துளி : 49 – அமெரிக்கன் நூலகங்கள் பற்றிச் சொல்ல வேண்டும்



அழகியசிங்கர்

பீனிக்ஸ் என்ற இடத்தில் நாலைந்து அமெரிக்கன் நூலகங்கள் உள்ளன.  இங்கு எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுக்கலாம்.  புத்தகங்களை கௌன்டரில் கொடுக்க வேண்டுமென்பதில்லை.  இங்குள்ள எலெக்டிரானிக் கருவியின் முன் புத்தகங்களை நீட்டினால் அது புத்தகத்தைப் பதிவு செய்துகொள்ளும்.  ஆட்கள் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  பிறகு ரிட்டர்ன்ஸ் என்ற பெட்டியில் புத்தகங்களைப் போட்டு விடலாம். ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை இன்னொரு நூலகத்தில் உள்ள ரிட்டர்ன்ஸில் செலுத்தி விடலாம்.

நூலகத்தின் ஒரு பகுதியில் சிறாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருள்கள் வைத்திருக்கிறார்கள்.  அதைத் தவிர தனியாக அவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள்.  அதேபோல் இளம் பருவத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன.  புத்தகங்கள் தவிர டிவிடி, சிடியையும்

இரவல் எடுத்துக்கொள்ளலாம்.  எல்லாம் 35 எண்ணிக்கைக்குள் எடுத்துப் போகலாம். 

இதைவிட முக்கியமானது ரெஸ்ட் ரூம்.  இதைத் தனியாக ரொம்பவும் சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள்.  நான் இந்த நூலகத்திற்கு முதலில் போனபோது கண்டுகொள்ளவில்லை.  அதன்பின்தான் கண்டுகொண்டேன்.  தனியாக அலமாரிகளில் பல புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  படித்துவிட்டு புத்தகங்கள் வேண்டாம் என்று தருபவர்களின் புத்தகங்கள் இவை.  இப் புத்தகத்தை மிகக் குறைவான தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கிக்கொண்டு போகலாம்.  அதையும் அவர்கள் நேரிடையாக கண்காணிப்பதில்லை.  ஒரு மரப்பெட்டியில் நாமே புத்தகத்திற்கான தொகையைச் செலுத்தலாம்.

இதில் சில அபூர்வமான புத்தகங்களைக் கண்டேன்.  மேலும் நேஷனல் ஜீயாகரபி, டைம் இதழ்கள் கிடைக்கின்றன.  எல்லாம் பழைய இதழ்கள்தாம்.  இதைத் தவிர டிவிடி, சிடியையும் விற்கிறார்கள்.   

இவ்வளவு வசதிகள் இருந்தும் நூலகங்களுக்குக் குறைவான பேர்களே வருகிறார்கள்.  நான் இப்படி நூலகம் நூலகமாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நூலகத்தில் கேரளா கிறித்துவத் தம்பதியரைச் சந்தித்தேன். 

“பழிக்குப் பழி வாங்க நிச்சயம் கிருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள்.  இலங்கையில் நடந்தது மாதிரி கொலைகளை கிறித்துவ மதம் ஏற்றுக்கொள்வதில்லை,  ஏன் பயங்கரவாதிகளே இல்லை” என்றார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன