தன் திசையில் வெகுதூரம்..

புத்தக விமர்சனம்

  ‘காலங்களைக்
கடந்து வருபவன்’ சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை 
 ராமலக்ஷ்மி

விதைகளின் நோக்கம் வாழ்வின் அழகியலை, தத்துவங்களை, உண்மைகளைத்
தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக,
கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன. உண்மையோ
கற்பனையோ, பொதுவான சம்பவங்களைச் சுற்றியவையோ அல்லது கேள்விப்படாத விசித்திரங்களை
வெளிச்சத்துக்கு கொண்டு வருபவையோ, மனதை வருடுபவையோ அல்லது அதிர வைப்பவையோ..  எல்லா
வகை அனுபவங்களையும் உள்ளடக்கியவை கவிதைகள்.  நம்மைச் சுற்றி நாம் வளர்த்துக்
கொண்டிருக்கும் பாதுகாப்பான எச்சரிக்கை வளையங்களைத் துணிச்சலுடன் வெட்டியெறிந்து
முற்றிலுமாக கவிஞரின் கோணத்தில் வாழ்க்கை அனுபவங்களைக் கடத்துகிறவை.
கவிஞர் சுஜாதாவின்
கவிதைகள் இதை அநாயாசமாகச் செய்திருக்கின்றன. பெண்ணின் பார்வையில் நகருகிற
பெரும்பாலான கவிதைகள் ஆணினால், சமூகத்தினால் ஏற்படும் தீராத மன அழுத்தத்தை,
அதிலிருந்து மீள இயலாத துயரத்தை, சந்திக்கும் துரோகத்தை, இதுதான் யதார்த்தம் என
ஏற்றுக் கொண்டு நகர வேண்டியிருக்கும் இயலாமையை மட்டுமின்றி எரிதழலாய் வெடித்தெழும்
சாத்தியக் கூறுகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. 
பெண்ணின் ஒவ்வொரு
அசைவையும் ஒரு மோப்ப நாயினை ஒத்துத் தொடரும் சமூகத்தைச் சாடுகிறது “நான் ஒருஓவியம்
வரைந்தேன்”. அன்பின் வயப்பட்டு உதாசீனங்களைப் பொருட்படுத்தாது தன் இருப்பைத்
தொலைத்து நிற்கும் பெண்ணைப் பார்க்கிறோம் ‘அன்பின் தீக்கொடி’யில்.
‘இசைக்குறிப்புகள்’,, ‘நதி இலை எறும்பு’ ‘அவ்வளவே’, ‘‘நிழல் கொதிக்கும் உன்
போர்க்களத்தில்’, ‘யுத்தத்திற்கான சாட்சி’, ‘அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை’ என
நீள்கிறது நிராகரிப்பின், இயலாமையின் வலியைப் பேசும் கவிதைகள்:
என்றுமே நீ
அறியப் போவதில்லை
வனம்
அளக்கும்
பறவையின்
சிறகிற்கும்
கூண்டு
தாண்டும்
பறவையின்
சிறகிற்கும்
வானம் வேறு
என்பதை..
.” [‘வானம் மறுதலிக்கும் சிறகுகள்’]
“..மருண்டு
தேயும் பிறைநிலவை
நீ நிமிர்ந்து
காண எத்தனிக்காதே
எறும்புகள்
ஊரும்
வெறித்த காட்டு
மானின்
விழிகளை அங்கே
நீ காணக்கூடும்
” [ ‘அங்கிருந்த காட்சிப்பிழை’]

மன்னிப்பை
முகத்தில் வீசுபவனிடமிருந்து,
கண்ணனின்
கருணையாய் ரட்சிக்கவரும்
கவிதைக்குள்
ஒளிய முயன்று
பாடுபொருள்
எங்கெங்கும்
உன் முகம் கண்ட
அயர்ச்சியில்,
சற்று தலை
சாய்க்கிறேன்
வானம் அறியா
குயில் குஞ்சு ஒன்றின்
ஈரம் உலரா
சிறகின் அடியில்
”… ‘ஆசுவாசம்’ தேடும் இவ்வரிகளின் பிரதிபலிப்பாகவே
அமைந்துள்ளன பல கவிதைகள்.
இருப்பைப் பற்றிய கேள்வி எப்போதும் இவரது மனதில் சுழன்று
கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது, ‘கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர
வானம்’, ‘இருப்பின் ஒரு பிரதி’,  மற்றும் ‘உறவுச் சிக்கலில்..’
“போக்குவரத்து
நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட
குட்டிநாயினைப்
போல்
அஞ்சி அலைகிறது
எனது இருப்பு”
எல்லாவற்றையும்
கலைத்து அடுக்கும் மரணம், நம்மை நிதானிக்க வைக்கிறது:
“புழுங்கும்
இருண்மைக்குள்
ஒரு விளக்கு
போல
வந்துசேர்கிறது
இந்த மஞ்சள்
மரணம்” [விஸ்
தாரம் அடையும் பாதைகள்]
இவரது மஞ்சள்
ஃப்ராக் கடவுளை தரிசிக்கும் போது இலேசாகிப் போகிறது மனது. 
பல கவிதைகளிம்
தலைப்புகளே ஒரு குறுங்கவிதையாக இரசிக்க வைக்கின்றன: ‘கடலின் முடிவில் மறையும்
போலுள்ள வானம்’, நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி’.
“நீ நான் நிறைந்த
நாம் இவ்வுலகைக்
கைவிட்ட தருணம்..” என அற்புதமான காதலை அழகாகக் கொண்டாடும் கவிதைகள் யாவும் அழகு.
‘நீலநிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்’ குறிப்பாக என் மனம் கவர்ந்த ஒன்று. கனிந்த
பொழுதொன்றில் காதலர்களிடம் வந்து சேருகின்ற பூனைக்குட்டி திருமணப் பந்தமாகவும்
இருக்கலாம். அல்லது உருக்கொண்ட கருவாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் நிர்ப்பந்தத்தால்
வேண்டாம் என ஒரு மனதாக இருவரும் அதைக் காட்டில் கொண்டு விடத் தீர்மானித்து  நடக்கத்
தொடங்குகிறார்கள். பிறகு என்ன செய்தார்கள் என்பதை நீங்களே வாசித்து
அறிந்திடுங்கள்.
தன் இலக்கைத்
தீர்மானிக்கும் ‘நீங்கள்’ ஆகிய நம்மைக் கடந்து, தன் திசையில் வெகுதூரம் சென்று
கொண்டிருக்கிறார் கவிஞர். திரும்பிப் பாராது அப்பயணம் தொடரட்டுமாக!
*
‘காலங்களைக்
கடந்து வருபவன்’
சுஜாதா
செல்வராஜ்
‘புது எழுத்து’
வெளியீடு [ puthuezuthu@gmail.com ]
86 பக்கங்கள்,
விலை ரூ.90/- 

**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *