அசோகமித்திரன்
 
 
ஒவ்வொரு முறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன ezஎழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன். குழப்பமாகத்தான் இருக்கும். பல முறை முழுத்தாள்கள் எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம். நான் படிக்கவேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார். எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள். அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன். ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும். எவ்வள்வு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்! பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன.இதில் யதார்த்தம் என்னவெனில் ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.
 
குறிப்புகள் கட்டை நான் எங்கெல்லாமோ தூக்கிச் சென்றிருக்கிறேன். சொந்த ஊரில் முடியாவிட்டால் வேறிடத்தில் பயன்படுமோ என்ற எண்ணத்தில்தான். பயனில்லை. ஸாமர்சட் மாம் இரு முறை அவர் எழுதப் போவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். அவருடைய ‘ரைட்டர்ஸ் ஹாண்ட்புக்’ அப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும்.
 
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயங்கள். பெரிய பிரச்சினைகள். ஏன் குறிப்புகளை மீண்டும் படிக்கத் தோன்றுவதில்லை? பழைய காகிதங்கள் மூச்சுத் திணற வைக்கின்றன் என்பதாலோ?. ஆனால் பழைய புத்தகங்கள், பத்திரிகை இதழ்களைப் படிக்காமல் இருக்க முடியவில்லையே.ஆதலால் மூச்சுத் திணறல் முழுக் காரணமில்லை.
 
ஜூலை மாதப் பிறப்பு என்னைப் படபடக்க வைக்கும். எனக்கு மிகவும் ஆப்தமானவர்கள் தீபாவளி மலர்களுக்குக் கதை எழுதித் தரச் சொல்வார்கள். முதலில் முடியாது என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர்கள்ள் இரண்டாம் முறை, மூன்றாம் முறை கேட்கும்போது முயற்சி செய்கிறேன் என்று சொல்வேன். குறித்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே கொடுத்துவிடுவேன். என்னைச் சில பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்வதையும் அறிவேன். காரணம், அவர்கள் எழுதும் பத்தி காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் போற்றும் நபர்கள் பட்டியலில் நான் இருக்க மாட்டேன்!நா.பார்த்தசாரதியிடமிருந்து இரு விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அச்சுக்குக் கொடுக்கும் கையெழுத்துப் பிரதி தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். யாரவது படைப்பு வேண்டும் என்று கேட்டால் பத்து வரிகளாவது எழுதித் தந்து விட வேண்டும்.
 
உரைநடை வரி வரியாக எழுத வேண்டும்.நாளெல்லாம் எழுதினாலும் இரு பக்கங்கள் தேறாது. இதை ஒருமுறை சொன்னதற்கு ஒருவர் பொது மேடையில் கோபித்துக் கொண்டார். அன்று அவர் கவிதைகள் எழுதி வந்தார். இப்போது அப்படிச் செய்யமாட்டார். அவருடைய கதைகள், நாவல்கள்தான் அவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்திருக்கின்றன.
 
முன்பொரு முறை ‘நான் எப்படி எழுதினேன்’ என்பது போன்றொரு தலப்பில் வரிசையாகக் கட்டுரைகள் வந்தன. எனக்குத் தெரிந்து ‘தீபம்’ பத்திரிகையும் ’நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கி வெளியிட்டது.எனக்கு ஒன்று தெளிவாகியது. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனாகவே ஒரு பாதை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்பட்ட வழி அல்லது முறை இன்னொருவனுக்குப் பயன்படும் என்று உறுதி கூற முடியாது.
 
Oஒரளவு எழுதப்பழகியவர்களுக்கு அவர்கள் எழுத வேண்டியதைக் கடைசி நேரம் வரை ஒத்திப்போடுவதுthaanதான் வழக்கம். ஆரம்ப எழுத்தாளர்கள் ஊருக்கு முன் அவர்கள் எழுதியதைக் கொடுத்து விடுவார்கள். மாதப்பத்திரிகைகளில் கூடத் தொடர் கதை எழுதுபவர்கள் கடைசி நிமிடம் வரை கையெழுத்துப் பிரதியைத் தர மாட்டார்கள்.அந்த அத்தியாயத்துக்காக நான்கு பக்கங்கள் ஒதுக்கி வைத்திருந்தால் அத்தியாயம் மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். அல்லது அரைப் பக்கம் அதிகமாக இருக்கும்.எனக்குத் தெரிந்து ஓர் எழுத்தாளர் ஒவ்வொரு தாளாக எழுதித்தருவார். எழுதியதை இன்னொரு முறை படித்துத் திருத்த மாட்டார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் அவருடைய தொடர்கதைகளில் பொருள் முரண்பாடு இருக்காது. ஆனால் படைப்பின் வடிவம் முதல்தரம் என்று கூறமுடியாது.
 
எழுதுவதை அவசரம் அவசரமாகச் செய்யக்கூடாது என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வது. ஆனால் அதுவும் பிரசவ வைராக்யம், மயான வைராக்கியம் போல அடுத்த முறை வரும்போது காணாமல் போய்விடும்.
                 
காஞ்சனா
 
புதுமைப்பித்தன்

இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?”
 

  “உண்டு” என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான்.  பிறகு சொன்னேன் ; “ராமாயணக் கதை உங்களுக்குக் கூட ஓரளவு தெரிந்திருக்கும்.  விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன், மிதிலை போகும் வழியிலே  ஒரு கல்லை மிதிக்கிறான்.  அக்கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை.  ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள்.  ராமனுக்குக் கல்யாணமாகிறது.    அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே,  ராமனும் சீதையும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள்.  ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்.  போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான்.   பிறகு அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான்.  ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள்.  அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள்.  வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்து கொள்கிறாள் அகல்யை.  கடைசியாகத் தன்னை ராமன்  அக்கினிப் பரிûக்ஷ செய்ததையும் சொன்னாள் சீதை, “உன்னையா?” ” ராமனா?” என்று கேட்ட அகல்யை மீண்டும்  கல்லானாள் என்று எங்களுடைய இன்றைய கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார்.    நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது.” என்றேன்.

  கதையை மனசில் வாங்கித் தெரிந்து கொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது.  பிறகு அவர் சொன்னார் ; “இந்தப் பிரச்சினையை மஹா கவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும்.    தன்மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லக்ஷிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்.” பிறகு கேட்டார் ; “அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன?” என்று.

 “புதுமைப்பித்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட ஒருவர்.  அவர் இயற்பெயர் விருத்தாச்சலம்,” என்றேன் நான்.   தொடர்ந்து சொன்னேன் ; “இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கி விடுவதில்லை.  ஆதி கவி அப்படி எழுதவில்லை ;  இந்த புதுமைப்பித்தன் யார் சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்து விடுவார்கள்.   ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமைபற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்.”

 புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய “சாப விமோசனம்”, அற்புதமான கதை ; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது.  இந்தத் தலைமுறையின் சிறந்த சிறு கதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம்.  அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன்.  படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது.   இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

  புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்.  எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்லமுடியாது எனினும் ஒரு முப்பதுக்குமேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

 காஞ்சனை என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம்.  இது வேறு ஒரு தினுசான கதை.

“வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்ட போது சென்னைக்கு மின்சார ரயிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை.  மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது.   தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்” என்று தொடங்குகிறது கதை.  “பவள்க்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளின் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது.  தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை  இயக்கமும், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும், சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப் போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை.  வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார்.  ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை.  மின்சார ரயில் அவர்  வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.  அவர் தாம்பரத்தில் குடியேறினார்.  தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று…..விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ் வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரைýý  இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்குக் கிளம்புவார்.  “இரவு கடைசி வண்டியில் காலித்தூக்டகுச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரை, பசி, கவலை-இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்.”

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது.  மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி.  சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டாள்.  மாணவி  வைத்தியத்துக்குப் படிப்பவள்.  கழுத்தில் லாங் செயினுடன் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று.   இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன்  கூடிய ஒரு புடைவை.  அதற்கு அமைவான ஜாக்கெட்.  செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள்.  நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துக் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை.  கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார்.   பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது….’பெத்துப் போட்டால் போதுமா?’ என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்….ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார்.  அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது.   பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துக் கொண்டார்….அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது.  வீர பாண்டியன் பட்டணத்துக்கருக்கு மாப்பிள்ளை-மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம்.  பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள்.  குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்…” எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள்.  அதை அவர் கவனிக்கவேயில்லை.

  இது üசுப்பையா பிள்ளையின் காதல்கள் என்னும் கதை.

 கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன்.  இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு,  எதையும் முயற்சி செய்து லாவகமாக உருவாக்கி விடுவதில் சமர்த்தர்.  சித்த வைத்திய தீபிகையின்  ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார்.  அவர் கதைகளில் ஒன்று;  பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்ஷாவில்தான்)  வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.   கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார்  கந்தசாமிப்பிள்ளை.  “யார் ஜீவியம் …” என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண்குழந்தை அவர்களை வரவேற்கிறது.    “எனக்கு என்னகொண்டாந்தே?” என்று கேட்டாள் குழந்தை. “என்னைக் கொண்டாந்தன்” என்றார் பிள்ளை.  “என்னப்பா தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப் படாது” என்று சிணுங்கியது குழந்தை.  “பொரி கடலை உம்புக்காகாது. இதோபார் உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார்.  குழந்தையின்பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை.  கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுதொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது.  “சற்றுத் தயங்கினார் ; ‘இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை’ என்று சிரித்தார் கடவுள்.  ஆசைக்கு என்று காலந் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை….’வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே…’ என்று கைகளை நீட்டினார் கடவுள்.  ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை.   ‘எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை ; வள்ளி.  அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா….நான் என்ன அப்படியா?’ என்று கேட்டது.  அது பதிலை எதிர் பார்க்கவில்லை” புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள்.  இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்க முடியாத சிருஷ்டிகள்.
 
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில்.  ‘கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டு தான் அவரை விட்டார்  கந்தசாமிப் பிள்ளை…..’ என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.
 
காஞ்சனைத் தொகுதியிலே முதல் கதையான காஞ்சனையே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது, பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப் பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில் – கட்டிலைவிட்டிறங்காக் கதை என்று பெயர் அதற்கு.   ‘மசாமசானம்’ என்று ஒரு கதை.  அதில் தெரு ஒரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான்.  ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக் கொள்கிறது.   ‘செல்லம்மாள்’ என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள்-அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
 
இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றிக் இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு.  சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்….இன்னும் பல ;  விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.    அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம்.  (ஒன்று) அவர் அவசியம்  என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள்; அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம்.  (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை.  சிலசமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு.   ஆனால் அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன.  திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாகவே கையாண்டிருக்கிறார். 

 வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறு கதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்து விட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்ல வேண்டும்.

(Written by KA NA SUBRAMANIAm)

எனது
குடும்பம்

விடிகாலையிலெழுந்து
வேலைக்குப் போகும் அப்பா

இருள் சூழ்ந்த பிறகு
வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து
வேலைக்குப் போகும் அம்மா

இருள் சூழ்ந்த பிறகு
வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து
பள்ளிக்கூடம் செல்லும் நான்

பள்ளிக்கூடம் விட்டு
வகுப்புக்கள் முடிந்து

இருள் சூழ்ந்த பிறகு
வீட்டுக்கு வருவேன்

எமக்கென
இருக்கிறது

நவீன வசதிகளுடனான அழகிய
வீடொன்று

– தக்ஷிலா
ஸ்வர்ணமாலி

தமிழில் – எம்.ரிஷான்
ஷெரீப்,

இலங்கை
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

 
11.
 
நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.  நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன்.  கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது.  நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு.  என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன்.  முதலில் சாப்பாடு.  இது பெரிய பிரச்சினை.  என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன். 
 
ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது.  மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.  கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது.  நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன்.  காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பினேன்.
 
தினமும் மயிலாடுதுறையிலிருந்து பந்தநல்லூருக்கு வருவதற்கு தமிழ் பஸ் என்ற ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.  அதைத் தவறவிட்டால் பின்னால் வரும் பஸ்ஸைப் பிடித்தால் அலுவலகம் வர தாமதமாகும்.  சிடுமூஞ்சி மேலாளரைப் பார்க்க வேண்டும்.  ஏதோ உலகத்தில் நான்தான் பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் பார்த்துத் தொலைப்பார்.  ஆனால் உண்மையில் வேற யாரையும் அவரால் குறை சொல்ல முடியாது.  ஒரே பெண் கிளார்க்கிடம் வழிவார்.
 
அவர் வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துவிட்டது.  ஆனால் அது மாதிரியான சோகம் நிகழ்ந்துவிட்டதற்கான அறிகுறியே அவர் முகத்தில் தெரியாது.  அவர் மனைவி அவருடன் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். இது அவருடைய இடமான கோயம்புத்தூரில் நடந்தது. 

அவர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போதுகூட உணர்ச்சியே இல்லாமல் சொல்வார்.  கேட்கும் நாம்தான் வருத்தப்பட வேண்டும். 
 
பஸ்ஸில் வருவது சரிபடாது என்று எண்ணி ஊரிலிருந்து டூ வீலரை எடுத்துக்கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.

                                                                                                                         (இன்னும் வரும்)
 
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

10.
 
 
நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது. 

”ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?”  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம்.

உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம்.

என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. 
எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன்.

அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஏன்எனில் மானேஜருக்கும், எனக்கும் ஒருவித ஒழுங்கு உறவு ஏற்படவில்லை.  தவிரவும் நான் என்ன தவறு செய்வேன் என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.

பஸ்ஸைப் பிடித்து மயிலாடுதுறையிலிருந்து நான் பந்தநல்லூருக்கு உடனடியாக வர முடியாது. ஒரு ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக வரும்படியாக நேரிடும்.  நான் உள்ளே நுழையும்போது, வட்டார அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளதாக போனை என்னிடம் கொடுப்பார் மானேஜர்.  மானேஜரே அதைச் செய்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றும்.  ”ஏன் லேட்?” என்று அவர்கள் கேட்பார்கள்.  ”வேற வழியில்லை.. பஸ்ஸைப்பிடித்து வரும்போது இப்படி ஆகிவிடுகிறது.”

”நீங்க சீக்கிரம் வரணும்..”

”ஏன் இங்க வந்து மாட்டிக்கொண்டேன் என்பது தெரியவில்லை.  வேலையை விட்டுப் போய்விடலாமாவென்று யோசிக்கிறேன்..”என்று எரிச்சலுடன் பதில் சொல்வேன்.

இதைத்தான் மானேஜர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.  மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குணம் அவருக்கு. 
                                                                                                                          (இன்னும் வரும்)

காக்கைச் சிறகினிலே (சிறுகதை)

                                                        
 
 
 
 
 
செல்வராஜ் ஜெகதீசன் 

 
 
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது,மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது.தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.ஒரு பதினைந்து வருடத்திற்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை,இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா?
 
அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர்.சொந்த ஊர்காஞ்சிபுரம்பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். ‘தில்லு முல்லு’படத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார்.எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண முடியும். விரைப்பான முகம். கண்கள் மட்டும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும்.அந்த சிரிப்புதானா நடந்த அத்தனைக்கும் காரணமென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
 
தினமும் வந்து போவது முடியாமல்,வீடொன்று வாடகைக்கு எடுத்து தங்க அவர் தேர்ந்தெடுத்தது, எங்களுக்கு அடுத்த வீட்டை. எப்படி அவர் வீட்டோடு ஒன்றிப் போனேன் என்பது இப்போது சரியாய் நினைவில் இல்லை.மைக்கேல் சார் வீட்டில் தான் எந்நேரமும் இருப்பேன்.ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து பையை போட்டுவிட்டு சார் வீட்டுக்கு போவேன். திரும்பி வர ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஆகும்.
 
எங்கள் பள்ளி எட்டாவது வரை மட்டுமே இருந்த ஒரு நடுநிலைப் பள்ளி.மைக்கேல் சார் ஏழாவதுக்கும் எட்டாவதுக்கும் வரலாறு பாடம் மட்டும் எடுப்பார்.அவர் பாடம் சொல்லித் தருவது அத்தனை சுவாரசியமாக இருக்கும்.படித்து முடித்தபின், அவரை போல் ஆக வேண்டுமென்று,நான் உட்பட,நிறைய பேர் ஆசைப்பட்ட அளவிற்கு. மைக்கேல் சார் கையால் திருக்குறள் புத்தகமொன்று நான் பரிசாய் (பேச்சுப்போட்டி முதல் பரிசு) பெறும் புகைப்படம் ஒன்று இப்போதும் என் வசம் வைத்திருக்கிறேன்.இப்போதென்றால் இந்த இருபத்தாறு வயதில்.
 
அதை விட மைக்கேல் சார் உபயத்தில் ரேடியோ ஸ்டேஷன் போய் வந்த கதை தான் ரொம்ப தமாசான விஷயம். இப்போ நினைத்தால் தமாசாக தோன்றும் விஷயம், அப்போதைக்கு அதிகம் சோகப்படுத்திய ஒன்று.
 
நீங்கள் ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும்“சிறுவர் சோலை”நிகழ்ச்சியைக் கேட்டதுண்டா?அதில் நாமும் ஒருநாள் பேசுவோமென்று நினைத்ததுண்டா?
அன்றுவரை, அதாவது மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வரும் வரை, வெளியே ஏதாவது சுற்றுலாகூட்டிப் போவதென்றால், பெரும்பாலும் மகாபலிபுரம்,வண்டலூர் ஜூ அல்லது முதலைப் பண்ணை இப்படித்தான் இருக்கும்.
 
ஒருநாள் சுகுணா டீச்சர் வந்து, “ரேடியோ நாடகத்துல நடிக்க யாருக்கெல்லாம் இண்டரஸ்ட் இருக்கோ, கை தூக்குங்க” என்றார். ஒன்றும் புரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க ஆரம்பித்தோம். பின் அவரே ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் சிறுவர் சோலை நிகழ்ச்சி பற்றி சொன்னார். நன்றாக படிப்பவன் என்ற வகையில் என் பெயர் டீச்சராலேயே சேர்க்கப்பட்டது. அதற்கு இரண்டொரு நாள் கழித்து நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டது. சுகுணா டீச்சரும் டிராயிங் மாஸ்டர் முருகேசன் சாரும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க,திருப்பித் திருப்பி அந்த வசனங்களை நாங்கள் சொல்லிப் பார்ப்போம். அவ்வப்போது மைக்கேல் சார் அங்கு வந்து பார்வையிடுவார். அவர் ஏற்பாட்டில்தான் அந்த ரேடியோ நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. 
 
இரண்டு வார ஒத்திகைக்குப் பிறகு,ரிகர்சலுக்காக ரேடியோ ஸ்டேஷன் போவோம் என்று சொல்லியிருந்தார் சுகுணா டீச்சர். ஒரு சனிக்கிழமை அன்று நாங்கள் எட்டு பேரும்,சுகுணா டீச்சர் மற்றும் முருகேசன் சார் சகிதம் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாகவே மைக்கேல் சார் அங்கு நின்று கொண்டிருந்தார். பின் எல்லோரும் பல்லவன் பஸ் பிடித்து,தங்கசாலை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினோம். அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டுமென்று சுகுணா டீச்சர் சொல்லிக்கொண்டிருந்தார்.
 
அப்போது,அதுவரை அமைதியாக வந்து கொண்டிருந்த நான், “உவ்வே” என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். அதுவரைக்கும் அவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் பயணம் செய்ததில்லை.முருகேசன் சார் ஓடிப் போய் அருகிலிருந்து ஒரு லெமன் ஜூஸ் வாங்கி வந்தார். அதைக் குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. பின் இன்னொரு பஸ்ஸில் ஏறி ரேடியோ ஸ்டேஷன் போய் சேர்ந்தோம்.
 
வானொலி அண்ணாவை நேரில் சந்தித்தோம். அங்கு வருவதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஒளிபரப்பான சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் கேட்ட வானொலி அண்ணாவின் குரலை வைத்து நான் கற்பனை பண்ணி வைத்திருந்த முகத்திற்கும் நேரில் கண்ட வானொலி அண்ணாவின் முகத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன.
 
இரண்டு மணி நேர ரிகர்சலுக்குப் பிறகு, திரும்பவும் இரண்டு பஸ் பயணம். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இரண்டு பஸ்சிலும் “உவ்வே உவ்வே” என்று கக்கி வைத்ததன் விளைவாக, வேறொருவன் எனக்குப் பதிலாக போய் ரெகார்டிங் முடித்து வந்தான். ரேடியோவில் குரல் கேட்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன்.
 
இப்போதும் எனக்கு சரியாக ஞாபகம் இருக்கிறது. (எல்லாம் அந்த ரேடியோ நாடக அனுபவத்தால்). அன்று ஞாயிற்றுக் கிழமை. நான் மைக்கேல் சார் வீட்டில் ரேடியோவில் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற சிறுவர் சோலை நிகழ்ச்சி கேட்டு முடித்த நேரம்தான்,சீனு,அவன் அக்கா கொடுக்கச் சொன்னதாக, ஒரு புத்தகத்தைக்கொடுத்து விட்டுப் போனான்.சீனு எங்கள் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான்.முழுப் பெயர் சீனிவாசன்.அவன் அக்கா மாலா எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். மாலாவைப் பற்றி சொல்வதென்றால், தக்காளி,மாலா மாதிரி சிவப்பாய் இருக்கும். (நன்றி சுப்ரமண்ய ராஜூ ).
 
புத்தகத்தைக் கொடுத்து விட்டு,ஒரே ஓட்டமாக ஓடிப்போனான் சீனு. நான் புத்தகத்தை உள் அறையில் இருந்த மைக்கேல் சாரிடம் கொண்டு போனேன்.
 
“சார்,சீனுவோட அக்கா இந்த புக்கை கொடுத்தனுப்பி இருக்காங்க”
 
சாருக்கு ஒரே ஆச்சர்யம்.
 
“யார்ரா அது சீனுவோட அக்கா?”
 
“மாலா சார். எட்டாவது பி செக்சன்”
 
“நான் எதுவும் புக் கேட்கலையே. சரி அப்படி வை. நாளைக்கு என்னன்னு கேட்போம்”
சரி சாரென்று அப்படியே அந்த புத்தகத்தை வைத்து விட்டுப் போயிருக்கலாம். அங்கு தான் என் ஆர்வக் கிறுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.
 
அப்போதெல்லாம் எனக்கு ஒரு விஷேசமான பழக்கம் உண்டு. அட்டை போடப்பட்டிருக்கும் புத்தகங்களின், மேல் அட்டையைப் பிரித்து, உள்ளே பார்ப்பது. சீனு கொடுத்துவிட்டுப் போன புத்தகத்தின் உள் அட்டையை பார்ப்பதற்காக, தினத்தந்தி பேப்பரால் போடப்பட்டிருந்த அட்டையை பிரித்தேன். உள்ளிருந்து கோடு போட்ட பரீட்சை தாள் போல ஒன்று கீழே விழுந்தது.எடுத்துப் பிரித்து பார்த்தேன். 
 
இரண்டு பக்கமும் ஏதும் எழுதாத வெறும் தாள். ஆனால் பேப்பர் சற்று கனமாக இருந்தது. இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்ததில் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.இரண்டு தாள்கள் ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ஒட்டப்பட்ட ஈரம் இன்னும் இருந்தது.
 
மேலே சற்று உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்தபோது,உள்ளே எழுதப்பட்டிருந்த எழுத்துகள் தெரிந்தன. நகங்களைக் கொண்டு மிக மெதுவாக இரண்டு தாள்களையும் பிரித்தேன். பிரிக்கப்பட்ட தாள்களின் இரண்டுபக்கங்களிலும் உள் பகுதியில் ஏராளமான வரிகள் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்தன.
 
“என் ப்ரியமானவருக்கு,
 
இந்தக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஒரு சில சினிமாக்களில் வருவது போல் ஒரு மாணவி ஆசிரியருக்கு எழுதும் காதல் மடல்……”
 
காதல் என்ற வார்த்தை எல்லாம் அந்த வயதில் எனக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. பேப்பர்களை எடுத்துக் கொண்டு,உள் அறைக்கு ஓடினேன்.
 
“சார்,சீனு குடுத்துட்டுப் போன புஸ்தகத்தோட அட்டையில இந்த பேப்பர் இருந்துச்சு சார்”என்று பேப்பர்களை நீட்டினேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதையெல்லாம் சொன்னேன்.
 
தாள்களைக் கையில் வாங்கியவர்,அடுத்த அரைமணி நேரத்திற்கு அதை மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தார்.
o
மைக்கேல் சார் அவராகப் போய் மாலாவின் சித்தப்பா ஒருவருடன் பேசியதும்,அடுத்த சில நாட்களில் மாலா எங்கள் பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டாள்.
அங்கிருந்தும் இன்லேன்ட் லெட்டரில் கடிதங்கள் வந்தது.பின்பு எங்கள் ஊரை விட்டே வேறெங்கோ கொண்டு செல்லப்பட, கொஞ்ச நாட்களில் மாலா எங்கிருக்கிறாள் என்றே யாருக்கும் தெரியாமல் போனது. அந்த இடத்தையும் கண்டுபிடித்து மைக்கேல் சார் மாலாவுடன் பேசி உறுதியளித்துவிட்டு வந்தார். (“பதினெட்டு வரை பொறு,
 
ப்ருதிவிராஜ் மாதிரி கொத்திக் கொண்டு போய் மணந்து கொள்கிறேன்”).பின் வந்த நாட்களில் நடந்தவைகள், எனக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
 
நானும் ஒன்பதாவது படிக்க வேறொரு பள்ளிக்குப் போனதில், மைக்கேல் சார் தொடர்பு முற்றிலும் விடுபட்டுப் போனது.
 
பதினைந்து வருடத்திற்குப் பின், இன்று கண்ட, மைக்கேல் சாரின் மனைவியிடம் மாலாவின் ஜாடை சிறிதும் இல்லாவிட்டாலும், நிறம் ஏறக்குறைய அதே தக்காளி சிவப்பில் இருந்தது.
எதையாவது சொல்லட்டுமா….78
 
அழகியசிங்கர்
 

 செப்டம்பர் மாதம் ஐந்தாம்தேதி என் மாமியார் சுப்புலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார்.  அவருக்கு வயது 89.  உலகில் எல்லா மூலைகளிலும் இப்படி எத்தனையோ சுப்புலட்சுமிகள் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  ஒருமுறை ஜீ எஸ்டி ரோடில் உள்ள சாலை ஓரத்தில்  ஒரு முதியவர் யார் கவனிப்பின்றி கிடக்க, போலீஸôர் அவரை விஜாரித்தபோது யார் அவரை அப்படி தள்ளிவிட்டுப் போனார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.

 என் வீட்டில் கீழே இருந்த ஒருவர், அவர் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தாம்பரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.  அங்குபோய் சேர்ந்த சில வாரங்களுக்குள் அவர் தாயார் இறந்து விட்டார்.  அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாத  கொடுமையாக இது என் மனதில் பட்டது.  அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சநாட்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம்.  ஏன் நமக்கு இந்தப் பொறுமை ஏற்படுவதில்லை? நம்மை வளர்த்த அம்மாவைக்கூட நம்மால் ஏன் பார்த்துக்கொள்ள முடியவில்லை?

 எங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் ஒரு முதிய ஆசிரியை தனியாக வசித்து வந்தார்.   அவர் ஏன் தனியாக இருந்தார் அவ்வளவு பெரிய வீட்டில் என்ற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.  ஆனால் ஒரு தீபாவளியின்போது  அவர் வீட்டிற்கு திருட வந்தவன்.  அசிரியையின் நகைகளைப் பறிக்க முயற்சித்தான்.  அவன் எடுத்துக்கொண்டு போகட்டும் என்று விட்டுவிடாமல்  போராடியதால், இரக்கமே இல்லாமல் அந்த முதியப் பெண்மணியைக் கொன்றுவிட்டு நகைகளைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.  அந்த தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. 
   
 நினைவுத் தப்பிப்போய் மரணப்படுக்கையில் பிரமிள் இருந்தார்.  அவரும் ஒரு தனிமைவாசி.  அவரை வேலூர் அருகிலுள்ள கரடிக்குடி என்ற கிராமத்திலுள்ள சிறிய அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி நேரிட்டது.  அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொள்பவர் பிரமிளின் விசிறி. பிரமிள் நினைவுத் தப்பிப்பேய் கிடக்கிறார்.  அப்படியே சில தினங்களில் மரணம் அடைந்து விடுகிறார்.  அவரைப் பார்த்த செவிலிப்பெண்களுக்கு அந்த மருத்துவமனையில் அவருடைய மரணம்தான் முதல் மரணம்.  நினைவுத் தப்பிப்போன பிரமிளுடன் அவர்கள் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.  புதிதாக அப்போதுதான் மருத்துவமனையில் சேர்ந்திருந்த  செவிலிப் பெண்கள் பிரமிளின் மரணத்தை முதன்முறையாக சந்திக்கிறார்கள்.  அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர்கள் வாய்விட்டு அழுததை இன்னும்கூட என்னால் மறக்க முடியாது.

 2050-ல் உலகில் 60 வயது கடந்த முதியவர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்று ஐ.நா அறிக்கையில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால் 60 வயதில் எத்தனைபேர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  பலர் வியாதிகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.  உலகில் சர்க்கரை நோயுடனும், ரத்த அழுத்த நோயுடனும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு பலர் இருப்பார்கள்.  இறக்கவும் முடியாமல், இருக்கவும் முடியாமல். 
 எனக்கு நகுலன் கவிதைதான் ஞாபகம் வருகிறது.  =இருப்பதற்காக வருகிறோம..இல்லாமல் போய் விடுகிறோம்.+ படிப்பவர்கள் மனதை கிலிகொள்ள வைக்கும் கவிதை.

 சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதையை என்னிடம் படிக்கக் கொடுத்தார்.  அந்தக் கவிதையின் முதல் வரி, =உயிர் பிரிவதற்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது+ என்று இருக்கும். இந்தக் கவிதையைப் படிக்கும்போது என்ன இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன்எனில் படிப்பவரை தேவையில்லாமல் சலனப்படுத்தும் கவிதை இது.  இப்படி சலனப்படுத்துவது அவசியமா என்ற கேள்வி என் மனதில் எழும். நம் வாழ்க்கையில் எத்தனையோ அதிர்ச்சிகளை தினம் தினம் செய்தித்தாள்கள் மூலம் அறியாமல் இல்லை.  ஆனால் அந்த அதிர்ச்சியை உணர்ந்த நாம் அந்த நிமிடமே மறந்தும்விடுவோம்.       திருவல்லிக்கேணியில் ஒரு கட்டடம் இடிந்து தரை மட்டமானது என்பது முதல் நாள் அதிர்ச்சி தகவல்.  அடுத்தநாள் அது சாதாரண நிகழ்வாக மாறி அந்த இடத்தைப் போய்ப் பார்க்கிறோம். அதிர்ச்சி நிகழ்வு வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வாக மாறி விடுகிறது.  ஆனால் தேவதச்சனின் கவிதையைத் திரும்பவும் படித்தால் அந்த அதிர்வை சலனத்தை எப்போதும் அது உண்டாக்கும். படிப்பவருக்கு இது தேவையா என்றும் நினைக்கலாம.

 நான் சீர்காழியில் இருக்கும்போது, =என்ன மூதியோர் இல்லம் நடத்துகிறாயா?+ என்று என் மனைவியைக் கிண்டல் செய்வது வழக்கம்.   89 வயதான என் மாமியார், 90 வயதான என் அப்பா, 75 வயது நிரம்பிய என் வீட்டில் பணிபுரிபவர் என்று வயதானவர்களின் ஆதிக்கம் என் வீட்டில் இருந்தது.  மனைவியால் தனியாக சமாளிக்க முடியாது என்பதால் நான் இங்கு வர நேர்ந்ததா என்றெல்லாம் யோசிப்பேன்.  என் மாமியார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வாழ்ந்தவர்.  குடும்பத்துடன் நாங்கள் வெளியூருக்குப் பயணம் செய்தால் எங்களுடன் தெம்பாக வருபவர்.  மே மாதத்தில் என் புதல்வனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டவர். 

 கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில், மரணம்தான் ஒரு மனிதனின் எதிரி என்று எழுதியிருக்கிறார்.  வேறு யாரும் எதிரி இல்லையாம்.  அவருடைய புத்தகங்கள் எல்லாம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்றன.  இன்னும் விற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் எழுதி புகழ்பெற்ற காஸ்டினேடா இறந்த விஷயம் ஒரு மாதம் கழித்துத்தான் டைம் பத்திரிகையில் வெளிவந்தது.  அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இடையே அவர் சம்பாதித்த சொத்தின்மீது கோர்ட்டில் உரிமைக் கொண்டாடி சண்டை.

AT THE HOUR OF DEATH  என்ற புத்தகம் படித்தேன்.  அந்தப் புத்தகத்தில் மரணம் அடையும் தறுவாயில் அவர்கள்  கண் முன்னால் அவருக்கு முன்னால் இறந்தவர்கள் கண்ணில் படுவார்களாம்.  சிலருக்கு யேசு தென் படுவார் அல்லது முருகன் தென் படுவார்.  என் பாட்டி இறந்துபோகும் தருணத்தில் எப்போதோ இறந்துபோன அவருடைய கணவர் வந்ததாக சொல்லியிருக்கிறார். அதைக் கூறியபோது அவர் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல நினைவு இருக்கும்போது, =போனால் தேவலை..+ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  ஆனால் இதுமாதிரி ஏற்படுவதற்குக் காரணம்.  உடம்பில் சோடியம் பொட்டாசியம் குறைந்து போவதால் உண்டாகிறது என்று மருத்துவ உண்மை குறிப்பிடுகிறது. என் மாமியார் மரணம் அடையும் தருணத்தில்தான் இதை உணர்ந்தேன்.  நடக்க முடியாத வலியுடன் என் மாமியார் சில தினங்கள் நாற்காலியைத் தள்ளி தள்ளி நடந்து தன் தேவைகளை  ஜாக்கிரதையாகப் பூர்த்தி செய்துகொண்டார்.  ஆனால் ஒரு தருணத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் மிகக் குறைந்த உயரத்தில் இருந்த திவானிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.  அடிப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.  அவருக்கு வலியும் தெரியவில்லை. கத்தவும் இல்லை.

 மகேஷ்பட் என்கிற ஹிந்திப் படத் தயாரிப்பாளர்- டைரக்டர்,  யூ ஜி கிருஷ்ணமூர்த்தியிடம் அளவுகடந்த மதிப்பும்  மரியாதையும் கொண்டவர்.  யூ.ஜியைச் சுற்றி சுற்றி வருபவர்.   A TASTE OF LIFE என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  அப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களை விவரிக்கிறது.  ஓரிடத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.  ‘நான் இறந்தபிறகு என் உடலை என்ன செய்யப்போகிறீர்கள்.  அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள்’ என்று. 

 டிசம்பர் 1ஆம் தேதி எனக்கு 60 வயது ஆரம்பமாகிறது.

(அம்ருதா நவம்பர் 2012 இதழில் வெளிவந்த கட்டுரை)
 
 
V GANESH

வட்டம்
 
 

சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
ஆரம்பம் எது முடிவெது
என்ற குழப்பத்தில்
ரங்கராட்டினம் போல்
ஒரு வட்டத்தில் இலக்கின்றி
சுழன்று கொண்டிருந்த அது என்ன?
எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.
சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
அல்லது நினைவை
நேர்படுத்துவதற்காய்
இன்னொரு தளத்தில்
செலுத்தும் போது
இயந்திரக் கோளாறு
காரணமாக
தரையிறக்குவதாக
அறிவிப்பு.
தரை தட்டும் முன்னர்
நீர் தட்டியது.
தலைகீழ் “ட” வடிவில்
விமானத்தின் சிறகுகள் வளைந்து
துடுப்பு போல இயங்கின
மூழ்காத விமானம்
நீரில் பேருந்தாக
அசுர வேகத்தில்,
வட்டப் பாதையில் ஓடியது
வட்டத்திலிருந்து குதிக்காமல்
கரையை அடைதல் சாத்தியமா?
பதற்றத்துடன் நகர்ந்த
காலத்துளிகளில்
மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
விழுந்த மாமிசத் துண்டுகள் போல
எல்லா திக்குகளில் சிதறியும்
ஒய்வற்று சுற்றியது.
சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
கழிப்பறை சென்று
விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
சுழற்சிக்குள் நுழைந்து
வண்ணத்துப்பூச்சி உருவில்
ஒவ்வொரு மலராக
உட்கார்ந்து உட்கார்ந்து
நீள்வட்டப் பூப்பாதையில்
போய்க் கொண்டிருந்தது..


 

வீழ்தலின் நிழல்

 

ஒரு கோட்டினைப்
போலவும்

பூதாகரமானதாகவும்
மாறி மாறி

எதிரில்
விழுமது

ஒளி
சூழ்ந்த

உயரத்திலிருந்து
குதிக்கும்போது

கூடவே
வந்தது

பின்னர்
வீழ்ந்ததோடு சேர்ந்து

ஒரு புள்ளியில்
ஐக்கியமாகி

ஒன்றாய்க்
குவிந்ததும்

உயிரைப் போல

காணாமல்போன நிழலில்

குருதியொட்டவே
இல்லை


எம்.ரிஷான் ஷெரீப்