பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
12
பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.  
மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.  
ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?’ என்று கேட்டேன்.  
”அதுதான் ஏன் எழுத முடியவில்லை என்பது தெரியவில்லை?”
”முயற்சி செய்தி பாருங்களேன்..”
”முதலில் நாவல் என்பது வேறுவிதமாய்ப் போய்விட்டது.  நாவலின் களம் என்ன?  ஒரு நாவல் எதைக் குறித்து செயல்படுகிறது?  நாவல் படிப்பவர்கள் யார்?”
”இதையெல்லாம் யோசித்தால் நாவலே எழுத முடியாது..”
”நானும் நாவல் எழுத வேண்டுமென்றுதான் யோசனை செய்கிறேன்.  ஏதோ கவிதை எழுத வருகிறது.  சிறுகதைகள், ஏன் கட்டுரைகள் கூட எழுதுகிறேன்.  ஆனால் நாவல் எழுதத் துணிவதில்லை..”
”இன்றைய இலக்கிய உலகில் நாவல் எழுதாவிட்டால், உங்களை இலக்கிய உலகிலேயே சேர்க்கமாட்டார்கள்.”
”ஆமாம்.  ஒப்புக்கொள்கிறேன்..”
”நீங்கள் நான் பதவி உயர்வு பெற்று வந்த என் முட்டாள்தனத்தைக் கூட நாவலாக புனையலாம்..”
”முட்டாள்தனமா?”
”ஆமாம்.  50வது வயதில் பதவி உயர்வு என்ற ஆபத்தை சம்பாதித்துக் கொண்டது என் முட்டாள்தனம் இல்லாமல் என்ன்?”
”நானும் ஒப்புக்கொள்கிறேன்.  நீங்கள் செய்தது முட்டாள்தனம்தான்..ஆனால் அதேசமயத்தில் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள்.  ஒன்றுமே இல்லாதவர்கள் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பார்க்கும்போது, வங்கியில் நல்ல வேலையில் இருக்கிறீர்கள்.  அதை நினைத்துப் பார்த்தீர்களா?”
அதை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் நானே தேடிக்கொண்ட முட்டாள்தனம்தான் இந்தப் பதவி உயர்வு.”
”உண்மையில் நீங்கள் துணிச்சல்காரர்.  உங்கள் துணிச்சல் எனக்கு வராது.  
”இங்கு வந்தபிறகு, ஏன்டா இதுமாதிரி தப்பை செய்து விட்டோம் என்று தோன்றுகிறது..”
”ஆனால் தனிமையில் இருக்கப் பழகிக் கொண்டு விட்டீர்களே?”
”தனிமை சிலசமயம் பயத்தையும், சில சமயம் அழுகையும் ஏற்படுத்துகிறது.”
”அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்..”
(இன்னும் வரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *