புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


வட்டம் 3

என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை

ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையில்
ஏக வாரிசு
என்றாலும் என்ன?

சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இலலாமல் போனால்
தான்
            என்ன?

                        நகுலன்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 7

வட்டம் (2)

பேனாவுக்கு மையிட்டு
அதன் முனைதீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து

எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் தின்மையில்
அதன்
கூர் மழுங்கும்;

சேலை அவிழ்க்
காலமென்றா
லோ
சுசீலாவும் செத்துக்
கிடக்கின்றாள்

                        – நகுலன்

வண்ணச்சிறகுகளாலான கோட்டோவியம்

 தேனு
ஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின்
வண்ணமற்ற இழையைப் பிடித்தபடி
மையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி.
விழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி 
நீள்கோடுகளைக் கடைந்தெடுத்து
சொற்களாய் உருக்குகிறாள்.
மேடுகளைச் செதுக்கி அலையலையாய்
முன்னேறும் வேகம் என்றுமே
அவளுக்கு அலாதியானது..
ஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும்,
ஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும்
சிறகடிக்க விடுத்து நகர்கிறாள்.
சொற்களையும் புன்னகைகளையும்
ஒரு சேர கலந்து வெளியிட்டு
வண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது.
மையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை

வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச்

சாயவும்,
வண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி..
காலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய்
உருமாறி இருந்தது கோட்டோவியம்,

அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்

வண்ணச்சிறகுகளின் இளவரசி யாழினி..

மூன்று கூட்டங்களும் நானும்

(PHOTOS TAKEN BY AUDITOR GOVINDARAJAN)
அழகியசிங்கர்
சமீபத்தில் நான் எதிர்கொண்ட மூன்று இலக்கியக் கூட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு கூட்டத்தில் நான் பார்வையாளனாக இருந்தேன். 
 இன்னொரு கூட்டத்தில் நான் பங்கு கொள்பவனாக மாறி இருந்தேன்.  மூன்றாவது கூட்டத்தை நானே நடத்துபவனாக இருந்தேன்.  இந்த மூன்று கூட்டங்களைப் பற்றி இங்கே சொல்வது முக்கியமாக கருதுகிறேன். 
முதல் கூட்டம்: அசோகமித்திரனை வாசித்தல் என்ற கூட்டம். பெருந்தேவி அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்.  அக் கூட்டத்தை இவ்வளவு தூரம் சிறப்பாக ஏற்பாடு செய்வார் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.  ஒருநாள் முழுவதும் கூட்டத்தை சிறப்பாக நடத்தி விட்டார்.  இக் கூட்டத்திற்கு நான் மதியம்தான் வர முடிந்தது.  அன்று ஏகப்பட்ட வெயில்.  தாங்க முடியவில்லை.  டூ வீலரில் வந்த நான் நடுவில் திரும்பி விடலாமாவென்று நினைத்தேன்.  ஆனாலும் எப்படியும் கூட்டத்திற்குப் போய்விட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் சென்றேன்.  உண்மையில் அக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களும் என் நண்பர்கள்.  
மதியம் ஆரம்பமாகும் கூட்டத்திற்குத்தான் நான் வந்தேன்.  முதலில் ராமானுஜம் என்பவர் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலை ஒட்டிப் பேசினார்.  கிட்டத்தட்ட ஒரு கட்டுரையாக எழுதி வாசித்தார்.  அக் கட்டுரையை அவர் வாசிக்கும்போது என்னால் கட்டுரையை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  ஒரு சமயம் கட்டுரையை அச்சடித்து முன்னதாகவே கொடுத்திருந்தால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டிருக்கலாம்.
அடுத்ததாகப் பேசிய ராஜன் குறை அவர்கள் தற்சமயம் என்று எதோ சொல்லிக்கொண்டு வந்தார். அவரும் கட்டுரையாக வாசித்தார். இதிலும் பிரச்சினை அவர் அசோகமித்திரன் நாவலான இன்று குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதுதான்.  பார்வையாளனாக இருக்கும்  எழுதிய கட்டுரையை நிதானமாக வாசிக்க வேண்டியவன், காதால் கேட்கிறேன் என்று தோன்றியது.   அசோகமித்திரன் எழுத்து சுலபமானது.  எளிதில் பலவற்றை  புரியும்படி எடுத்துரைக்கும் தன்மை கொண்டது.  ஆனால் அவர் நாவலை வைத்துப் பேசியதுதான் புரியவில்லை.  
மூன்றாவதாகப் பேசிய பெருந்தேவி, மானசரோவர் என்ற அவருடைய நாவலை முக்கியமாக எடுத்துப் பேசினார்.  அவரும் எழுதித்தான் வாசித்தார்.  அந்தக் கட்டுரையில் வேறு பல ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.  திரும்பவும் ஒரு பிரச்சினை என் முன்னால் நின்றது.  எழுதப்பட்ட கட்டுரையின் முழுவடிவம் முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான்.  
அசோகமித்திரனின் எழுத்துக்கள் எப்படி?  அதை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். அவர் நாவல்களில் காணப்படும் எளிமை அவரைப் பற்றி சொல்வதில் இல்லையோ என்றுதான் எனக்குத் தோன்றியது.  வீட்டிற்கு நான் வரும்போது ஒன்றே ஒன்றை நான் நினைத்துக்கொண்டேன்.  திரும்பவும் அசோகமித்திரன் நாவல்களை எடுத்து வாசிக்கலாமென்பதுதான்.  
இக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய பெருந்தேவி முன்னதாகவே என்ன பேசப் போகிறோம் என்பதையும் அச்சடித்துக் கொடுத்திருந்தால், பார்வையாளர்களும் முழு வீச்சில் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள்.  இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
நான் கலந்துகொண்ட இரண்டாவது கூட்டம்.  மலாய் கவிஞர்களுடன் தமிழ் கவிஞர்கள் கவிதைகள் வாசித்தல்.  சென்னை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம், மற்றும் மலாய் பல்கலைக் கழகம் சேர்ந்து நடத்திய கூட்டம் இது.  11.06.2014 அன்று நடந்த கூட்டம் இது. கவிதையாய் விரியும் வாழ்வு என்று அக் கூட்டத்திற்கு தலைப்பு. 28 தமிழ்க் கவிஞர்கள், 21 மலாய் கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது.  மலாய் கவிதைகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  அதேபோல் தமிழ் கவிதைகள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  இரண்டு நாட்கள் நடந்த இக் கூட்டத்தில் மொத்தம் 49 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தோம்.  இந்தியாவில் உள்ள மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுடன் இது மாதிரியான கூட்டம் நிகழ்ந்ததில்லை.  ஆனால் மலேசியாவைச் சேர்ந்தர்களுடன் இப்படியொரு கூட்டம் நிகழ்வது ஆச்சரியமாக இருந்தது.  
இக் கூட்டத்திற்கு தனி மனித பொறுப்பை ஏற்றுக்கொண்ட லதா ராமகிருஷ்ணனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  அவர் ஒருவரே எல்லா தமிழ் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நல்ல புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.   கவிதையைக் குறித்து எஸ் சண்முகமும், சி மோகன் அவர்களும் கட்டுரைகள் வாசித்தார்கள்.  சண்முகம் கட்டுரை படிக்க வேண்டிய கட்டுரை.  கேட்க வேண்டிய கட்டுரை இல்லை.  சி மோகன் தெளிவாக தன் எண்ணங்களை கட்டுரை வாயிலாக வாசித்துக் காட்டினார்.  பல கவிஞர்களைச் சந்தித்த நல்ல அனுபவம் இது.
மூன்றாவது கூட்டத்தைப் பற்றி இப்போது சொல்ல விரும்புகிறேன்.  ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முயற்சி மே மாதத்திலிருந்து நான் தொடங்கி உள்ளேன்.  அதன் தொடர்ச்சியாக கவிஞர் பயணியின் கூட்டத்தை ஜøன் மாதம் நடத்தினேன்.  எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்ற நண்பர்.  பயணி அடக்கமானவர்.  அவர் இது வரையில் இரண்டு கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார்.  என் நிகழ்ச்சிக்கு வழக்கம்போல் குறைவானவர்களே வருவார்கள்.  ஆனால் கூட்டம் 2 அல்லது 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும்.  அன்றைய கூட்டமும் சிறப்பாக நடந்தது.  இக் கூட்டத்தில் முக்கியமான ஒன்று பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  பயணி மட்டும் அன்று பேசவில்லை.  பார்வையாளர்களும் சேர்ந்துதான் பேசினார்கள்.  இதனால் கூட்டம் கேட்க சிறப்பாக இருந்தது.  பொதுவான கருத்துகளும், பயணியின் கவிதைகள் பற்றிய கருத்துகளும் கூட்டம் முழுவதும் நிரம்பி வழிந்தன.  
  

நதியில் என் ஓடம்

ராமலக்ஷ்மி
 
எத்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன்
ஓடும் நதியில்
ஓடத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
அழகிய சோலைகளின் பக்கம்
அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம்
இறங்குவேன் என்றெண்ணி
ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை
கவனிக்கத் தவறி
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
துள்ளும் மீனைப் பாராமல்
புள்ளின் ஒலியைக் கேளாமல்
வெயிலை மழையை உணராமல்
வானின் நீலத்தை, விரையும் மேகத்தை
நிலவை, நட்சத்திரங்களை ரசிக்காமல்
கனவுகளைச் சுவாசித்து
சுளித்தோடும் நீரில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என் கனவில் சந்தித்து
கைகளைக் குலுக்கிக் கொள்கிறார்கள்
நான் அறிந்த ஆனால்
ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள்.
சந்திக்கிறேன்
நானும்
பரிச்சயமான ஆனால் 
அதுவரை சந்தித்திராத நபர்களை.
தினம் ஒரு கனவு
தினம் ஒரு நிகழ்வைச் சுற்றி
முடிவென்பது இல்லாமல் ஆனால்
தொடங்கிய புள்ளியிலிருந்து விலகாமல்.
நீங்காத
உறக்கத்தால்
பகல்களும் இரவுகளாய்க் கழிய
சேகரமான கனவுகள் எல்லாம் சேர்ந்து
என் தலையைப் பாரமாக்கிய ஓர் இரவில்
விழித்துக் கொள்கிறேன்
விரும்பி நதியில் குதிக்கிறேன்
புத்துணர்வுடன் 
எழும்பி விண்ணில்
பறக்கிறேன்
எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில்
இறகைப் போல் மிதக்கிறேன்
ஆனந்தம் பிறக்கிறது
பறக்கப் பிடிக்கிறது
தலைப் பாரம் இறங்கி விட்டது.
நிலவின் பிம்பம் போல்  
நதியில் என் ஓடம்
தொலைவில் தெரிகிறது
அலையின் போக்கில் 
செல்கிறது அசைந்தாடி 
இப்போதும்
நான் இல்லாமலும்
***

எதையாவது சொல்லட்டுமா……….95

      

அழகியசிங்கர்

    ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும்.  எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும்.  என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை.  கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன்.  ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது. 


    ஒவ்வொருமுறை என் அலுவலக நண்பர் என்னிடம் போனில் பேசும்போது, அவருக்கு என் மீது பொறாமையாகக் கூட இருக்கும்.  ”சார் நீங்க தப்பிச்சிட்டீங்க…” என்று.  ஆமாம். உண்மைதான். தொடர்ந்து இனி இருக்க முடியாது. 

    மார்ச்சு மாதம் முதல் தேதி.  மொட்டை மாடிக்குச் சென்று சூரியனைப் பார்த்து கைகூப்பினேன்.  35 வருட அலுவலக வாழ்க்கை முடிந்தது.  இனி அவசரம் அவசரமாக காலை 8.30 மணிக்கே போய் வங்கிக் கதவைத் திறக்க வேண்டாம்.  யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.  நிம்மதி.

    ஒரு மாதமாக பதவி ஓய்வுப் பெற்ற பலரிடம் பேட்டி கண்டேன்.  என் முதல் கேள்வி.  “எப்படி பொழுது போகிறது?” என் அலுவலகத்திலேயே பணிபுரிந்து பதவி மூப்பு பெற்றவர் சொன்னார் : “பொழுதே போக மாட்டேங்கறது…காலையில் எழுந்தவுடன் பூங்கா சென்று விடுவேன்.  அங்கே போய் உட்கார்ந்துவிட்டு வருவேன்..”    என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றியது.  ஏமாற்றமாக இருந்தது.  இன்னொருவர் சொன்னார் : “காலையில் பூஜை செய்ய ஆரம்பித்தால்,  மதியம் வரை ஓடும்.  அதன்பின்தான் சாப்பாடு,”என்று.

    “ஐயோ போர்..  நான் வேலைக்குப் போறேன்.  சம்பளம் குறைச்சல்தான்…ஆனா பொழுது போகிறது..”
    சொன்னவர் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருந்து பதவி மூப்பு அடைந்தவர். 

    நான் கேட்ட யாரும் பதவியை விட்டு வந்தபின் இன்னும் அதில் ஒட்டிக்கொள்ள வேண்டுமென்று துடியாக துடிப்பவர்கள்.  யாருக்கும் தான் பார்த்த பதவியை விட முடியவில்லை. 

    சில மாதங்களுக்கு முன் பதவி மூப்பு அடைந்த என் நண்பனிடமிருந்து போன் வந்தது.  “இன்சூரன்ஸில இருக்கேன்… நீ இன்சூரன்ஸ் போடு,” என்றான்.  நான் அவனுக்கு பதிலே சொல்லவில்லை.  திரும்பவும் சில நாட்கள் கழித்து போன் செய்தான்.  பதில் சொல்லவில்லை.  அவனும் விடவில்லை.  ஒருமுறை அவனிடம் சொல்லிவிட்டேன்.  “ஏன் இப்படி இன்சூரன்ஸிலே வேலைப் பாக்கறே.. சும்மா இருக்க முடியாது…நமக்கு கிடைக்கிற பென்சன் பணம் போதுமே.. வீட்டில இருக்கலாமே..” என்றேன்.

    “வீடு போரடிக்கிறது…யார் இருக்கிறது.  முடிஞ்ச வரை வேலை பாக்கறது..” என்றான்.  யாரையும் திருத்த முடியாது என்று தோன்றியது. 

    காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி போவதற்கு முன், உவேசாவின் என் சரித்திரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் படிப்பேன்.  பின் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று கு அழகரிசாமியின் கதை ஒன்றை எடுத்துப் படிப்பேன்.  பின் டைரி எழுதுவேன்.  சரியாக 7 மணிக்கு நடைபயிற்சிக்குக் கிளம்புவேன். நானோ காரை எடுத்துக்கொண்டு போவேன்.  நடைபயிற்சி ஒன்று.  காரை ஓட்டறது இன்னொரு பயிற்சி.  திரும்பி வரும்போது மணி ஒன்பது ஆகிவிடும்.

அன்றைய செய்தித்தாள்களைப் படிப்பேன். பின் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட உட்காருவேன்.  நிதானமாக குளிப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.  வளசரவாக்கத்தில் இருக்கும்போது இது நடந்ததா?  அவசரம் அவசரமாக ஓடி எட்டரை மணிக்கு வங்கிக் கதவைத் திறக்க வேண்டும்.  ஒரு முறை தாமதமாக வந்தபோது, முதன்மை மேலாளர், “நீங்க சீக்கிரமாக வந்து கதவைத் திறக்க வேண்டும்,” என்றார். “சிலசமயம் அது முடியாது சார்…நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்,” ”அப்படியெல்லாம் சொல்ல முடியாது.  வரத்தான் வரணும்.. நீங்க வரவில்லையென்றால் மத்த ஊழியர்களை ஒன்றும் கேட்க முடியாது,” என்றார்.  வேற வழி. எட்டரை மணிக்கு வந்து கதவைத் திறக்க வேண்டும்.  அவசரம் அவசரமாகக் குளித்து, அவசரம் அவசரமாக சாப்பிட்டு, அவசரம் அவசரமாக டூ வீலரில் வளசரவாக்கம் கிறைக்கு ஓட வேண்டும்.

        “என் அப்பாவிற்கு 92 வயதாகிறது….வீடு மாம்பலத்தில் இருக்கிறது.  மாம்பலத்தில் உள்ள கிளையில் என்னை மாற்றினால் நன்றாக இருக்கும்,ýý என்று மேலிடத்தில் கேட்டுப் பார்த்தேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனைக்கும் நான் பதவி மூப்பு அடைய ஒரு வருடம் கூட இல்லை. “

    நான் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டுக் கதவை தாளிட்டு விட்டு வந்து விடுவேன்.  அப்பா தானாகவே குளித்துவிட்டு, தானாகவே சாப்பிட்டுவிட்டு, பேப்பர் படித்துவிட்டு, தூங்குவார் தூங்குவார் அப்படி தூங்குவார்.  யாராவது பெல் அடித்தாலும் போய் திறக்க மாட்டார்.  போன் எதாவது வந்தால் காது கேட்காது. 

    எனக்கு ஞானக்கூத்தன் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ‘விடுமுறை தரும் பூதம்’ என்பதுதான் கவிதை.

        ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
        வேலை என்னும் ஒரு பூதம்
        திங்கள் விடிந்தால் காதைத் திருகி
        இழுத்துக் கொண்டு போகிறது

        ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
        ஆளை அனுப்பிக் கொல்கிறது
        மறுநாள் போனால் தீக்கனலாகக்
        கண்ணை உருட்டிப் பார்க்கிறது

        வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
        வீட்டில் ஒருவல் நலமில்லை
        என்னும் பற்பல காரணம் சொன்னால்
        ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

        வாரம் முழுதும் பூதத்துடனே
        பழகிப் போன சிலபேர்கள்
        தாமும் குட்டிப் பூதங்களாகிப்
        பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

        தட்டுப் பொறியின் மந்திரகீதம்
        கேட்டுக் கேட்டு வெறியேறி
        மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
        மதியாதிந்தப் பெரும்பூதம்

        உறைந்து போன இரத்தம் போன்ற
        அரக்கை ஒட்டி உரை அனுப்பும்
        ‘வயிற்றில்  உன்னை அடிப்பேனெ’ ன்னும்
        இந்தப் பேச்சை அது கேட்டால்


    ஜனவரி மாதம் 25ஆம் தேதி கண்பொறையால் அவதிப்பட்டதால் கண் சரியாகத் தெரியவில்லை.  முழுவதும் அலுவலகம் போகாமல் இருந்து விடலாமாவென்று நினைத்தேன்.  ஏன்என்றால் நான் பிப்பரவரி மாதம் பதவி மூப்பு அடைகிறேன். 

    “கணனியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.  அலுவலகத்திற்கு வாருங்கள்,” என்று தொந்தரவு செய்தார்கள் அலுவலகத்தில். டூ வீலரை ஓட்ட முடியவில்லை. அலுவலகம் போவதற்கு பஸ்ஸில்தான் போக முடிந்தது.  கண் தெரியவில்லை. 

    கணினி முன் சும்மா போய் உட்கார்ந்து கொள்வேன்.  ஆனால் வேற விதமான பணியை செய்யும்படி நேரிட்டது.  ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் அலுவலகத்திற்கெல்லாம் சென்று கண் சரியாக தெரியாவிட்டாலும் கையெழுத்துப் போடும்படி நேரிட்டது.  அலுவலக தொந்தரவு.

    பலருக்கு பதவி மூப்பு அடைவது வருத்தமான விஷயமாக இருக்கும்போது, நானோ எப்போது வெளியே வரப் போகிறேனென்று பரபரப்பில் இருந்தேன்.  ஒரு வழியாக பிப்ரவரி முடிந்து வெளியே நல்லபடியாக வந்துவிட்டேன்.

    ஆரியகவுடர் ரோடில் உள்ள வங்கிக் கிளையில்தான் பென்சன்.  வீட்டிலிருந்து நிதானமாகப் போய் வங்கிக் கிளையில் திரண்டிருக்கும் கூட்டத்தில் நின்று பாஸ்புக்கில் பதிவு செய்கிறேன். பரபரப்பான அந்த ரோடில் எந்தப் பத்தட்டமும் இல்லாமல் நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.   அவசரம் அவசரமாக பலர் அலுவலகம் செல்ல பயணிக்கிறார்கள்.  பள்ளிக்கூடம், கல்லூரி செல்ல மாணவ மாணவிகள் திரண்டு ஓடுகிறார்கள்.  நான் அங்குலம் அங்குலமாக நடந்து செல்கிறேன்.  நானும் அலுவலகத்தில் இருந்தால் இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமாக எனக்குத் தோன்றாது. 

    பதவி மூப்பு அடையும் விஷயத்தை ஞானக்கூத்தனிடம் கூறினேன்.  “இனிமேல்தான் சுதந்திரமான உலகத்திற்குள் வருகிறீர்கள்..” என்றார்.

    அவர் சொல்வதில் எல்லா உண்மையும் இருக்கிறது.  ஆனால் தூங்கும்போது, கனவில் அலுவலகத்தில் போய் நிற்பதுபோல் தோன்றுகிறது.  அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பேசுவதுபோல் தோன்றுகிறது.

    நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காய் என் முன்னால் வீற்றிருக்கின்றன.

       

   
       

   

             

பா எழுத…

முபீன் சாதிகா

சிரத்தில் புகும் கால்

கண்ணில் ஆழ ஏறி

மறுபுறம் வந்த தாள்

முடங்கும் சினை முயன்று

அட்சரம் வரியாய்

பதித்து நுடங்க மேலாய்

மூக்கின் நுனியில் எழுத்தின்

முகமதை வடிக்க இங்கு

இவண் நுதல் பெயர்ந்து

பறக்கும் காற்றில் கரைய

கூந்தல் தாழ்ந்து இலக்கமிட

என்பும் துருத்தி முதுகின்

கூன் போல் மடிந்து

வலியன்ன காணும்

வளைவில் கதறியும் புறப்பட்டே

கோவென் ஒலி

 

கருணை கொள்ளுங்கள்; காரணமும் விளைவும் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
-ராமலக்ஷ்மி
கருணை கொள்ளுங்கள்
எப்போதும் மற்றவரின் கருத்துகளைப் 
புரிந்து கொள்ளவே
கேட்டுக் கொள்ளப்படுகிறோம் 
அவை என்னதான்
காலத்துக்குப் பொருந்தாமல்
முட்டாள்தனமானதாய்
வெறுப்பூட்டக் கூடியதாய் இருந்தாலும்.
தங்கள் மொத்தத்
தவறுகளையும்
பாழடிக்கப்பட்ட வாழ்க்கையையும்
கருணையோடு நோக்குமாறு
கேட்டுக் கொள்கிறார்கள்,
குறிப்பாக வயதாகி விட்டவர்கள்.
ஆனால் மூப்பென்பது
நமது செயல்களின் மொத்தம்.
அவை மிக மோசமாக  
மூப்படைந்திருக்கின்றன
மங்கலாகவே வாழ்ந்து
சரியாகப்
பார்க்க மறுத்து.
அவர்களுடைய தவறு இல்லையா?
யாருடைய தவறு?
என்னுடையதா?
அவர்களுக்குப் பயம் வந்து விடும்
என்கிற பயத்தினால்
என்னுடைய கருத்துகளை
அவர்களிடமிருந்து
ஒளித்து வைக்க
கேட்டுக் கொள்ளப்பட்டேன்
மூப்பு ஒரு குற்றமில்லை
ஆனால் வேண்டுமென்றே
பாழடிக்கப்பட்ட வாழ்க்கை
வேண்டுமென்றே பாழடிக்கப்பட்ட
பல வாழ்வுகளுக்கு
காரணமாய் இருப்பது
வெட்கத்துக்குரிய குற்றம்.
*
காரணமும்
விளைவும்
ஆகச் சிறந்தவர்கள்
அநேகமாக அவர்தம் கைகளாலேயே இறந்து போகிறார்கள்
விட்டு வெளியேற விரும்பி,
விடப்பட்ட எஞ்சியவர்களால்
புரிந்து கொள்ளவே முடிவதில்லை
ஏன் எவரும்
தங்களை விட்டுச் செல்ல விரும்புகிறார்கள் என்பதை.
*
மூலம்: ‘Be
Kind’ & ‘Cause And Effect’
By Charles Bukowski

 

