நதியில் என் ஓடம்

ராமலக்ஷ்மி
 
எத்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன்
ஓடும் நதியில்
ஓடத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
அழகிய சோலைகளின் பக்கம்
அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம்
இறங்குவேன் என்றெண்ணி
ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை
கவனிக்கத் தவறி
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
துள்ளும் மீனைப் பாராமல்
புள்ளின் ஒலியைக் கேளாமல்
வெயிலை மழையை உணராமல்
வானின் நீலத்தை, விரையும் மேகத்தை
நிலவை, நட்சத்திரங்களை ரசிக்காமல்
கனவுகளைச் சுவாசித்து
சுளித்தோடும் நீரில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என் கனவில் சந்தித்து
கைகளைக் குலுக்கிக் கொள்கிறார்கள்
நான் அறிந்த ஆனால்
ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள்.
சந்திக்கிறேன்
நானும்
பரிச்சயமான ஆனால் 
அதுவரை சந்தித்திராத நபர்களை.
தினம் ஒரு கனவு
தினம் ஒரு நிகழ்வைச் சுற்றி
முடிவென்பது இல்லாமல் ஆனால்
தொடங்கிய புள்ளியிலிருந்து விலகாமல்.
நீங்காத
உறக்கத்தால்
பகல்களும் இரவுகளாய்க் கழிய
சேகரமான கனவுகள் எல்லாம் சேர்ந்து
என் தலையைப் பாரமாக்கிய ஓர் இரவில்
விழித்துக் கொள்கிறேன்
விரும்பி நதியில் குதிக்கிறேன்
புத்துணர்வுடன் 
எழும்பி விண்ணில்
பறக்கிறேன்
எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில்
இறகைப் போல் மிதக்கிறேன்
ஆனந்தம் பிறக்கிறது
பறக்கப் பிடிக்கிறது
தலைப் பாரம் இறங்கி விட்டது.
நிலவின் பிம்பம் போல்  
நதியில் என் ஓடம்
தொலைவில் தெரிகிறது
அலையின் போக்கில் 
செல்கிறது அசைந்தாடி 
இப்போதும்
நான் இல்லாமலும்
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *