துளி : 11 – சொல்லாமலே..

சமீபத்தில் தமிழ்ச் சினிமாவில் கதைத் திருட்டு பெரிய விஷயமாக யூ டியூப்பில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உடனே உடனே தெரிந்து விடுகிறது. பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். என்னைப் போன்றவர்களுக்கு இது சம்பந்தமே இல்லை. ஆனால் யூ டியூப்பில் பார்க்க நன்றாகப் பொழுது போகிறது.
ஒரு காலத்தில் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் கதை விவாதத்திற்குக் காரை வைத்து அழைத்துப் போனதாக என்னிடம் பெருமையாக சொல்லுவார். ஹோட்டலில் ரூம் போட்டுக் கதை விவாதம் செய்வதாக அவர் குறிப்பிடுவார். எனக்குத் தோன்றும் என்ன அப்படி விவாதம் செய்வார்கள் என்று.
உண்மையில் படத்தை இயக்குபவர் படத்தை மட்டும் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கதை எழுதுபவர் ஒருவராக கதை, திரைக்கதை, வசனம் என்றெல்லாம் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாமே இயக்குநர் என்கிறபோது பிரச்சினை ஏற்படுவதாகத் தோன்றுகிறது.
என் அலுவலகத்தில் ஒருவர் கூட இப்படித்தான் கதையைச் சொல்லி தயாரிப்பாளரைப் பார்த்து படம் தயாரித்து விடலாம் என்கிற மாதிரி பேசுவார். அவர் புத்தகங்கள் பத்திரிகைகள் என்று எதையும் படிக்காதவர். அவரால் எப்படி இதெல்லாம் முடியும் என்று யோசிப்பேன். அவர் சொன்னாரே தவிர அப்படியெல்லாம் நல்லகாலமாய் நடக்கவில்லை.
பி எஸ் ராமையா, புதுமைப்பித்தன் எல்லாம் மேல் நாட்டுக் கதைகளைத் தழுவி கதைகள் எழுதியிருப்பதாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த மஹா நதி கூட ஸ்டெல்லா புரூஸ் உறவினரின் கதைத் திருடப்பட்டதாகக் கூறியிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ் . இதனால் கதை சொல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சினிமாக்காரர்கள் என்றால் ஒரு லைன் கதையைச் சொல்லவே கூடாது.
1995ஆம் ஆண்டு நான் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன். கவிதைத் தொகுதியின் பெயர் யாருடனும் இல்லை.
அதில் ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

இத்தனை நாட்கள்
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
சொல்லாமலே….

என்று அக் கவிதை முடியும். இதில் சொல்லாமலே என்ற வரியில் ஒரு தமிழ் படம் வந்திருந்தது. அந்தப் படம் வந்தபோது என் கவிதையிலிருந்து ஒரு வரி எடுத்துள்ளார்கள் என்றேன். அது எப்படி உங்கள் வரியிலிருந்து அந்தப் படம் வந்தது என்று என் நண்பர்கள் திருப்பிக் கேட்டபோது நான் பேசாமல் இருந்து விட்டேன்.

துளி : 10 – ஐராவதமும் தீபாவளி மலர்களும்

என் நண்பர் ஐராவதம் மேற்கு மாம்பலம் நாயக்கன்மார் தெருவில் வசித்து வந்தவர், 2014ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் ஒரு தமிழ் அறிஞர். கதைகள் எழுதுவார், கவிதைகள் எழுதுவார், கட்டுரைகள் எழுதுவார். அவர் படித்தப் புத்தகங்களைப் பற்றி விமர்சனம் செய்வார். மொழிபெயர்ப்பும் செய்வார். ஆனால் பத்திரிகை உலகம் அவர் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
அசோகமித்திரனே ஐராவதம் மூலமாகத்தான் ஆங்கிலப் புத்தகங்களைத் தெரிந்துகொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட திறமையான படைப்பாளியைப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ள வில்லை. அவரிடமிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு கட்டுரையோ ஒரு மொழிபெயர்ப்போ ஏதோ ஒன்றை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கலாம். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்ட படைப்பாளி.
ஆனால் இது குறித்தெல்லாம் அவருக்கு வருத்தம் இருந்த மாதிரி தெரியவில்லை. அவர் வீடு இருந்த தெரு முனையில் உள்ள லென்டிங் லைப்ரரியில் போய் தீபாவளி மலர்களை வாடகைக்கு எடுத்து வாசிப்பார். அதாவது பழைய தீபாவளி மலர்கள். அவர் புதியதாக எந்தத் தீபாவளி மலரையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க மாட்டார். பழைய புத்தகக் கடைகளில்தான் பத்திரிகைகள் புத்தகங்கள் வாங்குவார்.
2012ஆம் ஆண்டு வந்த தீபாவளி மலரை 2013 ஆம் ஆண்டு வாடகைக்கு எடுத்துப் படிப்பார். தன் படைப்புகள் எதுவும் வரவில்லை என்ற எண்ணம் இல்லாமல் அந்தத் தீபாவளி மலரில் வந்தவற்றைப் படித்து விமர்சனம் செய்வார்.
06.03.2013 அன்று அவர் தினகரன் தீபாவளி மலர் 2012ஐ விமர்சனம் செய்துள்ளார். அதை அப்படியே இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.
தினகரன் தீபாவளி மலர் 2012ம் ஆண்டு வெளியானது பார்க்கக் கிடைத்தது. பவானி ஜமக்காளம், பாகவத மேள கிராமம் மெலட்டூர், கொங்கு சமையல், தஞ்சாவூர் தாம்பூலம் என்று வித்தியாசமான கட்டுரைகள். சிறுகதைகளில் என்னைக் கவர்ந்தது எஸ். ராமகிருஷ்ணனின் வெறும் பிரார்த்தனை. குடிகார அப்பா. பொறுமைசாலியான அம்மா. மருத்துக்கடையில் வேலைப் பார்க்கும் காதம்பரி. (மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும். இயற்கை உபாதைக்குக் கூட பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்குத்தான் போக வேண்டும். அதற்குள் கால் வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும். அதனால் அடக்கி அடக்கி அவளுக்குப் பல நாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது.) பள்ளியில் படிக்கும் ரமா. இவர்கள்தான் குடும்ப நபர்கள்.
அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது நினைத்தாற்போல் படமெடுத்து சீறுகிறது. அதற்கு இரை போட ஆள் தேவை. அதற்குத்தான் குடும்பம். கொத்திக் கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர் உடலில் கலந்து விட்டிருக்கிறது. குடிக்கு எதிராக போரிடும் தமிழகத் தலைவர்கள் வைகோ, மருத்துவர் ராமதாஸ், பழ நெடுமாறன், தமிழருவி மணியன் இந்தக் கதையை அவசியம் படித்து பிரதிகள் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும்.
ரமா ஒருநாள் ஆற்றாமை தாள முடியாமல் சொன்னாள். ‘அப்பா செத்த அன்னைக்குத்தான் அம்மா நிம்மதியா தூங்குவா. ஒரு வேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்துட்டா நாம எல்லாம் தெருவில்தான் நிக்கணும். அப்பா நம்பளை அடிச்சே கொன்னுடுவார்.’
வீரியமிக்க வரிகள். தீபாவளி மலர் கதையில் இத்தகைய வரிகளை ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற ஆசார பத்திரிகைகள் அனுமதித்திருக்குமா, தெரியவில்லை. தினகரனுக்கு ஹாட்ஸ் ஆப்.
ஐராவதத்தின் இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது அவருக்குள்ளே தீபாவளி மலர்களில் அவருடைய படைப்புகள் வந்திருக்க வேண்டுமென்ற ஏக்கம் இருந்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 94

‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ என்ற தொகுப்பை கூடிய விரைவில் கொண்டு வர உள்ளேன். இது முதல் தொகுப்பு. இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பு மூன்றாவது தொகுப்பு என்று வர உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 கவிதைகள் வரை இடம் பெறும். தொகுப்பாளராக நான் இருந்தாலும் இத் தொகுப்பில் முன்னுரை எதுவும் இடம் பெறாது. ஏன் என்றால் கவிதைகள்தான் முன்னுரை. தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளை ஒருவர் வாசித்தால்தான் இதன் அருமை தெரியும்.

நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வைத்திருக்கிறேன். ஒருநாள் தற்செயலாக ஒரு கவிதைத் தொகுதியை எடுத்து வாசித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளைப் படித்து நான் அசந்து விட்டேன். நாம் ஏன் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எதாவது ஒரு கவிதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது. அந்த முயற்சிதான் தொடருகிறது. இப்போது என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியிலிருந்து 400க்கும் மேற்பட்ட கவிதைகளை என்னால் எடுக்க முடியும். இதெல்லாம் கவிதைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள். இதே பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளை நான் தேர்ந்தெடுத்தால் அது ஆயிரக்கணக்கில் போய்விடும்.

தமிழில்தான் அதிகமாகக் கவிதைத் தொகுதிகள் வருகின்றன என்பது என் யூகம். அதேபோல் கவிதைப் புத்தகம் போல் விற்காமல் இருப்பதும் தமிழில்தான். நான் இதுமாதிரியான கவிதைத் தொகுப்புகளிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நம்மிடம் எவ்வளவு திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருப்பதில்லை.. நாம் யாரையோ ஒரு கவிஞரை மட்டும் கடவுளாக நினைத்துத் தொழுகிறோம். உண்மை அப்படி இல்லை. யாருக்கும் தெரியாமல் நம்மிடம் பல கவிஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.

இளையபாரதி கவிதை

முக்காலத்து
மழையையும் வெயிலையும் எதிர்க்கும் சக்தியை
என் கவிதைகளுக்கு ஊட்டிச் செல்கிறேன்
அண்டவெளியைத் தழுவி காலப்புழுதி படியாமல்
காற்றைச் சிறகாக்கி நீச்சலிடும் கலை
கலந்திருக்கிறது அதன் குருதி அணுக்களில்.
அதனுடன் பிறந்த கூரிய வாளும் கேடயமும் உண்டு
அதன் கைகளில்.
அதன் சொற்களில் சூடேறிக்கிடக்கின்றன
ஆயிரம் தலைமுறைக்கான வெப்பமும் வெளிச்சமும்.
அதன் வரிகளில் காற்றில் உலராத கண்ணீரின் இசை. –
அமுதக் கடலுறங்கும் அதன் தனங்கள்
அனாதை உதடுகளுக்காகச் சுரந்துகொண்டே இருக்கின்றன.
மானும் மழுவும் ஏந்திய மனசில்
காலங்களால் அணையாத அக்னிச்சட்டிகள்.
கண்களில் கருணையும் காந்தமும் கொண்ட அதன்
கொவ்வைச் செவ்வாயின் குமிழ் சிரிப்பில்
பூரணம் புன்னகையாகிறது.
காலத்தின் கம்பிகளில்
இடைவிடாத பயணம் நடத்திடும் மின்சாரத்தைக்
குமுறும் இருதயங்களிலிருந்தே
திரட்டிக் கொட்டியிருக்கிறேன்.
கொத்தும் மரணக் குருவியின் அலகிலிருந்து தப்பிய தானியம் நான்.
என் இனத்தின் பசிக்கான கனிகள்
இந்த ஒற்றை விதையிலிருந்தே விளைந்து பெருகும்.
பறிக்க முடியாத ஆழத்தில் பாவியிருக்கின்றன
என் தொன்மத்தின் வேர்கள்
தொப்புள்கொடியின் தொடர்ச்சியாய்.

நன்றி : மரணத்தின் நட்சத்திரங்கள் – கவிதைகள் – இளையபாரதி – பக்கங்கள் : 110 – வெளிவந்த ஆண்டு : 1999 – விலை : ரூ.35 – சாந்தி பிரசுரம் – 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நனர், அசோக்நகர், சென்னை 600 083

துளி : 9 – திகசியும், வல்லிக்கண்ணனும் இல்லை.

இன்று கூட நான் விருட்சம் 106வது இதழ் அனுப்பிக்கொண்டிருந்தேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும் என்று நினைக்கிறேன். சந்தாதார்களுக்கு அனுப்புவதோடல்லாமல் இலவசமாகவும் அனுப்புகிறேன். நேற்று ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே விருட்சம் இதழ் கவர்களை தபால் தலை ஒட்டி தபால் அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரே ஒரு பெண்மணி மட்டும் தபால் அலுவலகத்தில் இருந்தார். அவர் கோந்து ஒட்டும் இடத்தில் நான் கொண்டுவந்த விருட்சம் பாக்கெட்டுகளை வைத்துவிட்டுப் போகச் சொன்னார். உண்மையில் அந்த இடத்தில் வைப்பதற்கு என் மனம் ஒப்பவில்லை. அது போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று தோன்றியது. நான் அனுப்பும் விருட்சம் இதழ்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்ததா என்ற தகவலே தெரியாது. யாரும் சொல்லமாட்டார்கள். இதுதான் பிரச்சினை. எந்தத் தகவலும் கிடைத்தவர்களிடமிருந்து வராது. இப்படித்தான் என் நெருங்கிய எழுத்தாள நண்பர்களிடம் நான் அனுப்பும் விருட்சம் பற்றி எந்தத் தகவலும் தெரியாது. வந்தது என்று கூட சொல்லமாட்டார்கள். நான் எங்காவது அவர்களைப் பார்த்தால்கூட அவர்கள் விருட்சம் என்ற பெயரைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். அதனால் நெருங்கிய எழுத்தாள நண்பர்களுக்கு விருட்சம் அனுப்புவதை கட் செய்துகொண்டு வருகிறேன். நான் போன முறை விருட்சம் அடித்த எண்ணிக்கையை விட 200 பிரதிகளைக் குறைத்துவிட்டேன். இதனால் எனக்கு ரூ.2000 வரை ஆகும் செலவு குறைந்து விட்டது. இந்த இடத்தில் திகசியையும் வல்லிக்கண்ணனையும் நினைத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நான் விருட்சம் அனுப்பினால் உடனே படித்துவிட்டு கார்டில் பதில் எழுதுவார்கள். என்னைப் பொறுத்தவரை இது மகத்தான செயலாகக் கருதுகிறேன். உடனே அவர்கள் அனுப்பும் அஞ்சல் அட்டைகள் மூலம் விருட்சம் போய்ச் சேர்கிறது என்று எனக்குத் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 93

வாழ்வும் சாவே

தஞ்சை ப்ரகாஷ்

க.நா.சு. போயாச்சு!
ரொம்ப நல்லதாச்சு!

பாபாஜான்
உனக்குத் தெரியுமா?
ரொம்பபேருக்கு
யோசிக்கவே வராது என்று!
ரொம்பபேருக்கு
நல்லது தேடிப்படிக்கத் தெரியாதே!
தெரியுமா? அவர்தான் சொல்வார் அப்படி!

க.நா.சு. ரெண்டு மூணுஸ்வீட்
ஏக நேரத்தில் சாப்பிடுவார்!
காப்பி என்னமோ அவருக்கு
இனிச்சிண்டே கசக்கணும் நல்லா
கசந்துண்டே இனிச்சாகணும்

இலக்கியம்ன்னா பாவம்! அவருக்கு
உணர்ச்சி வசப்பட்டு வழியப்படாது

கவிதைன்னா அட! க.நா.சு.வுக்கு
புதுக்கவிதைன்னாலும் கவிதையா ஒலிக்கப்
படாது!
பாபாஜான்
ஆமா
அவருக்கு வாழ்க்கைன்னா கூட
அவர் வாழ்க்கை மாதிரி இன்னொண்ணு
இருக்கப்படாது!
வாழறது ஒண்ணு ஒண்ணும்
புதூசா ஒவ்வொரு நாளும்
கசக்கணும்! சிக்கலாயிருக்கணும்
விடுவிக்க ஏலாததா!

ஆமா கோணா மாணான்னுதான் இருக்கனும்
பாபாஜான் – உனக்கு
நகுலன் சொல்றா மாதிரி அப்டி ஒண்ணும்
ஒடனே வாழ்க்கை நமக்கெல்லாம்
க.நா.சு. ‘து’ மாதிரி “படக்”ன்னு
முடிஞ்சுறாது!
தெரியும்

வாழ்க்கை மாதிரியே அவருக்கு சாவும்
உணர்ச்சி வசப்படுத்தாமை
கடைசி வரைக்கும் ப்ரக்ஞையோட
விமர்சிக்கவே முடியாத
“புதுஸ்ஸா ” இருந்திருக்கு
எழுதிகிட்டே
சாவையும் வாழ்ந்திருக்கார்

நன்றி : என்றோ எழுதிய கனவு – கவிதைகள் – தஞ்சை ப்ராகாஷ் – மொத்தப் பக்கங்கள் : 140 – வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2010 – விலை : ரூ.60 – நந்தி பதிப்பகம், 62 பொன்னம்மாள் இல்லம், ராஜராஜன் நகர், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் 613 501

சர்வேஷின் கதைகள் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குச் சென்றேன்.

எனக்குப் பிடித்த ஆர்யகவுடர் ரோடில் உள்ள வல்லப விநாயக கோயில் அருகில் உள்ள ஸ்ரீனிவாசன் தெருவில் உள்ள வி எம் எ ஹாலில் கூட்டம். எளிமையான கூட்டம். சத்யா ஜிபி அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் பெயர்தான் சர்வேஷின் கதைகள்.
கூட்டத்தில் எனக்கும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. சத்யாவின் கதைகளை அவருடைய தாயார் படித்து கதைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்வார் என்று சத்யா குறிப்பிட்டார். 17 கதைகள் 170 பக்கங்கள் கொண்ட புத்தகம்.
சத்யாவை அவருடைய கதை ஒன்றை எடுத்து அது பற்றி கூறி விளக்கும்படி கேட்டுக்கொண்டேன். சி பி ராமசாமி ரோடு என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார்.
நான் வீட்டிற்கு வந்தவுடன் அந்தக் கதையைத்தான் வாசித்தேன்.
அந்தக் கதையில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார். üகடிகாரப் பெண்டுலத்தை நிறுத்த முடிகிறது. போராட்டம் நடத்தி இயங்கும் தொழிற்சாலையை நிறுத்த முடிகிறது. தெருவில் ஒரு பேரணி, ஒரு ஊர்வலம் என்று சொல்லி போக்குவரத்தை நிறுத்த முடிகிறது. ஆனால் யோசிகத்தபடி அலைபாயும் மனத்தைத்தான் நிறுத்த வழியில்லை ý என்று எழுதியிருக்கிறார்.
இவருடைய மற்ற கதைகளையும் படித்துப் பார்க்க வேண்டும்.

இலக்கிய அமுதம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கு அழகிஇலக்கிய அமுதம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கு அழகிரிசாமியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் பேசிய 3வது கட்ட ஒளிப்பதிவு.

22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இலக்கிய அமுதம் என்ற பெயரில். அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய மூன்றாவதும் கடைசிப் பகுதியான ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக இலக்கிய அமுதம் என்ற பெயரில்.

22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இலக்கிய அமுதம் என்ற பெயரில். அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய இரண்டாம் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ‘இலக்கிய அமுதம்’ என்ற பெயரில்.

22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இலக்கிய அமுதம் என்ற பெயரில். அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய முதல் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

வெளிப்படையான மனிதர் ந முத்துசாமி

நேற்று முகநூலில் அந்தச் செய்தி வந்தபோது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் அது உண்மை என்று உணர்ந்தபோது வருத்தமாக இருந்தது.

– விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்களில் ந முத்துசாமி பேசியிருக்கிறார். ஒருமுறை ஞானக்கூத்தன் கவதைகளை எடுத்துக்கொண்டு கூத்துப் பட்டறை நடிகர்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறார்.

எப்படி தமிழை உச்சரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர் முத்துசாமி. எப்படி ஒரு கவிதையைப் படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டுமென்று சோதனை செய்து பார்ப்பவர்.

– ஐராவதம் என்ற எழுத்தாளரை ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன். முத்துசாமிக்கு அவரைப் பார்த்தவுடன் ஆச்சரியம்.

“என்னய்யா நீயெல்லாம் இங்கே வந்திருக்கே?” என்று முத்துசாமி கேட்க, ஐராவதம் என்னைக் காட்டி, “இவர்தான் என்னை தூசி தட்டி அழைத்து வந்திருக்கிறார்,” என்றார். எனக்கு அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு.

– முத்துசாமி விருட்சத்திற்குக் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டுரையில் புரானக் கதைகளை நாடகமாக நடிக்கும்போது நடிகர்களுக்கு சாமி வந்துவிடும் என்று எழுதியிருக்கிறார்.

– என் நண்பர் ஞானக்கூத்தன் சில விஷயங்களை வேடிக்கையாகக் கூறுவார். அதில் ஒன்று ந முத்துசாமி தெளிவாகப் பேசக் கூடியவர். நடந்துகொள்பவர். அவருக்குக் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருந்தால் நன்றாக இருக்கும். அதேபோல் பிரமிள் கொஞ்சம் தெளிவாக நடந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்பார்.

– ஒருமுறை புத்தகக் கண்காட்சியின் போது க்ரியா அவருடைய முழுக் கதைத் தொகுதியை ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்,’ என்று புத்தகமாகப் போட்டிருந்தது. அதை வாங்க க்ரியா சென்றேன். அந்த இடத்தில் முத்துசாமியும் நின்றிருந்தார். புத்தகம் வாங்கிக்கொண்டு அவரிடம் கையெழுத்தும் வாங்கினேன். இந்த நிகழ்ச்சி நடந்து 9 ஆண்டுகள் ஓடிவிட்டன.

– 13.08.2016 ல் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டம் ஒன்றை நண்பர்களின் துணையோடு திருவல்லிக்கேணியில் ஒரு அரங்கத்தில் ஏற்பாடு செய்து நடத்தினேன். அக் கூட்டத்தில் ந முத்துசாமியின் பேச்சை ஒளிப்பதிவு செய்திருந்தேன். அன்று கோபத்துடன் பேசினார் முத்துசாமி. மேடையில் எல்லார் முன்னிலும் பேசக் கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டார். மரபு ரீதியாக எழுதப்பட்ட கவிதைகள் என்று ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்து பத்திரிகையில் பிரசுரம் செய்யாத சி சு செல்லப்பாவை தாக்கிப் பேசினார். முத்துசாமி இப்படிப் பேசுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒளிப்பதிவை வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. காரணம் சி சு செல்லப்பாவின் மீது நான் மரியாதை வைத்திருப்பவன். அந்த ஒளிப்பதிவை எனக்கு எடிட் பண்ணத் தெரியவில்லை.

ந முத்துசாமியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.