மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 97

ஏழுமணிச் சண்டை

கல்யாணராமன்

ஹிண்டு பேப்பர்
காலை ஏழு மணிக்கு வரும்

எடிட்டோரியல் படிக்க அப்பாவும்
எண்டர்டெயின்மெண்ட் பார்க்கத் தங்கையும்
மேட்ரிமோனியல் மேய அம்மாவும்
வான்டட் காலத்தை அலச அக்காவும்
ஸ்போர்ட்ஸ் புரட்டத் தம்பியும்

இவர்கள் படிக்காத ஏதாவதொன்றை
வெறுமனே கையில் பிடித்திருக்க நானும்
ஒரே சமயத்தில் பரபரத்துப் பாய்வோம்

மணியடித்து ஓயும்
சுவர்க் கடிகாரத்துக்குத் தெரியும்

இன்னும் சற்று நேரத்தில்
சீந்துவாரின்றிப்
பேப்பர் புரளப் போகும்
வெற்றுத் தரைக்கும் கொஞ்சம் தெரியும்
இந்த ஏழுமணிச் சண்டைக்குத்தான்
எல்லாமுமென்று.

நன்றி : நகரத்திலிருந்து ஒரு குரல் – கல்யாணராமன் – கவிதைகள் -பக்கங்கள் : 96 – பதிப்பாண்டு : ஜøன் 1998 – விலை : ரூ.30-தாமரைச் செலவி பதிப்பகம்.

துளி : 13 – எழுதித் தள்ளிவிடுங்கள்..

சில தினங்களுக்கு முன்னால் நான் தபால் கார்டைப் பயன்படுத்துவதைப் பற்றி எழுதியிருந்தேன். நான் பலருக்கு தபால் கார்டில் பேனாவால் எழுதி தபால் கார்டை அனுப்பிக்கொண்டிருந்தேன். யார் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை. சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சிலர் இது என்ன கூத்து என்று நினைத்திருக்கலாம். பொதுவாக கார்டில் எழுதுவதை நான் உள்படப் பலர் அலட்சியப் படுத்துகிறோம்.
முதலாவது சமீபத்தில் தமிரபரணி புஷ்கரத்திற்கு நெல்லைக்குச் சென்றோம். கள்ளிடக்குறிச்சியில் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கே ஒரு பெரிய கம்பியில் வந்தக் கடிதங்களைக் குத்தி வைத்திருந்தார்கள். நாம் இதுமாதிரி செய்வதையெல்லாம் விட்டுவிட்டோம். உண்மையில் அதைப் பார்த்துவிட்டு வந்தபிறகு என் வீட்டில் ஒரு நீளமான கம்பியை வாங்கி வருகிற தபால்களை குத்தி வைத்துக்கொள்ளலாமென்று நினைக்கிறேன்.
இரண்டாவது நான் விருட்சம் பத்திரிகையை என் கையால் கைப்பட எழுதி தபாலில் செலுத்துகிறேன். அப்படி கையால் எழுதி தபாலில் சேர்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் டைப் அடித்து அதை கட் செய்து ஒட்டலாம். நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
மூன்றாவது கடிதம் மூலம் நாம் நம் மனதில் படுவதைக் கொட்டுவது. இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. அக் கடிதத்தைப் பெறுபவர்கள் நமக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கலாம். அல்லது அலட்சியப் படுத்தலாம். உண்மையில் நம் எண்ணங்களை அறிவதற்கான தகுதிப் படைத்தவர்களாக அவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் நம் எண்ணங்களைக் கொட்டி விடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை நம் எண்ணங்களை காலி செய்வதுதான் முக்கியம். நம் கடிதங்களைப் பெறுபவர்கள் நமக்குப் பதில் அளிக்க வேண்டுமென்பதில்லை. எண்ணங்களை காலி செய்வது முக்கியமான செயல் என்று நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் செய்து கொண்டு வந்தால் இது அற்புதமான அனுபவத்தைத் தரும். முயற்சி செய்து பாருங்கள்.
என் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு முன் என்னிடம் வெளிநாடு செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு போனார். எனக்கு ஆச்சரியம் ஏன் என்னிடம் அவர் சொல்ல வேண்டுமென்று. ஆனால் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு சொல்லவில்லை. ஒருநாள் யாருக்கோ போன் செய்தபோது அவர் போனில் என் கை பட்டுவிட்டது. போனில் அவர் எடுத்துப் பேசுகிறார். எனக்கு ஆச்சரியம். நீ எப்போது வந்தே என்று அவரைக் கேட்டேன். அவர் சென்னை வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன என்றார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் போகும்போது சொன்னவர், வந்த விஷயத்தைச் சொல்லவில்லை என்று. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது தேவையில்லாத எண்ணம். இதனால் ஒரு பிரயோசனும் இல்லை. இந்த எண்ணத்தை ஒழிக்க என்ன செய்யலாம்? ஒரு கார்டு எழுதி அவரிடமே கேட்டுவிடலாம். அப்படி ஒரு கார்டு எழுதினால் என்னிடம் தொற்றிக்கொண்டிருக்கும் தேவையில்லாத எண்ணம் ஒழிந்து விடும் அல்லவா?
இப்படி எத்தனையோ அபத்தமான எண்ணங்களை ஒழிக்க நமக்கு போஸ்ட் கார்டு உதவி செய்யும். இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் பிரமிள் அந்தக் காலத்தில் அதிகமாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் உத்தேசித்துத்தான் போஸ்ட் ஆபிஸில் கார்டு வாங்கி வைத்திருக்கிறேன். கார்ட் மூலம் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை ஒழிப்பதுதான் என் திட்டம். ஆனால் பாருங்கள் நேற்று ஒரு பெரிய பெட்டியைத் தூக்கினேன். வலது தோள்பட்டையில் வலி. கார்டு எடுத்து எழுத முடியாத அளவிற்கு வலி. கார்டுகள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. டாக்டர் பாஸ்கரனுக்கு உடனடியாக ஒரு கார்டு எழுத வேண்டும்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பும் புகைப்படமும்

வேணு வேட்டராயன் கவிதைப் படிமமும் அழகியலும் பற்றிப் பேசினார் அவர் ஆரம்பிக்கும்போது ஆங்கிலத்தில் பேசினார். பின் தமிழுக்கு மாறினார். கவிதையைப் பற்றி மட்டுமல்லாமல் ஓவியத்தைப் பற்றியும் பேசினார்.

அவருடன் போட்டோ எடுத்ததை இங்கே பதிவிடுகிறேன். போன மாதம் நடந்த நாகார்ஜ÷னனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள மறந்து விட்டோம்.

நாளை நடைபெற இருக்கும் வேணு வேட்ராயன் கூட்டம்

கவிதைப் படிமமும் அழகியலும் என்ற தலைப்பில் நாளை விருட்சம் இலக்கியச் சந்திப்பில் ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 பேசப் போகிறவர் வேணு வேட்ராயன். அவர் மருத்துவர். கவிஞர். அவருடைய முதல் புத்தகமான அலகில் அலகு விருட்சம் வெளியீடாக வருகிறது.
மூன்று படைப்பாளிகளை அவரால் மறக்க முடியாது என்கிறார். ஒருவர் ஜெய மோகன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் தேவதேவன்.
72 கவிதைகள் அடங்கியத் தொகுப்புதான் அலகில் அலகு. இவருடைய கவிதைகள் வித்தியாசமானவை. இவர் கவதைகளைப் படிக்கும்போது இவரே ஒரு படிமக் கவிஞராக எனக்குத் தோற்றம் தருகிறது. இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

இந்த ஞாயிறு இளம் காலை
ஏன் நீலம் தரித்து நிற்கிறது.
நீண்ட நெடும் இரவெல்லாம் தோய்ந்த
நெஞ்சின் அடர்நீலம்
கடலலை மேல் மென்வானில் பாரித்து கிடக்கிறது.
மெல்ல சாலையில் ஊர்ந்து சென்றால்
எங்கு காணினும் நீலமடா !

(பழ சாறு கடையில் மொசம்பி பழங்களிலும்
நீலம் வழிகிறது)

இவருடைய எந்தக் கவிதையிலும் தலைப்பு இல்லை. 78 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை .60 தான். நாளை மாலை 6 மணிக்குக் கூட்டம். மழை வராது என்று நினைக்கிறேன். அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சமும் கூட்டமும்

போன மாதம் மறுதுறைமூட்டம் என்ற தலைப்பில் நாகார்ஜ÷னன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
முதலில் அவர் கூட்டத்திற்கு வந்திருந்து பேசுவதற்கு விருப்பப்படவில்லை. ஆனால் என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பேச ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் தனியாக மேடை மாதிரி ஒரு இடத்தில் பேச விருப்பப்படவில்லை. நானும் அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் சமமாகத்தான் அமர்ந்துகொண்டு பேசுவோம் என்றேன்.
நான் காமெராவில் அவர் பேச்சை பதிவு செய்ய நினைத்தேன். அவர் வேண்டாம் என்றார். பின் அவர் பேசியதை ஒலிப்பதிவு செய்தேன். சிலர் சொன்ன பதில்கள் அவரை ஆத்திரமடையச் செய்தது. அவர் கோபம் எனக்கு ஆச்சரியம்.
நான் இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இதற்குக் கூட்டம் வருவதைப் பற்றியும் வராமல் போவதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை.
மேலும் கூட்டத்திற்கு வருபவர்களை நான் மதிக்கிறேன். இலக்கியக் கூட்டம் நடத்தினாலும் நானும் பங்கு கொள்ளும் ஒருவன் அவ்வளவுதான்.
அடுத்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 44

தலைப்பு : கவிதைப் படிமமும் அழகியலும்

சிறப்புரை : வேணு வேட்ராயன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 17.11.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர். அலகில் அலகு என்ற முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக வர உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 96

பதிவுகள்

தி சோ வேணுகோபாலன்

இன்று வாசலில்
சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது
நாளைக்கு
இறுகி விடும்.

காக்கையின் கால் விரல்
கழுதையின் குளம்படி
குழந்தையின் காலடி
பிச்சைக்காரன்
குடுகுடுப்பைக்காரன்
உஞ்சி விருத்தி பிராமணன்
தெரிந்தவர், தெரியாதவர்
ஸ்கூட்டர் சக்கரம்
இரவின் சுவர் நிழலில்
எவனுக்கோ
இரகஸியமாய் காத்து நின்ற
கால் மெட்டி நெளிவு

இளங்கன் றின் வெள்ளை மனம்
பசுவின் நிதானம்
காளையின் கம்பீரம்
நாயின் குலப்பகை
பூனையின் கபடம்
பன்றியின் அவலட்சணம்

இறு கிய தரையில்
நிரந்தரம்
விரிசல் கண்டு
தூள் ஆனாலும்
புதியவை பதியாது
பதிந்ததும் நிலைக்காது

உருண்டுவரும் கோலிகள்
நில்லாது போகலாம்
அல்லது
குழிக்குள் விழிக்கலாம்

நன்றி : மீட்சி விண்ணப்பம் – கவிதைகள் – தி சோ வேணுகோபாலன் – க்ரியா வெளியீடு – பக்க எண் குறிப்பிடப்படவில்லை – வெளிவந்த ஆண்டு : 1977 – விலை : ரூ.5

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 95

எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை

தேவதேவன்

நண்பா ,
பூமியில் நான் கால் பாவா தபடிக்கு
என்னைச் சுமந்து செல்லும்
மறைக்கப்படாத ஒரு ரகஸ்யம் அது .
தவறுதான் ; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது.

என்னை மீறிய ஓர் அபூர்வப்பொழுதில்
அது தன து அனாதி கோலத்தில் நின்றிருந்தபோது –
அதை நீ கவர்ந்து சென்று விட்டாய்.
நான் அதைப் பூட்டி வைத்தது போலவே.
என து துக்கம் : நாம் இருவருமே குற்றவாளிகளானதில்.

அந்தச் சிலுவையுடன்
கெண்டைக்கால் சதைகள் நோக
பூமியில் எனது தூரம் கடக்கப்படவும்;
உன து தூரம் நெடுந்தொலைவு ஆகிவிடும்போது –
வாகனம் தான் எனினும் –
உன் கால்களும் தான் நோகும்.
நண்பா ,
பூமியில் நம் சுக – துக்கத்தின் கதை இவ்வளவு தானே !

பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம் ;
வெற்றிடத்தை நோக்கி ஓடி வரும் வாயு;
புனித துக்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது கருணை;
”இதை வைத்துக் கொள்ளுங்கள்,
நீங்களாய் இன்னொன்று பெறும் வரை.
அல்லது உங்களுடையது மீட்கப்படும்வரை.
நன்றியுணர்வாலோ , திருப்பிக் கொடுக்கப்பட
வேண்டுமென்ற கடப்பாட்டுணர்வாலோ
உங்களைத் தொந்தரவு செய்து கொள்ளவேண்டாம்.
அவசரமின்றி, சிரமமின்றி, இயல்பாய்
நீங்கள் ஒன்று பெற்றுக்கொள்ளும் வரை
இதை வைத்துக்கொள்ளுங்கள்.”

அது வெறும் வாகனம் அல்ல ;
இரு நண்பர்களுக்கிடையேயுள்ள உறவு;
புனித துக்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்த கருணை;
அவ்வளவு அழகாய், அற்புதமாய், புத்தம் புதியதாய்
ஆனந்தமாய் இருந்தது அது.

என து நண்பனே,
மதிப்பிற்குரிய எனது சைக்கிள் திருடனே,
இப்போது முன்னெப்போதையும்விட
அதிக அளவில் அச்சத்தின் விலங்கால்
நான் பூட்டப்பட்டதை உணர்கிறேன்.
இப்போது என் சுற்றுமதிலுக்குள்ளும் கூட
அதைப் பூட்டிவைக்கிறேன்.
அந்த வாகனத்தை விட்டு நான் இறங்கும்போதெல்லாம்
நட்புகாட்டும் உன் புன்னகையில் நான் வெட்குகிறேன்.
என து துக்கம் : நாமிருவருமே குற்றவாளிகளானதில்.

மதிப்பிற்குரிய நண்பனே !
மதிப்பிற்குரிய ‘ என்று ஏன் அழைக்கிறேன் என்றால்
உன் மீது எனக்குப் பகைமையோ அன்போ இல்லை.
என் வாகனத்தை நான் பெற வேண்டும் என்ற
நியாயமான உந்தலால் போலீஸில் புகார் செய்கிறேன்.
அவர்கள் கடமை வீரர்கள். அவர்கள் உன்மீது
என்னை விட மேலும் ஒரு மடங்கு மதிப்புடையவர்கள்.
என் வாகனத்தை மீண்டும் புதியதாய்
எனக்குப் பெற்றுத்தருவதற்குக் காரணன் நீயல்லவா ?


என் வாகனத்தைப் பெற்றுக் கொள்ள
காவல் நிலையம் வந்தபோது, அப்படியே
உன்னையும் பார்த்துப்போக நின்றேன்.
கண்ணாடியில் தெரியும்
பிம்பம் தன் உருவை உற்றுப்பார்ப்பதுபோல்,
சிறைக் கம்பிகளுக்கு அப்பால் நீ இப்பால் நான்.

அந்த இரும்புத் திரையைத் தொட்டேன்.
எத்தனையோ மெல்லிய திரைகளைத் தொட்டிருக்கிறேன்.
அப்படி ஒரு மெல்லிய திரை தான் இப்படி இரும்பாகிவிட்டிருக்கிறது
எனினும் தர்சனத்தை மறைக்காத இரும்புத்திரை அது.
என்னுள் ஒரு கொந்தளிப்பு, அதை உடைத்துக் கிழிக்க.

நன்றி : சின்னஞ்சிறிய சோகம் – கவிதைகள் – தேவதேவன் -எக்ஸ்பியர் புக்ஸ் – 4/5 மணி நகர், தூத்துக்குடி 628 003 – பக் : 40 – விலை : ரூ.15 – ஆண்டு : அக்டோபர் 1992

அரவிந்தன் வாங்கிக் கொடுத்த சோனி காமெரா..

2011 ஆம் ஆண்டு நானும் மனைவியும் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா என்ற ஊருக்குச் சென்றோம். ஒரு மாதம் இருந்தோம். எல்லா இடங்களுக்கும் சுற்றிப்பார்த்தோம். என்னதான் அங்கிருந்தாலும் எதற்கெடுத்தாலும் என் பையன் அரவிந்தை நம்பி இருக்க வேண்டியிருந்தது.
எல்லா இடத்திற்கும் காரில் போக வேண்டியிருந்தது. அங்கிருந்த சமயத்தில் அரவிந்தன் வாங்கிக்கொடுத்த சோனி காமெராவில் முதன்முதலாக பின் டிரம்மர்ஸ்ûஸ படம் பிடித்தான். இது நடந்து ஏழாண்டுகள் முடிந்து விட்டது.
எனக்கு ரொம்ப தாமதமாகத்தான் இந்த காமெராவைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. என் புதல்வனின் முதல் ஒளிப்பதிவை இங்கே வெளியிடுகிறேன்.

www.youtube.com/watch?v=DXfNpSBZNrQ

துளி : 12 – நகுலன் வேடிக்கையானவர்

நகுலன் கவிதை எழுதுவதாகட்டும், கதை எழுதுவதாகட்டும் எதாவது ஒரு சோதனை செய்துகொண்டிருப்பார். ஜனவரி 1986 ஞானரதம் பத்திரிகை க நா சு ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது.
அப் பத்திரிகைக்கு நகுலன் ஒரு வரிக் கவிதைகளும், இரண்டு வரிக் கவிதைகளும் அனுப்பி இருந்தார். ஒரு வரிக் கவிதைகளை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

ஒரு வரிக் கவிதைகள்

1. உடைமை என்பது உன்னுள் இருப்பது

2. நான் நானாக ஒரு ஜீவித காலம்

3. பிரம்மாண்டமான விருட்சங்களில் சிதில ரூபங்கள்

4. காலம் ஒரு கலைஞன்

5. வாடகை வீடு காலியாகிவிட்டது

6. கடைசி அத்தியாயம் : கவிதை முடிந்து விட்டது.

நீங்களும் இதுமாதிரியான கவிதைகளை இங்கே எழுத முடிந்தால் எழுதி அனுப்புலாம். இதோ நான் முயற்சி செய்கிறேன்.

1. கூடிய மட்டும் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள்

2. அந்தப் பெண்ணைப் பார்த்தேன். யூ டூ என்றாள்.

3. ஜாக்கிரதை : மாடிப்படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும்

4. வெறுமனே இருந்தது அறை

5. ஒன்றுமில்லை நிஜமாக.

6. பிரிந்தவர் கூடினாலும் கூடியவர் பிரிந்தாலும் வருத்தம்தான்.

நீங்களும் அனுப்பலாம்