எழுத்தாளர் பிரபஞ்சன் ராயப்பேட்டையில் கோபாலபுரத்தில் குடியிருந்தார். புதுமைப்பித்தன் கதைகள் முழுவதும் படித்துவிட்டு அது குறித்து வாரம் ஒருமுறை அவருடைய வாசகர்களுடன் உரையாட நினைத்தார். கூடவே ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கவும் விரும்பினார். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு இது தொடர்ந்து நடக்கவில்லை. இதெல்லாம் ரொம்ப ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. முக்கியமான ஒன்றாக இதைக் கருதுகிறேன். கதைகளை வாசிக்கவும் கதைகளை எழுதவும் ஒரு தளத்தை அவர் உருவாக்க முயன்றார். முடியவில்லை.
பிரபஞ்சனின் சிறுகதைகள் 3 பாகங்களாக வெளிவந்துள்ளன. அவருடைய எல்லாக் கதைகளையும் வாசிக்கும்போது பிரபஞ்சனின் உலகம் என்னவென்று தெரியும். பிரபஞ்சனாவது கொஞ்சமாவது அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். ஆனால் அவரைப்போல் திறமையாக எழுதக்கூடிய வேறு பல எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை.
எழுத்தாளர் மா அரங்கநாதன் பெயரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கடந்த இரண்டாண்டுகளாகப் பல படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கிறது. மா அரங்கநாதனின் குடும்பத்தினர் மூலம் இது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு வெளி ரங்கராஜனுக்கும், யூமா வாஸ÷கிக்கும். அவர்களுக்கு என் நன்றி. நூற்றுக்கணக்கான கிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி உள்ள எழுத்தாளர் மா அரங்கநாதன். அவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் யாரும் சரியாக அவரை வாசிக்கவில்லை. பெயரைக்கூட யாரும் குறிப்பிடமாட்டார்கள். இப்போது கூட வாசிக்கிறார்களா என்பது தெரியாது. சாகித்திய அக்காதெமி பரிசு கூட அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் கதைகளைப்போல் மற்ற மொழிகளில் யாராவது கதைகள் எழுதியிருக்க வாய்ப்புண்டா என்பதும் தெரியவில்லை. அவர் காலத்தில் அவருடைய படைப்புகளை உணர்ந்து அதற்கான அங்கீகாரம் அளித்தார்களா என்பது தெரியவில்லை. அவர் சாதித்தாலும் அவர் எழுத்தைக் குறித்து யாரும் உரத்துப் பேசவில்லை. அவரும் அதைக் குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை. அவருடைய எழுத்தின் முக்கிய அம்சம். மனிதாபிமானம். அவர் காலத்தில் அவர் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்கள் படைப்புக்கு அங்கீகாரம் அல்லது கௌரவம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர் மா அரங்கநாதன். இன்று அவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களைக் கௌரவம் செய்கிறார்கள்.
எழுத்தாளர்களைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவர்கள் வாசிப்பவர்கள். இந்த வாசிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்கள் மௌனமாக வாசித்தபடி பேசாமல் இருக்கிறார்களா? அல்லது இல்லவே இல்லையா என்ற கேள்வியெல்லாம் என்னுள் எழாமல் இல்லை.
எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பெயரைக் கூட இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அவரைப்போல ஒரு எழுத்தாளர் தமிழில் கிடைப்பது அரிது. யாரும் அவரைப்போல ஒரு எழுத்தை எழுதியிருக்கவே முடியாது. மனப்பிறழ்வை எழுத்தில் வடித்து வெற்றி கண்டவர்.
இவர்களையெல்லாம் இப்போதைய வாசகர்கள் அறிவார்களாக மாட்டார்களா என்பது தெரியவில்லை. புதிதாக உருவாகும் ஒவ்வொரு வாசகனும் அறிந்துகொள்வது அவசியமில்லையா? இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் இப்படி விடுபட்டுப் போன பட்டியலில் இல்லாமல் இல்லை.
இந்த ஆண்டும் தினமணி கதிர் – சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது முறையாக என் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்து அதற்கென்று ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று நினைக்கும் எழுத்தாளர் சிவசங்கரியைப் பாராட்டுகிறேன். இந்தத் திட்டத்திற்கு தினமணி கதிரும் உறுதுணையாக இருப்பதற்குப் பாராட்டப்பட வேண்டும்.
தமிழில் இதெல்லாம் நடந்தால்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். ஆனால் வாசகர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டுவது என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் நான் தங்கியிருக்கும் பீனிக்ஸில் தமிழ் சங்கம் என்று எதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். பெரிய ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது. தமிழ் மொழி தெரிந்தும் தமிழில் பேசாதவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள். இங்குள்ள தமிழ்ச்சங்கம் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள். தமிழில் பேசுபவர்களே தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கே தமிழ்ச் சிறுகதையோ கவிதையோ படிக்கப் போகிறார்கள்?
ஆனால் தமிழில் எழுதப்படும் கதைகளையோ கவிதைகளையோ அல்லது கட்டுரைகளையோ யாரும் பேசத் தயாராக இல்லை. தமிழ் மட்டுமல்ல வேறு மொழிகளிலாவது எதாவது பரிமாற்றம் நடக்கிறதா என்றால் இல்லை.
இன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பல குடும்பங்களிலிருந்து பலர் கலந்து கொண்டார்கள். அவர்களில் தமிழில் பேசுபவர்கள் மிகக் குறைவு. தெலுங்கில் பேசுபவர்களும் இந்தியில் பேசுபவர்களும் அதிகம். ஆனால் அந்தந்த மொழிகளில் சிறப்பாகப் பேசப்படும் கதைகளைப் பற்றியோ கவிதைகளைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. நான் இதைப் பற்றிப் பேசினால் என்னை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை வெட்டியாகப் பேசியும், உணவுபண்டங்களைத் தின்று கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.
மராட்டி மொழி பேசும் ஒருவரிடம் பேசினேன். ‘உங்கள் மொழியில் நீங்கள் படித்த சிறுகதையோ கவிதையோ சொல்ல முடியுமா?’ என்று கேட்க நினைத்துப் பேசாமலிருந்தேன். அவருக்கும் அதற்கும் ரொம்ப தூரம் மாதிரி தெரிந்தது. யாருக்கும் அதுமாதிரியான சிந்தனை சிறிதும் இல்லை. கேளிக்கை நடக்கும் இந்த இடத்திற்கு புத்தகம் எடுத்துக்கொண்டு வராமல் இருந்துவிட்டேனே என்று தோன்றியது. எடுத்துக்கொண்டு வந்திருந்தால், கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் உணவு பின் புத்தகம் படிப்பது என்று பொழுதைக் கழித்திருப்பேன். நான் கிட்டத்தட்ட காலையிலிருந்து மாலைவரை கேளிக்கையைப் பார்த்துக்கொண்டும் அதில் பங்கு கொண்டும் இருந்தேன்.
அமெரிக்கா போகிறேன் என்று எழுத்தாளர் கந்தசாமியிடம் சொன்னபோது, ‘நிறையா பொழுது கிடைக்கும்யா புத்தகங்கள் படிக்கலாம், எழுதலாம்,’ என்றார். அவர் ஒவ்வொரு முறை அயல்நாடு செல்லும்போது ஒரு புத்தகம் எழுதாமல் வர மாட்டார். அவர் சொன்னதில் எழுதுவதில் முன்னே பின்னே இருந்தாலும், புத்தகங்களைப் படிக்கிறேன். இதே சென்னையில் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டேன்.
அதேபோல் அதிகமாக தமிழ் சினிமாக்களைப் பார்க்கிறேன். பொதுவாக சென்னையில் இருக்கும்போது யாராவது சொன்னால்மட்டும் தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பேன். தியேட்டரில் படம் பார்ப்பது அவதியாக இருக்கும். இங்கு நெட்டில் சுலபமாக (பணம் கட்டியிருப்பதால் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்) படங்களைப் பார்க்கிறேன். தினமும் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் இருக்க மாட்டேன்.
இன்தூசம் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களில் நான்கு மதிப்பெண்கள் மேல் வாங்கும் படங்கள் எல்லாம், எல்லாவிதங்களில் பார்க்க சிறப்பாக இருக்கிறது. ஐந்து கட்டங்களாகப் பிரித்து மதிப்பெண்கள் தருகிறார்கள். 1. நடிப்பு 2. சிரிப்பு 3. காதல் 4. கதை 5. படத்தின் உருவாக்கம் என்று.
நான்கு மதிப்பெண்கள் வாங்கும் படங்கள் மட்டுமல்ல 3லிருந்து 4க்குள் வாங்கும் படங்களும் சிறப்பாக உள்ளன. நான் முதலில் புத்தகங்கள் படிப்பதில் தீவிரமாக இருந்தவன், சினிமா பார்ப்பதில் தீவிரமாக மாறிவிட்டேன். தினமும் ஒரு படமாவது பார்த்துவிடுவேன்.
முழுவதும் தமிழ் சினிமாப்படங்கள்தான் பார்க்கிறேன். பார்க்கப் பார்க்க எதாவது தோன்றினால் எழுதலாம் என்று தோன்றியது. பாலா இயக்கிய நாச்சியார் என்ற படத்திற்கு 4 மதிப்பெண்கள் மேல் குறிப்பிட்டிருந்தார்கள். எனக்குப் பொதுவாக பாலா படங்களைப் பார்ப்பதற்குத் தயக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் 4 மதிப்பெண்களுக்கு மேல் என்பதால் நாச்சியார் படத்தைப் பார்த்தேன். பாலா இயக்கிய இப்படத்தின் மீது அளவுகடந்த மதிப்பு கூடி விட்டது.
அதேபோல் யூ டர்ன் என்ற படம் பார்த்தேன். என்னடா இருக்கப்போகிறது இந்தப் படத்தில் என்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார்களே என்று தோன்றியது. ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது. ஆனால் பல புதியவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் அவ்வளவாய் தெரியவில்லை.
இப் படங்கள் எல்லாவற்றையும் சப்டைட்டிலுடன் காட்டுகிறார்கள். உலகம் முழுவதும் எல்லா மொழிபேசுபவர்களும் இப்படங்களைப் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. தமிழ் படங்களைப் பார்ப்பதுபோல் மற்ற மொழிப்படங்களையும் பார்க்கலாமென்று நினைக்கிறேன். ஆனால் தமிழிலிலேயே அதிகமாகப் படங்கள் பார்க்க வேண்டியிருப்பதால், மற்ற மொழிப் படங்களை முயற்சி செய்யவில்லை.
சென்னையில் உலகத் திரைப்பட விழாக்கள் நடக்கும்போது கட்டாயம் பல படங்களைப் பார்த்துவிடுவேன். இந்த ஆண்டு அவற்றைப் பார்த்தபோது கொஞ்சம் வெறுப்புதான் தோன்றியது. ஆனால் இப்போது பார்க்கும் தமிழ் படங்கள் மீது எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை. ஒரு படம் பார்த்தவுடன் இன்னொரு படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.
7ஆம் தேதி காலையில் 9 மணிக்குக் கிளம்பி விட்டோம். செடோனோ என்ற இடத்திற்கு. அரவிந்த் கார் ஓட்டிக்கொண்டு வந்தான். கையில் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். சுற்றிலும் மலை. செங்கல் நிறத்தில் தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. பல மணிநேரம் காரில் பயணம். ஒரு இடத்தில் கற்களின் மீது கால் வைத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது. அப்படியே நடந்து சென்று பார்த்தபோது சலனமில்லாமல் ஆறு போய்க்கொண்டிருக்கிறது. அதில் பலரி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள். நான் எல்லாவற்றையும் கையில் வைத்திருந்த சோனி காமெரா மூலம் படம் எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் காமெராவிலிருது கணினிக்கு மாற்றும் சிறிய ஒயரை ராகவன் காலனியில் விட்டுவிட்டு வந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இங்கே அதுமாதிரியான ஒயர் கிடைக்குமா என்ற கேள்வி கடந்த 1 மாதத்திற்குமேல் என்னை குடைந்துகொண்டிருந்தது. சென்னையில் இதுமாதிரி நிலமை வந்தால், அங்கும் இங்கும் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன். ஒரு வழியாக என் பையன் (அரவிந்த்) வாங்கிக்கொண்டு வந்தேன். இதோ காமெராவிலிருந்து ஒரு காட்சியை உங்களுக்கு ஒளிபரப்புகிறேன். வீட்டிற்குத் திரும்பும்போது மணி 9.30 ஆகிவிட்டது.
இந்தப படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது படத்தில் என்ன பெரிதாகச் சொல்லமுடியப்போகிறது இயக்குநர் ராமால் என்ற எண்ணம் ஏற்பாடாமல் இல்லை. ஆனால் படம் பார்த்தப்பின்தான் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சாதனா மீது அளவு கடந்த பச்சாதாப உணர்வு ஏற்படுகிறது. அப்படி ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணுடன் போராடும் அப்பாவாக நடிக்கும் மம்மூட்டியும் நம் கண்களை விட்டு அகலவில்லை.
ஆனால் இதையெல்லாம் கொஞ்சங்கூட போரடிக்காமல் படமாக எடுத்துக்கொண்டு போகிறார் ராம்.
இந்த முடக்குவாதப் பெண்ணைப் பார்த்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணின் அம்மா வேறு ஒருவருடன் வாழ ஓடிப்போய் விடுகிறாள்.
அவளுடைய செயல் அவள் கணவன் அமுதவன் துபாயிலிருந்து வருவதற்குக் காத்துக்கொண்டிருநததுபோல் இருந்தது. அமுதவனுக்கு கூட இருந்தவர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை. இந்தப் பெண்ணை எப்படியாவது தொலைத்துவிடு என்பதுபோல் அவன் அம்மாவே சொல்கிறாள்.
குடியிருக்கும் வீட்டிலும் அவனால் இருக்க முடியவில்லை. அதனால் தனியாக ஒரு மலையடிவாரத்தில் உள்ள வீட்டை பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வசிக்கிறான். யாரும் மனிதர்கள் இல்லாத இடமாகவும், குருவிகள் அழியாத இடமாக அவன் வசிக்குமிடம் இருக்கிறது. அங்கும் அவனுக்குச் சோதனை. வெள்ளைக்காரியிடமிருந்து பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை அவனிடமிருந்து அபகரித்துக்கொள்ள முயற்சி நடக்கிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டை விற்க மறுக்கிறான் அமுதவன்.
கதை முழுவதும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்துக்கொள்வதுதான் இந்தக் கதை. இதை ஒரு கதைச் சொல்லியின் பாணியில் படத்தை இயக்கி உள்ளார் ராம். அத்தியாயம் அத்தியாயமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார்.
அந்தத் தனிமையான இடத்திற்கு உதவி செய்ய வரும் ஒரு பெண்மணி ஒருநாள் மட்டும் உதவி செய்ய வந்துவிட்டுப் போய்விடுகிறாள். அமுதவன் தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறேன்.
அப்போதுதான் தன்னை விஜயலட்சுமி என்று அறிமுகம் செய்துகொண்டு ஒரு பெண் வருகிறாள். சாப்பாட்டுக்கு வழியில்லை அங்கயே இருக்கிறேன். எந்த வேலையும் செய்கிறேன் என்கிறாள். அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவள். அவனை ஏமாற்ற வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளுடன் ஏற்பட்ட காதலால் அமுதவன் அவளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். இதெல்லாம் ஒரு நாடகம் என்பதும் அவனிடமிருந்து அவன் இடத்தை அபகரிக்கும் திட்டம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
அமுதவன் அந்த இடத்தை அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும்போது, விஜயலட்சுமியும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட கணவனும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதைக் கேட்கும்படி சொல்கிறார்கள். அந்த இடத்தில் அமுதவன் சொல்வதைக் கேட்கும்போது படம் பார்ப்பவர்கள் மனம் நெகிழ வைக்கும். கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு இந்த இயற்கைதான் சொல்லிக் கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சொல்கிறான். இப்படி வசனங்களை அங்கங்கே தெறிக்க விடுகிறார் ராம். பல நெகிழ்ச்சியான காட்சிகளை மிகவும் நுணுக்கமாக எடுத்துக்கொண்டு போகிறார்.
தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தொடர்ந்து அமுதவன் படும்பாடுதான் இந்தக் கதை. சென்னை நகரத்தில் அவர்கள் ஓட்டல் அறைகளில் தங்குகிறாரகள். தன் பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டு அமுதவன் கார் ஓட்டச் செல்கிறான். அந்தப் பெண் ஜன்னல் வழியாக அவள் அப்பா செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஏக்கத்துடன். இன்னொரு இடத்தில் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் தெரிகிறது. பள்ளிக்கூட யூனிபாரம் மீது அவள் கவனம் செல்லுகிறது. அதுமாதிரி ஒரு யூனிபாரம் வாங்கிக் கொடுக்கிறார் அப்பா. குவா
தனியாக ஓட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்வது அமுதவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால் தன் பெண்ணை காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறான். அங்கும் அந்தப் பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை. அத்துடன் இல்லாமல் அடித்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். அமுதவன் தனியாக ஒரு வீடு பார்த்து அழைத்துப் போகிறான். ஆனால் அவன் இல்லாத நேரத்தில் பெண்ணைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. இந்தத் தருணத்தில்தான் அறவாளி மீரா என்பவருடன் அவனுக்கு அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை உதவிக்குக் கூப்பிட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.
அமுதவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான். பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்று. கடற்கரைக்குப் பெண்ணை அழைத்துச் செல்கிறான். யூனிபார்முடன் பெண்ணும் வருகிறாள். தற்கொலைக்கு கடலை நோக்கிப் போகப் போக பெண்ணிற்குப் புரிந்து பெரிதாக சத்தம் போடுகிறாள். அந்தத் தருணத்தில்தான் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மீரா வருகிறாள்.
தன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள மீராவைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத் தொடருகிறான் அமுதவன்.
உலகச் சினிமா அளவிற்கு தமிழ் சினிமாவும் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு பேரன்பு என்ற படம் ஒரு உதாரணம். அதை இயக்கிய ராமை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இதேபோல் பல தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டுமென்று தோன்றுகிறது.
ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதைப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்து முடித்தப்போது எனக்கு அசோகமித்திரனின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன.
என்னிடம் அசோகமித்திரன் கதைகள் படிக்க எந்தப் புத்தகமும் இங்கு (அமெரிக்காவில்) கொண்டு வரவில்லை. ஆனால் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது?
இங்கு அசோகமித்திரனை விட ஜானகிராமன் சிறந்த எழுத்தாளர் என்றோ ஜானகிராமனை விட அசோகமித்திரன் சிறந்த எழுத்தாளர் என்று நிரூபிக்கப் போவதில்லை.
ஆனால் இரண்டு பேர்கள் எழுதுகிற சிறுகதைகளை அலச முடியுமா என்று யோசிக்கிறேன்.
ஜானகிராமன் அசோகமித்திரன் மாதிரி கதை எழுத முடியாது. ஆனால் அசோகமித்திரன் நினைத்தால் ஜானகிராமன் மாதிரி எழுத முடியும். அதாவது 50 சதவீதம்.
உதாரணமாக அக்பர் சாஸ்திரி கதையை எடுத்துக்கொண்டால் அசோகமித்திரன் இப்படி எழுதி இருப்பார். அக்பர் சாஸ்திரி கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தார். யார் கூப்பிட்டும் எழுந்திருக்கவில்லை என்று எழுதி முடித்திருப்பார். ஆனால் ஜானகிராமன் இன்னும் கூடுதலாக.
68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.
இப்படி ஒரு முடிவை அசோகமித்திரன் சொல்லவே மாட்டார். அசோகமித்திரன் ஒரே வரியில் வாசகனை வசியப்படுத்துவதுபோல் போறப்போக்கில் சொல்வதுபோல் சொல்லிவிட்டுப் போய்விடுவார். ரிக்ஷா என்ற கதையில் அசோகமித்திரன், ஒரு இடத்தில், ‘உலகம் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்று விட்டது,’ என்று எழுதி இருப்பார். மொத்தமே இரண்டு பக்கங்கள் கொண்ட கதையில் இப்படி ஒரு வரியை எழுதிவிட்டு ஒன்றும் தெரியாமல் போய்விடுவார்.
ஆனால் ஜானகிராமனோ விட மாட்டார். அவருடைய வர்ணனைகளும் வித்தியாசமாக இருக்கும்.
கள்ளி என்கிற கதையில் ஜானகிராமன் இப்படி எழுதுகிறார். ‘கெட்டவர்கள் சேர்கிற பட்டணம். கெடாதவர்கள் சேர்கிற பட்டணம். பசிக்கிறவர்கள் வந்து சேர்கிற பட்டணம். இருக்கிறவர்கள் போதாதென்று ஊரிலிருந்து வேறு பணத்தைக் கொண்டு வந்து வயிற்றில் அடிக்கிறவர்கள் தொகையைப் பெருக்குகிற பட்டணம்.’
என்றெல்லாம் எழுதிக்கொண்டு போயிருக்கிறார். அசோகமித்திரனால் இதுமாதிரியெல்லாம் எழுதியிருக்கவே முடியாது. முடியாது ஏன்பதைவிட தேவையில்லை என்று நினைப்பவராக எனக்குப் படுகிறது.
ஜானகிராமன் எழுதியிருக்கிற துணை என்ற கதையில், ஒரு இளைஞன் இரண்டு வயதானவர்களை மஸ்டர் ரோலில் கையெழுத்துப் போட அழைத்துக்கொண்டு போய் திரும்பிவரும்போது குதிரை வண்டி குடை சாய்ந்து விடும். ஆனால் இங்கு அடிபடுவது இளைஞன் மட்டும்தான். 3 மாதம் அலுவலகம் போக முடியாமல் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இதை அலாதியாக ஜானகிராமன் விவரித்துக்கொண்டே போவார். இதை ஜானகிராமன் இப்படி விளக்குகிறார். ‘எனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைந்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.’ இதையே அசோகமித்திரன் இவ்வளவு வரிகள் எழுதியிருக்கமாட்டார்.
எலும்பு முறிவோடு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்கொண்டிருந்தான் என்று முடித்திருப்பார்.
குழந்தைக்கு ஜ÷ரம் என்ற கதையில் ஜானகிராமன் கொண்டு போகிற முடிவை அசோகமித்திரன் எழுதியிருக்கவே
மாட்டார். பாதியிலேயே கதையை முடித்திருப்பார்.
சரவண வாத்தியார் பாடப்புத்தகங்களை அச்சிடும் பஞ்சுவைப் பார்த்து புத்தகம் எழுதிக்கொடுத்ததற்காகப் பாக்கிப் பணம் கேட்கிறார். அவன் அவருடன் தகராறு செய்கிறான். கொடுக்கவேண்டிய பணத்தைக் குறைவாகச் சொல்கிறான். அவனைப் போய்ப் பார்க்கக்கூடாது இனிமேல் என்று நினைக்கிறார் சரவண வாத்தியார்.
குழந்தைக்கு சுரம். வேற வழியில்லை. அவனைப் பார்க்கத் திரும்பவும் பார்க்கப் போகவேண்டும். போகிறார். அங்குப் போய் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் பஞ்சு மனைவிக்கு டாக்டரை அழைத்து வந்து உதவி செய்கிறார். இதை ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இங்கு அசோகமித்திரன் எழுதியிருந்தால் இவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க மாட்டார்.
நான் இங்கு இரு எழுத்தாளர்களையும் ஒப்பிட்டு எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதி உள்ளேன். ஒவ்வொருவரின் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.
அமெரிக்கா வருவதற்கு முன் நவீன விருட்சம் 108வது இதழ் தயாரித்து முடித்து விட்டேன். பின் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். சிலருக்கு அனுப்பாமல் விட்டிருப்பேன். 108வது இதழ் கனமான இதழ். அத்தனைப் பக்கங்கள் ஒரு இதழைக் கொண்டு வர முயற்சி செய்யக்கூடாது. அந்த இதழில் குறிப்பிட்டபடி அமெரிக்காவிலிருந்து 109வது இதழ் தயாரிக்க விரும்புகிறேன். அமெரிக்கா வந்தபிறகு இங்கு எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளைக் கொண்டு வரலாம் என்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நான் நினைத்தபடி நடக்காமல் போகலாம். முகநூலில் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். யாராவது இதைப் பார்த்துப் படைப்புகளை அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக உள்ளேன்.
படைப்புகளை அனுப்ப விரும்புவோர் என்னுடைய இ மெயிலில் படைப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அனுப்பலாம்.
அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் ‘குழந்தைக்கு சுரம்’ என்ற கதை.
எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை எழுத்தாளனின் கதை என்று இதைக் குறிப்பிடலாம். அந்த எழுத்தாளனின் குழந்தை சுரம் வந்து அவதிப்படுகிறது. ஜானகிராமன் கதையை இப்படி ஆரம்பிக்கிறார்:
இந்த ஒரு பாராவிலேயே கதையின் முழு வடிவத்தைக் கொண்டு வந்து விடுகிறார்.
குழந்தைக்கு சுரம். டாக்டரைப் பார்க்க வேண்டும். கையில் பணம் இல்லை. அந்தத் தருணத்தில் கடவுளைத் திட்டுகிறார். ஏன் இது மாதிரி வியாதியை குழந்தைக்குக் கொடுத்தாய் என்று.
பஞ்சபகேசன் இவருடைய புத்தகங்களை அச்சிட்டு விற்பவர். அவனை பாவி என்று குறிப்பிடுகிறாள் மனைவி. அவனிடம் போய் நின்றாலும் பணம் கிடைக்காது என்பது இவருடைய எண்ணம். உண்மைதான். பள்ளிக்கூட மாணவர்களுக்கு எழுதிக்கொடுக்கும் புத்தகங்கள் எல்லாம் சின்னராஜா என்ற பெயரில் வெளிவருகிறது. சரவணா வாத்தியார் என்கிற இவர் எழுதிக் கொடுக்கிற புத்தகங்கள்தான். 4 வருடங்களாக இது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு புத்தகத்திற்கு ரூ.50 விதம் 20 புத்தகங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.400 வரை தர வேண்டும்.
400 ரூபாய் தர வேண்டும் என்கிறார் சரவணன் வாத்தியார். பஞ்சபகேசனோ 300 ரூபாய்தான் தர வேண்டும் என்கிறான். இரண்டு பேருக்கும் வாக்குவாதம். இப்போது பணம் இல்லை கொடுத்து அனுப்புகிறேன் என்கிறான். இருவருக்கும் பேச்சு தடித்து விடுகிறது. இந்தப் பேச்சில் கடுப்பாகி விடுகிறார் சரவண வாத்தியார். பின் ஒரு கடுதாசியைக் கேட்டு வாங்கி எல்லாப் புத்தகங்களுக்கும் உரிய தொகையான ரூ.1000 வாங்கிக் கொண்டதாக எழுதி பஞ்சுவிடம் கொடுக்கிறார். இதைப் பார்த்துத் திகைக்கிறார் பஞ்சு.
இனிமேல் இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவேனா என்று முறைத்துவிட்டு வந்து விட்டார் சரவணா வாத்தியார்.
இப்போது குழந்தைக்கு சுரம். பாவி பஞ்சாபகேசனைப் பார்த்து வரச் சொல்கிறாள் மனைவி. அவனிடம் அச்சடிக்க இன்னொரு புத்தகம் எழுதிக்கொடுத்திருக்கிறார் சரவண வாத்தியார். அதை வாங்கி வருவதற்குப் போய் கொடுக்க வேண்டிய பணத்தையும் வாங்கி வரச்சொல்கிறாள். குழந்தைக்குச் சுரம். வேற வழியில்லை மனைவியின் தொந்தரவால் பஞ்சுவை திரும்பவும் பார்க்கப் போகிறார். கையில் 1 ருபாய் 40 காசுக்கள் எடுத்துக்கொண்டு போகிறார். பஸ் டிக்கட் பத்து பைசாக்கு வாங்கிக்கொண்டு போகிறார்.
இக் கதையைப் படிக்கும்போது பணம் கிடைக்குமா குழந்தையின் சுரம் சரியாகி விடுமா என்ற எண்ணமெல்லாம் ஏற்படுகிறது. ஆனால் ஜானகிராமன் வேறு விதமாகக் கதையைத் திருப்புகிறார். இதுதான் அவருடைய கற்பனைத் திறன். ஆற்றல்.
சரவண வாத்தியார் பஞ்சபகேசன் வீட்டிற்குப் போனபோது, பஞ்சபகேசன் மனைவி உடல் நிலை சரியில்லாமல் படுத்துக கிடக்கிறாள். அன்று மாலை 5 மணியிலிருந்து ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பிரஞ்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கிறாள். தத்ரூபமாக இந்த நிகழ்ச்சியை ஜானகிராமன் அசால்டாக விவரித்துக்கொண்டு போகிறார். ஒருவர் கட்டாயமாக இந்தக் கதையைப் படிக்க வேண்டும்.
சரவணா வாத்தியார் பஞ்சு மனைவி உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து பதட்டம் அடைகிறார்.
ஒரு டாக்டரை அழைத்து வர ஓட்டமாய் ஓடுகிறார். எப்படியோ ஒரு டாக்டரை அழைத்து வந்து பஞ்சுவின் மனைவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்கிறார்கள். சரவணா வாத்தியார் இதற்கு உதவியாக இருக்கிறார். இந்தத் தருணத்தில் தன் குழந்தை சுரத்தில் அவதிப்படுவது மறந்து விடுகிறது அவருக்கு.
எல்லாம் முடிந்து அவர் தன் வீட்டுக்கு நடந்தே போகிறார்.
ஜானகிராமன் கடைசியாக இப்படி எழுதுகிறார் : ‘நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக் கொண்டிருந்தன.’
இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன், என்னடா இது இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.