புத்தக விமர்சனம்:

ரோஜா நிறச்சட்டை – அழகியசிங்கர் – விருட்சம்
வெளியீடு.

   
ஜெ.பாஸ்கரன்.

சிறுகதை என்பது,
ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும்
ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அழகியசிங்கரின் ‘ரோஜா
நிறச்சட்டை’ அவரது நான்காவது கதைத் தொகுதி. எல்லாக் கதைகளுமே, வங்கிகளில் நடக்கும்
தினசரி அலுவல்களின் சவால்களும், முரண்களும்தான் ! வங்கி மேலாளர், அதிகாரிகள், கடைநிலை
ஊழியர்கள், தற்காலிக வேலையில் இருப்பவர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என,
கதை மாந்தர்கள் சுற்றி வருகின்றனர். மிக இயல்பாக, வங்கியிலும், வெளியிலும் அங்கு பணிபுரிபுரிபவர்களின்
மனோ பாவங்களை, எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே நேர்க் கோட்டில் கதை சொல்லிக்கொண்டே
போகிறார் அழகியசிங்கர். ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் முழுமையாக விரவியுள்ளது !
சில சமயங்களில்
கதைகள், கட்டுரை வடிவை  அடைந்து விடுகின்றன
– கதையின் மையப்புள்ளியிலிருந்து சற்று விலகி, வாசகனின் கற்பனைக்கு வழிவிட்டுத் திரும்பவும்
கதைக்குள் திரும்பி, சட்டென முடிந்துவிடுகிறது,! கதைசொல்லியின் கவனம் கதைக் களத்தைச்
சுற்றிச் சுழலுவதே இதன் காரணம் – அதுவே கதையின் நம்பகத்தன்மையையும் கூட்டுகிறது.
மழை ஓய்ந்து,
‘சில்’லென்ற காற்றில் நண்பனின் தோள்மீது கை போட்டுக்கொண்டு வங்கியில் நடந்தவைகளைப்
பற்றிக் கதை கதையாகக் கேட்டுக்கொண்டே நடைப்பதைப் போன்றதொரு அனுபவம்!
’ ஹலோ ‘ சொல்வதின்
அர்த்தம் என்ன ? எதற்கு ’ஹலோ’?   சொல்பவரின்
பின்னணி என்ன ?  ஏன் ஒருவருக்கு ‘ஹலோ’ சொல்லப்
பிடிப்பதில்லை ? இப்படிப் பல கேள்விகளுடன் சுழல்கிறது ‘ ஹலோ ‘ என்ற சிறுகதை ! எல்லாம்
ஹலோ என்கிற ஒரு வார்த்தையைச் சுற்றி !
அலாரம், அஷ்வந்திபுரம்,
பாம்பு  கதைகளில் நகரத்திலிருந்து டிரான்ஸ்பர்
ஆகிக் கிராமங்களிலும், சிறிய டவுன்களிலும் வங்கி அதிகாரிகள் சந்திக்கும் சவால்களையும்,
பிரச்சனைகளையும் ஒரு வித வருத்தத்துடன் கையறு நிலையில் சொல்கிறார் – வீட்டையும், குடும்பத்தையும்
விட்டு, உண்மையிலேயே வசதிகளற்ற தொலை தூரக் கிராமங்களில் அவர்கள் படும் துயரங்கள் அவை
! அவர்கள் சந்திக்கும், மெஸ் நடத்தும் பெண்மணி, பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர், துப்புரவுப்
பணியாளர், வாடிக்கையாளர்கள் அனைவரும் இரத்தமும் சதையுமாக உலா வருகின்றனர்.
’ செல்வி ‘

 அமெரிக்காவின் தாக்கத்தில் பெண்
வாடிக்கையாளர் ஒருவரிடம் முறை தவறி நடந்துவிட, அதன் விளைவுகளை சந்திக்கிறார் வங்கி
அதிகாரி ஒருவர். தவறினை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுவிட்டாலும், இறுதியில் அவளுக்குப்
பணம் கொடுத்துத் தன் வேலையைத் (கூட மானத்தையும் !) தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார் – இன்னும் வசதிகளே இல்லாத வேறொரு கிராமத்துக்கு மாற்றப்படுகிறார்
!

‘ லாக்கர் ‘கதை,
உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வாசிக்கும் அனுபவத்தினைத் தருகிறது ; ஸ்டீபென்
லீகாக் சிறுகதை போல !  – உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட
மாமியின் நிலை நம்மையும் கவலைப்பட வைக்கிறது. சம்பந்தப் பட்ட அதிகாரி வேறொரு கிராமத்துக்கு
மாற்றல் ஆகிறார் – ’கிராமத்துக்கு மாற்றல்’ என்பது ஒரு தண்டனையாகவே சித்தரிக்கப் படுகிறது!
’ புரியாத பிரச்சனை
‘ உண்மையிலேயே புரியாத ஒரு பிரச்சனைதான் – இந்தக் காலத்து பள்ளி / கல்லூரிக் குழந்தைகளை
கவனமாகக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது மிகவும் கடினம்தான் !
தன் கீழ் வேலை
பார்க்கும் பாபுவிடமிருந்து, அவன் டிபனுக்காகத் தான் செலவு செய்த இருபது ரூபாயை வாங்குவாரா,
மாட்டாரா – இறுதி வரையில் நம்மையும் அலைய விடுகிறார் – ’இருபது ரூபாய்’ கதையில் !
‘ ரோஜா நிறச்சட்டை
‘மனித மனம் எப்படி சம்பந்தம் இல்லாமல், நடக்கின்ற நல்லவை / கெட்டவை களுக்கெல்லாம் எதனுடனாவது
முடிச்சுப் போடுகிறது என்று சொல்லுகிறது. நம் நம்பிக்கைகளின் போலித்தன்மையையும், அதன்
விளைவுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.
கதைகளில் அவர்
குறிப்பிடும் சில இடங்கள் ( மேற்கு மாம்பலம் ), டாக்டர் (சீனிவாச கண்ணன்) மற்றும் அவரது
உறவுகள் – மனைவி, அப்பா – நிஜத்தில் உள்ளவை. நிகழ்வுகளின் நம்பகத்தன்மையும், வேகமும்
இதனால் உறுதிப் படுகிறது.
கதைகளைப் படித்து
முடித்தபோது, வங்கியில் பணி புரியும் பலருடன் பழகி, ட்ரான்ஸ்பரில் சென்று திரும்பி
வந்த உணர்வு ! கதாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள், மற்றவரைப் பற்றிய கணிப்புகள்
ஆங்காங்கே தெளிவாய்த் தெரிகின்றன ! வாசிக்கும்போது ஆசிரியரும் நம்முடன் கூடவே வருவது
போல் ஒரு பிரமை – இது தவிர்க்கப் படவேண்டியதா என்பது விவாததுக்குரியது ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *