாலை – அண்ணா அறிவாலயம் பின்புறம்) தேனாம்பேட்டை, சென்னை 600 018 – செல் எண் : 9003218208 – விலை : ரூ.50

சத்யானந்தன் பேச்சின் ஒளிப்பதிவு 2 (2)

சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் என்ற தலைப்பில் சத்யானந்தன் அவர்கள் மூகாம்பிகை வளாகத்தில் 15.09.2018 (சனிக்கிழமை) அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் இரண்டாம் பகுதியை இங்கே ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சத்தயானந்தன் பேச்சின் ஒளிப்பதிவு 1 (2)

சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் என்ற தலைப்பில் சத்யானந்தன் அவர்கள் மூகாம்பிகை வளாகத்தில் 15.09.2018 (சனிக்கிழமை) அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முதல் பகுதியை இங்கே ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கேட்டு உங்கள் கருத்துக்களை நல்குக.

துளி :5 – இன்று காந்தி பிறந்த தினம்

காந்திய அறிஞர் என்று பரவலாக அறியப்படும் லா சு ரங்கராஜனை ஒரு முறை பெ சு மணி அவர்கள் மூலம் சந்திக்கும்படியான வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்தார். அவர் காந்தியைப் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்களை அளித்தார். ஒரு புத்தகம்பெயர் 21 ஆம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி. இன்னொரு புத்தகம். பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி. நான் அதிகமாக சேகரித்து வைத்திருப்பது காந்தியைப் பற்றிய புத்தகங்களும் பாரதியார் பற்றிய புத்தகங்களும்தான்.
ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி எழுதிய ஒரு சிறிய புத்தகமும் வைத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் காந்தி தன்னை மகாத்மா என்று சொல்லிக்கொள்வதில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். தன்னை யாரும் மகாத்மா என்று கூப்பிடுவதை அவர் விரும்பவில்லை. தனக்கு சிலை வைப்பதை காந்தி ஒரு போதும் விரும்பியதில்லை. அதேபோல் தன்னை புகைப்படம் எடுப்பதையும் அவர் விரும்பவில்லை. ஒருமுறை அவருடைய சிலை ஒன்றை பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து மும்பையில் பொது இடத்தில் வைப்பதாக இருந்தது. அந்தத் தொகையை சிலை வைப்பதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு செலவு செய்யலாமென்று கூறியவர் காந்தி.
காந்தியின் நினைவோடு இதை முடிக்கிறேன்.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்

நித்தியம்

அதிகாலை விழித்த கிழவன பார்வையில்
வாசல் முன் அன்றைய சுமை.

நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்,
வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு
அனைத்துமே அடக்கம் அச்சுமையில்

அவிழ்க்கப்பட்ட சுமையில்
ஆற்றவேண்டிய காரியங்களால்
நிறைந்து போனது முற்றம் முழுதும்.
கதவின் கீச்சொலி

வைக்கோலின் குசுகுசுப்பு
ஜன்னலின் பளிச்சிடல்
கால்நடைகளின் பெருமூச்சு
பறவைகளின் இன்னிசை
மனிதர்களின் பேச்சரவம்
சக்கரங்களின் சடசடப்பு

அந்தியும் வந்தது
இன்பமயமான நீண்ட அந்திமாலை.

மூலம் : லிதுவேனியக் கவிதை

ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.

(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

நீங்களும் படிக்கலாம் – 45

அசோகமித்திரன் நாவல் குறித்து உரையாடல்

இந்த முறை முடிச்சூர் ரோடில் உள்ள மோஹினி வீட்டிற்கு அழகியசிங்கரும் ஜெகனும் வந்தார்கள். மோஹினிக்கு ஒரே மகிழ்ச்சி. மோஹினி அவர் கணவரை அறிமுகப்படுத்தினார்.

அழகியசிங்கர் : நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன். இவ்வளவு தூரத்திலிருந்து மோஹினி என்னைப் பார்க்க வருவது எனக்கு ஆச்சரியம்.

மோஹினியின் கணவர் சாரதி : உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அப்படி என்ன சார் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

மோஹினி : தூரம் என்பது நம் மனதில்தான் இருக்கிறது. நம் பக்கத்தில் வீட்டில் ஒருவர் இருப்பார். ஆனால் நம் மனதைப் பொறுத்தவரை அவர் தூரத்தில் இருப்பார். நாம் போய்ப் பார்க்க மாட்டோம்.

அழகியசிங்கர் : உண்மைதான். உங்கள் கணவர் ஒரு கேள்வி கேட்டார். என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. நாங்கள் பேசுவது புத்தகங்களைப் பற்றியும், எழுதுபவர்களைப் பற்றியும்தான்.

சாரதி : அவ்வளவு இருக்கிறதா பேசுவதற்கு.

அழகியசிங்கர் : ஆமாம். அவ்வளவு இருக்கிறது. புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிலேயே உழன்று கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே இதெல்லாம் வேண்டாமென்று விட்டும் விடலாம்.

ஜெகன் : ஒருவர் இசை, புத்தகம் படிக்கிறது என்று இதெல்லாம் இல்லாமல் இருந்து விடலாம்.

மோஹினி : வாழ்க்கை என்பது நாம் அமைத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. என் வீட்டில் உள்ளவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தாலே என் பொழுது முழுவதும் போய்விடும்.

அழகியசிங்கர் ; டிவியையே பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள். காலையிலிருந்து இரவு படுக்கும்வரை டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.

சாரதி : நான் போகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். உங்கள் பேச்சில் நான் தலையிட விரும்பவில்லை.

மோஹினி : கொஞ்ச நேரம் நாங்கள் பேசுவதைக் கேட்டால் போதும் வேண்டாமென்று ஓடிப் போய்விடுவீர்கள்.

ஜெகன் : நாம் சமீபத்தில் படித்தப் புத்தகம் பற்றி பேசுவோம்.

அழகியசிங்கர் : அசோகமித்திரனின் மானசரோவர் என்ற நாவல்.

மோஹினி : 32 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல்.

ஜெகன் : இப்போது எழுதப்படுகிற நாவல்களைப் பற்றிப் பேசக் கூடாதா?

அழகியசிங்கர் : நாம் பேசுவதற்குத்தான் வந்திருக்கிறோம். எல்லாவற்றையும் பற்றிப் பேசலாம்.

மோஹினி : மானசரோவர் சாவி இதழில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொடர்கதை.

ஜெகன் : ஒரு நெருக்கடியான நேரத்தில் ஒரு விழாவில் அசோகமித்திரனை சாவி அவர்கள் பாரத்து தொடர்கதை எழுதச் சொல்லியிருக்கிறார். தொடர்கதையாக உருவான நாவல்தான் இது.

மோஹினி : எனன்கு இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்கனவே கரைந்த நிழல்கள் நாவல் ஞாபகத்திற்கு வருகிறது.

அழகியசிங்கர் : இரண்டு நாவல்களும் சினிமா உலகம் சம்பந்தப்பட்ட நாவல்கள். ஆனால் கரைந்த நிழல்கள் வேற மாதிரி இது வேற மாதிரி.

ஜெகன் : முதலில் கோபாலும் அடுத்தது சத்யன் குமார் என்ற வடநாட்டு நடிகன் பேசுவதுபோல் நாவல் ஆரம்பமாகிறது.

அழகியசிங்கர் : இரண்டு நபர்களுக்கு இடையே இந் நாவல் நடைபெறுகிறது.

மோஹினி : ஒருவர் சத்யன் குமார், இன்னொருவர் கோபால்.

ஜெகன் : ஒரு இடத்தில் கோபால் அவர் மனைவிப் பற்றி இப்படி விவரிக்கிறார்.
“ஒருநாள் அவள் தனியாக சோழி விளையாடிக்கொண்டு தனக்குத் தானே ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு, அவள் வெறியோடு சோழிகளைத் தூக்கிப்போட்டுப் புறங்கையில் பிடித்து, மீண்டும் தூக்கிப்போட்டு உள்ளங்கையில் பிடித்தாள். அவள் கண்கள் அகல விரிந்து இருந்தன.”

அழகியசிங்கர் : ஆரம்பத்திலேயே கோபால் தன் மனைவியின் ஜம்பகத்தின் போக்கைக் குறிப்பால் உணர்த்தி விடுகிறார்.

மோஹினி : இரண்டு சித்தர்களைப் பற்றி இந் நாவலில் குறிப்பிடுகிறார்.

கோபாலைப் பார்த்து சத்யன்குமார் ‘நீங்கள் மெஹர்பாபா மாதிரி இருக்கிறீர்கள்,’ என்கிறான். அவர் அவன் சொன்னதை நம்ப முடியாமல் பார்க்கிறார்.

அழகியசிங்கர் : குடும்பத்தைக் குலைப்பதுதான் இந்தக் கதை.

ஜெகன் : ஆமாம்.

அழகியசிங்கர் : கோபால் குடும்பம் சாதாரண குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. குடும்பத்தையே கலைக்கும்படி ஆகிறது.

மோஹினி : சத்யன் குமார் பிரபலமான வடநாட்டு நடிகன். அவன் சென்னை வரும்போதெல்லாம் கோபாலை சந்திக்கிறான். அவனுடைய புகழும் அழகுமே அவனுக்கு விரோதமாகப் போய் விடுகிறது.

ஜெகன் : சத்யன்குமார் திருமணமாகாதவன். சபலக்காரன். அதை ரொம்பவும் நாசூக்காக நாவலில் வெளிப்படுகிறது.

மோஹினி : அவன் ஏன் உடல் நிலை சரியில்லாவிட்டாலும் கூட கோபாலைப் பார்க்க வருகிறான் என்பதை கடைசியில் கொண்டு போகிறார் நாவலாசிரியர்.

அழகியசிங்கர் : சத்யன் குமார் ஒரு பெண் பித்தராக இருப்பார் போல் தெரிகிறது. ஒருமுறை கோபால் இல்லாதபோது அவர் வீட்டிற்கு வந்து அவரைத் தேடியிருக்கிறார். அந்தத் தருணத்தில் அவர் மனைவியின் கையைப் பிடித்து இழுத்தாரா அல்லது மனைவி அவர் கையைப் பிடித்து இழுத்தாரா என்பது தெரியவில்லை.

ஜெகன் : குழப்பமே அங்கிருந்து ஆரம்பமாகிறது. சத்யன் குமாரின் இந்த நடவடிக்கையால் குடும்பமே சிதைந்து விடுகிறது. பெண்ணிற்கு உடனே திருமணம் செய்து விடுகிறார். பையன் சுரம் வந்து இறந்து விடுகிறானா அல்லது அவர் மனைவியால் கொல்லப்படுகிறானா என்பது தெரியவில்லை.

மோஹினி : கோபால் எல்லோரையும் விட்டுவிட்டு சித்தருடன் போய்விடுகிறார். அவர் மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிடுகிறார்.

அழகியசிங்கர் : சத்யன்குமார் சியாமளா என்ற துணை நடிகையை அவள் குழந்தையுடன் அவன் இடத்திற்கு அழைத்து வந்து விடுகிறான். அவன் மருத்துவமனையில் உடல் நலமின்றி படுத்துக் கிடந்தபோது ஒரு நர்ஸ் அவன் படுக்கையை சரி செய்ய வருகிறாள். அவளைக் கட்டி அணைத்துக்கொள்கிறான். அதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஒரு இடத்தில் எழுதியிருப்பார்.

ஜெகன் : இந்த நாவலால் நமக்கு என்ன தெரிய வருகிறது.

அழகியசிங்கர் : இந்த நாவல் மூலம் பலருடைய வாழ்க்கை முறை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், நாவல் ஒரு பிரதி. பிரதியை உருவாக்கியவர் அசோகமித்திரன். பிரதியின் மூலம் பலருடைய குரல்களை நாம் உணர முடிகிறது. இதைப் படிப்பதன் மூலம் வாசகனின் பிரதி ஒன்று உருவாகிறது. அவன் தன்னை உரசிப்பார்க்க அது பெரிதும் உதவும்.
(நேரம் அதிகமாகிவிட்டதால் அழகியசிங்கரும், ஜெகனும் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்)

நன்றி : மானசரோவர் – நாவல் – அசோகமித்திரன் – பக் : 205 -வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
tag

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 89

அழகியல்

கி பி அரவிந்தன்

நாரினில் பூத்தொடுக்க
மாலை வரும்.

மாலையில் பூவுதிர
நாரிழை எஞ்சும்

நாரினைக் கடைவிரித்தால்
கொள்வாரும் உளரோ

தேடிப் பலவண்ணத்தில்
பூக்கொய்யலாம்

நாரின்றேல்…!

என்னிடத்தே நாருண்டு
எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது
பூக்களை விற்பதற்கல்ல…

நன்றி : கனவின் மீதி – கி பி அரவிந்தன் – பக்கம் : 96 – விலை : ரூ.40 – பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091 வெளியான ஆண்டு : ஆகஸ்ட் 1999

106வது இதழ் நவீன விருட்சம் செப்டம்பரில் வந்துவிட்டது….

ஒவ்வொரு காலாண்டு போதும் விருட்சம் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிட வேண்டுமென்ற உறுதியாக இருப்பேன். ஆனால் என் முயற்சியில் பெரிய தோல்வியே ஏற்படும்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் விருட்சம் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறேன். அதன் பக்கங்கள் 80 ஆகவும், விலை ரூ.20தான் வைத்திருக்கிறேன்.
இந்த 30 ஆண்டுகளில் நான் 120 இதழ்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் என்னால் 106 இதழ்கள் மட்டும்தான் கொண்டு வர முடிந்தது.
இதுவே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. இதழ் கொண்டு வருவதோடல்லாமல் இந்தப் பத்திரிகையை அனுப்புவதற்கு நான் பெரும் முயற்சி செய்ய வேண்டும். அவ்வளவு லேசில் அனுப்பி விட முடியாது.
இந்தப் பத்திரிகை விற்று எனக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை. அதனால் பணத்தைத் தயார் செய்துகொண்டு பத்திரிகையைக் கொண்டு வந்துள்ளேன்.
அதிகப் படைப்பாளிகளை இதில் ஈடுபட வைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் சில முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுபவர்கள் ஒரு கவிதை மட்டும் அனுப்ப வேண்டும். கதை, கட்டுரை எழுதுபவர்கள் நாலைந்து பக்கங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
புத்தக மதிப்புரையும் வெளியிடப்படும். ஆனால் ஒன்று அல்லது ஒன்றரைப் பக்கங்களுக்குள் முடித்து விடவேண்டும். வாசகர்களைப் படிக்கத் தூண்டும்படி புத்தக மதிப்புரை இருக்க வேண்டும்.
கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் 106வது இதழில் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. விஸ்வநாத் கவிதை
2. கணக்குத் தீர்த்தல் – வளவ துரையன்
3. வசப்படா விடை பெறுதலின் மௌனத் துளிகள் – தேனு-கவிதை
4. கடிதம் – வண்ணதாசன் 5. ஒரே ஒரு நிலக்கரித்துண்டு – கல்யாண்ஜி
6. புத்தக விமர்சனம் – வைதீஸ்வரன்
7. செப்டம்பர் மூன்றாம் தேதி – அழகியசிங்கர்
8. பெண்கள் – சிறுகதை – தாஜ்
9. முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்
10. ஆற்றாமை – சிறுகதை – உஷாதீபன்
11. புத்தக விமர்சனம்
12. மிரட்டல் கதை – அழகியசிங்கர்
13. வாழ்க்கையெனும் ஓடம் – டாக்டர் பாஸ்கரன்
14. இவர்களும் அவர்களும் – கவிதை – உமா பாலு
15. டோரியன் சீமாட்டி – சிறுகதை – பிரேமா பிரபா
16. தமிழ் மணவாளன் கவிதை
17. பைரவம் – கவிதை – அன்பாதவன்
18. பனித்துளி – அடல் பிஹாரி வாஜ்பேயி
19. விரக்தி – கவிதை – டோரத்தி பார்க்கர்
20. ஸிந்துஜா கவிதை
21. புத்தகம் விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
21. புத்தக விமர்சனம் – மணிகண்டன்
22. புத்தக அறிவிப்பு
22. உரையாடல்

துளி : 4 – ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் கிளை நூலகம்.

2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது நூலகங்களைக் காப்பாற்ற முடியவில்லை. ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் நூலகம் அப்படிப்பட்ட ஒன்று. நூலகரின் புத்திசாலித்தனத்தால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப்போது திரும்பவும் பல புத்தகங்களைத் தருவித்து நூலகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நூலகர். இந்த நூலகத்தில்தான் நாங்கள் இலக்கியக் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமை. வரும் வியாழக்கிழமை கூடும் கூட்டம் நாலாவது கூட்டம்.

நூலகரின் வேண்டுகோளுக்கு இணங்க நூலகத்தின் வெளிப்புறத்தில் சுண்ணாம்பு அடித்தோம். எல்லாம் நான் மட்டும் காரணம் அல்ல. பத்து நண்பர்கள் ஒத்துழைப்புடன் நடந்த நிகழ்ச்சி. ரூ.10000 வரை செலவு. இன்னும் நூலகத்தின் வாசலில் தமிழில் வாசகங்கள் எழுத வேண்டும். நூல்கள் விரும்பிப் படிக்கத் தூண்டும்விதமாக வாசகங்கள் தேவை. எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 4வது கூட்டம்

தலைப்பு : வைதீஸ்வரன் கதைகள்

சிறப்புரை : டாக்டர ஜெ பாஸ்கரன்

இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 27.09.2018 (வியாழக்கிழமை)

நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர், சிறுகதை, கட்டுரை ஆசிரியர்.

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205