எதையாவது சொல்லட்டுமா…..94

அழகியசிங்கர்

    கோவிந்தன் ரோடில் நானும் மனைவியும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம்.  ஒரு கடையின் முன் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது.  அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருந்தது. அது ஒரு டாஸ்மாக் கடை எல்லோரும் குடிக்க காத்துக்கொண்டிருந்தார்கள்.  இந்தப் பழக்கத்தை எல்லோராலும் ஏன் விடமுடியவில்லை.  ஒரு விருந்து என்றால் ஒரு கூட்டம் என்றால் நான்கைந்து பேர்கள் சேர்கிறார்கள் என்றால் புகையும் மதுவும் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை.


    நான் கல்லூரி படித்தக் காலத்தில் ஒரு முறை ஐஐடியில் படிக்கும் சில மாணவர்களைச் சந்திக்கச் சென்றேன்.  எல்லோரும் பாட்டில்களோடு இருந்தார்கள்.  எல்லோரும் புகைத்தார்கள், குடித்தார்கள்.  நானும் குடித்தேன்.  எனக்கு அது முதல் அனுபவம்.  எல்லோரும் ஏன் இப்படி குடிக்கிறார்கள் என்றுதான் குடித்தேன். நான் வீடு திரும்பும்போது இரவு பதினொரு மணி மேல் ஆகிவிட்டது.  வீட்டு மொட்டை மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டிருந்தேன்.  கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டியது.  நான் குடித்ததை எல்லாம் வாந்தி எடுத்தேன்.  அன்றிலிருந்து நான் குடிப்பதையே நிறுத்தி விட்டேன். 

    என் அலுவலக நண்பர்கள் பலரும் குடிப்பார்கள்.  புகை பிடிப்பார்கள்.  அவர்கள் முன் நான் அமர்ந்திருக்கிறேன்.  ஒருமுறை ஒரு அலுவலக நண்பனுடன் குற்றாலம் போகும்போது, அவன் அதிகப் போதையில் இருந்தான்.  அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்ணை அதிகமாக நேசிப்பதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னான்.   குடியில் அவன் கண்கலங்கிப் பேசினான்.  அந்தப் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்தபோது அவன் சொன்ன வார்த்தை இன்னும் ஞாபகத்திலிருந்து நீங்கவில்லை.  ‘என் தலையில் கட்டிட்டுப் போயிட்டாங்கப்பா,’ என்றான்.  அவன் குடியில் உளறியது திரும்பவும் ஞாபகத்தில் வந்தது.

    என் மனைவியுடன் நான் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன்.  மனைவியிடம் சொன்னேன்.  “நான் சிகரெட் பிடிப்பேன்.” என்று. அவள் நம்ப மறுத்தாள்.   நான் வேண்டுமென்றே ஒரு கடைக்குச் சென்று  ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டேன்.  நான் சிகரெட் பிடித்து காட்டியபிறகும் அவள் நம்பவில்லை.  நான் சிகரெட் பிடிப்பவன் என்று.

    பிரமிள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்.  நானும் அவரும் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்போம்.  ஒருமுறை கூட அவர் சிகரெட் பிடித்து, மது அருந்தி நான் பார்த்ததில்லை.  ஆனால் அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய இலக்கிய நண்பர் ஒருவர், ‘அவர் கஞ்சா அடிப்பார்,’ என்று என்னிடம் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.லாகிரி வஸ்துகளுக்கு மயங்காதவர்கள் இல்லை.  பிரமிள் விதிவிலக்காக தென்பட்டார்.

    ஆத்மாநாமின் ஒரு கவிதை வெளியேற்றம்.  அக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

            சிகரெட்டிலிருந்து
            வெளியே தப்பிச் செல்லும்
            புகையைப் போல்
            என் உடன்பிறப்புகள்
            நான்
            சிகரெட்டிலேயே
            புகை தங்க வேண்டுமெனக்
            கூறவில்லை
            வெளிச் செல்கையில்
            என்னை நோக்கி
            ஒரு புன்னகை
            ஒரு கை அசைப்பு
            ஒரு மகிழ்ச்சி
            இவைகளையே
            எதிர்பார்க்கிறேன்
            அவ்வளவுதானே

    ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் இக் கவிதையைப் படித்து
பிரமிள் எல்லோர் முன் விம்ம ஆரம்பித்தார்.  பிரமிளின் இந்தச் செய்கை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் அவ்வளவு எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர் அல்லர்.  எதிராளியை பார்த்தவுடன் மிரட்டும் தன்மையைக் கொண்டவர்.  நான் அறிமுகப் படுத்தும் பல நண்பர்களை அவர் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.

    ஆத்மாநாம் பல பழக்கங்களுக்கு அடிமை ஆனதால்தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் போய்விட்டார்.  ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு வந்த ஆத்மாநாம் கையை ஒரு முறை குலுக்கினேன்.  அவர் கை இயல்பாய் இல்லை.  நடுங்கிக் கொண்டிருந்தது.  பிரமிளிடம் கேட்டேன், üஏன் ஆத்மாநாம் கைகள் நடுங்குகின்றன,ýஎன்று.  üஅவர் டிரக் அடிக்கிறார்,ý என்றார் பிரமிள்.

    திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத் குமாரைப் பார்க்க நானும் பிரமிளும் ஒருமுறை போயிருந்தோம்.  யோகி ராம் சுரத் குமார் பாஸிங்ஷோ என்ற சிகரெட்டை பிடித்துக்கொண்டே இருந்தார்.  என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.  ஒரு யோகியார் சிகரெட் பிடிக்கலாமா என்பதுதான் என் சிந்தனை.  சிகரெட் தீர்ந்தவுடன், யோகி ராம்சுரத் குமார் அவருக்கு உதவியாய் இருந்த பையனிடம் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார்.   பிரமிள் உடனே என்னைப் பார்த்து, ‘நீங்கள் சிகரெட் வாங்க  பணம் கொடுங்கள்,’ என்று கட்டளை இட்டார்.  நானும் பணம் எடுத்து யோகியாரிடம் நீட்டினேன்.  யோகி ராம்சுரத்குமார் பணத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள வில்லை.  பிரமிள் கையில் கொடுக்கச் சொல்லி அவர் மூலம் வாங்கிக்கொண்டார்.  அந்தச் சந்திப்பில்  இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ஏன் யோகியார் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தார்? என்ற கேள்வி இன்று வரை என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது.  இதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.  

    நகுலன் ஒருமுறை அவருடைய சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.  அவரை என் வீட்டிற்கு அவர் சகோதரர் கொண்டு விட்டு சென்று விட்டார்.  எங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்தபிறகு அவரை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றேன்.  போகும் வழியில் ஒரு மதுபானம் விற்கும் கடையில் நின்று பிராந்தி ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டார்.  அந்தக் கடையில் முன் நிற்கும் வாடிக்காளர்களைப் பார்க்கும்போது நகுலன் வித்தியாசமாகத் தெரிந்தார்.  நகுலனால் குடிக்காமல் இருக்க முடியாது. இரவு முழுவதும் குடித்துவிட்டு தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார்.  நகுலனால் கடைசிவரை இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.  உண்மையில் அவர் குடிப்பதை நிறுத்தியிருந்தால்தான் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.  அவரைப் பார்க்கச் செல்லும் நண்பர்கள் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள்.  

    மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் தவறா?  அப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை.  ஆனால் நான் பார்க்கும் பலர் இந்தப் பழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் அவதிப் படுகிறார்கள் என்று தோன்றும்.  உண்மையில் ஒவ்வொருவருக்கும் எதாவது பழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும்.  என் நண்பர் ஒருவர் ஜர்தா பீடா போடாமல் இருக்க முடியாது.  அந்தப் பாக்கெட்டுகளை அவரால் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால் அவரால் இருக்கவே முடியாது.

தீவிர இலக்கியத்தில் ஈடுபடும் பெண்கள் கூட புகை பிடிக்க விருப்பப்படுகிறார்கள்.   எனக்குத் தெரிந்தவர்கள் அண்ணாசாலையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டு, வெளியில் உள்ள ஒரு  பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி ஊதியதைப் பார்த்திருக்கிறேன்.  

    ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் என் தந்தை தெருவில் யாராவது சிகரெட் பிடித்துக்கொண்டு போனால், கூப்பிட்டு நிறுத்தி, சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று கூறுவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.  ஒருசிலர் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள்.  சிலர் முறைப்பார்கள்.  ஒருவர் என் அப்பாவைப் பார்த்து, ‘மைன்ட் யுவர் பிஸினஸ்’ என்று ஒருமுறை சத்தம் போட்டார்.  ‘ஐ மைன்ட் மை பிஸினஸ்.  யு மைன்ட் யுவர் ஹெல்த்’ என்றார் பதிலுக்கு அப்பா.  அவர் வெற்றிலைப் பாக்குக்கூட மெல்ல மாட்டார். 

    தினமும் காலையில் நடைபயிற்சி செய்யும்போது என்னுடன் இன்னொரு நண்பரும் வருவார்.  இருவரும் பேசிக்கொண்டே நடை பயிற்சி செய்வோம்.  நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் ஒரு கடை முன் நண்பர் நிற்பார்.  ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொள்வார்.  பின் நடைபயிற்சி முடிந்தவுடன் இன்னொரு கடைக்குச் செல்வார். திரும்பவும் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொள்வார்.

    ‘இனிமேல் பிடி;க்கப் போவதில்லை. நாளையிலிருந்து  நிறுத்தி விடப் போகிறேன்,’ என்றார் ஒருநாள்.

    ‘உங்களால் முடியாது.  இது மாதிரி சவால் விடாதீர்கள்.  இந்தப் பழக்கம் இருந்து விட்டுப் போகட்டும்,’ என்றேன்.  ஆனால் சவால் விடுவதில் அவர் உறுதியாக இருந்தார். 

    அடுத்தநாள் காலையில் நாங்கள் நடைபயிற்சி இடத்தில் சந்தித்துக்கொண்டோம்.  நடை ஆரம்பிக்குமுன் முதல் வேளையாக அவர் கடைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார்.

    நான் அவரைப் பார்த்து சிரித்தேன். 

(அமிர்தா ஜøன் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
   
       

    விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பொதுவாக விருட்சம் கூட்டத்தில் மைக் ஏற்பாடு செய்வது வழக்கமில்லை.  மொத்தம் 50 பேர்களுக்குமேல் கூட்டத்திற்கு வர மாட்டார்கள்.  அன்றைய அசோகமித்திரன் கூட்டத்தில் அசோகமித்திரனால் சத்தமாகப் பேக முடியவில்லை.  ஆனால் பேசியவற்றை ஆடியோவில் பிரமாதமான முறையில் பதிவு செய்திருக்கிறேன்.  வந்திருந்த நண்பர்களுக்கு அனுப்ப விரும்புகிறேன்.  எப்படி என்பதை யாராவது என் அறிவுக்குப் புரியும்படி சொல்ல முடியுமா?   

                                                     விருட்சம் இலக்கியச் சந்திப்பு

     நடைபெறும் நாள்               ::          14.06.2014 (சனிக்கிழமை)

    நேரம்                                         ::        மாலை 5.30 மணிக்கு

                   
    இடம்                                          ::         ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
                                                                    நடேசன் பூங்கா அருகில்
                                                                    19 ராதாகிருஷ்ணன் சாலை,
                                                                   தி. நகர், சென்னை 600 017

  
    பொருள்           ::                               “நானும் என் கவிதைகளும்”

    உரை நிகழ்த்துபவர்  :                   பயணி
           

விருட்சம் இலக்கியச் சந்திப்பு

 அழகியசிங்கர் 
இலக்கிய உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்யலாமென்று யோசித்தபோது இலக்கியக் கூட்டம் நடத்தலாமென்று தோன்றியது.  செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது.  நடந்த இடம் பாரதியார் இல்லம்.  அசோகமித்திரனின் 82 வயது கூட்டம்.  பலர் கலந்து கொண்டு சிறப்பாக கூட்டம் நடந்தது.  அதன்பின் கவிதைகள் வாசிக்கிற கூட்டமொன்றை ஏற்பாடு செய்யலாமென்று நினைத்தேன்.  ஆனால் என்னால் முடியவில்லை.  முன்னதாகவே இப்படி கூட்டம் நடத்தப் போகிறேனென்று சொன்னால், கூட்டம் நடக்காமல் போய் விடுகிறது.  
முயற்சியை கை விட்டுவிட்டேன்.  ஆட்வான்ஸôக கொடுத்த 300ரூபாய் பணம் போய்விட்டது.  இனிமேல் இதெல்லாம் வேண்டாமென்று சும்மாதான் இருந்தேன்.  அப்போதாவது பணியில் இருந்தேன்.  நேரம் கிடைக்காது.  பிப்ரவரி மாதத்திலிருந்து பதவியிலிருந்து மூப்பு அடைந்தேன்.  சரி, இனிமேல் இலக்கிய உலகத்தை சும்மா விடக்கூடாது என்று தோன்றியது.  
என் நண்பர் ஒருவர், ஆடிட்டர் கோவிந்தராஜன், இதுமாதிரி கூட்டம் நடத்துவதில் ஆர்வம் உள்ளவர்.  என்னிடம் மாட்டிக்கொண்டார்.  அல்லது நான் அவரிடம் மாட்டிக் கொண்டேனா என்பது தெரியவில்லை.  கூட்டம் நடத்த இடம் கிடைத்து விட்டது.  தி. நகர்.  எல்லோரும் எளிதில் வந்து விடலாம்.ஒரு சனிக்கிழமை அதாவது 26.05.2014 அன்று.  யாரை முதலில் பேச சொல்வது?  எனக்கு திரும்பவும் அசோகமித்திரனைக் கூப்பிட்டு ஆரம்பிக்கலாமென்று தோன்றியது.  அவருக்கு போனில் செய்தியைச் சொன்னேன்.  அவர் சம்மதித்தார்.  தமிழில் புதிய இலக்கியப் போக்குகள் என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டார்.  
24.05.2014 அன்று திரும்பவும் அசோகமித்திரனைக் கூப்பிட்டு கூட்டம் பற்றி சொன்னேன்.  அவர் உண்மையிலே மறந்து விட்டார்.  எனக்கு பெரிய சங்கடமாகப் போய்விட்டது.  அவர் வராவிட்டால் என்ன செய்வது என்று தோன்றியது.  அப்போது எப்படி கூட்டத்தை சமாளிப்பது என்று யோசித்தேன்.  நல்லகாலம்.  அசோகமித்திரன் கூட்டத்திற்கு வந்து விட்டார்.  அன்று ஒரு கல்யாணத்திற்குப் போக வேண்டிய அவசியம் அவருக்கு வந்துவிட்டது.  நானும் ஆடிட்டர் கோவிந்தராஜனும் காரில் போய் அவரை அழைத்து வந்தோம்.  வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  அவ்வளவு கூட்டம்.  வழக்கம்போல் கூட்டம் நடத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  கூட்டத்திற்கு 20 பேர்கள் வந்திருந்தார்கள்.  பெரிய அளவில் விளம்பரம் கொடுக்க முடியவில்லை.  தினமணி மட்டும் தினசரி நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  
அசோகமித்திரன் பேச ஆரம்பித்தபோதுதான் ஒன்று தெரிந்தது.  அவரால் சத்தமாகப் பேச முடியவில்லை என்று.  மேலும் அவர் வயதை நாங்கள் யோசிக்கவில்லை.  இந்தத் தள்ளாத வயதில் அவர் பேச ஒப்புக்கொண்டது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றியது.  அவர் பேசிய எல்லாவற்றையும் சோனி ஆடியோ வாய்ஸ் ரிக்கார்டு மூலம் பதிவு செய்தேன்.  கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அசோகமித்திரன் பேசினார்.  
பொதுவாக அவர் தமிழ்நாவல்களைப் பற்றி பேசினார்.  இன்றைய நாவல்கள் சில புராண, சரித்திரம் அடிப்படையில் பக்கம் பக்கமாக தலைகாணி வடிவத்தில் எழுதப்படுகிறது என்று குறிப்பிட்டார்.  அதில் புதுமையில்லை என்றும் மறைமுகமாகவும் தாக்கினார்.  
‘இந்த இடத்தில் இலக்கியக் கூட்டம் என்றால் 20பேர்கள்தான் இருக்கிறார்கள்.  அதே ஒரு அனந்தராம தீட்சிதர் மாதிரி ஒரு பௌராணிகர் பிரசங்கம் நடத்துவதாக இருந்தால் 2000 பேர்கள் வந்திருப்பார்கள்,’ என்றார்.  அவர் இன்னொன்றையும் குறிப்பிட்டார்.  ஆண்கள் வீட்டைவிட்டுப் போவது.  இப்படி ஓடிப்போவதற்கு முக்கியமான காரணம்.  கடன் வாங்கியிருப்பதுதான்.  அந்தக் கடனைஅடைக்க முடியாமல் ஓடிப் போய்விடுவார்கள், என்றார். பெரும்பாலும் வட இந்தியாவில் எழுதும் நாவல்களில் ஓடிப்போவது அதிகமாக இருக்கும்என்று குறிப்பிட்டார். ஆடிட்டர் கோவிந்தராஜன் பெண்கள் வீட்டைவிட்டுப் போவதைப் பற்றி  குறிப்பிட்டார்.  தாகூர் கதை ஒன்றில் ஒரு பெண் வீட்டைவிட்டு ஓடிப் போவதைப் பற்றி குறிப்பிட்டார்.  
கூட்டம் நடந்து முடிந்தவுடன் அசோகமித்திரனை தொந்தரவு செய்து விட்டோமோ என்று தோன்றியது.  கூட்டத்தில் பதிவானதை இந்த கணினியில் பதிவு செய்திருக்கிறேன்.  எப்படி மற்றவர்களுக்கு அனுப்புவது என்பதுதான் தெரியவில்லை.  ஆடிட்டர் கோவிந்தராஜன் கூட்டத்தை புகைபடங்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.  

அமைதி காத்தல் – பாப்லோ நெருடா கவிதை

 ராமலக்ஷ்மி
இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம்
ஒரு முறையேனும் இப்பூமியில் 
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒருநொடியேனும் நம் கைகளை 
அதிகம் அசைக்காமல் நிற்போம்
அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி
அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது
விநோதமாய்த் தோன்றலாம்.
திமிங்கலங்களுக்குத் தீங்கிழைக்க  மாட்டார்கள் 
குளிர்ந்த கடலில் மீனவர்கள்.
காயம்
பட்டத் தம் உள்ளங்கைகளைக் கவனிப்பார்கள்
உப்பைச் சேகரிக்கும் மனிதர்கள்.
பசுமைக்கு எதிராக
காற்றுக்கும் நெருப்புக்கும் எதிராக
போர்கள் தொடுத்து
எவரும் எஞ்சியிராத களத்தில்
வெற்றியைக் கொண்டாடுவதை விடுத்து
தூய ஆடைகள் அணிந்து
சகோதரர்களுடன் இணைந்து
நிழலில் நடக்கலாம், எதுவும் செய்யாமல்.
நான் சொல்ல விழைவதை
வாழாவிருத்தலோடு குழப்பிக் கொள்ளக் கூடாது
வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது
வாழும் போதே மரணிப்பதை நான் விரும்பவில்லை.
வாழ்க்கையைக் கொண்டு செல்ல
இத்தனை சுயநலமாய் சிந்திக்காமல்
ஒருமுறையேனும் இருக்கலாம், எதுவும் செய்யாமல்.
அத்தகு பேரமைதி 
நம்மை நாமே புரிந்து கொள்ளாத வருத்தத்தை,
மரணத்தை நினைத்து 
நம்மை நாமே பயமுறுத்திக் கொள்வதை
தடுத்திட வாய்ப்பிருக்கிறது.
பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும் 
எல்லாமே மரித்து
விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.
இப்போது நான் பன்னிரெண்டு வரை எண்ணுகிறேன் 
அனைவரும் அமைதி காத்திடுங்கள், நான் போகிறேன்.
*
மூலம் (ஸ்பானிஷ் மொழியில்): “Keeping Quiet”
by Pablo Neruda (1904 – 1973) 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு

     நடைபெறும் நாள்                  ::     24.05.2014 (சனிக்கிழமை)

    நேரம்                                            ::      மாலை 5 மணிக்கு
                   
    இடம்                  ::                                 ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
                                                                     நடேசன் பூங்கா அருகில்
                                                                      19 ராதாகிருஷ்ணன் சாலை,
                                                                     தி. நகர், சென்னை 600 017
  
    பொருள்                                               ‘தமிழில் புதிய இலக்கியப் போக்குகள்”

    உரை நிகழ்த்துபவர்  :         எழுத்தாளர் அசோகமித்திரன்
           
                       
    அன்புடன்

    (அழகியசிங்கர்)

வேர் பிறழ்ந்த மனதின் பலிபீடம்


ரேவா


பெரும் மனப்பிறழ்வுக்கு பிறகு
பாவனையில் எந்தவொரு பதட்டமும் இல்லையென்ற
தொனியின் பலத்தோடு வலம் வருகிற

எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்

நீங்கள் அறிந்திராதபடி

அடிமாட்டைப் போல் அலைக்கழிக்கும் பிரியங்களுக்கு
கசாப்புக் கடைகளின் ரத்தவாடை
பழகி விட்ட படியாலே
புன்னகையோடு 
தலைவெட்டப்படும் கணத்திற்கு காத்திருக்கும்

எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்

அவருக்கே தெரியாதபடி

மொத்தமாய் அடைக்கப்படும் இடத்திலெல்லாம்
ரகசியமெனும் ஈனஸ்வரம்
கேட்கச் சகியாதவாரு அனற்றிக் கொண்டிருக்க

பலியாவது தெரிந்த நொடி

துண்டாகிப் போன சமாதானத்தில்
சத்தியத்தின் நா தொங்க
நம்பிக்கை விழிபிதுங்கி இறுதிமூச்சில்

புத்தன் பிறக்கிறான் போதிமர வேரை அழித்தபடி

***

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

வித்யாசாகர்






வள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த
அவளுடைய ஆசைகளாகவே
அவளை நான் பார்க்கிறேன்;

அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள்
வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள்
வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த
அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான
எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில்
எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில்
எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும்
அம்மா; அம்மா மட்டுமே..

இன்று எனக்கு வலித்தாலும்
இன்று நான் அழுதாலும்
என்னோடு சேர்ந்து அழுவது
அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்..

அவள் கொடுத்த சோற்றின்
அவள் கொடுத்தப் பாலின்
அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு..

அம்மா எங்கே அம்மா எங்கே
என்று ஏங்குகிறது மனசு..

அம்மா இல்லையே என்று கசங்கி
அழுகிறது மனசு..

அம்மா இல்லாத நானும்
இருந்தும் இல்லாதவன் தான்..

உண்மையில் எனக்கு
அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள்,
அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது,
தீராத நாட்களோடு வதைபடுகிறேன்
அம்மாவைத் தேடும் கண்கள் சிவக்கச் சிவக்க அழுகிறேன்

அம்மா நேற்று கனவில் வந்தாள்
அழாதே என்றாள்
நானிருக்குமிடத்தில் அவளும் இருப்பாளாம்
தொட்டுப் பார் என்றாள்
அம்மாவைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடல் சிலிர்க்கிறது,
அவள் தனது வயிற்றுள் எனைத் தொட்டுப் பார்த்த
அதே தொடுதல்
அதே அம்மாவின் வாசம்
அதே ஈர்ப்பு உடலெங்கும் பரவி ‘நானிருக்கேண்டா தங்கம்’
என்றாள் அம்மா,
இரவின் கனத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு
அம்மா அம்மா என்று கதறுகிறேன்..

இரவுகள் இன்னும் நீண்டு நிற்கிறது
வாழ்க்கை இப்படித் தான் இருப்பதோடும்
இல்லாததோடும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது..

நான் விடிந்ததும் கண்விழிக்கிறேன்
எப்போதும் போல புறப்படுகிறேன்
மதிய உணவையும் எடுத்துக்கொண்டு ஓடி
பேருந்திலேற அதே ஜன்னளோர இருக்கைக் கிடைக்கிறது
அமர்ந்துக் கொண்டு வழியெங்கும் தேடுகிறேன்
கண்ணீர் வழிந்து காற்றோடு அலைகிறது
அம்மா நினைவினுள் இருந்துக் கொண்டேயிருக்கிறாள்..

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 6

    வட்டம் 1

    வாழ மனமில்லை
    சாக இடமில்லை

    வானில் மேகமில்லை
    ஆனால்
    வெயிலும் மடிக்கவில்லை

    கந்தைக் குடைத்துணி
    யெனக்
    கிடக்கும்
    தன்னினமொன்றைச்
    சுற்றிச்சுற்றி வருமிக்
    கறுப்பின்ஓலம்போல்

    செத்துக் கிடக்கும்
    சுசீலாவை
    வட்டமிட்டு
    வட்டமிட்டு
    வட்டமிட்டு…….

                        நகுலன்

எதையாவது சொல்லட்டுமா…..93

                                                                                                       


அழகியசிங்கர்   

இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் போல் ஒரு சோதனையான மாதத்தை நான் சந்தித்ததே இல்லை.  வங்கியிலிருந்து 33 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி பதவி மூப்பு அடைகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.  அதாவது பிப்பரவரி மாதம் நான் பதவி  மூப்பு அடையும் மாதம்.  அந்த மாதம்தான் எனக்குப் பிரச்சினையான மாதமாக மாறிவிட்டது.  கண் பொறை காரணமாக எனக்கு இரண்டு கண்களிலும் சரியான பார்வை இல்லை.  வண்டி ஓட்டிக்கொண்டு செல்லமுடியவில்லை. கணினிகளைப் பார்க்க முடியவில்லை.   கண் பார்வையைச் சரி செய்யலாமென்றால் சர்க்கரை நோயையும், உயர் அழுத்த நோயையும் சரி செய்தால் முடியும்.  அதை உடனே செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் அலுவலகம் போகலாமா வேண்டாமா என்ற நிலை.  ஆனால் அலுவலகத்திற்கு வரும்படி தொந்தரவு.  வேறு வழியில்லாமல் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன்.  நிம்மதியாக ஏன் பதவி மூப்பு அடைய முடியவில்லை என்று தோன்றி கொண்டிருந்தது.


    ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து எனக்கு இந்தப் பிரச்சினை.  அதனால் அலுவலகம் வராமல் இருந்தேன்.  பிப்பரவரி நாலாம் தேதிதான் திரும்பவும் வந்தேன்.  அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மிஸஸ் ஐராவதம் அவர்களிடமிருந்து எனக்கு போன்.  “பேசிக்கொண்டே இருந்தார்..அப்படியே விழுந்து விட்டார்….அவசரமாக ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்..வர முடியுமா?” என்று அவசரமான தொனியில் பேசினார்.  நானும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவசரமாக அவர் வீட்டிற்குச் சென்றேன்.  நான் அப்போது ஒன்றும் நினைக்கவில்லை.  ஏதோ மயக்கமாகி விழுந்திருப்பார்.  ஆஸ்பத்ரியில் சேர்க்கும்படியாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.  ஐராவதம் மனைவி முடியாதவர்.  கொஞ்ச மாதங்களாக கால் நடக்க முடியாமல் எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருப்பவர்.  அவருடன் பேசிக்கொண்டிருந்த ஐராவதம்தான் எதிர்பாராதவிதமாய் சாய்ந்து விட்டார். 

    நான் போனபோது ஐராவதம் பிணமாகத்தான் ஆஸ்பத்ரியிலிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார்.  ஆப்புலன்ஸ் வண்டியில் தூங்குவதுபோல் படுத்துக்கிடந்தார்.  அன்று நெற்றியில் பட்டையாய் விபூதி இட்டிருந்தார்.  நான் இப்படி ஒரு ஐராவதத்தைப் பார்ப்பேன் என்று சந்றும் எதிர்பார்க்கவில்லை.  பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்களில் ஐராவதம் ஒருவர்.  புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் விவாதித்துக்கொண்டிருப்போம்.  பின் அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுப்பேன்.  சரவணா பவன் ஓட்டலுக்குச் சென்று பொங்கல், காப்பி சாப்பிடுவோம்.  வண்டியில்தான் அழைத்துக் கொண்டு போவேன்.  அவரால் கொஞ்ச தூரம்கூட நடக்க முடியாது. 

    எனக்கு ஐராவதத்தைப் பார்க்கும்போது சம்பத் ஞாபகம் வரும்.  இரண்டு பேர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.  ஒரே குண்டு, ஒரே உயரம்.  இருவரும் நல்ல நண்பர்கள்.  பணம் பத்தும் செய்யும் என்ற கதையை இருவரும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள்.  ஐராவதம் சொல்வார் :  ‘நான் சொல்ல சொல்ல சம்பத் எழுதுவான்’ என்று.  சம்பத் ஐராவதம் விட சற்று திவீரமானவர்.  ஒருமுறை பரீக்ஷா நாடக விழாவில் சம்பத் சத்தம் போட்டு கத்தியதை நான் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.  ஐராவதம் அப்படி இல்லை. 

    ‘கெட்டவன் கேட்டது’ என்ற சிறுகதை ஒன்றை கவனம் என்ற சிற்றேட்டில் ஐராவதம் எழுதியிருந்தார்.  அதைப் படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  அவரும் மாம்பத்தில்தான் வசிக்கிறார் என்பதை அறிந்தேன்.  அப்படித்தான் என் தொடர்பு அவருடன் ஏற்பட்டது. 

    அவர் மனைவியால் மட்டுமல்ல என்னாலும் அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.  ‘நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  அதன் பின் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்’ என்று நான் அடிக்கடி அவரிடம் சொல்வது வழக்கம். அவர் இறந்த நான்காம் தேதி அன்று எனக்கு தூக்கமே வரவில்லை.  ஐராவதம் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. 

    ஐராவதம் புத்தகங்களைப் படித்துவிட்டு எழுதுவது வழக்கம்.  அவருடைய பொழுதுபோக்கே புத்தகம் படிப்பதுதான்.  அவர் கடைசியாக விஸ்வரூபம் என்கிற இரா முருகனின் மெகா நாவலைப் படித்தது.  அதைப் படித்தவுடன், ‘இரா முருகனைப் பார்க்க ஏற்பாடு செய்யா..’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.  பொதுவாக அவர் எழுதுவதை என்னிடம் கொடுப்பார்.  நான் அப்படியே என் பிளாகில் ஐராவதம் பக்கங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதுவதைப் போடுவேன்.  அவர் வேகத்திற்கு என்னால் ஈடுகட்ட முடியவில்லை.  ‘கொஞ்சம் அவசரப் படாதீர்கள்.  நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  நேரம் அதிகமாகக் கிடைக்கும்,..,போடுகிறேன்..’ என்று சொல்வேன். 

    ஒருமுறை இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு என் வண்டியின் பின்னால் உட்காரவைத்து ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு போனேன்.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஐராவதம் அவர்களால் எளிதில் வரமுடியாது.  யாராவது ஒருத்தர் துணை வேண்டும்.  அழைத்துக் கொண்டு போக ஒருவர் வேண்டும்.  என் துணையுடன்தான் பல இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.  அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்.  பல படைப்பாளிகளைப் பார்க்கவே விரும்ப மாட்டார்.  அதைப்போல் இலக்கியக் கூட்டமும் அவருக்குப் பிடிக்காது. 

    இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் ஐராவதம் அவர்களைப் பார்த்த நா. முத்துசாமி. “என்னய்யா…உம்மைப் பார்க்கிறதே அதிசயமாய் இருக்கிறது…இங்கெல்லாம் வந்திருக்கிற..”என்று விஜாரித்தார்.  ஐராவதம் அவர்களுக்கு எப்போதும் ஒருவித நகைச்சுவை உணர்வு உண்டு…உடனே என்னைக் காட்டி,”இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.

    ஒருமுறை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிரமிள் உயிருக்குப் போராடியபடி படுத்துக் கிடந்தார்.  நான் ஐராவதத்தை அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தேன்.  மருத்துவமனை மாடியில் பிரமிள் படுத்துக்கொண்டிருந்தார்.  ஐராவதத்தைப் பார்த்து, ‘பிரமிள் மேலே இருக்கிறார்…பார்க்க வருகிறீர்களா?’ என்று கேட்டேன்.  ஐராவதம் உடனே, ‘அவருக்கு நான் காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,’ என்றார்.  ஐராவதத்தின் இந்தப் பதில் எனக்கு திகைப்பாக இருந்தது.  யாருக்கு யார் காட்சிப் பொருள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  சில எழுத்தாளர்களை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், போய்ப் பார்க்கக் கூட விரும்ப மாட்டார்கள்.  ஐராவதமும் அப்படித்தான். 

    ஐராவதம் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  நான் கேட்பேன்.  ‘எதாவது குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடாதா?’ என்று.  அதைக் கேட்டவுடன், ‘நாயா பூனையா வளர்க்கிறதுக்கு,’என்றார் உடனே.  இப்படித்தான் எதாவது சொல்லிவிடுவார்.  சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்.  ஆனால் உண்மையில் அவருக்கு குழந்தைகள் மீது ஆசை.  அவர் வீட்டிற்கு மேலே குடியிருக்கும் குழந்தைகள் அவர் வீட்டில் உரிமை எடுத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்.

    அவருக்கு சைக்கிள், டூ வீலர் என்று எதுவும் ஓட்ட வராது.  ஆனால் ஒரு கார் சொந்தமாக வாங்கிவிட்டார்.   டிரைவரை வைத்துக்கொண்டு அந்தக் காரில் பல இடங்களுக்குச் செல்வார்.  எனக்குத் தெரிந்து அவர் விருப்பப்பட்டு வாங்கியது கார் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  நல்ல துணிமணிகள் கூட அவர் வாங்கி போட்டுக்கொண்டு நான் பார்த்ததில்லை.  பிளாட்பாரத்தில் கிடைக்கும் பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவார். விலை உயர்ந்த உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிட விருப்பப் பட மாட்டார்.  நான்தான் அவரை வலுகட்டாயமாக சரவணபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போவேன்.  சாப்பிட்டுவிட்டு விலையைக் கேட்டு மலைப்பார்.  ஒருமுறை அவரை அவருக்குத் தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  திருமணம் முதல்மாடியில் நடந்து கொண்டிருந்தது.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  பின் விருந்து சாப்பிட்டுவிட்டு கீழே மாடிப்படிகள் வழியாக நடந்து வரும்போது, ஐராவதம் தடுமாறி விட்டார்.  அவரால் படிக்கட்டுகளில் காலை வைத்து நடக்க முடியவில்லை.  12 ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  இரண்டு மூன்று முறைகள் தெருவில் நடந்து  செல்லும்போது மயங்கி விழுந்திருக்கிறார்.  அவர் மனைவிக்கு அவரை தனியாக அனுப்ப பயம்.  நான் அழைத்துப் போகிறேன் என்றால் அனுப்புவார்.

    ஒருமுறை வைதீஸ்வரன் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது சரவணபவன் ஓட்டலுக்கு ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.  வழக்கம்போல் பொங்கல் வடை ஆர்டர் செய்தேன்.  ஆனால் அன்று ஐராவதம் அவர்களால் உட்காரகூட முடியவில்லை.  ”உடனே போய் ஒரு மருந்து வாங்கிக்கொண்டு வா.” என்று ஐராவதம் சொல்ல, நான் அவசரம் அவசரமாக எதிரில் உள்ள அப்பல்லோ மருந்தகத்தில் அவர் கேட்ட மருந்தை வாங்கிக்கொண்டு வந்தேன்.  அதைச் சாப்பிட்டப்பிறகுதான் அவருக்கு சரியாயிற்று.  ஐராவதம் டாக்டரைப் பார்க்க அச்சப்படுவார்.  அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் பட்டப்பாடை எளிதில் விளக்க முடியாது.  ”என் மனைவிக்கு முன்னே நான் போய்விட வேண்டும்” என்பார்.  
    ”என்ன வீட்டிற்குள்ளேயே இருக்கிறீர்கள்…வெளியே வாருங்கள்,”என்பேன்.
    “நான் வீட்டிற்குள்ளே இருந்தே போய்விடுகிறேன்..” என்பார்.

    என்ன இப்படியெல்லாம் சொல்கிறாரே என்று தோன்றும்.  உண்மையில் அவர் வீட்டிற்குள் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் இறந்து போனார்.  யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல்.

           (அம்ருதா மே 2014 அன்று வெளிவந்த கட்டுரை) 
     
     
       
   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 5


            இயற்கை

        நோடீசு ஒட்டக்கூடாதென்று
        எழுதியிருந்த
        காம்பௌண்டு  சுவரில்
        வேப்ப மரக்கிளை நிழல்
        நோடீசாகப் படிந்திருந்தது
           
                                                                       – நா ஜெயராமன்