சி சு செல்லப்பா…..

சி சு செல்லப்பா…..                                         
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.  இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி.  இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  
க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள்.  இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள்.  க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர்.  சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள்.  க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன்.  அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே சென்றது.   ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி சு செல்லப்பா பங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டேனே தவிர,  பங்களுரில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியும் நான் செய்ததில்லை  சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான்.   அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.  
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு.  இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.  
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றை சொல்லியிருக்கிறார். “நாமதான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  அதேபோல் படைப்பிலக்கியவாதியான நாமே புத்தகவிமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்வார்.  இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது.  ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார்.  ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது ஈழ்ர்ல்ர்ன்ற்ள் பற்றிய நாவல் என்று.  அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது.  அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார்.  இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார். 
சி.சு செல்லப்பா அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்: 
“தரமான இலக்கிய படைப்புகளை சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.  
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.  
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன்.  அக்கூட்டம் திருவல்லிக்கேணி பெரியதெருவில்தான் நடந்ததாக ஞாபகம்.  அங்கு அப்போது இருந்த எழுத்தாளர் சங்கக் கூட்டம் என்று நினைக்கிறேன்.  சி சு செல்லப்பா கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார்.  எளிமையான தோற்றத்தில் இருந்தார்.  ஒரு எழுத்தாளர் தோரணை எதுவுமில்லாமல் சாதாரணமாக இருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு பல எழுத்தாளர்கள் வருவார்கள்.  அவர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்காக வருவார் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.
சி சு செல்லப்பாவை அன்று பார்க்கும்போது அவர் சாதாரணமாகத்தான் தென்பட்டார்.  ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது.  க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்றும் நான் நினைத்துக் கொண்டேன்.  
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது கிடைத்தது.  அதை வாங்கிக்கொள்ள மறுத்தார்.  வெளி ரங்கராஜன் முயற்சியால்தான் இது நடந்தது.  அவர் பரிசுத் தொகையை வாங்க மறுத்தாலும், அந்தத் தொகையில் ஒரு புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார்.  சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர்.  பரிசு கொடுக்கும் நோக்கத்தை யும் அவர் சந்தேகப்படுவார்.  வேடிக்கையான மனிதர்.  
என் சிறுகதை பாணி என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் ரங்கராஜன் மூலமாகத்தான் உருவானது.  அப் புத்தகம் ஒட்டி ஒரு கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.  அக்கூட்டம் சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார்.  எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை 
30க்களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம் 
எழுத்து பத்திரிகை மூலமாகத்தான் உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது.  அதனால் சி சு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய இதழாக உள்ளது.  .இது சி சு செல்லப்பா அறியாமலேயே நடந்த ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்தரிகைக்கும்  ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார்.  இப்போது அது உடைந்து போய்விட்டது.  
இன்றைய நிலையோ வேறு மாதிரி.  ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது.  மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது.  ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை.  பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்ùக்னறு ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.  
இன்றைய காலக்கட்டத்தில் சி சு செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும்.  எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையை எடுத்து நடத்த முடியுமா வெற்றிகரமாக? சந்தேகம்தான்.  வாசகர்களைத் தேடி நாம்தான் ஓடிப்போகவேண்டும்.   
தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல்  இல்லை.  80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே  இல்லை.  அவருடைய புதல்வருடன் பங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.  
ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய =சுதந்திர தாகம்+ என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  யாரும் அப்புத்தகத்தைக் கொண்டு வர துணியவில்லை.  
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  அப்புத்தகம் 1000 பக்கங்களுக்கு மேல் என்பதோடல்லாமல், அப்புத்தகம் விற்பனை ஆகுமா என்றெல்லாம் பதிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.  
சி சு செல்லப்பா எழுத்து பிரசுரமாக தானாகவே அப் புத்தகத்தைக் கொண்டு வரலாமென்று முடிவெடுத்தார்.  84 வயதில் சி சு செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது.  இந்தக் கட்டத்தில் நானும் சி சு செல்லப்பாவிற்கு புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன்.  மணி ஆப்செட்காரர் சி சு செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார்.  தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என கொண்டு வந்தார்.  அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.  
அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாக பல பத்திரிகைகள் அப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன.  இந்தியா டுடே என்ற பத்திரிகை அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது. 
புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார்.  வீடு முழுவதும் பரண் மீது அப்புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது.  அவர் வீட்டில் அப் புத்தகக் கட்டைப் பார்க்கும் கதி கலங்கும்.  
ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம் =பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அப்புத்தகம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வந்து விடப் போகிறது,+ என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது.  ஆனால் அது பொய்த்து விட்டது.  3 பாகங்கள் கொண்ட அப்புத்தகம் விலை ரூ.450.  அதை ரூ.100 கிடைக்கும்படி செய்தேன்.  எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று அப் புத்தகப் பிரதி இல்லை.   க.நா.சுப்பிரமணியம் கூட அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார்.  அந் நாவல் விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி அப் புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் சி சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  என் அலுவலகம் கடற்கரை சாலையில் இருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.  
அவரை அழைத்துக் கொண்டு போய் நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்து பதிவு செய்தோம்.  ஆனால் அதற்கு நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  வருத்தம்.  இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, =எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கு, பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன் என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார்.  இன்னொன்றும் சொல்வார்.  இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று.  எனக்கு கேட்கவே பக்கென்று இருக்கும்.
அவரும் அவர் மனைவியும் அந்தத் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பேன் போடக்கூடாது.  ஆனால் அவர் மனைவிக்கு பேன் வேண்டும்.  
சி சு செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.  
ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள்.  ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள்.  அவரை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தார்.  நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன்.  
கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை. 
சி சு செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான் பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம்.  கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.  எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.  நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன்.  அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.  கேட்பதற்கு எனக்க என்னவோபோல் ஆகிவிட்டது.  அடுத்தநாள் எனக்கு அவரிடமிருந்து போன்.  ‘நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன்.  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,’ என்று.  இதுதான் செல்லப்பா.
லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுருக்கிறார்.
மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது.  மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார்.  மௌனி கதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார்.  பி எஸ் ராமையா அவருடைய குரு.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார்.  சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு.  அப் புத்தகம் பேர்.  ராமையாவின் சிறுகதைப் பாணி.  ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனம் புத்தகம் யார் படிப்பார்கள்.  
எழுத்து பத்திரிகையில் முக்கியமான விமர்சகர் பிரமிள்.  அவர் படுத்தப் படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி சு செல்லப்பா வந்திருக்கிறார்.  அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.  ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  கனகசபாபதி, ந. முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ் வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.  
சி சு செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எதாவது சுவாரசியமாகப் பேசுவார்.  ஒரு முறை க.நா.சுவைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டார்.  சி சு செல்லப்பாவின் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம்.  அந்த வீட்டின் சொந்தக்காரர்  சி சு செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்தார்.  ஒரு முறை வீடை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம்.  வீட்டில் ஒன்றுமில்லையாம்.  வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம்.  சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீடை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம்.  இதை சி சு செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாக சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும்.  எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்துப் போயிருக்க முடியும் என்று.  
சி சு செல்லப்பா மரணம் அடையும் தருவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரம் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையில் இருந்தார்.  ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம்.  ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விஜாரிப்பாராம்.
  
தகழி என்ற படைப்பாளிக்கு சமமான சி சு செல்லப்பாவிற்கு எதுவும் நடக்க வில்லை.  சி சு செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர்.  கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர்.   தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்பணித்தவர்.  அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார்.    அவருக்கு உரிய மரியாதையைக் நாம் கொடுக்க தவறி விட்டோம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 
(19.01.2013 அன்று சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்த சி சு செல்லப்பாவின் 100வது ஆண்டு குறித்து எழுதி வாசித்தக் கட்டுரை)

  

நவீன விருட்சம் 92வது இதழ்


நவீன விருட்சம் 92வது இதழ் வெளிவந்துவிட்டது.    படைப்புகள்வெளிவந்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1.கோட்டுப்பையும் குடிசைத் தொழிலும் – லாவண்யா   2
2. பிரமிடுகள் – கவிதை – லாவண்யா 3
3. க.நா.சு – கவிதை – எஸ் வைதீஸ்வரன் 4
4. கூழாங்கற்கள் – கவிதை – ராமலக்ஷ்மி 6
5. ஐராவதம் பக்கங்கள் 7
6. நதி ஈந்த எறும்பு – ந. பெரியசாமி 10
6. ஹலோ – சிறுகûú- அழகியசிங்கர் 11
7. நதியும் நானும்….- மொ.கவிதை 14
8. எனக்குப் பிடித்த முன்னுரை 15
9. கல் எறிந்தவர்கள் – ரவி உதயன் 19
10. வட்டம் – கவிதை – கணேஷ் 20
11. தோற்பாவைக் கூத்து – சின்னப்பயல் 21
12. அசோகமித்திரன் பக்கங்கள் 23
13. இரு கவிதைகள் – அழகியசிங்கர் 26
14. மரணப்படுக்கையில் வயதான பெண்மணி
                            – குமரி எஸ் நீலகண்டன் 27
15. இரவு விழித்திருக்கும் வீடு – எம் ரிஷான் ஷெரீப்  29
16. பூனைகள் உலகம் – ஐயப்பன் கிருஷ்ணன் 30
17. நகுலனைப் பற்றி சில குறிப்புகள் – அழகியசிங்கர்  33
18. காக்கைச் சிறகினிலே – செல்வராஜ் ஜெகதீசன் 40
19. மிதக்கும் பல்லி – அ. இந்திரா காந்தி 44
20. விருட்சம் புத்தக விளம்பரம் 45
21. எல்லாருக்குமான நதி – கவி 47
22. கடவுளின் குரல் – ரவி உதயன் 47
23. நதி இலை எறும்பு – செ. சுஜாதா 48

மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் நவீன விருட்சம் இதழைப் பெற முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எதையாவது சொல்லட்டுமா…80

எதையாவது சொல்லட்டுமா…80

அழகியசிங்கர்

 சி சு செல்லப்பாவை முதன் முதலாக நான் கநா.சு இரங்கல் கூட்டத்தில்தான் சந்தித்தேன்.  அக் கூட்டம் கணையாழி என்ற பத்திரிகை நடத்தியது என்பது ஞாபகம்.அவர் கொஞ்சம் சத்தமாகவும், கோபமாகவும் பேசியதாக என் நினைபபு.  யாருக்குமே ஒரு புத்தகம் படிக்கிறோமென்றால் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளரையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம்  ஏற்படுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.  புத்தகத்தில் படித்த மாதிரி அந்த எழுத்தாளர்  தெரிய மாட்டார். 
 அதேபோல் க.நா.சுவையும் மௌனி இரங்கல் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன்  மௌனியை சிதம்பரம் சென்று பார்த்துவிட்டு வந்ததை என் எழுத்தாள நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.  குறிப்பாக பிரமிள் மௌனி வீட்டிற்கு சென்று பார்த்ததை புள்ளி விபரமாக  கூறுவார்.  என்னமோ நேற்றுதான் அவரைப் போய்ப் பார்த்ததுபோல் இருக்கும் அவர் பேச்சு.
 நானும் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு எந்தவித பிரமையும் இப்போது ஏற்படுவதில்லை  அப்போதெல்லாம் எனக்குப் பிரமை இருந்தது.  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் உறவினர் கல்கண்டு என்ற பத்திரிகையைப் படிக்கச் சொல்வார்.  அந்தப் பத்திரிகையில்தான் எந்த ஆபாசமும் இருக்காது என்றும் குறிப்பிடுவார்.   அந்தப் பத்திரிகையைப் படிக்கும்போதுதான் எனக்கு தமிழ்வாணனைச் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது.  நான் இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் பேச வருகிறார் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.  நான் முதன் முதலாக மேடையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் நிகழ்ச்சி அது.  
 அன்று கூட்டம் அதிகம்.  கருப்பு கண்ணாடி அணிந்து தமிழ்வாணன் இருந்தார்.  கூட்டம் முடிந்து அவர் நடந்து வரும்போது, பலர் அவரிடம் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டு நோட்டுப் புத்தகம் எல்லாம் நீட்டினார்கள்  நானும் ஒரு தாளில் அவருடைய கையெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன்.  
 எழுத்தாளர்களை மட்டுமில்லை சினிமா நடிகர்களை, நடிகைகளைப் பார்க்க வேண்டுமென்று பலருக்குத் தோன்றும்.  அதேபோல் கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க ஒரு கூட்டம் நிற்கும்.    பிரபலமானவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது வழக்கம்.இதுமாதிரியான பிரமைகள் ஒரு கட்டத்தில் நம்மை விட்டுப் போய்விடும்.  
 நான் உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொணடிருந்தபோது, வங்கித் தலைவரிடமிருந்து  கிளை மேலாளருக்கு போன்.   உடனே எங்கள் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பிரபலமான நடிகர்  என்.டி ராமராவ்  வீட்டிற்குப் போகும்படி உத்தரவு. அப்போது என்.டி.ஆர் கட்சி என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை.  அவர் புதியதாக கணக்கு ஆரம்பித்தார். 
 கிளை மேலாளர் என்னை அழைத்துக்கொண்டு போனார்.  என்டிஆர் வீட்டிலுள்ளவர்கள் எங்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார்கள்.    அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆந்திராவிலிருந்து ரசிகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்டிஆர் பால்கனியிலிருந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.  ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள்.  இந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது.  ஆனால் பிரபலமானவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது.  அவர்கள் சாதாரணமானவர்கள் மாதிரி அவர்கள் வசிக்கும் இடத்தில் நடந்து போக முடியாது.  ரஜனிகாந்த் என்னுடன் 12 ஜி பிடித்து திருவல்லிக்கேணி வர முடியாது.  அந்த சுதந்திரம் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கிறது.
கல்லூரி நாட்களில் என் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும் நா. பாரத்தசாரதியும்.  ஒருமுறை ஜெயகாந்தன் கூட்டமொன்று ஆலந்தூர் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்தது.  வந்திருந்த ஜெயகாந்தன் தலையில் பாரதியார் மாதிரி முண்டாசு கட்டியிருந்தார்.  பின் உரத்த குரலில் கூட்டம் நடத்துபவர்களையே ஒரு சாடு சாடினார்.  அவர் உரத்த குரலில் பேசுவது எனக்கு ஒருவிதமாகப் பட்டது.  நானும் அதுமாதிரி பேசிப் பார்க்கலாமென்று நினைத்தேன்.  முயற்சி செய்து பார்த்தேன்.  என்னால் அது முடியாது என்று தோன்றியது. 
   
 இந்தச் சமயத்தில் நகுலன் என்ற எழுத்தாளர் ஞாபகம் வருகிறது.  அவரால் ஒரு கூட்டத்தில் அமர்ந்துகொண்டு உரக்கப் பேச முடியாது. யாரைப்பார்க்கிறாரோ அந்த ஒருவருடன்தான் அவர் பேச முடியும்.  அவர் பேசுவது அந்த ஒருவருக்குத்தான் கேட்கும்.  
 நா பார்த்தசாரதியை நான் இரண்டு சந்தர்ப்பத்தில் பார்த்தேன்.  முதல் சந்தர்ப்பத்தில் அவர் அகில பாரதிய வித்தியார்த்தி அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு கூட்டத்தில் தலைமை தாங்க வந்தார்.  கம்பீரமான தோற்றம் கொண்டவர்.  அவரைப பார்த்தால் சினிமாவில் ஹீரோவாக நடித்திருக்கலாமென்று தோன்றும். பெரியார் கலந்துகொண்ட கடைசிக் கூட்டம் அது. பெரியார் இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்தார்.  பெரியார் திடலிலிருந்து பெரியாரின் தொண்டர்களும், கோஷமிட்டார்கள்.  அவருக்கு எதிராக நாங்களும் நா பாவின் தலைமையில சத்தம் போட்டோம்  
 இரண்டாவது சந்தர்ப்பம் நா.பா மரணம் அடைந்தபோது.  என் உறவினர் நா.பா வின் விசிறி.  அவருடைய ஒரு கதையைக் கூட நா.பா மாதிரி என் உறவினர் எழுதியிருப்பார் என்பது என் எண்ணம்.  அவர் வற்புறுத்தலின்பேரில் நா.பா வீட்டிற்குச் சென்றோம்.  ஒரு அறையில் நா.பாவை படுக்க வைத்திருந்தார்கள்.  அந்த அறையில்  அடர்த்தியான கூந்தலுடன், நல்ல உயரமான சற்று பருமனான நா.பாவின் மரணமடைந்தத் தோற்றததைப்  பார்க்க நடுக்கமாகத்தான் இருந்தது. மாலை நேரத்தில் நாங்கள் பார்த்த சமயத்தில் யாரும் கூட அங்கு இல்லை.
 என் பிரமையை ஒழித்துக் கட்டியவர்கள் என் வேறு சில எழுத்தாள நண்பர்கள்.  பலவிதங்களில் சாதனை புரிந்தவர்கள்.  ஆனால் அவர்கள் என்னைப்போல் சாதாரணமானவர்கள்.  எந்தவித பந்தா இல்லாமல் அவர்களை எளிதில் சந்தித்து உரையாட முடிந்தது.  
 க.நா.சுவை ஒரு சிறிய வாடகை வீட்டில் மயிலாப்பூரில் சந்தித்திருக்கிறேன்.  அப்படி சந்திக்கும்போது நம் வீட்டிலுள்ள பெரியவர் ஒருவரைச் சந்திப்பதுபோல் சந்தித்து உரையாடியிருககிறேன்.  பந்தா எதுவுமில்லாத எளிமையான மனிதர்.  ஒருமுறை நான், அவர், இன்னும் சில இலக்கிய நண்பர்களெல்லோரும் சேர்நது மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றிருக்கிறோம்.
 எழுத்து பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய சி.சு செல்லப்பாவை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.  இலக்கியச் சந்திப்பு வருடாந்திர கூட்டமொன்றில் சி சு செல்லப்பா ஒவ்வொரு பதிப்பாளரையும பார்த்து, அவர் சுதந்திர தாகம் என்ற நாவலைப பிரசுரிக்க மன்றாடியதை நான் அறிவேன்.  அதன்பின் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சுதந்திரதாகம் மூன்று பாகங்களையும் சி சு செல்லப்பா கொண்டு வந்தார். அதைக் கொண்டுவர நானும் அவருக்கு பக்கப்பலமாக இருந்து உதவி செய்திருக்கிறேன்.  
 நூறாவது ஆண்டை கடந்த க.நா.சு, சி சு செல்லப்பாவை நாம் மறக்க முடியாது.  அவர்கள் பிரமையை ஏற்படுத்தாதவர்கள்.  
(Appeared in Amrudha January 2013 issue)


 அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை தெரியாமல் நான்கு புதிய புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன்.

அதேபோல் இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விருட்சம் கடை எண் 570.  புத்தகங்களையும், நவீன விருட்சம் சந்தாவையும் கட்டி விருட்சத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம் வெளியீடின் நான்கு புதிய புத்தகங்கள்

1. சம்பத் கதைகள் – தொகுதி 1 – அழகியசிங்கர் 
                                      விலை ரூ.120

தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளியான சம்பத் எதிர்பாராதவிதமாய் அவர் கதைகளில் அடிக்கடி குறிப்பிட்டபடி மரணமும் அடைந்துவிட்டார்.  சாவைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்.  அவர் கதைகளில் பெரும்பாலும் பிரிவு, தீவிரமான உணர்வுநிலை, மரணம் குறித்த உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும்.  அவருடைய கதைகளின் முதல் தொகுதி இது.

2. கெட்டவன் கேட்டது – ஐராவதம் – விலை ரூ.120

அசோகமித்திரன் ஐராவதம் பற்றி குறிப்பிடும்போது அவருக்குத் தெரியாத புத்தகங்கள் இல்லை என்பது.  உலகம் முழுவதும் உள்ள நல்ல தரமான புத்தகங்களைப் பற்றி அறிந்தவர்.  பல பத்திரிகைகளில் அவருடைய கதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என்று ஏராளமாகப் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அவற்றை முறைமைப் படுத்தும் முயற்சியாக கெட்டவன் கேட்டது என்ற சிறுகதைத் தொகுப்பு வெளி வந்துள்ளது.

3. விருட்சம் கதைகள் – தொகுதி 1 விலை ரூ.100

ஏற்கனவே வெளியான கதைத் தொகுதி.  கதைத் தொகுதி வெளியான போது எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்பட்ட தொகுதி. மிக முக்கியமான படைப்பாளிகளான தமிழவன், பிரமிள், வண்ணநிலவன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் அடங்கிய தொகுதி இது.



4. முடியாத யாத்திரை – கவிதைகள் – காசியபன்

அசடு என்ற தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நாவல் எழுதிய காசியபனின் கவிதைத் தொகுதி இது.  ஏற்கனவே இவருடைய முதல் தொகுதி அன்னம் வெளியீடாக வந்துள்ளது.  இது வித்தியாசமாக அவர் எழுதிய கவிதைகளின் தொகுதி.
இரவு விழித்திருக்கும் வீடு

 
எம்.ரிஷான் ஷெரீப்,
 
 

நீ கதிரறுக்கும்
வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய

அம் மாலை நேரம்
எவ்வளவு அழகாயிருந்தது

இறுதியாக செஞ்சாயத்
தேனீரும் கறுப்பட்டித் துண்டும்

சுமந்து வந்து
அருந்த வைத்த உன் மனைவியின்

காலடித் தடத்தில்
முழுவதுமாக இருள் உறைந்த

உனது தற்கொலைக்கு
முன்னதான அக் கணம் வரை

 

பயிர்களை விதைக்கையில்
நீயெழுப்பிய இனிய கீதம்

அம் மலைச்சரிவுகளில்
இன்னும் அலைகிறது

மேய்ப்புக்காக
நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்

ரோமம் மினுங்க
வந்து காத்துக் கிடந்தன

களைகளகற்றுமுன்
வலிய கைகளை

நெடுங்காலமாய்க்
காணா பூமி வரண்டிருந்தது

மூதாதையர் தோண்டிய
கிணற்றில்

ஒரு துளி நீரிருக்கவில்லை

 

நிலம் வெடித்துப்
புழுதி கிளம்பும் காலங்களில்

அயல்கிராமங்களுக்கு
கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்

அனல்காற்றில் வெந்துருகிச்
சில காசு பார்க்கும்

விவசாயம்தான் மூச்சென
வீராப்பாய் நீயிருந்தாய்

 

தந்தையைத் தேடியழும்
பாலகிக்கு எதுவும் தெரியவில்லை

நச்சுச் செடிகளுக்கென
தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை

உன் குடிசைக்கு
எடுத்து வருகையில்

மனைவிக்கும் தவறாயெண்ணத்
தோன்றவில்லை

விதைக்கும் காலத்தில்
சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்

கடன்களாய் முளைத்திருந்தன

உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம்
வெள்ளத்தில் சுமந்துசென்று

ஆற்றில் சேர்த்தது
பருவம் கடந்து வந்த மழை

 

வெயிலின் முதல்
கிரணம் முற்றத்தில் வீழ்ந்த

அன்றினது விடிகாலையில்
உன்னோடு ஓய்ந்த பாடல்

எழவேயில்லை உன்
வீட்டில்

எல்லோரையும் உறங்க
வைத்த அன்றைய இரவு

விழித்திருந்தது
என்றென்றும்

 

மரணத்தின் தொலைவில் இருப்பவள்

குமரி எஸ்.நீலகண்டன்

 

மரணப் படுக்கையில்

வயதான பெண்மணி…

 

பறந்து பறந்து

சேவை செய்த அவளின்

இறக்கைகளெல்லாம்

ஒடுங்கிக் கிடக்கின்றன.

 

சுற்றி இருப்பவர்களெல்லாம்

எமன் வந்து விட்டானா

எமன் வந்து

விடுவானோயென

எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்.

அவள் யாரையும்

பார்க்கவில்லை..

பழுத்த அவளின்

கண்களுக்கு

எல்லாம் வெறும்

மண்ணாகத் தெரிகின்றன.

 

அவள் இறக்கைகள்

அவ்வப்போது இப்படித்தான்

தளர்ந்து

அவளை மரணத்தின்

வாசல் வரை

தளர்வாய் நடக்க வைக்கும்.

 

மரணம் நெருங்குகையில்

ஈரத்தில் தோய்ந்த

ஈயின் இறக்கையில்

சாம்பலைத் தூவியதுபோல்

அவளது இறக்கைகள்

சிலிர்த்து தனது

சிறகினை விரிக்கும்…

 

அவள் அடுத்த தடவை

இப்படி மரணத்தின்

வாசலை பார்ப்பது வரை

பறந்து கொண்டே இருப்பாள்.

 

 

 

 
  ஐராவதம் பக்கங்கள்

 

ஆகஸ்ட் 15 – நாவல் – குமரி எஸ் நீலகண்டன் – 502 பக்கங்கள் – ரூ.450 – சாய் சூரியா வெளியீடு – டி டி கே சாலை – ஆழ்வார்பேட்டை – சென்னை
 
 ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது.  கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது.  அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர்.  இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள்.  அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon
இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார்.  டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார்.  இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார்.

காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார்.  கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.  காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில் இருந்த ஹரிலால் துக்க செய்தி என்று தந்தி அனுப்பினார்.  இரண்டாவது மகன் மனிலால் காந்தி தென்னாப்பரிகாவில் இருந்தார்.  மூன்றாவது மகனான ராம் தாஸ் காந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.  காந்திகூட நேருவை பிரதமராக்க விரும்பவில்லை (பக்கம் 328)

 காந்தியைப் பொறுத்தவரை வன்முறையின் பொருளானது அதிநுட்பமானது.  கோபத்துடன் முறைத்துப் பார்ப்பதே வன்முறை.  பல்லைக் கடிப்பதும், மனதிற்குள் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வதும் வன்முறை.  அவருக்கு தீங்கு நிகழ வேண்டுமென எண்ணுவதும் வன்முறை என்பதே காந்தியின் சித்தாந்தமாக இருந்தது. (பக்கம் 83)
 காந்தி இரண்டு கைகளாலும் நன்றாக எழுதும் பழக்கம் கொண்டவர்.  வலது கையில் நிறைய எழுதி கை களைப்படைகிறபோது இடது கையால் எழுத ஆரம்பித்து விடுவார்.  (பக்கம் 67).

 அவர் கிழங்குவகைகளைச் சாப்பிடமாட்டார்.  வேக வைத்த காய் கறிகளையே சாப்பிடுவார்.  நீர் சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரி பூசணி பரங்கிக்காய் போன்றவற்றையே சாப்பிட்டார்.  அவற்றில் உப்பில்லாமலயே சாப்பிட்டார் (பக்கம் 67).

 காந்தியிடம் நான் அனைத்து மதங்களையும் ரசிக்கக் கற்றுக்கொண்டேன்.  இரண்டாவதாக சேவாகிராமில் தங்கி இருந்த அந்த குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தங்கி இருந்த அந்தக் குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தவறாமை, ஒழுங்குமுறை, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றைக் குறித்து முறையாக கற்றுக்கொண்டேன்.  மூன்றாவதாக சுய உதவி குறித்தும், யாரையும் சாராத தன்னிறைவில் முக்கியத்துவத்தைக் குறித்தும் புரிந்து கொண்டேன்.  நர்காவதாக உடல் ரீதியாக உழைப்பின் தேவையையும் தனது பணிகளை தானே செய்வதன் முக்கியத்துவத்தையும் அறிந்து அதை நான் செயல் படுத்துகிறேன் என்றார் கல்யாணம்.  (பக்கம் 68-69)

 சாகித்திய அகாடமி இந்தப் புதினத்திற்கு ஆண்டு பரிசு அளித்து தன் பாவங்களை  கழுவிக்கொள்ள வேண்டும். 
 
கூழாங்கற்கள்
மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.
பிரபஞ்சத்துக்கு அப்பாலும்
வர்த்தகப் பரிமாற்றம்..
அன்றாடம் நாம் அனுப்பும்
புண்ணிய பாவங்களின் வடிவில்.
செல்வக் குவியலென நினைத்துச்
சேகரிப்பவற்றில்
செய்த நல்லன மட்டும்
கணக்கில் வருகின்றன.
பக்தியும் பவ்யமும்
மயங்க வைத்தக் கைத்தட்டல்களும்
வைர வைடூரியங்களானாலும்,
இருட்டத் தொடங்கியதும்
ஆட்டம் முடிந்ததென
ஆற்றங்கரையோடு குழந்தைகள்
விட்டு வந்து விடும்
கூழாங்கற்களாகிப் போகின்றன.
***
-ராமலக்ஷ்மி

ஐராவதம் பக்கங்கள்

ஆட்கொல்லி – நாவல் – ஆசிரியர்
க.நா.சுப்ரமண்யம் – வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 – விலை ரூ.1.65 – பக்கம் 119
முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்..
தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாமா வேங்கடாசலம் பற்றி பேசுகிறார்.  மாமா 25 வருஷங்களுக்கு அதிகமாக மாசம் நூறு ரூபாய்க்குள் சம்பளம் வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை லட்ச ரூபாய் பணம் சேர்த்தவர்.  இன்றைய பண வீக்க யுகத்தில் இந்தத் தொகை அல்பமானதாக நமக்குப் படலாம்.  ஆனால் 1950, 1960களில் இது பெரிய தொகைதான்.
‘தவறு செய்பவர்கள் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது.  கடவுளும் சாதிக்காத காரியங்களைச் செய்பவன், கடவுளைக் கூப்பிடுகிற அளவு சாதாரண வாழ்வு வாழும் எவனும் கூப்பிடுவதில்லை.  தர்மம், நியாயம் என்பவற்றின் பெயரால் உலகில் நடக்கிற அதர்மங்களும் அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா (பக்கம் 26)’
‘பணம் சேர்ப்பதில் ஈடுபாடுள்ள எல்லோருக்குமே தெய்வப் பக்தியும் அதிகமாக இருப்பதற்குக் காரணம் ஏதாவதிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பாவங்கள் செய்துதான் பணம் சேர்க்க வேண்டும்.  பண மூட்டையுடன் பாவ மூட்டையும் பெரிது ஆகாதிருப்பதற்காக பணக்காரர்களாக விரும்புகிறவர்கள் கடவுள் பக்தியையும் உடன் கைக் கொள்ளுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது (பக்கம் 48/49).’
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டித் தத்துவத்தை கடைபிடிப்பதுதான் நான் இந்த நாவல் எழுதினேன் என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்.  கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன் என்பது முப்பது வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியத்தை மேற்கொள் காட்டியிருக்கிறார்.

U¦dùLô¥ GÝjRô[oLs Be¡X IúWôl©V GÝjRô[oLû[l ©uTt± AYoLs Y¯«úXúV ReLs TûPl×Lû[ EÚYôd¡]ôoLs Gu ÏtfNôhÓ EiÓ. L.Sô.Ñ JÚ U¦dùLô¥ GÝjRô[o GuTÕ NofûNdϬV ®`Vm. B]ôÛm AYo Rªr UWûT – Ck§V UWûT – ©uTt± TQm JÚ BhùLôs° Gu¡ £kRôkRjûR ¨ûX ¨ßjR CkR SôY­p ØVu±Úd¡ôo Gu YûL«p CûR Rªr CXd¡Vj§tÏ ×§V RPm AûUdÏm ØVt£ Guß HtßdùLôsY§p Sôm GkR ®RUô] IVlTôÓm ùLôs[j úRûY«pûX.
ஆசிரியர் அவருடைய 45வது வயதில் எழுதப்பட்ட இந்த நாவலை அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் 2012லும் படிக்க முடிவது நமது பாக்கியம்.

 

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
12
பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.  
மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.  
ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?’ என்று கேட்டேன்.  
”அதுதான் ஏன் எழுத முடியவில்லை என்பது தெரியவில்லை?”
”முயற்சி செய்தி பாருங்களேன்..”
”முதலில் நாவல் என்பது வேறுவிதமாய்ப் போய்விட்டது.  நாவலின் களம் என்ன?  ஒரு நாவல் எதைக் குறித்து செயல்படுகிறது?  நாவல் படிப்பவர்கள் யார்?”
”இதையெல்லாம் யோசித்தால் நாவலே எழுத முடியாது..”
”நானும் நாவல் எழுத வேண்டுமென்றுதான் யோசனை செய்கிறேன்.  ஏதோ கவிதை எழுத வருகிறது.  சிறுகதைகள், ஏன் கட்டுரைகள் கூட எழுதுகிறேன்.  ஆனால் நாவல் எழுதத் துணிவதில்லை..”
”இன்றைய இலக்கிய உலகில் நாவல் எழுதாவிட்டால், உங்களை இலக்கிய உலகிலேயே சேர்க்கமாட்டார்கள்.”
”ஆமாம்.  ஒப்புக்கொள்கிறேன்..”
”நீங்கள் நான் பதவி உயர்வு பெற்று வந்த என் முட்டாள்தனத்தைக் கூட நாவலாக புனையலாம்..”
”முட்டாள்தனமா?”
”ஆமாம்.  50வது வயதில் பதவி உயர்வு என்ற ஆபத்தை சம்பாதித்துக் கொண்டது என் முட்டாள்தனம் இல்லாமல் என்ன்?”
”நானும் ஒப்புக்கொள்கிறேன்.  நீங்கள் செய்தது முட்டாள்தனம்தான்..ஆனால் அதேசமயத்தில் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள்.  ஒன்றுமே இல்லாதவர்கள் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பார்க்கும்போது, வங்கியில் நல்ல வேலையில் இருக்கிறீர்கள்.  அதை நினைத்துப் பார்த்தீர்களா?”
அதை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் நானே தேடிக்கொண்ட முட்டாள்தனம்தான் இந்தப் பதவி உயர்வு.”
”உண்மையில் நீங்கள் துணிச்சல்காரர்.  உங்கள் துணிச்சல் எனக்கு வராது.  
”இங்கு வந்தபிறகு, ஏன்டா இதுமாதிரி தப்பை செய்து விட்டோம் என்று தோன்றுகிறது..”
”ஆனால் தனிமையில் இருக்கப் பழகிக் கொண்டு விட்டீர்களே?”
”தனிமை சிலசமயம் பயத்தையும், சில சமயம் அழுகையும் ஏற்படுத்துகிறது.”
”அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்..”
(இன்னும் வரும்)