ஓர் நடைபயணத்தில்


லக்ஷ்மி சிவகுமார்



நடந்தாலென்ன  ?என்று
நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம்
முகம் முழுக்க பச்சை சாயம்
பூசிக்காட்டினான்.
எப்போதும் நாணம் கொண்டே
வளைந்து நெளிந்தோடிக்கிடந்த
சாலைப் பயணம் .
வலப்புறம் உள்ளடங்கி
ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில்
படித்த பருவங்களை
ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில்
போதுமான இடைவெளியற்றிருந்த
அரசு மதுக்கடையில்
ஆடை கலைந்தவர்கள் கூட்டம்
அநாகரீக வார்த்தைகளை
அள்ளி வீசிக்கொண்டிருந்தது
.
வெட்கப்பட்ட காதுகளை
மூடிக்கொள்ள உத்தரவிடாத மூளை
முந்திச்செல்ல கால்களை பணித்தது  .
அலைந்து திரிந்த கண்களுக்கு
அடுத்ததாய் அகப்பட்டது
அய்யாவு “டீ” கடையில்
வெட்டவெளியில் பிரமீடுகளாய்
தூசுதின்ற பலகாரம் .
விபரீதம் புரியாமல் பசிப்பிணி போக்கமட்டும்
எடுத்துக்கொண்டிருந்தனர்
துப்புரவு பணியாள தோழர்கூட்டம்.
சற்றே நாணி த்திரும்பிய  சாலை முக்கில்
கணபதி மரப்பட்டறையில்
கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான்
நாசிக்கவசம் அணியாத சுந்தரம் .
கவலை கப்பிக்கொண்டு
கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்த கண்களை
கடிவாளம் கிழித்த செயற்கை மின்னல் தாக்கியது !
ஆம் , “பெர்பெஃக்ட்“வெல்டிங் வொர்க் ஷாப்  இல் 
பாதுகாப்புக் கண்ணாடி  அணியாமல்
சிறிதொரு பத்தவைப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தான்
தொழிலாளி சண்முகம்.
ஒய்யார நாற்காலியில் கூலிங் கிளாஸ்  அணிந்தவாறு முதலாளி .
மூன்று பேர் பயணித்த
ஒற்றை இருசக்கர வாகனத்தை மறித்த
போக்குவரத்துக் காவலர்  ஒருவர்.
அரசு விதிக்கும் அபராதத்தொகையை கட்டினாலுனக்கு
கட்டுபடியாகாதென்ற பேச்சுவார்த்தையில்
சமரசம் கொண்டு
சகாயம் செய்துகொண்டிருந்தார்கள்
.
இரண்டு வேலை உணவருந்தும்
தட்டுவண்டி இட்லி கடைக்காரரை
போக்குவரத்திற்கு  இடையூரென்று
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்
காவலரொருவர்.
தாளமுடியாத தலைவலி தளர்த்திட எண்ணி
மெடிக்கல் ஷாப்  படியேறினேன்.
தலைவலி மாத்திரை கேட்டு
தண்ணீர் எடுக்க குனிந்து திரும்பினேன் !
கண்ணாடியில் கவிந்திருந்தது
ஸ்ப்ரிட்  நனைத்த காட்டன் துணியில் 
ஃபிசிசியன் சாம்பிள் நாட்  டூ
 பீ  சோல்டு  -ஐ
அழித்துக்கொண்டிருந்த
முதலாளியின்
முகம்
.
அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில் 
கச்சிதமாய் அடைக்கப்பட்ட போதை லாகிரிகள்
பெட்டிக்கடையில் மட்டும்
பயந்து பயந்து பிரசவமாகிக்கொண்டிருந்தது!!
கூடவே கொட்டைஎழுத்தில்
புகைத்தல் உடல் நலத்திற்கு கேடென்று பதியப் பட்டிருந்த
வெண் சுருட்டும் .
போர்க்குற்ற செய்தியை
பெட்டிசெய்தியில் கூட
தேடிக்கிடைக்காத ஏமாற்றத்தில்
கார்ப்பரேட் கம்பெனி  தயாரித்திருந்த
திரைப்பட விளம்பரத்தையும் .
கொட்டை எழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
ஐ .பி .எல்  கிரிக்கெட் செய்தியையும் ,
12 -ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்த
மந்திரிகள் பட்டியலையும்.
கொடுத்த காசிற்காய் வாசித்துக் கொண்டிருந்தார்
சமூக ஆர்வலர் ஒருவர் !!
அய்யாவு “டீ” கடை பலகாரமும்
தட்டு வண்டி இட்லி கடையும்
இங்கே கொஞ்சம் முரண்பட்டே
சொல்லப்பட்டிருக்கும்
.
உற்று நோக்கினால்
வாழ்தலே முரண்தான் இங்கே .
முரண்பட்டுநிற்கும்
சமூகத்தில்
வாழ்தலின் கட்டாயமும் முரண்தான்.

 .

கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்

  தேனு
இனிப்பு வாங்கி உள்நுழையும் எதிர்பார்ப்பை
உடைக்க ஓரிரு சொற்களையோ கற்களையோ
என்னுள் எப்பொழுதுமே தேக்கி வைத்திருக்கிறாய்..
போதும் என்ற சொல் பந்து
மீண்டும் மீண்டும் சுவர்களில் விழுந்து தெறிக்கிறது,
படியும் காவி நிற வட்டங்கள்
அச்சொல்லின் கூட்டு எண்ணிக்கையென
பறைசாற்றிக் கொள்ள..
ஒவ்வொரு சொல்லாய்
ஒவ்வொரு சொல்லடுக்காய்
மென்மேலும் பரவி மெல்லியதொரு அறையென உருவாகும்
சொல்வன்மம் உச்சத்தை உணர மட்டும் இல்லை..
ஒரு வனத்தின் அடர்த்தியைக் கொண்ட
சொல்லறையின் கதவுகள்
யாருக்கெனவும் திறவாது என்றபடி
சொற்களைத் தின்ன துவங்குகிறது அகலவாய் கொண்ட இனிப்பு..
கதவிடுக்கு திறவும் தருணத்தில்,
தேக்கி வைத்த சொற்களையும் உண்டபடி

கை நிறைய படிந்திருக்கிறது
இனிப்பின் பிசுபிசுப்பு நிறம் மட்டும்..