கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்
                                                     3
                          
விருட்சம் கூட்டத்தில் ஜெயகாந்தனைப் பற்றி அசோகமித்திரன் பேசியது.  
ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத ஆரம்பித்திருந்தார்.  பத்திரிகையில் அவர் கதை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  அவர் எழுதியவுடனே பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும்.  ஒரு வாரம் தள்ளிப் போட்டால் கூட அவர் சண்டைப் போடுவார். 
ஆனந்தவிகடன் அந்தக் காலத்திலே முத்திரை கதைகளை வெளியிட்டது.  நீலவன், துமிலன், வையவன் என்று மூன்று பேர்களும் முத்திரைக் கதைகள்  எழுதி உள்ளனர்.  ஆனால் நீலவனும், துமிலனும் தொடர்ந்து எழுதவில்லை.  ஆனால் வையவன் கல்கியில் தொடர்ந்து எழுதினார். மகரிஷி என்ற எழுத்தாளர்.  இங்கு இப்போது பேசிய உமா பாலுவின் சித்தப்பா.  அவர் நேரிடையாகவே அவர் நாவல்களை புத்தகங்களாக வெளியிட்டவர்  அதன் மூலம் புகழ்பெற்றவர் பின்னால் பத்திரிகைகளிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார்.  
1950-60ல் கல்கிதான் அதிகப் பிரதிகள் விற்கும் பத்திரிகை.  60000 பிரதிகள் விற்றால், ஆனந்தவிகடன் 55000 பிரதிகள் விற்கும், அதற்குப்பிறகுதான் குமுதம் போன்ற பத்திரிகை.  ஆனால் போட்டி இந்த மூன்று பத்திரிகைகளுக்குத்தான்.
  
ஜெயகாந்தன் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார்.  கல்கியில் நா பாரத்தசாரதி எழுத ஆரம்பித்தார்.  நா  பார்த்தசாரதி  தொடர் கதைகளாக எழுத ஆரம்பித்தார்.  அவர் தொடர் கதைகளில் எப்போதும் வ்ன்ர்ற்ஹற்ண்ர்ய்ள் களாக இருக்கும். அதைத் தனியாகப் பெரிசு பண்ணி வெளியிடுவார்கள்.  ஜெயகாந்தன் அப்படிஎயல்லாம் எழுத மாட்டார்.  கல்கி, ஆனந்தவிகடன் என்று போட்டியெல்லாம் இருந்து கொண்டு இருக்கும்.  
நா பா கல்கியில் ஆசிரியராக சேர்ந்து விட்டார்.  ஜெயகாந்தன் நினைத்திருந்தால்,  ஆனந்தவிகடன் பத்திரிகையில் சேர்நது விட்டிருக்கலாம்.  ஆனால் அவர் அதுமாதிரியெல்லாம் செய்ய வில்லை.  ஆனால் நா பாவால் தொடர்ந்து ஆசிரியர் பொறுப்பில் இருக்க முடியவில்லை.  அவர் அதில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.  ராஜினமா செய்ததை என் ராஜினமா என்று கட்டுரையும் எழுதி விட்டார்.  ஜெயகாந்தன் அப்படியெல்லாம் செய்யவில்லை. 
ஜெயகாந்தனுக்கு ஆனந்தவிகடனில் மணியனும், சாவியும் நண்பர்கள்.  சாவி வயதில் பெரியவர்.  இப்போது சாவி உயிரோடு இருந்தால், அவருக்கு 90 வயதாவது இருக்கும்.  படைப்புகளின் தரம் கண்டு பிடிப்பதில் சாவி திறமையானவர்.  எது பத்திரிகையில் வரவேண்டுமென்று அவருக்குத் தெரியும்.  
சாவி ஆனந்தவிகடனை விட்டுவிட்டு தினமணி கதிர் என்ற பத்திரிகைக்குச் சென்று விட்டார்.  தினமணி கதிருக்கு வந்தவுடன் அவர் ஜெயகாந்தனின் ஏற்கனவே வந்த கதைகளை திரும்பவும் பிரசுரம் செய்தார்.  இந்த விஷயத்தில் சாவி துணிச்சல்காரர்.  அநதப் பத்திரிகையில்தான் ஜெயகாந்தனின் ரிஷிமூலம் என்ற நாவல் வெளிவந்து கொண்டிருந்தது.  அந்த நாவல் மூன்று வாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோது, தினமணி ஆசிரியர் சிவராமன் அந்நாவல் தொடர்ந்து வருவதை விரும்பவில்லை. நிறுத்தச் சொன்னார்.  அதனால் அந்த நாவல் நின்றுவிட்டது. நிறுத்துவதற்கு சாவியே ஒரு குறிப்பு எழுதியிருந்தார். 
ஒரு எழுத்தாளனுக்கு தொடர்ந்து வரும் எழுத்து நின்று போவது ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும்.  ஜெயகாந்தனும் அந்த நாவல் நின்று போவதற்கான குறிப்புகளை எழுதினார்.  அதன் பின் அவர் கதைகள் எழுதுவதை குறைத்துக்கொண்டு விட்டார்.  ஆனால் சுயசரிதம் எழுதினார்.  அதையும் மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.  கலை, அரசியல், எழுத்து வாழ்வு என்று.  கே எஸ் மாதிரி ஒரு நண்பர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது பெரிய விஷயம்.  நிறையா அபிமானிகள் கிடைப்பார்கள்.  ஆனால் டோட்டல் ஐடைன்டிவிக்கேஷனுடன் ஒருவர் கிடைப்பது ரொம்ப கடினம்.  அவர் ஜெயகாந்தனின் எல்லா எழுத்துக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.  அவ்வளவு நெருக்கம் ஜெயகாந்தனுடன்.  அதனால்தான் ஜெயகாந்தன் கே எஸ் அம்மா இறந்தபோது துக்கம் விஜாரிக்க அவர் வீட்டிற்குப் போயிருக்கிறார்.  பொதுவாக ஜெயகாந்தன் துக்கம் விஜாரிக்க எங்கும் போக மாட்டார்.  உண்மையில் துக்கம் விஜாரிக்க யாருமே போக விரும்பமாட்டார்கள்.  ஆனால் வேறு வழியில்லாமல்தான் போக வேண்டியிருக்கும்.  நெருங்கிய உறவினர்கள் இறந்தால் போகும்படி நேரலாம்.  பார்க்கப் போனால் இறந்துபோன பிரேதத்தைப் பார்ப்பது போல் சங்கடம் இல்லாமல் இருக்காது.  உயிரோடு இருந்தபோது நாம் அவருடன் நெருங்கிப் பேசியிருப்போம்.  பிணமாகப் பார்க்க விரும்பியிருக்க மாட்டோம்.  அதனால்தான் ஜெயகாந்தன் துக்க வீட்டிற்குப் போவதை விரும்ப மாட்டார். அதனால்தான் அவர் கே எஸ் வீட்டிற்குச் சென்று,  “உங்க அம்மா உங்களுக்கு மட்டும் அம்மா இல்லை,” என்று சொன்னது  நாடகத் தன்மையாக இருக்கிறது. ஆனால் அவர் நிஜமாகவே அந்த நேரத்தில் அப்படி கருதி இருக்கலாம்.  
ஜெயகாந்தன் சிறு வயசிலே தாய் தந்தையெல்லாம் விட்டுவிட்டார்.  அவருக்கு குடும்ப ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும் வெறுப்பு இருந்துகொண்டிருக்கும்.  அவருடைய இளமை காலத்திலே அவர் அனாதையாகத்தான் இருந்திருக்கிறார்.  சின்ன வயசிலே சினிமா பாட்டுப் புத்தகங்களை விற்றிருக்கிறார்.  அப்புறம் அச்சுக் கோர்த்திருக்கிறார்.  அதாவது இது மாதிரி அச்சுக் கோர்த்த எழுத்தாளர்கள் மூன்று நான்கு பேர்கள் இருந்திருப்பார்கள். ம பொ சியைச் சொல்லலாம். இன்னொருவர் விந்தன்.  விந்தனுக்குக் கூட வாழ்க்கை மீது ஒரு வெறுப்புணர்ச்சி இருந்திருக்கலாம்.  விந்தன், ஜெயகாந்தன், தமிழ்ஒளி எல்லோரும் சேர்ந்து மனிதன் என்ற பத்திரிகை நடத்தினார்கள்.  மூன்று இதழ்கள்தான் அந்தப் பத்திரிகை வந்தது.
ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு, தி ஜா ரங்கநாதன்தான் முன்னுரை எழுதி இருக்கிறார்.  திஜரா ஒரு படிக்காத மேதை. ஐந்தாவதுக்கு மேலே அவர் படிக்கவில்லை. ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  கணிதத்தில் அவர் மேதையாக இருந்திருக்கிறார்.  முக்கியமாக கால்குலஸில் மேதையாக இருந்திருக்கிறார்.  செஸ் விளயாடுவதில் பெரிய மேதை.  அப்படிப்பட்ட தி ஜ ர ஜெயகாந்தனுடன்  கூடவே இருந்திருக்கிறார்.  ஒய்ஆர்கே ஷர்மான்னு இன்னொரு நண்பர் அவருக்கு.  அக்னி பிரவேசம்னு ஒரு கதை.  அக் கதைக்கு மேடையிலே வெளியிலே நல்ல எதிர்ப்பு.   அக் கதை 1966ல் எழுதியது.  ஆனா அந்தக் கதைப்படி ஒரு பெண்ணுக்கு நடந்தா என்ன செய்யறது?  இவரும் ஒரு மாதிரியா அதற்கு முடிவு கொடுத்திருப்பார்.   அப்ப நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கும்.இலக்கியக் கூட்டங்களுக்கு இன்னும் நிறையப் பேர்கள் வருவார்கள்.  சாதாரணமா 40 பேர்கள் வருவார்கள்.  ஆனா அப்ப நிறையப் பேர்களுக்கு வேலை இல்லைன்னு தெரியறது.  அக்னிப் பிரவேசம் பற்றி ஒருத்தர் கேள்வி கேட்டார்.    ஜெயகாந்தன்  அவரிடம் ஓரு கேள்வி கேட்டார். “நீங்க யாரு?” என்று.  அதற்கு கேள்வி கேட்டவர், “நானும் ஒரு எழுத்தாளன்,” என்றார்.  “அப்ப நீங்க ஒரு கதை எழுதிடுங்களேன்,” என்றார் ஜெயகாந்தன்.  அப்படி கேள்வி கேட்டவர் நாகநந்தி.  கல்கி கதைகளில் வர்ற கதாபாத்திரத்தின் பெயர்தான் நாகநந்தி.  
அந்தக் காலத்தில நாவல்களில் வர்ற கதாபாத்திரங்களை பெயர்களாக வைத்துவிடுவார்கள்.  சினிமாவில கூட எதாவது ஒரு கதாபாத்திரம் பெயர் மனசுல பதிஞ்சா, அந்தப் பெயரை பிறக்கறவர்களுக்கு வைத்து விடுவார்கள். அப்படித்தான் சினிமாவில உள்ள சரோஜா என்கிற பெயரை எல்லோரும் வைத்திருப்பார்கள். அதே போல கமலா கமலான்னு பெயர் வைத்திடுவார்கள்.
  அதேபோல் பத்மினி பத்மினின்னு வைத்திடுவார்கள்.  ஆனால் வைஜெயந்திமாலான்னு பெயர் நீளமா இருக்கு.  அதை யாரும் வைக்க மாட்டார்கள்  நாகநந்தியும் ஒரு கதை எழுதினார்.  அந்தக் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளுவதுபோல.  
ஜெயகாந்தனும் அக் கதையின் தொடர்ச்சியாக சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவல் எழுதினார்.  ஆனால் இப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்தால் எவ்வளவு சங்கடமாக இருக்கும்.  அதன் பின் அவர் எழுதுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.  சினிமாவில அவருக்கு உண்மையான ஈடுபாடு இல்லை.  சினிமான்னா நிறையா சமரசம் செய்யணும்.  அவரோட ஐந்தாறு படங்கள் சொல்லலாம்.  உன்னைப் போல் ஒருவன் படத்தில சிட்டின்னு ஒரு பையன் வருவான்.  அது அவருடைய கதாபாத்திரம்தான்.  அந்தப் பையனைப் பார்த்து வாத்தியார் கேட்பார்: “நீ சிகரெட் பிடிக்கிற…ஆனா எதுக்கு சிகரெட் பிடிக்கிற?  பெரியவங்ககிட்ட உனக்கு உள்ள எதிர்ப்பைக் காட்டத்தான்,” என்பார்.
ஒரு கட்டத்தில அவரால சினிமாவில ஈடுபட முடியலை.  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்று ஒரு நாவல் எழுதி இருந்தார்.  அதில் உள்ள உருவ அமைதி  வேற நாவல்கள் இருக்காது.  அதை அவர் ஒரு பக்குவமான கட்டத்தில் எழுதி இருக்கிறார்.  அதன் பின் அவர்  ஜெய ஜெய சங்கரா எழுதினார்.  அதில் கூட முதல் பகுதி மாதிரி இரண்டாவது, மூன்றாவது பகுதி வராது.  முதல் பகுதியிலே எல்லாம் முடிஞ்சுப் போச்சு.  அது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதா சொல்வார்கள்.  
அதன் பின் அவர் எழுதவில்லை.  ஆனாலும் அவரை நான் போய் பார்ப்பேன்.  அவர் அமெரிக்கா எல்லாம் போயிருக்கார்.  ஆனால் அவர் சோவியத் யூனியனுக்குப் போகிற விருப்பம் அமெரிக்கா போவதில் இல்லை. அமெரிக்கா போய்விட்டு வந்தபின் அவர் அபிப்பிராயம் மாறி விட்டது.  ஆனால் அவர் அதைப் பற்றி எழுதவில்லை.  இப்பெல்லாம் எழுதுகிறவர்கள் சாதாரணமா ஒரு இடத்திற்குப் போய்வந்தால் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.  ஆனால் அவர் அதுமாதிரி செய்யவில்லை.    
கூப்பிட்டால் அவரும் எங்கள் வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிக்கெல்லாம் வருவார்.  சிமந்தம் மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு மழையில் நனைந்து வந்திருக்கிறார்.   திவேஷம், வெறுப்பு எல்லாம் அவரிடம் கிடையாது.     கவிதா பதிப்பகம் அவருடைய கதைகள் எல்லாவற்றையும் அவருடை சஷ்டியப்தி பூர்த்தி அன்று சேர்த்துப் போட்டிருக்கிறார்கள்.  ஆனந்தவிகடன் கொண்டு வந்த கதைகள் ஒரு பகுதிதான்.   அப்புறம் கே எஸ் அவர்கள் அவருடைய எல்லாக் கதைகளையும் ஆங்கிலத்தில் கொண்டு வந்திருக்கிறார்.   அவர் காலத்தில அவருக்கு எல்லாம் கிடைத்துவிட்டது.  
(23.05.2015அன்று அசோகமித்திரன் விருட்சம் கூட்டத்தில் பேசியது.)

புத்தக விமர்சனம்:

ரோஜா நிறச்சட்டை – அழகியசிங்கர் – விருட்சம்
வெளியீடு.

   
ஜெ.பாஸ்கரன்.

சிறுகதை என்பது,
ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும்
ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அழகியசிங்கரின் ‘ரோஜா
நிறச்சட்டை’ அவரது நான்காவது கதைத் தொகுதி. எல்லாக் கதைகளுமே, வங்கிகளில் நடக்கும்
தினசரி அலுவல்களின் சவால்களும், முரண்களும்தான் ! வங்கி மேலாளர், அதிகாரிகள், கடைநிலை
ஊழியர்கள், தற்காலிக வேலையில் இருப்பவர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என,
கதை மாந்தர்கள் சுற்றி வருகின்றனர். மிக இயல்பாக, வங்கியிலும், வெளியிலும் அங்கு பணிபுரிபுரிபவர்களின்
மனோ பாவங்களை, எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே நேர்க் கோட்டில் கதை சொல்லிக்கொண்டே
போகிறார் அழகியசிங்கர். ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் முழுமையாக விரவியுள்ளது !
சில சமயங்களில்
கதைகள், கட்டுரை வடிவை  அடைந்து விடுகின்றன
– கதையின் மையப்புள்ளியிலிருந்து சற்று விலகி, வாசகனின் கற்பனைக்கு வழிவிட்டுத் திரும்பவும்
கதைக்குள் திரும்பி, சட்டென முடிந்துவிடுகிறது,! கதைசொல்லியின் கவனம் கதைக் களத்தைச்
சுற்றிச் சுழலுவதே இதன் காரணம் – அதுவே கதையின் நம்பகத்தன்மையையும் கூட்டுகிறது.
மழை ஓய்ந்து,
‘சில்’லென்ற காற்றில் நண்பனின் தோள்மீது கை போட்டுக்கொண்டு வங்கியில் நடந்தவைகளைப்
பற்றிக் கதை கதையாகக் கேட்டுக்கொண்டே நடைப்பதைப் போன்றதொரு அனுபவம்!
’ ஹலோ ‘ சொல்வதின்
அர்த்தம் என்ன ? எதற்கு ’ஹலோ’?   சொல்பவரின்
பின்னணி என்ன ?  ஏன் ஒருவருக்கு ‘ஹலோ’ சொல்லப்
பிடிப்பதில்லை ? இப்படிப் பல கேள்விகளுடன் சுழல்கிறது ‘ ஹலோ ‘ என்ற சிறுகதை ! எல்லாம்
ஹலோ என்கிற ஒரு வார்த்தையைச் சுற்றி !
அலாரம், அஷ்வந்திபுரம்,
பாம்பு  கதைகளில் நகரத்திலிருந்து டிரான்ஸ்பர்
ஆகிக் கிராமங்களிலும், சிறிய டவுன்களிலும் வங்கி அதிகாரிகள் சந்திக்கும் சவால்களையும்,
பிரச்சனைகளையும் ஒரு வித வருத்தத்துடன் கையறு நிலையில் சொல்கிறார் – வீட்டையும், குடும்பத்தையும்
விட்டு, உண்மையிலேயே வசதிகளற்ற தொலை தூரக் கிராமங்களில் அவர்கள் படும் துயரங்கள் அவை
! அவர்கள் சந்திக்கும், மெஸ் நடத்தும் பெண்மணி, பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர், துப்புரவுப்
பணியாளர், வாடிக்கையாளர்கள் அனைவரும் இரத்தமும் சதையுமாக உலா வருகின்றனர்.
’ செல்வி ‘

 அமெரிக்காவின் தாக்கத்தில் பெண்
வாடிக்கையாளர் ஒருவரிடம் முறை தவறி நடந்துவிட, அதன் விளைவுகளை சந்திக்கிறார் வங்கி
அதிகாரி ஒருவர். தவறினை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுவிட்டாலும், இறுதியில் அவளுக்குப்
பணம் கொடுத்துத் தன் வேலையைத் (கூட மானத்தையும் !) தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார் – இன்னும் வசதிகளே இல்லாத வேறொரு கிராமத்துக்கு மாற்றப்படுகிறார்
!

‘ லாக்கர் ‘கதை,
உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வாசிக்கும் அனுபவத்தினைத் தருகிறது ; ஸ்டீபென்
லீகாக் சிறுகதை போல !  – உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட
மாமியின் நிலை நம்மையும் கவலைப்பட வைக்கிறது. சம்பந்தப் பட்ட அதிகாரி வேறொரு கிராமத்துக்கு
மாற்றல் ஆகிறார் – ’கிராமத்துக்கு மாற்றல்’ என்பது ஒரு தண்டனையாகவே சித்தரிக்கப் படுகிறது!
’ புரியாத பிரச்சனை
‘ உண்மையிலேயே புரியாத ஒரு பிரச்சனைதான் – இந்தக் காலத்து பள்ளி / கல்லூரிக் குழந்தைகளை
கவனமாகக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது மிகவும் கடினம்தான் !
தன் கீழ் வேலை
பார்க்கும் பாபுவிடமிருந்து, அவன் டிபனுக்காகத் தான் செலவு செய்த இருபது ரூபாயை வாங்குவாரா,
மாட்டாரா – இறுதி வரையில் நம்மையும் அலைய விடுகிறார் – ’இருபது ரூபாய்’ கதையில் !
‘ ரோஜா நிறச்சட்டை
‘மனித மனம் எப்படி சம்பந்தம் இல்லாமல், நடக்கின்ற நல்லவை / கெட்டவை களுக்கெல்லாம் எதனுடனாவது
முடிச்சுப் போடுகிறது என்று சொல்லுகிறது. நம் நம்பிக்கைகளின் போலித்தன்மையையும், அதன்
விளைவுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.
கதைகளில் அவர்
குறிப்பிடும் சில இடங்கள் ( மேற்கு மாம்பலம் ), டாக்டர் (சீனிவாச கண்ணன்) மற்றும் அவரது
உறவுகள் – மனைவி, அப்பா – நிஜத்தில் உள்ளவை. நிகழ்வுகளின் நம்பகத்தன்மையும், வேகமும்
இதனால் உறுதிப் படுகிறது.
கதைகளைப் படித்து
முடித்தபோது, வங்கியில் பணி புரியும் பலருடன் பழகி, ட்ரான்ஸ்பரில் சென்று திரும்பி
வந்த உணர்வு ! கதாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள், மற்றவரைப் பற்றிய கணிப்புகள்
ஆங்காங்கே தெளிவாய்த் தெரிகின்றன ! வாசிக்கும்போது ஆசிரியரும் நம்முடன் கூடவே வருவது
போல் ஒரு பிரமை – இது தவிர்க்கப் படவேண்டியதா என்பது விவாததுக்குரியது ! 

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்


அழகியசிங்கர்          
                                                                               2.
மூன்றாவது கூட்டமாக விருட்சம் சார்பில் நானும் கோவிந்தராஜ÷ம் சேர்ந்து நடத்திய கூட்டம்.  23.05.2015 அன்று நடந்தது. இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.  கூட்டத்திற்கு 40 பேர்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இக் கூட்டம் ஜெயகாந்தன் நினைவாக நடத்தப்பட்ட கூட்டம்.  கூட்டத்தில் முக்கிய பேச்சாளிகளாக அசோகமித்திரனும், ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான கே எஸ் சுப்பிரமணியனும் கலந்து கொள்வதாக அறிவிப்பு செய்திருந்தேன்.  இதைத் தவிர உமாபாலு என்பவரும், டாக்டர் ஜெ பாஸ்கரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.     கூட்டத்தின் ஆரம்பத்தில், திரு பெ சு மணி பாரதியார் கவிதையை ராகமிட்டு அருமையாகப் பாடினார்.  பின் ஒரு நிமிடம் ஜெயகாந்தனுக்கும், சமீபத்தில் மறைந்த குவளைக்கண்ணனுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினோம்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் அசோகமித்திரனை கடைசியில் பேசச் சொல்லலாம் என்று நினைத்தேன். கே எஸ் உடல்நிலை சரியில்லாததால் இக் கூட்டத்திற்கு வர முடியவில்லை.  கூட்டத்திற்கு அது பெரிய இழப்பாக எனக்குத் தோன்றியது.  உமா பாலு அவர்கள் முதன் முதலாக ஜெயகாந்தனைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.  இது மாதிரி இலக்கியக் கூட்டங்களில் அவர் பேசுவதும் இதுதான் முதல் முறை. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உள்ள உறவைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்.  எழுத்தாளர்கள் வடிக்கும் பாத்திரங்களாகவே வாசகர்கள் மாறி விடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.  உமா அவர்கள் எழுதுவது டைரியில் குறிப்புகளாக எழுதி எழுதி கிழித்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு பெண் வாசகியாக அவர் படிக்கும் பத்திரிகைகள், புத்தகங்களைப் பற்றி பேசுகிறார்.  எல்லோருக்கும் தெரிந்து கல்கி, ஆனந்தவிகடன் வீட்டில் படிக்க முடியும் என்று குறிப்பிடுகிறார்.  மற்றப் பத்திரிகைகளை கல்லூரி லைப்ரரியிலும், வகுப்பில் டெஸ்க் அடியில் வைத்தும் படித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  கசடதபற, நாரதர், சதங்கை போன்ற பத்திரிகைகளை அவருடைய சித்தப்பா மகரிஷி வீட்டில் படித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உமா ஜெயகாந்தனைப் பற்றிப் பேசிய சில விஷயங்கள் ரொம்ப துணிச்சலாகப் பேசியதாக தோன்றியது.
‘ஜெயகாந்தனை நான் இரண்டொருமுறை கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன்.  அவர் மீசை எனக்கு பாரதியாரை ஞாபகப் படுத்தியிருக்கிறது.  அவர் பார்வையை நோக்கும்போது அவர் மனசிலிருந்து நேரிடையாகப் பேசுபவர்போல் தோன்றும்.  அவருடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையைப் படிக்கும்போது எல்லோர்போல் எனக்கு அவர் மீது கோபம.  ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவாக சித்தரிக்கிறார் என்று.   பெண்களை பலவீனமாகக ஏன் படைத்திருக்கிறார் என்றும் தோன்றியது. இப்போதும் கங்காவை கேட்ட மாதிரி யாராவது காரில் லிப்ட் கேட்டால், தயக்கம் ஏற்படாமல் இருப்பதில்லை.  ஏன் அது மாதிரி ஒன்று நடக்கவேண்டுமென்று கேட்காமல் இருக்க முடியவில்லை.  அடுத்தது கௌரிபாட்டி.  எங்க வீட்டில் ஒரு பாட்டி இருந்தாள்.  மீனாட்சி பாட்டி என்று பெயர்.  எப்படி இந்த ஜெயகாந்தன், மீனாட்சி பாட்டி மாதிரி கௌரி பாட்டியைப் பாத்திரப் படைப்பாகக் கொண்டு வந்துள்ளார் என்பது அச்சரியமாக இருக்கிறது.
உமா இறுதியில் ஜெயகாந்தனை வாழ்த்தி ஒரு கவிதை வாசித்தார். உண்மையில் சிலநேரங்களில் சில மனிதர்கள் எழுதியதற்காக அவர் ஜெயகாந்தனை தன் பேச்சில் சாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் சாடவில்லை. 
உமா பாலுவிற்குப் பிறகு டாக்டர் பாஸ்கரன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  ஐந்து குருடர்கள் யானையைப் பார்த்தது மாதிரி இருக்கிறது ஜெயகாந்தனைப் பற்றி பேசுவது. ஜெயகாந்தனுக்கு அரசியலில் அனுபவம் உண்டு, சினிமாத் துறையில் அனுபவம் உண்டு, பத்திரிகைத் துறையில் அனுபவம் உண்டு. இலக்கியம் சம்பந்தமான எல்லாத் துறைகளிலும் அவருக்கு அனுபவம் உண்டு.  அவரைப் பற்றி 15 நிமிடம் பேசுவது என்பது குருடர்கள் யானையைப் பார்த்த மாதிரிதான் இருக்கும்.  நான் ஜெயகாந்தனைப் பார்த்ததில்லை.
ஆனால் அவர் புத்தகங்கள் மூலமாகத்தான் அவரை நான் அறிவேன். அவருடைய  நாவலான சில நேரங்களில் சில மனிதர்களை நானும் படித்தேன்.  இரவு 12 மணிவரை படித்தேன்.   ஜெயகாந்தன் வடிவமைத்திருக்கும் பாத்திரங்கள் உங்களைத் தூங்க விடாது. அவருடைய நெருங்கிய நண்பர் கே எஸ் கணையாழியில் எழுதியிருக்கிறார்.  அவருடைய வீட்டில் மணிக்கணக்கில் ஜெயகாந்தன் பேசிக்கொண்டிருப்பார்.  ஒருநாள் ஜெயகாந்தனைப் பார்த்து அவர் அம்மா, “என் பையனை நீ பார்த்துக்கொள்,” என்று சொன்னாராம்.  
அவர் அம்மா இறந்து போனபோது, ஜெயகாந்தன் துக்கம் விஜாரிக்க வந்தாராம்.   உண்மையில்  ஜெயகாந்தன் அவர் வாழ்நாளில் இறந்த யார் வீட்டிற்கும சென்று துக்கம் விஜாரிக்க மாட்டாராம். ஏனென்றால், ‘உயிரோடு இருப்பவரின் நினைவுகளே எனக்குப் போதும், இறந்த பிறகு நான் பிணத்தைப் பார்க்க வரமாட்டேன்,’ என்பாராம் ஜெயகாந்தன்.  சுப்பிரமணியனுக்கோ அவர் கொள்கையை விட்டு வந்திருக்கிறார் என்று தோன்றியதாம்.  ஏன் வந்திருக்கிறீர்கள் என்பதுபோல் கேட்டாரம்.  ‘உங்கள் தாயார் எனக்கும் தாயார் அல்லவா ‘ என்றாராம்.    அவருடைய அரசியலைப் பற்றி பேசப் போவதில்லை, அதேபோல் அவருடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பேசப் போவதில்லை.  நான் அவருடைய படைப்புகளைப் பற்றி பேசப் போகிறேன். 
 அதாவது நான் படித்த அவர் சிறுகதைகளைப் பற்றி பேசப் போகிறேன்.  கிட்டத்தட்ட 40 நாவல்கள், 200 சிறுகதைகள், விதம் விதமான தலைப்புகளில் சுயசரிதங்கள் என்று சாதனைப் படைத்தவர்.  பல விருதுகளைப் பெற்று கௌவரிக்கப் பட்டவர் ஜெயகாந்தன்.  சென்னை சேரி பாஷையில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி கதைகளை எழுதியவர் ஜெயகாந்தன்.  பொன்னீலன் என்ற எழுத்தளர் ஜெயகாந்தனைப் பற்றி இப்படி சொல்கிறார்,  பாரதியார் கவிதைகளில் என்ன சாதித்தாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரி சிறுகதைகளில் ஜெயகாந்தன் சாதித்துள்ளார்.  ஒரு பக்கத்தில் திராவிடக் கொள்கைகளை எதிர்த்துப் பேசியும், இன்னொரு பக்கம் சங்கர மடத்தை ஆதரித்துப் பேசும்போது, அந்த முரண் தானாக வெளிப்படும்.  வீ அரசு என்கிற விமர்சகர் ஜெயகாந்தனின் கதா மாந்தார்கள் வாசகர்களைக் கேள்வி கேட்பார்கள் என்கிறார்.  ரிஷி மூலம் என்ற கதை ஒரு பிராமணப் பெண் சோரம் போவதுபோல் ஒரு கதை. அதை வேறு எதாவது ஒரு வகுப்பை சேர்ந்தவர் அதுமாதிரி எழுதப்பட்டிருந்தால், அவர் தலை தப்பியிருக்குமா என்று காலச்சுவடு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  ஆனால் ஜெயகாந்தன் துணிச்சல்காரர்.  அவர் திராவிட மாயையே அவர்கள் முன் துணிச்சலாக விமர்சனம் செய்தவர்.  பிரம்ம உபதேசம் என்ற கதையில் சங்கர சர்மா என்ற ஒரு பாத்திரம்.  அவர் வேறு ஜாதி பையனை பிரம்ம உபதேசம் செய்து வைக்கிறார்.  அப்போது சங்கர சர்மாவை ஒருத்தர் கேட்கிறார்.  ” ஏன் உங்க பெண்ணை அந்தப் பையனுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது?” என்று.,  சங்கர சர்மா சொல்கிறார்:  “அவனுக்கு பிரம்ம உபதேசம் செய்து வைத்துவிட்டேன்.  அவன் என் பையனாகிவிட்டான்.  அவனுக்கு எப்படி என் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியும்?” என்று.  ஜெயகாந்தன் பிராமண பாஷையில் அவர் கதைகள் பலவற்றை எழுதி உள்ளார்.  ஏன் ஒரு பிரமான எழுத்தளார் கூட அவர் பயன் படுத்துவதுபோல் பிராமண பாஷையைக் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியாது.  பிரமாண பாஷையைப் பயன்படுத்த ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சுவிடம் ஒரு மாசம் பயிற்சி எடுத்துக் கொண்டார். 
ஒருவன் கேள்வி கேட்கிறான் ஜெயகாந்தனைப் பார்த்து, “இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?” அதற்கு அவருடைய பதில் üயாருடைய அறிவுரையும் கேட்காதே.ý இதுதான் ஜெயகாந்தன்.
இன்னொரு கேள்வி ஒருவர் கேட்கிறார்.  அது ஒரு கூட்டத்தில் நடக்கிறது.  “1988ல் நீங்கள் கம்பன் ஒரு முட்டாள் என்று கூறி இருக்கிறீர்கள்…அதை இப்போதும் ஏற்றுக் கொள்கிறீர்களா?” எல்லோரும் ஜெயகாந்தன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலாகப்  பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  “ஓ..  அப்படிச் சொல்லியிருந்தால் அது தப்புதான்.,”   ஜெயகாந்தனின் இந்தப் பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.  திரும்பவும் சொல்கிறார் : “ஆனால் அப்படிச் சொல்லியிருந்தால் அது ஒரு கருத்துதான்.  அதை நீங்கள் ஏற்க வேண்டுமென்பது இல்லை.  மறுக்கவும் மறுக்கலாம்,” என்கிறார்.  
இப்படி சிறப்பாகப் பேசி முடித்தார் டாக்டர் பாஸ்கரன்.
                                                                                                                              (இன்னும் வரும்)

தன் திசையில் வெகுதூரம்..

புத்தக விமர்சனம்

  



‘காலங்களைக்
கடந்து வருபவன்’ சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை 
 ராமலக்ஷ்மி

விதைகளின் நோக்கம் வாழ்வின் அழகியலை, தத்துவங்களை, உண்மைகளைத்
தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக,
கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன. உண்மையோ
கற்பனையோ, பொதுவான சம்பவங்களைச் சுற்றியவையோ அல்லது கேள்விப்படாத விசித்திரங்களை
வெளிச்சத்துக்கு கொண்டு வருபவையோ, மனதை வருடுபவையோ அல்லது அதிர வைப்பவையோ..  எல்லா
வகை அனுபவங்களையும் உள்ளடக்கியவை கவிதைகள்.  நம்மைச் சுற்றி நாம் வளர்த்துக்
கொண்டிருக்கும் பாதுகாப்பான எச்சரிக்கை வளையங்களைத் துணிச்சலுடன் வெட்டியெறிந்து
முற்றிலுமாக கவிஞரின் கோணத்தில் வாழ்க்கை அனுபவங்களைக் கடத்துகிறவை.
கவிஞர் சுஜாதாவின்
கவிதைகள் இதை அநாயாசமாகச் செய்திருக்கின்றன. பெண்ணின் பார்வையில் நகருகிற
பெரும்பாலான கவிதைகள் ஆணினால், சமூகத்தினால் ஏற்படும் தீராத மன அழுத்தத்தை,
அதிலிருந்து மீள இயலாத துயரத்தை, சந்திக்கும் துரோகத்தை, இதுதான் யதார்த்தம் என
ஏற்றுக் கொண்டு நகர வேண்டியிருக்கும் இயலாமையை மட்டுமின்றி எரிதழலாய் வெடித்தெழும்
சாத்தியக் கூறுகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. 
பெண்ணின் ஒவ்வொரு
அசைவையும் ஒரு மோப்ப நாயினை ஒத்துத் தொடரும் சமூகத்தைச் சாடுகிறது “நான் ஒருஓவியம்
வரைந்தேன்”. அன்பின் வயப்பட்டு உதாசீனங்களைப் பொருட்படுத்தாது தன் இருப்பைத்
தொலைத்து நிற்கும் பெண்ணைப் பார்க்கிறோம் ‘அன்பின் தீக்கொடி’யில்.
‘இசைக்குறிப்புகள்’,, ‘நதி இலை எறும்பு’ ‘அவ்வளவே’, ‘‘நிழல் கொதிக்கும் உன்
போர்க்களத்தில்’, ‘யுத்தத்திற்கான சாட்சி’, ‘அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை’ என
நீள்கிறது நிராகரிப்பின், இயலாமையின் வலியைப் பேசும் கவிதைகள்:
என்றுமே நீ
அறியப் போவதில்லை
வனம்
அளக்கும்
பறவையின்
சிறகிற்கும்
கூண்டு
தாண்டும்
பறவையின்
சிறகிற்கும்
வானம் வேறு
என்பதை..
.” [‘வானம் மறுதலிக்கும் சிறகுகள்’]
“..மருண்டு
தேயும் பிறைநிலவை
நீ நிமிர்ந்து
காண எத்தனிக்காதே
எறும்புகள்
ஊரும்
வெறித்த காட்டு
மானின்
விழிகளை அங்கே
நீ காணக்கூடும்
” [ ‘அங்கிருந்த காட்சிப்பிழை’]

மன்னிப்பை
முகத்தில் வீசுபவனிடமிருந்து,
கண்ணனின்
கருணையாய் ரட்சிக்கவரும்
கவிதைக்குள்
ஒளிய முயன்று
பாடுபொருள்
எங்கெங்கும்
உன் முகம் கண்ட
அயர்ச்சியில்,
சற்று தலை
சாய்க்கிறேன்
வானம் அறியா
குயில் குஞ்சு ஒன்றின்
ஈரம் உலரா
சிறகின் அடியில்
”… ‘ஆசுவாசம்’ தேடும் இவ்வரிகளின் பிரதிபலிப்பாகவே
அமைந்துள்ளன பல கவிதைகள்.
இருப்பைப் பற்றிய கேள்வி எப்போதும் இவரது மனதில் சுழன்று
கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது, ‘கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர
வானம்’, ‘இருப்பின் ஒரு பிரதி’,  மற்றும் ‘உறவுச் சிக்கலில்..’
“போக்குவரத்து
நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட
குட்டிநாயினைப்
போல்
அஞ்சி அலைகிறது
எனது இருப்பு”
எல்லாவற்றையும்
கலைத்து அடுக்கும் மரணம், நம்மை நிதானிக்க வைக்கிறது:
“புழுங்கும்
இருண்மைக்குள்
ஒரு விளக்கு
போல
வந்துசேர்கிறது
இந்த மஞ்சள்
மரணம்” [விஸ்
தாரம் அடையும் பாதைகள்]
இவரது மஞ்சள்
ஃப்ராக் கடவுளை தரிசிக்கும் போது இலேசாகிப் போகிறது மனது. 
பல கவிதைகளிம்
தலைப்புகளே ஒரு குறுங்கவிதையாக இரசிக்க வைக்கின்றன: ‘கடலின் முடிவில் மறையும்
போலுள்ள வானம்’, நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி’.
“நீ நான் நிறைந்த
நாம் இவ்வுலகைக்
கைவிட்ட தருணம்..” என அற்புதமான காதலை அழகாகக் கொண்டாடும் கவிதைகள் யாவும் அழகு.
‘நீலநிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்’ குறிப்பாக என் மனம் கவர்ந்த ஒன்று. கனிந்த
பொழுதொன்றில் காதலர்களிடம் வந்து சேருகின்ற பூனைக்குட்டி திருமணப் பந்தமாகவும்
இருக்கலாம். அல்லது உருக்கொண்ட கருவாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் நிர்ப்பந்தத்தால்
வேண்டாம் என ஒரு மனதாக இருவரும் அதைக் காட்டில் கொண்டு விடத் தீர்மானித்து  நடக்கத்
தொடங்குகிறார்கள். பிறகு என்ன செய்தார்கள் என்பதை நீங்களே வாசித்து
அறிந்திடுங்கள்.
தன் இலக்கைத்
தீர்மானிக்கும் ‘நீங்கள்’ ஆகிய நம்மைக் கடந்து, தன் திசையில் வெகுதூரம் சென்று
கொண்டிருக்கிறார் கவிஞர். திரும்பிப் பாராது அப்பயணம் தொடரட்டுமாக!
*
‘காலங்களைக்
கடந்து வருபவன்’
சுஜாதா
செல்வராஜ்
‘புது எழுத்து’
வெளியீடு [ puthuezuthu@gmail.com ]
86 பக்கங்கள்,
விலை ரூ.90/- 

**

கசடதபற APRIL 1971 – 7வது இதழ்

வெப்பம்


பாலகுமாரன்



நீரோடு கோலம் காணா
நிலைப் படியும்
நெளிந்தாடு சேலையில்லாத
துணிக்கொடியும்
மலரவிட்டு தரை உதிர்க்கும்
பூச் செடியும்
வாளியும்
கிணற்றடியும்
துவைக்கும் கல்லும்
வரளுகின்றன – என்னைப் போல்
அவளில்லா வெறுமையில்.

கசடதபற MARCH 1971 – 6வது இதழ்

ஞானக்கூத்தன்

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிப் போன நாய் வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான்.  நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான்.  அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான்.  அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான்.  இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி.

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து, அவர்கள் மீண்டும்
பாடை தூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்….

முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா

அழகியசிங்கர்
ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை.  கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை.  நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  ஒரு வழியாக இடம் தேடி  உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.  
 கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி.  அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.  
அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.  முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன்.  அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை.  அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன்.  அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத்தில் நடைபெறாமல், வெளியில் நடைப்பெற்றது. எப்படி இதை நாடகம் என்று நம்புகிறார்கள் என்று யோசித்தக் கொண்டிருந்தேன்.  ஆனால் முத்துசாமியின் நாடகம் வேறு தளத்தில் எனக்கு நாடகம் பார்த்து ரசிக்கும் தன்மையை ஏற்படுத்தி விட்டது.
நானும் வித்தியாசமாக நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் நபராக மாறிவிட்டேன்.  பரீக்ஷா என்ற நாடகக் குழுவுடன் சேர்ந்து மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறேன்.  பின் அங்கிருந்த எடுத்த ஓட்டம் நாடகப் பக்கம் திரும்பவில்லை.  
பரீக்ஷா முத்துசாமியின் நாற்காலிகாரர் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறது.  அதில் ஒரு கதா பாத்திரத்தை என்னால் மறக்க முடியாது.  அசோகமித்திரன்தான் அது.  அவர் எந்த வசனமும் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.  
முத்துசாமியின் நாடகங்கள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  ஆனால் அவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பு அமைத்து, அதன் மூலம் பல நாடகங்களை எழுதி அவரே இயக்கியிருக்கிறார். அசாத்தியமான துணிச்சல்காரர். ஏற்கனவே அவர் நாடகங்களை க்ரியா புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன.  
 

ஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி.  ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார்.  அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட.  சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும்.  அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு  இருக்கும்.  21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.   ரூ700 க்கு இப் புத்தகத்தை  நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்



அழகியசிங்கர்
                                                                                    1. 
சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி என் நினைவில் என்ன எழுத முடியுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  
ஒவ்வொரு மாதமும் கணையாழி நடத்தும் ஒரு கூட்டத்தில் இந்த மாதம் 16.05.2015 சனிக்கிழமை அன்று நானும் பிரமிள் பற்றி பேசியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார்.  நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது, எழுதி கட்டுரையாக வாசிக்க நினைத்தேன்.  அதன்படி கட்டுரை ஒன்றையும் பத்து அல்லது பதினைந்து பக்ககங்களுக்குள் தயாரித்துக் கொண்டேன்.  ஆனாலும் பிரமிள் பற்றி எழுதிப் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் மனதிலிருந்து பேச தீர்மானித்திருந்தேன்.  எதைப் பற்றி பேச வேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  
எழுத்து காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்று ஒரு இடத்தில் பிரமிள் குறிப்பிடுகிறார்.  ஆனால் அவர் கவிதைகளை படிம நிலையில் ஒரு நிதான வாசிப்பில் வாசகர்களை ஆழ்த்துகிறார் என்று தோன்றியது. மேலும் அவர் எழுத்து காலத்தில் ஒரு விதமாகவும், அதன் பின் வேறு விதமாகவும் கவிதைத் தன்மையை மாற்றிக் கொண்டு விட்டார் என்று பட்டது.    நான் பிரமிளுடன் என் நட்பைப் பற்றி பேசினேன்.  பொதுவாக எழுத்து மீது உள்ள அபிமானத்தில் பல எழுத்தாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு.  பிரமிளும் அவர்களில் ஒருவர்.  அவருக்கு ஏற்பட்ட மரணம் என்னை ரொம்பவும் சங்கடப் படுத்தியது.  அவருடைய தீவிரமான மனப் போக்கு  என்னை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை.  நான் பிரமிளைப் பற்றி நன்றாகப் பேசியதாக அமிர்தம் சூர்யா அவர் பேச்சில் குறிப்பிட்டவுடன் நிம்மதி அடைந்தேன்.  
அடுத்துப் பேசிய அமிர்தம் சூர்யா, பேசுவதில் கலையைக் கற்றவர் மாதிரி தென்பட்டார்.  எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துகிறார், எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசினார்.  மே மாதத்தில் வெளிவந்த கணையாழியின் சிறந்த கதையையும், கவிதையையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார்.  இணையத்தின் முன்பும்,பின்பும் என்ற தலைப்பில் அவர் சொல்வதை அலசி இருந்தார். 
எப்போதும் எழுத்து பிரசுரம் ஆவது என்பது இணையத்திற்கு முன்பு பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது.  நகுலன் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக்கொண்டு தோன்றுவதை எழுதிக்கொண்டே போவார்.  பின் அவற்றை தேவையான பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.  பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பும் போது, பிடிக்காவிட்டால் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று எழுதி அனுப்புவார்.   அமிர்தம் சூர்யா அவர் எழுத்துக்களை எந்தந்தப் பத்திரிகைகள் எப்படியெல்லாம்  பிரசுரம் செய்யும் என்ற நுணுக்கத்தை அறிந்து வைத்திருந்தார். சவ ஊர்வலம் என்ற கவிதையை விருட்சம் பத்திரிகைக்கு அனுப்பியதாகவும், அதை பிரச்சார நெடி உள்ள கவிதை என்று நான் நிராகரித்ததையும் குறிப்பிட்டிருந்தார். எனக்க உண்மையில் ஞாபகம் இல்லை. 
அமிர்தம் சூர்யா, ப்ரியம், தமிழ் மணவாளன் கவிதைகளை நான் விருப்பத்துடன் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இதெல்லாம் முன்பு.  இது இணையதளம் காலம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணையம் மூலம் பிரசுரம் செய்து கொள்ளலாம்.  எல்லோருக்கும் ஒருவித சுதந்திரம் வந்து விட்டது.  உண்மைதான்.  ஆனால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.  ஊடகம் மூலம் அபத்தங்கள் அதிகமாகப் பெருகத் தொடங்கி விட்டன.  கூட்டத்தை சிறப்பான முறையில் கணையாழி ஆசிரியர் ம ரா நெறிப்படுத்தினார். வாழ்த்துகள்.
கணையாழி கூட்டத்திலிருந்து நான் அடுத்தக் கூட்டத்திற்கு வந்து விட்டேன்.  பேசுபவனாக இருப்பதைவிட பார்வையாளனாக இருப்பது சால சிறந்தது.  இக் கூட்டம் கிருஷ்ணகான சபாவில் 22ஆம் தேதி அன்று மே மாதம் நடந்த கூட்டம்.  இதை சுப்பு என்பவர் நடத்துகிறார் என்று நினைக்கிறேன்
.  தமிழ் அறிஞர்களைப் பற்றிய கூட்டம் இது. 14வது கூட்டம் என்று நினைக்கிறேன்.   இக் கூட்டத்திற்கு வ.வே.சுப்பிரமணியனும், ஆர் வெங்கடேஷ் அவர்களும் கலந்துகொண்ட கூட்டம்.  அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ் அறிஞர் ராஜாஜி.  நான் ராஜாஜியை அரசியல் ராஜ தந்திரியாகத்தான் அறிந்திருக்கிறேன்.  பெரியாரும் ராஜாஜியும் வேறு வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய  நண்பர்கள்.  எளிமையான மனிதர் ராஜாஜி.
  அவருடைய மகாபாரதத்தையும், இராமயணத்தையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  முதன் முதலாக அந்தப் புத்தகங்கள் அச்சில் வெளிவந்தபோது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதாக சொல்வார்கள்.  வவேசுவும், வெங்கடேஷ÷ம் ஒருவரை ஒருவர் ராஜாஜியைப் பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.  இது புதுமாதிரியாக இருந்தது.  திக்கற்ற பார்வதி என்ற நாவல் ஒன்றை ராஜாஜி எழுதியிருப்பதாக என் ஞாபகத்தில் இருந்தது.  அதை ராணிமுத்து புத்தகமாகக் கொண்டு வந்ததாகக் கூட நினைப்பு.  அக் கூட்டத்தில் கேட்ட பேச்சிலிருந்து ராஜாஜி தமிழ் மொழிக்கு பல பங்களிப்பை அளித்திருப்பதாக அறிந்தேன்.  கூட்ட முடிவில் ராஜாஜியின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணகானசபாவில், காமகோடி அரங்கம் என்ற ஒன்று உள்ளது.  அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.  
                                                                  (இன்னும் முடியவில்லை)

புத்தக விமர்சனம் 4

அழகியசிங்கர்




நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைத் தொகுப்பு இது. பலவிதங்களில் இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாராகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
பொதுவாக புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்தப் புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து விடுவார்கள்.
ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப் புத்தகத்தின் நுன்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும்.
  எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாகவே எனக்கு இப் புத்தகம் தோன்றுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட இடங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் அசோகமித்திரன்.
‘மேலும் படிக்க’ என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.  அவர் குறிப்பிடும் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை படிப்வர்களுக்கு உண்டாக்குகிறார்.
இப்படி படிக்க என்ற பகுதியில் புத்தகங்களின் மேன்மையைப் பற்றிக் கூறும் போது, அசோகமித்திரன் இப்படியும் எழுதுகிறார் :
   `இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள்.  நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறது.  நான் மட்டுமே பாராட்டினால் போதுமா?  வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.  |  அவர் குறிப்பிடுவது எவ்வளவு உண்மை.
பல ஆண்டுகளாக நான் மேற்கு மாம்பலவாசி.  ஆனால் என் வீட்டில்அருகில் இருக்கும் பப்ளிக் ஹெல்த் சென்டரைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது. அதென்ன பழைய மாம்பலம் என்ற கட்டுரையில்  எம் சி சுப்பிரமணியன் மூலம் உருவான மருத்துவமனையைப் பற்றியும் குறிப்பிட்டு அசோகமித்திரன் எழுதி உள்ளார்.
  
`இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம்.  ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்படமற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி நிரூபித்துக் காட்டினார்.  கடைசிவரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார்.  என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூடக் கிடையாது.  அவரைப் பாரத்துநானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்.’  என்று அவர் விவரித்துக் கொண்டு போகிறார்.  
இப்புத்தகம் இன்னொரு விதத்திலும் கவனம் பெறுகிறது. எந்தக் கட்டுரையை எடுத்துப் படித்தாலும், படிப்பவருக்கு பயனுள்ள கருத்து கிடைக்காமல் இருக்காது.
என்னை நெகிழ வைத்த கட்டுரை ஒன்று உள்ளது.  ‘ஜனதா  அடுப்பு’ என்ற கட்டுரை.  அதை வாங்கி வர டில்லியிலிருந்து ஆதவன் என்ற எழுத்தளரைக் கேட்டுக்கொள்கிறார்.  அவருக்கு சிரமம் தரக் கூடாது என்று சென்னை சென்டரலில் தில்லி ரயிலுக்காக அமி காத்துக் கொண்டிருக்கிறார்.  வண்டி அன்று பார்த்து மூன்று மணிநேரம் தாமதமாக வந்தது.  அதைவிட வருத்தம் ஆதவன் ஜனதா அடுப்பு வாங்கி வரவில்லை என்பதுதான்.  இக் கட்டுரையில் எந்த இடத்திலும் ஆதவனை குறை கூற வில்லை.  தன் விதியை நினைத்து வருந்தவுமில்லை.  
அசோகமித்திரரன் கட்டுரையில் அவ்வப்போது நகைக்சுவை தன்மையும் வெளிப்பட்டுக் கொணடிருக்கும்.  தி.க.சியின் தங்கத் தாமரை நாட்கள் என்ற கட்டுரையில், ‘என் பக்கத்து வீட்டுக்காரர், “உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்,” என்று கேட்டார்.  நான் அவரிடம் ‘சோவியத் பலகனி’ சில இதழ்கள் கொடுத்தேன்.  அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார்’  இப்படி எழுதுவதுதான் அசோகமித்திரன்.  
அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப்படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. 
கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரிதான் அவர் எழுதுவார். வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
நடைவெளிப் பயணம் – கட்டுரைத் தொகுதி – அசோகமித்திரன் – பக்கம் : 168 – விலை ரூ. 130 – வெளியீடு : சூரியன் பதிப்பகம், 229 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600 004 
 

நண்பர்களே,

வணக்கம்.

நவீன விருட்சம் என்ற 97வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று 64பக்கங்கள் கொண்ட இதழ்.
இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம்.

1. என் தஙகையைப் புகழ்ந்து – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : பிரம்மராஜன்
2. எதிர்பாராத சந்திப்பு – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : தேஜøகிருஷ்ணா
3. விபத்தில் சிதைந்த காதல் கதை – சிறுகதை – உஷாதீபன்
4. நான் ஒரு சகாதேவன் – கட்டுரை – வைதீஸ்வரன்
5. ஏன் இப்படி ஆயிற்று – சிறுகதை – அழகியசிங்கர்
6. ம.பொ.சியின் ஆறு கதைகள் – கட்டுரை – பெ சு மணி
7. ஒரு பூவின் சாலை மரணம் – கவிதை – ஜெ பாஸ்கரன்
8. சந்திரா மனோகரன் கவிதை
9. மயிலாடுதுறை பாசஞ்சர் – கவிதை – சபரீஸ்
10. இரு கதைகள் – மா தக்ஷ்ணமூர்த்தி
11. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர்
12. பூத்துக் குலுங்கும் நித்தியம் –
கவிதை – நா கிருஷ்ணமூர்ல்த்தி
13. ஜன்னவி கவிதைகள்
14. இரண்டு கவிதைகள் – அழகியசிங்கர்
15. அஞ்சுகிறேன் – கவதை – பிரதிபா
16. துரை ஜெயபிரகாஷ் கவிதைகள்
17. அற்புதத்தின் ஒரு துளி – கவிதை – நந்தாகுமாரன்
18. கல்தூண் – கவிதை – எஸ் வி வேணுகோபாலன்
19. முதற்சான்றிதழ் – கவிதை – ஜெ பாஸ்கரன்
20. கடிதங்கள்
21. எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்
22. முட்டையினுள் -குந்தர் கிராஸ் – மொ பெ கவிதை