நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள் – 2

அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1963ல் ஐந்திணை பதிப்பகம் மூலம் வந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. ஆறாம் பதிப்பு 1990ல் வந்துள்ளது.  அதன்பின் எத்தனைப் பதிப்புகள் வந்துள்ளன என்பது தெரியாது.

11 கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் கதை அக்பர் சாஸ்திரி.  அவநம்பிக்கையுடன் முன்னுரை எழுதி இருந்தாலும் ஜானகிராமன் எழுத்துக்கு வாசகரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மறுப்பதிற்கில்லை.  இந்தப் புத்தகத்தின் 6வது பதிப்பைததான் வாங்கியிருக்கிறேன்.  புததகம் வாங்கிய ஆண்டு 1990.   தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் பார்க்கலாம்.  பொதுவாக கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.  ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஒரே மையம் இல்லை. அதாவது ஒன்றின் தொடர்ச்சி இன்னொன்றில் இல்லை.

முதல் கதை அக்பர் சாஸ்திரி என்றால் இரண்டாவது கதை

‘துணை’  இப்படி விதம் விதமாய் கதைகள் அமைத்ததால் வாசகர்கள் கதைகளை வாசிக்கும்போது போரடிக்காது.  இதோ üதுணைý கதையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்

ஐந்து தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தில் எல்லோரும் பென்சன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் பென்சன் மாஸ்டர் டே க்கு அந்த வீட்டிலுள்ள வயதானவர்கள் கையெழுத்துப் போட போவார்கள். வீட்டில் உள்ள புதல்வர் அவர்களை அழைத்துப்போவார். அவரும் பென்சன்காரர்.  தாத்தா கொள்ளுத்தாத்தா என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு  போவார்.  ஆனால் இந்த முறை காசிக்குச் சென்று விட்டதால், அவரால் வரமுடியாது. வயதானவர்களை கஜானாவிற்கு அழைத்துக்கொண்டு போகப் பக்கத்து வீட்டில் இருக்கும் சப்ரெஜிஸ்டார் பையன் கிருஷ்ணமூர்த்தி வருகிறான். உண்மையில் நான் இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும்போது வயதானவர்களுக்கு எதாவது நடக்கப் போகிறது என்று நினைத்துக்கொண்டு படித்தேன்.   ஆனால் கதை முடிவு வேறு மாதிரியாக இருந்தது.  

மாட்டு வண்டியில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் கிழவர்களை அழைத்துக்கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு அடி. எலும்பு முறிவு. இதுதான் இந்தக் கதையின் வேடிக்கை.  கிழவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. 

இன்னொரு கதை.  ‘மரமும் செடியும்’ என்ற பெயர்.  மூங்கில்காரர், ஈயக்காரர் பற்றிய கதை.  இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதில்லை.  பேசினாலும் அவ்வளவாய் நெருக்கமாகப் பேசுவதில்லை.  கீழைச்சேத்தி நாட்டாண்மைக்காரரால் மூங்கில் காரரும் ஈயக்காரரும் பிரசிடென்ட் தேர்தலில் நிற்கிறார்கள்.  வந்தது வினை.  மூங்கில் காரரின் தேர்தல் சின்னமாக மரம் கிடைக்கிறது.  ஈயக்காரரின் சின்னமாக செடி.   மரத்திற்கும் செடிக்கும் போட்டி.  இந்தத் தேர்தலால் பாதிக்கப்படுவது மூங்கில்காரர்.  அவர் தேர்தலில் வெற்றிபெற அதிகமாகப் பணம் செலவு செய்கிறார்.  ஆனால் எப்படியோ ஈயக்காரர்தான் வெற்றி அடைகிறார். 

தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்கிறார் மூங்கில் காரரைத் தூண்டியவர்.  மரமும் செடிக்கும் ஓட்டுச் சீட்டில் பார்க்க வித்தியாசமாகத் தெரியாது.   அதனால் மூங்கில்காரரின் மரச் சின்னத்திற்குப் பதிலாக ஈயக் காரருக்கு ஓட்டு விழுந்து  விடுகிறது.  குமைந்து குமைந்து போகிறார் மூங்கில்காரர்.  மூங்கில்காரர் கீழைச் சேத்தியில் எலுமிச்சைக் கொல்லை ஒன்று வைத்திருக்கிறார்.  மிகவும் பிரயாசைபட்டு 400 எலுமிச்சைக் கன்றுகள் தோண்டி இறைத்தும்,  பலன் மூக்கழுகை.  எலுமிச்சை வெம்பி விழுந்து கொண்டிருந்தது.  அந்தக்  கொல்லையை ஈயக்காரர்  மகன் வாங்கிக்கொண்டான்.  அவனுக்கு 3  மடங்கு அதிகமாக விலைக்கும் விற்று விட்டார் மூங்கில் காரர். அவர் ஏமாற்றி விற்றதாகத்தான் நினைக்கிறார்.  ஆனால் வேறு எதோ  நடக்கிறது.  இதுதான் கதை. 

“நல்லகாலம் எலெக்ஷன் வந்தது. கொலலையும் கிடைத்தது,” என்று சந்தோஷப்படுகிறான் ஈயக்காரர் பையன். அதனால்தான் வசதி கிடைக்கிறது.  மூங்கில்காரர் ஏமாந்து கொல்லையை விற்று விடுகிறார்.  அதுவும் 3 மடங்கு விலை ஏற்றி விற்றதாக அவருக்கு எண்ணம்.  எலெக்ஷன் ஒரு தில்லுமுல்லு என்று புலப்படுத்துகிறார் ஜானகிராமன். 

இன்னொரு கதையான ‘காட்டு வாசம்’ இப்படிச் செல்கிறது.  சுந்தரரரஜன் என்பவன் அவன் நண்பன் ராமசாமியைப் பார்க்க கிராமத்திற்கு வருகிறான்.  ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு.  இருவரும் பேசுகிற பேச்சுதான் இந்தக் கதை.  சுந்தரராஜன் ஒரே பையன்.  சாகும்வரை அவன் அப்பா செய்த கொடுமையைப் பற்றி சொல்கிறான்.  ராமசாமி அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று புகழ்கிறான்.  என் அப்பாவும் கோபக்காரர் வெளியே பார்க்கத்தான் சாதுவாக இருப்பார் என்கிறான் ராமசாமி.  ராமசாமி அப்பாவுக்கு அவனைத் தவிர ஒரு அண்ணன் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.  எல்லார் வீட்டிற்கும் அவன் அப்பாவும் அம்மாவும் சென்று விடுவார்கள்.  இந்த முறை கோபத்தில் ஒன்றும சொல்லாமல் இன்னொருவர் வீட்டிற்குப் போய்விடுகிறார். 

இந்த இடத்திலிருந்து கதை வேறு பாதைக்குச் சென்று விடுகிறது.   ஆசிரமம் கட்டிக்கொண்டு தனியாக வசிக்கும் சக்கரபாணியிடம் போய்விடுகிறது கதை.  பரதேசி கோலம் போட்டுக்கொண்டு வானப்பிரஸ்தம் எடுத்துக்கொண்டு மனைவியுடன் வந்து விடுகிறார் சக்கரபாணி.  அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும். எல்லார் மீதும் உள்ள கோபத்தால்.  இப்படித் தனியாக வந்தும் அவரால் காப்பி சாப்பிடுவதையும் புகையிலை போடுவதையும் விட்டுவிட முடியவிலலை. 

உள்ளூரிலே இப்படி ஒரு ஆள் இருக்கும்போது அவருடன் பழகாமல் நையாண்டி செய்கிறாயே என்று நண்பனை கிண்டல் செய்கிறான் சுந்தரராஜன்.

பேச்சுவாக்கில் கதை சொல்வது போல் நகர்ந்தாலும் பிள்ளைகளுடன் பெற்றவர்கள் சேர்ந்து வாழ முடியவில்லை என்பதைச் சொல்வதுபோல் உள்ளது கதை.

                                                                               (இன்னும் வரும்) 

நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள்

சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.  

கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன்.  இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.  முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை.

ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல்  இருந்தது.  இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அதைப் படிக்கலாம் என்று  தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில். 

ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத.  அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.  

புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்கு.  அந்த வகையில் தி ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி என்ற இப்புத்தகத்தைப் பற்றி எழுதலாமென்று தோன்றியது.

இந்தச் சிறுகதைத் தொகுதியை ஐந்திணைப் பதிப்பகத்திலிருந்து ரூ.13.50 க்கு 1990 ஆண்டில் வாங்கியிருக்கிறேன் என்று நினைககிறேன் பொதுவாக ஒரு புத்தகத்தை வாங்குவதாக இருந்தால் அந்தப் புத்தகத்தில் எந்தத் தேதியில் எந்த ஆண்டு வாங்கியிருக்கிறேன் என்று குறித்து வைத்திருப்பேன்.   ஏனோ இந்தப் புத்தகத்தில் அதைக் குறித்து வைக்கவில்லை.  நம் வாழ்க்கை கடந்து போகிறது.  நம் கையில் உள்ள இந்தப் புத்தகமும் கடந்து போய்விடும்

தி ஜானகிராமன் கதைத் தொகுதியான அக்பர் சாஸ்திரியில் 11 கதைகள் உள்ளன.  

இங்கு தி ஜானகிராமன் தொகுதியில் எழுதி உள்ள முன்னுரையைக் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.  

“இத் தொகுதியில் வெளியாகியுள்ள கதைகள் வெவ்வேறு ஆண்டுகளில் மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன், கல்கி, ஆனந்தவிகடன், உமா, காதல் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை.    

இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான்.  சிறுகதைகள் என்றுகூடச் சொல்லவில்லை.

அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள் உலக இலக்கியத்திலேயே பத்துப் பேருக்குள் இருந்தால் அதிகம்.  எனவே சாட்சிகள், அல்லது வேறு எதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்., ” என்கிறார் தி ஜானகிராமன்.

ஏன் இப்படி எழுதி உள்ளார் ஜானகிராமன் என்பது எனக்குப் புரியவில்லை.  இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட் 1963.  அப்போது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தாம் எழுதுவது சிறுகதை இல்லை என்ற குழப்பம் இருந்திருக்கும்.  ஜானகிராமனுக்கும் இது மாதிரியான குழப்பம் இருந்திருக்கிறது.  இந்த 11 கதைகளை ஒரு முறை இல்லை 2 முறை 3 முறைகள் படித்துக்கொண்டே இருக்கலாம்.  ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாய் கட்டமைத்து உள்ளார். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக எடுத்துப் பேச வேண்டும்.

முதல் கதையான அக்பர் சாஸ்திரி எனற கதையை எடுத்துக்கொள்வோம். 

அந்தக் கதையை இரண்டு மூன்று முறைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.  அப்படி ஒரு கதையை எழுதுவதற்குப் பெரிய திறமை வேண்டும்.  அது ஜானகிராமன் போன்ற மேதையால்தான் முடியும்.  

கதை நடக்குமிடம்  ஓடும் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில்.  அதில் கூடியிருக்கிற மனிதர்களிடையே நடக்கிற உரையாடல்தான் இக் கதை.  கதையில் தென்படுகிற கோவிந்த சாஸ்திரி ஒரு அலட்டலான நபராகக் காட்சிப்படுத்தப் படுகிறார்.  அவரைப் பற்றி தி ஜானகிராமன் இப்படி விவரிக்கிறார்.  

‘சாட்டை மாதிரி முறுக்கு  ஏறிய உடம்பு.  நேரான உடம்பு. உட்கார்ந்திருந்தபோது கூட வளையா நேர் முதுகு.’  இப்படிப் போகிறது இந்தக் கதை. எக்ûஸஸ் இலாக்காவில் சூப்பிரண்டாக இருக்கும்  நபருக்கு இரண்டு பிள்ளைகள்.  நோயாளி மனைவி.   கோவிந்த சாஸதிரி என்று அறியப்படுகிற அக்பர் சாஸ்திரி எதிர் சீடடில இருக்கிறார்.  அக்பர் சாஸ்திரக்குப் பதில் சொல்லிக்கொண்டு வருகிறார சூப்பிரண்டு பயபக்தியுடன்.  அக்பர் சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகிறார்.  உடம்பை எப்படிப் பேண வேண்டுமென்று.  அக்பர் சாôஸ்திரி, அவருடைய வாழ்நாளில் ஒரு முறைகூட மருத்துவரைப் பார்த்ததில்லை என்று பெருமை அடித்துக்கொள்கிறார். உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திக்கொண்டவன் அக்பர்.  அதனால் கோவிந்த சாஸ்திரி யைப் பார்த்து அக்பர் சாஸ்திரி என்ற பெயரை வைத்தவர் அவருடைய சம்பந்தி.  

சூப்பிரண்டின் இரண்டு புதல்வர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறார் அக்பர் சாஸ்திரி என்கிற கோவிந்த சாஸ்திரி :

‘மலேரியா அடிச்சுக் கிடந்தாப்ல இருக்கே ரண்டும்.’ என்று.  பின் பையன்கள் உடம்பைப் பற்றி விஜாரிக்கிறார்.  குதிரைக்கு வைக்கிற கொள்ளை கொடுக்கச் சொல்கிறார். அவர் பாட்டி வைத்தியம் செய்து கொள்வதைப் பற்றி பெரிதாகத் தற்பெருமை அடித்துக்கொள்கிறார்.  அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சூப்பிரண்டு வருத்தத்துடன் சொல்கிறார் : üநான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ டாக்டர் வராத நாளே கிடையாது,ý என்று. தன் மனைவியைப் பற்றி மனம் வருத்தத்துடன் பேசிக்கொண்டு போகிறார். 

இந்த இடத்தில் சூப்பிரண்டு மனைவியைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  ‘வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை. வாயில் குழறல். அழகாகக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறி விட்டிருந்தாள்.’

இப்படி தத்ரூபமாகப் படிப்பவர் கவனத்திற்கு ஒரு கதாபாத்திரத்தை ஜானகிராமன் எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார்.  அந்த அம்மாளின் தீராத தலைவலியைத் தீர்க்க இயற்கை மருத்துவத்தை அக்பர் சாஸ்திரி சொல்ல,  அதை ஒரு நோட்டில் குறித்துக்கொள்கிறார் சூப்பிரண்டு.  

இந்தக் கதையில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபர் ஒருவர் ஜன்னல் பக்கத்தில் உள்ள இருக்கையை விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருப்பவர் வேறு யாருமில்லை ஜானகிராமன்தான்.

68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.   

இப்படிப் பேசிக்கொண்டு வந்தவர் இறங்கும் இடமான கும்பகோணம் வரும்போது எதிர்பாராதவிதமாய் மார்பைப் பிடித்துக்கொண்டு இறந்தும் விடுகிறார்.  

கதையின் முடிவில் ஜானகிராமன் இப்படி முடிக்கிறார்.

‘டாக்டர் உதவியில்லாமல் அக்பர் சாஸ்திரி மனிதன் செய்கிற கடைசி காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.’

இனி இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் புரட்டிப் பார்க்கலாம்.

                                                                                     (இன்னும் வரும்)

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர்

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர்

நீண்ட குழல் விளக்கொன்று
ஒளிர்ந்து கம்பீரமாக நின்றது
குறுகிய வட்டத்தில்
ஒளியைச் சிந்திய வண்ணம்
வெளியே தலையைக் காட்டி
போகலாமாவென்று யோசித்தேன்
வேண்டாம் என்றது
ஒளிர் விளக்கு
வாழ்க்கை வித்தியாசமாக இருக்கிறது
எண்ணங்கள் எங்கங்கோ
சென்றவண்ணம் உள்ளன

                    27.03.2019
                    பீனிக்ஸ்
                    27.03.2019

துளி : 40 – அவர்கள் நாகரீகமானவர்கள்

அழகியசிங்கர்

ஆரம்பத்தில் நான் அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது, அமெரிக்கா ஒரு பணக்கார நாடு.  பிச்சைக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.  பிச்சைக்காரர்கள் இல்லாத உலகமே இல்லை.  என் கற்பனை முட்டாள்தனமானது.  ஏன் அப்படி நினைத்தேன் என்றால் செல்வ செழிப்புள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால்.  

2011 ல் நான் வந்தபோது நியூயார்க் என்ற இடத்தில்தான் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன்.  அப்போது நான் ப்ளோரிடாவில் இருந்தேன்.  இப்போது பினீக்ஸ்.  சில தினங்களுக்கு முன்னால் நான் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் தட்டியை வைத்துக்கொண்டு இருந்தாள்.  தட்டியின் வாசகம் இப்படி எழுதியிருந்தது.  எதாவது உதவி செய்ய முடியுமா என்று.  

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிச்சை எடுப்பவர்கள் கூட நாகரீகமான முறையில் ஒரு தட்டியில் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக் கிறார்களே என்று.

சென்னையில் காலையில் சரவணபவன் அருகில் வந்தால் குறைந்தது நாலைந்து பேர்களாவது தென்படுவார்கள்.  அவர்களிடம் ஒரு ரூபாய் காசைப் போட்டால், முறைத்துப் பார்ப்பார்கள்  ஏன் வாங்குவதற்குக் கூட யோசிப்பார்கள்.  குறைந்தது ஐந்து ரூபாயாவது வேண்டும்.  ஒரு மாதிரியாக நம்மை முறைத்துப் பார்ப்பார்கள்.

திரும்பவும் இன்னொரு முறை ஒரு ஆண் பிச்சைக்காரரைப் பார்த்தேன்  தட்டியுடன் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.  தட்டியில் எந்தவிதத்திலும் உதவி செயலாம் என்ற வாசனம் எழுதப்பட்டிருந்தது.  அவரைக் கூப்பிட்டு ஒரு டாலர் கொடுத்தேன்.  வாங்கிக்கொண்டு, கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்றார் அவர்.

சென்னையில பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது நமக்குப் பச்சாதாப உணர்வு ஏற்படாமல் இருக்காது.  ஆனால் இங்கே பிச்சை எடுப்பவர்கள் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் பார்த்து ரசித்தது.  சுத்தம்.   இங்குக் காணப்படுவதுபோல் சுத்தம் வேறு எங்கும் காண முடியாது.  இதே சென்னையில் நடந்து போகும்போது  பல பேர்கள் தெருவில் காறி உமிழாமல் செல்வதில்லை.  நமக்கே அருவெறுப்பாக இருக்கும்.  அமெரிக்காவிலோ எதாவது குப்பையைப் போடுவதாக இருந்தாலும் அதற்கான குப்பைத் தொட்டியில்தான் போடுகிறார்கள்.

இன்று காலையில் வ்ரைஸ் என்ற கடை வாசலில் வாகனம் வைத்திருக்கும் இடத்தில் சிகரெட் துண்டு ஒன்றைப் பார்த்தேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு இந்தியர்தான் வாகனம் ஓட்டும் இடத்தில் சிகரெட் துண்டைப் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதுவும் குறிப்பாக தமிழர்கள்தான் இருக்க வேண்டுமென்றும் யோசித்தேன்.

துளி : 39 – வாரிசுகள் வேண்டுமா?

அழகியசிங்கர்

இன்றைய அரசியல் கட்சிகளை ஒருவர் கூர்ந்து பார்த்தால் வாரிசு இல்லாத கட்சி எதாவது இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.  

அந்தக் காலத்தில் அரசர்கள் ஆட்சியைப் பார்க்கும்போது ஒருவர் ஆட்சி முடியும்போது அந்த அரசரின் வாரிசுதான் ஆட்சி செய்வார்.  வாரிசு இல்லையென்றால் யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள்.  முகலாயர்கள் ஆட்சி செய்யும்போது இது இன்னும் தெளிவாகவே தெரிகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில் இது வாரிசு ஆட்சி இல்லை என்று மறுத்தாலும் வாரிசு ஆட்சிதான் மறைமுகமாகவோ நேரிடையாகவே நடைபெறாமலில்லை.

நேருக்குப் பிறகு இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, இவர்களுக்குப் பிறகு ராகூல் காந்தி என்று இது தொடரத்தான் செய்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை வகுத்துள்ளார்.  இதற்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.  இன்னும் தேர்தலில் கலந்துகொள்ளும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகளின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் தேர்தலில் போட்டி இடுகிறார்கள்.

இது தவறு என்று யாராவது வாதிட்டால் தவறு இல்லை என்பதைத்தான் சொல்வேன்.  ஏன் அரசியலை மட்டும் இந்த வாரிசு குறித்து குறை சொல்கிறோம்.  எல்லா இடங்களிலும் இந்த வாரிசு இல்லாமல் இல்லை.  

எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவர் புதல்வன் மருத்துவராகவும், ஒரு வழக்குரைஞரின் புதல்வன் வழக்குரையராகவும் காலம் காலமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.   இன்று சினிமாவில் கூட வாரிசுகள் உருவாகாமல் இல்லை.  மூத்த நடிகர் நடிகைகளின் வாரிசுகளின் புதல்வரோ புதல்வியோ சினிமாவில் நடிக்காமல் இல்லை.  அல்லது சினிமாப்படங்கள் தயாரிப்பாளர்களோ இயக்குநர்களாகவோ இல்லாமல் இல்லை.  இதையெல்லாம் நாம் மறுப்பதில்லை.  ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம்.

இசையை எடுத்துக்கொள்வோம்.  இசையில் பிரபலமானவர்களின் சில வாரிசுகள் அதே இசையில ஈடுபாடு கொண்டு புகழ் அடைகிறார்கள்.

இதில் ஒன்றே ஒன்று கவனிக்க வேண்டும். யார் இதில் உறுதியாக கடைசி வரை நிற்க முடியும்.  இன்று வாரிசு அரசியல்வாதி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் மக்களின் தயவு வேண்டும்.  மக்கள் மனதில் இடம்பெறாதவரை வாரிசுகள் ஆட்சியில் இடம் பெறுவது கடினம்.  

இந்த வாரிசுகள் ஏன் இதிலெல்லாம் ஈடுபடுகிறார்கள்.  காரணம் ஒன்றுமில்லை பணமும், புகழும்தான்.

ஆனால் ஒரு வாக்கியம் மட்டும் என்னைச் சிந்திக்க வைக்காமல் இருக்காது.  உதாரணமாக வாத்தியார் பையன் மக்கு என்று சொல்வார்கள்.  ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதைப் பற்றி யோசிப்பேன்.  

அதேபோல் எழுத்தாளர்களின் வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வர மாட்டார்கள்.  ஏன்என்றால் அதன் மூலம்

எதுவும் கிடைக்காது.  

ந பிச்சமூர்த்தி என்ற எழுத்தாளர் இருந்தார்.  அவர்தான் தமிழ் புதுக்கவிதைக்கு முன்னோடி.  அவருடைய வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வரவில்லை.  உண்மையில் ந பிச்சமூர்த்தியின் பெருமையை அறியாதவர்கள்தான் அவர்கள்.  காரணம் பணம் சம்பாதிக்க முடியாது.  வறுமையில் வாட வேண்டும்.  யார் இருப்பார்கள் அப்படி இருக்க? 

பாரதியைப்போல ஒரு வாழ்க்கையை பாரதியைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள வாரிசு இருக்க விரும்ப மாட்டார்கள்.  இது மாதிரியான அவதி அரசியல்வாதியின் வாரிசுக்கு வரப் போவதில்லை.  எல்லாம் பண மயம்.  புகழ் மயம்.  

அதனால் அரசியலில் வாரிசு இருக்கட்டும்.  மக்கள் மனதில் அவர்களால் இடம் பெற முடிகிறதா என்று பார்ப்போம். 

துளி : 38 – அசோகமித்திரனின் நினைவுகள்



அழகியசிங்கர்

2017ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அப்பா இறந்து விட்டார்.  அசோகமித்திரன் துக்கம் விஜாரிக்க ரவியுடன் வந்திருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அந்தத் தள்ளாத வயதில் துக்கம் விஜாரிக்க வந்திருக்கிறார் என்று தோன்றியது.  சில நிமிடங்கள் இருந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.  ஆனால் அசோகமித்திரனால் மாடி ஏறுவது சிரமம்.  அதனாலேயே அவர் டிஸ்கவரி புக் பேலஸில் கூட்டம் என்றால் மாடி ஏறி வர விரும்ப மாட்டார். என் வீட்டிற்கு மாடி ஏறி துக்கம் விஜாரித்ததை மறக்க முடியாத அனுபவமாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   சிலசமயம் அசோகமித்திரன் போன் செய்யும்போது நான் வீட்டில் இல்லாதத் தருணத்தில் அப்பாதான் போனை எடுப்பார்.  ஹோமியோபதி மருந்துகளை அவருக்குச் சிபாரிசு செய்வார்.  கான்சரே ஹோமியோ மருந்துகளால் தீர்க்க முடியும் என்ற அளவிற்கு நம்பக் கூடியவர். 

  என் டேபிளில் அசோகமித்திரனின் மொத்தக்  கதைகளையும் உள்ள புத்தகத்தை (கவிதா பதிப்பகம்) வைத்திருந்தேன். அப்பா எடுத்துப் படித்துவிட்டார். 

கூட்டம் நடத்தும் நான் கூட வயதானவர்களின் அவதியை உணராமல் இருப்பேன்.  டிஸ்கவரியில் மாடிப்படிக்கட்டுளில் ஏறும்போது சுவரைப் பிடித்துத்தான் ஏற வேண்டும். அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு வருவது சிரமம் என்பதை நான் கூட யோசிக்காமலிருந்திருக்கிறேன்.

ஒவ்வொரு கூட்டத்தில் அசோகமித்திரன் பேசும்போது நான் இனிமேல் அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.  அவர் கடைசியாகக் கலந்துகொண்ட விருட்சம் 100வது இதழ் விழாவின்போது கூட இதைக் குறிப்பிடாமல் இல்லை. அப்படிப் பேசினாலும் அசோகமித்திரனுக்கு ஒன்றும் ஆகாது என்றுதான் நினைப்பேன். 

பெண் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து அசோகமித்திரன் பல கதைகள் எழுதியிருக்கிறார்.  புதுமைப்பித்தன் குறித்து ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, அசோகமித்திரன்தான் தன் கதைகள் மூலம் பெண் பாத்திரத்தை சிற்ப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.   அசோகமித்திரன் பெண் பாத்திரங்கள் மீது நமக்கு ஒருவித பச்சாதாப உணர்வு ஏற்பட்டுவிடும். மானசரோவர் என்ற அவர் நாவலில் வெளிப்படும் அவருடைய பெண் பாத்திரங்கள் மீது ஏதோவித பரிதாப உணர்வும் அந்தப் பெண் பாத்திரங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற கவலையும் ஏற்படாமல் இருக்காது.  இதேபோல் உணர்வை வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் அசோகமித்திரன் புதுமைப்பித்தன் குறித்து அன்று பேசியதால் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.  

எனக்கு விமோசனம் என்ற அவருடைய கதை ஞாபகத்திற்கு வருகிறது.  சரஸ்வதி என்ற பெண் பாத்திரம் குறித்து.   படிக்கிறவர்களுக்கு அழுகை வராமல் இருக்காது.  அவ்வளவு உருக்கமாக யாராலும் எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

மரணம் அடையும் வரை அசோகமித்திரன் எழுதிக்கொண்டிருந்தார்.  வயதாகிவிட்டால் பலர் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.  அப்படியே எழுத முயற்சி செய்தாலும் எழுத்து சரியாக எழுத வராது.  ஆனால் அசோகமித்திரன் விஷயத்தில் வேறு விதமாக இருந்தது.  இன்னொரு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர் வாழ்நாளில் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிட்டார். 

அசோகமித்திரனின் இரண்டாவது நினைவு நாளில் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

துளி : 37 – கடையா விளையாட்டு மைதானமா?

அழகியசிங்கர்

இரண்டு நாட்களுக்கு முன் அமேசான் கின்டல் வாங்கவேண்டுமென்றேன் புதல்வனிடம்.  அமெரிக்காவில் இருந்துகொண்டு அதிகமாகப் பணம் செலவு வைக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது.  என்னமோ எனக்கு சில எலக்டிரானிக் பொருள்கள் குறைவான விலைக்கு இங்குக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.  அதனால்தான் கின்டல் வாங்க முயற்சி செய்தேன்.  போன முறை (2011) சோனி காமரா கூட அமெரிக்காவில்தான் வாங்கினேன்.  அதை விட இன்னும் சிறப்பாக உள்ள காமரா வாங்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.  புதல்வன் அதெல்லாம் வேண்டாம் ஸ்டாப் என்று சொன்னால் நிறுத்திவிடுவேன்.  

வ்ரைஸ் என்ற கடைக்கு புதல்வன் அழைத்துக்கொண்டு போனான். பிரமித்து விட்டேன்.  இப்படி ஒரு கடையைக் கற்பனை செய்ய முடியவிலலை. சென்னையில் ஒரு தெரு முழுவதையும் கடையாக மாற்றினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது கடை.   கடை உள்ளே செயற்கையாக மரங்கள் நட்டு வைத்திருந்தார்கள்.  பின் கடைக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.  

என்னடா இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  ஆனால் கடையில் கூட்டமே இல்லை.  எப்படி லாபம் வரும்?   தெரியாமல் என் பேத்தியை அழைத்துக்கொண்டு வந்து விட்டோம்.  ஓட்டமாக ஓடி எங்களுக்குத் தண்ணிக் காட்டினாள்.

நான் திரும்பி வரும்போது கின்டல் வாங்கவில்லை.

தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன்..

அழகியசிங்கர்

2011ஆம் ஆண்டு இதே அமெரிக்காவிற்கு வந்திருந்தோம்.  ப்ளோரிடா என்ற இடத்தில் தங்கியிருந்தோம்.  ஒரு ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றான்.   இதே ஒரு பெரிய கட்டடத்தில் ஏகப்பட்ட திரை அரங்குகள்.  ஒரு ஆங்கிலப்படம் பார்த்தோம்.  இரவு நேரத்தில்.  வழக்கம்போல் அந்தப் படம் பார்க்க நாலைந்து பேர்கள்தான் தென்பட்டார்கள்.  படம் என்னவென்று புரியவில்லை.  படம் பார்க்காமல் தூங்கி வழிந்தேன்.  

8 ஆண்டுகள் கழித்து இப்போது பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன்.  போனவாரம்  ஹார்க்கின்ஸ் திரையரங்கத்தில் தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன். அது குறித்து எழுத உள்ளேன்.  திரை அரங்கத்தில் முதியவர்களுக்கு டிக்கட் விலை 8 டாலர்கள்.  மற்றவர்களுக்கு  எட்டரை டாலர்கள்.  

 தடம் தமிழ்ப் படத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்  மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம்.  பொதுவாக திரை அரங்கில் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது  சிறிது நேரத்தில் நெளியாமல் இருக்க மாட்டேன்.  ரொம்ப தாங்க முடியாவிட்டால் எழுந்து போய்விடுவேன்.  ஆனால் தடம் படத்தை முழுவதும் ரசித்தேன். கடைசி வரை பார்த்தேன்.  வித்தியாசமான கதை அம்சம்.

ஆனால் இந்தப் படத்தில் தென்பட்ட பிரச்சினையும் புரிந்து விட்டது. இரட்டை வேடத்தை எடுத்து முக்கியமான பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் அதைச் சரிவர செய்யவில்லை என்று எனக்குத்  தோன்றுகிறது.  

இரட்டை வேடத்தில்  நடிக்கும்போது ஒரு வேடத்திற்கும் இன்னொரு வேடத்திற்கும் நடிப்பால் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.  உதாரணமாக  üஎங்கள் வீட்டுப் பிள்ளைý என்ற படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் வேறு படுத்திக் காட்டி நடித்துள்ளார்

இதில் நடித்த நடிகருக்கு அது சரியாக வரவில்லை.  ஆரம்பத்தில் இப் படத்தைப் பார்க்கும்போது எனக்குக் குழப்பமாக இருந்தது.  ஆனால் போகப்போகத்தான் புரிந்தது.

இப்படி ஒரு நல்ல படத்தை இந்த நடிகர் ஓரளவு நடிப்பு மூலம் மட்டுப்படுத்தி விட்டாரா என்று தோன்றுகிறது.

பொதுவாக இரட்டை வேடம் என்றால் ஒரு கதாநாயகன் வீரனாகவும் இன்னொருவன் கோழையாகவும் காட்டுவார்கள்.  அல்லது ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் கெட்டவனாகவும் காட்டுவார்கள்.  பிறகு அதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி அந்தச் சிக்கல் அவிழ்ப்பதுபோல் கதை போகும்.

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.  படத்தில் முக்கியமாக நான் கருதுவது போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்.   போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் வித்யா ஸ்மிருதி சிறப்பாக நடித்துள்ளார். 

அப்பாவுடன் இருக்கும் எழில் நன்றாகப் படித்து சிறப்பாக வளர்கிறான்.   அடுக்குமாடி கட்டடம் கட்டுபவராக மாறுகிறான். ஆனால் அம்மாவால் வளர்க்கப்படும் கவின்  சரியாக வளர்க்கப் படாமல் கிட்டத்தட்ட ரௌடி மாதிரி திரிகிறான்.

படத்தில் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.  சோனியா அகர்வால் நடித்திருக்கும் அம்மா பாத்திரம். 

இப் படத்தில் காணப்படும் காதல் காட்சிகள் நம்பும்படி இல்லை.  காதல் என்றாலே நெருக்கத்தை உண்டாகப்பட வேண்டும். உணர்வு மூலம் ஏற்பட வேண்டிய ஒன்று.   அந்த நெருக்கம் ஏனோ இதில் உணர முடியவில்லை.  இரும்புத்திரை என்ற படத்தில் சிவாஜியும் வைஜெயந்திமாலாவும் நடித்திருப்பார்கள்.  ஒருவரை ஒருவர் தொட்டுக்கூட நடித்திருக்க மாட்டார்கள். அதில் வெளிப்படும் காதல் நம்பும்படி இருக்கும். ஆனால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்றாக இருக்கும்.  அவர்கள் ஒரு பாடல் பாடுவார்கள்.  கானா இன்பம் என்று ஆரம்பமாகும் பாடல்.  இன்னும் அந்தக் காட்சியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கலாம்.  ஆனால் இந்தப் படத்தில்  காதல் விரசமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டு வரும்போது குளோபல் படம் ஒன்றைப் பார்த்தேன்.  அதில் ஒரு காதல் படம்.  படம் பெயரெல்லாம் குறித்து வைத்துக்கொள்ளவில்லை.  ஒரு பெரிய பஸ் மாதிரி ஒன்றை ஒருத்தி ஓட்டிக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.  வழியில்; ஒரு வாலிபனைச் சந்திக்கிறாள். அவளுடன் அவனும் பயணம் செய்கிறான்.  . பயணத்தின்போது அவர்களிடையே காதல் ஏற்படுகிறது.   அவனுடன் சேர்ந்து செல்வதுதான் கதை. நிகழ்ச்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.  

தடம் படத்தில் முக்கியமாக நான் கருதுவது கதைக்களம்.  அது சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.  போலீஸ் வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப் பார்வையாலேயே எல்லோரையும் வசியப்படுத்துபவராகத் தென்படுகிறார். 

எழில் செய்யும் கொலையை மறைக்க கவினும் போலீசில் மாட்டிக்கொள்கிறான்.  அப்போதுதான் எனக்குப் புரிகிறது.  இரண்டு வேடஙகளில் நடிக்கப்படுகிற படம் என்று.  அதுவரை ஒன்றும் புரியவில்லை.  யாரைக் குற்றவாளி என்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது.  கடைசியில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு பார்த்தேன்.  ஆனால் கதை வேறு விதமாகப் போபய் விடுகிறது. 

இப்போதெல்லாம் சிறப்பான முறையில் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன.  நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வரும்போது செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தைப் பார்க்க நினைத்தேன்.  முடியாமல் போய்விட்டது. 

மகிழ் திருமேனி பாடலே இல்லாமல் 2 மணி நேரத்திற்குப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.  இதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  

துளி : 36 – குளிர் போய்விட்டது..

அழகியசிங்கர்

இன்று குளிர் போய்விட்டது.  வெயில் தொடங்கிவிட்டது.  பீனிக்ஸ்ஸில் வெயில் தாங்க முடியாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  வெளியே தலை காட்ட முடிôதாம். இதன் உக்கிரம் மே மாதத்தில்தான் இருக்குமென்று நம்புகிறேன்.  பேர்ன்ஸ் அன்ட் நோபல் என்ற புத்தகக் கடையைப் பார்த்து அசந்து விட்டேன்.  நாம் விருப்பப்படி தேடும் புத்தகம் கிடைக்கவில்லை.  ஆனால் ஒரு புத்தகம் கிடைத்து விட்டது.  நான் ரொம்ப நாட்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம்.  எர்னஸ்ட் ஹெமிங் வேவின் முழு சிறுகதைத் தொகுதி. இப் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் படிக்கும்படி கூறுபவர் என் நண்பர் ஆர் ராஜகோபாலன் (ஆங்கிலப் பேராசிரியர்).  அவர் சொன்ன நாளிலிருந்து எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.  இப் புத்தகம் இன்றுதான் இங்குக் கிடைத்திருக்கிறது.  650 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 22 டாலர்கள்.  நான் இங்கே வந்தபோது ஒவ்வொரு டாலரையும் இந்தியன் பணமாகக் கணக்குப் போடுகிறேன்.  இது ஆபத்தானது.  அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது.  அதனால்தான் முதன் முறையாக நான் இப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டாமென்று வைத்துவிட்டேன்.  திரும்பவும் இன்னொரு முறை வந்தபோது வாங்கிவிட்டேன்.  இதைப் படிப்பதோடல்லாமல் இதில் உள்ள எதாவது ஒரு கதையைத் தமிழில் மொழி  பெயர்த்துப் பார்க்க வேண்டும்.  இந்தக் கடையின் தோற்றத்தைப் படம் பிடித்திருக்கிறேன்.   

துளி : 35 – கணபதி கோவிலும், மலையும்

அழகியசிங்கர்

நேற்று வேகமாகக் காற்று அடித்ததால் வெளியே தலை காட்ட முடியவில்லை.  என்னடா இது என்று தோன்றியது.  ஆனால் இன்று பொழுது ஆதரவு தரும்படி இருந்தது.  மேரி கோப்பா கௌன்டி என்ற இடத்தில் உள்ள மகா கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  பொதுவாக இங்கே உள்ள கோயில் எல்லாம் சதுர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 குருக்களிலிருந்து எல்லோரும் தமிழில் உரையாடினார்கள்.  அன்னலட்சுமி உணவு கூடத்தில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும்  இலவசமாக உணவு வழங்கினார்கள்.  தயிர்ச்சாதம் சிறப்பாக இருந்தது.  உணவு கூடத்தில் தென்றல் பத்திரிகை இருந்தது.  இலவசமாக வினியோகம் செய்ய மேஜையில் வைத்திருந்தார்கள். ஒரு பத்திரிகையை எடுத்துவைத்துக் கொண்டேன்.  அங்கிருந்து சௌத் மௌன்டன் என்ற இடத்திற்குச் சென்றோம்.

திருப்பதி, ஊட்டி மலைகளுக்குச் சென்ற ஞாபகம் வந்தது. அங்கிருந்து பீனிக்ஸ் என்ற இடத்தைப் பார்த்தது நல்ல அனுபவம். பலர் வந்திருந்தார்கள். குறிப்பாக வயதானவர்கள் வந்திருந்தார்கள்.  குழந்தைகள் எல்லாம் கும்மாளமிட்டிருந்தன.  அங்கேயும் பாசி மணி விற்க சில வெள்ளக்கார மாதுகள் இருந்தார்கள். பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் அழகாகக் காட்சி அளித்தார்கள்.  மலையிலிருந்து ஊரைப் பார்க்கும்போது கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.  புதல்வன் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது பாதையில் சரியானபடி திரும்பவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.  நல்ல விதமாக ஓட்டிக்கொண்டு வீட்டில் சேர்த்தான்.