அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

வித்யாசாகர்


வள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த
அவளுடைய ஆசைகளாகவே
அவளை நான் பார்க்கிறேன்;

அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள்
வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள்
வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த
அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான
எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில்
எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில்
எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும்
அம்மா; அம்மா மட்டுமே..

இன்று எனக்கு வலித்தாலும்
இன்று நான் அழுதாலும்
என்னோடு சேர்ந்து அழுவது
அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்..

அவள் கொடுத்த சோற்றின்
அவள் கொடுத்தப் பாலின்
அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு..

அம்மா எங்கே அம்மா எங்கே
என்று ஏங்குகிறது மனசு..

அம்மா இல்லையே என்று கசங்கி
அழுகிறது மனசு..

அம்மா இல்லாத நானும்
இருந்தும் இல்லாதவன் தான்..

உண்மையில் எனக்கு
அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள்,
அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது,
தீராத நாட்களோடு வதைபடுகிறேன்
அம்மாவைத் தேடும் கண்கள் சிவக்கச் சிவக்க அழுகிறேன்

அம்மா நேற்று கனவில் வந்தாள்
அழாதே என்றாள்
நானிருக்குமிடத்தில் அவளும் இருப்பாளாம்
தொட்டுப் பார் என்றாள்
அம்மாவைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடல் சிலிர்க்கிறது,
அவள் தனது வயிற்றுள் எனைத் தொட்டுப் பார்த்த
அதே தொடுதல்
அதே அம்மாவின் வாசம்
அதே ஈர்ப்பு உடலெங்கும் பரவி ‘நானிருக்கேண்டா தங்கம்’
என்றாள் அம்மா,
இரவின் கனத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு
அம்மா அம்மா என்று கதறுகிறேன்..

இரவுகள் இன்னும் நீண்டு நிற்கிறது
வாழ்க்கை இப்படித் தான் இருப்பதோடும்
இல்லாததோடும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது..

நான் விடிந்ததும் கண்விழிக்கிறேன்
எப்போதும் போல புறப்படுகிறேன்
மதிய உணவையும் எடுத்துக்கொண்டு ஓடி
பேருந்திலேற அதே ஜன்னளோர இருக்கைக் கிடைக்கிறது
அமர்ந்துக் கொண்டு வழியெங்கும் தேடுகிறேன்
கண்ணீர் வழிந்து காற்றோடு அலைகிறது
அம்மா நினைவினுள் இருந்துக் கொண்டேயிருக்கிறாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *