பீனிக்ஸ் என்ற இடத்தில் நாலைந்து அமெரிக்கன் நூலகங்கள் உள்ளன. இங்கு எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுக்கலாம். புத்தகங்களை கௌன்டரில் கொடுக்க வேண்டுமென்பதில்லை. இங்குள்ள எலெக்டிரானிக் கருவியின் முன் புத்தகங்களை நீட்டினால் அது புத்தகத்தைப் பதிவு செய்துகொள்ளும். ஆட்கள் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பிறகு ரிட்டர்ன்ஸ் என்ற பெட்டியில் புத்தகங்களைப் போட்டு விடலாம். ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை இன்னொரு நூலகத்தில் உள்ள ரிட்டர்ன்ஸில் செலுத்தி விடலாம்.
நூலகத்தின் ஒரு பகுதியில் சிறாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருள்கள் வைத்திருக்கிறார்கள். அதைத் தவிர தனியாக அவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள். அதேபோல் இளம் பருவத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் தவிர டிவிடி, சிடியையும்
இரவல் எடுத்துக்கொள்ளலாம். எல்லாம் 35 எண்ணிக்கைக்குள் எடுத்துப் போகலாம்.
இதைவிட முக்கியமானது ரெஸ்ட் ரூம். இதைத் தனியாக ரொம்பவும் சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள். நான் இந்த நூலகத்திற்கு முதலில் போனபோது கண்டுகொள்ளவில்லை. அதன்பின்தான் கண்டுகொண்டேன். தனியாக அலமாரிகளில் பல புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். படித்துவிட்டு புத்தகங்கள் வேண்டாம் என்று தருபவர்களின் புத்தகங்கள் இவை. இப் புத்தகத்தை மிகக் குறைவான தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கிக்கொண்டு போகலாம். அதையும் அவர்கள் நேரிடையாக கண்காணிப்பதில்லை. ஒரு மரப்பெட்டியில் நாமே புத்தகத்திற்கான தொகையைச் செலுத்தலாம்.
இதில் சில அபூர்வமான புத்தகங்களைக் கண்டேன். மேலும் நேஷனல் ஜீயாகரபி, டைம் இதழ்கள் கிடைக்கின்றன. எல்லாம் பழைய இதழ்கள்தாம். இதைத் தவிர டிவிடி, சிடியையும் விற்கிறார்கள்.
இவ்வளவு வசதிகள் இருந்தும் நூலகங்களுக்குக் குறைவான பேர்களே வருகிறார்கள். நான் இப்படி நூலகம் நூலகமாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நூலகத்தில் கேரளா கிறித்துவத் தம்பதியரைச் சந்தித்தேன்.
“பழிக்குப் பழி வாங்க நிச்சயம் கிருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள். இலங்கையில் நடந்தது மாதிரி கொலைகளை கிறித்துவ மதம் ஏற்றுக்கொள்வதில்லை, ஏன் பயங்கரவாதிகளே இல்லை” என்றார்.
Colorless Tsukuru Tszaki and his years of Pilgrimage –
Haruki Murakami – Translated by Philip Gabriel
அழகியசிங்கர்
நான் இங்கு வந்தபோது அமெரிக்கன் நூலகத்திற்குச் சென்று ஐந்து ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்.
இலக்கிய உலகில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஆரூகி முராகாமி. அமெரிக்கன் நூலகத்தில் இவருடைய புத்தகங்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருடைய இரண்டு நாவல்களைப் படிக்க எடுத்து வந்தேன். அதில் ஒன்றைப் படித்தும் விட்டேன். முராகாமி புத்தகங்களுடன் இன்னொரு நோபல் பரிசுப் பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள் இரண்டையும் அதேபோல் படிக்க எடுத்து வந்தேன். முராகாமி புத்தகத்தைப் படிக்கிற வேகத்தில் இன்னொருவருடைய புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.
முராகாமி நாவலில் காணப்படுகிற வேகம் மற்ற நாவல்களைப படிக்கும்போது ஏற்படவில்லை. ஸ்டீவ் எரிக்ஷன் என்பவர் நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“More than anyone, Haruki Murakami invented twenty-first-century fiction…He is the novelist of our mash-up epoch and the subversive who, by intent or not, lit the fuse to whatever ‘canon” of the previous century anybody still takes seriously…Murakami’s atomic sensibility characterises world literature.”
இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகிற எழுத்தாளராக முராகாமி இருக்கிறார். மேலே குறிப்பிடப்பட்ட இந்த நாவல் ஜப்பான் நாட்டில் வெளிவந்த முதல் வாரத்தில் மில்லியன் பிரதிகள் விற்றதாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் கடைகளில் நள்ளிரவில் இப்புத்தகத்தை வெளியீட்டாளர்களாம். வரிசையில் நின்று புத்தகத்தை வாங்கிக்கொண்டு போனார்களாம். ஆனால் நம் தமிழ்நாட்டில் வெளியாகும் நாவல் ஒன்றின் 100 பிரதிகள் விற்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது.
முதலில் இந் நாவலைப் பற்றி என்னால எதாவது சொல்ல முடியுமாவென்று பார்க்கிறேன்.
கோயா என்ற ஊரில் வசித்து வந்த ஷøக்ரு டஸôகி, மேல் படிப்புக்காக டோக்கியா வந்து விடுகிறான். அவனுடனேயே படித்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் நகோயா என்ற ஊரிலேயே மேலும் படிக்கிறார்கள். இந்த ஐந்து நண்பர்களும் முக்கியமானவர்கள்.
இந்த ஐந்து நண்பர்களையும் பொறாமை கண்கொண்டு மற்றவர்கள் பார்ப்பார்கள். எல்லா இடங்களுக்கும் இவர்கள் ஒன்றாகச் செல்வார்கள். பல சமூக நலத் திட்டங்களில் பங்கு கொள்வார்கள். இவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் ஐவரும் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் வேறு வேறு பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். விடுமுறை தினங்களில் ஐவரும் சேர்ந்து மலை ஏறுவார்கள். தேர்வு சமயத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஐவரும் ஒன்றாகக் கூடி படிப்பார்கள். அல்லது ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
டோக்கியாவிற்கு மேல்படிப்புக்குச் சென்றவுடன், ஷøக்ரு டஸôகியுடன் இந்த நால்வரும் சந்திப்பதையும் பேசுவதையும் திடீரென்று நிறுத்திக் கொண்டார்கள். ஏன்? அதற்கு முன்பு வரை ஷøக்ரு டஸôகி டோக்கியாவில் படித்துக்கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்த ஊரான கோயாவிற்கு அடிக்கடி வருவான். அப்போதெல்லாம் நண்பர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பான்.
ஷøக்ரு டஸôகியை மற்ற நால்வர்களும் தவிர்த்ததுடன் அல்லாமல் அதற்கான காரணத்தையும் கூற விரும்பவில்லை என்பதோடு சந்திக்கவும் இல்லை. ஷøக்ரு டஸôகியின் வாழ்க்கையில் இது ஒரு பெரும் அதிர்ச்சியாகப் படுகிறது. அவன் தற்கொலை செய்துகொள்ளத் தயாராகிறான். தன் பெயருக்கு ஏற்ப தன் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று நினைக்கிறான். டோக்கியாவில் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு யாரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை. அவன் படுகிற அவதியை நாவலின் முன்பகுதியில் முரகாமி எடுத்துக்கொண்டு போகிறார். நான் இங்கு வந்து இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. முரகாமியின் நடை ஒரு வசீகரமான நடை. வாசகனைப் பிடித்து இழுக்கும் நடை. டோக்கியாவில் உயர் கல்வி படிக்க வரும்போது அங்குப் படித்துக்கொண்டு வரும் மாணவன் ஹய்டாவைச் சந்திக்கிறான்.
ஷøக்ரு டஸôகிக்கு நான்கு நண்பர்கள் கைவிட்டபிறகு ஹய்டாதான் நண்பனாக இருக்கிறான். அதுவும் தற்காலிகமாகத்தான்.
ஹய்டா நன்றாக சமையல் செய்பவன் நீச்சல் அடிப்பவன். ஒரு வித்தியாசமான நண்பனாக இருக்கிறான். அவன் அப்பாவின் ஏற்பட்ட மரணத்தைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறான். அவன் அப்பா ஒரு பியோனா வாசிப்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் மரணத்தைப் பற்றி முன்னதாகவே குறிப்பிடுகிறார். தனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மரணம் ஏற்படும் என்று. ஹய்டாவின் அப்பா அதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார். ஏனென்றால் அவர் நண்பர் உடல் நலத்துடன் நன்றாகக் காணப்படுகிறார். முன்னதாகவே மரணம் பற்றிய தகவல் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார். கதைக்குள் கதையாக அது போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நாவல் ஆன்மிக உணர்வுக்குள் நம்மை ஹராகாமி இழுத்துக்கொண்டு வருகிறாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஒவ்வொரு பெயருடன் வர்ணத்தைத் தொடர்புகொண்டு எழுதி உள்ளார். ஷøக்ரு டஸôகி மட்டும் நிறமற்றவன். ஹய்டா எப்படி அறிமுகம் ஆகிறானோ அதேபோல் ஷøக்ரு டஸôகியை விட்டும் போய்விடுகிறான். திரும்பவும் தனிமையாகிறான் ஷøக்ரு டஸôகி.
அவனுக்கு ரயில் தண்டவாளங்கள் தயாரிக்கிற இடத்தில் வேலை கிடைக்கிறது. அவனுக்குப் பிடித்த வேலை.
சாரா கிமோட்டோ சுற்றுலாத் துறையில் பணிபுரிபவள். அதாவது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது அவளுடைய பணி. ஷøக்ரு டஸôகியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறாள். சாரா ஷøக்ரு டஸôகியை விட இரண்டு வயது மூத்தவள். இந்த நட்புதான் அவனுக்கு ஆறுதல் தரக்கூடிய நட்பாக அவனுக்கு இருக்கிறது. அவன் சாராவைச் சந்திக்கும் தருணத்தில் அவனுக்கு 35 வயதாகிவிடுகிறது. சாராவிற்கு 37 வயது. அவனை விட்டு அவனுடைய 4 நண்பர்களும் ஏன் பிரிந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறாள். அவனை ஏன் அவர்கள் வெறுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர்களைச் சந்திக்கிறான். அவனுக்குத் தெரிந்து விடுகிறது. இந்தப் பிரிவினைக்குக் காரணம், ஊழு என்கிற இன்னொரு பெண் நண்பர்தான் என்று. அவளை யாரோ கற்பழித்துவிடுகிறார்கள். அந்தப் பழியை ஷøக்ரு டஸôகி மீது சுமத்தி விடுகிறாள். மற்ற 3 நண்பர்களும் அவள் சொன்னதை நம்பி ஷøக்ரு டஸôகியைச் சந்திக்காமலும் பேசாமலும் இருந்து விடுகிறார்கள். இதைக் கேள்விப்பட்டபோது ஷøக்ரு டஸôகிக்கு சொல்ல முடியாத வருத்தம் ஏற்படுகிறது.
ஊழு அந்தப் பழியை ஷøக்ரு டஸôகியின் மீது சுமத்துவதோடல்லாமல் அவனால்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் சொல்லி எல்லோரையும் நம்ப வைக்கிறாள். அவளுடைய இன்னொரு பெண் தோழி ஷøக்ரு டஸôகியால் இது ஆகவில்லை என்று தெரிந்தும், ஊழு சொல்லும் பொய்யிற்கு ஆதரவும் தருகிறாள். இறுதியில் ஊழு பொறாமைப்படும்படியான அழகியாக இருந்தாலும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறி கொல்லவும்படுகிறாள். ஊழுவைப்பற்றி முழுத் தகவலையும் எரி என்கிற அவர்களுடைய குழுவில் உள்ள இன்னொரு பெண்ணால்தான் தெரியவருகிறது.
இதையெல்லாம் தெரிந்த பிறகு ஷøக்ரு டஸôகி தனிமைப்படுத்தப்படுகிறான். திரும்பவும் டோக்கியா வந்து தன் வாழ்க்கைத் துணையாக சாராவாவது கிடைப்பாளா என்று எதிர்ப்பார்க்கிறான். அவனுக்கு அவளும் கிடைக்கவில்லை. அவன் வாழ்க்கை வெறுமையாகப் போவதுபோல் கதை முடிகிறது.
இந்த நாவலில் அப்பட்டமாக செக்ûஸ விவரித்திருப்பார். அதைப் படித்துக்கொண்டிருந்தபோது சாருநிவேதிதாவின் ராசலீலா என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் முராகாமி இன்னும் வெளிப்படையாக அப்பட்டமாக விவரித்திருக்கிறார். மேலும் இந்த நாவலில் இசையைப் பற்றியும், விதம்விதமான கார்களைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுகின்றன. அதைத் தவிர ஆன்மிகம், அமானுஷ்யத் தன்மைகள், கனவுகள் என்று விரிவாகச் சொல்லிக்கொண்டு போகிறது. நான் இந்த நாவலை ஒருமுறைதான் படித்தேன். ஆனால் எப்போதுமே இதில் எதாவது ஒரு பகுதியைப் படித்துக்கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது. இது ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாவல். ஜப்பான் மொழியில் இது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அழகியசிங்கர்
உலக அதிசயங்களில் ஒன்றான இடமாகத்தான் நான் கிரான்ட் கென்யான் என்ற இடத்தைக் காண்கிறேன். இந்த இடத்தின் முடிவில் முழுக்கக் கல்லால் ஆன காப்பி குடிக்கும் இடம். 100 வருடங்களுக்கு முன்னால் இந்த இடத்தைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டி இறுதியில் இந்தக் கல்லால் ஆன ஓட்டலில் காப்பி குடிப்பாராம். அதனால் இந்த இடம் பிரபலமானது என்று சொல்கிறார்கள்.
கிராண்ட் கென்யானில் உள்ள ஓட்டலில் இரவு தங்குவது அதிக அளவிற்கு வாடகைத் தரவேண்டும் என்பதால் வ்ளாக் ஸ்டாவ் என்ற இடத்தில் உள்ள டேஸ் இன் என்ற ஓட்டலில் தங்கினோம். கிôôன்ட் கென்யான் கிட்டத்தட்ட 100 மைல் தூரத்தில் இந்த ஓட்டல் இருந்தது.
அங்கிருந்து நாங்கள் கிளம்பி சென்ற இடம் லாஸ் வேகாஸ் என்ற இடம். 24 மணி நேரமும் ஒரு நகரம் விழித்துக்கொண்டிருக்குமென்றால் அது லாஸ் வேகாஸ் என்ற இடம்தான்.
பெரிய பெரிய ஓட்டல்கள். மேல்நாட்டு இசையின் சப்தம். கூடவே சூதாட்டம். 110 மாடிகள் கொண்ட ஸ்டாராட்ஸ்பியர் என்ற 5 நட்சத்திர ஓட்டல். நாங்கள் 7வது மாடியில் உள்ள அறையில் இருந்தோம். பிரமிப்பாக இருந்தது. அன்று இரவு 108வது மாடிக்குச் சென்று வேகாஸ் என்ற ஊரைப் பார்த்தோம்.
குடிப்பது, சூதாட்டம் ஆடுவது என்று முழுவதும் ஒரு ஓட்டல். அதேபோல் இங்குள்ள வேறு சில ஓட்டல்களிலும் சூதாட்டம். இங்கு தெருவில் தென்பட்ட வேன்களில் ஒரு விளம்பரம். இரவு நேரத்திற்கு உங்கள் துணைக்குப் பெண் வேண்டுமென்றால் அணுகவும் என்று எழுதியிருந்தது. இங்கே சில பிச்சைக்காரர்களைக் கண்டேன். அவர்கள் பீர் குடிக்க, கஞ்சா அடிக்க பிச்சைப் போடும்படி கேட்கிறார்கள்.
நாங்கள் வீட்டிலிருந்தே சாப்பிடுவதற்கு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்ததால், அமெரிக்கன் ஓட்டல்களில் எதுவும் சாப்பிடவில்லை. தெருவில் அரைகுறை உடைகளுடன் பெண்கள் எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் சில ஓட்டல்களில் வெனீஸ் நகரத்திற்குப் போவதுபோல் ஓட்டலை உருவாக்கியிருந்தார்கள். ஒரு ஓட்டலில் பாரீஸ் நகரில் செல்வது அமைத்திருந்தார்கள்.
திரும்பவும் பீனிக்ஸ் வருவதற்கு முன் ஒரு டாலரை வைத்து நானும் சூதாட்டம் ஆடினேன். 30 டாலர்கள் வரை ஜெயித்தேன். நாங்கள் திரும்பி வரும்போது யூவர் அணையைப் பார்த்துவிட்டு வந்தோம். இரவு 11.30 ஆகிவிட்டது. வீட்டைத் திறக்கலாமென்று சென்றால் வீட்டைப் பூட்டாமல் போய்விட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். வீட்டில் உள்ள எந்தப் பொருளும் திருடு போகவில்லை.
121 மாடியிலிருந்து நான் கண்ட காட்சிகளைச் சிறிய காணோலி மூலம் இங்கு அளிக்கிறேன்.
அழகியசிங்கர்
நான் இருக்குமிடத்தில் குளிர் போய்விட்டது. எப்போதும் காலை 10 மணிக்குமேல் சென்றாலும் குளிர் அடிக்கும். நகர முடியாது. ஆனால் இப்போதோ காலை 8 மணிக்கே தாங்க முடியாத வெயில்.
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில்தான் வெளியில் செல்வோம். போன சனி ஞாயிறுகளில் 2 முக்கியமான இடங்களுக்குச் சென்றோம்.
காலையில் 8 மணிக்குக் கிளம்பிவிட்டோம். கார். அரவிந்த் (என் பையன் பெயர்) காரை ஓட்டிக்கொண்டு வந்தான். மலைகள் சூழும் இடத்தில் வண்டி சென்றுகொண்டிருந்தது. நடுவில் சாலை. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மலைகள். பூமியிலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சிக்குச் சென்றோம். நாங்கள் சென்றது சனிக்கிழமை மதியம் மேல். ஒரே கூட்டம். கிரான்ட் கென்யான் என்று அந்த இடத்திற்குப் பெயர். பெரிய பள்ளத்தாக்கு என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டேன். பெரிய பள்ளம். பள்ளத்தில் பாறைகள். அந்தப் பள்ளமும் நீண்ட பள்ளமுமாக இருக்கிறது. பெரிய விஸ்தாரமான பள்ளம்.
மாலை நேரத்திற்கு மேல் அங்கிருப்பது தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. குளிர் தாங்க முடியவில்லை.
நாங்கள் பயணம் செய்ததை ஒளி வடிவத்தில் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் எழுத்தாளர்களில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன். அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்குள் நுழையுமுன் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்குடன் நுழைவார். மற்ற எழுத்தாளர்கள் வேஷ்டி, சட்டை அணிந்திருப்பார்களாம். இதெல்லாம் ஜெயகாந்தன் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்ன இவ்வளவு தைரியமாக மாணவர்கள் முன் பேசுகிறாரே என்று நினைத்ததுண்டு.
ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் பற்று அதிகம். உண்மையில் அவர் தன்னை பாரதி மாதிரியே நினைத்துக்கொண்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆலந்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஜெயகாந்தன் பேசப்போகிறார் என்பதை அறிந்து நான் அந்தப் பள்ளிக்கு முன்னதாகவே ஜெயகாந்தன் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன். ஜெயகாந்தன் தெருமுனையில் பள்ளியை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தலையில் தான் வைத்திருந்த துண்டை எடுத்து முண்டாசு மாதிரி கட்டிக்கொண்டார். அப்போது பாரதியார் நினைப்பில் அவர் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
பள்ளியில் அவர் பேசத் துவங்கியபோது, கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியரையும், மற்ற ஆசிரியர்களையும் கம்பீரமான குரலில் திட்ட ஆரம்பித்தார். எனக்கு ஜெயகாந்தனின் அந்தப் பேச்சைக் கேட்டு ஜிவ்வென்றிருந்தது.
அப்போதெல்லாம் ஜெயகாந்தனைப் பார்த்துப் பேச நான் துணியவில்லை. ஆனால் அவர் பேசுவதுபோல் மேடையில் பேச வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன். அதனால் மாம்பலத்தில் ஒரு டைப்ரைட்டிங் நடத்தும் வகுப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். நான் பேசும்போது ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டு கத்திப் பேசினேன். பேசி முடித்தபிறகு, மொத்தமே 10 பேர்கள் வந்த கூட்டத்தில் (பெரும்பாலோர் நண்பர்கள், உறவினர்கள்) ஏன் இப்படி குரலை உயர்த்திப் பேசினேன் என்று வெட்கப்பட்டேன்.
நான் மற்ற எழுத்தாளர்களுடன் (அசோகமித்திரன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ்) நெருக்கமாகப் பழக ஆரம்பித்த பிறகு ஜெயகாந்தனை மறந்து விட்டேன். ஜெயகாந்தன் அவர் காலத்திலேயே அவர் எல்லாம் எழுதிவிட்டு பிறகு எழுதுவதையே நிறுத்தி விட்டார். அவர் எழுதாமல் இருந்தாலும் கூட்டங்களில் பேசுவதை விடவில்லை. பாரதியாரைப் பற்றி அவர் பேசியதைப் போல் யாரும் பேசியிருக்க முடியாது.
எழுத்தாளருக்குக் கர்வம் இருக்க வேண்டும். அது ஜெயகாந்தனிடம் இருந்தது. ஜெயகாந்தன் கே கே நகரில்தான் வசித்து வந்தார். ஆனால் அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்தாலும், அதற்கான முயற்சியை நான் செய்ததில்லை.
1988ஆம் ஆண்டு விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்தாலும், ஒரு பிரதியைக் கூட நான் அவருக்கு அனுப்பவில்லை. காரணம் அவர் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டாரென்றுதான்.
ஜெயகாந்தனின் பல கதைகளைப் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற அவருடைய கதை திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கடைசியாக ஆனந்தவிகடனும், ஜெயகாந்தன் வாசகரும் சேர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்த மாதிரி அவருடைய சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்கள். மயிலாப்பூரில் உள்ள சங்கீத அகடெமியில்தான் அக் கூட்டம் நடந்தது. சபா முழுவதும் கூட்டம். உடல்நிலை சரியில்லாமல் ஜெயகாந்தன் வந்திருந்தார். அக் கூட்டத்திற்கு வந்ததோடல்லாமல் அந்தப் புத்தகத்தை வாங்கியும் வைத்துக்கொண்டேன்.
ஒருமுறை நான் 3 படைப்பாளிகளுக்குக் கௌரவம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை தேனாம்பேட்டையில் உள்ள காதி அரங்கத்தில் நடத்தினேன். ஜெயகாந்தனும் ஒரு பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். எழுத்தாளர் சா கந்தசாமிக்கு மரியாதைச் செய்ததை அறிந்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். கூட்டத்திற்கு வந்ததற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். தமிழில் ஜெயகாந்தனுக்கு உயர்ந்த பரிசான ஞானபீட பரிசு கிடைத்துள்ளது. அதற்குத் தகுதியானவரும் அவர்தான்.
கூட்டத்தோடு ஜெயகாந்தனைப் பார்த்துப் பழகிய நான், கூட்டத்தோடு பார்த்து முடித்துக்கொண்டேன்.
இனி நாம் அவர் படைப்புகளுடன்தான் அவரை ஞாபகத்தில் கொண்டு வர முடியும்.
ஜெயகாந்தனின் üயுக சந்திý என்ற கதையைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். ஜெயகாந்தனின் கதைகளில் சிறப்பு வாய்ந்த கதைகளில் ஒன்றாக யுக சந்தி என்ற கதையைச் சொல்லலாம்.
ஜெயகாந்தனிடம் இரண்டு விதமான படைப்பாற்றலை நான் பார்த்திருக்கிறேன். ஒன்று பிரமண வகுப்பில் நடக்கும் பாசாங்கை உடைக்கும் விதமான எழுத்து. இரண்டாவது தலித்துகளை அடையாளப்படுத்தும் விதமாக எழுதியிருப்பது.
யுக சந்தியில் வரும் கௌரி பாட்டியைப் பற்றிப் படிக்கும்போது எனக்கு என் பாட்டி நினைவு வந்தது. கௌரி பாட்டியைப் போல் தைரியமாக என் பாட்டியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பஸ் ஏறி பெண்ணைப் பார்க்கப் போய்விடுவாள்.
ஜெயகாந்தன் கதையில் வரும் கௌரி பாட்டிக்கு ஒரே ஒரு பையன். அந்தப் பையனைப் பெற்றெடுத்து பாட்டி விதவை ஆகிறாள். அந்தப் பையனின் மூத்தப் பெண் கீதாவும் பத்து மாதம் திருமணம் ஆகி விதவை ஆகி விடுகிறாள்.
தனக்கு நேர்ந்தது மாதிரி தன் பேத்திக்கும் ஆகிவிட்டதை எண்ணி பாட்டி வருந்துகிறாள். அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து உபாத்திமை ஆக்கி விடுகிறாள். சிதம்பரத்தில மாற்றல் கிடைத்தவுடன், பேத்தியுடன் சிதம்பரத்திற்குப் போய்விடுகிறாள். 30 வயது பேத்தியைப் பார்த்துக்கொள்வது அவளுடைய வேலையாகிவிடுகிறது. விடுமுறை அதிகமாக வரும்போது பேத்தியும் பாட்டியும் ஊருக்கு வருவார்கள். அதைத் தவிர சனி ஞாயிறுகளில் பாட்டி தலை முடியை வெட்டிக்கொள்ள பையன் இருக்கிற ஊருக்கு வந்து விடுவாள்.
கதையின் ட்விஸ்ட் இப்போதுதான் நடக்கிறது. கீதா எதுவும் சொல்லாமல் பாட்டி கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா கடிதத்தைப் படிக்கும்போது என்ன செய்தி என்று கேட்டுக்கொள்ளச் சொல்கிறாள். பையனிடம் கீதா கொடுத்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு திகைப்படைகிறான் பாட்டியின் பையன்.
அதில் கீதா அவளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த ஹிந்தி பன்டிட் ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கடிதம் மூலம் குறிப்பிடுகிறாள்.
பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும் இல்லை. கீதாவுக்குப் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து விடுகின்றன. இதைப் புரிந்துகொண்ட பாட்டி தன் பேத்தியின் செயலை கண்டிக்கவில்லை. பேத்தியுடன் இருக்கத் திரும்பவும் சிதம்பரம் போய்விடுகிறாள். பேத்தியுடன் என்னையும் சேர்த்து இல்லை என்று மூழ்கி விடு என்று பையனிடம் கடுமையாகக் கூறியபடி போய்விடுகிறாள்.
இப்போது இந்தக் கதையை வாசிக்கும்போது இது சாதாரண விஷயமாகப்படும். ஆனால் இந்தக் கதை வெளிவந்த
ஆண்டில் இக் கதை புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும்.
ஜெயகாந்தனின் பிறந்த தினத்தின்போது இந்தக் கதையை ஞாபகப்படுத்தியபடி இக் கட்டுரையை முடிக்கிறேன்.
போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.
இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஐ பி ஸிங்கரின் சிறுகதைகளைப் படிக்கிறேன்.
ஒரு முறை நூலகத்தைச் சுற்றி வரும்போது ஒரு மூலையில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு என்று எழுதப்பட்டிருந்தது. சாதாரண புத்தகமாக இருந்தால் கால் டாலரும், கனமான அட்டைப் போட்டிருந்த புத்தகமாக இருந்தால் 1 டாலரும் ஏன்றும் போட்டிருந்தது. இதைத் தவிர நேஷனல் ஜியாகரபி, டைம் பத்திரிகை விலை குறைவாக விற்கிறார்கள். ஒவ்வொரு நூலகத்திலும் ஒவ்வொரு விதம். டிவிடி, சிடி எல்லாம் விற்கிறார்கள். விற்கிற இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். நாம்போய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நன்கொடையாக ஒரு மரப்பெட்டியில் காசைப் போடவேண்டும்.
இந்த உலகப் புத்தக தினத்தை ஒட்டி நான் கீழ்க்கண்ட புத்தகங்களை அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். பெரும்பாலும் நாவல்கள்தான். இன்னும் சில புத்தகங்கள் வாங்குவதாக உத்தேசித்துள்ளேன்.
1.The Grapes of Wrath – Steinbech 2. In a Mirror – Mary Stolz 3. All the Missing Girls – Megan Miranda 4. This is my God – Herman Wouk 5. The Truffle with weddings – Laura Durham 6. Book J – translaated from Hebrew by David Rpsemnerg 7. Truevine – Beth Macy 8. The Secret of Rain and Lightining – Nancy Pickard 9. A Certain Justice – P D James 10. People Like us – Dominick Dunne 11.The Last Symbol – Dan Brown t 12. Granny Dan – Danielle Steel 13. The Long Road Home – Danielle Steel
இன்னும் நூலகங்களுக்குப் போய் புத்தகங்கள் கொண்டு வாங்கி வர உத்தேசம். சென்னைக்குக் கொண்டு வருவதற்குத் தனியாகப் ஒரு பெட்டியை ஏற்பாடு செய்ய நினைத்துள்ளேன்.
ஒருநாள் மாலை நேரத்தில் பிரமிள் வீட்டிற்கு வந்தார். என் கையைக் குலுக்கினார். ‘இன்று ஒரு முக்கியமான நாள், உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன?’ என்று கேட்டேன். ‘என்னுடைய பிறந்த நாள் இன்று,’ என்று சொன்னபோது, ஆச்சரியமாக இருந்தது.
பொதுவாகச் சந்தித்துக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் பிறந்த தின வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை.
பிரமிளும் நானும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று பிறந்த தினத்தைக் கொண்டாடினோம்.
எழுத்தாளர் க நா சு ஜனவரி மாதம் 31ஆம் தேதி 1912ல் பிறந்தவர். அவருடைய 100வது வயது 2012ல் முடிவடைந்தது. என் நண்பர் ஞானக்கூத்தன் அவர்கள் அவருடைய பிறந்த தினம் வருகிறது அதை முன்னிட்டு எதாவது கூட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லை. மயிலாடுதுறையிலிருந்தேன். என்னால் க நா சுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஞானக்கூத்தனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தத் தருணத்தில் நான் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடிந்தது. க.நா.சு கவிதைகளைச் சிலவற்றை அச்சிட்டு அன்று இலவசமாக எல்லோருக்கும் கொடுத்தேன். என்ன கொடுமை என்றால் பலருக்கு க.நா.சு என்றால் யார் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துவிட்டு க.நா.சு கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
நான் அப்போது பஸ்ஸில் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருப்பேன். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் யாரிடம் க நா சு கவிதைகள் புத்தகத்தைக் கொடுப்பது? யாராவது எதாவது தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தார்கள் என்றால் அவரிடம் கவிதைப் புத்தகத்தை நீட்டுவேன். என்னிடமிருந்து புத்தகம் வாங்குபவருக்கு ஒன்றும் புரியயாது. üüஇதெல்லாம் வேண்டாங்க,ýý என்பார்கள். üüஇது இலவசமாகத் தருகிறேன். சும்மா படிங்க.. தமிழில் முக்கியமான எழுத்தாளர்,ýý என்று கூறி புத்தகத்தை நீட்டுவேன். உண்மையில் நான் க நா சு வுக்கு கூட்டம் நடத்த முடியாவிட்டாலும், அவருடைய நூற்றாண்டு வயதைக் கொண்டாடிவிட்டேன்.
இப்போது என்னுள் ஒரு கேள்வி எழுகிறது. நம்மில் எத்தனைப் பேர்கள் படைப்பாளிகளைப் பாராட்டுகிறோம். பாரதியாரை நாம் காலம் காலமாகக் கொண்டாடுகிறோம். அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். பொதுவாக தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்த பல எழுத்தாளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். சில தினங்களாக இந்தக் கேள்வி என்னுள் எழாமல் இல்லை. குறிப்பாக எழுத்தாளர்களின் பிறந்த நாளை மட்டும் கவனத்தில் கொண்டு கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். கொண்டாடுதல் என்றால் என்ன? ஒரு கூட்டம் போட்டுப் பேசுவதல்ல.
நாம் ஒவ்வொருவரும் அந்த எழுத்தாளரின் பிறந்த தினத்தின்போது நம் இடத்திலிருந்து நினைவுக் கூர்போம். அவருடைய படைப்பை ஒன்று எடுத்துப் படிப்போம். அவருடைய படைப்பைப் பற்றி முகநூலிலோ அல்லது நண்பர்களிடையோ பகிர்ந்து கொள்வோம்.
இது நான் மட்டும் செயல்படுத்தக் கூடிய ஒன்று இல்லை. எல்லோரும் சேர்ந்த இயங்க வேண்டும். முதலில் எழுத்தாளர்களின் பிறந்தத் தினங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பிட வேண்டும். அந்தத் தினத்தின்போது அவரது படைப்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு லிஸ்ட் தயாரிப்போம். எந்தந்த எழுத்தாளர்கள் எப்போது பிறந்தார்கள் என்று.
அந்த வகையில் பிரமிள் 1939ஆம் ஆண்டு 20 ஏப்ரல் தினம். அவர் உயிரோடு இப்போது இருந்திருந்தால் 80 வயது முடிந்திருக்கும். இந்தத் தருணத்தில் அவருடைய கவிதை மூலம் அவரை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
கீழே குறிப்பிடப்பட்ட கவிதை ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தில் பிரமிள் வாசித்த ஆத்மாநாம் கவிதை. நான் அவசரப்பட்டு ஆத்மாநாம் கவிதையை பிரமிள் எழுதியது என்று தெரிவித்து விட்டேன்.
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன். அவர் ஒரு கவிதையைப் மனசிலிருந்து சொல்ல என்னை எழுதச் சொன்னார். அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.
அந்தக் கவிதை இதுதான் :
விடிவுக்கு முன் வேளை
ஆகாயத்தில் மிதக்கின்றன
நாற்காலி மேஜைகள்
ஊஞ்சல் ஒன்று
கடல்மீது மிதக்கிறது
அந்தரத்து மரச் சாமான்களைச்
சுற்றிச் சுற்றிப் பறக்கிறது
அசிரீரிக் கூச்சல் ஒன்று
சிறகொடித்து கிடக்கிறது
ஒரு பெரும் கருடப் பட்சி
கிழக்கு வெளிறிச்
சிவந்து உதித்த மனித மூளைக்குள்
வெறுமை ஒன்றின் இருட் குகை
குகைக்குள் கருடச் சிறகின்
காலை வேளைச் சிலிர்ப்பு
ஆகாயத்தில்
அலைமேல் அலை.
மௌனித்தது
அசரீரிக் குரல்..
இந்தத் தவறை முகநூலில் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு என் நன்றி.
(ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மறைந்தார்.
நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.
அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன். முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன். தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.)
கே.கே : நான் மருத்துவத் துறையைச் சார்ந்தவன். நான் அதிகமாகவே படித்திருக்கிறேன். உடல் பயிற்சி செய்வதன் மூலமும், தேவைக்கேற்ப உடலைப் பரிசோதனை செய்வதன் மூலமும் நான் ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறேன்.
மஹா : ஆனால் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்புவது என்ன?
கே.கே : உண்மையை அறிய விரும்புகிறேன்.
மஹா : உண்மையை அறிய என்ன விலை கொடுக்க விரும்புகிறீர்கள்? எதாவது விலை உண்டா?
கே.கே : அதற்கு தியரிப்படி எதாவது விலை கொடுக்கத்தான் விரும்புகிறேன். இந்த வாழ்க்கையில் திரும்பவும் திரும்பவும் உண்மைக்கும் எனக்கும் வாழத் தூண்டப்படுகிறேன். ஆசை என்னை எடுத்துக்கொண்டு போய்விடும்.
மஹா : உங்களுடைய ஆசைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், உண்மை நிலையை நீங்கள் உணரும்வரை. ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் அதன் குறுகியத்தன்மையும், சின்னத்தனமும்தான் தப்பு. ஆசை என்பது பக்தி. உண்மைநிலைக்காக பக்தியைச் செலுத்துங்கள். எல்லையில்லா, பிரபஞ்சத் தன்மைக்காக. ஆசையை அன்பாக மாற்றுங்கள். நீங்கள் வேண்டுவது சந்தோஷமாக இருப்பது. எல்லாவிதமான உங்கள் ஆசைகளும், நீங்கள் நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கும் சந்தோஷத்திற்குத்தான். அடிப்படையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.
கே.கே : எனக்குத் தெரியும், நான் அப்படி இருக்கக்கூடாதென்று..
மஹா : பொறுங்கள் . யார் சொன்னார்கள் நீங்கள் ஆசைப்படக்கூடாதென்று? என்ன தப்பு ஆசைப்படுவதால்?
கே.கே : எனக்குத் தெரியும், ஆன்மா போகவேண்டும்.
மஹா : ஆனால், ஆன்மா இருக்கிறது; உங்கள் ஆசைகளும் இருக்கின்றன. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது கூட இருக்கிறது. எதனால்? ஏனென்றால் நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். கெட்டிக்காரத்தனமாய் உங்களை விரும்புகிறீர்கள். என்ன தப்பு என்றால் முட்டாள்தனமாய் உங்களை நீங்கள் விரும்புவதுதான். அதனால் நீங்கள் துன்பத்தை அடைகிறீர்கள். உங்களை கெட்டிக்காரத்தனமாய் நேசியுங்கள். எளிமையாக இருப்பதும், அதிக ஈடுபாட்டுடன் இருப்பதும் சந்தோஷத்தைத் தேடும் நோக்கத்தில்தான். அதிக ஈடுபாடுடன் இருப்பது முட்டாள்தனமான வழி, எளிமையாக இருப்பது கெட்டிக்காரத்தனமான வழி.
கே.கே : எளிமையாக இருப்பதென்றால் என்ன?
மஹா : நீங்கள் ஒரு அனுபவத்திற்குள் போய்விட்ட பிறகு, திரும்பவும் அதே அனுபவத்திற்குப் போகாமலிருப்பது எளிமையான வழி. தேவையில்லாதவற்றில் ஈடுபடாமலிருப்பது எளிமையான வழி. இன்பத்தையும் துன்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமலிருப்பது எளிமையான வழி. எப்போதும் எல்லாவற்றையும் உங்கள் ஆஞ்ஞைக்கு உட்பட்டுக் கொண்டுவருவது எளிமையான வழி. ஆசைப்படுவது தப்பில்லை. வாழ்க்கை முழுவதும் அறிவாலும், அனுபவத்தாலும் வளர வேண்டுமென்று
அவா ஏற்படுவதுண்டு. நாம் எதுமாதிரி விருப்பப்படுகிறோமோ அதுதான் தவறாகப் போய்விடுகிறது. யோசனை செய்து பாருங்கள். சின்ன விஷயங்களான உணவு, பாலுணர்வு, அதிகாரம், புகழ் – உங்களை ஏமாற்ற சந்தோஷத்தைத் தரும். ஆனால் உண்மையாகவே ஆழமானதாகவும், விஸ்தாரமானதாகவும் உங்களின் உண்மையான ஆன்மாதான் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
கே.கே : அடிப்படையில் ஆன்மாவின் அன்பை வெளிப்படுத்தும் ஆசையினால் தவறில்லை. ஆனால் ஆசையை எப்படி சமாளிப்பது?
மஹா : உங்கள் மனதில் உள்ள ஆழமான ஆர்வங்களுடன் உங்கள் வாழ்க்கையைக் கெட்டிக்காரத்தனமாய் வாழப் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன பெரிதாய் விரும்பப் போகிறீர்கள்? முழுமையை அல்ல. நீங்கள் ஏற்கனவே முழுமையானவர். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களென்றால், உங்கள் செயல் மூலம் வெளிப்படுத்துவதை. இதற்கு உங்களுக்கு உடலும் மனமும் தேவைப்படும். அவற்றை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அவை பணிசெய்யும்படி மாற்றுங்கள்.
கே.கே : யார் இங்கே செயல்படுத்துபவர்? யார் உடலையும் மனதையும் கையாள்வது?
மஹா : உள்ளேயும் வெளியேயும் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி, உண்மையான மனம்தான் நம்பிக்கையான பணியாளாக ஆன்மாவிற்கு இருக்கிறது. தேவைக்கேற்ப பயன்படுபடியாக இருக்கிறது.
கே. கே : அவற்றின் தேவைகள்தான் என்ன?
மஹா : ஆன்மா என்பது பிரபஞ்சதன்மை கொண்டது. அவற்றின் குறிக்கோள்களும் பிரபஞ்சதன்மை கொண்டவை. எப்போதும் ஆன்மாவிற்கென்ற தனிப்பட்ட தன்மை கிடையாது. ஒரு ஒழுங்கான வாழ்க்கைமுறையை வாழுங்கள். ஆனால் அதுதான் உங்கள் குறிக்கோள் என்று எண்ணாதீர்கள். ரொம்ப துணிச்சலான செயலுக்கு அதுதான் ஆரம்பமாக இருக்கும்.
கே கே : திரும்ப திரும்ப இந்தியாவிற்கு வரும்படி நீங்கள் அறிவுரை கூறுவீர்களா?
மஹா : நீங்கள் அக்கறையுடன் இருந்தால், நீங்கள் எங்கு நகர்வதற்கும் தேவை இருக்காது. எங்கிருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். உங்களுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். இடம் விட்டு இடம் பயணம் மேற்கொள்வது எந்தவித முக்தியையும் உங்களுக்குத் தராது. நீங்கள்
உடல் மட்டுமன்று. உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துக்கொண்டு போவது உங்களை எங்கேயும் கொண்டு செல்லாது. üமனதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்ý என்பதில்தான் உங்கள் மனதை தடங்களின்றி சுழலவிடவேண்டும்.
கே.கே : நான் சுதந்திரமானவன் என்றால் ஏன் ஒரு உடலில் இருக்க வேண்டும்?
மஹா : நீங்கள் உடலில் இல்லை, உடல் உங்களிடம் இருக்கிறது. மனமும் உங்களிடம் உள்ளது. உங்களுக்காக அவை ஏற்பட்டுள்ளன. அவை இருப்பதால் உங்களுக்கு ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன. உங்களுடைய உண்மையான தன்மை அளக்கமுடியாத அளவிற்கு வாழ்க்கையில் திளைப்பது. இது முழுவதும் அன்புமயமானதும், உற்சாகமுள்ளதாகவும் உள்ளது. தன்னிடம் விழும் எல்லாவிதமான அவதானிப்புகள்மீதும் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துகிறது. அதற்கு அசிங்கமும் கெட்டதும் தெரியாது. அது நம்புகிறது. அன்பு செலுத்துகிறது. உங்களுடைய உண்மை சொரூபம் தெரியாமல், உங்களை மாதிரி இருப்பவர்கள் எவ்வளவு தூரம் இழக்கிறீர்களென்று. நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் எண்ணையும் இல்லை, நெருப்பும் இல்லை. அவற்றின் விதிகள்படி அவை தோன்றுகின்றன, மறைந்துவிடுகின்றன.
உங்களுடைய உண்மையான ஆன்மாவை விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் உங்களுடைய சந்தோஷத்திற்காகச் செய்கிறீர்கள். உங்களுடைய அடிப்படையான விழைவு, நீங்கள் கண்டுபிடித்து, அறிந்துகொண்டு, அதைச் செறிவூட்டுவதாகும். காலம் காலமாக நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். ஆனால் புத்திசாலித்தனமாக இல்லாமல். உங்கள் உடலையும், மனதையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், உங்களுடைய ஆன்மாவின் சேவைக்காக. அவ்வளவுதான். உங்களுக்குள் உண்மையாக இருங்கள். முழுவதுமாக உங்கள் ஆன்மாவை நேசியுங்கள். மற்றவர்களை உங்களை மாதிரி நேசிப்பதாகச் சொல்லி நடிக்காதீர்கள். அவர்களும், நீங்களும் ஒன்று என்பதை உணராதவரை நீங்கள் அவர்களிடம் அன்பு செலுத்த முடியாது. நீங்கள் எதுவாக இல்லையோ அது இருப்பதாக எண்ணி நடிக்காதீர்கள். அதேபோல் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை மறுக்காதீர்கள். நீங்கள் மற்றவர்களை நேசிப்பதென்பது உங்களுடைய சுய அறிவால் மட்டும்தான், அவற்றின் செயல்பாடுகளால் அல்ல. சுய அறிவு இல்லாமல் எந்தப் புனிதமும் நியாயமானதல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை ஓட்டம்தான் ஓடிக்கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தீர்களென்றால், எல்லோரையும் இயல்பாகவும், இயற்கையாகவும் நேசிப்பீர்கள். முழுவதுமாகவும், ஆழமானதாகவும் நீங்கள் உங்களை விரும்புனீர்களென்றால், நீங்கள் உணர்வீர்கள், ஒவ்வொரு உயிரனமும், பிரபஞ்சம் முழுவதும் உங்களுடைய அக்கறையுடன் சேர்ந்துவிடுமென்பதை. ஆனால் நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திப் பார்த்தீர்களென்றால், நீங்கள் யாரையும் நேசிக்க மாட்டீர்கள், மேலும் பயப்படவும் ஆரம்பிப்பீர்கள். தனிமை பயத்திற்குக் காரணமாகிறது. பயத்தின் ஆழம் தனிமையை அதிகரிக்கிறது. இது ஒருவிதமான சுழற்சி. சுய அறிவுதான் அதை உடைக்கும். உறுதியாக அதை நோக்கி செல்லுங்கள்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மறைந்தார்.
நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.
அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன். முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன். தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்
கேள்வி கேட்பவர் : தொழில் ரீதியாக நான் ஒரு மருத்துவன். நான் அறுவை சிகிச்சைச் செய்பவனாக என் தொழிலை ஆரம்பித்தேன். பின், மனோதத்துவ நிபுணனாகத் தொடர்ந்தேன். மேலும் நான் சில மனோதத்துவப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன். நம்பிக்கையின் மூலம் குணப்படுத்த முடியுமென்று நம்புகிறவன். நான் உங்களைப் பார்க்க வருவதற்கு முக்கிய காரணம், ஆன்மிக விதிகளைக் கற்பதற்குத்தான்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் : ஒரு நோயாளியின் நோயைத் தீர்க்குமுன் நீங்கள் எந்தவிதமாக நோயைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்கள்? நோயைத் தீர்ப்பது என்றால் என்ன? எப்போது சொல்வீர்கள், ஒரு மனிதன் குணமடைந்துவிட்டானென்று?
கே.கே : நான் நோயைக் குணப்படுத்துவதோடல்லாமல், மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை சரி செய்வேன். மனதைச் சரிசெய்ய முயற்சி செய்வேன்.
மஹாராஜ் : மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் ஆராய்ச்சி செய்வீர்களா? எந்தத் தருணத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?
கே.கே : உடலுக்கும், உணர்வுநிலைக்கும் இடையில் மனது
உள்ளது.
மஹாராஜ் : உடல் உணவால்தானே உருவாக்கப்பட்டுள்ளது?
உணவு இல்லாமல் மனம் இருக்க முடியுமா?
கே.கே : உணவால்தான் உடல் உருவாக்கப்பட்டு நிலைத்திருக்கிறது. உணவு இல்லாவிட்டால் மனமும் பொதுவாக தளர்ந்து விடும். ஆனால் உணவு மட்டுமல்ல மனம். வேறு ஒன்று ஒரு மனம் உடலில் இயங்கக் காரணியாக இருக்கிறது. அப்படி மாற்றக்கூடிய ஒன்று என்ன?
மஹா : மரம் நெருப்பை உண்டாக்கக் காரணமாக இருந்தாலும், மரம் நெருப்பாகாது. அதேபோல், மனதை உருவாக்க
உடல் காரணமாக இருந்தாலும் அது மனமாகாது. ஆனால் யாருக்கு மனம் தெரியவரும்? யோசனைகளையும், உணர்வுகளையும் ஏற்றுக்கொள்பவர்களை நீங்கள் மனம் என்று கருதுகிறீர்களா? மரம் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது, கூடவே நெருப்பைப் பயன்படுத்திக் கொள்பவரும் இருக்கிறார். யார் மனதை பயன்படுத்திக்கொள்கிறார்? அப்படிப் பயன்படுத்திக் கொள்பவருக்கும் உணவுதான் அடிப்படையா? அல்லது அது இல்லாமல் தனிமையாக இயங்கக் கூடியவரா?
கே கே : மனதை உணரக்கூடியவர் தனிமையாக இயங்கக் கூடியவர்.
மஹா : எப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களுடைய அனுபவத்திலிருந்து பேசுங்கள். நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் அப்படிச் சொல்லலாம். எப்படித் தெரியும்?
கே.கே : எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஊகிக்கிறேன்.
மஹா : சத்தியம் நிலையானது. உண்மை மாற்றமில்லாதது. எது மாறக்கூடியதோ அது உண்மையில்லை. எது உண்மையோ அது மாற்றம் அடையாதது. இப்போது சொல்லுங்கள், எது உங்களிடம் மாற்றம் இல்லாதது? உணவு இருக்கும்வரை, உடலும், மனமும் இருக்கிறது. உணவு நின்றவுடன், உடல் அழிந்து விடுகிறது. மனமும் கரைந்துவிடுகிறது. ஆனால் உற்று நோக்குபவனும் அழிந்து விடுகிறானா?
கே கே : இல்லை என்றுதான் நான் ஊகிக்கிறேன். ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.
மஹா : நீங்கள்தான் அதற்கு ஆதாரம். உங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடைக்காது. நீங்கள் தான். உங்களுக்குத் தெரியும் உங்களை. நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். என்னதான் மனது செய்தாலும், அது தன்னுடைய விருப்பத்திற்காகச் செய்யும். ஆன்மாவின் இயற்கை அன்புதான். அன்பு செலுத்திக் கொண்டிருந்தது, அன்பு செலுத்திக்கொண்டிருக்கும், அன்பு செலுத்தும். ஆன்மாதான் உடலையும், மனதை நெருக்கமாகவும்,
ஆர்வமுள்ளதாகவும் மாற்றும்.
கே கே : ஆன்மா என்பது உடலாகவும், மனதாகவும் இல்லையென்றால், அது உடல் இல்லாமலும், மனம் இல்லாமலும் இயங்க முடியுமா?
மஹா : ஆமாம். நிச்சயமாக இருக்கும். உண்மையில் அது அனுபவமாக உள்ளது. மனமும் உடலையும் இல்லாமல் தனியாக இயங்கக் கூடியது. அது விழிப்புணர்வுடன் இயங்கிக் கொண்டிருப்பது.
விழிப்புணர்வுடன் இருப்பது பேரின்பம்.
கே கே : உங்களுக்கு வேண்டுமென்றால் உண்மையான அனுபவமாக இருக்கலாம். ஆனால் எனக்கில்லை. எப்படி நான் அதே அனுபவத்தைப் பெறுவது? என்ன பயிற்சிகளை எடுத்துக்கொள்வது? என்ன நடைமுறையைப் பின்பற்றுவது?
மஹா : நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உடலும் இல்லை. மனமும் இல்லை. ரொôம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். உடலாலும், மனதாலும் பாதிப்பு இல்லாமல் வாழ வேண்டும். முழுவதுமாகவும், தனியாகவும், அதாவது நீங்கள் இறந்து போனால் எப்படியோ அப்படி. இதற்கு என்ன அர்த்தமென்றால் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, இந்த உடலாலோ மனதாலோ..
கே.கே : பயங்கரமானது
மஹா : நான் உங்களைத் தற்கொலை செய்துகொள்ளும்படி சொல்லவில்லை. உங்களாலும் முடியாது. நீங்கள் உடலை மட்டும் கொலை செய்யலாம். ஆனால் மூளையின் தொடர்ச்சியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நினைப்பதுபோல் ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. எந்தப் பாதிப்பும் ஏற்படாத மாதிரி அப்படியே இருங்கள். இப்படி தனியாக உடலுக்கும், மனதுக்கும் தொடர்பு இல்லாதவாறு இருக்கும்போது, நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மைக்கு ஆட்படுவீர்கள். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் என்ன நடப்பதென்பதை மாற்றுவதற்கு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால், நீங்கள்தான் உடல் அல்லது மனம் என்று
கற்பனை செய்வதை நிறுத்தி விடலாம். என்னதான் நடந்தாலும், உங்கள் உடலுக்கோ மனதிற்கோ நடப்பதாகவும் உங்களுக்கில்லை என்றும் அசையாமல் இருங்கள்.
சொல்லுங்கள் என்ன முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள்? உடலையும், மனதையும் மாற்றமே இல்லாத ஆன்மாவுடன் பார்ப்பதற்கு.