அறியாப் பிறவி

நான் கோபக்காரன்

கொலைகாரன்

காட்டுச் சிங்கமென்று

எனது கவிதை

நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்

அபகரிக்க வல்லவனாய்

எண்ணி என்னை

அன்றாடம் அலைக்கழிக்கும்

சூன்யக்காரனான

அவனறிய மாட்டான்

நான் அவனை

அவ்வப்போது எழுத்தால்

கண்டந்துண்டமாய்

வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்

என் கவிதைகளைப்

படிப்பதில்லை.

கவிதைகளும்

அவனுக்குப் பிடிப்பதில்லை.

அன்பு மழை

அலைபேசியில் அன்பின்

பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய்

குவிந்தும் குழைந்தும்

சிந்தி சிதறிக் கொண்டிருக்க

அவளுக்கொரு அழைப்பு

வந்தது.

ஹாய் என்றாள்..

அவசரமாய் எங்கோ

செல்வதாகச் சொன்னாள்.

அப்படியா என்று

ஆச்சரியப் பட்டாள்..

சுதாவுக்கு ஹாய் சொல்லு..

சந்தோஷுக்கும் ஒரு ஹாய் சொல்லு..

மல்லிகாவுக்கு ஹாய் சொல்லு

மஞ்சுவுக்கும் ஹாய் சொல்லு

வர்ஷூக்கும் ஹாய் சொல்லு

லாரன்ஸ்க்கும் ஹாய் சொல்லு

ஜெயஸ்ரீக்கும் ஒரு ஹாய் சொல்லுடி..

என்று எத்தனையோ பேருக்கு

ஹாய் சொல்ல சொன்னவள்

இடையில்…

கொஞ்சம் நில்லுடி

இன்னொரு கால் வருது

என்று சொல்லி

ஒரே நிமிடம் லைனில்

காத்திருக்கச் சொன்னாள்..

இன்னொரு பழைய

பெரிய நைந்து போன

அலைபேசியில்

எரிந்து விழுந்தாள்

இன்னப் பாரு..

திருப்பி திருப்பி

என்னக் கூப்பிடாதே..

நான் ரெம்ப

பிசியா இருக்கிறேன்.

எனக்கு எதுக்கும்

நேரமே இல்லை.

இப்போ எனக்கு

ஊருக்கு வரவே முடியாது.

வயசானா பேசாம

இருக்க மாட்டே..

தொந்தரவு பண்ணாதே என்று

அந்த அழைப்பை

அழுத்தி நிறுத்தி விட்டு….

தொடர்ந்து ஹாய்

பாடினாள்.. அடுத்து

ஒரு அப்படியா என்று

ஆச்சரியப்பட்டு விட்டு

ரியலி இண்ணைக்கு

உங்களையெல்லாம்

மிஸ் பண்ணறேன்டீ

என்று கூறி

பை சொல்லிவிட்டு

எதிரே வந்த

இன்னொரு பெண்ணிடம்

ஹை சொன்னாள்.

அவனின் தேடல்

சில்லென உடையும்

உன் சிரிப்பில்

அரசியல்வாதியின் சில்லரை

சப்தம் கேட்கிறது..

பகட்டான உன் வாசம்

என்னை பயமுறுத்துகிறது..

உன் உபச்சாரத்தை

பலரும்

விபச்சாரம் என்கின்றனர்.

உன்னில் விழும்

வார்த்தைகளில்

விதவிதமான ஆயுதங்கள்.

உன் பேச்சின் முடிச்சுக்களில்

பரிதாபமாய் இறுகித்

துடிக்கும் பலரின்

இளங் கழுத்துக்கள்

ஒண்ணும் வேண்டாம்

எனக்கு…

ஒண்ணுமில்லாத

வெறும் இதயம்

ஒன்று போதும்

என் மனசாட்சியை

வைப்பதற்கு.

இரவும் பகலும்

ஏழு வண்ணங்களோடும்

களித்து களைத்த

ஏழு கடல்களும்

பகலை பரந்து

உள் வாங்கிக் கொண்டன.

இருளின் மயக்கத்தில்

இமைகள் மூடின.

பலரின் வீட்டிற்கும்

பலரும் வந்தார்கள்.

காந்தி வந்தார்.

ஒபாமா வந்தார்.

கலாம் வந்தார்.

கிளின்டன் வந்தார்.

எம்.ஜி.ஆர் வந்தார்.

சுந்தர ராமசாமி வந்தார்.

க.நா.சு வந்தார்.

பழைய பேப்பர்காரன்

வந்தான்.

வீரப்பன் வந்தான்.

திருடர்கள் வந்தார்கள்.

இவர்களோடு கடவுளும்

வந்தார்.

உயிரோடு இருப்பவர்கள்,

உயிரோடு இல்லாதவர்கள்

சிங்கங்கள், புலிகள் என

எல்லாமே

யாருக்கும் தெரியாமல்

அவரவர் உலகத்துள்

வந்து போயினர்.

இருண்ட ரகசியங்களோடு

இமைகள் புதைந்திருக்க

பரந்த வானத்தின்

இருளைத் துடைத்தெடுத்த

பகல் காத்திருக்கிறது

சிறிய இமைகளின்

வெளியே வேட்டை நாயாய்

மூடிய இமைகளுக்குள்

முடங்கிய இருண்ட உலகின்

இருளைத் துடைத்தெடுக்க.

எழுத்தின் சாரம்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள்.
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்

புத்தகப் பைத்தியம்

எனக்கு புத்தகமென்றால்

பைத்தியம்.

என் மனைவிக்கு

புத்தகத்தைக் கண்டாலே

பைத்தியம்.

என் மாமனார் சொன்னார்

சீ பைத்தியக்காரி

இதையெல்லாம்

பெரிது படுத்தாதே.

புத்தகப் புழுவோடு

புக்ககம் போயிருக்கிறாயென

பெருமைப்படு என்றார்

என் மனைவியிடம்.

அதற்குள் என்

கைப்பிள்ளை

ஊர்ந்து ஊர்ந்து

புத்தகத்தைப் பிய்த்து

கிழித்துக் கொண்டிருந்தான்

நான் படிக்காதப்

பக்கங்களை…

கிழித்து கசக்கிய

பக்கங்களால் ஒரு

பூச்சியைப் பிடித்து

வெளியே எறிந்தார்

என் மாமியார்

புதிதாக ஒரு புத்தகத்தைப்

படித்த திருப்தி எனக்கு.

தாத்தாவும் பேரனும்

தாத்தாவின் பிள்ளைக்கு

குழந்தை பிறந்திருக்கிறது.

கொஞ்ச நாளாய்

தாத்தாவிற்கு பேச

எந்த தோழர்களும்

தேவையில்லை…

தாத்தாவும் பேரனும்

ஏதேதோ பேசிக்

கொள்கிறார்கள்..

யாருக்கும் புரியவில்லை

அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்

தாத்தாய் அழகழகாய்

ஏதோ சொல்லிக்

கொடுக்கிறார்…

குழந்தை கையை

அசைக்கிற போதும்

கால்களை ஆட்டி

இசைக்கிற போதும்

சாடையாய் கூடி நிற்கிற

முகத்தின் ஓசையில்

தாத்தா இப்போது

அவரது தாத்தாவின்

மடியினில்

கைகளையும் கால்களையும்

அசைத்து அசைத்து

ஏதோச் சொல்லிக்

கொண்டிருக்கிறார்.

உலகம் திரும்பி

சுற்றிக் கொண்டிருக்கிறது.

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின்

வியர்வை ஊற்றுக்

கண்களிலெல்லாம்

வாசனைத் திரவமூற்றி

காற்றில் போதையேற்றி

சற்றே முகமெங்கும்

வெள்ளை அடித்து

வீதிக்கு வருகிறார்கள்.

அவர்களின் ஒரு கையில்

பெரிய பூதக் கண்ணாடியும்

இன்னொரு கையில்

தார் சட்டியும்.

பூதக்கண்ணாடியால்

ஒவ்வொருவரையும்

கூர்ந்து பார்த்துவிட்டு

அவர்கள் முகத்தில்

சிறிது கரும்புள்ளி

தென்பட்டால் கூட

உடனடியாக அவருடைய

உருவம் வரைந்து

அதில் தார் பூசி

எல்லோருக்கும் காட்டி

இளித்து இன்பமடையும்

மக்கள்.

அப்பாவின் குடை

மூட்டெலும்புகள் உடைந்து

மடங்காமல் முடங்கியது

அப்பாவின் குடை.

சிகிச்சைக்கு

வழக்கமான

இடத்திற்கேச் சென்றேன்.

அப்படியே இருந்தான்

அப்பாவின் குடைக்காரன்

அதே இளமையுடன்

அதே இடத்தில்.

சரி செய்ய முடியுமா என்று

குடைக்காரனிடம் கேட்டேன்.

சரி செய்து விடலாம்

என்றவன் சரி செய்து

கொண்டே அப்பா

எப்படி இருக்கிறார் என்றான்.

அப்பாவைக் காப்பாற்ற

முடியவில்லை என்றேன்

வருத்தத்துடன்.

அப்படியா….அதான்

அப்பாவைக் காணவில்லை…

என்றவன் சரி செய்த

குடையை விரித்தான்.

விரித்த கருங்குடைக்குள்

அப்பாவிற்கே உரிய

சிரிப்பு மழை

இடி முழக்கமாய்…..

குடையும் நானும்




அலுவலக பயணமாக நான் சென்ற அந்த ஊர் எனக்குப் புதிது. வேலைகளில் ஒடுங்கிப் போன என் கண்களுக்கு அந்த ஊரில் எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம் பெய்த மழையில் குடையினை விரித்தேன். சிதறிய மணலில் நீரின் சிருங்கார ஆட்டம் என் கால்களை கிளுகிளுக்க வைத்தது. சுற்றிலும் பன்னீரைச் சொரிந்தது போல் குடையருவியின் குதூகலம். கார் மேக குடையில் கண்ணாடி மாளிகைக்குள் கனிந்த மழை ரசத்தில் களித்த நான் ரயில் நிலையத்தை நெருங்கிய போது கையில் குடை இல்லை. மழை விட்ட போது தேநீருக்காக ஒதுங்கிய கடையில் குடையையும் விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக குடைக்காக அந்த வழியில் திரும்பிய என் நடையின் வேகத்தை கண்கள் கால்களில் கயிறுகளைக் கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில் உண்மையில் களைந்தது விரிந்த குடைக்கு அப்பால் மிதந்த மஞ்சள் மலர் கூட்டங்கள். சில்லென்ற மழையில் சிலிர்த்துப் பறந்த சிட்டுக் குருவிகள்.. பதமான மழையில் மிதமாகப் பறந்த பட்டாம் பூச்சிகள். முரட்டு மீசையுடன் மயிர்கள் நிறைந்த உடம்போடு அரக்கன் போல் காட்சி அளித்த தொலைவில் இருக்கும் அந்த அசுர மலையும்தான். களைந்த குடைக்குள் விரிந்த உலகத்தில் விளைந்தன கோடானு கோடி குதூகலங்கள்.