சில குறிப்புகள் 12

மேடைப் பேச்சும் நானும் / 1
எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள். மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார். நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது. நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், ‘எல்லோருக்கும் வணக்கம்….இப்போது காசியபன் பேசுவார்,’ என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன். (இன்னும் வளரும்)

மூன்று கவிதைகள்


நகரம் தொலைத்த வானம்

வானத்து நட்சத்திரங்களை
பகலில்
சூரியன் விழுங்கிக்கொள்கிறான்.

சாலை விளக்குகளும்
குண்டு குழிகளும்
சக ஊர்திகளும்
இல்லத்திரைக்
காட்சிகளும்
மேல் வீட்டுக்காரனின்
கட்டாந்தரையும்
இரவில்
மறைத்துக்கொள்கின்றன.

இறுதி ஊர்வலம்…

இதோ புறப்பட்டுவிட்டது
இறுதி ஊர்வலம்…

மகள் கதறி
தரையில் அழுது புரள…

மனைவி கடைசிக் கடைசியாய்
முகம் பார்த்துத் தவிக்க…

உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும்
கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க.

வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன்
குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி
வழியேற்படுத்தித் தருகிறான்.

தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ
தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து
காட்சியை மறைக்கிறாள்.

இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள்
மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

இரண்டு தெரு கடந்ததும்
யாரோவாகிப்போன மனிதர்கள்
சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தெருவெங்கும் இறைக்கப்பட்ட
சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில்
ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில்
காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா
நினைவுக்குவர
அவசரமாய் நினைவை அழிக்கிறான்.

பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட
மிரண்ட கண்களுடனானக் கோழியின் கத்தல்
யாருக்கும் கேட்காமல் போக
கோழிக்கும் இதுவே இறுதி ஊர்வலம்.

3 சிறுமிகள்

பல வருடங்கள் கழித்துப்
பார்க்க நேர்ந்த என்
பள்ளித் தோழியின்
இடுப்பில் ஒன்றும்
கைப்பிடித்து ஒன்றுமாய்
இரு பெண்கள்.

என் கண்களுக்குத் தெரிகிற
அக்குழந்தைகளின் அம்மாவுக்கு
மூத்த மகளைவிட
ஓரிரண்டு வயதே
அதிகமிருக்கும்.

36 W

36 W- வில்
எனது இருக் கை.
சன்னலுக்கு வெளியே
மாறும்
நிலக்காட்சிகள்..
மனிதர்கள்,பொழுதுகள்..

யார் சொல்வது?
ஒரே இடத்தில்
அமர்ந்திருக்கிறேனென்று

கடிதங்கள்

.
வெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. ‘நில் – போ – வா/வா – போ – நில்/போ – வா – நில்/நில் – போவா?’ இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர்.
நகுலன் பதில்
நில் போ வா
இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிருஷ்டிகர்த்தாவும் தான் எழுதியதைப் பற்றி விளக்கம் தருவது என்பது அவனுக்கு அவ்வளவு உவப்பான ஒரு காரியமும் இல்லை.என்றாலும் …………….என் படைப்புகளைப் படித்தவர்களுக்கு, நீல பத்மனாபன் ஒரு இடத்தில் கூறியமாதிரிநான் ஒரு மரபுவாதி – புதுக் கவிதை எழுதினாலும், என் நாவல்கள், கவிதைகள் முதலியவற்றைப் படித்தவர்களுக்கு எனக்கு “குறள்” மீதுள்ள பிடிப்புத் தெரிந்திருக்கும். வேறொரு இடத்தில் வேறொரு சிநேகிதர் கூறியமாதிரி கவிதை எழுதியவனுக்கு அது முடிந்தபிறகு அவனே அதன் முதல் வாசகன் ஆகிறான் – தானே எழுதியதைத் தானே தெளிவு படுத்திக்கொள்வதற்கு.
மறுபடியும் தொடர்கிறேன். காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்த நண்பர் வெ நாராயணனின் கேள்வி என் கவிதையின் அர்த்தம் என்ன என்று. இது ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. கருத்துக்காகக் கவிதையா அல்லது கவிதைக்காகக் கருத்தா? யோசித்துப் பார்க்க வேண்டும்.
மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பற்றியவரையில் நான் எதை எழுதினாலும் என்ன எழுதுகிறோம் என்ற பேதமின்றித்தான் எழுதுகிறேன் – எழுதி முடித்த பின்தான் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரிகிறது. இதே மாதிரிதான் ஒரே விதமான கவிதைகளைப் படித்துப் பழகிய பிறகு, வேறு வகையில் எழுதப்பபட்ட கவிதைகளைப் படிக்கும்பொழுது அது நமக்குப் பிடிபடாமல் போவதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. இத்தகைய அனுபவம் வரும்பொழுது அக் கவிதையைப் படிக்காமல் விட்டு விடுவது என்பது ஒரு நிலை. அதைக் கட்டாயப்படுத்திக் கொண்டு படிப்பதில் ஒரு பயனுமில்லை. ஆனால் ஒரு கால இடையீடு விட்டுப் படிக்கையில் அது நமக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொடுக்கலாம்/கொடுக்கிறது. இங்குதான் எலியட் கூறியமாதிரி புரியாமல் இருக்கும் நிலையிலேயே ஒரு கவிதை நமக்குப் பிடிக்கலாம்/பிடிக்கிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன். அடிப்படையான தகவல்கள் உருவ வேறுபாடுகள் கொள்கின்றன. இங்கு கா.நா.சு சொன்ன மாதிரி ஒரு வார்த்தை. ஏன் ஒரு மொழியே, ஒரு படிமமாக மாறலாம், மாறுகிறது. “குறள் மூலம் ஒரு கவிதை” என்பது என் கவிதையின் தலைப்பு – இந்த மூலம் குறளில் எங்கு இருக்கிறது? குறளில் பழக்கம் உள்ளவர்களுக்கு “கற்றப்பின் அதற்குத் தக நிற்க” என்ற வரியில் கடைசி வார்த்தையில் இருந்து “நில்” என்பது, பழைய உரை ஆசிரியர்கள் கூறிச் சென்ற மாதிரி பெறப்படுகிறது. “வா போ” என்பது “மயன்””போவென்று அழைத்து வாவென்று வெருட்டி”என்ற வரியிலிருந்து வந்தது. மேலும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வார்த்தைகளைக் கொண்டு விளையாடுவது என்பதில் ஒரு ஈடுபாடு. ஏன் எலியட் கூறியமாதிரி கவிதை எழுதுவது என்பதே ஒரு உயர்தர விளையாட்டு என்பதன்றி வேறென்ன? பிறகு எனக்கு ஒரு தொடர்ந்து வரும் பிரக்ஞையில் குறள் ஒரு நீதி போதனை நூல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியே நீதி போதனையாக இருக்கும் என்றாலும் அதன் பின்னால் ஒரு அனுபவச் சூழல், அதன் கட்டுக்கோப்பின் இறுக்கம், அதன் வார்த்தைச் சிக்கனம், அதன் நுட்பம், இவைகளெல்லாம் அதை ஒரு உயர்தரக் கலைப் படைப்பாகச் செய்கிறது. என் கவிதையின் மையம் “நில்” என்பது, ஆனால் இந்த ஒரு நிலை பேருனை ஒரு தத்துவ நிச்சயத்திலிருந்து, நாம் தடுமாறிக்கொண்டே இருந்தாலும், அதை விட்டு நம்மால் நகர முடியவில்லை. எனவே இந்த மூன்று வார்த்தைகளுக்கு வேறு வேறு உருவங்கள் கொடுத்து, கடைசியாக வேறு ஒரு உருவம் கொடுத்து அதை ‘நில் – போ – வா’ என்ற ஒரு அர்த்தமற்ற வார்த்தையைச் சிருஷ்டி செய்து வாழ்க்கையே ஒரு விடுபடாத புதிராக அதைத் தெளிவிக்க நாம் கொள்ளும் முயற்சி எப்பொழுதுமே தோல்வியில் முடிகிறது என்றாலும், இந்த முயற்சியே நமக்கு வாழ்க்கையின் கவர்ச்சியில் ஈடுபடச் செய்கிறது. இரு வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் இந்த நிலையிலிருந்து நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. எந்தவிதச் சித்தாந்தத்துக்கும் வாழ்க்கை வழங்கிக் கொடுப்பதில்லை என்பதே அதன் ஆழ்ந்த ரகசியம் போலும். ஒரு வகையில் வாழ்க்கையைப் போல் ‘நில் – போ – வா’ என்பது ஒர அர்த்தமற்ற சொல் தொடராக நம்மைக் கவ்வுகிறது. எனவே ‘நில் – போ – வா’?
இவ்வளவுதான் என் கவிதையைப் பற்றி நான் சொல்லக் கூடியது.

சில குறிப்புகள் / 12

நண்பர்களே,
நவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புகிறேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது.
விருதுநகர் – ஜூலை 3 1991
அன்புள்ள அழகியசிங்கர்,
விருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள்? அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை ‘கனமானதாக’ ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை ‘அமெச்சூர்’ தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை ‘தச்சூர்’ போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் ‘மதிப்புக் கூறுதல்’ கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். ‘சிறு பத்திரிகை’ என்ற பிரமைக்கு இமேஜ்க்கு இறுதிவரை உட்படாமல் ‘ழ’ வெளிவந்தது. விருட்சம் படிப்படியாய் அத்தகைய இமேஜ்க்கு உள்ளாகி ஒரு
typical Tamil Little Magazineன் பரிபூர்ண லட்சணங்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது…’வீடு திரும்புதல்’ கவிதையின் அற்புத கவித்வம் மொழி பெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விரைவில் சென்னை திரும்ப இருக்கிறோம்
அன்புடன்
ஸ்டெல்லா புரூஸ்

ச இராகவன் யாழ்ப்பாணம்
பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குரிய அழகியசிங்கர் அவர்கட்கு,
நீங்கள் வெளியிட்டு வரும் நவீன விருட்சம் இதழ்கள் சில தொடர்ச்சியாக வாங்கிக் கிடைத்ததில் மெய்சிலிர்த்து இக்குறிப்பை எழுதுகிறேன். ஆர்ப்பாட்டமில்லாமல் கைக்கடக்கமாக ஒரு கனதியான சிற்றிதழாக நவீன விருட்சம் வெளிவருவதை கண்டு, உங்கள் மீது பெருமதிப்புக் கொண்டுள்ளேன். தவிரவும் உங்களது சிறுகதைகள் ஒருசிலவற்றை வாசித்ததில் பெருமகிழ்வுற்றேன். எளிமையான முறையில் அலாதியான நடையில் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் சமூகப் பார்வையுள்ள உங்களது சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேலும் ஜெகன், மோகினி, அழகியசிங்கர் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சலிப்பினைத்தராத வரவேற்புக்குரிய உத்தி. அசோகமித்திரன் எழுதிவரும் பத்தி பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அண்மைக்காலமாக கொம்பன் எழுதிவரும் பத்தியும் சுவாரசியமாகத்தானிருக்கிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று ஒரு பாக்கெட் நாவல் எழுத்தாளராக இதுவரை நான் எண்ணியிருந்த ஸ்டெல்லா புரூஸ் ஒரு தீவிரமான சிற்றிதழ் எழுத்தாளன் என்பதை நவீன விருட்சம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இங்கு யாழ்ப்பாணத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை வெளியானதில்லை என்பதையும் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
My Dear Mouli, (Azhagiyasingar), Card I Monday
Jaundice relapsed. Recovering. I need ¸கிழானல்லி Please get this from High Court grounds. In front of ‘Laxmy Narain’, on the Telephone Bill Office side, near the footwear repairs, there is Palmist by name subramanian.
Mention my name. He will help you find the herp.
Subbu was here twice regarding his job within 7 days. He must come again.
No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps.
I have a poem for you. But this must be published only
under the pen name I have given for it.
Am sending a friend who called at this point in writing this letter. He is sure to do the work.
With love,
T Ajithram Premil

பூனைகள் பூனைகள் பூனைகள் – 5

பசுவய்யா

பூனைகள் பற்றி ஒரு குறிப்பு
பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை மூடிக்கொள்ளும்
மூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும்
மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போது
ம் ரகசியம் சுமந்து வளைய வரும் வெள்
ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்
கை கொண்டவை பெண் பூனைகள் குட்டி போ
டும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்
று அல்லது நான்கு அல்லது குட்டிகளுக்கு மி
யாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும்.
வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இ
ரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம்
வழியும் பூனைகள் குறுக்கே வராமலிருப்பது
அவற்றுக்கும் நமக்கும் நல்லது குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்
தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை போல் ஓட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள்
குறுக்கிட்டுத் தாண்டும் சிறிய
பூனைகள்தான்பெரிய பூனைகள் ஆகின்றன
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி
நாம்யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றனபிறப்பிறப்பிற்கிடையே..
(நன்றி : பசுவய்யா 107 கவிதைகள்)

தானாய் விழும் அருவி…

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.
நெடுநாள் கழித்துப் பார்க்கும்நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றேபுறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்டநடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டுஉள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடுமடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோகேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணிகைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய் தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.

இரு கவிதைகள்



எல்லாம் காற்றுவாழ்வனவே…

காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்
தோள் மாட்டி பை முழுவதும்
எண்ணிறாத பறவைகளின்
வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன
காற்றில் ஒற்றையில் அலைந்து
இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று
கண்டறிந்ததாய்ச் சொன்னவை:
தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும்
மீன்கள் அதிகம் ருசிக்கும்
வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்
தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்
ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்
ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்
அரச மரத்துக் காற்றால்
மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்
அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த
மரம் அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்
மரங்களில் முட்கள் முளைப்பதற்கு
முரடர்கள் சுவாசக் காற்றே காரணம்
பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு
முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம்
சற்று நிறுத்தியவன்
தொடர்ந்து சொன்னவை:
பறத்தல் எனும் வினை
தேர்ந்த கண்கட்டு வித்தை
காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன
எல்லாம் காற்றுவாழ்வனவே…
துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன
துடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்களில்
பிரபஞ்ச ரகசியத்தின் பிடிபடலிருக்கும்
களைப்பைப் போக்க
கடலைச் சில்லறைத் துளிகளாக்கி
அதன் ஈரப்பதத்தில் காற்று சாய்வு கொள்ளும்
உயர மிதக்கும் பறவையின் நிழலைக்
காற்று கீழே பிரதிபலிக்கவிடுவதில்லை
ஓரிடத்தில் பறவைகள்
அதிகம் குவிவதால் நேரும் சரிவால் புயல்
பெருமூச்சுகளின் வெப்பம் கூடுவதால்தான் வெக்கை
சுவாசித்தலுறவை முறித்துக் கொள்ளும் எதையும்
காற்று கரைத்து இன்மையாக்கிக் கொள்ளும்.

நிலவோடு நண்டு

நிலவுக்கும்

மூன்று லட்சத்து
எண்பத்தி நாலாயிரத்து
நானூற்று மூன்று கி.மீ.
தூ

மி
ரு
க்
கு
ம்

நண்டுக்கும்
இடையேயிருப்பது
பகையா?
உறவா?

நிலவு பூரணமாயிருக்கையில்
இது சதையிலாது கூடாக மேய்கிறது
நண்டு முழுதாய்க் கொழுத்து அலைகையில்
அது பிறையுமிலாது இருளாய்க் கரைகிறது

ஆளுகைக்கு வருகையில்
மாறிமாறி அழித்துக்கொள்கின்றனவா?
அல்லது..
ஆபத்துக் காலங்களில்
சிபி சக்கரவர்த்திபோல தங்களை
அறுத்து கொடுத்துக் கொள்கின்றனவா?

இரண்டிற்குமிடையில்
ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும்
என் விருப்பம்
பெளர்ணமியில் நிலவு
அமாவாசையில் நண்டு.

ஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1978 ஆம் ஆண்டு, வேலை சேர்வதற்கான உத்தரவை கையில் வைத்துக்கொண்டு அந்தக் கட்டிடத்திற்குள் முதன் முதலாக நுழைகிறேன். நான் செல்ல வேண்டிய இடம் ஐந்தாவது மாடி.
அந்த மாடியில் நுழையும்போது எனக்குள் ஏற்பட்ட சாதாரண படப்படப்பை எளிதில் விளக்க முடியாது. முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் போய்ச் சேரப் போகிறேன். 1975 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு நிலையில்லாத பல இடங்களில் இருந்து, பின் ஒரு நிரந்தரமான உத்தியோகமாக 1978ஆம் ஆண்டு வங்கி அளித்ததை என்னால் மறக்க முடியாது.
70-80க்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் வங்கியில் பணியில் சேர்க்கப்படுவார்கள். வங்கியில் பணியில் சேரும் ஒருவருக்கு எளிதாக திருமணம் ஆக வாய்ப்பு அதிகம்.
ஐந்தாவது மாடியில் உள்ள பணியாளர் துறையில் நான் நுழையும்போது படபடவென்று தட்டச்சு ஒலி என் காதைப் பிளக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு தட்டச்சுப் பொறியுடன் ஒவ்வொருவர் அமர்ந்துகொண்டு தட்டச்சுச் செய்து கொண்டிருக்கிறார்கள். இளமையின் குதூகூலம் எல்லார் முகத்திலும் தெரிகிறது. அப்போதுதான் நான் வித்தியாசமான புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கிப் படிக்கிறேன். என் பள்ளிக்கூட நாட்களில் நான் தமிழ்வாணன் ரசிகன். கல்கியின் பொன்னியின் செல்வத்தை எப்படியாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டுபவன். பார்த்திபன் கனவு புத்தகத்தில் வரும் நரபலி சம்பவத்தைப் படித்து பயந்திருக்கிறேன்.
ஐந்தாவது மாடியில் பரத் என்ற ஒரு இளைஞரைச் சந்திக்கிறேன். அவர் லாசராவின் பக்தர். லாசரா எழுதிய எல்லா எழுத்துக்களையும் படிப்பதோடு அல்லாமல் ஒப்பிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
என்னையும் அந்த மாடியில் ஒரு டேபிள் முன் உட்காரவைத்து ஒரு தட்டச்சுப் பொறியைக் கொடுத்து அவர்கள் சொல்வதை தினம் தினம் அடித்துத் தரச் சொல்வார்கள். நான் ஒரு தட்டச்சராகத்தான் என் அலுவலகப் பணியை ஆரம்பித்தேன். அதுவும் ஐந்தாவது மாடியில்.
அந்த ஐந்தாவது மாடியில் என் வயதையொத்த பல இளைஞர், இளைஞிகளைச் சந்தித்ததேன். தினமும் அலுவலகம் வருவது ஒரு மகிழ்ச்சிகரமான வைபவமாகத் தோன்றும். நாங்கள் சில பேர்கள் ‘வீலர் கிளப்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். காலையில் சீக்கிரம் வந்தவுடன், ஐந்தாவது மாடியில் உள்ள மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் பேசுவதைப் பார்த்து அந்தப் பகுதிக்குச் செல்லாமல் இருப்பதற்காக கேட்டைப் பூட்டிவிட்டனர்.
ஆனாலும் இளைஞர்களான எங்கள் குதூகூலம் தொடராமலில்லை. நாங்கள் பத்து பதினைந்து பேர்கள் ஒரு கூட்டமாக உணவகத்தில் அமர்ந்துகொண்டு ஜோக்குகளை உதிர்த்தவண்ணம் இருப்போம். பெரும்பாலும் சர்தார்ஜி ஜோக்குகள். என்னால் ஒரு ஜோக்குகூட சொல்லமுடியாது. சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு மாடிப்படியாக ஐந்தாவது மாடிவரை ஏறிவருவோம். அப்படி ஏறிவரும்போது லிப்டை ஒவ்வொரு மாடியிலும் அழுத்தி விடுவோம். லிப்ட் 1, 2, 3, 4, 5….என்று நின்று நின்று வரும். அப்படி வரும்போது லிப்டில் வருவர்களைப் பார்த்து சிரித்தபடி வருவோம். பெண்களாக இருந்தால் இன்னும் இன்னும் அதிக கிண்டல்.

நான் முதன்முதலாக கதைகளை எழுதத் தொடங்கினேன். என் முதல் கதை செருப்பு. வேலைக்கு முயற்சி செய்கிற ஒரு இளைஞனைப் பற்றிய கதை. அதை எந்தப் பத்திரிகையிலும் போட மாட்டார்கள். என் கனவு குமுதம், ஆனந்தவிகடன் மாதிரி பத்திரிகைகளில் என் கதை பிரசுரம் ஆக வேண்டும் என்பது. நான் அப்போதே தீவிரமான எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியதால், சாதாரண பத்திரிகையில் எழுதும் கதை இயல்பு என்னிடமிருந்து கழன்று விட்டது. அப்போது அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை’ என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ந முத்துசாமி, சா கந்தசாமி, காசியபன், நகுலன் என்றெல்லாம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் எனக்கு அறிமுகம். ஆங்கிலத்தில Ayn Rand எழுதிய புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு சற்று மண்டைக்கனத்தோடு இருந்ததாக என் நினைப்பு.

பரீக்ஷா ஞாநியின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஜெயபாரதியின் குடிசை படம் பார்த்துவிட்டு ஜெயபாரதியையே நேரில் பார்த்தது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமாக இருக்கும். ஞாநியின் அறந்தை நாராயணன் எழுதிய ஒரு நாடகத்தில் மிகச் சில நிமிஷங்களே வரும் வேலையில்லாத இளைஞனின் பாத்திரத்தில் நடித்துவிட்டு ராத்திரி முழுவதும் தூங்காமல் பட்ட அவஸ்தையை நினைத்து ஞாநியின் நாடகம் நடத்தும் இடத்திற்கே போகவில்லை.
எல்லா சமயங்களிலும் எனக்கு ஆறுதலான விஷயம் என்னுடைய ஐந்தாவது மாடிக் கட்டடித்தில் உள்ள என் வேலை. என் முதல் கதை செருப்பு மலர்த்தும்பி என்ற ஒரு சிற்றேட்டில்தான் வந்தது. இலக்கியத்தில் ஆர்வமுள்ள என் உறவினர் ஒருவர் டெலிபோனில் இன்ஜினியராக பதவியில் சேர்ந்தபிறகு comfortable ஆக ஆரம்பித்த பத்திரிகை. பத்திரிகையின் முழுப் பொறுப்பும் என் உறவினர் கையில் இருந்தது.
இந்த ஐந்தாவது மாடியில்தான் அந்தப் பத்திரிகையின் பிரதிகளை முகம் சுளிக்காமல் படிக்கக் கூடியவர்களாகப் பார்த்து வினியோகிப்பேன். பத்திரிகையைக் கொடுத்துவிட்டு என்கதையைப் படிக்கிறார்களா என்று பார்ப்பேன். ஒருமுறை ஐந்தாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பெண், என் கதையைப் படித்துவிட்டு, ‘செருப்பு நன்றாக இருக்கிறது,’ என்றாள் எதிர்பாராதவிதமாக. எனக்கோ ஒன்றும் புரியவில்லை. என் காலில் அணிந்த ‘செருப்பை’ப் பார்த்தேன். ‘உங்கள் கால் செருப்பைச் சொல்லவில்லை. உங்கள் ‘செருப்பு’ கதை நன்றாக உள்ளது,’ என்றாள். அதைக் கேட்டவுடன் எனக்கு தாங்கமுடியாத சிரிப்பு. என் வீலர் நண்பர்கள் யாரும் நான் படிக்கும் கதைகளை அல்லது மலர்தும்பி மாதிரி சிறுபத்திரிகையைக் கையால் கூட தொட மாட்டார்கள். விதவிதமான டிரஸ்களும், சர்தார்ஜி ஜோக்குகளும், பெண்களும்தான் அவர்கள் பொழுதுபோக்கு. சாதாரண விஷயங்களை அசாதாரணமாகச் சொல்வதும் அவர்களுக்கு கைவந்த கலை. நான் இதுமாதிரி புத்தகங்கள்/பத்திரிகைகளை வைத்துக்கொண்டு அலைவதால் என்னை ஒருவிதமாகவும் பார்க்கத் தொடங்குவார்கள். சிலர் என்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்வார்கள். பெரும்பாலும் கிண்டல் செய்பவர்கள்தான் அதிகம்.
ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால் என்னால் அந்த ஐந்தாவது மாடியை மறக்க முடியாது. 80வாக்கில் ஒரு ஒன்றுமில்லாத பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, வீலர்கள் என்ற பெயரில் சேர்ந்திருந்த நாங்கள் பல பகுதிகளுக்குத் தூக்கியெறியப்பட்டோ ம். நானும் ஐந்தாவது மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன் விட்டேன்.
நாங்கள் போனபிறகு கலகலப்பே அந்த ஐந்தாவது மாடியிலிருந்து போய்விட்டதாக நினைப்பேன். 70-80 வாக்கில் இருந்த நிலைமை இன்று அடியோட மாறிவிட்டது. தட்டச்சு இருந்த இடத்தை கணினிகள் பிடித்துக் கொண்டு விட்டன. ஐந்தாவது மாடியில் முன்பு இருந்த நெருக்கமும் இல்லை. பணிபுரிபவர்களும் இல்லை. இன்று வங்கியில் பணிபுரிகிறேன் என்றால் திருமணத்திற்குப் பெண் கொடுப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. சம்பளம் குறைவு. கெடுபிடி அதிகம். பிஎப், சொஸைட்டி என்று லோனுக்காக லோள் லோள் என்று அலைபவர்களே அதிகம்.
என் இன்றைய நிலை முற்றிலும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. என் வயதையொத்த பலர் வங்கி வெளியிடும் சர்குலரில் பிணமாகத்தான் வருகிறார்கள். வேலைப் பளுவாலும், கெடுபிடியாலும் பலர் வங்கியிலிருந்து கழன்று நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை அந்த ஐந்தாவது மாடியை என்னால் மறக்க முடியாது. சமீபத்தில் ஒருநாள் அந்தச் செய்தி என் காதில் இறங்கி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வங்கியின் ஐந்தாவது மாடி தீக்கிரையாகிவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. ஒருதடயமும் இல்லாமல் அங்கு உள்ள எல்லாம் சாம்பலாகிவிட்டது. எனக்கு வருத்தமான செய்தி மட்டுமல்ல, பழைய நினைவுகளையும் கட்டிடத்தின் ஐந்தாவது மாடி எரித்துவிட்டதோ என்ற சந்தேகமும் கூட. நான் திரும்பவும் அந்தக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டுமென்று நினைத்து ஒருநாள் என் கிளை அலுவலகத்திலிருந்து கிளம்பிப் போனேன். வழக்கம்போல அதிகம் விற்காத என் பத்திரிகையை Central Railway Station ல் உள்ள Higginbothams கடையில் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது இரவு மணி அதிகமாகி விட்டது. களைப்பாகவும் இருந்ததால் ஐந்தாவது மாடிக்கட்டிடத்தைப் பார்க்காமலே வீட்டிற்குத் திரும்பி விட்டேன். ஆனால் என் நினைவிலிருந்து ஐந்தாவது மாடிக் கட்டிடத்தை நீக்க முடியாது.

எப்படி இருந்திருக்கக்கூடும்?…

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும் இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலகஅடுக்குமாடி கட்டிடத்தின்அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்அவனின் காலைப்பொழுது?

பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனை 4

ஞானக்கூத்தன்

தடவிப் பார்த்து சார்லஸ் போதலேர்
அடடா என்றாராம் பூனையை.

பிரான்ஸ் நாட்டுப் பூனைகள்
இருக்கும் போலும் அப்படி என்பதற்குள்
எங்கும் பூனைகள் அப்படித் தானென்று
சொல்லக் கூடும் பூனை ரட்சகர்கள்.

நமது நாட்டுப் பூனைகள் குறித்து
போதலேருக்கோ ஹெயின்ரிஷ் ஹெயினுக்கோ
தெரிந்திருக்க நியாயமில்லை

நமது பூனைகள் தவம் செய்யும் என்றோ
முனிவன் இல்லாத நேரத்தில் இருளில்
குடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத்
தங்கள் வடிவை இரவில் தருமென்றோ.

முன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை
என்னிடம் தேடுவது போல் பார்க்கும்
பூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும்
புராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான்.

வெள்ளிக் கிரணங்களால்
புனைந்த தன் உடம்பை
இரும்புக் கம்பிகளின் ஊடே
நூல்போல் நுழைந்து
அடுக்களை போகும்
அவற்றை நான் வெறுக்கிறேன்.

அப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி
இப்போது எழுதுவானேன்?

சூரிய உதயம் ஆவதற்கு முன்
பசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன்
எனது வீட்டை விட்டுக் குதித்துத்
தெருவில் ஓடிய பூனையைக் குறவன்
இமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான்
இரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை
விடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன்
தமிழ் தெரியாதவன்போல்
அவன் போய்விட்டான்
எனது வீட்டு ஜன்னல் கம்பிகளின்
இடைவெளி இன்னமும் இருண்டே உள்ளது