சஞ்சாரம் நாவலுக்குக் கிடைத்தப் பரிசு

அழகியசிங்கர்

எஸ்ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்தான் சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற உதவியது. நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். ஏப்ரல் 2016ல் கொண்டு வந்தப் புத்தகம் அது. 21 புத்தகங்கள் பற்றி 3000 பக்கங்கள் படித்துவிட்டு எழுதிய புத்தகம்.
நான் முதன் முதலாகச் ‘சஞ்சாரம்’ என்ற ராமகிருஷ்ணன் புத்தகத்துடன்தான் ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற புத்தகம் ஆரம்பித்தேன். 2015ல் இந்த நாவலைப் படித்துவிட்டு எழுதினேன்.
நாதஸ்வரம் என்ற இசைக் கருவியை முன்வைத்து நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் நாவல் என்று தோன்றியது. பல உபகதைகள் என்று படிக்கப் படிக்க ஒரு திரில்லர் நாவலைப் படிப்பதுபோல் போகும் இந்த நாவல். இப்போது நான் திரும்பவும் எடுத்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். கதைசொல்லியான எஸ் ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்..

அழகியசிங்கர்

சில வாரங்களுக்கு முன் பா ராகவன் அவர்களை சங்கீதா ஓட்டலில் சந்தித்தேன். மதிய நேரம். பொதுவாக ராகவனை சந்திக்கும்போது அது உற்சாகமான பொழுதாகப் போகும். அது மாதிரி இன்னும் சில நண்பர்களைச் சந்திப்பதும் அப்படித்தான் இருக்கும். ராகவன் யதி என்ற நாவலை முடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
நான் அவரைப் பார்த்துக் கேட்டேன். “நாவல் எழுதுவது எப்படி?”
அவர் சொன்னார் : “கணினி முன்னால் உட்கார்ந்து அடித்தா நாவல் வந்துவிடும்.”
நான் யோசித்தேன். எப்படி அதுமாதிரி முடியும். ஒரு முறை அசோகமித்திரனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவரும் அப்படித்தான் சொன்னார். இதெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
என்னால் சிறுகதைகள் எழுத முடிகிறது, கவிதைகள் எழுத முடிகிறது. ஏன் கட்டுரைகள் கூட எழுத முடிகிறது. ஆனால் நாவல்?
நான் அசோகமித்திரன் நாவல்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னால் அதுமாதிரி ஒரு நாவல் கூட எழுத முடியாது. பா ராகவனின் பூனைக்கதையை எடுத்துப் படித்தேன். ஒரு பிட்டு கூட எழுத முடியாது. எனக்கு சில மாதங்களுக்கு முன் படித்த கறையான் என்ற நாவலைப் போல் எழுத வேண்டுமென்று ஆசை. ஆனால் அதுவும் சாத்தியமில்லை. அல்பெர் கம்யூ எழுதிய அந்நியன் நாவல் மாதிரி கறையான் நாவல் இருந்தது. முடியாது அதுவும் சாத்தியமில்லை. இந்தத் தருணத்தில் நகுலன் நாவல்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அதுதான் சரியாக வரும்போல் தோன்றியது. நகுலன் நாவலின் முக்கியமான ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால் யாரும் விரும்பிப் படிக்க மாட்டார்கள். யாராவது அவருடைய முழு நாவலைப் படித்து எதாவது சொல்ல முடிந்திருக்கிறதா என்றால் அது பெரிய சவாலாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றிது. என்ன இருக்கிறது என்று கூட சொல்லி விடுவார்கள். காவ்யா என்ற பதிப்பகம் அவருடைய முழு நாவல்களை டிசம்பர் 2004ல் வெளியிட்டார்கள். இன்னும்கூட அந்தப் புத்தகம் விலைக்குக் கிடைக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு நாள் காலையில் நான் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் கணினியில் அம்ருதா பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் ஞாபகம் வந்தது. அந்தக் கட்டுரைகள் வெளிவந்து 8 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. அதைத் தூசி தட்டுவோம் என்று ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் அதற்கு முன் எழுதியவற்றைப் படிக்க நேர்ந்தது. படித்தபோது இது ஒரு நாவலுக்கான சமாச்சாரம் என்று பட்டது.
அப்படித்தான் இந்தத் தன் புனைவு நாவலை உருவாக்கினேன். கிட்டத்தட்ட நகுலன்தான் நான் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்கிறார்.
நகுலன் நாவலான, ‘நிழல்கள்’ நாவலில் நகுலன், கேசவ மாதவன், சாரதி மூவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். யாரை கேசவ மாதவன் என்று குறிப்பிடுகிறார்? யாரை சாரதி என்று குறிப்பிடுகிறார் என்ற குழப்பம் இருக்கும். இவர்கள் மூவரும் எழுதுவதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். நாவலை அவர் எழுதிய ஆண்டு 1965.
என் நாவலில் எல்லோரையும் பட்டவர்த்தமாக எழுதி உள்ளேன். யாரையும் புண்படும்படி எழுதவில்லை. நகுலன் நாவல் மாதிரி என் நாவலிலும் நான் முக்கியமான கதா பாத்திரம். அதனால் இந்த நாவலை நகுலனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். என்னைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் நாவல். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் அண்டு வரை நடந்த நிகழ்ச்சிகள். 180 பக்கங்கள் கொண்ட ‘ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ என்ற என் நாவலின் விலை ரூ.150தான். முகநூல் நண்பர்களுக்காக ரூ.100க்குத் தர விரும்புகிறேன். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி எண் 9444113205.

முதல் 100 கவிஞர்களின் 100 கவிதைகள்

அழகியசிங்கர்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் தொகுதி 1 புத்தகத்தை வரும் புத்தகக் காட்சிக்குக் கொண்டு வர உள்ளேன். நான் தேர்ந்தெடுத்தக் கவிஞர்களின் கவிதைகளின் லிஸ்ட் இங்கே. இதைத் தொடர்ந்து தொகுதி 2 ம் கொண்டு வர உள்ளேன். இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த ஒழுங்கும் இல்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது என்ன கவிதை என் மனதைக் கவருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். பெரும்பாலும் புத்தகங்களிலிருந்து கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன். லிஸ்ட்டைப் படிக்கவும்.

உள்ளே

1. புத்தர் அழுதார் – வெயில்
2. ஞானப்பூங்கோடதைக்கு வயது நாற்பது – கண்டராதித்தன்
3. ராஜன் ஆதித்யப்பன் கவிதை
4. புவொன்று – லாவண்யா சுந்தராஜன்
5. அக்டோபர் முதல் நாளில் – ந பெரியசாமி
6. பிரதிபலிப்பு – நாரணோ ஜெயராமன்
7. அரிய வாய்ப்பு – பழனிவேள்
8. பரம ரகசியம் – குவளைக் கண்ணன்
9. சுடர் பொம்மை – வேல்கண்ணன்
10. பிசகு – லக்ஷ்மி மணிவண்ணன்
11. கிணற்றரவு – ஜி எஸ் தயாளன்
12. முதல் முத்தம் – சுஜாதா செல்வராஜ்
13. அருமபுகள் – ராமலக்ஷ்மி
14. தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை – கல்யாண்ஜி
15. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவருக்கு – விக்ரமாதித்யன்
16. வேஷம் – க நா சு
17. முனியமரம் – பாலா
18. எங்கள் ஜாதி – க்ருஷாங்கினி
19. பற்று – ந ஜயபாஸ்கரன்
20. ஆயா – எம் டி முத்துக்குமாரசாமி
21. தூரத்து மலைகள் – ஆனந்த்
22. நான் – நகுலன்
23. நிலவும் நிலவுகளும் – தேவதச்சன்
24. தூர் – நா முத்துக்குமார்
25. பெண்பாற் கூற்று – சுகிர்தராணி
26. தெரிதல் புரிதல் – பிரம்மராஜன்
27. போகன் சங்கர் கவிதை
28. எதன் கைதி – சமயவேல்
29. நேற்றைய கனவு – திரிசடை
30. சிட்டுக்குருவிப் பாட்டு – பாரதிதாசன்
31. ஏனென்றால் -ஜெ பிரான்சிஸ் கிருபா
32. கண்ணன் என் காதலன் – சி சுப்பிரமணிய பாரதி
33. உலகம் – ஷண்முக சுப்பையா
34. மோனலிசா -வத்ஸலா
35. நீர் பருகும் மர நிழல்கள் – சத்யன்
36. வீடு – இளம்பிறை
37. மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள் – கோ ராஜாராம்
38. பொய்க்கடை – மாலதி
39. வாழ்த்துபா – ப்ரியம்
40. உறவு – பசப்பல் கே ராஜகோபால்
41. உனக்காக இவ்வுலகம் – மா தக்ஷிணாமூர்த்தி
42. என்ன தவம் செய்தேன் – ரிஷி
43. தீர்வு – சி மணி
44. மறுபரிசீலனை – தபசி
45. உனக்காக என் அன்பே – ழாக் ப்ரெவெர்
46. கிளிக்கதை – கல்பனா
47. கடைசி பக்கத்தை நிரப்ப – தமிழ்மணவாளன்
48. மாலதி – சங்கர ராமசுப்ரமணியன்
49. இன்னும் கேள்விகள் (?)
சொல்லித் த
ந்து நகரும் வாழ்க்கை – கலாப்ரியா
50. ஞாயிறு – ஷாஅ
51. சாலைக் குயில் – நோயல் ஜோசப் இருதயராஜ்
52. தவளைக் கவிதை – பிரமிள்
53. பார்க்கும் புத்தர் – பேயோன்
54. பாலம் – கள்ளழகர்
55. தவிர்த்த கவிதை – பா வெங்கடேசன்
56. அவதார ஆசை – திலகபாமா
57. காடு – வஸந்த் செந்தில்
58. என்னை சுற்றும் ஏழு நிலவுகள் – ஸ்ரீ நேசன்
59. அன்பின் ஆறா மொழி – முபீன்
60. வாழ்க்கைப் பிரச்சினை – தாமரை
61. பயிற்சி – ஞானக்கூத்தன்
62. கொட்டாவி – சச்சிதானந்தன் – தமிழில் : சிற்பி
63. தீர்ப்பு – எஸ் வைதீஸ்வரன்
64. தூதர்கள் – சிபிச்செல்வன்
65. குழந்தைகள் – பொன் தனசேகரன்
66. இன்னும் சில பிணங்கள் – ந பிச்சமூர்த்தி
67. வீடு -அய்யப்ப மாதவன்
68. அவ்வளவுதான் எல்லாம் – ரவி சுப்பிரமணியன்
69. நீ மணி; நான் ஒலி – கவிஞர் கண்ணதாசன்
70. மிதி வண்டித் திருடன் – ராணி திலக்
71. உங்கள் வீட்டு முயல்குட்டி – பெருந்தேவி
72. கவிதை தலைப்பிடாதது – ஆத்மாநாம்
73. கொள்கை – சுந்தர ராமசாமி
74. ஒழிந்த நேரங்கள் – காளி-தாஸ்
75. இருளில் நகரும் யானை – மனுஷ்யபுத்திரன்
76. அந்நியன் – சிற்பி
77. அம்மாவும் அப்பாவும் – ஹேச் ஜீ ரசூல்
78. கனவுச் சிறைகள் – மு நடராஜன்
79. அடகுக் கடை – பத்மஜா நாராயணன்
80. பிரதீபன் கவிதை
81. கண்ணாடி – குட்டி ரேவதி
82. படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன் – அனார்
83. தேவராஜ் விட்டலன் கவிதை
84. அமர்ந்திருக்கும் நெடுங்காலம் – ஸ்ரீசங்கர்
85. நண்பனுக்கு – கு ப ராஜகோபாலன்
86. வீடும் நண்பனும் – அப்பாஸ்
87. தோன்றி மறையும் – கடற்கரய்
88. பழைய சுசீலாக்கள் – ப கங்கைகொண்டான்
89. அழகியல் – கி பி அரவிந்தன்
90. இனி வாழ்நாளில் – தேன்மொழி தாஸ்
91. அதுவரை – ராஜமார்த்தாண்டன்
92. மின்கம்பி மேலே – காசியபன்
93. வாழ்வும் சாவே – தஞ்சை ப்ரகாஷ்
94. இளையபாரதி கவிதை
95. எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை – தேவதச்சன்
96. பட்டியல்கள் – தி சோ வேணுகோபாலன்
97. ஏழு மணிச் சண்டை – கல்யாணராமன்
98. தீவட்டித் திருடர்கள் – லாவண்யா
99. ஈனிப்பு – ரா ஸ்ரீனிவாசன்
100. மின்சார வண்டி – அழகியசிங்கர்

பிறந்த தினத்தை முன்னிட்டு

அழகியசிங்கர்

முதலில் மனதுக்குப் பிடித்தக் கவிதைகள் என்ற பெயரில் ‘வெயில்’ அவர்களின் ‘புத்தர் அழுதார்’ என்ற கவிதையை முகநூலில் வெளியிட்டபோது 100 கவிதைகள் அடங்கியத் தொகுப்பொன்றை கொண்டு வருவேனென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதோ முதல் நூறு கவிதைகள் அடங்கியத் தொகுப்பு தயாராகிவிட்டது. 100வது கவிதையாக என் கவிதையைச் சேர்த்துள்ளேன்.
இன்று என் பிறந்தநாள் முன்னிட்டு இக் கவிதையைக் கொண்டு வருகிறேன். முதல் தொகுதிக்குப் பிறகு இரண்டாவது தொகுதி, மூன்றாவது தொகுதி என்று கொண்டு வர உள்ளேன். முதல் தொகுதியில் இடம்பெறாத கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலும் மூன்றாவது தொகுதியிலும் நிச்சயமாக இடம் பெறுவார்கள். யாரையும் புறகணிக்கும் நோக்கம் இல்லை. மேலும் கவிதைத் தொகுதிகளிலிருந்துதான் கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன்.
இந்தத் தொகுதிக்கு எந்த முன்னுரையும் எழுத உத்தேசம் இல்லை. கவிதைகள்தான் முன்னுரை.
வேண்டுமென்றால் இந்தத் துண்டு அறிக்கையை முன்னுரையாக வெளியிடுகிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 100

மின்சார வண்டி

அழகியசிங்கர்

கட்டையாய்க் குட்டைய
நெட்டையாய் மனிதர்கள்
முகம் அகலமாய்க்
குறுகலாய்
காது கோணலாய்
மனிதர்கள்

சளசளவென்று பேசியும்
கண்ணை மூடியும்
மனிதர்கள்

மௌனமாய்ப் பிராக்குப்
பார்த்தபடியும்
சீட்டி அடித்துக்கொண்டும்
ஏறி குதித்துக்கொண்டும்
மனிதர்கள்

பெரும் சத்தத்துடன்
அடிப்பட்டு ரத்தத்துடன்
மனிதர்கள்

கண்ணை நிமிர்த்தி
எதிர்ப்பக்கம் பார்த்தால்
போகும் வழியெல்லாம் வழியவிட்டபடி
மனிதர்கள்

நின்று நின்று ஒவ்வொரு ஸ்டேஷனாய்ப் போகும்
மின்சார வண்டி

நன்றி : யாருடனும் இல்லை – கவிதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 96 – வெளியான ஆண்டு : 1995, 2017 – விலை : ரூ.70

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 99

அழகியசிங்கர்

ஈனிப்பு

ரா ஸ்ரீனிவாஸன்

கண்ணாடிப் பெட்டகத்துள்
கண்ணை ஈர்த்தது
விற்பனைக்கிருந்த
வண்ண இனிப்புகள் –

இனிப்பின் மணம்
அழைத்தது போல
வந்து சேர்ந்தன
ஈக்களிரண்டு-

முட்டி மோதி
எட்டாத இனிப்பை ஏங்கி
கண்ணாடிப் பெட்டகத்தின் மேல்
ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு –

இனிப்பை நாடி
இனிப்பை உண்டு
இனிக்க இனிக்க
இனிப்பிற்குள்ளேயே
மரித்துக் கிடக்கும்
உடன்பிறப்பு ஈக்கள் –

கண்ணில் பட்டது –
கருத்தில் படாதது.

நன்றி : கணத் தோற்றம் – கவிதைகள் – ரா ஸ்ரீனிவாஸன் – விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 – வெளியான ஆண்டு : 2001 – விலை : ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 98

அழகியசிங்கர்

தீவட்டித் திருடர்கள்

லாவண்யா

தீவட்டித் திருடர்கள் மூவர் பண்டொரு நாளில்
அம்மணி அம்மாளின் வீடு புகுந்தார்.
அரிவாளொருவன் கையில் இரும்புத்தடியும்
தீவட்டியும் மற்றிருவர் கையிலுமாக.

மருமகளும் பேரனும் முற்றத்திலுறங்கினார்.
அகமுடையாரும் பிள்ளையும் அயலூர் சென்றவர்
அடுத்த நாள்தான் வரவிருந்தார்கள்.

அமைதியாய் இருக்கச் சொல்லி அரிவாளைக்
கும்பிட்டாளம்மணி. நெல்லொரு சாக்கிலும்
கம்பங்கருதும் மல்லாக்கொட்டையும்
மற்றுமிரு சாக்கிலவர் முன் வைத்தாள்
தங்க வளையல்களிரண்டோடு.

தண்ணீர் கேட்டதட்டினானொருவன்.
பயத்தில் வெண்கலச் சொம்பிலிருந்த பாலைத்
தந்தாள் நீரென்றெண்ணி.
பாலைக் குடித்தவன் தீமிதித்தவன் போலானான்.
புறப்பட்டானிருவரோடும். எதையும்
எடுத்துச் செல்லாமல். நல்லாயிரம் மணியென்று..
பின்னாறிரண்டாண்டுகள் ஆடிப்பெருக்கன்றிரவு
சுங்கடிச் சேலையும் மஞ்சள்கொத்தும்.
தீவட்டித் திருடர்கள் தலைவாசலில் வைத்தாரென
அம்மணி அம்மாளின் சந்ததிகள் சொல்வார்கள்.

எப்போதேனும் நினைவில் வருவாள் அம்மணி,
அப்போதெனக்குத் தோன்றும்.

நன்றி : கடலின் மீது ஒரு கையெழுத்து – கவிதைகள் – லாவண்யா – விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 59 – வெளியான ஆண்டு : 2009 – விலை : ரூ.30

துளி : 15 – வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு..

அழகியசிங்கர்

சமீபத்தில் பிரமிளின் எல்லா எழுத்துக்களையும் 6 புத்தகங்களாக பிரமிளின் பக்தரும் நெடுங்கால நண்பருமான கால சுப்ரமணியம் கொண்டு வந்துள்ளார். இது அரியஞ்; பணி. இதை சுப்ரமணியம் மாதிரி ஒரு தீவிரவாதிதான் செய்து காட்டமுடியும்.
இதேபோல் வெங்கட் சாமிநாதனுக்கு ஒருவர் முயற்சி செய்தால் 10 புத்தகங்களுக்கு மேல் ஒருவர் கொண்டு வர வேண்டும். அவ்வளவு எழுதியிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். ஆனால் இதை யாரால் செய்ய முடியும்? அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் சேகரிக்க வேண்டும். அதன் பின் அவர் எழுதாத கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டும். அவருடைய நண்பர்கள்தான் இதற்கெல்லாம் உதவி செய்ய வேண்டும். நான் முயற்சி செய்யலாமென்று அவர் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பது என்னால் ஊகிக்க முடியவில்லை.
பிரமிளுடைய எல்லாக் குணங்களும் வெங்கட் சாமிநாதனுக்கும் உண்டு. யாரையாவது பிடிக்கவில்லை என்றால் கடைசி வரை அவருக்குப் பிடிக்காது. கடைசிவரை அசோகமித்திரனை அவருக்குப் பிடிக்கவில்லை.
பங்களுரில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். என்னுடன் அவர் சரியாகப் பேசவில்லை. காரணம் நான் அசோகமித்திரனுக்கு வேண்டியவன் என்று அவரே நினைத்துக் கொண்டது. நான் அதுமாதிரி இல்லை என்று எவ்வளவு சொன்னாலும் அவரை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை. இப்படி ஒரு பிடிவாதக்காரரை தமிழ் இலக்கிய உலகில்தான் பார்க்க நேர்கிறது. பிரமிளும் அப்படிப்பட்டவர்தான். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பார்க்க மாட்டார். பேச மாட்டார்.
üநினைவுகளின் சுவட்டில்ý என்ற பெயரில் வெங்கட் சாமிநாதன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். முதல்பாகம் அகல் வெளியீடாக டிசம்பர் 2009ல் வெளிவந்துள்ளது. 336 பக்கங்கள் கொண்ட இப் புத்தக விலை ரூ. 170தான். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. இப் புத்தகத்தை வெளியிட்டவர் மெய்ப்பொருள். 464 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரு.420.
முதல் தொகுதியில் தன் சுய சரிதையில் வெங்கட் சாமிநாதன் ஒரு இடத்தில் இப்படி கூறியிருக்கிறார்.
üஎன் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறி அவர்கள் உன்னதமான மனிதர்கள்தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும் அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள்தான்.ý என்றெல்லாம் எழுதி உள்ளார். வெ சா குறிப்பிடுகிற மகாராஷ்டிரத்தில், ஹம்ஸô வாடேக்கரும், வங்காளத்தில் வினோதனியின் சுய சரிதங்களையும் வாசிக்க வேண்டும்.
இரண்டாவது தொகுதியான நினைவுகளின் சுவட்டில் பதத்கம என்னிடம் விற்பனைக்குள்ளது. ரூ.420 விலையுள்ள இப் புத்தகத்தை ரூ.300 விற்க விரும்புகிறேன். விருட்சம் வளர்ச்சி நிதிக்காக ஸ்ரீனிவாசன் அளித்தது. வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

ஒப்பனை நகரம்

பிரபு மயிலாடுதுறை

அந்நகரம்
ஒப்பனையாளர்களைக் குறைவாகவும்
சுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும்
கொண்டு
பரபரப்பாக
ஒப்பனை செய்து கொண்டிருந்தது

எதிரேயிருக்கும் மனிதர்களை
ஆடிகளாய்ப் பெரும்பாலானோர்
எண்ண எண்ண
ஒவ்வொருவரின் பிம்பமும்
முடிவிலா சாத்தியங்களுடன் பெருகியது

நாடக மேடைகளின் பின்பக்கமென
அந்நகரில்
வஸ்திரங்களும் ஆபரணங்களும்
விரவிக் கிடந்தன

ஒரு சிறிய முக்கில்
பாலகர்கள் பத்து பேர்
ஒரு பாக்கெட் சீனி வெடியை
மெழுகுவர்த்தி
ஊதுவத்தி

வைத்துக் கொண்டு
வெடித்து வெடித்து
ஆரவாரித்தனர்
அவ்வப்போது

அவர்களைப் பார்த்து
மகிழ்ந்து மகிழ்ந்து
சிரித்தான்
சேலைத் தொட்டிலில்
உட்கார்ந்திருந்த குழந்தை

துளி : 14 – மறக்க முடியாத இரண்டு புத்தகங்கள்

ஒவ்வொரு முறையும் சாகித்திய அக்காதெமி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைத் தேடுவது என் வழக்கம்.
அப்படி தேடிய இரண்டு புத்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
ஒரு புத்தகத்தின் பெயர் வசவண்ணர் வாக்கமுது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1972ல் வெளிவந்துள்ளது. மறுபதிப்பு 1993. இப் புத்தகத்தின் விலை ரூ.85 தான். ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம்.
வசவண்ணர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகம் இது. வசவண்ணரால் பாரதத்தின் ஆன்மக் கருவூலம் வளர்ச்சி பெற்றது. கன்னட இலக்கிய ரலாற்றில் ஒரு யுகபுருஷரான வசவண்ணர் உயர்ந்த இறை உணர்வை எளிமையும், சுவையும் மிக்க இனிய பாடல்களில் படைத்தவர். இப்புத்தகம் 500 வாக்கமுதுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது சாகித்திய அக்காதெமி. அதிலிருந்து சிலவற்றை இங்கு அளிக்கிறேன்.
வசவண்ணர் கூடல் சங்கம தேவாவை முன்வைத்து தன் வாக்கமுதுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

1

ஐயா, ஐயா என்றழைத்துக் கொண்டிருக்கிறேன்
ஐயா, ஐயா எனக் கதறிக் கொண்டிருக்கிறேன்
‘ஏன்’ எனல் ஆகாதோ, ஐயனே!
இரவு பகலாக உன்னையே அழைக்கிறேன்.
மௌனமோ, கூடல் சங்கமதேவா!*

2.

காட்டில் வழி தவறிய பசுவினைப் போல்
‘அம்மா, அம்மா’ வென் றலறுகின்றேன்;
‘அம்மா, அம்மா’ வென்று கதறுகின்றேன்
‘வாழ்ந்து போ’ வென்றருளாயோ,
கூடல் சங்கம் தேவா!

அடுத்தப் புத்தகம் கபீர் அருள்வாக்கு என்ற புத்தகம். 250 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம் மிகவும் உபயோகமான புத்தகம். இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1964ஆம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பதிப்பு 1992ஆம் ஆண்டு. புத்தகத்தின் விலை ரூ.65 தான்.

சம்பிரதாயத்தினரிடையே நிலவிவரும் நம்பிக்கைப்படி அவர் ஓர் அந்தண விதவையின் மகவாவார். சமூகக் கொடுமைக்கு அஞ்சி அவர் தாய் தன் குழநதையை ‘லஹர் தாரா’ என்ற குளத்தின் கரையருகில் எறிந்து விட்டாள். எதிர்பாராத பொருத்தமாய் நீரு என்கிற முஸல்மான் சேணியன் ஒருவன் அவ் வழியே சென்று கொண்டிருந்தான். பச்சிளங் குழந்தையைக் கண்ட அவன் உள்ளத்தில் இரக்கம் பரிந்தெழுந்தது. குழந்தையை எடுத்து வந்து தன் வீட்டிலே சீராட்டி வளர்த்தான். இதுதான் கபீர்தாஸின் வரலாறு.

கபீர்தாஸர் நாட்டில் உண்டாகியிருந்த சலசலப்பையும், குலவையும் பார்த்தார். நிலைமையைப் புரிந்துகொண்டு மக்களின் கவனத்û8த அந்த ‘அடிப்படைப் பரம்பொருள்’பால் திரும்பச் செய்தார். அவர் காட்டிய உண்மை இரண்டு சமயத்தினருமே ஏற்றுக்கொள்ளத்தககதாக இருந்தது.
கபீர் வாக்கை இப்போது காண்போம்.

– அடியார்கள் எல்லாம் நான்கு கைகள் கொண்ட தேவனைப் போற்றி ஏமாறுகின்றனர். கபீரோ, எண்ணற்ற கைகள் கொண்ட பரம்பொருளையே வழிபடுகின்றனர்.

– என்னுடையதென்று என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பதெல்லாம் உன்னுடையதுதான். உன்னுடையதை உன்னிடமே தந்துவிடுவதில் எனக்கு என்ன செலவு.

– மனத்தின் எண்ணபடி நடக்காதே. மனத்தின் அபிப்பிராயங்கள் (ஒன்றல்ல இரண்டல்ல) அநேகம். மனத்தை ஏற்க சவாரி செய்கிற (அப்படிப்பட்டஜ) சாது யாரோ ஒருவர் தாம்.

இந்த இரண்டு புத்தகங்களில் கபீர் அருள்வாக்கு அட்டையெல்லாம் உடைந்து போகும்படி உள்ளது. இன்னும் எத்தனைப் பிரதிகள் உள்ளதோ தெரியவில்லை.

வசவண்ணர் வாக்கமுது அட்டை போகவில்லை ஆனால் மிகவும் பழையத் தாள்களைக் கொண்ட புத்தகம். இன்னொருமுறை இந்தப் புத்தகங்களை சாகித்திய அக்காதெமி வெளியிடுமா என்பது தெரியவில்லை.

திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி

என் திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு நிமிடம்தான் பேசி உள்ளார். அந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்க விரும்புகிறேன். 50 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.170. 200 பக்கங்களுக்கு மேல்.